மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பாரிஸ் கம்யூனின் 150 ஆம் நினைவாண்டைக் குறிக்க உலக சோசலிச வலைத் தளம் ஏப்ரல் 3, சனிக்கிழமை, சர்வதேச இணையவழிக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. விபரங்களை இங்கே காணலாம், இங்கே பதிவு செய்யலாம். இந்த நிகழ்வுக்கு முன்னதாக, கம்யூனின் முக்கியத்துவம் மற்றும் படிப்பினைகளைப் பகுப்பாய்வு செய்த 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மார்க்சிஸ்டுகளின் பல தொல்சீர் படைப்புகளை நாம் பிரசுரித்து வருகிறோம்.
விளாடிமீர் லெனினின் இந்த கட்டுரை பாரிஸ் கம்யூனின் 40ஆம் நினைவாண்டில், ஏப்ரல், 1911இல், ரஷ்ய மொழி பத்திரிகையான ரப்போச்சியாகசெட்டாவில்(Rabochaya Gazeta) பிரசுரிக்கப்பட்டது.
* * *
பாரிஸ் கம்யூன் பிரகடனப்படுத்தப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. அந்த பாரம்பரியத்திற்கு இணங்க, பிரெஞ்சு தொழிலாளர்கள் மார்ச் 18, 1871 புரட்சியின் ஆண்கள் மற்றும் பெண்களின் நினைவாக கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தினர். மே மாத இறுதியில் மீண்டும் அவர்கள் அந்த கொடூரமான "மே வாரத்தில்" சுட்டுக் கொல்லப்பட்டு பலியான கம்யூன் உறுப்பினர்களின் கல்லறைகளில் மலர் வளையம் வைப்பார்கள், அவர்கள் சிந்தனைகள் வெற்றி பெறும் வரை, அவர்கள் விட்டுச் சென்ற குறிக்கோள் முழுமையாக நிறைவேறும் வரை அவர்களின் கல்லறையில் அவர்கள் மீண்டும் உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்.
பிரான்சில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், பாட்டாளி வர்க்கமானது ஏன் பாரிஸ் கம்யூனின் ஆண்கள் மற்றும் பெண்களைத் தங்கள் முன்னோடிகளாக மதிக்கிறார்கள்? கம்யூனின் மரபுகள் என்ன?
கம்யூன் தன்னியல்பாக எழுந்தது. நனவுபூர்வமாக ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் அதற்காக யாரும் தயாரிப்பு செய்யவில்லை. ஜேர்மனியுடனான தோல்வியுற்ற போர், முற்றுகையின் போது ஏற்பட்ட வறுமைத் துன்பம், பாட்டாளி வர்க்கத்தினரிடையே வேலையின்மை மற்றும் கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்தினரிடையே நிலவிய அவலம்; உயர்மட்ட வர்க்கங்களுக்கு எதிராகவும், முற்றிலும் திறமையின்மையை வெளிக்காட்டிய அதிகாரிகளுக்கு எதிராகவும் மக்களின் கோபம், தனக்குக் கொடுக்கப்பட்டதன் மீது தொழிலாள வர்க்கத்தில் நிலவிய அதிருப்தி மற்றும் வேறொரு சமூக அமைப்புமுறைக்காக வேட்கையோடு இருந்த தொழிலாள வர்க்கத்தினரிடையே நிலவிய குழப்பமான அமைதியின்மை; குடியரசின் தலைவிதியைப் பற்றிய அச்சத்தை எழுப்பிய தேசிய சட்டமன்றத்தின் பிற்போக்குத்தனமான ஆக்கமைவு என இவை அனைத்தும் மற்றும் இன்னும் பல காரணிகளும் இணைந்து மார்ச் 18 இல் பாரிஸ் மக்களைப் புரட்சிக்குத் தள்ளின, அது எதிர்பாராத விதமாக அதிகாரத்தை தேசிய காவல்படையின் (National Guard) கைகளிலும், தொழிலாள வர்க்கமும் மற்றும் அதன் தரப்பில் இருந்த குட்டி முதலாளித்துவத்தின் கரங்களிலும் கொண்டு வந்து சேர்த்தது.
