இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
உள்ளூர் நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாஸ்கோவில் உள்ள பிரபல இசை நிகழ்ச்சி அரங்கமான குரோகஸ் சிட்டி ஹால் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 137 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 180 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் அறிவித்தனர். காயமடைந்தவர்களில் பல குழந்தைகளும் அடங்குவர். ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட அடிப்படைவாத இஸ்லாமிய குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே (ISIS-K) இரண்டு தசாப்தங்களில் ரஷ்யாவில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு பிரபல ராக் குழுவான “பிக்னிக்” (Picnic) இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்று முன்னர் குறைந்தது நான்கு ஆயுதமேந்திய நபர்கள் சுமார் 6,000 பேர் கொண்ட கூட்டத்தை நோக்கி சுடத் தொடங்கினர். தாக்குதலின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பரவியுள்ளன மற்றும் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் கொடூரமான காட்சிகளை ஊடகங்களுக்கு விவரித்துள்ளனர். ஈவா என்று அழைக்கப்படும் ஒரு பெண் Gazeta.Ru பத்திரிகைக்கு கூறுகையில், “முதலில் நாங்கள் பட்டாசு போன்ற ஒன்றை பார்த்தோம், பின்னர் துப்பாக்கி சுடும் சத்தங்கள் தொடங்கின, மக்கள் ஓடுமாறு கூச்சலிட்டனர். மக்கள் பீதியில் இருந்தனர் என்பது உண்மைதான். குரோக்கஸில் உள்ள மக்கள் தடுப்புகளை அமைத்து, ஜன்னல்களை உடைக்க முயன்றனர்” என்று குறிப்பிட்டார்.
ரஷ்ய இரகசிய சேவை FSB மற்றும் ரஷ்யாவின் தேசிய காவலர் கட்டிடத்தை தாக்கினர், ஆனால் மீட்பு நடவடிக்கை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எடுத்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. ரஷ்ய ஊடக அறிக்கைகளின்படி, கட்டிடத்தை கடந்து சென்ற ஓட்டுநர்கள் தாக்குதல் நடந்த இடத்தை காலி செய்ய மக்களுக்கு உதவினார்கள்.
இயந்திரத் துப்பாக்கிச் சூடு தவிர, பல வெடிகுண்டு சாதனங்கள் வெடித்துச் சிதறின, அரங்கம் தீப்பிடித்து எரிந்தது மற்றும் அதன் கூரை இடிந்து விழுவதற்கு இட்டுச் சென்றது. இந்த தீ 13,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு பரவியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதை எழுதிக் கொண்டிருக்கையில், தீயணைப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தன, ரஷ்ய அதிகாரிகள் இன்னும் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். தலைநகர் முழுவதிலும் உள்ள மெட்ரோ நிலையங்களிலும், அத்துடன் மாஸ்கோ பகுதியில் உள்ள விமான நிலையங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன, மேலும் தலைநகரில் அனைத்து பெரிய அளவிலான பொது நிகழ்வுகளும் இந்த வார இறுதியில் இரத்து செய்யப்பட்டன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
உகரேனில் மறைமுக போரில் ஈடுபட்டுள்ள நேட்டோ மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பதட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு, கடந்த வார இறுதியில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றதாக உறுதி செய்யப்பட்டது. நேட்டோ ஆதரவிலான உக்ரேனிய இராணுவத்தின் கடுமையான நெருக்கடிக்கு மத்தியில் உக்ரேனுக்கு துருப்புகளை நிலைநிறுத்த நேட்டோ பரிசீலித்து வருவதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அறிவிப்புகள் தேர்தல்களுக்கு முன்னதாக இருந்தன. தேர்தலுக்கு முந்தைய நாட்களில், எல்லைப் பகுதியான பெல்கோரோட்டில் நடந்த தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தப்பட்சம் 5 குடிமக்களாவது கொல்லப்பட்டனர் மற்றும் பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்களை மூடும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டன. தேர்தலின் போதே கூட, உக்ரேன் மற்றும் நேட்டோவின் ஆதரவுடன் ரஷ்ய நவ-நாஜி ஆயுதக் குழுக்கள் ரஷ்ய பிராந்தியத்தில் ஒரு ஊடுருவலைத் தொடங்கின. இரண்டாம் உலகப் போரில் செம்படையால் நாஜிக்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ரஷ்ய பிராந்தியத்தில் டாங்கிகள் சம்பந்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.
