கொரோனா வைரஸின் இங்கிலாந்து திரிபு வகையின் ஆதிக்கம் அமெரிக்காவில் நோய்தொற்றுக்களின் பெரும் வெடிப்புக்கு அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் சமீபத்தில் குறைந்து வந்தாலும், வைரஸின் புதிய திரிபு வகையான B.1.1.7, இங்கிலாந்து அல்லது கென்ட் திரிபு வகை எனவும் அறியப்படும் இந்த வைரஸ், பொது சுகாதார அதிகாரிகளின் மத்தியில் பரவலான அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது. பைடென் நிர்வாகத்தின் முதன்மைத் திட்டம் பொருளாதார இயல்புநிலைக்கு விரைந்து திரும்புவதாகும், இதில் கல்வி நிறுவனங்களில் வகுப்பறை கற்பித்தலை மீண்டும் தொடங்குவதும் அடங்கும், அப்போது தான் குழந்தைகளின் பெற்றோர்களும், பாதுகாவலர்களும் முழுநேர பணிக்குத் திரும்ப முடியும் என அது நினைக்கிறது.

புதிய திரிபு வகை நோய்தொற்றுக்களின் பெரும் அதிகரிப்பின் பின்னணியில் உள்ள கணக்கீடு, இந்த திட்டங்களின் தலையீட்டினாலும், அவர்களை காப்பாற்ற முனையும் வெகுஜன தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் மித வேகத்தினாலும் அது நிகழும் என்பதே. McClatchy News தகவலின் படி, பைடென் நிர்வாகம் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க, குறிப்பாக புளோரிடாவில் விதிக்க பரிசீலித்து வருகிறது, ஏனென்றால் நாட்டில் கண்டறியப்பட்ட B.1.1.7 நோய்தொற்றுக்களின் அதிகபட்ச எண்ணிக்கை இங்கு தான் உள்ளது.

டிசம்பர் 2020, நியூயோர்க்கில் ஒரு பெண்மணியும் அவரது குழந்தைகளும் உள்ள காட்சி (AP Photo/Mark Lennihan)

பெயர் குறிப்பிடாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், “தொற்றுநோய் பரவுவதைத் தணிக்க எது உதவும் என்பது பற்றி தீவிரமான பேச்சுவார்த்தைகள் இங்கு நடக்கின்றன, என்றாலும் தரவையும், செய்ய திட்டமிடும் வேலையையும் நாம் பின்பற்ற வேண்டும். இதை நாம் தென்னாப்பிரிக்காவுடன் செய்தோம். மேலும் இதை நாம் பிரேசிலுடன் செய்தோம், ஏனென்றால் நமக்கு தெளிவான வழிகாட்டுதல் அப்போது கிடைத்தது. என்றாலும், நோய்தொற்று பரவுவதைத் தணிக்க உதவும் எதைப் பற்றியும் இப்போது நாம் உரையாடிக் கொண்டிருக்கிறோம்” என்று McClatchy க்கு தெரிவித்தார்.

முடிவு இன்னும் நிச்சயமற்றதாக உள்ளது. அமெரிக்க நிர்வாகம், நோய்தொற்று பரவலைத் தணிக்க உதவும் எதை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, என்றாலும் அதுவும் கூட, அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவது, பள்ளிகளை மூடுவது, மற்றும் கூட்டம் கூடும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விரிவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதைத் தவிர்க்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முழு அடைப்புக்கான திட்டம் இன்னும் மேசையில் கிடப்பில் உள்ளது. எவ்வாறாயினும், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலும், மிக சமீபத்தில், இங்கிலாந்திலும் நோய்தொற்றுக்களின் திடீர் எழுச்சிக்கு இறுதியில் திருப்பம் காணச் செய்த சமூக நடவடிக்கைகளை மட்டுப்படுத்தக்கூடிய துல்லியமான கடுமையான நடவடிக்கைகளை மட்டும் இது எடுத்து வருகிறது.

