மேதின இணையவழிப் பேரணி சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டணி உருவாக்கப்பட அறைகூவல் விடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 சனிக்கிழமையன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) வருடாந்திர சர்வதேச இணையவழி மே தினப் பேரணி நடத்தின. இந்தப் பேரணி சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டணி (IWA-RFC) உருவாக்கப்படுவதற்கு ஊக்குவித்தது.

இந்தப் பேரணி ஒரு முக்கியமான சர்வதேச நிகழ்வாக இருந்தது. உலகம் முழுக்க 73 நாடுகளில் இருந்து 2,000க்கும் அதிகமானோர் இதில் பங்குபெற்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, பிரான்ஸ், பிரேசில், பிலிப்பைன்ஸ், துருக்கி, தாய்லாந்து, ஸ்பெயின், பாகிஸ்தான், ஜப்பான், மெக்சிகோ, ஈரான், இஸ்ரேல், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் இன்னும் பல நாடுகளில் இருந்து பங்கேற்றிருந்தனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, இலங்கை, துருக்கி, பிரேசில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, மற்றும் அமெரிக்கா ஆகிய 10 நாடுகளைச் சேர்ந்த முன்னணிப் பிரதிநிதிகள் உள்ளிட 14 பேர் இந்தப் பேரணியில் உரையாற்றினர். ஆங்கிலம், ஜேர்மன், பிரெஞ்சு, தமிழ், சிங்களம், துருக்கி, மற்றும் போர்ச்சுகீசிய மொழி ஆகிய ஏழு வெவ்வேறு மொழிகளில் உரைகள் வழங்கப்பட்டன.

சர்வதேச மே தின இணையவழிப் பேரணி 2021

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரான ஜோசப் கிஷோர் இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கினார், அறிமுக அறிக்கையை WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் வழங்கினார்.

நோர்த் தனது ஆரம்ப அறிக்கையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் விளைந்திருக்கும் பாரிய உயிரிழப்பு எண்ணிக்கைக்குக் கவனம் ஈர்த்தார். ”சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பாக, மே 1, 2020 அன்று, ஒட்டுமொத்தமாக உலகளாவிய பெருந்தொற்றிலான உயிரிழப்பு எண்ணிக்கை 240,000 ஐ எட்டியிருந்தது. இன்று, உயிரிழந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3,200,000 ஆக இருக்கிறது. இது 13 மடங்கு அதிகரிப்புக்கும் கூடுதலானதாய் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

உயிர்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுத்து தங்களது பொறுப்பில் இருந்து தவறிய உலகெங்குமுள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் மீது நோர்த் குற்றம்சுமத்தினார். ”நெருக்கடியின் முடிவை நெருங்குவதற்கெல்லாம் வெகுதூரத்தில்”, நோர்த் விளக்கினார், ”இந்த பெருந்தொற்றானது ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையையும் ஆழமாக ஸ்திரம்குலையச் செய்துள்ளது. உலகம் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதை அல்லது முடிவின் தொடக்கத்தையேனும் நெருங்கிக் கொண்டிருக்கவில்லை என்பது மட்டுமல்ல, ஒரு மருத்துவ நெருக்கடியாக ஆரம்பத்தில் தொடங்கிய ஒன்றானது ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ ஒழுங்கின் ஒரு அடிப்படை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியாக உருமாறியிருக்கிறது.”

குறிப்பாக நோர்த், பேரணிக்கு நான்கு நாட்கள் முன்பாக நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் வழங்கிய ஒரு உரையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். பைடென் முன்வைத்த “அரைகுறை நடவடிக்கைகள் மற்றும் கால்வாசி நடவடிக்கைகளது மேலோட்டமான வாக்குறுதிகளை” காட்டிலும் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் வேகமெடுக்கும் போர் முனைப்பும் தனது முக்கிய போட்டிநாடுகளுக்கு எதிராக “இருபத்தியோராம் நூற்றாண்டை வெற்றி காண்பதற்கு” அமெரிக்காவுக்கு பைடென் விடுத்த அழைப்புமே மிக அதிக முக்கியத்துவம் கொண்டவையாக இருந்தன என்பதை நோர்த் விளக்கினார்.

இந்தச் சூழலுக்குள்ளாக சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டணி (IWA-RFC) வகிப்பதற்கான பாத்திரத்தை நோர்த் விளக்கினார். பைடென் நிர்வாகமும் சர்வதேச அளவில் அதன் சகாக்களும் தொழிலாள வர்க்கத்திற்குள் எழுகிற சோசலிசத்தன்மையுடனான எதிர்ப்பை ஒடுக்குவதற்கு உத்தியோகப்பூர்வ தொழிற்சங்கங்களை ஆவேசமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. நோர்த் விளக்கினார்:

ஆகவே தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சாமானியத் தொழிலாளர்கள் குழுக்களது சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை (IWA-RFC) உருவாக்க அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த உலகளாவிய முன்முயற்சியின் நோக்கம், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான பரந்த அடித்தளம் கொண்ட ஒரு இயக்கத்தை உருவாக்குவதும், வலது-சாரி முதலாளித்துவ ஆதரவு நிர்வாகிகள் பதவியிலிருக்கும் அரசு-கட்டுப்பாட்டிலான ஜனநாயக-விரோத தொழிற்சங்கங்களின் மூலமாக இப்போது அடைக்கப்பட்டிருக்கின்ற சிறைச்சாலை போன்ற கைவிலங்குகளில் இருந்து முறித்துக் கொண்டு வெளிவருவதற்கு அத்தனை நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களை ஊக்குவிப்பதாகும்.

