மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த ஆண்டு பிரேசிலிய எழுத்தறிவூட்டும் கல்வியாளரும் சர்வதேச 'புதிய இடது' பிரமுகருமான பௌலோ ஃபிரையர் (1921-1997) பிறந்த நூற்றாண்டு விழாவைக் குறிக்கிறது. இந்த ஆண்டுவிழா போலி-இடது மற்றும் கல்வியாளர்களின் வட்டங்களில் பரவலாக அனுசரிக்கப்பட்டதுடன், கூகுளின் தினசரி 'Doodle' இல் அவரது படமும் இடம்பெற்றுள்ளது.
ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறை என்ற 1968 புத்தகம் மில்லியன் கணக்கான பிரதிகள் விற்பனையானதுடன், சமீபத்திய கணக்கெடுப்பின்படி, சமூக அறிவியல் ஆராய்ச்சியில் மூன்றாவது அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட படைப்பாக உள்ளது. அதன் வெற்றி ஃபிரையரை ஒரு சர்வதேச நபராக ஆக்கியது, பின்னர் அவர் கினியா-பிசாவ், மொசாம்பிக் மற்றும் தான்சானியா உட்பட பல முன்னாள் காலனித்துவ நாடுகளில் பாரிய எழுத்தறிவூட்டும் பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கினார் அல்லது ஆலோசனை வழங்கினார். அதே நேரத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் 29 பல்கலைக்கழகங்களில் கௌரவ பட்டங்களைப் பெற்றார். அவர் இறந்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, ஃபிரையரின் பணி உலகெங்கிலும் உள்ள கல்வித் துறைகளில் செல்வாக்கு செலுத்துகிறது.
ஒரு தீவிரமான மற்றும் மார்க்சிசக் கல்வித் தத்துவ மற்றும் நடைமுறையை ஃபிரையர் முன்னெடுத்தார் என்பது கல்விசார்ந்த துறையினரின் ஒருமித்த கருத்தாகும். ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறை 'விமர்சனரீதியான கல்வியியல்' என்று அழைக்கப்படுவதின் ஸ்தாபக நூல்களில் ஒன்றாக விளம்பரப்படுத்தப்படுகிறது. 1970களில் இருந்து இன்று வரை சர்வதேச அளவில் பல்வேறு போலி-இடது நபர்களால் ஃபிரையர் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் இது வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவில், மொழியியலாளர் நோம் சொம்ஸ்கி ('ஃபிரையர் ஒரு தீவிர புரட்சியாளர்') மற்றும் கல்வியாளர் பீட்டர் மெக்லாரன் (சமீபத்தில் ஜாக்கோபின் இதழில் ஃபிரையர் 'உலகம் முழுவதும் வறுமையில் வாடும் சமூகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் அநீதியான உலகில் நீதியின் உணர்வைத் தேடும் எவருக்கும் ஒரு தங்கும் இடமாகவும் தொடர்ந்தும் இருக்கின்றார்”) என எழுதவைத்தது.
இந்த வரலாற்றை தெளிவுபடுத்தும் வாய்ப்பை நூற்றாண்டு விழா வழங்குகிறது. ஃபிரையரின் பணிகளின் எந்த அம்சமும், அப்பட்டமாகச் சொல்வதானால், மார்க்சிச தத்துவத்துடனும், தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டம் அல்லது ஒரு சோசலிச கல்விமுறையின் அபிவிருத்தி ஆகியவற்றுடனும் எந்தத் தொடர்பும் இல்லாததாகும்.
1960 களின் 'புதிய இடது' க்குள் இருந்த பல நபர்களைப் போலவே, ஃபிரையரும் தனது விஷயத்தில், 'விடுதலை இறையியல்' கத்தோலிக்கம், ஹெகலியன் இலட்சியவாதம், இருத்தலியல் மற்றும் பிராங்ஃபேர்ட் பள்ளி அரசியல் உட்பட பல்வேறு மார்க்சிச-எதிர்ப்பு தத்துவப் போக்குகளின் கலவையை தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் கலக்கினார். வர்க்க அடிப்படையில், ஃபிரையரின் முழு வாழ்க்கையும் நடுத்தர வர்க்கம் மற்றும் விவசாயிகளை நோக்கி, ஒடுக்கப்பட்ட மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளில் முதலாளித்துவ தேசியவாத திட்டங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எழுத்தறிவித்தலை பயிற்றுவித்தல் என்ற ஒரு நிலையான நோக்குநிலையை வெளிப்படுத்தியது.
ஃபிரையரின் முன்னைய தொழில்வாழ்க்கை
ஃபிரையர் 1921 இல் பிரேசிலின் வடகிழக்கில் உள்ள மிகப்பெரிய நகரமான ரெசிஃபியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை இராணுவ காவல்துறையில் உறுப்பினராக இருந்தார். போர்ச்சுகீசிய மொழியை வயதுவந்தோருக்கான வகுப்புகள் மூலம் கற்பிப்பதற்கு முன்பு அவர் சட்டத்தைப் படித்தார். அவர் முதலில் கம்யூனிச எதிர்ப்பு கத்தோலிக்க நடவடிக்கை (Catholic Action) அமைப்பிலும், பின்னர் பிரேசிலில் உள்ள கத்தோலிக்க திருச்சபையிலும் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் வளர்ந்த விடுதலை இறையியல் இயக்கத்துடன் (liberation theology movement) இணைக்கப்பட்ட Communidades Eclesiales de Base (அடிப்படை தேவாலய அமைப்புக்கள்) ஆகியவற்றிலும் தீவிரமாக செயல்பட்டார்.
ஃபிரையர் பின்னர் Serviço Social da Indústria (தொழில்துறை சமூக சேவை, SESI) க்காக பணியாற்றத் தொடங்கி, நிறுவனத்தின் கல்வி மற்றும் கலாச்சாரப் பிரிவின் இயக்குநரானார்.
SESI ஆனது 1946 இல் பிரேசிலிய தொழிலதிபர்களால் உருவாக்கப்பட்டு மற்றும் நிதியளிக்கப்பட்டது. ஒரு வரலாற்றாசிரியர் சுருக்கமாகக் குறிப்பிட்டவாறு: 'இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது பிரேசிலில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதற்கு எதிரான தொழிலாளர் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. எழுச்சியடைந்து வந்த பனிப்போரானது பிரேசிலின் தொழிலாள வர்க்கத்திற்குக் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட கல்வி வாய்ப்புகள், இடதுசாரித் தலைவர்களால் அவர்களை வழிதவறச் செய்ய இட்டுச்செல்லும் என்ற அச்சத்தை அதிகப்படுத்தியது. ‘பிரேசிலில் சமூக அமைதியை’ வழங்குவதாக இவ்வமைப்பு உறுதியளித்தது. வர்க்க மோதல்களை இல்லாதொழிப்பதன் மூலம் மேலதிக பொருளாதார அபிவிருத்திக்கு இவ்வமைப்பு உதவும் எனக் கூறியது” என எழுதினார் [1].