அமெரிக்கா 27.9 மில்லியனுக்கும் மேலாக நோய்தொற்றுக்கள் இருப்பதாக பதிவு செய்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை அடுத்த அல்லது இரண்டு வாரங்களில் அரை மில்லியனைத் தாண்டும், அது அதிர்ச்சி தரக்கூடிய மற்றும் மோசமான எண்ணிக்கையாக இருக்கும்.

கடந்த இரண்டு வாரங்களில், அமெரிக்கா 1.4 மில்லியன் புதிய நோய்தொற்றுக்களை மட்டுமே கண்டது, இது முன்னைய இரண்டு வாரங்களில் இருந்து 42 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், இறப்பு வீதம் 17 சதவீதமாக மிக மெதுவாக குறைந்து வந்துள்ளது, அதாவது அதே காலகட்டத்தில் 37,908 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. அதற்கு இரண்டு மூன்று வாரங்களாக தொற்றுநோயாளிகள் இறந்து போவதை கண்டறிவதிலுள்ள பின்னடைவு தான் காரணம்.

ஜனவரியில் காணப்பட்ட நோய்தொற்று சரிவுகளுக்கு உள்ளூர் அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகளும் மற்றும் நாடு முழுவதுமாக சுகாதார அமைப்புகளை நிரம்பி வழியச் செய்த நோய்தொற்றின் கடும் எழுச்சியை தடுப்பதில் மக்கள் கொண்டிருந்த பங்கும் முதன்மை காரணமாக இருந்தது.

எவ்வாறாயினும், வெளிப்படையாக ஒரு மாதம் கழிந்துவிட்ட நிலையில், ஜனாதிபதி பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சி தலைமையிலான ஒரு பாரிய முன்னெடுப்பு, அவர்களது தடுப்பூசி விநியோக நடவடிக்கை தொடர்ந்து தள்ளாட்டத்தில் இருந்தாலும், வணிகங்களை திறப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது. தொற்றுநோய் தொடர்புபட்ட மேற்பார்வை மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கான அனைத்து பொது சுகாதார உள்கட்டமைப்புகளும், மூன்று வாரங்களுக்கு முன்பு பைடென் பதவியேற்றபோது இருந்த அதே நிலையில் உள்ளன.

ஹார்வர்டு தொற்றுநோயியல் நிபுணரும் மற்றும் சுகாதார பொருளாதார நிபுணருமான Dr. Eric Feigl-Ding, அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றுநோய் விவகாரத்தை நாம் பார்க்கையில் அங்கு ஒரு நோய்தொற்று முடிவுக்கு வரும் அதேவேளை அடுத்த மிகுந்த தொற்றும்தன்மை கொண்ட மற்றும் ஆபத்தான B.1.1.7 எனும் வைரஸின் மரபுவழி திரிபின் இரண்டாவது நோய்தொற்று எழுச்சி தொடங்குகிறது, இது மார்ச் மாதம் மத்தியில் அங்கு ஆதிக்கம் செலுத்தும். அவர், “நாம் விரைவில் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவோம்,” என்று ட்வீட் செய்துள்ளார்.

கடுமையான SARS-CoV-2 வகை மிகவும் பொதுவானதாக இருப்பதால், நோய்தொற்றுக்கள் மெதுவாக குறைவதை இப்போது நாம் காண்கிறோம். R0 இனப்பெருக்க எண் அமெரிக்காவில் அண்ணளவாக 0.9 ஆக உள்ளது. புதிய திரிபு வகை வைரஸ், ஆதிக்க மரபுவழி வைரஸாக மாறி 40 முதல் 80 சதவிகிதம் வரை மிகஅதிக தொற்றும் தன்மையுடன் பெருந்திரளான மக்களுக்கு இடையில் பரவத் தொடங்குகையில், R0 1 க்கு மேல் அதிகரிக்கத் தொடங்கும் என்பதுடன், நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையும் விரைந்து மேல்நோக்கி கூர்மையாக அதிகரிக்கும்.