IWA-RFC தேசிய தடைகளை முறிப்பதற்கும், நிற, இன மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட அடையாள அரசியல் வடிவங்களை ஊக்குவிப்பதன் மூலமாக வர்க்க ஐக்கியத்தை பலவீனப்படுத்துவதற்காக செய்யப்படுகின்ற அத்தனை முயற்சிகளையும் எதிர்ப்பதற்கும், அத்துடன் சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தை ஒருங்கிணைக்க வழிவகை ஏற்படுத்துவதற்கும் போராடும்.

தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான இந்த முயற்சிகளின் மூலமாக, போரை நோக்கிய முனைப்பை தடுப்பதற்கும் எதிர்த்துசெயல்படுவதற்கும் ஒரு உலகளாவிய இயக்கத்தை உருவாக்குவதை நோக்கி வலிமையான பங்களிப்பை அது செய்யும்.

நோர்த் இவ்வாறு கூறி நிறைவுசெய்தார்: “IWA-RFC ஐ உருவாக்குவதிலும் கட்டியெழுப்புவதிலும் தொழிலாளர்களுக்கு உதவுகின்ற முயற்சியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும், மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், இந்த முயற்சிகளுக்கு ஒரு தெளிவான சர்வதேச மூலோபாயத்தைக் கொண்டுசேர்ப்பதற்கும், உள்ளூர் போராட்டங்களுக்கும் முதலாளித்துவத்திற்கு மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் கட்டவிழ்கின்ற உலகளாவிய போராட்டத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்குவதற்கும் விழையும்.”

உரைகள் அனைத்தும் பெருந்தொற்றின் நிலையை, முதலாளித்துவ அரசாங்கங்களது பொறுப்பை, மற்றும் தொழிற்சங்கங்களின் பாத்திரத்தை விளக்குகின்ற ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தன. IWA-RFC ஐ உருவாக்குவதற்கும், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சோசலிசத் தலைமையாக ICFI ஐ கட்டியெழுப்புவதற்குமான அழைப்பை அவை ஊக்குவித்தன.

ஐரோப்பாவில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை பிரதிநிதித்துவம் செய்து நான்கு பேர் உரையாற்றினர்: Sozialistische Gleichheitspartei இன் துணை தேசியச் செயலரும், வரவிருக்கும் ஜேர்மன் கூட்டரசாங்கத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடயிருப்பவருமான கிறிஸ்தோஃப் வாண்ட்ரியர்; ஐக்கிய இராச்சிய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரான கிறிஸ் மார்ஸ்டென்; ஐக்கிய இராச்சிய சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசியச் செயலரான தோமஸ் ஸ்கிரிப்ஸ்; மற்றும் பிரான்ஸின் Parti de l'égalité socialiste கட்சியின் தேசியச் செயலரான அலெக்ஸ் லான்ரியே.

ஸ்கிரிப்ஸ் பேசுகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக இலண்டனில் அதிகப்பட்ச பாதுகாப்புடனான ஒரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சிற்கு ஆற்றல்மிக்க ஆதரவளித்து பேசினார்.

துருக்கியில் இருந்து, துருக்கி சோசலிச சமத்துவக் குழுவான Sosyalist Eşitlik இன் ஒரு முன்னணி உறுப்பினரான Ulaş Ateşci, அணு ஆயுத அபாயம் குறித்தும், துருக்கியில் காணுகின்ற சமூக நெருக்கடி குறித்தும் வேலைக்குத் திரும்பக் கோருகின்ற மற்றும் பள்ளிக்குத் திரும்பக் கோருகின்ற கொள்கைகளில் தொழிற்சங்கங்கள் உடந்தையாய் இருப்பதைக் குறித்தும் பேசினார். பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளைக் கண்டித்துப் பேசிய Ateşci அறிவித்தார்: “ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிந்தவையாக இருக்கும் இந்தக் கட்சிகள் ஜனநாயக அல்லது சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் திறனற்றவையாக உள்ளன. அந்தப் பணி, உலக சோசலிசப் புரட்சியின் பகுதியாக முதலாளித்துவத்தை தூக்கிவீசப் போராடுகின்ற சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் விழுகிறது.”

