மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஞாயிற்றுக்கிழமை, உலக சோசலிச வலைத் தளம், 'இந்த பெருந்தொற்றை தடுத்து உயிர்களைக் காப்பாற்ற ஓர் உலகளாவிய மூலோபாயத்திற்காக' என்ற தலைப்பில் முன்னனி விஞ்ஞானிகளுடன் இணையவழி விவாதம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த வைரஸை முழுமையாக ஒழிக்க தடுப்பூசி மற்றும் உறுதியான பொது சுகாதார நடவடிக்கைகளுடன் சேர்ந்து, அந்த விஞ்ஞானிகள் “முழுமையாக ஒழிக்கும்' ஒரு கொள்கைக்கு பலமான பாதை அமைத்தார்கள்.
உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் நெறிப்படுத்திய அந்த நிகழ்வில், நியூசிலாந்து வெலிங்டனின் ஒடாகோ பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார மருத்துவரும் பேராசிரியருமான மைக்கேல் பேக்கர்; கால்கரி பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி உயிரியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளரும் மற்றும் ஜீரோ கோவிட் கனடா குழுவின் இணை நிறுவனருமான டாக்டர் Malgorzata Gasperowicz; மற்றும் நியூ இங்கிலாந்து காம்ப்ளக்ஸ் சிஸ்டம்ஸ் பயிலகத்தின் ஸ்தாபகத் தலைவர் டாக்டர் யானீர் பர்-யாம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அந்த சர்வதேச கூட்டத்தில் இங்கிலாந்திலிருந்து ஒரு பெற்றோர் மற்றும் முறையே அமெரிக்காவின் டென்னஸி, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசிலில் இருந்து மூன்று ஆசிரியர்களும் பங்களிப்புகள் செய்தனர். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் நாடுகளின் நிலைமைகளை விவரித்தனர். உலக சோசலிச வலைத் தள எழுத்தாளர் டாக்டர் பெஞ்சமின் மாத்தேயுஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் இந்த பெருந்தொற்றின் தற்போதைய நிலையைப் பற்றிய ஒரு தொகுப்புரையை வழங்கி கூட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
நோர்த் இந்த நிகழ்வை அறிமுகப்படுத்துகையில், 'இந்த பெருந்தொற்றின் யதார்த்தத்தை சமாளிக்க வேண்டி உள்ள பெருந்திரளான மக்களும், உழைக்கும் மக்களும்' இந்த பெருந்தொற்றைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு மூலோபாயத்தை உருவாக்கும் விதத்தில், அவர்களுக்கான விஞ்ஞானபூர்வ தகவல்களை வழங்குவதில் அந்நிகழ்வு கவனம் செலுத்தும் என்றவர் விவரித்தார்.
பேக்கர் அவரின் ஆரம்ப கருத்துக்களில், பெரும்பாலான நாடுகளில் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று விமர்சித்தார். அவர் கூறினார், 'பதினெட்டு மாதங்களில், நாடுகளுக்கு கிடைக்கக்கூடிய மூலோபாய தெரிவுகளை விவரித்தும், என்ன உத்திகள் மிகவும் பயனுள்ளவை என்பது பற்றி திரட்டப்பட்ட ஆதாரங்களை முன்வைத்தும், இந்த பெருந்தொற்று குறித்து உலகம் மிகவும் முறையாக சிந்திக்கும் முறையைக் கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன். துரதிருஷ்டவசமாக, அப்படியொன்றும் நடக்கவில்லை. இந்த பெருந்தொற்றைக் கையாள நம்மிடம் உலகளாவிய தலைமை இல்லை.' 'முழுமையாக ஒழிப்பது மிகவும் சாத்தியமான மூலோபாயம்' என்று கூறிய அவர், தடுப்பூசி கிடைப்பதற்கு முன்பே, குறிப்பாக கிழக்கு ஆசியா மற்றும் ஆசிய பசிபிக்கில், அதிக மக்கள்தொகை கொண்ட பல நாடுகளால் நீண்ட காலத்திற்கு கோவிட்-19 ஐ அகற்ற முடிந்திருந்தது என்றவர் குறிப்பிட்டார்.