தற்போதைய கட்டுப்பாடுகளின் கீழ் ஆல்பர்ட்டாவில் கோவிட் பரவல் குறித்த முன்கணிப்பு (வணிகங்கள் திறக்கப்படாத நிலையில்)

கல்கரி பல்கலைக்கழகத்தில் ஒரு முதுகலை மருத்துவ ஆராய்ச்சியாளரான, டாக்டர் மாகோர்ஸாட்டா காஸ்பரோவிச் செய்த பணியை குறிப்பிட்டு, “B.1.1.7 வைரஸ் திரிபு 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது. கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜனவரி 25 ஆம் தேதிக்குள் B.1.1.7 திரிபு வகை நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 10 என இருந்தது ஒருபுறமிருக்க, டாக்டர் காஸ்பரோவிச்சின் கணிப்புகள், இந்த இங்கிலாந்து மரபுவழி வைரஸ் மார்ச் 4 ஆம் தேதிக்குள் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்பதைக் காட்டுகின்றன. அவர்களது தற்போதைய “தளர்வான” கட்டுப்பாடுகளின் கீழ், பிப்ரவரி மாத இறுதியில் நோய்தொற்றுக்கள் முற்றிலும் குறைந்து, பின்னர் ஏப்ரல் மாத தொடக்கத்தில் குளிர்கால உச்சங்களுக்கு திரும்பும் என்பதை வரைபடங்கள் காட்டுகின்றன என்று Dr. Feigl-Ding விளக்கினார்.

சூழலின் காரணமாக, ஆல்பர்ட்டாவின் கணிப்புக்களில் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை மட்டும் அமெரிக்கா பின்தங்கியிருந்தது. Dr. Feigl-Ding முன்கணிப்புக்களின் அடிப்படையில், 0.7 அல்லது 0.6 க்கும் குறைந்த R0 என்பது, அமெரிக்காவில் நோய்தொற்றுக்கள் தொடர்ந்து குறைந்து வருவதை குறிக்கும், இது, ஒரு கடுமையான தடுப்பு மூலோபாயத்தை உடனடியாக செயல்படுத்துவதை குறிக்கிறது.

ஒரு புள்ளி குறிப்பாக, epiforecast.io வலைத் தளம் நியூயோர்க்கின் R0 நிலையை 1.0 என பட்டியலிடுகிறது. பள்ளிகளை மீண்டும் திறப்பதும், கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் தற்போது நிகழ்வதால், இந்த எண்ணிக்கை இன்னும் மோசமான நிலைக்குத் திரும்பும். மேலும், பள்ளி மாணவர்கள் பற்றிய தரவு சமூக பரவலுக்கான முக்கிய காரணியாக அவர்கள் இருப்பதைக் காட்டுகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சியினர் சிறு நெருப்பு பொறியை கொழுந்துவிட்டெரியச் செய்ய அதை பயன்படுத்துவார்கள் என்பது தெளிவாகியுள்ளது.

SARS-CoV-2 இன் முன்னைய மரபுவழி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் புதிய திரிபு வைரஸை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்காது என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் உறுதிபட கூறியுள்ளனர்.

இம்பீரியல் கல்லூரியின் கூற்றுப்படி, டிசம்பரில் இங்கிலாந்து புதிய கட்டுப்பாடுகளை விதித்தபோது, “நோய்தொற்றுக்கள் குறைவதற்கான எந்தவித ஆதாரத்தையும்” அவர்கள் காணவில்லை. அதற்குள், இங்கிலாந்து திரிபு வகை வைரஸ் SARS-CoV-2 இன் ஆதிக்க வடிவமாக உருவெடுத்தது. ஜனவரி மாதத்தில், இறப்புக்களின் அடிப்படையில் மிக மோசமான மாதமாக, இங்கிலாந்தில் 32,000 க்கும் அதிகமானோர் இறந்தனர், இது பிரிட்டிஷின் ஒட்டுமொத்த கோவிட்-19 இறப்புக்களில் 28 சதவிகிதத்தைக் குறிக்கிறது.

