மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்
மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனத்தின் (MSRTC) 70,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நவம்பர் 4, 2021 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. நிர்வாகத்தினதும் நீதிமன்றங்களினதும் மிருகத்தனமான பழிவாங்கல்களை தொழிலாளர்கள் எதிர்க்கின்றனர். இது அவர்களின் தொழில்துறை நடவடிக்கை சட்டவிரோதமானது என பலமுறை அறிவித்துள்ளது. அவர்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் இருபதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் தங்கள் வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பான பணியிடங்களுக்கான போக்குவரத்து தொழிலாளர்களின் பேர்லின் நடவடிக்கைக் குழுவின் ஆதரவுக் கடிதத்தை நாங்கள் இங்கு வெளியிடுகிறோம், அவர்கள் தங்கள் இந்திய சக ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார்கள்.
*****
MSRTC இன் வேலைநிறுத்தம் செய்யும் அன்பான சக ஊழியர்களே,
பேர்லின் பேருந்து ஓட்டுநர்களான நாங்கள் உங்களின் வீரமிக்க மற்றும் கொள்கை ரீதியான வேலைநிறுத்தத்தை உலக சோசலிச வலைத் தளம்(WSWS) மற்றும் இலண்டன் பேருந்து ஓட்டுநர்களின் சாமானிய தொழிலாளர்க் குழு மூலம் அறிந்துகொண்டோம்.
நாங்கள் உங்கள் போராட்டத்திற்கு முழு மனதுடன் ஆதரவு தருகிறோம்.
உங்கள் சகாக்களிடையே டஜன் கணக்கானோரின் தற்கொலைகளால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். உங்களுக்கும் மற்றும் துயரமடைந்தவர்களுக்கும் எங்கள் அனுதாபத்தையும் ஐக்கியத்தையும் தெரிவிக்க விரும்புகிறோம். கோவிட்-19 நோயால் இறந்த உங்கள் 350 சகாக்களைப் போலவே, அவர்களும் போக்குவரத்து நிறுவனம் மற்றும் அரசாங்கத்தின் இரக்கமற்ற இலாப வெறிக்கு பலியாகினர்.
அதே சமயம், உங்கள் சக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோருகிறோம்!
உங்களுக்கு எதிரான பம்பாய் உயர்நீதிமன்றத் தீர்ப்பு தெளிவான வர்க்க அடிப்படையிலான தீர்ப்பாகும்.
கடந்த நவம்பரில் நீண்ட தூர போக்குவரத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவதற்கும், மோசமான வேலை நிலைமைகள் மற்றும் ஊதியங்களுக்கு எதிராகவும் நீங்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானது.
உங்கள் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்து வலுக்கட்டாயமாக முடிவுக்கு கொண்டுவர யாருக்கும் உரிமை இல்லை! இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் சிறந்த மற்றும் பாதுகாப்பான வாழ்க்கைக்காக வேலைநிறுத்தம் செய்ய உரிமை உண்டு.
ஆனால் நீதிமன்றங்கள் தனியார்மயமாக்கலால் இலாபம் ஈட்டுபவர்கள், வங்கிகள், பில்லியனர்கள் மற்றும் அனைத்து ஸ்தாபகக் கட்சிகளிடமிருந்தும் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அரசியல்வாதிகளின் நலன்களை தங்குதடையற்று பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
ஐரோப்பிய பேருந்து ஓட்டுநர்களான நாங்கள் பொதுத்துறையில் தனியார்மயமாக்கலின் பேரழிவு விளைவுகளைப் பற்றி உங்களுக்கு கூடுதலாக சொல்ல முடியும்.
20 ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவநாடுகளில் உள்ளூர் மற்றும் நீண்ட தூர போக்குவரத்தை தனியார்மயமாக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்தது. அப்போதிருந்து, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஒப்பீட்டளவில் நல்ல ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை வழங்கிக்கொண்டிருந்த போக்குவரத்து நிறுவனங்கள், சந்தையில் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டு, ஒருவருக்கொருவர் செலவுகளைக் குறைக்க முயற்சிக்கின்றன.
குறைந்த பணியாளர்களைக் கொண்ட போக்குவரத்து நிறுவனம் கேள்விப்பத்திரங்களை வென்று எடுத்து சில ஆண்டுகளுக்கு சந்தைப் பங்கைப் பெறுகிறது. இது உள்ளூர் மற்றும் நீண்ட தூர பொதுப் போக்குவரத்தை மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்ற பொதுச் சேவைகளின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கிறது.
ஐரோப்பாவின் கோடீஸ்வரர்கள் நமது செலவில் மேலும் இலாபமடைந்தவர்களாகிவிட்டனர்.
பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு, பேர்லின் மாநில அரசாங்கம் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் பேர்லின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தில் (BVG) அனைத்து ஊழியர்களின் ஊதியத்தையும் 16 சதவிகிதம் குறைத்தது. அதே நேரத்தில், பல மேலதிக சலுகைகள் குறைக்கப்பட்டன. சுரண்டலின் அளவு கடுமையாக உக்கிரமடைந்தது.
புதிதாக பணியமர்த்தப்பட்ட ஓட்டுநர்களின் முழு தலைமுறையும் அவர்களின் முன்னோடிகளை விட 30 சதவீதம் குறைவான ஊதியம் பெறுகிறது. சுமார் 2,000€ மாதாந்திர ஊதியத்துடன், 1,000€ மற்றும் அதற்கும் அதிகமான பேர்லினில் வாடகை செலுத்த வேண்டும், அதே போல் குடும்பங்களுக்கு தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவும் உள்ளது. அதே நேரத்தில், 56 மணிநேரம் வரை நீடிக்கும் 6-நாள் பணிமுறைகளில் நாங்கள் அடிமையாக இருக்கிறோம்.
