மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜனவரி 21ந் திகதி ஞாயிறன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, 1924 இல் லெனின் தனது 53 வயதில் மறைந்ததற்குப் பிந்தைய நூறாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஒரு நிகழ்வை நடத்தியது.
அந்த மாபெரும் புரட்சிகரத் தலைவரை கௌரவிக்கும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிக்குப் பின்னர், அக்கூட்டத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலாளரும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei – PSG) ஒரு முன்னணித் தலைமை உறுப்பினருமான பீட்டர் சுவார்ட்ஸ் உரையாற்றினார். சுவார்ட்ஸ் ஆரம்பத்திலேயே இவ்வாறு வலியுறுத்தினார்:
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இந்த நிகழ்வுக் கூட்டம் நடந்து வருகிறது என்ற உண்மையே, லெனினை ஒரு தீங்கற்ற சின்னமாக மாற்றுவதற்கும், அவரை மம்மியாக சித்தரிப்பதற்கும், பொய்மைப்படுத்துவதற்கும், அத்துடன் அவரை பூதாகரமாக சித்தரிக்க (புட்டின் உட்பட) கம்யூனிச-விரோதிகளின் நூறு ஆண்டுகால முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன என்பதை நிரூபிக்கிறது. லெனின் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானவர். உலக முதலாளித்துவம் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது என்பதை அதன் மிகத் தீவிரமான ஆதரவாளர்கள் கூட இனியும் மறுக்க முடியாது.
பின்னர் அவர் தற்போதைய அரசியல் நிலைமையை மீளாய்வு செய்து, 'மூன்றாம் உலகப் போர் ஏற்கனவே தொடங்கிவிட்டது' என்று வலியுறுத்தியதுடன், ஏகாதிபத்தியம் குறித்த லெனினின் பகுப்பாய்வு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தின் மீதான அவரது வலியுறுத்தலின் பொருத்தத்தை வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏகாதிபத்தியம் குறித்த லெனினின் புத்தகம் இன்று மிகவும் சமகாலத்திற்கு ஏற்ற எழுத்துக்களில் ஒன்றாகும். ஏகாதிபத்தியம் என்பது வெறுமனே ஒரு குறிப்பான முதலாளித்துவக் கொள்கை அல்ல, மாறாக அது முதலாளித்துவத்தின் ஒரு புதிய, மிக உயர்ந்த கட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை லெனின் எடுத்துக்காட்டினார். ... முதலாளித்துவத்தை சீர்திருத்த முடியாது, அது தூக்கியெறியப்பட வேண்டும் என்று லெனின் அதில் நிறைவு செய்தார். ஏகாதிபத்தியவாதிகள் மீது மிகவும் சமாதானமான கொள்கையை ஏற்க வைக்க தார்மீக வேண்டுகோள்களும், நிர்ப்பந்தங்களும் மாயைகளை மட்டுமே தோற்றுவித்து வெகுஜனங்களின் புரட்சிகர ஆற்றலைத்தான் கட்டுப்படுத்த முடியும். உலகப் போருக்கு இட்டுச் சென்ற அதே புறநிலை நிகழ்ச்சிப்போக்குகள் தான் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான நிலைமைகளையும் உருவாக்கின என்பதை லெனின் புரிந்து கொண்டார். அவரது ஒட்டுமொத்த முன்னோக்கானது போரும் ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளும் வெகுஜனங்களை புரட்சியை நோக்கி தள்ளும் என்ற முடிவை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
ஆனால் வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்படல் ஒரு புறநிலை, தன்னியல்பான நிகழ்ச்சிப்போக்காக இருந்த போதிலும், அதன் விளைவு —அதாவது, புரட்சியின் வெற்றி அல்லது தோல்வி குறித்த கேள்வி— ஒரு நனவுபூர்வமான, பாட்டாளி வர்க்க தலைமை இருப்பைச் சார்ந்திருந்தது. இந்தப் பிரச்சினையை லெனின் அளவுக்கு யாரும் கூர்மையாகப் புரிந்து கொள்ளவில்லை; இங்குதான் அவரது தனித்துவமான வரலாற்றுப் பாத்திரமும் ஒரு மார்க்சிஸ்ட் என்ற அவரது மேதமையும் அடங்கியுள்ளது.
