பணவீக்கம் வாழ்க்கைத் தரங்களைக் குறைத்து மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்களை விளிம்பிற்குத் தள்ளுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புளூம்பேர்க் எகனாமிக்ஸ் (Bloomberg Economics) வியாழன் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, சராசரி அமெரிக்கக் குடும்பத்தைக் கடந்த ஆண்டைப் போலவே பொருட்களையும் சேவைகளையும் வாங்க ஆண்டுக்கு 5,200 டாலர்கள் அதிகமாகச் செலவழிக்கும்படி நிர்ப்பந்திக்கும். அமெரிக்க மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் எதிர்பாராத 500 டாலர்கள் செலவை தாங்க முடியாத சூழ்நிலையில், இது சராசரியாக ஒரு மாதத்திற்கு 433 டாலர்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பைகளில் இருந்து கொள்ளையடிக்கப்படுகிறது.

மார்ச் 21, 2022 அன்று கலிஃபோர்னியாவின் மென்லோ பூங்காவில் உள்ள எரிவாயு நிலையத்தில் பெட்ரோல் விலை பலகை காட்டப்பட்டுள்ளது. (AP புகைப்படம்/ஜெஃப் சியு) [AP Photo/Jeff Chiu]

இந்த திகைப்பூட்டும் உண்மை, பணவீக்க விகிதத்தின் உயர்வில் மனித செலவை இழப்பை நிரூபிக்கிறது, இது டிசம்பரில் 40 ஆண்டுகளில் 7.9 சதவீதத்தை எட்டியது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் அதிகரிப்பு விகிதம் ஜனவரியில் 7.5 சதவீதமாகவும், பிப்ரவரியில் 6.4 சதவீதமாகவும் சரிந்தது, ஆனால் இது பெடரல் ரிசர்வ் மற்றும் பைடென் நிர்வாகத்தின் முன்னறிவிப்பை விட இன்னும் அதிகமாக உள்ளது.

வியாழனன்று மத்திய வர்த்தகத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, முக்கிய பணவீக்க விகிதம், உணவு மற்றும் எரிசக்தி விலைகளை கணக்கிடாமல், மாதத்திற்கு மாதம் அதிகமாக ஏற்ற இறக்கமாக உள்ளது. இது, ஜனவரியில் 6 சதவீதமாகவும், பிப்ரவரியில் 5.4 சதவீதமாகவும் இருந்தது. பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலின் விலையை தற்காலிகமாக கையாளும் பைடென் நிர்வாகத்தின் முயற்சிகள் எதுவாக இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தில் குறைப்பு தொடரும் என்பதே இதன் பொருளாகும்.

பில்லியனர் மைக்கேல் புளூம்பேர்க்கின் பதிப்பகப் பேரரசின் ஒரு பகுதியான புளூம்பேர்க் எகனாமிக்ஸ், தொழிலாளர்கள் மீதான பணவீக்க 'வரி' மூலம் முதலாளித்துவ வேலைகொள்வோருக்கான நன்மைகளை சுட்டிக்காட்டியது. 'சேமிப்பு விரைவாகக் குறைவதால், ஒதுங்கி இருப்பவர்கள் தொழிலாளர் படையில் சேருவதற்கான அவசரத்தை அதிகரிக்கும். மேலும் தொழிலாளர் அளிப்பில் அதிகரிப்பு, ஊதிய வளர்ச்சியைக் குறைக்கும்' என்று அறிக்கையின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த அமெரிக்க முதலாளித்துவ வர்க்கமும் 'தொழிலாளர் பற்றாக்குறை', அதாவது, குறிப்பாக தொடக்க நிலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வறுமைக் கூலியில் வேலைகளை ஏற்க மறுப்பது போன்ற பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது. சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் பிற குறைந்த ஊதிய முதலாளிகள் போதுமான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை என்று தொடர்ந்து தெரிவிக்கின்றனர்.

நியூ யோர்க் டைம்ஸ் வியாழன் அன்று அதன் பொருளாதாரப் பக்கங்களில், 'உயர்ந்த ஊதியங்கள் அமெரிக்க பணவீக்கத்தை குறைப்பதில் சிக்கலாக்கும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் இந்த பிரச்சனையை எடுத்துரைத்தது. தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருவது —பொது சுகாதாரக் கண்ணோட்டத்தில் முற்றிலும் தேவையற்றது— நுகர்வோர் செலவினங்களை பொருட்களிலிருந்து சேவைகளுக்கு மாற்ற உதவும் என்று பொருளாதார வல்லுனர்களின் நம்பிக்கையை கட்டுரை மேற்கோள் காட்டியது, 'மாற்றம் விநியோகச் சங்கிலிகளை விடுவித்து மிதமான பணவீக்கத்திற்கு உதவும்'.

