மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடென் தேர்வுக்குழுவில் அவர் உத்தியோகபூர்வமாக வெற்றி பெற்றிருப்பதைக் குறிக்கும் விதத்தில் திங்கட்கிழமை இரவு தேசியளவில் தொலைக்காட்சியில் 15 நிமிடங்கள் உரையாற்றினார்.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு ஜனாதிபதி இதுபோன்றவொரு தருணத்தில் உரையாற்றுவது முன்பில்லாத ஒரு நிகழ்வாகும். நவீன அமெரிக்க வரலாற்றின் பெருபான்மையைப் பொறுத்த வரையில், வெவ்வேறு மாநிலங்களின் மக்கள் வாக்குகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்வுக்குழுவின் வாக்குகள் ஓரளவுக்கு சம்பிரதாயமானவை தான். இது 2000 ஆண்டு தேர்தலில் தான் மாறத் தொடங்கியது, அப்போது ஜோர்ஜ் டபிள்யு. புஷ் மக்கள் வாக்குகளில் அல் கோரிடம் தோல்வியடைந்து, புளோரிடா வாக்குகளின் மறுஎண்ணிக்கையை நிறுத்த உச்ச நீதிமன்றம் குறுக்கிடாமல் இருந்திருந்தால் தேர்வுக்குழு வாக்குகளிலும் அவர் தோற்றிருக்கலாம் என்ற நிலைமை இருந்தது. 2016 தேர்தல்களில், ட்ரம்ப் அண்மித்து மூன்று மில்லியன் அளவுக்கு மக்கள் வாக்குகளை இழந்திருந்த போதும், மாநிலங்களில் அவர் வாக்குகளின் பங்கீடு காரணமாக அவரால் தேர்வுக் குழு மூலமாக ஜெயிக்க முடிந்திருந்தது.
தற்போதைய நிலைமையோ, 2000 ஆம் ஆண்டு என்ன நடந்ததோ அதைவிட மோசமாக உள்ளது. இங்கே, மக்கள் வாக்குகளிலும் சரி தேர்வுக் குழு வாக்குகளிலும் சரி, இரண்டிலுமே பாரியளவில் தோற்றுப் போன ட்ரம்ப், தேர்தலைச் செல்லாததாக ஆக்கி தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்காக தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தேர்தல் நடைமுறைகள் பூர்த்தியாகி இருப்பதாகவும் மற்றும் ஜனநாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருப்பதாகவும் கூறி, தேர்வுக் குழு வாக்குகளைப் புகழ்ந்து பைடென் அவர் உரையைத் தொடங்கினார். “மக்கள் விருப்பம் நிறைவேறியது,” என்றார். “ஜனநாயகம் நெருக்கித் தள்ளப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, மீண்டெழுந்து அது உண்மையாகவும் பலமாகவும் நிரூபிக்கப்பட்டது,” என்றார்.
ஆனால் அமெரிக்க ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மீளவலியுறுத்துவதே பைடெனின் உத்தேசம் என்றால், அவர் நடத்தை மட்டுமல்ல அவர் வார்த்தைகளும் கூட நேர்முரணாக இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.
முதலாவதாக, அவரது உரை அதன் அதீத தற்காப்புத்தன்மையால் குணாம்சப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனநாயகம் மிகவும் பலமாக இருக்கிறது என்றால், ஏழு மில்லியன் வாக்கு வித்தியாசல் தேர்தலில் ஜெயித்த இந்த வேட்பாளர் அவரின் வெற்றி சட்டபூர்வத்தன்மை பெற்றிருப்பதையும் மற்றும் வரவிருக்கும் அவரது நிர்வாகம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் பாதுகாத்து ஏன் உரையாற்ற வேண்டும்?
தேர்வுக்குழு வாக்குகளுக்கு முந்தைய நிகழ்முறைகளில் பைடெனின் சொந்த விபரங்களே கூட ஜனநாயக ஆட்சி வடிவங்களின் பலத்தையும் மீளெழுச்சியையும் அடிக்கோடிடவில்லை மாறாக அதில் மீதமுள்ள அதீதி பலவீனத்தையே அடிக்கோடிட்டன.
