மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
துனிசியாவில் புரட்சிகரக் கொந்தளிப்பு தொடங்கியதிலிருந்து, செய்தி ஊடகம் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து அப்பிராந்தியத்திலுள்ள மற்றய நாடுகள் அல்லது முழு அரபு உலகிற்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளானது பரவலாம் என்ற தொடர்ந்த எச்சரிக்கைகள் வெளிவந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, எகிப்துதான் அத்தகைய அச்சங்களுக்கு மையமாக இப்பொழுது உள்ளது.
இப்பிராந்தியத்தில் இந்நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முக்கியமான நட்பு நாடு என்பதுடன் 80 மில்லியன் அதிக மக்கள் தொகையையும் கொண்ட நாடாகவுள்ளது. எகிப்திய பொதுமக்கள் செயல்பட ஆரம்பித்தால் அப்பிராந்தியத்தில் முழு ஏகாதிபத்திய மூலோபாயமும் மற்றும் அனைத்து முதலாளித்துவ ஆட்சி முறைகளும் ஆபத்திற்கு உட்படும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தப் பின்னணியில், உத்தியோகபூர்வ எகிப்திய எதிர்ப்புக்களிலிருந்து வரும் எச்சரிக்கைகள் சமீபத்திய நாட்களில் கூடுதலான வேகத்தைக் கொண்டுள்ளன. முபாரக்கின் ஆட்சியைப் போலவே, எதிர்க் கட்சி தலைவர்களும் மக்கள் அமைதியின்மை பரவுதலைத் தடுக்க முற்படுகின்றனர்.
அவர்களுடைய கவலையின் அளவு செவ்வாயன்று ஒரு தேசிய எதிர்ப்புத் தினம் என்பதற்கு அழைப்புவிடுத்துள்ள உண்மையில் இருந்து நன்கு அறியலாம்.
முபாரக் ஆட்சி முக்கிய இடங்களில் பாதுகாப்புப் படைகளின் வலிமையை பலப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உணவுப் பொருட்களுக்கான உதவி நிதி அளித்தலையும் தக்க வைக்க முற்பட்டுள்ளது. துனிசிய முன்மாதிரியை மேற்கோளிட்டு, எதிர்ப்பை வன்முறை அல்லது சர்வாதிகார வழிவகைகள் மூலம் உறுதித் தன்மைக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட முடியாது என்று வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் பிரிட்டனின் கார்டியன் செய்தித்தாளில் எகிப்தின் நன்கு அறியப்பட்டுள்ள எதிர்க்கட்சி அரசியல்வாதியான மஹ்மத் எல்பரடெய், எகிப்தும் “ஒரு துனிசிய வகையிலான வெடிப்பை” முகங்கொடுக்கிறது என்று எச்சரித்தார். ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எகிப்தின் ஆளும் வர்க்கத்திற்கும் நேரடியாக முறையிட்டு அவர் எழுதியதாவது: “துனிசியாவில் நடந்தது ஒன்றும் வியப்பல்ல. எகிப்திலும், சர்வாதிகாரத்திற்கு ஆதரவு கொடுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இது தக்க படிப்பினையைக் கொடுக்கிறது” என்றார். அவர் மேலும் கூறியதாவது: “அடக்குமுறை என்பது உறுதித் தன்மைக்கு ஈடாகாது, சர்வாதிகார ஆட்சிமுறைகள் தான் அமைதியை பாதுகாக்கச் சிறந்தவை என்று எவரேனும் நினைத்தால், அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுபவர்கள்தான்.”
துனிசிய நிகழ்வுகளின் போக்கில் எல்பரடெய் மற்றும் முழு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடும் எங்கு உள்ளது என்பது பெருகிய முறையில் தெளிவாகிறது. ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பற்றி அவ்வப்பொழுது போலித்தன ஜனநாயகக் குறைகூறல்களை அவர்கள் தெரிவித்தாலும், அவர்கள் அடக்கப்பட்ட மக்களின் எந்த இயக்கத்தையும் கட்டமைக்க எதிர்க்கின்றனர். எல்பராடெய் “ஒரு ஒழுங்கான முறையில் மாற்றம் வரும், துனிசிய முன்மாதிரி போல் அல்லாமல், என்று தான் நம்புவதாகவும்” கூறினார்.