போரின் கடந்த இரண்டு ஆண்டுகளில், பயங்கரவாத தாக்குதல்கள், பெரும்பாலும் போரில் கிரெம்ளினின் முக்கிய ஆதரவாளர்களை இலக்கு வைப்பது, மாஸ்கோ மற்றும் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் துறைமுகங்கள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்கள், நேட்டோ மற்றும் உக்ரேனின் போர் மூலோபாயத்தின் மைய கூறுபாடாக மாறியுள்ளன. தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், கிரெம்ளினின் பத்திரிகைச் செயலரான டிமிட்ரி பெஸ்கோவ், உக்ரேனில் நேட்டோவுடனான ரஷ்யாவின் மோதலை விவரிக்க, “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்ற உத்தியோகபூர்வ வார்த்தைக்கு மாறாக, முதன்முறையாக “போர்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். “ஆம், இது ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையாக தொடங்கியது. ஆனால் இந்த கும்பல் உருவாகி, மேற்கு நாடுகளின் கூட்டாக உக்ரேன் பக்கம் மோதலில் பங்கேற்க ஆரம்பித்தவுடன், எங்களுக்கு அது ஒரு போராக மாறியது” என்று பெஸ்கோவ் கூறினார்,
வோலோடிமிர் செலென்ஸ்கியும் அவரது பல ஆலோசகர்களும் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னால் உக்ரேன் இருப்பதாக பரவலான ஊகங்களை விரைவாக மறுத்தனர், மேலும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூலோபாய தகவல் தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜோன் கிர்பி, தாக்குதலில் உக்ரேன் சம்பந்தப்படவில்லை என்று அமெரிக்கா நம்புவதாக அறிவித்தார்.
மார்ச் 7 அன்று, மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது. இசை நிகழ்ச்சிகள் உட்பட பெரிய கூட்டங்களை குறிவைக்க பயங்கரவாதிகளின் “உடனடி” திட்டங்களைக் கருத்தில் கொண்டு அடுத்த 48 மணி நேரத்திற்கு ரஷ்ய தலைநகரில் நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களை வலியுறுத்தியது. பல மேற்கத்திய தூதரகங்கள் இந்த எச்சரிக்கையை மீண்டும் மீண்டும் விடுத்தன. செவ்வாயன்று, புட்டின் இந்த எச்சரிக்கைகளை “ஆத்திரமூட்டும் அறிக்கைகள்” என்றும் நாட்டை “ஸ்திரமின்மை” செய்ய நோக்கம் கொண்ட “மிரட்டல்” என்றும் கண்டனம் செய்தார்.
வெள்ளிக்கிழமை அமெரிக்க தூதரகத்தின் மார்ச் 7 எச்சரிக்கை குறித்து கேட்டபோது, ஜான் கிர்பி, “அது இந்த குறிப்பிட்ட தாக்குதலுடன் தொடர்புடையது என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.
இதையடுத்து, ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசுக் (ஐ.எஸ்.ஐ.எஸ்) குழுவான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே (இஸ்லாமிய அரசு - கொராசான்) சமூக ஊடகங்களில் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. அமெரிக்க அதிகாரிகள் இக்கூற்றை உறுதிப்படுத்தியதுடன், நியூயோர்க் டைம்ஸிடம் மார்ச் மாதத்தில் வரவிருக்கும் தாக்குதல் பற்றி உளவுத் தகவல்களை சேகரித்ததாக தெரிவித்தனர். அமெரிக்க உளவுத்துறை சேவைகளின் ஒரு ஊதுகுழலாக வழமையாக செயல்பட்டு வரும் டைம்ஸ் தகவல்படி, அமெரிக்க அதிகாரிகள் “வரவிருக்கும் தாக்குதலை சுட்டிக்காட்டும் உளவுத்துறை குறித்து ரஷ்ய அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருந்தனர்.”
இதை எழுதும் வரையில், ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்கா அல்லது ISIS-K இன் கூற்றுக்கள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. பிப்ரவரியில், ரஷ்ய இரகசிய சேவை, FSB, மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள ஒரு நகரமான கலுகாவில் ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ் பிரிவை உடைத்ததாகவும், மத்திய ஆசியாவைச் சேர்ந்த இரண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களைக் கொன்றதாகவும் கூறியது. மார்ச் மாத தொடக்கத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த போர்வெறிகொண்ட இஸ்லாமியவாதிகளைக் கொண்ட கலுகா பிராந்தியத்தில் மற்றொரு ஐஸ்ஐஸ் பிரிவை “கலைத்துவிட்டதாக” FSB அறிவித்தது.
வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதல், 2004 இல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட பெஸ்லான் பள்ளி முற்றுகைக்குப் பின்னர் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும், அதில் குறைந்தபட்சம் 334 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் குழந்தைகள், மற்றும் 2002 இல் மாஸ்கோ தியேட்டர் முற்றுகைக்குப் பின்னர் ரஷ்ய தலைநகரில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும், அதில் 170 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த முற்றுகைகள் குறிப்பாக 2000 களில் ரஷ்யாவை உலுக்கிய தொடர்ச்சியான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். கடந்த தசாப்தத்தில் பல இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல்களும் நடந்துள்ளன ஆனால் கிட்டத்தட்ட அனைத்துமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு காகசஸில் நடைபெற்றன.