பீட்டர் சுவார்ட்ஸுக்குப் பின்னர், அமெரிக்காவில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் (IYSSE) தேசிய செயலாளர் கிளாரா வைஸ் கூட்டத்தில் உரையாற்றினார். திருத்தல்வாத மற்றும் சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டத்தில், ஒரு புரட்சிகர முன்னணிப்படையானது கட்சி குறித்த லெனினின் கருத்தாக்கத்தைப் பாதுகாப்பதும் தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிசத்திற்கான போராட்டமும் ஆற்றியிருந்த மத்திய பாத்திரத்தை அவர் வலியுறுத்தினார். பகிரங்கக் கடிதத்தின் ஆசிரியரான ஜேம்ஸ் பி. கனன் 1954ல் பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் முதல் கட்டங்களில் குறிப்பிட்டதை அவர் மேற்கோளிட்டார்.
நனவான முன்னணிப் படையின் கட்சி குறித்த லெனின்-ட்ரொட்ஸ்கி கோட்பாட்டையும் புரட்சிகரப் போராட்டத்தின் தலைமையாக அதன் பாத்திரத்தையும் நாம் மட்டுமே நிபந்தனையின்றி பின்பற்றுகிறோம். இந்தக் கோட்பாடானது பற்றியெரியும் யதார்த்தத்தைப் பெற்று, தற்போதைய சகாப்தத்தில் மற்றய அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறது. இப்போதைய தலைமைப் பிரச்சினையானது ஒரு நீண்டகால நிகழ்ச்சிப்போக்கில் வர்க்கப் போராட்டத்தின் தன்னியல்பான வெளிப்பாடுகளோடு மட்டுப்படுத்தப்படவில்லை, அல்லது முதலாளித்துவம் குறிப்பாக பலவீனமாக உள்ள இந்த அல்லது அந்த நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுடன் கூட மட்டுப்படுத்தப்படவில்லை. இது சர்வதேசப் புரட்சியின் அபிவிருத்தியும் சமூகத்தை சோசலிச முறையில் மாற்றியமைப்பதும் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். இது தானாகவே நிகழ முடியும் என்பதை ஒப்புக் கொள்வது, நடைமுறையில், மார்க்சியத்தை முற்றிலுமாகக் கைவிடுவதாகும். இல்லை, அது ஒரு நனவான நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும், அதற்கு வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் நனவான கூறைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மார்க்சிச கட்சியின் தலைமை இன்றியமையாததாக தேவைப்படுகிறது. வேறு எந்தக் கட்சியும் அதைச் செய்யாது.
பின்னர் கூட்டத்தில், போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் நான்கு தலைவர்கள் உரையாற்றினார்கள். அமைப்பின் தலைவரான ஒஸ்டாப் ரெரிக், விளாடிமிர் லெனினின் அசாதாரணமான வரலாற்று மற்றும் சர்வதேசப் பாத்திரம் குறித்தும், அவரது மரபின் தொடர்ச்சியை நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு (ICFI) மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்த அதன் ஆதரவாளர்களால் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது என்ற உண்மையைக் குறித்தும் பேசினார்.
'லெனின் மறைந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர், சோவியத்துக்குப் பிந்தைய ஒட்டுமொத்த வெளியிலும் லெனினிசம் மற்றும் போல்ஷிவிசத்தின் உண்மையாக பின்தொடரும் மரபினராகவும் பிரதிநிதியாகவும் உண்மையில் உரிமை கோரக்கூடிய ஒரே சக்தி நமது அமைப்பு மட்டுமே' என்றார்.
ரஷ்ய பப்லோவாதிகள் மற்றும் பப்லோவாத இயக்கத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளவரும், பல தசாப்தங்களாக ரஷ்ய தன்னலக்குழுத் தட்டுக்களுக்கு ஒரு ஆலோசகராக செயல்பட்டு வருபவரும், தன்னை ஒரு 'சோசலிஸ்டாக' சித்தரித்துக் கொண்டவருமான போரிஸ் ககார்லிட்ஸ்கி போன்ற பிரமுகர்களின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை ரெரிக் கண்டனம் செய்த அதேவேளையில், ரஷ்ய கூட்டமைப்பின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (KPRF) தலைவரான ஜென்னடி சுகானோவ் (Gennady Zyuganov) உடைய பாத்திரத்தையும் ரெரிக் சுட்டிக்காட்டினார். அவர்கள் தீவிர ரஷ்ய பேரினவாதம் மற்றும் இனவாதத்தை ஊக்குவித்து ஜோசப் ஸ்ராலினின் அத்தனை குற்றங்களையும் பாதுகாத்து வருகின்ற அதேவேளையில், KPRF ஆனது இன்னமும் அடிக்கடி லெனினை மேற்கோளிடுகிறது, சுங்கானோவ் லெனினின் கல்லறையைப் பார்க்கச் சென்றார். ரெரிக் பின்வருமாறு கூறினார்.