“இந்த நிலைமைகள் ஒழுங்காக அமைக்கப்பட்டு, முறையாகத் திட்டமிடப்பட வேண்டும். இருக்கும் முறையில் இருந்தே மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேவையான வழிவகைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
எகிப்திய எதிர்ப்பின் நிலைப்பாடு “மாற்றீட்டுப் பாராளுமன்றம்” என்று அழைக்கப்படும் நிறுவன அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இன்னும் வெளிப்படையாக இருக்கிறது. அது கூறுவதாவது: “எகிப்தில் பாராளுமன்றம் ஒன்றுதான் அமைதியான முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு உகந்த வழிவகை என்று நாங்கள் அறிவிக்கிறோம். அதுதான் மற்றபடி மக்களைச் சுரண்டும் தான்தோன்றித்தன நிகழ்வுகளின் ஆபத்துக்களைத் தவிர்க்க இயலும். அத்தகைய நிகழ்வுகள் கட்டுப்பாட்டுக்களை விட்டு மீறிச் சென்றுவிடக்கூடும்.”
புதிதாக நிறுவப்பட்டுள்ள “மாற்றீடு” அல்லது “மக்கள் பாராளுமன்றம்” என்பதின் இலக்கு எகிப்தில் சுயாதீன வெகுஜன இயக்கத்தைத் தடுப்பது, அத்துடன் அதனால் முதலாளித்துவ ஆட்சிகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் தவிர்ப்பது என்பதாகும்.
மாற்றீட்டுப் பாராளுமன்றம் என்பதில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய எதிர்க்கட்சிகள், குழுக்களும் அடங்கியிருக்கும். இதில் கன்சர்வேடிவ், தாராளவாத முதலாளித்துவக் கட்சிகளான Al-Wafd மற்றும் El-Ghad போன்றவையும் “இடது” கட்சிகளான Al-Tagammu மற்றும் al-Karama ஆகிய பெயரளவு “கம்யூனிஸ்ட் போக்குகளும்” அடங்கும். இது எல்பரடெயின் பாரபட்சமில்லாத மாற்றத்திற்கான தேசிய சங்கம் (ElBaradei’s non-partisan National Association for Change), Kefaya இயக்கம் போன்ற சாதாரண மக்களின் குழுக்கள், மற்றும் நாட்டின் மிகப் பெரிய எதிர்க் கட்சியான முஸ்லிம் பிரதர்ஹுட் ஆகியவற்றையும் அடக்கியிருக்கின்றன. முபராக்கின் ஆளும் தேசிய ஜனநாயகக் கட்சி (NDP) யின் முன்னாள் உறுப்பினர்களும் கூட இந்தப் “பாராளுமன்றத்தில்” தொடர்புபடுத்தப்படுவார்கள்.
எகிப்திய மக்களின் நடவடிக்கை குறித்த அச்சம் கடந்த புதன்கிழமை முஸ்லிம் பிரதர்ஹுட் விடுத்த தனி அறிக்கையிலும் காணப்படுகிறது. துனிசியாவில் எழுச்சிக்கு வழிவகுத்த நிலைமைகள் இப்பகுதியில் பிற மற்றய நாடுகளிலும் உள்ளன என்று அது அறிவிக்கிறது. அரசாங்கம் உடனடியாக முபாரக் 1981ல் அதிகாரத்தை அடைந்தபோது ஆரம்பித்த நெருக்கடி காலச் சட்டத்தை பின்வாங்குமாறு ஆலோசனை தெரிவித்துள்ளது. மேலும் அடுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தல்களை நடத்த உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. இவைதான் எகிப்தில் “புரட்சியைத்” தடுக்க முடியும் என்று முஸ்லிம் பிரதர்ஹுட் கூறுகிறது.
பரந்த மக்களிடையே காணப்படும் சமூக நிலைமைகள் துனிசியாவில் இருந்ததைவிட மிக மோசமாகத்தான் எகிப்தில் உள்ளன என்று அரபு தொழிலாளர் அமைப்பின் (ALO) சமீபத்திய தேசிய கருத்தரங்கில் வெளிவந்த புள்ளிவிவரங்கள் ஆவணப்படுத்திக் காட்டியுள்ளன. துனிசியாவில் மக்களில் 6.6 சதவிகிதத்தினர் நாள் ஒன்றிற்கு 2 டொலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்தும்போது, எகிப்தில் இந்த எண்ணிக்கை 40 சதவிகிதத்திற்கும் மேலாகும். ALO வல்லுனரான அமின் பேர்ஸ் கிட்டத்தட்ட எகிப்தின் 43 சதவிகிதத்தினர் வறுமையில் வாழ்வதாகக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், ALO போன்ற 'தொழிலாளர் அமைப்புக்கள்' எனக் கூறப்படுபவை எந்தப் பக்கத்தை சார்ந்துள்ளன என்பதையும் கருத்தரங்கு நன்கு காட்டுகிறது. “துனிசிய மற்றும் அல்ஜீரிய நெருக்கடி மற்றய அரபு நாடுகளிலும் நடப்பதைத் தடுத்தல்” என்று நிகழ்விற்கு தலைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. அரச கட்டுப்பாட்டிற்குள் உள்ள ETUF எனப்படும் எகிப்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு, முற்றிலும் முபாரக்கின் NDP யினால் கட்டுப்படுத்தப்படுவதின் பிரதிநிதிகளும் கருத்தரங்கில் பங்கு பெற்றனர்.