ட்ரம்ப் தேர்தல் குழுவானது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் நாடெங்கிலுமான சாமானிய தேர்தல் பணியாளர்களை மிரட்டவும் அச்சமூட்டவும் முயன்றுள்ளதாக பைடென் குறிப்பிட்டிருந்தார். “இந்த தேசபக்தி மிக்க அமெரிக்கர்களில் பலரும் மிகப் பெரியளவில் அரசியல் அழுத்தத்திற்கும், வாய்வழி அவதூறுகளுக்கும், உடல்ரீதியிலான வன்முறை குறித்த அச்சுறுத்தல்களுக்கும் கூட ஆளாக்கப்பட்டனர் என்பதால், இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாகும்,” என்றார். “இந்த பொது சேவகர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்,” என்று கூறிய அவர், “நம் ஜனநாயகம் அவர்களால் தான் உயிர்பிழைத்தது,” என்றார்.
ஒருசில தேர்தல் அதிகாரிகள் இல்லையென்றால், தேர்தல்களை மாற்றியமைப்பதற்கான ட்ரம்ப் முயற்சி வெற்றி பெற்றிருக்கும் என்பதே இதன் உள்அர்த்தமாக உள்ளது.
பின்னர், உச்ச நீதிமன்றம் உட்பட மாநில மற்றும் மத்திய அளவில் 80 க்கும் அதிகமான நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட, சட்ட சவால்கள் மூலமாக தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கான ட்ரம்பின் முன்னொருபோதும் நடத்தப்பட்டிராத முயற்சியைக் குறித்து பைடென் குறிப்பிட்டார். அதன் முடிவு, “நமது நீதித்துறையின் ஒருமைப்பாட்டை" நிரூபித்திருப்பதாக அவர் கூறினார்.
ஆனால் தேர்தலின் இறுதி மத்தியஸ்தராக உச்ச நீதிமன்றத்தை ட்ரம்ப் சார்ந்திருந்தார் என்றால், அது 2000 இல் புஷ்ஷிற்கு வெற்றியை ஒப்படைப்பதில் அது வகித்த பாத்திரத்தினால் ஆகும். உண்மையில் இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போது முடிவுகளை மாற்றியமைப்பதற்கான அவரின் சொந்த முயற்சிகளில், பல சமயத்தில் ட்ரம்ப் உச்ச நீதிமன்ற நீதிபதி அன்டோனின் ஸ்காலியா முன்வைத்த வாதங்களை —அதாவது, ஜனாதிபதிக்காக வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு இல்லை என்பதை— சார்ந்து இருந்துள்ளார்.
ட்ரம்ப் மீதான பைடெனின் விமர்சனமே கூட தற்காலிகமாகவும், தட்டிக் கழிப்பதாகவும் இருந்தது. ட்ரம்ப் "20 மில்லியனுக்கும் மேலாக அமெரிக்கர்களின் வாக்குகளை ஒன்றுமில்லாது ஆக்க" முயற்சி செய்தார், அவர் நிலைப்பாடு "மிகவும் தீவிரமாகவும், நாம் இதற்கு முன்னர் ஒருபோதும் பார்த்திராத வகையில் இருந்த அந்த நிலைப்பாடு மக்களின் விருப்பத்தையும், சட்டத்தின் ஆட்சியை மற்றும் அரசியலமைப்பின் கௌரவத்தையும் மதிக்க தவறிவிட்டது,” என்றார்.
அமெரிக்க முதலாளித்துவ அரசியல் கலாச்சாரத்தில் உள்பொதிந்துள்ள ஒரு விதமாக, பைடென் வெளிப்படையான விசயத்தை, அதாவது அமெரிக்க ஜனாதிபதி தனிபட்ட ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க தொடர்ந்து பாசிசவாத சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்று, பட்டவர்த்தனமாக குறிப்பிடாமல் தவிர்த்துக் கொண்டார்.