வர்க்கப் போராட்டத்தை திசை திருப்புவதும் அடக்குவதும் பிரேசிலிய ஆளும் உயரடுக்கிற்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்தது. நாட்டில் தொழில்துறை பாட்டாளி வர்க்கம் முந்தைய காலத்தினைவிட மூன்று மடங்கு அதிகமாகி, 1920 இல் சுமார் 300,000 இல் இருந்து 1940 களின் முற்பகுதியில் ஒரு மில்லியனாக இருந்தது. பிரேசிலிய கம்யூனிஸ்ட் கட்சி 1920களின் பிற்பகுதியிலும் 1930களிலும் ஒரு ஸ்ராலினிச சீரழிவை சந்தித்தது. இந்தக் காலகட்டத்தில் அது நாட்டின் தேசிய முதலாளித்துவத்தின் 'முற்போக்கான' பிரதிநிதிகளுடன் பல்வேறு சந்தர்ப்பவாத, மக்கள் முன்னணி கூட்டணிகளை தொடர்ந்தது. எவ்வாறாயினும் 1917 ரஷ்யப் புரட்சியால் செல்வாக்கு செலுத்தப்பட்ட தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக அதன் சுயாதீன நலன்களை முன்னெடுக்க முயன்றது.
SESI உடன் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஃபிரையர், பின்னர் அந்த அமைப்பு 'வர்க்க மோதலை தணிக்கும் மற்றும் தொழிலாளர்களிடையே அரசியல் மற்றும் போர்க்குணமிக்க நனவின் வளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியை' பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதை ஒப்புக்கொண்டார். [2] இந்தக் காலகட்டத்தில் மக்களுக்குப் படிக்கவும் எழுதவும் கற்பிப்பதற்கான 'ஃபிரையர் வழிமுறையை' உருவாக்குவது உட்பட அவரது எழுத்தறிவுப் பணி, SESI இன் கம்யூனிச எதிர்ப்பு கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டது.
பிரேசிலில் வாழும் ஒரு மண்வெட்டும் விவசாயி, பறவைகளை வேட்டையாடும் பழங்குடி மனிதர், களிமண் பானைகள் செய்யும் மக்கள் (நகர்ப்புறத் தொழிலாளர்கள் ஃபிரையரின் ஒளிப்படத்தகடுகளில் குறிப்பிடத்தக்க வகையில் இல்லாதுள்ளனர்) பிரேசிலில் வாழ்க்கைமுறையின் வெவ்வேறு எடுத்துக்காட்டுகளைக் காட்ட ஒளிப்படத்தகடு படக்காட்சி இயந்திரத்தை பயன்படுத்தி, வயதுமுதிர்ந்த கல்வியறிவற்ற குழுக்களுடன் பணிபுரிவது அவரது வழிமுறையாகும். இதனை தொடர்ந்து கல்வியறிவற்றவர்களின் தற்போதைய வாய்மொழி சொற்களஞ்சியத்தை வெளிப்படுத்துவதையும் அதே நேரத்தில் இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் தயாரிப்புகளுக்கு இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு விவாதிப்பதாகும்.
இதிலிருந்து, கல்வியாளர் பல 'உருவாக்கும் சொற்களை' (generative words) உருவாக்கினார். இது கற்பிக்க உதவியது. இந்த வார்த்தைகள் (வழக்கமாக சுமார் 18) இரண்டு நிலைப்பாட்டில் இருந்து 'உருவாக்கும்' வடிவம் என கருதப்பட்டன: ஒன்று பாடத்திட்ட எழுத்து-ஒலி உறவுகளை கற்பிப்பதில் அவற்றின் மதிப்பு, மற்றையது படிப்பறிவில்லாதவர்களின் அரசியல் புரிதலின் அபிவிருத்தி ஆகும்.
எடுத்துக்காட்டாக, tijolo (ரிஜோலோ செங்கல்) என்ற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படும் 'உருவாக்கும்' வார்த்தையாகும். ஒரு பார்வையாளர் கூறினார்: “ஒரு கட்டுமான காட்சியின் படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படம் முதலில் செங்கல் என்ற வார்த்தை இல்லாமல் காட்டப்பட்டது. செங்கற்களைப் பயன்படுத்தி தங்கள் சொந்த வீடுகளைக் கட்டுவது, வீடுகள் சமூகப் பிரச்சனையாக இருப்பது, சிறந்த வீட்டுவசதிக்கான தடைகள் மற்றும் பிற தலைப்புகள் எதுவாக இருந்தாலும் அந்தக் குழு விவாதித்த பின்னரே, இரண்டாவது படம் செங்கல் என்ற வார்த்தையுடன் கட்டுமானக் காட்சியைக் காட்டும். மூன்றாவது படத்தில் அல்லது ஒளிப்படத்தகட்டில் செங்கல் மட்டுமே காட்டப்படும்” [3].
எழுத்தறிவிக்கும் ஆசிரியர்கள் பின்னர் செங்கல் என்ற சொல்லை எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அசைகளாகப் பிரித்து, மற்ற எழுத்துக்களுடன் ஒப்பிடுவதன் மூலம் எழுத்து-ஒலி உறவுகளைப் புரிந்துகொள்வதை அபிவிருத்தி செய்தனர். (ஒரு அணுகுமுறை, தற்செயலாக, போர்த்துகீசியம் போன்ற மொழிகளில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும், ஆனால் ஆங்கிலத்தைப் போலல்லாமல், எழுத்துக்களுக்கும், ஒலிகளுக்கும் இடையில் முக்கியமாக வெளிப்படையான உறவைக் கொண்டுள்ளது).
ஃபிரையர் எழுத்தறிவூட்டும் முறையின் மூலம், அரசியல் புரிதலின் வளர்ச்சி Conscientização (விழிப்புணர்வு உருவாக்குதல் அல்லது 'விமர்சன நனவு' என்று பலவிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என விவரிக்கப்பட்டது.