ரஷ்ய கூட்டமைப்பில் இருந்து முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு காக்கேசிய குடியரசு பிரிந்து செல்வதைத் தடுப்பதற்காக 1994 மற்றும் 2009 க்கு இடையில் செச்சென்யா மீது கிரெம்ளின் நடத்திய இரண்டு கொடூரமான போர்கள் மற்றும் ஒரு இஸ்லாமிய பிரிவினைவாத இயக்கம் ஆகியவற்றின் உள்ளடக்கத்தில் அந்த பயங்கரவாத தாக்குதல்களின் அலை நடந்தது. செச்சென்யா மக்களில் பத்தில் ஒரு பகுதியினர் வரை இப்போர்களில் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக 1990 களில், செச்சென்யா பிரிவினைவாத சக்திகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவை அனுபவித்து வந்தன, அது நீண்டகாலமாக இந்த பன்னாட்டு நாட்டில் பிரிவினைவாத, இன மற்றும் மத பதட்டங்களை தூண்டிவிட முயன்று வந்தது, அதையொட்டி ரஷ்யாவை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி உடைக்க முடியும். நாட்டில் சுமார் 14 மில்லியன் முஸ்லிம்கள் (மக்கள் தொகையில் சுமார் பத்து சதவீதம்) வசிக்கின்றனர்.
வடக்கு காகசஸைச் சேர்ந்த இஸ்லாமிய பிரிவினைவாதிகள் 2021 இல் அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதிலிருந்து ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தலிபான்களுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டதாக அறியப்படுகிறது. சிரிய உள்நாட்டுப் போரில் ரஷ்ய ஆதரவிலான அசாத் அரசாங்கத்திற்கு எதிராக சண்டையிட்டு வருகின்ற அமெரிக்க ஆதரவிலான இஸ்லாமிய ஆயுதக் குழுக்களில் ஏனைய செச்சென்ய தீவிர இஸ்லாமியவாதிகளும் இணைந்துள்ளனர்.
செச்சென்யா இஸ்லாமிய பிரிவினைவாதிகளுக்கும் மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கும் இடையே உள்ள நெருக்கமான உறவுகள், அவற்றில் பல அமெரிக்காவுடன் தொடர்பு கொண்டவை, பல ஆண்டுகளாக கிரெம்ளினின் கவலைகளின் மையமாக இருந்து வருகின்றன.
2021 ஆம் ஆண்டில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது சிஐஏ மற்றும் பென்டகனால் பயிற்றுவிக்கப்பட்ட அமெரிக்க உளவுத்துறை முகவர்கள் மற்றும் உயரடுக்கு கிளர்ச்சி எதிர்ப்பு துருப்புக்கள், இப்போது மாஸ்கோவில் நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள இஸ்லாமிய அரசு-கொராசன் (ISIS-K) குழுவில் இணைவதாக அறிவித்தது. அச்சமயத்தில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியதைப் போல, சிஐஏ ஆனது “ஐஸ்ஐஸ் இன் தோற்றத்திற்கு நெருக்கமான தொடர்புகளை” கொண்டிருந்தது.” 1980 களில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நிதியுதவி பெற்ற முஜாஹிதீன் கெரில்லா போரின் பாகமாக ஒசாமா பின் லேடன் மற்றும் பிற எதிர்கால அல்-கொய்தா தலைவர்களுக்கும் சிஐஏ பயிற்சி அளித்திருந்தது.
வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதலின் உடனடி குற்றவாளி யார் என்பது ஒருபுறம் இருக்க, அது ஏகாதிபத்திய சக்திகளால் ரஷ்யாவுக்கு எதிராக விரிவடைந்து வரும் மற்றும் தீவிரப்படுத்தப்பட்டு வரும் போரின் ஒரு உள்ளடக்கத்தில் நடந்தது என்பது தெளிவாக உள்ளது. இந்த மோதல் ஏற்கனவே உக்ரேனுக்கு அப்பால் மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளது. அது ஒட்டுமொத்த முன்னாள் சோவியத் ஒன்றியத்தையும், மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவையும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி உள்ளது, அதிகரித்து வரும் இந்த உலகளாவிய மோதலால் கட்டவிழ்த்து விடப்பட்ட சக்திகளில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய நவ-நாஜிக்கள் மட்டுமல்ல, மாறாக மத்திய கிழக்கில் தசாப்த கால அமெரிக்க சூறையாடல் போர்களால் வளர்க்கப்பட்ட இஸ்லாமிய போராளிகள் குழுக்களும் சம்பந்தப்பட்டுள்ளன.