அது வரலாற்றில் முன்னோடியில்லாத ஒரு நிகழ்வாகும். அதுவரையில், அதிகாரமானது, ஒரு விதியைப் போல, நில உரிமையாளர்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் கைகளில், அதாவது, அரசாங்கம் என்றழைக்கப்பட்டதை அமைத்த அவர்களின் நம்பகமான முகவர்களின் கைகளில் இருந்து வந்தது. மார்ச் 18 புரட்சிக்குப் பின்னர், எம். தியேர் அரசாங்கம் பாரிஸிலிருந்து அதன் படைகள், அதன் பொலிஸ் மற்றும் அதிகாரிகளுடன் தப்பியோடிய போது, மக்களே நிலைமைக்கு எஜமானர்களாக ஆனார்கள், அதிகாரம் பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்குச் சென்றது. ஆனால் நவீன சமூகத்தில், பொருளாதார ரீதியாக மூலதனத்தால் அடிமைப்படுத்தப்பட்ட பாட்டாளி வர்க்கம், அதை மூலதனத்துடன் கட்டிப் போட்டிருக்கும் சங்கிலிகளை உடைக்காத வரையில், அரசியல்ரீதியில் அது ஆதிக்கம் செலுத்த முடியாது. அதனால் தான் கம்யூன் இயக்கம் ஒரு சோசலிச சாயலைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது, அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை, மூலதனத்தின் ஆட்சியைத் தூக்கி வீசவும் மற்றும் சமகால சமூக ஒழுங்கமைப்பின் அந்த அடித்தளங்களையே ஒழிக்கவும் வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
முதலில் இந்த இயக்கம் மிகவும் காலவரையறையின்றி குழப்பமாக இருந்தது. கம்யூன், ஜேர்மனியர்களுடனான போரைப் புதுப்பித்து அதை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வரும் என்று நம்பிய தேசபக்தர்களும் அதில் இணைந்தனர். கடன்கள் மற்றும் வாடகை தொகைகளை ஒத்தி வைக்காவிட்டால் ஏற்படக்கூடிய சீரழிவால் (அரசாங்கம் இவற்றை ஒத்தி வைக்க மறுத்தது, ஆனால் கம்யூனிடம் இருந்து அவர்கள் அதை பெற்றார்கள்) அச்சுறுத்தப்பட்டிருந்த சிறிய கடைக்காரர்களின் ஆதரவை அது அனுபவித்தது. இறுதியாக, பிற்போக்குத்தனமான சட்டமன்றம் (“ரஸ்டிக்ஸ்” [rustics], வெளிப்படையான நில உரிமையாளர்கள்) மீண்டும் முடியாட்சியை அமைக்குமோ என்று அஞ்சிய முதலாளித்துவ வர்க்க குடியரசு கட்சியினரின் அனுதாபமும், முதலிலிருந்தே, அதற்கு கிடைத்திருந்தது. ஆனால் நிச்சயமாக தொழிலாளர்கள் தான் (குறிப்பாக பாரிஸின் கைவினைஞர்கள் தான்) அந்த இயக்கத்தில் பிரதான பாத்திரம் வகித்தனர், அவர்களிடையே இரண்டாம் பேரரசின் கடைசி ஆண்டுகளில் செயலூக்கமான சோசலிச பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது, அதை செய்தவர்களில் பலர் அகிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இறுதி வரை தொழிலாளர்கள் மட்டுமே கம்யூனுக்கு விசுவாசமாக இருந்தனர். முதலாளித்துவ குடியரசுக் கட்சியினரும் குட்டி முதலாளித்துவ வர்க்கமும் விரைவிலேயே அதிலிருந்து உடைத்துக் கொண்டன: முந்தையவர்கள் அந்த இயக்கத்தின் புரட்சிகர-சோசலிச, பாட்டாளி வர்க்கத் தன்மையால் மிரண்டு போனார்கள்; பிந்தையவர்கள் அது தவிர்க்கவியலாமல் தோல்வியை நோக்கி செல்வதைக் கண்டதும் அதிலிருந்து முறித்துக் கொண்டார்கள். பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தினர் மட்டுமே தங்கள் அரசாங்கத்தை அச்சமின்றி, அயராது ஆதரித்தனர், அவர்கள் மட்டுமே அதற்காக —அதாவது, தொழிலாள வர்க்க விடுதலைக்காக, அனைத்து உழைப்பாளிகளுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக— போராடி உயிர் நீத்தார்கள்.