இது ஃபிரையரால் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும். இருப்பினும் இது முதன்முதலில் அரசாங்கத்தின் நிதியுதவிபெற்ற நிறுவனமான பிரேசிலிய ஆய்வுகளின் மேம்பட்ட நிறுவனத்தில் (Institute of Brazilian Studies - ISEB) சமூகவியலாளர்களால் உருவாக்கப்பட்டது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் பிரேசிலிய முதலாளித்துவத்தின் எழுச்சிக்கு உதவும் ஒரு சித்தாந்தமான 'தேசிய-அபிவிருத்திவாதத்தை' ISEB ஊக்குவித்தது. இந்த கட்டத்தில் ஃபிரையர் ஒரு நம்பிக்கையான 'தேசிய-அபிவிருத்திவாதி'. Conscientização (விழிப்புணர்வு) என்பது ஒரு முதலாளித்துவ தேசியவாத கருத்தாகும். அடிப்படையில் படிக்கவும் எழுதவும் கற்ற பிறகு மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்ற விவசாயிகள் பிரேசிலில் ஸ்தாபகக் கட்சிகளுக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
ஆய்வாளர் வனில்டா பைவா, ஒரு முன்னணி ISEB புத்திஜீவியின் கண்ணோட்டத்தை பின்வருமாறு சுருக்கமாகக் கூறினார்: “விமர்சனரீதியான நனவில் தேசியம் ஒரு முக்கிய வரையறையாகும் […] தேசிய நலன்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், விமர்சனரீதியான நனவு முழுமையான தேசத்திற்குள் குறிப்பிட்ட பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து, அந்தத் தருணத்தில் தேசியத்தின் யதார்த்தத்தை உணர முடியும். அத்துடன் தேசியவாதப் போராட்டங்களின் இலக்குகளைப் பற்றித் தொடர்ந்து புதிய தெரிவுகளை மேற்கொள்ளும் அதே வேளையில் ஏற்கனவே அடையப்பட்ட இலக்குகளுடன் இணங்குவிக்க முடிகிறது. நனவின் இந்த வடிவம் இயற்கையாகவே சில அரசியல் நிலைகளின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்: உழைப்பை மனிதத்தன்மையானதாக்கல், விவசாய சீர்திருத்தம், தேசிய தொழில்துறையை வலுப்படுத்துதல், அமேசனின் பிரேசிலிய குடியேற்றம், தேசிய இறையாண்மை, நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், வெளிநாட்டு மூலதனத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் அதுபோன்றவற்றைச் செய்யமுடியும்' [4].
ஃபிரையர் தனது எழுத்தறிவுப் பணிக்காக பரவலான கவனத்தைப் பெற்றார். இது குறிப்பாக விவசாயிகளுக்கு வெறும் 40 மணி நேரத்தில் ஒளிப்படத்தகடு படக்காட்சி இயந்திரம் மற்றும் சிறுகுறிப்பு அட்டைகளுடன் (flash card) மட்டுமே வாசிக்கக் கற்றுக்கொடுக்க முடியும் என்ற கூற்றுக்காகவாகும்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் தீவிர முதலாளித்துவ தேசியவாத அரசாங்கம் 1961 இல் கியூபாவில் கல்வியறிவின்மையை அகற்றுவதற்காக ஒரு பாரிய பிரச்சாரத்தைத் தொடங்கிய பின்னர், இலத்தீன் அமெரிக்காவில் வாசிக்கவும் எழுதவும் கற்பித்தல் பனிப்போருக்குள் ஒரு அரசியல் பிரச்சினையாக வெளிப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவின் காரணமாக ஃபிரையரின் வளர்ந்து வரும் முக்கியத்துவம் கியூபாவால் ஊக்குவிக்கப்பட்ட கல்வி முறைக்கு மாற்றீடாக பார்க்கப்பட்டது. ஃபிரையரின் பணிக்கான கணிசமான பகுதி கென்னடி நிர்வாகத்தின் முன்னேற்றத்திற்கான கூட்டமைப்பின் (Alliance for Progress) வழியாக வந்தது. இந்த அமைப்பு இலத்தீன் அமெரிக்காவின் பொருளாதாரங்களை அமெரிக்காவுடன் பிணைத்து, அரைக்கோளத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கைக்கு 'முற்போக்கான' மெருகூட்டலை ஏற்படுத்தும் ஒரு உதவித் திட்டமாகும்.
1961 ஆம் ஆண்டில், ஃபிரையர் நகர் முழுவதும் எழுத்தறிவுத் திட்டத்தை வளர்ப்பதற்காக ரெசிஃப் நகரின் முதல்வரால் பணிக்கப்பட்டார். பின்னர் அவர் வறுமையில் உள்ள பெர்னாம்புகோ மாநிலம் முழுவதும் இதை விரிவுபடுத்துவதற்காக முன்னேற்றத்திற்கான கூட்டமைப்பின் உதவியை ஏற்றுக்கொண்டார். மே 1963 இல், பிரேசிலிய ஜனாதிபதி ஜோவோ கவுலார்ட், புதிதாகப் படித்த விவசாயிகளின் முதல் குழுவின் உத்தியோகபூர்வ பட்டமளிப்பை காண்பதற்காக அரசாங்க அதிகாரிகள், அமெரிக்க வெளியுறவுத்துறை ஊழியர்கள் மற்றும் அமெரிக்க பத்திரிகையாளர்கள் அடங்கிய குழுவை வழிநடத்தினார். இந்த நிகழ்வு குறித்த நியூயோர்க் டைம்ஸ் அறிக்கை, சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பின் (USAID) பிலிப் ஸ்வாப்பை பின்வருமாறு மேற்கோள் காட்டியது: “நாங்கள் மக்களுக்கு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை. கல்வியறிவு திட்டத்தின் மூலம் இந்த மக்களை குடிமக்களாக மாற்றுவதற்கு நாங்கள் உத்தேசித்துள்ளோம்.”
அரசாங்கத்தின் கல்வித் துறையின் மூலம் பிரேசில் முழுவதும் பணிபுரியுமாறு கௌலார்ட் பின்னர் ஃபிரையரை அழைத்தார். இந்தத் திட்டம் மார்ச் 1964 இல் அமெரிக்க ஆதரவு இராணுவ சதி மூலம் இடைநிறுத்தப்பட்டது.
தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தும் மற்றும் சமூகப் புரட்சியைத் தடுக்கும் திறன் கௌலார்டின் ஜனரஞ்சக தேசியவாதத்திடம் இல்லை என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியம் நம்புமளவிற்கு வர்க்கப் பதட்டங்கள் அதிகரித்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, கியூபாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்கான எதிர்ப்பை தெரிவித்து மற்றும் பல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தேசியமயமாக்குதல், நாடுகடந்த நிறுவனங்களின் இலாபத்தைத் திருப்பி அனுப்புவதற்கான வரம்புகள் போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்ததன் மூலம் வாஷிங்டன் அதிகாரிகளின் கோபத்தையும் ஈர்த்தார். இராணுவத்திற்குப் பின்னால் வாஷிங்டனின் திருப்பத்தால், ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பல மாதங்களுக்கு முன்பு ஃபிரையரின் கல்வியறிவூட்டும் திட்டத்திற்கான அமெரிக்க நிதியுதவி திரும்பப் பெறப்பட்டது. இராணுவ கையகப்படுத்தலுக்குப் பின்னர் ஃபிரையர் கைது செய்யப்பட்டு, பின்னர் நாடு கடத்தப்பட்டார். ஏழைகளுக்குப் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்க உதவுவதன் மூலம் கம்யூனிசத்திற்கு வழி வகுத்ததாக புதிய சர்வாதிகார ஆட்சி குற்றம் சாட்டியது.