ஆனால் கோவிட்-19 ஐ முழுமையாக ஒழிக்கும் கொள்கைகளைப் பெரும்பாலான அரசாங்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்று பேக்கர் குறிப்பிட்டார்.
இதுவொரு உலகளாவிய பெருந்தொற்றாக இருக்கப் போகிறது, இந்த நோய்தொற்றால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது என்பதை, ஜனவரி [2020] இறுதியிலேயே, சிறந்த தொற்றுநோய் நிபுணர்கள் முன்னணி இதழ்களின் சிறந்த ஆய்வறிக்கைகளில் குறிப்பிட்டிருந்தனர். அது எந்தளவுக்கு தொற்றக்கூடியது என்பதன் அடிப்படையில் மக்கள்தொகை விகிதத்தில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினருக்கு அந்த நோய்தொற்று ஏற்படக்கூடும் என்றும், நோய்தொற்றால் உயிரிழக்கும் ஆபத்து சுமார் ஒரு சதவீதம் இருப்பதாக தெரிகிறது. ஆகவே அது தடுக்கப்படாவிட்டால், இப்போதிருந்தே அது உலகெங்கிலும் 30 மில்லியனுக்கும் கூடுதலான மக்களைக் கொல்லும் என்றும், போதிய திட்டமிடல் இல்லாமலேயே அவசரகதியில் நான் சர்வசாதாரணமாக கணித்திருந்தேன். அடிப்படை பொது சுகாதார தொற்றுநோயியல் அறிவு கொண்ட எவரொருவரும் அந்த சாதாரண கணக்கீட்டைச் செய்ய முடியும், ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக இதற்கு முன்னர் நாம் பேசிக் கொண்டிருந்த முக்கிய அமைப்புகள் அந்த ஆபத்து மதிப்பீட்டை முன்வைத்து, 'இதை நாம் தடுக்க வேண்டும்' என்று கூறவில்லை.
பேக்கர் கூறினார், அந்த வைரஸ் பரவுவதை நிறுத்துவதில் சீனா எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை ஆராய உலக சுகாதார அமைப்பு 2020 பெப்ரவரியில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்றைச் சீனாவுக்கு அனுப்பியது. “அதை பார்த்த நான், 'ஆமாம், நிச்சயமாக இந்த பெருந்தொற்றை நாம் தடுத்தாக வேண்டும், நாம் முழுமையாக ஒழிக்கும் அணுகுமுறைக்கு மாற வேண்டும்,' என்று கூறினேன், அந்த ஆலோசனையை உலகெங்கிலுமான அரசாங்கங்கள் ஏற்றுக் கொள்ளும் என்று நினைத்தேன்... பெரும்பாலான நாடுகள், அதன் மீது எதுவும் செய்யவில்லை. ஆசிய பசிபிக் பிராந்தியம் வெற்றி அடைந்திருப்பதை நாம் பார்க்கலாம், ஆனால் இன்னமும் கூட மேற்கத்திய உலகம் இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த எதுவும் செய்யவில்லை,' என்றார்.
இங்கிலாந்து பெற்றோர் ஒருவர், லிசா, இங்கிலாந்தின் பேரழிவுகரமான நிலைமையை பலமாக எடுத்துரைத்தார், அங்கே பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் அரசாங்கம் இந்த பெருந்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான மிகக் குறைந்த பொது சுகாதார நடவடிக்கைகளைக் கூட அகற்றும் ஒரு பிரச்சாரத்திற்குத் தலைமை தாங்கியுள்ளது. மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
'குழந்தைகள் முன்னெப்போதையும் விட அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்,' லிசா கூறினார், 'அடிப்படையில் பயமாக உள்ளது. என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. இது என் குழந்தைகளை மொத்தமாக பள்ளியில் இருந்து நீக்குவது —அவ்விதத்தில் அவர்களின் நண்பர்களை இனி அவர்கள் பார்க்க முடியாது, முன்நோக்கி பார்க்க எதுவும் இருக்காது, திரும்பி செல்லவும் முடியாது— அல்லது கோவிட் நோயைப் பெற அதிக வாய்ப்புள்ள இடங்களுக்கு அவர்களை அனுப்புவது இவ்விரண்டுக்கும் இடையிலான ஒரு விருப்பத்தெரிவாக உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க வேண்டுமா என்றவர் விஞ்ஞானிகளிடம் வினவினார்.
