மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜேர்மனியில், 2019 இல், 13 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளமையானது 30 ஆண்டுகளுக்கு முன்னைய மறுஒருங்கிணைப்புக்கு பின்னர் அளவிடப்பட்ட மிக உயர்ந்த அதிகரிப்பாக வறுமை விகிதத்தை 15.9 சதவிகிதத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த புள்ளிவிபரங்கள், நவம்பர் 20 அன்று பிரசுரமான Paritätischer Wohlfahrtsverband என்ற ஜேர்மன் நலச் சங்கத்தின் புதிய வறுமை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
வறுமையின் மீள் எழுச்சி அங்கு பரவலாக காணப்படுகிறது. ஜேர்மனியின் 16 மாநிலங்களில், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா, பாடன் வூட்டன்பேர்க், ஹெஸ்ஸ மற்றும் லோயர் சாக்சோனி உட்பட, 11 மாநிலங்கள் அதிகரித்து வரும் வறுமை விகிதங்களைக் கொண்டுள்ளன. அதில் குறிப்பாக நாலு பேருக்கு ஒருவர் வறுமையில் வாடுகிறார் என்றளவிற்கு பிரேமன் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து சாக்சோனி அன்ஹால்ட், மெக்லென்பேர்க்-வோர்போமர்ன், பேர்லின் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் 18.5 முதல் 19.5 க்கு இடைப்பட்ட சதவிகிதங்களில் வறுமை விகிதங்களைக் கொண்டுள்ளன.
2006 ஆம் ஆண்டு முதல் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் வறுமை விகிதம் ஜேர்மனியின் சராசரி வறுமை விகிதத்தை விட இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. 21.4 சதவிகித வறுமை விகிதத்துடன் ருர் பள்ளத்தாக்கு பிராந்தியம் மிகுந்த வறுமையில் உள்ளது. Paritätischer Wohlfahrtsverband இன் கருத்துப்படி, ஜேர்மனியின் மிகப்பெரிய பெருநகரப் பகுதியும் வறுமையில் உள்ளது.
ருர் பள்ளத்தாக்கில் உள்ள 5.8 மில்லியன் மக்களில் 1.3 மில்லியன் பேர் வறுமையில் வாடுகின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் அங்கு வறுமை 36 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த ஜேர்மனியின் நிலையை ஒப்பிடுகையில், வறுமை விகிதம் அங்கு சராசரியாக 14 சதவிகிதம் உயர்ந்திருந்தது. டூயிஸ்பேர்க்/எசென் நகர்ப்புறத்தில், அதே காலகட்டத்தில் வறுமை 48 சதவிகிதமாக அதிகரித்திருந்தது. கடந்த ஆண்டு வறுமை விகிதம் 21.5 சதவிகிதமாக உயர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது, இதுவே டோர்மூண்டில் உச்சபட்சமாக 22 சதவிகிதமாக இருந்தது.
ஜேர்மனியில் Hartz IV என்ற சமூக உதவியை பெறுபவர்களின் எண்ணிக்கை கூட அங்கு வறுமை அதிகரித்து வருவதை காட்டுகிறது. Hartz IV உதவி பெறுவோர் விகிதம் ஒட்டுமொத்த ஜேர்மனியில் 8.4 சதவிகிதமாக இருந்தது என்றாலும், ருர் பிராந்தியத்தில் 15 சதவிகிதமாக இருந்தது, அதாவது ஒவ்வொரு நான்காவது குழந்தையும் அரசாங்க உதவியை நம்பியிருந்தது என்பதாகும். சில நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இந்த எண்ணிக்கை 30 சதவிகிதத்தைத் தாண்டியது. மேலும் கெல்சென்கிர்ச்சென் நகரில், 40 சதவிகித குழந்தைகள் Hartz IV உதவியை நம்பியுள்ளனர்.
வறுமையின் புவியியல் ரீதியான பகிர்வைப் பொறுத்தவரை, அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “புவியியல் அடிப்படையில், ஜேர்மனியில் வறுமை இரண்டு பகுதிகளாக வேறுபடுகிறது – என்றாலும் கிழக்கு மற்றும் மேற்காக அல்லாமல், வடக்கு மற்றும் தெற்காக வேறுபடுகிறது. தெற்கின் பாதிப் பகுதியாகவுள்ள பவேரியா மற்றும் பாடன்- வூட்டன்பேர்க்கின் கூட்டு வறுமை விகிதம் 12.1 சதவிகிதமாக உள்ளது. மேலும், மீதமுள்ள குடியரசில், கிழக்கிலிருந்து வடக்கே மேற்கு நோக்கியதான, கூட்டு வறுமை விகிதம் 17.4 சதவிகிதமாக உள்ளது. அத்துடன் பவேரியா மற்றும் பாடன்-வூட்டன்பேர்க்கிற்கு வெளியே, சராசரியாக ஆறு பேரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ளனர்.
