Print Version|Feedback
Northern protest marks increasing popular opposition against the government
இலங்கை: வடக்கு போராட்டம் அரசாங்கத்துக்கு எதிராக அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்புக்களை சுட்டிக்காட்டுகின்றது
Subash Somachandran
21 October 2017
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையின் வட மாகாணத்தில் நடத்தப்பட்ட ஹர்த்தாலானது ஜனநாய உரிமைகள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் வெகுஜன எதிரப்பினைக் காட்டுகின்றது. இதன்பலனாக முழு வட மாகாணமும் ஸ்தம்பித்தது. கடைகள் பூட்டப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்துக்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், பாடசாலைகள் யாவும் பூட்டப்பட்டிருந்தன. அதேவேளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை மட்டுமே இயங்கியது.
தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம் மற்றும் ஏனைய தமிழ் அமைப்புக்கள் உட்பட தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்திருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள், வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் செய்தனர். அரசாங்கம் மக்களை அச்சுறுத்துவதற்காக குடாநாடு பூராகவும் பாதுகாப்புப் படைகளை தயார்படுத்தியிருந்தது.
அரசாங்கம் கைதிகளைத் தொடச்சியாக தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக வளர்ந்துவரும் எதிரப்புக்களை திசைதிருப்பவும் தடம்புரளச் செய்வதற்குமே தமிழ் கட்சிகள் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அவை மக்களை அரசாங்கத்தின் மீது பயனற்ற அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைக்கே வழிகாட்டின.
கிட்டத்தட்ட 132 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். சில அறிக்கைகளின்படி அந்த தொகை 163 ஆகவும் கூறப்படுகின்றது. அந்தக் கைதிகள் கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கொடூரமான சித்திரவதைகள் மூலம் அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களே அவர்களில் அனேகமானவர்களுக்கு எதிரான வழக்குகளுக்கான அடிப்படையாகும். பயங்கரவாத தடைச் சட்டம், ஒப்புதல் வாக்குமூலங்களை பயன்படுத்திகொண்டு வழக்குகளைத் தொடர்வதற்கான எதேச்சதிகாரமான அதிகாரத்தினை பொலிசுக்கும் சட்ட அதிகாரிகளுக்கும் வழங்குகின்றது.
அவர்களில் சிலர், வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். அந்த வகையில், அரசாங்கம் அவர்களின் சட்ட மற்றும் ஜனநாய உரிமைகளை மீறியுள்ளது. அனுராதபுரம் நீதிமன்றில் வழக்குகள் தமிழ் கைதிகளுக்கு விளங்காத சிங்கள மொழியில் விசாரணை செய்யப்படுகின்றன.
தங்களுடைய வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது எனக் கோரிக்கை விடுத்து, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று கைதிகளான இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஸன் மற்றும் கணேசன் தர்சன் ஆகியோர் செப்டம்பர் 25 முதல் உண்ணாவிரம் இருந்துவருகிறார்கள்.
அரசாங்கம் கைதிகளின் உரிமைகளை மீண்டும் மீண்டும் மறுத்து வருகின்றது. போராட்டங்களுக்கு பின்னரும், அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்ற அரசாங்கத்தின் நீண்டகால கட்டுக்கதையை நீதி அமைச்சர் தலதா அத்துகோறல மீண்டும் அவிழ்த்துவிட்டார். எவ்வாறாயினும், தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட “பயங்கரவாத நடவடிக்கையில்” ஈடுபட்டார்கள் என அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அரசாங்கம் கைதிகளை விடுதலை செய்யாது என்பதையே நீதி அமைச்சரின் கூற்று அர்த்தப்படுத்துகின்றது. அவர்கள், தமிழர்-விரோத இனவாத அடக்குமுறைகள் மற்றும் கிட்டத்தட்ட முப்பது வருட நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். இதற்கு தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களே பிரதான பொறுப்பாளிகள் ஆவர்.
தமிழ் மொழித் தின விழாவில் பங்கேற்பதற்காக, சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி சிறிசேன மக்களின் எதிர்ப்பு போராட்டத்துக்கு முகம் கொடுத்தார். பாரிய பாதுகாப்புப் படைகளின் துணையுடன் போராட்டக்காரர்களை நோக்கி நடந்து சென்ற சிறிசேன தமிழ் அரசியல் தலைவர்களிடம் “வடக்கில் உள்ளவரானாலும் சரி அல்லது தெற்கில் உள்ளவரானாலும் சரி யாராக இருந்தாலும் பிரச்சினை உள்ளவர்கள் யாருடனும் ஒரு மேசையில் உட்கார்ந்திருந்து பேசுவதற்கு தான் தயார்” என கூறினார்.
