மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிப்ரவரியில், கோவிட்-19 நோய்தொற்று பரவலைத் தடுக்க பூட்டுதலை செயல்படுத்த மறுத்த பிரிட்டிஷ் அரசாங்கம் பற்றி பகுப்பாய்வு செய்த, BMJ (முன்னர் பிரிட்டிஷ் மருத்துவ இதழ்), பெருந்தொற்றுக்கான அரசாங்கத்தின் பதிலிறுப்பை “சமூக படுகொலை என்று வகைப்படுத்தலாம்” என்று எழுதியது. இது குறிப்பாக இவ்வாறு கேள்வி எழுப்பியது: “அரசியல்வாதிகள் வேண்டுமென்றே விஞ்ஞான ஆலோசனைகளையும், சர்வதேச மற்றும் வரலாற்று அனுபவங்களையும், எச்சரிக்கை கொடுக்கும் அவர்களின் சொந்த புள்ளிவிபரங்கள் மற்றும் முன்மாதிரிகளையும், அவை அவர்களின் அரசியல் மூலோபாயத்திற்கு எதிராக செல்கின்றன என்பதற்காக, நிராகரிக்கும் போது, அது சட்டவிரோதமில்லையா?”
புதன்கிழமை மாலை இந்த கொள்கை முற்றுமுழுதாக அம்பலமானது, தற்போது பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவை பேரழிவிற்குள்ளாக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்றின் எழுச்சி குறித்து பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரதான நேர உரையை 31 மில்லியன் மக்கள் கேட்டனர்.
மக்ரோன் புதிய சமூக இடைவெளி நடவடிக்கைகளை அறிவிப்பார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. பிரிட்டிஷ் மற்றும் தென்னாபிரிக்க திரிபு வகை வைரஸ்களால் நோய்தொற்றின் மறுஎழுச்சி ஏற்படுவதற்கு முன்னரே, COVID-19 இன் இறப்பு எண்ணிக்கை ஐரோப்பாவில் ஒரு மில்லியனையும் பிரான்சில் 100,000 ஐயும் நெருங்குகிறது. பிரான்ஸின் பொது சுகாதார அமைப்பின் கருத்துப்படி, பிரான்ஸ் மக்கள்தொகையில் வெறும் 5 சதவிகிதத்தினருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 7 க்குப் பின்னர் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 21,825 இல் இருந்து நேற்றைய நிலவரப்படி 59,038 ஆக மும்மடங்கு அதிகரித்துள்ளது. இது, அமெரிக்கா அளவிலான ஒரு நாட்டில் 300,000 ஆக இருப்பதற்கு சமமாகும்.
மக்ரோனின் உரைக்கு முன்னரே, முன்னணி மருத்துவ அதிகாரிகள் ஒருவரையடுத்து ஒருவர் கடுமையான முழு அடைப்புக்கு கோரிக்கை விடுத்தனர். தொற்றுநோயியல் நிபுணரான டொமினிக் கோஸ்டாக்லியோலா (Dominique Coastagliola), பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பூட்டுதலை ஆதரிப்பதாக வாக்களித்திருந்தும் ஜனவரி மாதம் பூட்டுதலை விதிக்க மக்ரோன் மறுத்ததைக் கண்டித்ததுடன், இதையும் கூறினார்: “மக்ரோன் ஒரு தொற்றுநோயியல் நிபுணர் என்று கூறுவது அப்பாவித்தனமாக உள்ளது.” மேலும், 1,484 நோயாளிகளால் 90 சதவிகித தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஏற்கனவே நிரம்பியுள்ள பாரிஸின் பொது மருத்துவமனைகள், கடுமையாக நோய்வாய்பட்ட ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சையை மறுப்பதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன என்றவர் எச்சரித்தார்.
பிரான்சின் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் பாட்ரிக் பூவே, (Patric Bouet) மக்ரோனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார். அதில் அவர் “எந்தவிதமான சமநிலையோ, தயக்கமோ, பந்தயமோ இன்றைய வாழ்க்கை நிலையில் பொறுத்துக்கொள்ள முடியாது,” என்று கூறினார். மேலும் அவர், “அனைவரையும் மூழ்கடிக்கும் வைரஸை இன்னும் தடுக்க முடியும்,” என்பதை வலியுறுத்தி “அனைத்து பகுதிகளிலும் உண்மையான முழு அடைப்பு தேவை” என்றும் குறிப்பிட்டார்.