பெரிதும் குறைக்கப்பட்ட வேலை நேரங்கள் மற்றும் பவேரியா மற்றும் பாடன் வூட்டன்பேர்க்கில் உள்ள மோட்டார் வாகனங்கள் மற்றும் ஒருங்கிணைந்த தொழில் துறைகளில் அறிவிக்கப்பட்ட பாரிய பணிநீக்கங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், இந்த மாநிலங்களிலும் வறுமை அதிகரிக்கும் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியும்.
அதிகபட்ச வறுமை விகிதங்களைக் கொண்ட 15 பிராந்தியங்கள் மற்றும் நகரங்களில், மூன்றில் ஒரு பங்கு வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவிலும், முக்கியமாக ருர் பள்ளத்தாக்கு பகுதியிலும் உள்ளது. அடுத்த மூன்றில் ஒரு பங்கு வறுமை விகிதம் லோயர் சாக்சோனி மற்றும் பிரேமன் மாநிலங்களிலும், மேலும் மற்றொரு மூன்றில் ஒரு பங்கு வறுமை விகிதம் சாக்சோனி அன்ஹால்ட், சாக்சோனி, மெக்லென்பர்க்-வோர்போமர்ன் மற்றும் பேர்லினிலும் உள்ளது.
ரைன்-மெயின் பிராந்தியத்தில், குறிப்பாக பிராங்பேர்ட்/மெயின் மற்றும் ஆஃபென்பாக் மற்றும் ஹெஸ்ஸ மாநிலத்தின் தெற்கே டார்ம்ஸ்டாட்டைச் சுற்றியுள்ள பகுதியில் கூட 2006 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வறுமை கூர்மையாக அதிகரித்துள்ளது. இங்கே, வறுமை விகிதம் 2006 இல் 10.5 சதவிகிதமாக இருந்தது, 2019 இல் 15.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
“ஒரு பிராந்தியத்தில் அல்லது மாநிலத்தில் காணப்படும் உயர்ந்தபட்ச செல்வச் செறிவு பொதுவாக அதிகபட்ச வறுமை விகிதங்களுடன் ஒத்துப்போகிறது” என்று அறிக்கை குறிப்பிடுகிறது. ஜேர்மனியில் ஹெஸ்ஸ இரண்டாவது மிக உயர்ந்த செல்வ விகிதத்தைக் கொண்டுள்ளது என்றாலும், அதுவே தற்போது தேசிய சராசரியை விட அதிகமாக 16.1 சதவிகித வறுமை விகிதத்தைக் கொண்டுள்ளது.
வறுமை என்பது சராசரி வருமானத்தில் 60 சதவிகிதத்திற்கு குறைவான வருமானம் என வரையறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, இது ஒரு நபர் கொண்ட வீட்டிற்கான மாத வருமானம் 1,074 யூரோக்களாக இருந்தது, மேலும் 14 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 2,256 யூரோக்கள் மாத வருமானமாக இருந்தது.
வறுமையில் வாழ்பவர்களில் வேலையில்லாதவர்கள் 57.9 சதவிகிதம் வறுமையில் வாழும் அதிகபட்ச ஆபத்தைக் கொண்டுள்ளனர். ஒற்றை பெற்றோர்களில் 42.7 சதவிகிதம் பேர் வறுமையில் உள்ளனர், மேலும் பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் இதன் பங்கு 30.9 சதவிகிதமாக உள்ளது. மோசமான தகுதி உள்ளவர்கள் 41.7 சதவிகித அளவிலும், ஜேர்மன் குடியுரிமை இல்லாதவர்கள் 35.2 சதவிகித அளவிலும் வறுமையால் பாதிக்கப்படுகின்றனர்.