பின்னர், யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்மொழி தினக் கூட்டத்தில் அவர் பேசும் போது, தான் பலவீனமடைந்தால் மீண்டும் “பிசாசு” வரும் எனப் புலம்பினார். அந்தப் “பிசாசு” யார் என அவர் தெளிவுபடுத்தவில்லை. பிசாசு யாராயினும், யுத்தத்தினை கொடூரமான முறையில் முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ உட்பட ஏனைய ஆட்சியாளர்களை விட சிறிசேன வேறுபட்டவர் அல்ல.
2015ல் ஆட்சிக்கு வந்த பின்னர், சிறிசேன கிட்டத்தட்ட 20 தடவைகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். ஒவ்வொருமுறையும் அவர் மக்களின் எதிர்ப்புக்களுக்கு முகம் கொடுத்துள்ளார். அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் போனோர் பற்றிய தகவல்களை கண்டறிதல், யுத்தகாலத்தில் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட காணிகளை மீளக் கையளித்தல் உட்பட பொதுமக்களின் கோரிக்கைளை பற்றிப் பேசுவதாக உறுதியளித்துள்ளார். எனினும் அவர் இந்தக் கோரிக்கைகளை அலட்சியம் செய்துள்ளார்.
இராஜபக்ஷ அரசாங்கத்தின் இரத்தம் தோய்ந்த யுத்தம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் கோபத்தினை சுரண்டிக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், சிறிசேன பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்று கூறி அவருக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தன. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு திட்டங்களின் வட்டத்துக்குள் இலங்கையைக் கொண்டு வருவதற்காக ஒபமா நிர்வாகத்தினால் திட்டமிடப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் பெறுபேறாகவே சிறிசேன அதிகாரத்துக்குள் அமர்த்தப்பட்டார் என்பதை ஆர். சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உட்பட்ட கூட்டமைப்பின் தலைவர்கள் நன்கு அறிவார்கள்.
ஜனாதிபதி சிறிசேன மற்றம் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இராணுவத்திற்கும் அரசியல் உயரடுக்குகளுக்கும் எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஒடுக்குவதையும் வடக்கு – கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பினை தொடர்வதையும் அரசியல் கைதிகளை சிறையில் தடுத்து வைத்திருப்பதையும் மட்டுமே மேற்கொள்கின்றது.
வாழ்க்கைத் தரங்கள், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தெற்கில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள சமூக வெடிப்புச் சூழ்நிலைகளின் மறுபக்கமாக, வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை வளர்ந்து வருகின்றது. இந்தச் சூழ்நிலை பற்றி விழிப்படைந்து, எதிர்ப்புக்களை அடக்குவதற்காகவும் மற்றும் இனவாத ரீதியில் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காகவும், அரசாங்கமும் இராணுவமும் மற்றும் பொலிசும் ஊடகங்களின் உதவியுடன் வடக்கில் “புலி பயங்கரவாதம்” மீண்டும் தலைதூக்கியுள்ளது என்ற பொய் பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றன.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும், கடந்த பல மாதங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த ஜூலையில் பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராஜா தினேஸ் என்னும் இளம் தொழிலாளி கொல்லப்பட்டதற்கு எதிராக துன்னாலை மற்றும் குடவத்தை கிராமத்தவர்கள் எதிர்ப்புக்களில் ஈடுபட்டார்கள். பொலிஸ் 70 பொதுமக்களை கைது செய்துள்ளது. அவர்களில் 35 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் மற்றவர்கள் இன்னமும் சிறையில் உள்ளார்கள். பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் கூட பிணைக் கட்டுப்பாடுகளினால் வெளியில் வரமுடியாமல் உள்ளார்கள். கிராமத்தவர்களின் படி, கைது செய்யப்படுவோம் என்ற பீதியினால் நுற்றுக்கணக்கான பொதுமக்கள் இன்னமும் ஒழிந்திருக்கின்றார்கள். பொலிஸ் அடக்குமுறை சம்பந்தமாக தமது எதிர்ப்புக்களை தெரிவித்ததே அவர்கள் செய்த ஒரே “குற்றமாகும்”.