பிரான்சின் “செல்வந்தர்களின் ஜனாதிபதியின்” பதிலிறுப்பு பிரான்சில் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியாக தொழிலாளர்களுக்கான ஒரு எச்சரிக்கையாகும்: அதாவது ஆளும் வர்க்கம் மனித வாழ்க்கையை முற்றிலும் அவமதிக்கும் விதமாக செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் வாஷிங்டனுடன் சந்தேகத்திற்கு இடமின்றி ஒருங்கிணைந்த மக்ரோனின் பேச்சு, ஏராளமானோரின் இறப்புக்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கையையும் வெளிப்படையாக மறுப்பதாக இருந்தது.
“நாங்கள் எதுவும் செய்யாவிட்டால், கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று அச்சுறுத்துவதாக புதிய திரிபுவகை வைரஸின் தீவிர பரவல் உள்ளது” என்பதை மக்ரோன் ஒப்புக்கொண்டார். இருப்பினும், வசந்தகால விடுமுறைக்கு முன்னர் பள்ளிகளை ஒரு வாரம் மூடுவதற்கு மட்டுமே அவர் முன்மொழிந்தார், அதன்பின்னர் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் தொலைதூர கல்வி வழங்கப்படும் என்றார். அத்தியாவசியமற்ற சில்லறை வணிக கடைகளை மூடிய அதேவேளை, கோவிட்-19 நோய்தொற்று பரவுவதை ஏதுவாக்கும் கலாச்சார இடங்கள் மற்றும் உணவகங்கள் மே மாதம் திறக்கப்படும் என உறுதியளிக்கிறார்.
பூட்டுதலுக்கு அறிவிக்கும் மக்ரோனின் இந்த முயற்சி ஒரு மோசடியே.
மார்ச் 2020 இல், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் கோவிட்-19 நோய்தொற்று தீவிரமாக பரவியதால், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகளில் திடீர் வேலைநிறுத்தங்கள் வெடித்து, சர்வதேச அளவில் அவை பரவின. பிரான்சின் மெடெஃப் வணிக கூட்டமைப்பு, “தொழிலாளர்களின் போக்கில் ஏற்பட்டுள்ள மிகக் கொடூரமான மாற்றம்” குறித்து எச்சரித்ததுடன், நிர்வாகம் “தொழிலாளர்களின் அழுத்தத்தின் காரணமாக இனிமேல் உற்பத்தியைத் தொடர முடியாது” என்றும் கூறிய நிலையில், பள்ளிகளையும் அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் எட்டு வார காலத்திற்கு பூட்டும் கடுமையான நடவடிக்கைக்கு மக்ரோன் ஒப்புக்கொண்டார். இத்தகைய பூட்டுதல் நடவடிக்கைகள் பிரான்சில் மட்டுமல்லாமல், ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை பெரியளவில் குறைத்தது.
இருப்பினும், தற்போது, ஒரு பணக்கார ஐரோப்பிய நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிர் காக்கும் சிகிச்சை தங்களுக்கு மறுக்கப்படுவதை எதிர்கொள்ளும் நிலையில், மக்ரோன் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதற்கு மறுத்துள்ளதோடு, இரண்டு வாரங்களுக்கும் குறைவாக பள்ளிகளை மூடியுள்ளார்.
“கட்டுப்பாடுகள் எங்களது குழந்தைகள், அவர்களது கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை கருத்தில் கொண்டதாக” கூறி மக்ரோன் தனது சொந்த பேரழிவுகர கொள்கையை வெட்கமின்றி பாராட்டிக் கொண்டார். அதாவது, அவர் நேர்மையாக பேசியிருப்பாரானால், “எங்கள் நிறுவனங்கள், அவற்றின் இலாபங்கள் மற்றும் எங்களது செல்வ வளங்கள் மீது சமூக இடைவெளி நடவடிக்கைகள் ஏற்படுத்தும் விளைவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டதாக” மக்ரோன் கூறியிருப்பார். பள்ளிகளும் அத்தியாவசியமற்ற உற்பத்தி நிறுவனங்களும் திறந்து வைக்கப்படுகின்றன, இது விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாமல், பெருநிறுவன இலாபங்கள் தொடர்ந்து நிதிச் சந்தைகளுக்குள் பாயச்சப்படுவதை உறுதி செய்வதற்காகும்.