கட்டுரை தொடர்கிறது: “விரைவான ஊதிய வளர்ச்சி அந்தக் கதையை மேலும் சிக்கலாக்கும். பல முதலாளிகள் தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க போராடுவதைப் போலவே சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, இது அவர்கள் ஊதியத்தை உயர்த்துவதைத் தொடரும். அது தொழிலாளர்களுக்கு சாதகமாக இருந்தாலும், நிறுவனங்கள் தங்கள் உழைப்புச் செலவுகளை ஈடுகட்ட முயல்கையில், மேலும் அவை பொருட்களை மிதப்படுத்தத் தொடங்கும் போதும் சேவைகளுக்கான விலை உயர்வை விரைவுபடுத்துகிறதால், அது ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் விறுவிறுப்பாக வைத்திருக்கும்.

இங்குள்ள மொழி குறிப்பிடத்தக்கது. ஊதிய வளர்ச்சி என்பது 'தொழிலாளர்களுக்கு சாதகமானது' என்று டைம்ஸ் ஒப்புக்கொள்கிறது - அவர்கள் அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பகுதியை உள்ளடக்கியவர்கள். ஆனால் அது எதிர்மறையான பக்கத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறது, அதாவது முதலாளிகள், குறிப்பாக பெரு நிறுவனங்கள் மற்றும் அவர்களின் பணக்கார பங்குதாரர்களின் நலன்கள் பற்றி கவலைப்படுகின்றது.

அமசன் மற்றும் பிற மாபெரும் உழைப்பைச் சுரண்டுபவர்கள் வழங்கும் மோசமான ஊதியம் மட்டுமே என்றாலும், ஊதியங்கள் நிரந்தரமாக உயர் மட்டத்தில் மீட்டமைக்கப்படலாம் என்ற பொருளாதார வல்லுனர்களின் கவலைகளை மேற்கோள் காட்டி கட்டுரை இவ்வகையில் தொடர்கிறது. 'செப்டம்பரில் மத்திய அரசாங்கத்தின் மேம்பட்ட வேலையின்மை நலன்கள் முடிவடையும் போது தொழிலாளர் நெருக்கடி குறையும் என்று நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஆனால் விருப்பமுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், திடீர் வெள்ளம்போல் பெருகவில்லை” என்று குறிப்பிடும் குறைந்த ஊதியத்தில் வேலை வாங்கும் ஒரு முதலாளியின் அவதானிப்பை அது தெரிவிக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வேலையற்றோருக்கான கூட்டாட்சி ஆதரவைக் குறைப்பது உட்பட, குறைந்த ஊதியம் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் ஆபத்துகள் இருந்தபோதிலும், மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப கட்டாயப்படுத்த பைடென் நிர்வாகத்தின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் இன்னும் எதிர்க்கிறார்கள்.

அந்த எதிர்ப்பு 2021 இல் உருவாகி இந்த ஆண்டின் முதல் மாதங்களில் தொடரும் வேலைநிறுத்த நடவடிக்கையின் பெருகிவரும் அலைகளில் மிகவும் சக்தி வாய்ந்ததாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்த வர்க்க இயக்கத்தின் ஒரு முக்கிய அம்சம், கார்ப்பரேட் சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிரான தொழிலாளர்களின் தொடர்ச்சியான கிளர்ச்சி ஆகும், அந்த தொழிற்சங்கங்கள் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கும், குறைந்த ஊதியச் சுரண்டல் என்ற மிருகத்தனமான நிபந்தனைகளை தொழிலாளர் மீது பெருநிறுவனங்கள் சுமத்துவதற்கும் பைடென் நிர்வாகத்தை நம்பியிருந்தன.

இந்தச் சூழலில்தான் அமெரிக்க மூலோபாய பெட்ரோலியம் இருப்பில் இருந்து கணிசமான அளவு எண்ணெயை வெளியிடுவதற்கான நிர்வாக உத்தரவை ஜனாதிபதி பைடென் வியாழன் அன்று அறிவித்தார். ஒரு நாளைக்கு சுமார் 1 மில்லியன் பீப்பாய்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு சந்தைக்கு கொண்டுவரப்படும், மொத்தம் 180 மில்லியன் பீப்பாய்கள், மொத்த இருப்பில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆகும். இந்த அறிவிப்பு எண்ணெய் விலையில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, ஆனால் விளைவு தற்காலிகமாக மட்டுமே இருக்கும், ஏனெனில் 1 மில்லியன் பீப்பாய்கள் அமெரிக்க தினசரி நுகர்வில் 5 சதவீதத்திற்கும் குறைவானதாகும்.

அமெரிக்க நுகர்வோருக்கான நிலையத்தில் எரிவாயுவின் விலையை குறைப்பதே தனது நடவடிக்கையின் நோக்கம் என ஜனாதிபதி கூறினார், மேலும் ஊடகங்கள் பொதுவாக இந்த நடவடிக்கையின் நேரம் மற்றும் காலத்தின் வெளிப்படையான அரசியல் உந்துதலின் மீது கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க இடைக்கால காங்கிரஸ் தேர்தல்களுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன, அங்கு பைடெனின் ஜனநாயகக் கட்சி வாக்கெடுப்பில் பின்தங்கியுள்ளது, பணவீக்கம் மற்றும் கட்டுக்கடங்கா வாழ்க்கைச் செலவு ஆகியவை முக்கிய பிரச்சினையாக வாக்காளர்களால் குறிப்பிடப்படுகின்றன.