வேலைநிறுத்தங்களில் வென்ற ஊதிய உயர்வுகள் வருடாந்திர பணவீக்க விகிதத்தை விட அதிகமானதாக இல்லை. தொழிற்சங்கங்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நிர்வாகத்துடன் ஊதிய ஒப்பந்தங்களைச் செய்கின்றன.
இங்குள்ள தொழிற்சங்கங்களின் கொள்கை உங்கள் நாட்டிலும் உலக அளவிலும் உள்ளது போலவே இருக்கின்றது. அவர்கள் எங்கள் சந்தாத் தொகையை வசூலிக்கிறார்கள், ஆனால் எங்களுக்கு எதிராக நிறுவனத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். நமது தொழிலாளர் போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள்.
இந்த தனிமைப்படுத்தலால் தான் உங்கள் வீரமிக்க வேலைநிறுத்தம் இவ்வளவு ஆபத்தில் உள்ளது. உலக சோசலிச வலைத் தளம் எழுதியது போல், உங்கள் போராட்டம் தொழிற்சங்க கூட்டமைப்புகளாலும் மற்றும் 'இடது' கட்சிகளாலும் 'வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது'. இவர்கள் உங்களுக்கு ஆதரவாக வேறு எந்த தொழிலாளர்களையும் அணிதிரட்ட ஒன்றும் செய்யவில்லை.
ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவிலும் நிலைமை இவ்வாறே உள்ளது. தொழிற்சங்கங்கள் எப்போதுமே தொழிலாளர் நடவடிக்கையை முடிந்தவரை சிறியதாக வைத்திருக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன. அவர்களது மிகப்பெரிய அச்சம் என்னவென்றால், தொழிலாளர்கள் வெவ்வேறு நிறுவனங்கள் மற்றும் பிராந்திய எல்லைகளைத் தாண்டி ஐக்கியப்படலாம் என்பதாகும்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போதுள்ள தொற்றுநோயின்போது, அவர்கள் நிர்வாகத்தின் பக்கம் உறுதியாக உள்ளதுடன் மற்றும் பெருநிறுவனங்கள் மற்றும் மேற்பார்வை வாரியங்களின் இலாப நலன்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கின்றன.
பொறுப்பற்ற தொற்றுநோய்க் கொள்கைகள் காரணமாக பேர்லினில் எங்கள் சக ஊழியர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரையாவது இழந்துவிட்டோம். மேலும் நாம் அனைவரும் எங்கள் மற்றும் எங்கள் குடும்பங்களின் ஆரோக்கியத்தைப் பணயம் வைத்துள்ளோம். ஆனால், தொற்றுநோய் அபாயத்திலிருந்து எங்களைப் பாதுகாக்க பாதுகாப்பான பணியிடங்களுக்கான எங்கள் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன. அதனால்தான் நாங்கள் பாதுகாப்பான பணியிடங்களுக்கான நடவடிக்கைக் குழுவை உருவாக்கி, மோசமான மற்றும் பாதுகாப்பற்ற பணிச்சூழலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அவ்வாறு செய்வதன் மூலம், நமது ஊதியத்தை தியாகம் செய்ய விரும்பும் தொழிற்சங்கங்களின் முதலாளித்துவ சார்பு வேலைத்திட்டத்தையும் மற்றும் பேர்லின் மாநில அரசாங்கத்துடன் சேர்ந்து மேலும் தனியார்மயமாக்கலை நடைமுறைப்படுத்தப்படுவதையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
'எல்லாமே போதும்!'
இரக்கமற்ற இலாபவெறியின் விளைவுகளான பட்டினிச் சம்பளம், மோசமான வேலை நிலைமைகள் மற்றும் தொற்றுநோய் அபாயத்திற்கு எதிராகவும் மற்றும் நிர்வாகம், தொழிற்சங்கங்கள், அரசாங்கங்கள் மற்றும் போலி-இடதுகளின் ஒருங்கிணைந்த சக்திகளுக்கு எதிராக தொழிலாளர்களாகிய நாம் நமது வாழ்க்கையையும், நம் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும்.
தொழிற்சங்கங்கள், ஸ்ராலினிசக் கட்சிகள் மற்றும் நம்மைப் பிரித்து ஆதிக்கம் செலுத்த விரும்பும் போலி-இடது குழுக்கள் மீது போரை அறிவிக்க வேண்டிய நேரம் இது. இதற்கு புதிய போராட்ட அமைப்புகள் தேவை. எங்களைப் போலவே, மகாராஷ்டிராவில் உள்ள உங்களுக்கும் உங்கள் போராட்டத்தை தெரியப்படுத்தவும், வெகுஜன எதிர்ப்புகள் நடைபெற்று வரும் பாக்கிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இலங்கை உட்பட இந்திய துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களிடையே ஆதரவைப் பெறவும் சாமானிய தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்கள் தேவை. உங்கள் வேலைநிறுத்தத்தை பற்றித் தெரியப்படுத்தவும், ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவில் உள்ள பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டவும் நாங்கள் எம்மிடமுள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம்.
சகோதர வாழ்த்துக்களுடன்!
மேலும் படிக்க
- பம்பாய் உயர்நீதிமன்றம் அச்சுறுத்தும் தீர்ப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து மகாராஷ்டிர பேருந்து தொழிலாளர்களின் ஐந்து மாத வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பெரும் ஆபத்து
- மோடியின் நாசகரமான முதலீட்டாளர் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிராக இலட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் 2 நாள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்
- ஆறு வார கால மகாராஷ்டிர பொது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களின் நாசவேலைகளால் ஆபத்தில் உள்ளது