டாக்டர். Gasperowicz பதிலளிக்கையில், கோவிட்-19 நோய்தொற்று ஏற்பட்ட 3 இல் இருந்து 12 சதவீதத்திற்கு இடையிலான குழந்தைகள் 'நீண்டகால கோவிட்' நோய்க்கு உள்ளாகிறார்கள், மனநலன் மற்றும் அறிகை வளர்ச்சியில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதும் இதில் உள்ளடங்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
பள்ளிகளை மீண்டும் திறப்பதன் விளைவுகளைக் குறித்து பேராசிரியர் பேக்கர் தொடர்ந்து கூறினார்:
இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் புள்ளிவிபரங்கள் மிகவும் தெளிவாக இருப்பதாக நினைக்கிறேன். அடுத்த சில மாதங்களில் அனேகமாக அங்கே பல மில்லியன் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நோய்தொற்று ஏற்படும், நாள்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் நாம் எதிர்பார்க்கும் பாதகமான நிகழ்வுகள் குறைவாக இருந்தாலும் கூட, குழந்தைகளும் இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற வெறும் எண்ணிக்கையே இளைஞர்கள் மீதான தடுக்கக்கூடிய நோயின் ஒரு மிகப் பெரிய சுமையை நாம் ஏற்க போகிறோம் என்று அர்த்தப்படுகிறது, இவற்றில் சில நிரந்தரமாக கூட இருக்கலாம்...
ஒரு துயரின் விளைவுகள் குறித்து தெரியும் போது, அதுவும் பாதிப்புகள் மிகக் கடுமையாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் போது, அதற்கு மக்களை ஆளாக்காமல் இருப்பதே முன்னெச்சரிக்கை கொள்கையாகும். ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் அவ்வாறு ஏற்பட அனுமதிக்காது.
“பிரிட்டன் அரசாங்கம் இந்த தருணத்தில் ஏறக்குறைய இந்த காட்டுமிராண்டித்தனமான பரிசோதனையைப் பிரிட்டிஷ் மக்கள் மீது திணித்து வருவதைக் குறித்து நிஜமாகவே கவலைக் கொள்வதாக' பேராசிரியர் பேக்கர் தெரிவித்தார்.
இது பெருந்தொற்றின் ஆரம்பத்திலேயே தீவிரமாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், இந்த வைரஸை இரண்டே வாரங்களில் அகற்றியிருக்கலாம் என்பதற்கான விஞ்ஞானபூர்வ புள்ளிவிபரங்களை டாக்டர் Gasperowicz விபரமாக வழங்கினார். புதிய, மிகவும் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை வைரஸூடன், அது அதிக காலமெடுக்கும் என்றாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அதை செய்து முடிக்க முடியும் என்றார்.
தடுப்பூசி, முக்கியமானது என்றாலும், இந்த பெருந்தொற்றை அது நிறுத்தி விடாது, ஏனென்றால் இந்த வைரஸ் தடுப்பூசி செலுத்தியவர்களிடம் இருந்தும் பரவ முடியும் என்பதை டாக்டர் காஸ்பெரோவிச்சின் விளக்கப் படத்துடன் விவரித்தார். 'தடுப்பூசியில் மட்டும் கவனம் செலுத்துவதை விட பொது சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்,' என்றவர் தெரிவித்தார். 'ஒரு மேலதிக நடவடிக்கையாக அதிகமானவர்களுக்கு தடுப்பூசி முக்கியம் தான் என்றாலும், அது மட்டுமே இந்த பெருந்தொற்றைத் தீர்த்து விடாது.'