பரிசீலிக்கப்பட்ட அனைத்து குழுக்களைப் பொறுத்தவரை, முன்னைய ஆண்டை ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் வறுமை அதிகரித்துள்ளது. நீண்டகால ஒப்பீட்டின் படி மிகவும் குறிப்பிடத்தக்க அளவிலான வறுமை அதிகரிப்பு ஓய்வூதியம் பெறுபவர்களின் மத்தியில் இருந்தது. அதாவது அவர்களது மத்தியிலான வறுமை விகிதம் 2006 முதல் அறுபது சதவிகிதம் அதிகரித்து 17.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. வறுமையில் வாடுபவர்களில் பெரும்பான்மையினராக 33 சதவிகித அளவிற்கு குறைந்த வேலைவாய்ப்பு உள்ளவர்களும், மற்றும் 23.6 சதவிகித அளவிற்கு ஓய்வு பெற்றவர்களும் உள்ளனர்.
பல தசாப்த கால தொழிலாள வர்க்க எதிர்ப்புக் கொள்கைகளின் விளைவாகவே பரவலான வறுமை உள்ளது. தற்போதைய பரந்தளவிலான குறைந்த ஊதியத் துறையின் வளர்ச்சிக்கான ஒரு குறிப்பிட்ட உந்துதல், 1998 முதல் 2005 வரை ஆட்சி செய்த ஜெர்ஹார்ட் ஷ்ரோடர் மற்றும் ஜோஷ்கா பிஷ்ஷர் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) / பசுமை கூட்டணியின் திட்டநிரல் 2010 மற்றும் ஹார்ட்ஸ் சட்டங்களால் வழங்கப்பட்டது. அப்போதிருந்து, பெரும்பாலும் சமூக ஜனநாயகக் கட்சியின் பங்களிப்புடன் அனைத்து ஆளும் கூட்டணிகளும், இந்த முன்னேற்றங்களை முன்னோக்கி நகர்த்தின.
Paritätischer Wohlfahrtsverband இன் இந்த ஆண்டு வறுமை அறிக்கையின் புள்ளிவிபரங்கள், கோவிட்-19 பெருந் தொற்றுநோய் வெடித்து பரவ ஆரம்பித்ததற்கு முன்னைய காலத்தைச் சேர்ந்தவையாகும். அந்த நேரத்திலிருந்து, சமூக விரோதங்கள் மட்டுமே அதிகரித்துள்ளன என்பதுடன், வறுமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “கொரோனா வைரஸ் நெருக்கடியின் விளைவுகள் [சமத்துவமின்மையை நோக்கிய] இந்த போக்கை மேலும் துரிதப்படுத்தக்கூடும். இந்த நெருக்கடியின் தாக்கம் பொதுவான செழிப்பு இழப்பு அல்ல, மாறாக இது குறிப்பிட்ட உணவக சேவைத் துறைகள், அல்லது தற்காலிக வேலைவாய்ப்புக்கள், சிறிய வேலை செய்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களை பாதிக்கிறது, இதன் பொருள் என்னவென்றால், கொரோனா நோய்தொற்று நெருக்கடி இறுதியில் சமூகத்தின் இந்த பிரிவில் அதிக சமத்துவமின்மை மற்றும் அதிக வறுமைக்கு பங்களிக்கும்.”
மேலும் Paritätischer Wohlfahrtsverband இவ்வாறு எச்சரிக்கிறது: “எனவே கொரோனா நோய்தொற்று நெருக்கடி சமத்துவமின்மையும் வறுமையும் மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. மேலும், தற்போதைய உச்சபட்ச வறுமை விகிதம் 2019 இல் 15.9 சதவிகிதமாக இருப்பது 2020 இல் மீண்டும் கணிசமாக உயரும் என்று கூற நிறைய சாத்தியங்கள் உள்ளன.”