மூலதனத்தின் நுகத்தடியிலிருந்து பாட்டாளி வர்க்கத்தை விடுவிப்பதற்கான காரணம் காகார்லிட்ஸ்கி மற்றும் சுகானோவ் மற்றும் அவர்களது அடியாட்களின் இலட்சியம் அல்ல, மாறாக பாட்டாளி வர்க்கத்தின் இலட்சியமே ஆகும், அது ஏற்கனவே தனக்கு நிர்ணயித்துள்ள வரலாற்றுக் கடமைகளை உணர்ந்தாக வேண்டும், அது பாட்டாளி வர்க்கத்தின் கடந்தகால போர்களின் அனுபவங்களுடன் பரிச்சயம் பெற்றிருக்க வேண்டும்: அதாவது அவர்களின் வெற்றிகளோடும் தோல்விகளோடும். ... லெனினிச முன்னோக்கு, தொழிலாளர்களை விடுவிக்கப்படுவதைக் காட்டிலும் முதலாளித்துவத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டவர்களாகக் காணும் சந்தர்ப்பவாதம் மற்றும் திருத்தல்வாதத்தின் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் எதிராகப் போராடும் ஒரு சுயாதீனமான பாட்டாளி வர்க்கக் கட்சிக்கான போராட்டத்தில் அடங்கியுள்ளது. போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது (YGBL) இந்த முன்னோக்கை முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டியெழுப்பவும் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு புத்துயிரூட்டவும், அவ்விதத்தில் லெனினிசத்தை புதுப்பிக்கவும் முனைவதன் மூலம் பாதுகாக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தொழிலாள வர்க்கத்தை சோவியத்துக்குப் பிந்தைய தொழிலாள வர்க்கத்துடன் இணைப்பதே நமது மாபெரும் இலட்சியமாகும், அதன்மூலம் அவர்கள் வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதன் மூலமாக உலக மூலதனத்தை ஒன்றாக எதிர்கொள்ள முடியும். இதுதான் உலக சோசலிச வலைத் தளத்தின் சாராம்சமாகும், இது தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நனவை பேணி வளர்க்கவும் மற்றும் அதை அனைத்து நாடுகளின் தொழிலாளர்களுடனும் இணைக்கவும் முனைகிறது.
போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் (YGBL) மற்றொரு தலைவரான ஆண்ட்ரே ரிட்ஸ்கி அவரது உரையில், தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான லெனினின் போராட்டமும் முதலாம் உலகப் போரின் போது ஏகாதிபத்தியம் குறித்த அவரது ஆய்வும் தான் 1917 இல் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சியை அவர் ஏற்றுக்கொள்வதற்கான அரசியல் அடித்தளமாக இருந்தன என்பதை எடுத்துக்காட்டினார். அவர் குறிப்பிடுகையில்,
ஏகாதிபத்தியம் குறித்த லெனினின் புரிதலே 1917 இல் ட்ரொட்ஸ்கி உடனான அவரது கூட்டணியையும் அவரது எஞ்சிய வாழ்நாளிலும் உறுதிப்படுத்திய தொடக்கப் புள்ளியாக இருந்தது. சந்தர்ப்பவாதிகளிடம் இருந்து முழுமையான அமைப்புரீதியிலான பிரிவின் அவசியத்தை முன்னரை விட சிறப்பாக அடையாளம் காண முடிந்திருந்த ட்ரொட்ஸ்கி, இப்போது 'சிறந்த போல்ஷிவிக்' ஆக முடிந்தது (லெனின்).