ஃபிரையரின் 'தீவிரமான' திருப்பமும் ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறையும்
ஃபிரையர் சிலிக்கு சென்று ஜனாதிபதி எடுவார்டோ ஃபிரை (Eduardo Frei) இன் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி நிர்வாகத்திற்காக பணியாற்றினார். 1964 செப்டம்பரில் பிரையின் தேர்தல் பிரச்சாரத்திற்கு CIA பணமளித்ததோடு, சமூக ஜனநாயக சால்வடார் அலெண்டேயின் தோல்வியை ஒரு பனிப்போர் வெற்றியாகக் கருதியது. 1960 களில் தென் அமெரிக்காவில் உள்ள மற்ற எவரையும் விட சிலி தனிநபருக்கான அமெரிக்க உதவியை கூடுதலாக பெற்றது. மேலும் பிரையின் பல திட்டங்களுக்கு முன்னேற்றத்திற்கான கூட்டமைப்பு மூலம் நிதியளிக்கப்பட்டது. [5]
அவர் 1964 மற்றும் 1969 க்கு இடையில் சிலி அரசாங்கத்தின் விவசாய சீர்திருத்தக் கழகம் மற்றும் UNESCO (ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) ஆகியவற்றால் பல்வேறு காலங்களில் பணியமர்த்தப்பட்டார். ஏனெனில் அவர் சிலியின் கிராமப்புறங்களில் வயது வந்தோருக்கான கல்வியறிவு வகுப்புகளை உருவாக்கினார். அங்கு, இலத்தீன் அமெரிக்காவில் அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்ட நகர்ப்புற சிலிக்கு மாறாக, 36 சதவீத மக்கள் கல்வியறிவற்றவர்களாகவே இருந்தனர்.
பிரையின் நிர்வாகம், 'ஃபிரையரின் கற்பித்தல் வழிமுறையை' ஏற்றுக்கொண்டதுடன் நனவூட்டலை முன்னெடுத்தது. எழுத்தறிவுத் திட்டத்தின் உத்தியோகபூர்வ கையேட்டின் அறிமுகத்தில், ஒரு மூத்த அரசாங்க அதிகாரி, விவசாயிகளின் 'மந்திர நனவுக்கு' - அதாவது சிலி நாட்டு கிராமப்புற மீனவர்களின் குழு ஒன்று பணத்திற்கு பேராசை கொண்டவர்களை மீன் உணர்ந்து அதிலிருந்து தப்பிக்க முடியும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்ட- அந்த நனவுக்கு எதிரான 'விமர்சனரீதியான நனவை' ஊக்குவிப்பதில் நிர்வாகத்தின் கணக்கீடுகள் பற்றிய வெளிப்படையான விளக்கத்தை அளித்தார். ஒரு தொகையான மீன்களை பிடித்த பின்னர், மீனவர்கள் பல நாட்கள் வேலையில் இருந்து விடுப்பு எடுத்து, அதிக இலாபத்தைக் குவிப்பதற்கான மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான வாய்ப்பை விட்டுவிடுகிறார்கள் என்று அதிகாரி புகார் கூறினார். [6]
1960 களில் சிலி ஒரு புரட்சிக்கு முந்தைய சூழ்நிலையில் இருந்தது. தசாப்தத்தின் இறுதியில் பிரை நிர்வாகம் ஆழ்ந்த நெருக்கடியில் இருந்தது. உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் அரசாங்க சிக்கன நடவடிக்கைகள் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது, இலத்தீன் அமெரிக்காவில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான அதில் வேலைநிறுத்த அலைகளைத் தூண்டியது. கிராமப்புறங்களில், பெருந்தோட்டங்களை ஆக்கிரமித்து சுவீகரிப்பைக் கோரும் விவசாயிகளுடன் அரச படைகள் மோதின. இது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிரமயமாக்கலுடன் ஒன்றிணைந்துபோனது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றத்தின் உடைவு மற்றும் வியட்நாம் போரினால் அதிகரித்த அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியுடன் ஒரு புரட்சிகர காலகட்டம் திறக்கப்பட்டது.
இலத்தீன் அமெரிக்க குட்டி முதலாளித்துவ மற்றும் புத்திஜீவிகளின் பரந்த அடுக்குகள் 1960களில் தீவிரமயமாக்கப்பட்டன. இதில் கியூபப் புரட்சி பெரும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக இருந்ததுடன், மற்றும் முதலாளித்துவ கட்சிகளுடன் மக்கள் முன்னணி கூட்டணியின் மூலம் 'சமாதான சகவாழ்வு' மற்றும் சோசலிசத்திற்கான 'பாராளுமன்ற பாதை' ஆகியவற்றை ஆதரித்த உத்தியோகபூர்வமான ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக கெரில்லாயிசம் ஊக்குவிக்கப்பட்டது.
சிலியில் உள்ள ஃபிரையரின் எழுத்தறிவுக் குழுவிற்குள், இளம் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியிலிருந்து 1965 இல் நடுத்தர வர்க்க காஸ்ட்ரோவாத Movimiento de Izquierda Revolucionaria (MIR- புரட்சிகர இடது இயக்கம்) நிறுவப்பட்ட பின்னர் அதை நோக்கி தங்கள் விசுவாசத்தை மாற்றிக்கொண்டனர். பின்னர், ஸ்ராலினிச ஆதரவு பெற்ற மக்கள் முன்னணியின்போது (1970-1973), MIR சால்வடோர் அலென்டேயின் நிர்வாகத்திற்கு 'விமர்சனரீதியான ஆதரவை' கொடுத்தது. இந்த சந்தர்ப்பவாத-மத்தியவாத நிலைப்பாடு, MIR ஐ ஆதரித்த நிலமற்ற விவசாயிகளை முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அடிபணியச் செய்து, புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்தியை இல்லாதொழித்து, இராணுவம் உட்பட முதலாளித்துவ அரசின் மீது மோசமான நப்பாசைகளை வளர்த்துவிட்டது.
1968 இல் ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறை எழுதும்போது, MIR இன் அரசியல் மற்றும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் அதனுடன் தொடர்புடைய போக்குகளால் ஃபிரையர் தெளிவாக செல்வாக்கு செலுத்தப்பட்டார்.
ஃபிரையரின் 'தீவிரமான' திருப்பத்தின் தன்மை அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தவறாக சித்தரிக்கப்பட்டது. அவர் ஜனரஞ்சக-தேசியவாத அரசியல் இயக்கங்கள் மற்றும் காஸ்ட்ரோ-குவேரா கெரில்லாவாதத்தை ஊக்குவித்ததுடன், விவசாயிகளை நோக்குநிலையாக கொண்ட மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தார். இவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய நோக்குநிலை, மார்க்சிச அரசியலின் வளர்ச்சி மற்றும் ஒரு புரட்சிகர சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்களின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பது ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் அற்றது அல்லது இன்னும் துல்லியமாக அதை நனவுபூர்வமாக எதிர்த்தது. இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஒரு முற்போக்கான பிரிவு எனக் கூறப்படுதை நோக்கிய ஃபிரையரின் வர்க்க நோக்குநிலை, அவரது வாழ்க்கை முழுவதும் அவ்வாறே இருந்தது.
ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறை என்பது, ஃபிரையரின் கற்பித்தல் அணுகுமுறையின் ஒரு பகுதியினதும், குட்டி முதலாளித்துவ அரசியல் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியினதும் பிரதிபலிப்பாகும்.
கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறையைப் பொறுத்தவரை, ஃபிரையரின் புத்தகத்தில் குறிப்பாக அசலானது எதுவும் இல்லை. இது அமெரிக்க தத்துவஞானி ஜோன் டுவி மற்றும் பிரெஞ்சு கல்வியாளர் செலெஸ்டன் ஃப்ரெனே ஆகியோரால் உருவாக்கப்பட்ட பல தசாப்தங்கள் பழமையான முற்போக்கான கல்வி அணுகுமுறைகளை பெரிதும் ஈர்த்தது. இத்தகைய புள்ளிவிவரங்கள், சர்வாதிகார-எதிர்ப்பு கற்பித்தல் அணுகுமுறைகளை ஊக்குவித்தன மற்றும் அவர்கள் வாழும் சமூகத்தைப் பற்றிய மாணவர்களின் கற்றலுடன் எழுத்தறிவின் ஒருங்கிணைப்பை இணைக்க முயன்றன.
'வார்த்தையைக் கற்பித்து, உலகைக் கற்பித்தல்' என்ற அவரது அழைப்போடு பிந்தைய விஷயத்தை ஃபிரையர் விளக்கினார். ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறை கற்பித்தலின் 'வங்கி மாதிரி' என்ற உருவகத்தையும் அறிமுகப்படுத்தியது. இது பின்னர் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மாணவர்-ஆசிரியர் இளங்கலை பட்டதாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அங்கு கற்பித்தல், 'நேரடி அறிவுறுத்தல்' கற்பித்தல் மாதிரிகள் 'ஒரு சேமிக்கும் செயலுக்கு ஒத்ததாக' விமர்சிக்கப்பட்டது. இதில் மாணவர்கள் வைப்பிலிடுபவர்கள் மற்றும் ஆசிரியர் வைப்பிடப்படும் இடமாகும். ஆசிரியர் அறிவிப்புகளை வழங்கி வைப்பிலிடுகையில் மாணவர்கள் அவற்றை அமைதியாக பெற்று, நினைவில் இருத்தி ஒப்படைக்கவேண்டும்” [7].
சோசலிச இயக்கத்தினுள் கற்பித்தல் விவாதங்களுக்கு நீண்ட மையமாக இருந்த பல பிரச்சினைகளை ஃபிரையரின் புத்தகத்தில் குறிப்பிடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, பல் தொழில்நுட்ப கல்வியில் உடல் மற்றும் மன உழைப்பின் பங்கு, பள்ளிக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவு, மற்றும் கற்பித்தல் நடைமுறைகளூடாக மனிதகுலம் பெறும் கலாச்சார சாதனைகள் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களால் திறம்பட உள்ளீர்த்துக்கொள்ளப்படமுடியும் போன்றவை குறிப்பிடப்படவில்லை.
ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறை அதற்குப் பதிலாக 1960களின் 'புதிய இடதுகளிடம்' காணப்பட்டதைப் போன்ற ஒரு கொந்தளிப்பான வார்த்தையாடல் வடிவத்தைக் கொண்டிருந்தது. இந்தப் பிரிவுகளின் குறிப்பிடத்தக்க சில நபர்களான (பெரும்பாலும் காரணமில்லாமலும் பாசாங்குத்தனமாகவும்) ஹெர்பேர்ட் மார்க்கூஸ, ஜோன்-போல் சார்த்ர், எரிக் ப்ரொம், ஃபிரான்ட்ஸ் ஃபெனான் மற்றும் ரெஜிஸ் டெப்ராய் ஆகியோர் ஃபிரையரின் புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. காதல் மற்றும் 'மனிதமயமாக்கல்' ஆகியவற்றின் முட்டாள்த்தனமான கொண்டாட்டங்களும் இதற்குப் பொதுவானவை. ஒரு சிறப்பியல்பு பகுதி 'மக்களாக மாறுவதற்கு ஆழ்ந்த மறுபிறப்பு தேவை' என்று வலியுறுத்தியது. இத்தகைய முறையீடுகள் ஸ்ராலினிசத்திற்கான மன்னிப்புக்களுடன் இருந்தன. ஃபிரையர் மாவோ சேதுங்கின் கலாச்சாரப் புரட்சி என்று அழைக்கப்படுவதை அது 'ஆதிக்க கலாச்சாரத்தை' எதிர்த்ததால் 'ஆழமான நடவடிக்கை' என்று வரவேற்றார்.
அரசியல்ரீதியாக, ஃபிரையர் சர்வாதிகாரரீதியான கற்பித்தல் பற்றிய தனது விமர்சனத்தை, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச கட்சியைக் கட்டியெழுப்பும் எந்தவொரு முயற்சியையும் கசப்பான கண்டனங்களுடன் இணைக்க முயன்றார். இது 'குறுங்குழுவாதம்' மற்றும் 'முன்னணிப்படைத் தலைமை' என்று மீண்டும் மீண்டும் கண்டிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறையில் தொழிலாள வர்க்கத்தைப் பற்றிய சில குறிப்புகளில் ஒன்று, அது ஆளும் வர்க்க சித்தாந்தத்தால் 'சலுகைபெற்றுள்ளது' மற்றும் திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்ற புகாரை உள்ளடக்கியது. “ஒடுக்கப்பட்டவர்களின் பெரும் பிரிவுகள் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகின்றன, குறிப்பாக நாட்டின் தொழில்மயமான மையங்களில். இந்தத் துறைகள் எப்போதாவது அமைதியற்றதாக இருந்தாலும், அவை புரட்சிகர நனவு இல்லாதவை மற்றும் தங்களை சலுகைபெற்றவையாகக் கருதுகின்றன. ஒரு தொடர் வஞ்சகங்கள் மற்றும் வாக்குறுதிகளுடன் திரிபுபடுத்தல் பொதுவாக இங்கு வளமான நிலத்தைக் காண்கிறது”. [8]
ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறை இரண்டு வகையான இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ தேசியவாதங்களான ஜனரஞ்சகவாதம் மற்றும் கெரில்லாவாதத்தை ஊக்குவித்தது. ஜனரஞ்சகவாதத்தைப் பற்றி, பிரேசிலிய பெருநிறுவனவாத-ஜனரஞ்சக ஜனாதிபதி கெட்யூலியோ வர்காஸின் மே 1, 1950 உரையிலிருந்து ஃபிரையர் நீண்ட மேற்கோள் காட்டினார். அதில் அவர் தொழிலாளர்களை அரசு ஆதரவான தொழிற்சங்கங்களில் சேரவும், தனது நிர்வாகத்தின் பின்னால் ஒன்றுபடவும் அழைப்பு விடுத்தார். வர்காஸின் எதேச்சாதிகார முதலாளித்துவ அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கான இந்த தனது பிரச்சாரத்தை 'தேசிய நலனைப் பாதுகாப்பதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளுடன் இணைத்து, மக்களை ஒழுங்கமைத்துக்கொள்வதை பகிரங்கமாக ஊக்குவிப்பதை ஃபிரையர் முன்னெடுத்தார்'. [9]
கெரில்லாவாதத்தின் மீதான ஃபிரையரின் ஈர்ப்பு, விடுதலை இறையியல் மற்றும் கொலம்பிய 'கெரில்லா-பாதிரி' கமிலோ டோரஸ் ஆகியோரை ஊக்குவித்ததன் ஒரு அம்சமாகும். ஃபிரையரின் 'தீவிரவாதம்' மதம் அல்லது கத்தோலிக்கத்தின் மீதான விமர்சனத்திற்கு ஒருபோதும் நீட்டிக்கப்படவில்லை. அவர் வாழ்நாள் முழுவதும் அதனைப் பின்பற்றினார்.
ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறை கியூப அரசாங்கத்தையும் ஊக்குவித்து, காஸ்ட்ரோ மற்றும் குவேரா 'ஒரு சிறந்த உரையாடல் தலைமைக் குழு' என்று வர்ணித்தது. கியூப ட்ரொட்ஸ்கிஸ்டுகளை காஸ்ட்ரோ சிறையில் அடைத்ததன் 'உரையாடல்' தன்மையையோ அல்லது மெக்சிகோவில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் லியோன் ட்ரொட்ஸ்கியின் கொலையாளியான ரமோன் மெர்காடரை குவேரா அரவணைத்ததையோ ஃபிரையர் எங்கும் விளக்கவில்லை. இலத்தீன் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அமெரிக்க ஆதரவு இராணுவம் மற்றும் காவற்படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்ட கெரில்லாவாதத்தின் பேரழிவு விளைவுகளுக்கான தனது பொறுப்பை ஆசிரியர் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டார் என்பதையும் குறிப்பிடவேண்டும். இந்தக் காலகட்டத்தில் முயற்சித்த பல்வேறு சாகச ஆயுதப் போராட்டங்களை அக்காவற்படைகள் இலகுவாக தோற்கடித்தன.
சிலிக்குப் பிந்தைய நாடுகடத்தலும் மக்கள் முன்னணி அரசியலின் அரவணைப்பும்
ஒடுக்கப்பட்டவர்களின் கற்பித்தல்முறை வெளியீட்டிற்குப் பின்னர், ஃபிரையர் 1969 இல் சிலியை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இடைக்கால விரிவுரையாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அவர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் ஒரு தசாப்தமாக உலக தேவாலயங்களின் காங்கிரஸில் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில், ஃபிரையர் புதிதாக சுதந்திரமான நாடுகளில், பெரும்பாலும் ஆபிரிக்காவின் முன்னாள் போர்த்துகீசிய காலனிகளில் பல எழுத்தறிவுப் பிரச்சாரங்களை நடத்தினார் மற்றும் பல்வேறு நாடுகளில் ஒருவித 'புதிய இடது' பிரபலமாக உரைநிகழ்த்தும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார்.
விக்கிலீக்ஸில் ஜூலியன் அசான்ஜின் அமெரிக்க இராஜதந்திர கேபிள்களின் ஆவணக் காப்பகத்தின் உதவியினால், 1975 இன் ஒரு வெளிப்படையான அத்தியாயத்தை அணுகலாம். இது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஃபிரையரின் 'தீவிரமான கல்விமுறையை' எவ்வாறு மதிப்பிட்டது என்பதை நிரூபிக்கிறது.
வெளியுறவுத்துறை செயலாளரும், பிரபல போர்க்குற்றவாளியுமான ஹென்றி கிஸ்ஸிங்கரும் ஜனாதிபதி ரிச்சார்ட் நிக்சனும் சிலி இராணுவத்திற்கு அதிகாரத்தைக் கைப்பற்றவும், ஆயிரக்கணக்கான இடதுசாரிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைக் கடத்தவும், சித்திரவதை செய்யவும், கொலை செய்யவும் உதவிய இரண்டு ஆண்டுகளுக்குள் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று அனுப்பப்பட்ட இராஜதந்திர கேபிள் தகவல் மூலம் கிஸ்ஸிங்கர் ஃபிரையரை அமெரிக்காவிற்கு அழைத்தார். ஃபிரையரை ஒரு 'சிறந்த பிரேசிலிய கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்' என்று வர்ணித்த கிஸ்ஸிங்கர், சுவிட்சர்லாந்தில் உள்ள அமெரிக்க இராஜதந்திரிகளுக்கு 'வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேச எழுத்தறிவு தின மாநாட்டில் உரையாற்றுவதற்காக பௌலோ ஃபிரையருக்கு அழைப்பை வழங்குவதற்கான உதவிக்காக' அமெரிக்க கல்வி அலுவலகத்துடன் (USOE) 'தினசரி மற்றும் பயணச் செலவுகளுக்கு ஃபிரையருக்கு பணம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
(வெளியுறவுத்துறை துறை அதிகாரிகள் கிஸ்ஸிங்கரிடம், 'பௌலோ ஃபிரையருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னர், USOE அழைப்பை ஏற்றுக்கொள்வது வருத்தத்துடன் சாத்தியமில்லை என்பதை அவரது அலுவலகம் உறுதிப்படுத்துவதாக“ தெரிவித்தனர்.)
1980 இல், பிரேசிலின் தொழிலாளர் கட்சியின் (PT) ஸ்தாபக உறுப்பினராக ஃபிரையர் இருந்தார். இது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரிவுகள், பப்லோவாதிகள் மற்றும் முன்னாள் ட்ரொட்ஸ்கிச குழுக்கள் உட்பட எண்ணற்ற 'இடது' சந்தர்ப்பவாத அமைப்புகளால் நிறுவப்பட்டது. 1970 களின் பிற்பகுதியில் ஒரு எழுச்சிகரமான தன்மையைக் கொண்டிருந்த பிரேசிலிய தொழிலாள வர்க்கத்தின் பாரிய வேலைநிறுத்த இயக்கத்தை முதலாளித்துவ அரசுக்குப் பின்னால் திசைதிருப்புவதிலும் மற்றும் இராணுவ ஆட்சியில் இருந்து பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு 'மாறுவதிலும்' தொழிலாளர் கட்சி மையப் பாத்திரத்தை வகித்தது. தொழிலாளர் கட்சி அதன் தேர்தல் பலம் அதிகரித்ததால் வலப்புறம் சீராக நகர்ந்து, மேலும் பதவியில் இருக்கும்போது அதன் நலன்களைப் பாதுகாக்க பிரேசிலிய ஆளும் உயரடுக்கு தன்னை நம்பலாம் என்று உறுதியளிக்க முயன்றது.