அதன் முன்னாள் கூட்டாளிகள் விட்டோடி, ஆதரவின்றி கைவிடப்பட்ட நிலையில், கம்யூன் தவிர்க்கமுடியாமல் தோல்வியை சந்தித்தது. பிரான்சின் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கமும், நில உரிமையாளர்கள், பங்கு தரகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் அனைவரும், பெரிய கொள்ளையர்களோ சிறிய கொள்ளையர்களோ அனைவரும், சுரண்டல்காரர்கள் அனைவரும் அதற்கு எதிரான படைகளில் இணைந்தனர். (புரட்சிகர பாரிஸை நசுக்குவதற்கு உதவியாக ஒரு நூறாயிரம் பிரெஞ்சு போர்க் கைதிகளை ஜேர்மன் சிறையில் இருந்து விடுவித்த) பிஸ்மார்க்கால் ஆதரிக்கப்பட்ட இந்த முதலாளித்துவ கூட்டணி, பாரிஸின் பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக அப்பாவி விவசாயிகளையும் மாகாணங்களின் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தையும் தூண்டிவிட்டு, பாரிஸின் பாதி பகுதியைச் சுற்றி இரும்பு வளையத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றது (மீதி பாதி ஜேர்மன் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டிருந்தது). பிரான்சின் சில பெரிய நகரங்களில் (மார்சைய், லியோன், செயின்ட் எத்தியான், டிஜோன், இன்னும் இதர பிற நகரங்களிலும்) தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவும், கம்யூனைப் பறைசாற்றவும், பாரிஸின் உதவிக்கு வரவும் முயன்றனர்; ஆனால் அந்த முயற்சிகளும் குறுகிய காலமே பிழைத்திருந்தன. பாட்டாளி வர்க்க கிளர்ச்சியின் பதாகையை முதன்முதலில் மேலுயர்த்திய பாரிஸ், அதன் சொந்த ஆதாரவளங்களுக்குள் விடப்பட்டு, முடிவான அழிவுகளுக்கு உள்ளாக விடப்பட்டிருந்தது.
ஒரு வெற்றிகரமான சமூகப் புரட்சிக்கு குறைந்தபட்சம் இரண்டு நிபந்தனைகள் அவசியமாகின்றன: உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி ஒரு உயர் மட்டத்தை எட்டியிருக்க வேண்டும், பாட்டாளி வர்க்கம் போதுமானளவுக்கு தயாராக இருக்க வேண்டும். ஆனால் 1871 இல் இந்த இரண்டு நிபந்தனைகளுமே இருக்கவில்லை. பிரெஞ்சு முதலாளித்துவம் அப்போது பெரிதும் வளர்ச்சி அடைந்திருக்கவில்லை, முக்கியமாக அந்த நேரத்தில் பிரான்ஸ் ஒரு குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் (அதாவது கைவினைஞர்கள், விவசாயிகள், கடைக்காரர்கள் போன்றவர்களின்) நாடாக இருந்தது. மறுபுறம், அங்கே தொழிலாளர்களுக்கென கட்சி இல்லை; தொழிலாள வர்க்கம் ஒரு நீண்ட போராட்டப் படிப்பினைகளுக்கூடாக சென்றிருக்கவில்லை, மற்றும் ஆயத்தமாகவும் இல்லை, பெரும்பாலான பகுதிகள் அதன் வெகுஜனங்களுக்கு அதன் பணிகள் மற்றும் அவற்றைத் தீர்க்கும் முறைகள் பற்றிய முழுமையான தெளிவான யோசனை கூட இல்லை. பாட்டாளி வர்க்கத்திற்கான தீவிர அரசியல் அமைப்போ அல்லது வலுவான தொழிற்சங்கங்களும் கூட்டுறவு அமைப்புகளும் கூட இல்லை...
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கம்யூனுக்கு இல்லாதிருந்தது — நிலைமையைக் கணக்கெடுப்பதற்கும் மற்றும் அதன் வேலைத்திட்டத்தை செயல்படுத்த தொடங்குவதற்குமான நேரமாகும். ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தால் ஆதரிக்கப்பட்டிருந்த வேர்சாயில் பலமாக வேரோடியிருந்த அரசாங்கம் பாரிஸிற்கு எதிராக விரோதங்களைக் காட்ட தொடங்கிய போது, வேலைகளைத் தொடங்க கம்யூனுக்கு போதிய நேரம் இருக்கவில்லை. கம்யூன் பிரதானமாக தற்காப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. அப்போதிலிருந்து, மே 21-28 இறுதிவரை, வேறு எதையும் குறித்து தீவிரமாக சிந்திக்க அதற்கு நேரம் இருக்கவில்லை.