இருப்பினும், மருத்துவ நிபுணர்களையும் பொதுக் கருத்துக்களையும் மக்ரோன் வெளிப்படையாக அவமதிப்பது, குறிப்பாக ஐரோப்பா முழுவதும் முதலாளித்துவத்தால் பின்பற்றப்படும் கொள்கையின் தந்திரோபாய பதிப்பாக மட்டுமே உள்ளது. மக்ரோன் உரையாற்றிய அதே நாளில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் தொலைக்காட்சி பேட்டியில், ஜேர்மனியில் ஒரு பூட்டுதல் எப்படி அல்லது எப்போது செயல்படுத்தப்படும் என்பது பற்றி கூற மறுத்துவிட்டார். பின்னர் நேற்று, ஜேர்மனியின் தீவிர சிகிச்சை பதிவகத்தின் இயக்குநர், கிறிஸ்டியான் கராகியானிடிஸ் (Christian Karagiannidis), நான்கே வாரங்களில் ஜேர்மனியில் அனைத்து தீவிர சிகிச்சை படுக்கைகளும் நிரம்பிவிடும் என்று Tagesschau தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எச்சரித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் சமூக படுகொலை கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது என்ற உண்மையை பிரான்சிலும் மற்றும் ஐரோப்பா எங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேருக்கு நேராக பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.
விளைவும், மற்றும் எத்தனை உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதும், தொழிலாள வர்க்கம் எவ்வளவு விரைவாக சுயாதீனமாக இதில் தலையிட முடியும் என்பதையும், பெருந்தொற்று குறித்து விஞ்ஞான ரீதியாக வழிநடத்தப்பட்ட கொள்கையை ஐரோப்பாவின் முதலாளித்துவ அரசாங்கங்கள் செயல்படுத்துவதை எதிர்க்கும் போராட்டத்தில் அவர்கள் அணிதிரள்வதையும் பொறுத்தது.
இதற்கு சுயாதீனமான போராட்ட அமைப்புக்களும், மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்கான ஒரு சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கும் தேவைப்படுகின்றன. 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பை அடுத்து, போலி-இடது கல்வியாளர்களும் மற்றும் மார்க்சிச விரோதிகளும், மனிதகுலம் “வரலாற்றின் முடிவுக்கும்” வர்க்கப் போராட்டத்தின் முடிவுக்கும் வந்துவிட்டது; முதலாளித்துவ ஜனநாயகம் ஆட்சி செய்யும் என்று அறிவித்தனர். அதனைத் தொடர்ந்த, பல தசாப்த கால ஏகாதிபத்திய போர்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகள் ஆகியவை அடிப்படை சுகாதார உள்கட்டமைப்பை அழித்துவிட்டன. பெருந்தொற்று தற்போது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழித்தெறிந்துள்ளது.
மார்ச் 2020 இல், உலக சோசலிச வலைத் தளம், அமெரிக்காவின் பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பின் பேரழிவுகர தோல்வி குறித்து “முதலாளித்துவம் சமூகத்தின் மீது போர் புரிந்து கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் பகுப்பாய்வு செய்து, இவ்வாறு எழுதியது:
“கடந்த நான்கு தசாப்தகால உலகளாவிய முதலாளித்துவ அபிவிருத்தியின் உள்ளடக்கத்தில் மட்டுமே இந்த தொற்றுநோயின் வெடிப்பு மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியும். இந்த நான்கு தசாப்தங்கள் உற்பத்தி கருவிகளின் தனியார் சொத்துடைமையை அடிப்படையாக கொண்ட ஓர் அமைப்புமுறையின் சமூகரீதியில் பிற்போக்குத்தனமான குணாம்சங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி காட்டியுள்ளன, இதில் சமூகத்தின் அனைத்து தேவைகளும் இலாப முனைவுக்கும் பரந்தளவில் தனிநபர் செல்வவளத்திற்கும் அடிபணிய செய்யப்பட்டிருந்தன. ‘நாம் பில்லியன் கணக்கில் குவித்துக் கொள்ள மில்லியன் கணக்கானவர்கள் சாக வேண்டுமானால், அவ்வாறே நடக்கட்டும்’” என்பதே முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் குறிக்கோளாக உள்ளது.