அவசரநிலைகளுக்கான சுயாதீன விஞ்ஞான ஆலோசனைக் குழு ஜனவரி 4 அன்று, “இங்கிலாந்தின் தென்கிழக்கில் தோன்றியதாக அறியப்படும் புதிய திரிபு வகை வைரஸ், முன்னைய திரிபு வகைகளை விட 40 முதல் 80 சதவிகிதம் வரை கணிசமாக அதிக அளவு பரவக்கூடியது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. இது R0 எண்ணை 0.4 மற்றும் 0.8 க்கு இடைப்பட்ட எண்ணிக்கை அளவுக்கு அதிகரிக்கச் செய்கிறது. பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டாலும் கூட, தற்போதைய 4 அடுக்கு கட்டுப்பாடுகளால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது என்பதும் தெளிவாகிறது. பெருந்தொற்று நோய் இப்போது கட்டுப்பாட்டில் இல்லை… புதிய திரிபு வகை வைரஸை இல்லாதொழிக்க ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள நடவடிக்கையின் அவசரம் தேவை என்பதை மிகைப்படுத்த முடியாது” என்று எழுதியது.

பிரதமர் போரிஸ் ஜோன்சன், சுகாதார அமைப்புக்கள் கடும் சிரமத்திற்குள்ளான நிலையில், ஜனவரி 5 அன்று, மக்களை “வீட்டில் முடங்கியிருக்க” அறிவுறுத்தியும், பெரும்பாலான பள்ளிகள், மதுபானகங்கள் மற்றும் உணவகங்களை மூடச் சொல்லியும் கடுமையான பூட்டுதல் நடவடிக்கைகளை விதித்தார். நோய்தொற்றுக்கள் விரைவாக குறைந்தன, இது பயனுள்ள பொது சுகாதார நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது புதிய திரிபு வைரஸ்களை கூட கட்டுப்படுத்தும் என்பதைக் குறிக்கிறது. ஆனால் வெளிப்படையாக ஆளும் தன்னலக்குழுக்களின் ஏலத்தை பொது அதிகாரிகள் செய்கிறார்கள், இது வைரஸை விட மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

பெருவணிக அழுத்தத்தின் கீழ், “விவேகமாக தேதி குறிப்பிட்டு” மார்ச் 8 ஆம் தேதிக்குள் பள்ளிகளைத் திறப்பதற்கு பரிசீலிப்பதாக ஜோன்சன் இப்போது அறிவித்துள்ளார். இந்த திரிபு வகைகளின் கொப்புளிக்கும் விளைவுகளைத் தடுக்க இங்கிலாந்தும் கூட அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை நம்புகிறது.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய பொது சுகாதாரத் தலைவியான பேராசிரியை தேவி ஸ்ரீதர், “உங்கள் மத்தியில் தொடர்ந்து நோய்தொற்றுக்கள் பரவிக் கொண்டிருக்கையில், 50 குழந்தைகள் திரும்பத் திரும்ப வீட்டிற்கு செல்வார்கள் என்ற நிலையில், அது ஸ்திரமான கல்வியாக இருக்காது. நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை குறையும் வரை நீண்ட காலத்திற்கு பள்ளிகளை மூடி வைத்திருப்பது நல்லது, பின்னர் மிக நிலையாக பள்ளிகளை திறக்க வேண்டும்” என்று கார்டியனுக்கு தெரிவித்தார்.