இருப்பினும், இந்த சாதகமற்ற நிலைமைகள் இருந்த போதிலும், அதன் குறுகிய காலமே உயிர்பிழைத்திருந்த போதிலும், கம்யூன் ஒரு சில நடவடிக்கைகளைப் பிரகடனம் செய்தது, அவை அதன் உண்மையான முக்கியத்துவத்தையும் நோக்கங்களையும் போதுமானளவுக்கு குணாம்சப்படுத்துகின்றன. ஆளும் வர்க்கங்களின் கரங்களில் குருட்டு ஆயுதமாக விளங்கிய நிலையான ஆயுதப்படைகளை அகற்றி விட்டு, கம்யூன் ஒட்டுமொத்த மக்களையும் ஆயுதமேந்தச் செய்தது. அது தேவாலயத்தையும் அரசையும் பிரிப்பதாக அறிவித்தது, மத அமைப்புகளுக்கான அரசு கொடுப்பனவுகளை (அதாவது, பாதிரியார்களுக்கான அரசு சம்பளத்தை) இரத்து செய்தது, மக்களுக்கான கல்வியை முற்றிலும் மதச்சார்பற்றதாக ஆக்கியது, இவ்விதத்தில் அது பாதிரிமார் உடையில் உள்ள ஆயுத படைக்கு கடுமையான அடியைக் கொடுத்தது. முழுமையான சமூக துறையில் கம்யூன் மிகக் குறைவாகவே சாதித்தது என்றாலும் இந்த குறைந்தளவே கூட மக்களின் அரசாங்கத்தின் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தின் இயல்பை போதுமான தெளிவுடன் வெளிப்படுத்துகிறது. பேக்கரிகளில் இரவு வேலை தடை செய்யப்பட்டது; தொழிலாளர்களிடம் இருந்து சட்டபூர்வமாக கொள்ளையடிப்பதை அர்த்தப்படுத்திய அபராத முறை இல்லாதொழிக்கப்பட்டது. இறுதியாக, அனைத்து தொழிற்சாலைகளும் பட்டறைகளும் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்டு மூடப்பட்டால் அவை மீண்டும் உற்பத்தியைத் தொடங்க தொழிலாளர்களின் கூட்டு அமைப்புகளுக்கு மாற்றப்படும் என்ற ஒரு பிரபல ஆணை இருந்தது. ஓர் உண்மையான ஜனநாயக, பாட்டாளி வர்க்க அரசாங்கமாக அதன் இயல்பை வலியுறுத்துவதைப் போல, கம்யூன், அனைத்து நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் சம்பளங்களும், அவர்கள் என்ன பதவியில் இருந்தாலும், ஒரு தொழிலாளரின் சாதாரண கூலியை விட அதிகமாக இருக்க கூடாது என்பதோடு, எந்த சூழ்நிலையிலும் அது (ஒரு மாதத்திற்கு 200 ரூபிளுக்குக் குறைவாக) ஓராண்டுக்கு 6,000 பிராங்கிற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று ஆணை பிறப்பித்திருந்தது.
மக்களை அடிமைப்படுத்துவது மற்றும் சுரண்டுவதன் மீது நிறுவப்பட்ட பண்டய உலகிற்கு கம்யூன் ஒரு மரண அச்சுறுத்தலாக இருந்தது என்பதை இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தெளிவாகக் எடுத்துக்காட்டின. இதனால் தான் பாரிஸின் நகர சபை (ஹோட்டல் டு வில்) மீது பாட்டாளி வர்க்கத்தின் செங்கொடி பறந்த வரை முதலாளித்துவ சமூகத்தால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இறுதியாக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியின் படைகள் மீது அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட படைகளின் கைகள் மேலுயர்வதில் அவை வெற்றி பெற்றபோது, தோல்வி கண்ட தங்கள் நாட்டு மக்களுடன் சண்டையிடுவதில் மட்டும் தைரியத்தைக் காட்டிய ஆனால் ஜேர்மனியர்களால் அடித்து உதைக்கப்பட்ட, போனபார்ட்டிச தளபதிகள், அந்த பிரெஞ்சு ரென்னென்காம்ப் தளபதிகளும் (Rennenkampfs) மெல்லர்- ஜாகோமெல்ஸ்கி தளபதிகளும் (Meller-Zakomelskys), பாரிஸ் ஒருபோதும் அறிந்திராத அந்தளவிலான ஒரு படுகொலையை நடத்தினர். சுமார் 30,000 பாரிஸ்வாசிகள் சிப்பாய்களால் மிருகத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டனர், சுமார் 45,000 பேர் கைது செய்யப்பட்டனர், அதன் பின்னர் அவர்களில் பலர் தூக்கிலிடப்பட்டனர், அதேவேளையில் ஆயிரக்கணக்கானோர் சிறைத்தண்டனைக்கு அனுப்பப்பட்டனர் அல்லது நாடு கடத்தப்பட்டனர். மொத்தத்தில், பாரிஸ் அதன் சிறந்த மக்களில் சுமார் 100,000 பேரை இழந்தது, அனைத்து துறைகளிலும் சில தலைசிறந்த தொழிலாளர்களும் அதில் உள்ளடங்குவர்.