லெனினின் கடந்தகால மற்றும் நிகழ்கால விமர்சகர்கள் பலர், அவரை 'உயரடுக்குவாதி' மற்றும் 'ஈவிரக்கமற்றவர்' என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்களின் சாராம்சம் எப்பொழுதும் தமது சந்தர்ப்பவாதத்தை மக்கள் முன்னிலையில் மூடி மறைப்பதாக இருந்து வந்துள்ளது. இந்த விமர்சகர்கள் எப்போதும் குட்டி-முதலாளித்துவ தீவிரப்போக்கினரின் பாணியில் ஒரு ஜனநாயக சொற்றொடரின் பின்னால் ஒளிந்து கொண்டனர். அவர்களுக்கு மாறாக, லெனின் மக்கள் மத்தியில் ஒரு உண்மையான அதிகாரம் செலுத்துவராக இருந்தார். முதலாளித்துவ சித்தாந்தம் மற்றும் அதற்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு எதிரான அவரது அயராத போராட்டத்தின் மூலம் அவர் தனது அதிகாரத்தைப் பெற்றார். அவர் மக்களைக் கண்டு பயப்படவில்லை, அவர்களிடமிருந்து ஒளிந்து கொள்ளவும் இல்லை, ஏனென்றால் அவரிடம் மறைக்கவோ, ஒளிக்கவோ எதுவுமில்லை. லெனினின் பாணியானது எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட நேர்மை மற்றும் தெளிவு ஆகும். லெனின் சோசலிச நனவுக்காக போராடியது பின்னர் அதை கைவிடுவதற்காக அல்ல, மாறாக முதலாளித்துவ சமூகத்தில் அதன் சமூக பொருளாதார நிலையில் இருந்து எழுகின்ற அதன் வரலாற்றுக் கடமையின் மட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை உயர்த்துவதற்காகவே போராடினார்.
இவ்வாறு அவர் கூறி முடித்தார்.
இன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கு புத்துயிரூட்டுவதில் YGBL அமைப்பானது பெரும் சவால்களை முகங்கொடுக்கிறது. லெனினின் கொள்கைகளை உள்வாங்கி அவற்றை சமகால அரசியல் யதார்த்தத்துடன் இணைக்காமல் அதுபோன்றவொரு புத்துயிரூட்டலைச் செய்ய முடியாது. லெனினின் சமரசமற்ற தன்மையும் தெளிவும் நமது முயற்சியில் முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படுகின்றன.
லெனினின் மறைவின் நூற்றாண்டு உலகெங்கிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் லெனினிச கொள்கைகளுக்கு புத்துயிர் அளிக்கும் நாளாக இருக்கட்டும். ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராகவும், பெருந்தொற்று நோய் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராகவும் வளர்ந்து வரும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அதன் போராட்டத்தை விரிவுபடுத்தவும் பலப்படுத்தவும் அவைகள் அவசியப்படுகின்றன.
ரிட்ஸ்கியின் உரைக்குப் பின்னர், லெவ் உஸ்தினோவ், 1880 கள் மற்றும் 1890 களின் ஆரம்பத்தில் 'ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை' என்று அழைக்கப்பட்ட ஜோர்ஜி வி. பிளெக்ஹானோவின் எழுத்துக்களின் அடிப்படையில், லெனினின் மார்க்சிசத்தை நோக்கிய திருப்பத்தில் தொடங்கி, அவரது அரசியல் அபிவிருத்தியை திறனாய்வு செய்தார். ரிட்ஸ்கியைப் போலவே, உஸ்தினோவ், இரண்டாம் அகிலத்தின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான லெனினின் போராட்டத்தின் முக்கிய முக்கியத்துவத்தைக் குறித்து விவாதித்தார், இரண்டாம் அகிலத்திலிருந்த பெரும்பான்மையானவர்கள், முதலாம் உலகப் போரின் ஏகாதிபத்திய படுகொலையை அங்கீகரித்தனர். லெனினுடைய அவதானிப்பு பின்வருமாறு இருந்தது, அதாவது 'எதிர்கால கம்யூனிச அகிலத்திற்கான அடித்தளங்கள் 1915 இல் சிம்மர்வால்டில் நடந்த சோசலிஸ்டுகளின் ஒரு போர்-எதிர்ப்பு மாநாட்டால் அமைக்கப்பட்டன, அதில் வெறும் 31 பேர் (!) மட்டுமே கலந்து கொண்டனர், பின்னர் அவர்கள் ஒட்டுமொத்த ஓடுகாலி இரண்டாம் அகிலத்தை விட பலமானவர்கள் என்பதை நிரூபித்தனர்.'