அல்லது, இவை அனைத்திலும் குடியரசுக் கட்சி உடந்தையாய் உள்ளது என்ற உண்மையை அவர் சுற்றி வளைத்தும் கூட தொடவில்லை. தேர்தல் முடிவை மாற்றுவதற்கான டெக்சாஸ் சட்டவழக்கை ஆதரிக்குமாறு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைக் கோரிய காங்கிரஸ் சபையின் 126 குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 17 குடியரசுக் கட்சி வழக்குரைஞர்களின் "அதிர்ச்சிகரமான" முடிவைக் குறிப்பிட்ட பைடென், அதேவேளையில் "தேர்வுக்குழு முடிவுகளை ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ள செனட்டில் உள்ள நமது முன்னாள் குடியரசுக் கட்சி சக உறுப்பினர்களின் எண்ணிக்கை" மீது அவர் "மகிழ்ச்சி அடைவதாக" அறிவிக்க நகர்ந்தார்.
“எனக்கு திருப்தியாக உள்ளது,” என்று கூறிய பைடென், “நாம் பல விசயங்களில் நாட்டின் நன்மைக்காக சேர்ந்து செயல்படலாம்,” என்றார். “உஷ்ண நிலைமையை குறைப்பது" அவசியம் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். அதாவது, வரவிருக்கும் பைடென் நிர்வாகம் அவரின் சொந்த தேர்தல் வெற்றியையே மாற்றுவதற்காக ஒரு சூழ்ச்சியில் சம்பந்தப்பட்டுள்ள கட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைக்கும் என்றாகிறது.
அவரின் தேர்வுக்குழு வெற்றி காங்கிரஸ் சபை குடியரசுக் கட்சியினரை வாக்கு முடிவுகளை ஏற்றுக் கொள்ள செய்யும் என்று பைடென் வாதிட்ட அதேவேளையில், ட்ரம்பும் அவருக்கு நெருக்கமான கூட்டாளிகளும் மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகிகளின் ஒரு மிகப்பெரிய அணியும் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அந்நாளின் நடைமுறைகள் நிறைவடைவதற்கு முன்னரே கூட, பதவியில் தங்கியிருப்பதற்கான அவரின் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று ட்ரம்ப் அறிவித்தார். அவரின் உயர்மட்ட பாசிசவாத வெள்ளை மாளிகை கூட்டாளி, ஸ்டீபன் மில்லெர், கடுமையான போட்டி நிலவும் மாநிலங்களில் ஜனாதிபதிக்கு முற்றிலும் சட்டவிரோத வாக்குகள் இடக்கூடிய "மாற்று வெற்றியாளர்கள்" பெயரை அறிவிக்க முன்மொழிந்து வருகிறார்.
அமெரிக்காவில் 300,000 க்கும் அதிகமானவர்களின் உயிரைப் பறித்துள்ள கொரோனா தொற்றுநோய் குறித்து வெறும் ஒரேயொரு சிறிய குறிப்பை வழங்கியதுடன் பைடென் அவர் உரையை நிறைவு செய்தார். “உங்களின் சொந்த தவறேதும் இல்லாமல் கடுமையான காலங்களில் உயிரிழந்துள்ள" “உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயத்தில் இடம் உண்டு,” என்றவர் அறிவித்தார். ஆனால் நாடெங்கிலும் பரவி வரும் இந்த பேரழிவுக்கு செய்ய வேண்டிய எதை ஒன்றையும் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. “எங்கெல்லாம் முரண்பாடு இருக்கிறதோ அங்கே ஒற்றுமையும் இருக்கிறது; எங்கெல்லாம் சந்தேகம் இருக்கிறதோ, அங்கே உண்மை இருக்கிறது; எங்கெல்லாம் இருள் இருக்கிறதோ, அங்கே ஒளியும் இருக்கிறது,” என்ற அவரின் புதிய வடிவிலான கத்தோலிக்க கத்திசியத்தைக் (Catholic Catechism) கொண்டு அனைத்தும் தீர்க்கப்படும்.