குறிப்பாக, தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் அதனோடு இணைந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலமையிலான தமிழ் மக்கள் பேரவையும் பெரும் தீய வகிபாகத்தை ஆற்றுகின்றன. அரசாங்கத்தின் ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் ஆதரவு வழங்கிவருகின்ற காரணத்தினால் இந்தக் கட்சிகளும் அதன் தலைவர்களும் மக்கள் மத்தியில் முற்றாக மதிப்பிழந்து போயுள்ளனர்.
இம்முறை தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மக்களின் பிரச்சாரத்தின் பின்னால் நிற்பதாக பாசாங்கு செய்தனர். தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், ஒக்டோபர் 12 சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்தில், “இந்த வழக்குகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் பரிமாணத்தினைக் கொண்டவை. ஒரு தூய சட்டப் பிரச்சினையாக மட்டும் எடுத்துக்கொண்டு இதை பேச முடியாது” மற்றும் “இந்த விடயத்தை அரசியல் ரீதியானதாக பேசவேண்டியது உங்களது (சிறிசேன) கடமையாகும். இந்த விடயம் அரசியல் ரீதியில் பேசப்படவில்லை என்பது, நல்லிணக்கத்துக்கும் நல்லெண்ணம் மற்றும் அமைதியையும் மீள கட்டியெழுப்பவும் பெரும் தடையாக இருக்கின்றது,” என்றார். மற்றும் அவர்களை விடுதலை செய்யுமாறு அவர் சிறிசேனவை “உறுதியாக” கேட்டுக் கொண்டார்.
இன்னொரு அரசியல் நாடகத்தில், சிறிசேன பங்குகொண்ட தமிழ் மொழி தின கொண்டாட்டத்திற்கான அழைப்புக்களை சம்பந்தன் உட்பட தமிழ் கூட்டமைப்பின் தலைவர்கள் நிராகரித்தார்கள். சம்பந்தனும் மற்றும் தமிழ் தலைவர்களும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை இனவாத ஒடுக்குமுறைகள் மற்றும் யுத்தத்தின் பாகமாக கைது செய்யப்பட்ட “அரசியல் கைதிகளாக” பார்க்கவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் எதிர்ப்புக்கள், அரசாங்கத்துடனான அவர்களது “நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பை” என்பவற்றுக்கு பாதகமாக அமைந்துவிடும் என்று மட்டுமே அவர்கள் கவலைப்படுகின்றனர். சம்பந்தன் இதேமாதிரியான ஒரு அறிக்கையை திங்கட்கிழமை சபை ஒத்திவைப்புப் பிரேரணையாக பாராளுமன்றில் முன்வைத்தார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவரான எம். சக்திவேல், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார். “அனுராதபுரம் சிறைச்சாலையில் இருக்கும் ஏனைய அரசியல் கைதிகளும், உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறான போராட்டங்கள் மற்றைய சிறைச்சாலைகளுக்கும் பரவலாம். தமிழ் கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் இதையா எதிர்பார்க்கின்றார்கள்?”
தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினையே அரசசார்பற்ற நிறுவனங்களும் பின்பற்றுகின்றன. சக்திவேலும் ஏனைய குழுக்களும், கொழும்பு அரசாங்கத்திற்கும் அமெரிக்கா உட்பட சர்வதேச சக்திகளுக்கும் வேண்டுகோள் விடுப்பதற்கே காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்சாரங்களை அடுத்தடுத்து ஏற்பாடு செய்கின்றனர்.
தொழிலாளர்கள் ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளர்ந்துவரும் எதிர்ப்புக்களை மேலும் ஏதாவது பயனற்ற பிரச்சாரங்களில் அடக்கி வைக்க முடியாது மற்றும் அவர்கள் நேர்மையான அரசியல் பதிலீட்டினை தேடுவார்கள் என்பதையிட்டு இந்த சகல அமைப்புகளும் பீதியடைந்துள்ளன.
அரசியல் கைதிகள் நிபந்தனையற்று விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் போன்ற ஒடுக்குமுறைச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும் மற்றும் வடக்கு - கிழக்கில் இருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகளை தொழிலாளர் வர்க்கம் முன்வைக்க வேண்டும்.