உஸ்தினோவ் பின்னர் குறிப்பிட்டார்,
விளாடிமிர் லெனின் ... மிகவும் கொடூரமான பிற்போக்குத்தனம் நிலவிய காலகட்டங்களிலும், புரட்சிகர சூழ்நிலை கைக்கு வந்திருந்த காலகட்டங்களிலும், அது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருந்த போதிலும், அவரது போராட்டம் முழுவதிலும் தனது புரட்சிகர நம்பிக்கையை பராமரித்து வந்தார். லெனினிடமிருந்து இந்தப் படிப்பினையைக் கற்றுக்கொள்வது இப்போது நமக்கு மிகவும் முக்கியமானது; அதாவது, உலக முதலாளித்துவ அமைப்புமுறை உள்முரண்பாடுகளால் கிழித்தெறியப்படுகையில், பூகோளம் முழுவதிலும் தொடங்கி இப்போதுதான் ஆரம்பித்துள்ள போர்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையானது, இன்னும் அனைத்தும் ஒன்றாக உலக மோதல் சங்கிலியால் இணைக்கப்படாத நிலையில், நாம் நமது புரட்சிகர நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் சர்வதேச தொழிலாள வர்க்கம் சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் தொடர்ச்சியான போர்களின் அமைப்புமுறைக்கு எதிராக கிளர்ந்தெழும் போது, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய மையங்களில் தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தபோது, மேலே விவரிக்கப்பட்ட அனைத்திற்கும் எதிராக. முதலாளித்துவ வர்க்கத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களின் கருத்துப்படி, இது ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது, ஏனென்றால் அங்கே தொழிலாள வர்க்கத்திற்குத் தேவையான அனைத்தும் வழங்கப்படுகின்றன, அவர்கள் கூறுகிறார்கள், தடுப்பரண்களுக்கும் புரட்சிகளுக்கும் செல்லாமல் இருப்பதற்கு அது அவசியமானதாகும். இத்தகைய அறிக்கைகளின் மருட்சித் தன்மையை இப்போது நாம் நம் கண்களாலேயே காண்கிறோம்.
கடைசியாக உரையாற்றிய கார்லா, ட்ரொட்ஸ்கியின் 'லெனினைக் குறித்த உண்மையும் பொய்யும்' என்ற கையெழுத்துப் பிரதியின் மீது கவனத்தை ஈர்த்தார், அதில் லெனின் குறித்து சோவியத் எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி எழுதிய ஒரு கட்டுரை குறித்து ட்ரொட்ஸ்கி கருத்துரைத்திருந்தார். (அதற்குள் கோர்க்கி ஸ்டாலினிச அதிகாரத்துவத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டார்.) அதில் ஒரேயொரு இலக்கான சோசலிசப் புரட்சியின் மீது லெனினின் அசாதாரணமான கவனக்குவிப்பு அவரது ஆளுமையின் மிகவும் வியக்கத்தக்க அம்சமாக இருந்தது என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.
அடுத்தடுத்த ஒரு விவாதத்தில், ரஷ்யாவில், ஜெனடி சுங்கானோவின் (Gennady Zyuganov) கீழ் ஸ்ராலினிஸ்டுகள் போன்ற சக்திகள் இன்னமும் லெனினின் பெயரைக் கொண்டு தங்கள் சொந்த வலதுசாரி கொள்கைகளை மூடிமறைக்க முனைகின்றன என்று ரெரிக் குறிப்பிட்டார். இருந்தபோதிலும், '[உக்ரேனில்] போர் நடந்துவரும் நிலையிலும், மக்கள் இன்னமும் லெனினை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள், அடிப்படை கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க அவரை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ட்ரொட்ஸ்கியின் படைப்புகளும் மீண்டும் வாசிக்கப்படுகின்றன. லெனினின் போலி ஆதரவாளர்கள் தங்களைத் தாங்களே மதிப்பிழக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள்.' லெனினைப் படிப்பதும் 'ஸ்ராலினிசம் மற்றும் முதலாளித்துவவாதிகளது பொய்மைப்படுத்தல்களில் இருந்து அவரது பெயரைத் தூய்மைப்படுத்துவதும்' மற்றும் ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பின் போராட்டம் குறித்த வரலாற்று உண்மையை மீட்சி செய்வதற்கு வாடிம் ரோகோவின் நடத்திய போராட்டத்தை அது தொடர வேண்டியிருந்தது என்பதும் YGBL இன் ஒரு மத்திய பணியாக இருந்தது. இது மட்டுமே 'நமது காலகட்டத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய' 'உலகக் கட்சியை' கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாதது என்று அவர் நிறைவு செய்தார்.