'டெல்டா வகை வைரஸ் நமக்கு எச்சரிக்கை மணியாகும்,' என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். 'அதை நிறுத்த, அதன் வீரியத்தைக் குறைக்க நம் கருவிப் பெட்டியில் உள்ள அனைத்து சாதனங்களையும் நாம் பயன்படுத்த வேண்டும்.'
டாக்டர் பர்-யாம், இந்த பெருந்தொற்று தொடங்கியதில் இருந்தே, சமூக அடைப்புகள், பள்ளிகளின் மூடல் மற்றும் அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவது உட்பட இந்நோயைத் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளுக்கு முன்னணி ஆலோசகராக இருந்து வந்துள்ளார்.
'உண்மையில் நம்மிடம் இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன,' என்று கூறிய அவர், 'அவற்றில் ஒன்று இந்த வெடிப்பிலிருந்து, இந்த பெருந்தொற்றிலிருந்து வெளியே வரும் பாதை, மற்றொன்று மிகப் பெரிய இழப்பு மற்றும் துன்பத்திற்கான பாதை, இதைத் தான் நாம் கடந்த 18 முதல் 19 மாதங்களாக அனுபவித்து வருகிறோம்... நாம் ஒவ்வொரு அடியையும் ஒவ்வொரு நடவடிக்கையையும் சாத்தியமானளவுக்கு பலமாக எடுத்து வைக்க வேண்டும்.'
பள்ளிகளை மூடுவது அவசியமா என்று வினவிய போது, பர்-யாம் விடையிறுத்தார்:
அது சரியான அழைப்பாக இருக்கும், பள்ளிகளைத் திறக்காமல் இருப்பதற்கு அழைப்பு விடுப்பது மட்டுமல்ல, மாறாக வெறுமனே பள்ளிகளைத் திறக்காமல் இருப்பது மட்டுமே இலக்கை எட்டிவிடாது என்று கூறலாம். அது ஒரு முழுமையான மூலோபாயத்தின் ஒரு சிறிய பகுதிதான்... இந்த வைரஸை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக அதிகபட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அதை செய்யலாம்.
அந்த நிகழ்வை நிறைவு செய்த நோர்த், “நோயைக் குறைக்கும் மற்றும் முழுமையாக ஒழிக்கும் ஒரு கொள்கைக்கு பலமாக பெரியளவில் ஒரு பாதை' வழங்கியதற்காக விஞ்ஞானிகளுக்கு நன்றி கூறியதுடன், அவர்கள் 'இன்னும் நிறைய பாத்திரம் வகிக்க' வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
பொதுமக்களுக்குக் கல்வியூட்டப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, ஊடகங்கள் அதை செய்யவில்லை. இந்த விவாதத்தை தேசிய தொலைக்காட்சியில் கொண்டு செல்ல எங்கள் வசம் எதுவுமில்லை, குறைந்தபட்சம் அமெரிக்காவில் இல்லையென்றாலும், மாலைப்பொழுதின் இந்த யதார்த்தமான விவாதத்தை வேறெங்கிலும் கூட கொண்டு செல்ல முடியுமா என்பது சந்தேகம் தான். இந்த விஷயத்தில் அறிவு தான் உயிர்களைக் காப்பாற்றும். இது மாற்றப்பட வேண்டுமானால், பரந்த பெருந்திரளான மக்களின் தலையீடு தேவைப்படுகிறது, உழைக்கும் மக்கள் அவர்களே, தொழிலாள வர்க்கமே ஒரு கொள்கை மாற்றத்திற்காக போராட வேண்டும்.
உலக சோசலிச வலைத் தளம், இந்த முழு நிகழ்வையும் பார்க்குமாறும் அதை பரந்தளவில் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுமாறும் நம் வாசர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது.