தமிழ் அகதி குடும்பத்தை பிலோலாவுக்கு திரும்ப அனுமதிக்க ஆஸ்திரேலிய அரசு மறுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிலோலாவின் தொழிலாள வர்க்க சமூகத்தின் தலைமையிலான உறுதியான பிரச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு பலம்வாய்ந்த ஆதரவைக் கொண்டிருந்த போதிலும், லிபரல்-தேசிய கூட்டணி அரசாங்கம் நேற்று ஒரு தமிழ் அகதி குடும்பத்தை வாழ ஊருக்கு திரும்ப அனுமதிக்க மறுத்துவிட்டது.

அதற்கு பதிலாக, முருகப்பன் குடும்பம் கண்டத்தின் மறுபக்கத்தில் உள்ள பெர்த்தில் (Perth) "சமூக தடுப்புக்காவலுக்கு" உட்படுத்தப்பட்டதோடு, விசாக்கள் மற்றும் வேலை உரிமைகளும் மறுக்கப்பட்டு தொடர்ந்தும் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அச்சுறுத்தலின் கீழ் அவர்கள் துன்புறுத்தலுக்கு அஞ்சுகிறார்கள்.

நடேஸ், பிரியா, கோபிகா மற்றும் தர்னிகா. (Credit: @hometobilo)

தொழிற் கட்சி எதிர்ப்பின் இரு கட்சி ஆதரவைக் கொண்டிருப்பதை அறிந்த பிரதமர் ஸ்காட் மோரிசனின் அரசாங்கம், குடும்ப விசாக்களை வழங்குவது அகதிகள் எதிர்ப்பு ஆட்சியை மீறும் என்று அறிவித்தது, இது ஏற்கனவே கடந்த தொழிற் கட்சி அரசாங்கத்தால் எழுப்ப்பட்டது, இது அவுஸ்திரேலியாவுக்கு எந்தவொரு புகலிடக் கோரிக்கையாளரையும் படகில் வருவதையும் தடுக்கிறது.

மார்ச் 2018 இல் நடந்த திகிலூட்டும் ஆஸ்திரேலிய எல்லைப் படைச் சோதனையின் மூலம் நடேஸ் மற்றும் பிரியா முருகப்பன் மற்றும் அவர்களது இரண்டு கைக்குழந்தைகளை பிலோலாவிலிருந்து வெளியே எடுத்து, அவர்களை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்த பின்னர், அவர்கள் மீண்டும் குயின்ஸ்லாந்து நகரத்தின் மக்களுடன் ஒன்றிணைவதைத் தடுக்க அரசாங்கம் உறுதியாக உள்ளது. இப் பகுதி பிராந்திய நிலக்கரி சுரங்க மையமாகும்.

கிறிஸ்மஸ் தீவில் உள்ள தொலைதூர இந்தியப் பெருங்கடல் தடுப்புக்காவலில் இருந்து குடும்பத்தை பெர்த்திற்கு மாற்றுவதற்கான முடிவு “விசாவிற்கு ஒரு பாதையை உருவாக்காது” என்று குடிவரவு அமைச்சர் அலெக்சாண்டர் ஹாக் அறிவித்தார். 2012–13 ஆம் ஆண்டில் கில்லார்ட் மற்றும் ரூட் தொழிற் கட்சி அரசாங்கங்களால் முதலில் விதிக்கப்பட்ட தடையை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறியதானது: “படகில் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு வரும் எவரும் நிரந்தரமாக மீள்குடியேற்றப்பட மாட்டார்கள். பாதுகாப்பு தேவையில்லை என்று கண்டறியப்பட்ட எவரும் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ”

குடும்பத்தை பெர்த்திற்கு நகர்த்துவதன் மூலம், கடந்த வார இறுதியில் நான்கு வயதை எட்டிய குடும்பத்தின் இளைய மகளான தர்னிகாவுக்கு சிகிச்சையளிப்பதில் பரவலான மக்கள் கோபத்தைத் திசைதிருப்பலாம் என அரசாங்கம் நம்புகிறது. சிகிச்சை அளிக்கப்படாத நிமோனியா காரணமாக செப்டிசீமியாவால் பத்து நாட்கள் அவதிப்பட்ட பின்னரே, கடந்த வாரம் ஆரம்பத்தில் அவர் உயிருக்கு ஆபத்தான இரத்த போக்கினால் பெர்த்திற்கு அனுப்பப்பட்டார்.

அவரது தாயார் பிரியாவுடன் சென்றபோது, அவர் தனது தந்தை, நடேஸ் மற்றும் ஐந்து வயது சகோதரி கோபிகா ஆகியோரிடமிருந்து பிரிந்தார், ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் இருந்து 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் உள்ள மோசமான குடியேற்ற சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்கள்.

பிலோலாவில் வசிப்பவர்களால் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட “ஹோம் டு பிலோ” போராட்டமும், அது உருவாக்கிய மகத்தான ஆதரவானது, தஞ்சம் கோருவோரின் மீதான கொடூரமான இரு கட்சி நடவடிக்கைக்கு பரந்த மக்கள் ஆதரவு கிடைக்கிறது என ஊடகங்களாலும் பாராளுமன்ற ஸ்தாபகத்தாலும் நீண்டகாலமாகப் கூறப்பட்ட கட்டுக்கதையை தவிடுபொடியாக்கியுள்ளது.

பிலோலா ஒரு தொழிலாள வர்க்க மையப்பகுதியாகும், இது நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் சூழப்பட்டுள்ளது, மேலும் மூராவிலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான தூரத்தில் உள்ளது, இங்கே1994இல் சுரங்க வெடிப்பின்போது 11 தொழிலாளர்களின் உயிரைக் கொன்றது. குயின்ஸ்லாந்தில் பிலோலா மூன்றாவது பெரிய சுரங்கம் உள்ளது, இது 2018 இல் கைது செய்யப்படுவதற்கு முன்னர் நடேஸ் உட்பட நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது மாநிலத்தின் மிகப்பெரிய மின் நிலையங்களில் ஒன்றான காலைடையும் (Callide) கொண்டுள்ளது.

முருகப்பன் குடும்பத்தின் அவலநிலை செய்திகளில் மட்டுமே உள்ளது, ஏனெனில் பிலோலா மக்கள், நகரத்திலும், நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விழிப்புணர்வை ஏற்பாடு செய்வதன் மூலம் வெகுஜன ஆதரவைப் பெற்றுள்ளனர், மற்றும் சட்டரீதியான முறையீடுகளுக்கு (விசா மறுப்பு) தேவையான நிதியையும் திரட்டியுள்ளனர்.

ஆனாலும் அரசாங்கத்தின் எதிர்ப்பானது, பரந்துபட்டமக்களின் அழுத்தம், ஆளும் ஸ்தாபகத்தின் கொள்கைகளை மாற்ற கட்டாயப்படுத்தும் என்ற மாயையின் ஆபத்தையும் சுட்டிக்காட்டுகிறது. தொழிற் கட்சி மற்றும் பசுமைக் கட்சி அரசியல்வாதிகள் குடும்பத்திற்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ள போதிலும்கூட, அவர்களும் தேசிய அடிப்படையிலான "எல்லைப் பாதுகாப்பு" ஆட்சிக்கு உறுதியாக இணைந்து செயற்படுகின்றனர்.

இன்று காலை ஸ்கை நியூஸுடன்(Sky News) பேசிய துணை தொழிலாளர் தலைவர் ரிச்சர்ட் மார்ல்ஸ், கொள்கைக்கு தொழிற் கட்சியின் "முழுமையான" ஆதரவை வலியுறுத்தினார், இது ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தால் "மாற்றப்படாது" என்று அவர் கூறினார். அகதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது நியாயமானது என்ற வரிசையில் மார்ல்ஸ் கூறிக்கொண்டார், ஏனென்றால் மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல நினைப்பதை இது தடுக்கிறது.

அகதி எதிர்ப்பு கருத்தியல் தற்போதைய அரசாங்கத்துடன் தொடங்கவில்லை. இது கீட்டிங் தொழிற் கட்சி (Keating Labor Party) அரசாங்கத்திடமிருந்து தோன்றியது. 1992 ஆம் ஆண்டில், படகில் வந்த குழந்தைகள் உட்பட அனைத்து அகதிகளுக்கும் கட்டாய தடுப்புக்காவலை அறிமுகப்படுத்துவதன் மூலம் தொழிற் கட்சி ஒரு உலகளாவிய முன்னுதாரணத்தை அமைத்தது.

இது 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஹோவர்ட் கூட்டணி அரசாங்கத்தின் மிருகத்தனமான “பசிபிக் தீர்வு” க்கு வழி வகுத்தது, இது புகலிடம் கோருவோரை நோரு (Nauru) மற்றும் பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) உள்ள சிறை முகாம்களுக்கு கொண்டு சென்றது. மேலும் ரூட் மற்றும் கில்லார்ட் அரசாங்கங்கள் கடல் முகாம்களை மீண்டும் திறந்து, தப்பி வந்தவர்கள் திரும்பவும் தங்கள் புறப்பட்ட நாட்டிற்குத் திரும்பாவிட்டால், அல்லது வேறு அரசாங்கம் அவர்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால், கைதிகள் காலவரையின்றி அங்கேயே இருப்பார்கள் என்று அறிவித்தனர்.

படகு மூலம் ஆஸ்திரேலியாவை அடைந்த இலங்கை புகலிடம் கோருவோர் அனைவரையும் திருப்பி அனுப்ப 2012 ஆம் ஆண்டில் கில்லார்ட் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுடன் உடன்பட்டுக்கு வந்திருந்தார். இதன் விளைவாக, குறைந்தது 700 பேர் உடனடியாக நாடு கடத்தப்பட்டனர், அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர் மற்றும் சிலர் சித்திரவதை செய்யப்பட்டனர் அல்லது "காணாமல் போயுள்ளனர்" என்ற தகவல்கள் வந்துள்ளன.

பசுமைக் கட்சி தலைவர் ஆடம் பாண்ட் (Adam Bandt) தமிழ் குடும்பத்தின் சிறைவாசத்திற்கு லிபரல்-தேசிய கூட்டணி மற்றும் தொழிற் கட்சியை குற்றம் சாட்டியுள்ளார். ஆயினும், 2010 முதல் 2013 வரை பசுமைக் கட்சியினர் சிறுபான்மை தொழிற் கட்சி அரசாங்கத்தை தூண்டுவிட்டதன் மூலம் தமிழ் அகதிகள் அகற்றப்பட்டனர், மேலும் ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் காலவரையின்றி கடலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பசுமைக் கட்சியினர் அகதிகளுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும்போது, அவர்கள் புகலிடம் கோருவோர் நுழைவதைத் தடுக்கும் தேசிய கட்டமைப்பை பராமரிப்பதில் உறுதியாக உள்ளனர்.

முருகப்பன் குடும்பத்தின் தலைவிதி, அடக்குமுறை, வறுமை மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகளில் இருந்து தப்பிக்க உலகளவில் 80 மில்லியனுக்கும் அதிகமான, வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்த மக்களின் தலைவிதியோடு பிணைக்கப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட அகதிகள் வெளியேற்றம் போன்றது.

அவர்களின் எதிர்காலத்தை இந்த நெருக்கடிக்கு காரணமான அரசாங்கங்கள் மற்றும் முதலாளித்துவ உயரடுக்கின் கைகளில் விட முடியாது. பரந்துபட்ட மக்களை இந்த பாரிய போர்கள், பொருளாதார பேரழிவுகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சமூக சமத்துவமின்மைக்கு இந்த ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் ஸ்தாபகமும் பொறுப்பாகும். அகதிகளை இழிவாகவும் மேலும் அவர்களை, தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகளுக்கு பலிகடாக்கவும் முயற்சிக்கின்றன.

பிலோலா குடியிருப்பாளர்களின் வழிநடத்தலைத் தொடர்ந்து, எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த குடும்பத்தை மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு புகலிடக் கோரிக்கையாளர்களையும் விடுவிப்பதற்கான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த போராட்டம் அனைத்து மக்களும், அவர்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அவர்கள் அடிப்படை சமூக உரிமைகளுடன் உலகில் எங்கு வேண்டுமானாலும் வாழவும் வேலை செய்யவும் அடிப்படை ஜனநாயக உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இணைக்கப்பட வேண்டும். தேசிய ரீதியிலான முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் மட்டுமே உலகளவில் அகதிகளை விடுவிக்க முடியும்.

Loading