கூட்டத்தை நிறைவு செய்து வைக்கையில், பீட்டர் சுவார்ட்ஸ், லெனின் முன்கூட்டியே இறந்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்பினார். பிளெக்ஹானோவின் 'வரலாற்றில் தனிநபரின் பாத்திரம்' என்ற கட்டுரையை மேற்கோள் காட்டி, சுவார்ட்ஸ் குறிப்பிடுகையில், புறநிலை வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு மற்றும் சமூக சக்திகள் குறித்த உயர்ந்த அளவிலான நனவுடன் மற்றும் அதையொட்டிய வகையில், ஆளுமைகளானது வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் ஒரு மையமான மற்றும் தீர்க்கமான பாத்திரத்தை கூட வகித்தனர் என்று குறிப்பிட்டார். 1924 ஜனவரியில் லெனின் இறக்காமல் இருந்திருந்தால், வரலாற்று அபிவிருத்திகளின் போக்கு வேறுவிதமாக இருந்திருக்கும் என்பதை பல விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று சுவார்ட்ஸ் அவதானிப்பைக் குறிப்பிட்டார். அவரது மரணம் எவ்வளவு கடுமையான அடியாக இருந்தபோதிலும், அது வர்க்கப் போராட்டத்தின் போக்கையோ அல்லது உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியையோ நிறுத்திவிடவில்லை.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது லெனினின் மரபியத்தை மட்டும் பாதுகாக்கவில்லை, மாறாக அதை அபிவிருத்தியும் செய்துள்ளது. சோவியத் ஒன்றியம் மற்றும் அதிகாரத்துவத்தின் நிகழ்வுப்போக்கு குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு மார்க்சிசத்தின் ஒரு முக்கியமான அபிவிருத்தியைக் குறித்து நின்றது. 1938 இல் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது வெறுமனே மூன்றாம் அகிலத்தின் ஒரு தொடர்ச்சியாக அல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இந்த மரபியம் எல்லாவற்றுக்கும் மேலாக பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் உற்பத்தியின் பூகோளமயமாக்கம் குறித்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்பட்ட பகுப்பாய்விலும் அபிவிருத்தி செய்யப்பட்டது. இந்த பகுப்பாய்வுகளின் அடிப்படையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது அதன் நடைமுறையில் கணிசமான மாற்றங்களுக்கு இறங்கியது. அது சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தை நிறுவியது, அது இன்று தினசரி அடிப்படையில் வெளியிடப்படுகின்றது மற்றும் அது 150 நாடுகளில் வாசிக்கப்படுகின்றன.
என்ன செய்ய வேண்டும்? [1902], என்பதில் லெனின் அனைத்துக்குமான ஒரு ரஷ்ய செய்தித்தாளாக இஸ்க்ராவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆனால் தகவல் தொடர்பு சாதனங்களின் அபிவிருத்தியும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பும் இன்று இருக்கும் மட்டத்திற்கு அருகில் கூட அன்று எங்கும் இருக்கவில்லை. இவ்விதத்தில், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியில் இருந்து இன்று நாம் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இருக்கிறோம். உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில் புரட்சிகர நெருக்கடி மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது. அமெரிக்க தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சக்தியாக வெளிப்படுவது, மாபெரும் தாக்கத்தை குறிப்பாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் தொழிலாள வர்க்கத்திடம் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். லெனினின் ஆய்வு மற்றும் மறுவாழ்வு மற்றும் அவரது படைப்புகளின் துஷ்பிரயோகம் மற்றும் பொய்மைப்படுத்தல்களுக்கு எதிரான போராட்டத்தை நாம் அந்த உள்ளடக்கத்தில் பார்க்க வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு இன்று பிரம்மாண்டமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதோடு, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பாரம்பரியத்தை பல தசாப்தங்களாக பாதுகாத்து மற்றும் அபிவிருத்தி செய்ததன் விளைவாக, அது பிராமாண்டமான வலிமையையும் பெற்றுள்ளது. அது சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நனவான அரசியல் தலைமையாக கட்டியெழுப்பப்படும்.