வறுமை, வீடற்ற நிலைமை, வயதான காலத்தில் வறுமை, மற்றும் பிற ஆபத்தான வாழ்க்கை சூழ்நிலைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க தற்போதைய சமூக பாதுகாப்பு அமைப்புக்கள் போதுமானதாக இல்லை என்று ஆய்வின் ஆசிரியர்கள் விமர்சிக்கின்றனர். Hartz IV மற்றும் பிற சமூக திட்டங்களிலிருந்து கிடைக்கும் நன்மைகள் ஒரு கண்ணியமான வாழ்விற்கு நிதியளிக்க போதுமானதாக இல்லாமல் மிகவும் குறைவானவையாக உள்ளன. மேலும், ஜேர்மன் அரசாங்கம் பொருளாதாரத்திற்கு ஆதரவாக செலவு செய்த நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களில், வேலை இழந்தவர்கள் மற்றும் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என எதையும் ஒதுக்கவில்லை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
வறுமைக்கு எதிரான எந்தவித நடவடிக்கையையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது. மாறாக, சமீபத்திய ஆண்டுகளின் கொள்கைகள், தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் மீதான ஒரு முன்னணி தாக்குதலை அடிப்படையாக வைத்தே வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பிற அனைத்து நாடுகளைப் போல, தொற்றுநோய் காலத்தின் போதான ஜேர்மன் அரசாங்கத்தின் நடவடிக்கையும், நோய் தொற்றிக்கொள்ளும் மற்றும் உயிரிழக்க நேரிடும் அபாயம் ஒருபுறம் இருந்தாலும், வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் தொழிலாளர்களின் இழப்பில் பணக்காரர்களையும், பெரும் செல்வந்தர்களையும் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பெரும் பிணை எடுப்புக்களை வைத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் வேலைக்குச் சென்றால் தான் இலாபங்களை பெருக்க முடியும் என்பதற்காக பள்ளிகளும், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் கடைசி வாரத்தில், ஜேர்மனியில் கோவிட்-19 நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்தது. மேலும், எந்தவித முடிவுமின்றி, கோவிட்-19 தொற்றுநோயால் 15,000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
வறுமை அதிகரித்து வருவது என்பது கீழ்மட்டத்தினர் முதல் மேல் மட்டத்தினர் வரை சமுதாயத்தின் செல்வம் மறுபகிர்வு செய்யப்பட்டதன் விளைவாகும். கொரோனா நோய்தொற்று நெருக்கடியின் விளைவாக பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாகிவிட்டது தொடர்பாக Wirtschaftswoche வார இதழின்அக்டோபர் 7 பதிப்புஇவ்வாறு தெரிவித்தது: “ஜேர்மனியில், கொரோனா தொற்றுநோய் பரவலின் ஆரம்பகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவுக்குப் பின்னர், பெரும் செல்வந்தர்களின் நிகர செல்வ மதிப்பு ஜூலை இறுதி வரையிலான காலத்தில் 594.9 பில்லியன் டாலராக உயர்ந்தது. கடைசி கணக்கெடுப்பின் போது (மார்ச் 2019 வரையிலான) இது 500.9 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இருந்தது. அதன் பின்னர் பெரும் பணக்காரர்களின் சங்கத்தில் 114 முதல் 119 வரை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து சங்கம் வளர்ச்சியடைந்தது. பெருந் தொற்றுநோய் கட்டுப்பாடற்று பரவத் தொடங்கியதன் பின்னர், ஜேர்மனியின் டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை தொழில்நுட்பம் (46 சதவிகிதம் வரை), சுகாதாரப் பாதுகாப்பு (12 சதவிகிதம் வரை) மற்றும் நிதி சார்ந்த (11 சதவிகிதம் வரை) துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது.”
Manager Magazin சமீபத்தில் வெளியிட்ட தரவரிசையின் படி, 32 பில்லியன் யூரோக்கள் மதிப்பிற்கு சொத்து கொண்ட ரைய்மான் குடும்பம் பணக்கார ஜேர்மனிய குடும்பங்களில் ஒன்றாகும். இரண்டாவது இடத்தில் 30 பில்லியன் யூரோக்கள் மதிப்பிடப்பட்ட சொத்துக்களைக் கொண்ட Lidl நிறுவனத்தின் ஸ்தாபகரான டீட்டர் ஸ்வார்ஸ் (Dieter Schwarz) உள்ளார். மூன்றாவது இடத்தில் BMW பங்குகளில் கிட்டத்தட்ட பாதியை வைத்திருக்கும் உடன்பிறந்த சகோதரர்களான சூசான கிளாட்டன் (Susanne Klatten) மற்றும் ஸ்ரெஃபான் குவாண்ட் (Stefan Quandt) ஆகியோர் உள்ளனர். கொரோனா நெருக்கடியின் விளைவாக, உங்கள் சொத்துக்கள் 1.5 பில்லியன் யூரோக்கள் குறைந்து 25 பில்லியன் யூரோக்களாக குறைந்துவிட்டன — இது இன்னும் அதிர்ச்சியூட்டும் தொகையாகும்.