பைடன் "ஒற்றுமையை" பற்றி உபதேசிக்கையில், யதார்த்தம் என்னவென்றால், அமெரிக்காவில் சமூக பதட்டங்கள் ஜனநாயகத்தின் பாதுகாப்பு இணைப்புகளில் ஒரு குறுக்குச்சுற்றை கொண்டு வரும் ஒரு கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் சர்வாதிகாரத்திற்கு மாறுகிறார்கள்.
ட்ரம்ப் மட்டுமே காரணம் இல்லை. மாறாக அவரொரு கருவி தான், அவர் ஓர் ஆழ்ந்த நோயின் ஒரு வெளிப்பாடு. ட்ரம்ப் இப்போது வெற்றியடையாவிட்டாலும் கூட, முன்மாதிரி அமைக்கப்பட்டு உள்ளது. நிதியியல் செல்வந்த தட்டுக்களின் அதிர்ச்சி துருப்புகளாக பாசிசவாத சக்திகளை அணித்திரட்டும் அடிப்படையில் தேர்தலைக் களவாட அவர் “முதுகில் குத்தும்" தத்துவத்தை விவரித்து வருகிறார்.
ஊடகங்களில் பேசும் தலைகளின் கருத்துக்களும் பைடெனின் கருத்துக்களைத் தொடர்ந்தன, என்ன நடக்கிறதோ அது ஜனநாயக ஆட்சி வடிவங்களை மாற்றுவதற்கான ஒரு முயற்சி அல்ல ஒரு குழந்தைகள் விளையாட்டு என்பதைப் போல, குடியரசுக் கட்சியினர் "சரியானதைச் செய்ய வேண்டும்" என்றும் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் குடியரசுக் கட்சியினருக்கு அறிவுரைக் கூறினார்கள்.
பைடென் அவரே கூட, கருத்துகள் கூறுகையில் மூச்சு இரைத்தவாறு இருமிக் கொண்டிருந்த அவர், திட்டமிட்டு அவர் மூடிமறைக்க முயலும் அதே நெருக்கடிக்கு உரிய அறிகுறியைக் கொண்டிருப்பதாக தெரிந்தது. அவர் இராணுவ-உளவுத்துறை எந்திரம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் நிச்சயமான பாதுகாவலர்களைப் பணியில் அமர்த்தி, அவர் தற்போது ஒரு வலதுசாரி நிர்வாகத்தை ஒருங்கிணைத்து வருகிறார். இதுபோன்றவொரு கட்சியும் இதுபோன்றவொரு அரசாங்கமும் ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்த பாசிசவாத அச்சுறுத்தலுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமென எதிர்பார்ப்பது முட்டாள்தனத்தின் உச்சமாக தான் இருக்கும்.
இந்த இலாபகர அமைப்புமுறைக்கும், ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக, மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் பெருநிறுவன கட்டுப்பாட்டிலான இரண்டு கட்சிகளும் தொடுத்து வரும் வேலைக்குத் திரும்ப செய்யும் மற்றும் பள்ளிகளுக்குத் திரும்ப செய்யும் ஆட்கொலை பிரச்சாரத்திற்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்பு தான் ஜனநாயகக் கட்சியினரின் பிரதான கவலையாக உள்ளது.
அமெரிக்க ஜனநாயகம் "உண்மையில் பலமாக" இல்லை; அது மரண வாயிலில் உள்ளது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பானது, பிரிக்க முடியாதவாறு, முதலாளித்துவத்திற்கு எதிராக மற்றும் இந்த அழுகிப் போன ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சி மாளிகைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அரசியல்ரீதியில் அணித்திரட்டுவதுடன் பிணைந்துள்ளது.