இந்தச் செயல்பாட்டில் ஃபிரையர் ஒரு பங்கு வகித்தார். 1988 இல், தொழிலாளர் கட்சி சாவோ பாலோ நகரில் நகராட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றது, மேலும் 1989-1991 க்கு இடையில் மேயர் லூயிசா எருண்டினா டி சொய்சாவின் கீழ் கல்வி செயலாளராக ஃபிரையர் பணியாற்றினார். இந்தப் பதவியில் அவர் நகரின் பல பாழடைந்த பொதுப் பள்ளிகளை பழுதுபார்ப்பது போன்ற வரையறுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை இயற்றினார். பிரேசிலின் மிகப்பெரிய மற்றும் பணக்கார நகரத்தில் குறுகிய கால எருண்டினா நிர்வாகத்தின் பரந்த முக்கியத்துவம், அரசாங்கத்தில் 'பாதுகாப்பான ஜோடி கைகள்' என்று ஆளும் உயரடுக்கிற்கு தொழிலாளர் கட்சி தன்னை காட்டிக்கொண்டதாகும்.
ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், 2002இல் கட்சியின் தலைவரும், உலோகத் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா ஜனாதிபதி பதவியை வென்றார் மற்றும் பதவியில் முதலாளித்துவம் கோரிய சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார். நகர மற்றும் தேசிய மட்டங்களில் தொழிலாளர் கட்சி ஆட்சியின் இந்த அனுபவங்கள், தொழிலாள வர்க்கத்தில் கட்சியை மதிப்பிழக்கச் செய்தது மற்றும் போல்சனாரோ மற்றும் தீவிர வலதுசாரிக்கு கதவைத் திறந்தது. இன்று சாவோ பாலோவில், தொழிலாளர் கட்சி நகராட்சி மன்றத்தின் 55 இடங்களில் எட்டு இடங்களை மட்டுமே கொண்டுள்ளது.
1992 இல், ஃபிரையர் பதவியில் இருந்த அனுபவத்திற்குப் பின்னர் மற்றும் அவர் இறப்பதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது கடைசி குறிப்பிடத்தக்க புத்தகமான நம்பிக்கையின் கற்பித்தல்: ஒடுக்கப்பட்டவர்களின் மறுவாழ்வைக் கற்பித்தல் என்பதை வெளியிட்டார்.
இது சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் இலத்தீன் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும், இறக்குமதி மாற்றீட்டின் அடிப்படையில் பொருளாதார தேசியவாதத்தை ஊக்குவித்த முதலாளித்துவ தேசியவாத முன்னோக்கின் சரிவுக்குப் பின் உடனடியாக எழுதப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் சூழ்ச்சிக்கையாளல்கள் செய்ய முடியாத நிலையில், முன்னாள் காலனித்துவ உலகம் முழுவதிலும் உள்ள ஆளும் உயரடுக்குகள் சர்வதேச நிதி மூலதனத்தை ஈர்ப்பதற்கு, சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) ஆணையிடும் தொழிலாள வர்க்க விரோத 'கட்டமைப்பு மறுசீரமைப்பு' திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் சர்வதேச நிதி மூலதனத்தை ஈர்க்க முயன்றன. எல் சல்வடோர் மற்றும் நிக்கரகுவா போன்ற நாடுகளில் உள்ள பல குட்டி-முதலாளித்துவ கெரில்லா தலைமைகள், அமெரிக்கா கட்டளையிட்ட 'அமைதி' உடன்பாடுகளையும் 'தடையற்ற சந்தை' முதலாளித்துவ திட்டத்தையும் ஏற்றுக்கொண்டு, தங்களை முதலாளித்துவ நாடாளுமன்ற கட்சிகளாக மாற்றிக்கொண்டன.
ஃபிரையரின் நம்பிக்கையின் கற்பித்தல், இந்த நிகழ்வுகளுக்கான அவரது மனச்சோர்வடைந்த பதிலைப் பிரதிபலித்தது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பிற்குப் பின்னர் ஊக்கப்படுத்தப்பட்ட கம்யூனிச எதிர்ப்பு, 'வரலாற்றின் முடிவு' வெற்றிவாதத்தை எதிரொலித்து, 'யதார்த்தத்தில் இருக்கும் சோசலிசத்தில்” (அதாவது ஸ்ராலினிச அரசுகள்) இருக்கும் சர்வாதிகார வார்ப்புக்கு' 'ஸ்ராலின் மட்டும் அல்ல, மார்க்ஸ் மற்றும் லெனினுமே குற்றவாளிகள்' என்று வலியுறுத்தினார். [10]
சோவியத் ஒன்றியத்திற்குள் எதிர்-புரட்சிகர ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்களுக்கு, மார்க்ஸ் மற்றும் லெனினைப் பொறுப்பாக்குவதற்கான இந்த கம்யூனிச எதிர்ப்பு முயற்சியானது ஃபிரையரின் வலதுசாரி அரசியலை ஊக்குவிப்பதோடு சேர்ந்து கொண்டது. 'மார்க்சிஸ்டுகள் தாங்கள் நவீனமானவர்கள் என்ற அற்பத்தனமான உறுதியில் இருந்து விடுபட வேண்டும், பிரபலமான வர்க்கங்களைக் கையாள்வதில் பணிவு மனப்பான்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் பின்நவீனத்துவத்தில் குறைந்த அற்பசுயதிருப்தி மற்றும் குறைவான உறுதிகொண்டு முற்போக்கான பின்நவீனத்துவத்தினராக வேண்டும்' என்று அவர் கோரினார்.