இலண்டன் இராணி மேரி பல்கலைக்கழகத்தின் மருத்துவ தொற்றுநோயியல் நிபுணரான டாக்டர் தீப்தி குராசானி, பள்ளிகளை முன்கூட்டி திறப்பதற்கு எதிராக குரல் கொடுத்ததோடு, மார்ச் 8 என்பது முன்கூட்டிய மற்றும் நம்ப முடியாத தேதி என்று பிரதமரை எச்சரித்தார். “நாம் மிக மிக ஆபத்தான நிலையில் இருக்கிறோம். பெரும்பாலான குழந்தைகளுக்கு பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பெற்றோர்களும் குழந்தைகளும் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர். அதை நாம் வீணடித்துவிடக் கூடாது என்பது மிக முக்கியம்,” என்று அவர் கார்டியனுக்கு தெரிவித்தார். வீடுகளில் வயது வந்தவர்களை விட இரண்டு மடங்கு கூடுதல் நோய்தொற்று பாதிப்புக்குள்ளாகும் முதல் கட்ட பாதிப்பாளர்களாக இளம் குழந்தைகள் தான் உள்ளனர், ஒருமுறை அவர்கள் பாதிக்கப்பட்டவுடன், வயது வந்தவர்களைப் போல இரு மடங்கு கூடுதலாக நோயை பரப்புகின்றனர் என்பதை ஆதாரங்கள் குறிக்கின்றன” என்பதையும் சேர்த்துக் கூற முயன்றார். சமுதாயத்தில் நோய்தொற்று பரவல் உச்சத்தில் நிலைத்திருக்கையில், “பேரழிவுக்கான வழிமுறையாக” பள்ளிகளை மீண்டும் திறக்க அவர் அழைப்பு விடுத்தார்.

டென்மார்க்கும் கூட புதிய இங்கிலாந்து திரிபு வைரஸினால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டது. இருப்பினும், வேறுபட்ட அணுகுமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். டிசம்பர் பிற்பகுதியில் கடுமையான தேசிய பூட்டுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டு ஆறு வாரங்களுக்குப் பின்னர், டென்மார்க்கின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், இறுதியாக அவர்கள் வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது தெரிகிறது எனக் கூறுகிறது.

பிப்ரவரி 1 அன்று, R0 1.0 ஆக குறைக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர், இந்த மரபுவழி வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக ஒரு நபருக்காவது அதை பரப்புகின்றனர். இந்த நடவடிக்கைகள் தொற்றுநோயின் தீவிர பரவும் தன்மையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை மதிப்பிடுவதற்கு ஒரு கட்டத்தில் பதிலிறுக்கும் விதமாக ஆரம்ப பள்ளிகளை ஓரளவு திறந்துள்ளது. வணிகங்கள் மூடப்பட்டும், உத்தரவுகளின் கீழ் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருவதும் உட்பட எஞ்சிய கட்டுப்பாடுகள் அப்படியே நடைமுறையில் உள்ளன.

ஜோன்சன் & ஜோன்சன் தடுப்பூசி பிப்ரவரி இறுதிக்குள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடமிருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெற எதிர்பார்க்கிறது, இது அமெரிக்காவிற்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்கும்.

தம்பாவில் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜேசன் சலேமி, “நாம் பகடைகளை உருட்டிக் கொண்டே, வைரஸும் அதன் வகைகளும் மக்கள் மத்தியில் மிகவுயர்ந்த மட்டங்களில் பரவ அனுமதிக்கிறோம்” என்று STAT News க்கு தெரிவித்தார். கடந்த வாரம் புளோரிடாவில் Super Bowl விளையாட்டு கொண்டாடப்பட்டது. விளையாட்டைக் காண அங்கு பயணம் செய்த பலரும் வீட்டிற்கு திரும்புகையில், B.1.1.7 வைரஸ் திரிபு வகையின் பாதிப்பையும் ஒருவேளை அவர்களுடன் கொண்டு வந்தனர்.

பள்ளிகள் பாதுகாப்பாக இருப்பதாக ஆசிரியர்களுக்கு உறுதியளித்ததோடு, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை என்றும் கூறிய, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநர் ரோச்செல் வலென்ஸ்கி, திங்களன்று ஒரு மாநாட்டில், “தயவுசெய்து, உங்கள் பாதுகாப்பை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். திரிபு வகை வைரஸ்களின் தொடர்ச்சியான பெருக்கம், மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது என்பதுடன், நாம் காணும் சமீபத்திய நேர்மறையான போக்குகளை திருப்பிப்போடும் அச்சுறுத்தலாகவும் அது உள்ளது” என்றும் கூறினார்.

Loading