முதலாளித்துவ வர்க்கம் திருப்தி அடைந்தது. தியேரும் அவர் தளபதிகளும் பாரிஸின் பாட்டாளி வர்க்கத்தை இரத்தத்தில் மூழ்கடித்த பின்னர், இரத்தத் தாகமெடுத்த அந்தக் குள்ளர், “இப்போது நாம் நீண்ட காலத்திற்குச் சோசலிசத்தை முடித்துவிட்டோம்,” என்று அவரின் தலைவர்களுக்குக் கூறினார். ஆனாலும் அந்த முதலாளித்துவக் காகங்கள் வீணாக கரைந்து கொண்டிருந்தன. கம்யூனை ஒடுக்கி ஆறு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், அதன் பாதுகாவலர்களில் பலர் அப்போதும் சிறையிலோ அல்லது நாடுகடத்தப்பட்ட நிலையிலோ சிக்கியிருந்த நிலையிலும், பிரான்சில் ஒரு புதிய தொழிலாள வர்க்க இயக்கம் எழுந்தது. தங்கள் முன்னோடிகளின் அனுபவத்தால் செழித்த மற்றும் அவர்களின் தோல்வியால் சோர்வடைந்திராத ஒரு புதிய சோசலிச தலைமுறை, கம்யூனின் நோக்கத்திற்காக போராடிய போராளிகளின் கரங்களிலிருந்து விழுந்த கொடியை எடுத்து, அதை தைரியமாகவும் நம்பிக்கையோடும் முன்னெடுத்துச் சென்றது. “சமூகப் புரட்சி பல்லாண்டு வாழ்க! கம்யூன் பல்லாண்டு வாழ்க!” என்பதே அவர்களின் போர்க்குரலாக இருந்தது. அதற்கடுத்து சில ஆண்டுகளில், புதிய தொழிலாளர் கட்சியும், நாடெங்கிலும் அது தொடங்கிய கிளர்ச்சிப் பணியும் அப்போதும் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூன் உறுப்பினர்களை விடுதலை செய்ய ஆளும் வர்க்கங்களை நிர்பந்தித்தன.
கம்யூனின் போராளிகளின் நினைவு, பிரான்சின் தொழிலாளர்களால் மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த உலக பாட்டாளி வர்க்கத்தினாலும் மதிக்கப்படுகிறது. சில உள்ளூர் நோக்கத்திற்காகவோ அல்லது குறுகிய தேசிய நோக்கத்திற்காகவோ கம்யூன் போராடவில்லை, மாறாக மொத்த உழைக்கும் மனிதகுலத்தின் விடுதலைக்காக, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும் போராடியது. கம்யூன் சமூகப் புரட்சிக்கான ஒரு முதல் போராளியாக, பாட்டாளி வர்க்க அவலங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் கம்யூன் ஆதரவை வென்றுள்ளது, போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் வாழ்வினதும் மரணிப்பினதும் வீரஞ்செறிந்த சரிதம், உலகின் ஒரு பெருநகரத்தை கைப்பற்றி இரண்டு மாதங்களுக்கும் மேலாக அதை தக்க வைத்திருந்த ஒரு தொழிலாளர் அரசாங்கத்தின் பார்வை, பாட்டாளி வர்க்கத்தின் வீரசாகச போராட்டத்தின் வியத்தகு காட்சியும் அதன் தோல்விக்குப் பின்னர் அது அனுபவித்த மரண வேதனைகளும் — இவை அனைத்தும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தி, அவர்களின் நம்பிக்கையை அதிகரித்து, சோசலிச நோக்கத்திற்காக அவர்களிடையே ஆதரவைக் கொண்டு வந்தது. பாரிஸில் ஒலித்த பீரங்கி இடிமுழக்கம், மிகவும் பின்தங்கிய பாட்டாளி வர்க்கத்தின் பிரிவுகளைக் கூட ஆழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பியது, எங்கெங்கிலும் புரட்சிகர சோசலிச பிரச்சாரத்தின் வளர்ச்சிக்கு தூண்டுதலை வழங்கியது. அதனால் தான் கம்யூனின் நோக்கம் இன்னும் மரணிக்கவில்லை. அது இன்றும் நம் ஒவ்வொருவரிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
சமூக புரட்சி என்ற குறிக்கோளே கம்யூனின் குறிக்கோள், உழைக்கும் மக்களின் முழுமையான அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையே கம்யூனின் குறிக்கோளாகும். இதுவே ஒட்டுமொத்த உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நோக்கமாகும். இந்த அர்த்தத்தில் அது காலத்தால் அழியாத வீரஞ்செறிந்த சரிதமாக நிலைத்திருக்கிறது.