ஃபிரையர் வர்க்க ஒத்துழைப்பு அரசியலை முன்பு இருந்ததை விட வெளிப்படையாகவும் மூர்க்கமாகவும் ஆதரித்தார். 1992 இல், எல் சல்வடோரின் 12 வருட உள்நாட்டுப் போர் பாரபுண்டோ மார்டி தேசிய விடுதலை முன்னணி (Farabundo Marti National Liberation Front -FMLN) கெரில்லா இயக்கம் தன்னை ஆளும் வலதுசாரி ARENA கட்சிக்கு ஸ்தாபன எதிர்ப்புக் கட்சியாக மாற்றிக் கொண்டதுடன் முடிவிற்கு வந்தது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று 'காணாமல் போகச்செய்த' வாஷிங்டனால் நிதியுதவி மற்றும் ஆயுதம் ஏந்திய சல்வடோர் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கான பொது மன்னிப்பை இந்த சமாதான உடன்படிக்கை உள்ளடக்கியிருந்தது. ஃபிரையர் இந்த நடவடிக்கைகளை ஆதரித்தார்: 'அனைத்து சமூக வர்க்கங்களின் நலனுக்காகவும், சமூகத்தின் உயிர்வாழ்வு, அந்த வர்க்கங்களில் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை திணிக்கும் வரலாற்று தருணங்கள் உள்ளன.[…] ஒரு புதிய ஜனநாயக செயல்பாட்டில், வர்க்கங்களுக்கு இடையேயான உடன்பாடுகளுக்கான இடைவெளியை படிப்படியாக விரிவுபடுத்துவதும், படிப்படியாக வேறுபட்டவர்களிடையே ஒரு உரையாடலை ஒருங்கிணைப்பதும் சாத்தியமாகும் என்பதை அறியலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தீவிர நிலைப்பாடுகளை படிப்படியாக ஆழப்படுத்துவதும் குறுங்குழுவாத நிலைப்பாடுகளை தாண்டிவருவதுமாகும்'. [12]
சிலி மக்கள் முன்னணியையும், 1973 ஆட்சிக் கவிழ்ப்பையும் பிரதிபலிக்கும் வகையில், வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினருக்கு போதிய சலுகைகள் வழங்கப்படவில்லை என வலியுறுத்தி, ஃபிரையர் சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்தை வலதுபுறத்தில் இருந்து விமர்சித்தார். 'கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியினரின் இடது பக்கம் நிற்கும் முற்போக்கு சக்திகளுக்கான சரியான பாதை, கொள்கையின் மீதான சலுகையின் நெறிமுறை வரம்புகளுக்குள் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக நகர்வதாகும்' என்று அவர் எழுதினார். [13]
எவ்வாறாயினும், இராணுவத்தால் கையேற்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருந்ததாக ஃபிரையர் பின்வருமாறு முடித்தார்: “சிலியில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு, இடதுசாரிகள் செய்த தவறுகளைச் செய்யாவிட்டாலும் கூட வந்திருக்கும். தவறுகள் குறைவாக இருந்தால், ஆட்சி கவிழ்ப்பு விரைவில் வந்திருக்கும். இறுதிப் பகுப்பாய்வில், ஆட்சிக் கவிழ்ப்புக்கான காரணம், இடதுசாரிகள் செய்த தவறுகளை விடச் செய்த சரியான செயல்களில்தான் அதிகம் இருந்தது.” [14]
இது அரசியல் திவால் நிலையின் பிரகடனம். 1973 பேரழிவிற்கான சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் MIR ஆகியவற்றின் பொறுப்பை மூடிமறைக்கும் சதித்திட்டத்தின் மீதான ஃபிரையரின் 'ஆழ்ந்த' தத்துவ பிரதிபலிப்புகளாகும். சிலியில் ஒரு புரட்சிகர சூழ்நிலை உருவானது, ஆனால் இங்கு இல்லாதது என்னவெனில், அதன் வளர்ச்சியை ஃபிரையர் எப்போதும் எதிர்த்த அரசியல் தலைமைதான். அதாவது சோசலிச கொள்கைளுக்கான ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்ட போராடும் ஒரு புரட்சிகர கட்சி இல்லாமல் போனதாகும்.
முடிவுரை
20 ஆம் நூற்றாண்டில் சில அறிவார்ந்த மனிதர்கள் உள்ளனர். அவர்களின் அரசியல் தீவிரத்திற்கான நற்பெயர், பௌலோ ஃபிரையரை விட அவர்களின் வரலாற்றைப் பற்றிய ஒரு புறநிலை மதிப்பாய்வால் மேலும் நேரடியாகப் பொய்யாக்குகிறது.
இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாதத்தின் அரசியல் தாக்கத்தை பிரதிபலிக்கிறது. பிராங்ஃபேர்ட் பள்ளியின் மார்க்சிச எதிர்ப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் கல்வித்துறையும் இருந்தது. சமீபத்திய தசாப்தங்களில், ஃபிரையரின் மாணவர்களான பீட்டர் மெக்லாரன் மற்றும் ஹென்றி ஜிரோக்ஸ் போன்ற நபர்கள் முன்னணிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் குட்டி முதலாளித்துவ 'தீவிரவாத' கற்பித்தல்முறை புரட்சிகரமாகவும் மார்க்சிசமாகவும் கூட காட்டப்பட்டுள்ளது.
இது, அதன் வரம்பை இப்போது அடைந்துள்ளது. தனது கல்வி எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஃபிரையரின் அரசியல் முன்னோக்கு ஒரு மோசமான தோல்வியை நிரூபித்துள்ளது. அதே நேரத்தில், சர்வதேச முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடி, கல்வியாளர்கள் மற்றும் பள்ளித் தொழிலாளர்களின் பரந்த அடுக்குகளை அரசியல்மயமாக்கியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு சற்று முன்பு, பிரேசில், அமெரிக்கா, பிரான்ஸ், சிலி, ஆர்ஜென்டினா, அல்ஜீரியா மற்றும் துனிசியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஆசிரியர்களின் பெரிய அளவிலான வேலைநிறுத்தங்கள் காணப்பட்டன. இப்போது, எண்ணற்ற தேசிய அரசாங்கங்கள் பெரு வணிகங்களின் சார்பாக பொருளாதாரத்தை மீண்டும் திறக்கவும் மற்றும் பள்ளிக்கு திரும்பவும் வைக்க முனைகையில், ஆசிரியர்களும் பள்ளி ஊழியர்களும் ஆளும் உயரடுக்கின் கொலைகார 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயத்திற்கு எதிரான போராட்டத்தின் முன் வரிசையில் உள்ளனர்.
அடுத்த காலகட்டத்தில் ஒரு பரந்த அளவிலான ஆசிரியர்கள் மற்றும் கல்வித் தொழிலாளர்கள் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள். இதனுடன் சேர்ந்து, ஒரு உண்மையான சோசலிச கல்வியியல் முன்னோக்கு மீண்டும் தோன்றுவதை எதிர்பார்க்கலாம். இதில் பிராங்க்ஃபேர்ட் பள்ளி மற்றும் போலி-இடது அரசியலின் அழுக்குகளை முழுமையாக சுத்தம் செய்தல் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி அரைப்பகுதியில் ஸ்ராலினிசத்தால் பெரும்பாலும் புதைக்கப்பட்ட கல்வி தத்துவம் மற்றும் நடைமுறையுடனான செவ்வியல் மார்க்சிச ஈடுபாட்டின் செழுமையான வரலாற்றை மீண்டும் ஒருங்கிணைத்தல் ஆகியவை அடங்கும்.
குறிப்புகள்
[1] Andrew J. Kirkendall, Paulo Freire and the Cold War Politics of Literacy (University of North Carolina Press, 2010), p. 15.
[2] Paulo Freire, Letters to Cristina: Reflections on My Life and Work (Routledge, 1996), p. 82.
[3] Cynthia Brown, “Literacy in 30 Hours: Paulo Freire’s Process in Northeast Brazil,” in Ira Shor (ed.), Freire for the Classroom: A Sourcebook for Liberatory Teaching (Boynton/Cook, 1987), p. 226.
[4] This quote is a paraphrase of Vieira Pinto, a leading IESB intellectual and major influence on Freire; in Vanilda Paiva, National Developmentalismo:itsinfluence on Paulo Freire (Instituto de Estudos da Cultura e Educação Continuada, 2016), location 2610 in the ebook edition.
[5] Kirkendall, Paulo Freire and the Cold War Politics of Literacy, p. 64.
[6] Ibid., p. 71.
[7] Paulo Freire, Pedagogy of the Oppressed (Penguin, 1996), p. 53.
[8] Ibid., p. 129.
[9] Ibid., p. 132.
[10] Paulo Freire, Pedagogy of Hope: Reliving Pedagogy of the Oppressed (Bloomsbury, 2014), p. 86.
[11] Ibid., p. 86.
[12] Ibid., pp. 33, 185.
[13] Ibid., p. 30.
[14] Ibid., pp. 177-178.