கடந்த ஆண்டு இந்த மதிப்பீட்டை நிரூபித்தது. ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பாசாங்குகள் அதன் அமெரிக்க சகோதரத்தை விட கனிவானது, மென்மையானது என்பது ஒரு மோசடியாக உள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி, இங்கிலாந்து வங்கி, மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களும் டிரில்லியன் கணக்கான யூரோக்கள் மற்றும் பவுண்டுகளை வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புக்களுக்காக பாய்ச்சின. கடந்த ஆண்டு பிரான்சின் பேர்னார் ஆர்னோ 30 பில்லியன் டாலர் சம்பாதித்தது உட்பட, தனிப்பட்ட நிதிய பிரபுக்கள் செல்வங்களை குவித்திருந்தாலும், சமுதாயத்தை பூட்டுவது பொறுத்துக்கொள்ள முடியாது என்ற பொய் கூற்றுக்களின் அடிப்படையில், பல்லாயிரக்கணக்கானோரை இறக்க விடப்பட்டது.
சமூக படுகொலை கொள்கைக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் அதன் கூட்டாளிகளிடமிருந்தும், பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி அல்லது ஜேர்மனியின் இடது கட்சி போன்ற அவர்களது போலி-இடது அரசியல் கூட்டணிகளிலுள்ள அவர்களது ஆதரவாளர்களிடமிருந்தும் சுயாதீனமாக நடத்த முடியும். பிரான்சின் ஸ்ராலினிச பொது தொழிலாளர் கூட்டமைப்பும் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பும் மார்ச் மாதத்தில் நடந்த திடீர் வேலைநிறுத்தங்களை தனிமைப்படுத்தின. பின்னர் அவை ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புக்களில் கையெழுத்திட்டதோடு, 2020 வசந்தகால பூட்டுதலுக்கு பின்னர் தொற்றுநோய் மீண்டும் எழுச்சியடைவதற்கு முக்கிய பங்காற்றியதான பள்ளிகளை மீளத்திறக்கும் கொள்கைகளை செயல்படுத்தவும் உதவின.
மார்ச் 2020 இல் நடந்த திடீர் வேலைநிறுத்தங்கள் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் முழு அடைப்பை செயல்படுத்த கட்டாயப்படுத்தின, ஆனால் இந்த கடந்த ஆண்டு தன்னிச்சையான போராட்டத்தின் அபாயகரமான வரம்புகளைக் காட்டியுள்ளது. ஒரு சோசலிச முன்னோக்கும், மற்றும் தங்களுக்கு சொந்தமான போராட்ட அமைப்புக்களும் இல்லாத நிலையில், தொழிலாளர்கள், “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை அமல்படுத்திய அரசாங்கங்கள், வங்கிகள், மற்றும் தொழிற்சங்கங்களின் பிற்போக்குத்தன சூழ்ச்சிகளுக்கு அடிபணிந்தனர்.
மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படும் வரை தொற்றுநோய் பரவாமல் தடுக்க முழு அடைப்புக்கு போராட, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள பணியிடங்களில் தொழிலாளர்கள் தங்களது சொந்த சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களை (rank-and-file safety committees) உருவாக்குவது மிகவும் முக்கியம். அதாவது, ஒட்டுமொத்த மக்களுக்கும் வசதியான வாழ்க்கைக்கு தேவையான ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஏனென்றால் அப்போதுதான் அவர்களை வீட்டிலேயே அடைந்திருக்கச் செய்ய முடியும், அத்துடன் அத்தியாவசியமற்ற உற்பத்தி நிலையங்கள் மூடப்பட வேண்டும், தொலைதூர கற்றலுக்கான வளங்களில் பெரும் முதலீடு செய்யப்பட வேண்டும். இதற்கு, அரசு அதிகாரத்தைப் பெறுவது, நிதிய பிரபுத்துவத்தை பறிமுதல் செய்வது, ஐரோப்பிய ஒன்றியத்தை ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை கொண்டு பிரதியீடு செய்வது குறித்த பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் தேவைப்படுகிறது.