இரண்டு வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையேயான தேர்வை மட்டுமே வாக்காளர்களுக்கு வழங்கும் அமெரிக்க இரு கட்சி முறையின் கட்டுப்பாடுகளுக்குள், குடியரசுக் கட்சி ஆதாயங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தின் மீதான மக்கள் விரோதம் மற்றும் ஜனவரி 6, 2021 அன்று அவர் சதி செய்ய முயற்சித்ததற்கு எதிரான வெறுப்பு இருந்தபோதிலும், இது குடியரசுக் கட்சியினரிடம் காங்கிரஸின் கட்டுப்பாட்டை இழக்கக்கூடும், ஜனநாயகக் கட்சியின் திவால்நிலையின் ஒரு நடவடிக்கையாகும்.

பைடென், பெட்ரோலின் விலை உயர்வை 'புட்டினின் விலை உயர்வு' என்று கூறி, ரஷ்யாவிற்கு எதிரான தனது போர்க் கொள்கையை பறை சாற்ற எண்ணெய் அறிவிப்பைப் பயன்படுத்தினார். பணவீக்கத்திற்கு தொற்றுநோய் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகிய இரண்டு காரணங்கள் இருப்பதாக அவர் கூறினார். வோல் ஸ்ட்ரீட் மற்றும் கார்ப்பரேட் அமெரிக்காவை பிணை எடுப்பதற்காக ஃபெடரல் ரிசர்வ் மற்றும் அமெரிக்க கருவூலத்தால் நிதி அமைப்பிற்குள் செலுத்தப்பட்ட டிரில்லியன் கணக்கான டாலர்கள், மார்ச் 2020 இல் தொடங்கி இன்றுவரை தொடர்வதற்கான விலைகள் அதிகரிப்பின் பின்னால் உள்ள முக்கிய உந்து சக்தியைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

அதற்குப் பதிலாக, அவர் ஒரு சிறிய கார்ப்பரேட்-எதிர்ப்பு வாய்வீச்சில் ஈடுபட்டார், எண்ணெய் நிறுவனங்களை, அவை 'பெரும் இலாபத்தில் அமர்ந்துள்ளன' ஆனால் 'உங்கள் நாட்டின் நலனுக்காக' உற்பத்தியை அதிகரிக்க மறுக்கின்றன என விமர்சித்தார். இது இலாப நோக்கு அமைப்பிற்கான அவரது விசுவாசத்தை மீண்டும் வலியுறுத்துவதோடு இணைக்கப்பட்டது: 'நான் ஒரு முதலாளி. பெருநிறுவனங்கள் நல்ல இலாபம் ஈட்டுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.”

ஊடகங்களுக்கு அளித்த விளக்கத்தில், 'மூத்த நிர்வாக அதிகாரி' அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வீழ்ச்சியின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களை சேவைக்கு கொண்டு வர உறுதியளித்துள்ளன என்று கூறினார். அரசாங்க இருப்பில் இருந்து எண்ணெய் திறந்து விடப்பட்டதை 'கூடுதல் அமெரிக்க உற்பத்திக்கான போர்க்கால பாலம்' என்று அவர் விவரித்தார்.

உக்ரைன் போருடன் பெட்ரோல் நிலைய நெருக்கடியை இணைக்கும் முயற்சிக்கு ஒரு சந்தேகத்திற்கு இடமில்லாத மற்றும் அச்சுறுத்தும் அர்த்தம் உள்ளது. பைடென் அமெரிக்காவில் முதலாளித்துவ வர்க்கத்தால் நடத்தப்படும் தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவை பலிகடாவாகப் பயன்படுத்த முற்படுகிறார். 'தேசிய ஒற்றுமை' என்ற பெயரில் ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரத்தால் திணிக்கப்படும் தியாகங்கள், உக்ரேனில் நடக்கும் போருக்காக அமெரிக்க தொழிலாளர்கள் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என்ற பரிந்துரைகளுக்கு இது ஏற்கனவே வழிவகுத்துள்ளது.

உண்மை என்னவெனில், உக்ரேன் போரில் அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஆர்வம் இல்லை, இது ரஷ்யாவை உடைப்பதையும் அதை ஏகாதிபத்திய சக்திகளின் அரைக்காலனித்துவ இணைப்பாக மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட அமெரிக்க-நேட்டோவின் நீண்டகாலப் பிரச்சாரத்தால் அதை சுற்றி வளைத்ததற்கு ஒரு பிற்போக்குத்தனமான பதிலடியாக புட்டினால் தொடங்கப்பட்டது, தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை இரட்டிப்புத் தீவிரத்துடன் நடத்த வேண்டும், மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் எந்திரத்தின் நலன்களுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும்.