ஆரம்பத்திலிருந்தே ETUF முபாரக்கின் பொருளாதாரத் தாராளமயமாக்கும் கொள்கைக்கு ஆதரவு கொடுத்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கீழ் வரும் அழுத்தங்களை சுமத்தியது. இத்திட்டம் மில்லியன் கணக்கான எகிப்திய தொழிலாளர்களை மிக வறிய நிலைமைக்குத் தள்ளியுள்ளது.
சற்றும் மூடிமறைக்கப்படாத இழிந்த தன்மையைக் காட்டிய வகையில், தலைவர் ஹுசைன் மொகவெர் கருத்தரங்கில் தொழிலாளர்கள் தான் உயரும் வேலையின்மைக்குப் பொறுப்பு, ஏனெனில் அவர்கள் சில பணிகளை “மட்டமானவை” என்று கருதி ஒதுக்குகின்றனர் என்றார்.
துனிசிய நிகழ்வுகளின் பின்னணியில் மற்றும் எகிப்திலேயே விலைவாசிகள் உயர்வு என்ற பின்னணியில், ETUF இவை “தொழிலாளர்களிடையே அழுத்தம் இருப்பதையொட்டி” இன்னும் அதிகமாகும் என்று அறிவித்தார். இது ஒரு அச்சுறுத்தல் என்றுதான் உணரப்பட வேண்டும்.
மத்திய விவசாயத்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான அப்தெல் ஹலிம் சுயாதீன நாளேடான Al Masry Al Youm இடம் “தொழிலாளர்களின் புகார்கள் எதிர்ப்புக் குழுக்கள், இயக்கங்களினால் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தல் நாட்டிற்கு உறுதியளித்தலுக்காக” இப்பொழுது தேவை என்றார்.
ETUF ஆனது பொலிஸ் கண்காணிப்பு வழிவகைகளைப் பயன்படுத்தி எகிப்திய தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தை மேற்கொள்வதைத் தடுக்க முற்படுகிறது. இது முற்றிலும் குறைமதிப்பிற்கு உட்பட்டுவிட்டது.
சில நாட்களுக்கு முன்புதான் Al-Ahram Centre for Political and Strategic Studies ல் வல்லுனராகவுள்ள Chuobaki Amr எகிப்திலுள்ள தொழிற்சங்கங்கள் “மடிந்துவிட்டன” என்றார். பொதுமக்களையும் தொழிலாளர்களையும் பிரதிபலிப்பவர்கள் ஒருவரும் இல்லை என்றும் அவர் அறிவித்து, இதே நிலைமைதான் இப்பொழுது ஒரு வெகுஜன எழுச்சியை “மாற்றீட்டுப் பாராளுமன்றம்” நிறுவுவதின் மூலம் தடுக்க முற்படும் எதிர்க்கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவித்தார்.
கட்சிகள் எதுவுமே தொழிலாளர்கள்அல்லது வறிய கிராமப்புற மக்களிடையே சமூகத் தளத்தைக் கொண்டிருக்கவில்லை என்று எச்சரித்த அவர், ஒரு வெகுஜன இயக்கத்தை திசைதிருப்பும் முயற்சியில் அவை வெற்றிபெறுவது அநேகமாக இயலாதது என்றும் எச்சரித்தார்.
செய்தி ஊடகத் தகவல்களின்படி, குறைந்தபட்சம் எகிப்தில் 5 பேராவது சமீபத்திய நாட்களில் தமக்குத்தாமே நெருப்பு வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டனர். இது அவர்களுடைய பெருந்திகைப்பான நிலைமையைப் பற்றி கவனத்தை ஈர்ப்பதற்காக நடந்தது. துனிசியாவில் அத்தகைய ஒரு நிகழ்வுதான் எதிர்ப்புக்களைத் தூண்டி இறுதியில் பெல் அலியை சௌதி அரேபியாவிற்கு ஓட வைத்தது.