படுபயங்கர எண்ணிக்கையில் மரணங்கள் மற்றும் மனிதத் துயரங்கள் குறித்த அன்றாடச் செய்திகளுடன் பெருந்தொற்றின் சூல்மையமாக இப்போது இருக்கின்ற இந்தியா உள்ளிட, தெற்காசிய நிலைமை குறித்து பேரணியில் உரையாற்றிய மூவர் பேசினர். கனடா சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலரான கீத் ஜோன்ஸும் அதில் ஒருவர், இவர் தெற்காசிய அரசியல் மற்றும் வரலாற்றில் நிபுணத்துவம் கொண்டவராவார்.

முக்கியத்துவமிக்க விதத்தில், இலங்கையில் இருந்து இரண்டு பேர் உரையாற்றினர். இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் துணை தேசியச் செயலரான தீபால் ஜெயசேகரா சிங்களத்தில் உரையாற்றினார், அக்கட்சியின் தேசியக் கமிட்டியின் ஒரு உறுப்பினரான எம்.தேவராஜா, தமிழில் உரையாற்றினார். இருவரது உரைகளும் இலங்கை அரசின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகவும் அத்துடன் தமிழ் தேசியவாதத்திற்கு எதிராகவும் இலங்கையின் உழைக்கும் வெகுஜனங்களை ஐக்கியப்படுத்துவதற்கான SEP இன் போராட்டத்திற்கு உருவடிவம் கொடுத்தன.

சோசலிசத்திற்கான போராட்டமானது சர்வதேசியவாதத்தையும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று விளக்கிய ஜெயசேகரா, ”துரோகத்தனமான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் முறித்துக் கொள்வதற்கும், சமூக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தங்கள் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கும், தமது சொந்த சாமானியத் தொழிலாளர் கமிட்டிகளை உருவாக்குவதற்கும் தெற்காசியத் தொழிலாள வர்க்கத்திற்கு நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம்” என்றார்.

இலத்தீன் அமெரிக்காவில் இருந்து, பிரேசில் சோசலிச சமத்துவக் குழுவின் ஒரு முன்னணி உறுப்பினரான Tomas Castanheira, ஏப்ரலில் கோவிட்-19 ஆல் கிட்டத்தட்ட 80,000 பேர் இறந்ததன் மூலம் பிரேசிலில் இந்த பெருந்தொற்றினால் அதிகப்பட்ச உயிரிழப்புகள் நேர்ந்த மாதமாக ஏப்ரல் ஆகியிருந்ததை சுட்டிக்காட்டி, பெருந்தொற்று நாட்டில் ஏற்படுத்தியிருந்த மிகப்பெரும் சேதத்தை குறித்து பேசினார். Castanheira குறிப்பிட்டார், உலகெங்கிலும் போலவே, “கொலைபாதக முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்க எதிர்ப்பு அணிதிரளாமல் தடுப்பதில் தொழிற்சங்கங்கள் செயலூக்கத்துடன் வேலைசெய்தன.”

”தொழிற்சங்கங்களுடனும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை சக்திகளுடனும் ஒரு திட்டவட்டமான முறிப்பு இல்லாமல் பிரேசிலில் ஒரு முற்போக்கான தீர்வு சாத்தியமில்லாதது” என்றார் Castanheira.

ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு பசிபிக்கில் இருந்து நான்கு பேர் பேரணியில் உரையாற்றினர்: ICFI இன் நீண்டநாள் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தில் செல்தகைமை மிக்கவருமான நிக் பீம்ஸ், இவர் உலகப் பொருளாதார சூழல் குறித்துப் பேசினார்; ஆஸ்திரேலிய SEP இன் தேசியச் செயலரான செரில் கிரிஸ்ப்; நியூசிலாந்து சோசலிச சமத்துவக் குழுவின் ஒரு முன்னணி உறுப்பினரான டோம் பீட்டர்ஸ்; மற்றும் WSWS ஆஸ்திரேலிய தேசிய ஆசிரியரான பீட்டர் சைமண்ட்ஸ், இவர் சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைப்பை திறனாய்வு செய்தார்.

கூட்டத்தின் முடிவில் நிகழ்வின் வரலாற்று மற்றும் உலகளாவிய தன்மையின் மீது ஜோசப் கிஷோர் வலியுறுத்தம் செய்தார். “ஒரு உலகளாவிய நெருக்கடிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக, ஒரு உலகளாவிய நேயர்களுக்கு ஒரு உலகளாவிய முன்னோக்கினை உரையாற்றியவர்கள் முன்வைத்துள்ளனர்” என்றார் அவர்.

கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் IWA-RFC ஐ உருவாக்கப் போராடுவதற்கும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து ICFI ஐ கட்டியெழுப்பப் போராடுவதற்கும் ஒரு வலிமையான அழைப்பை விடுத்து கிஷோர் நிறைவுசெய்தார்.

”புறநிலை யதார்த்தம் தொழிலாள வர்க்கத்தை சோசலிசப் புரட்சியை நோக்கித் தள்ளுகிறது. ஆனால் என்ன சாத்தியமோ அது செய்யப்பட்டாக வேண்டும். உலகின் நிலை குறித்து விமர்சனம் செய்வது போதாது. அதை மாற்றுவதே பணியாகும். ஒரு சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவதே அடிப்படையான பணியாக உள்ளது.”

Loading