இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்த வாரம் கண்டி மருத்துவமனையின் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொண்டு, மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களின் அச்சந்தரும் பற்றாக்குறை குறித்து தனது கவலைகளைத் தெரிவித்தார். அவரது கருத்துக்கள் கீழே வெளியிடப்பட்டுள்ளன.
கல்லீரல் செயலிழப்பால் வாய்வழியாக ரத்தம் வெளியேறி அவதிப்படும் நோயாளிகளின் வாயில் கேமராக்களை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட இறுதிக் கிளிப் தீர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. இது போன்று பல நோயாளிகள் குறிப்பிடத்தக்க வகையில் அதிக ஆபத்தில் உள்ளனர்.
இந்தச் செயல்முறைகளுக்கு நாம் பயன்படுத்தும் நான்கு எண்டோஸ்கோப்புகளில் (உள்-உடல் ஆய்வுக் கருவி) இரண்டு உடைந்தும் விட்டது. இந்த சிக்கல்களைத் தவிர, இரைப்பை குடல் உள் இரத்தப்போக்கு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மருந்தான க்ளூ இன் ஒரு குப்பி கூட மீதம் இல்லை.
எனவே, இந்த நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற, அவர்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் அல்லது [நாங்கள்] மேற்கூறிய மருந்துகளை வெளியில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். ஆனால் இவை 80 டொலர் அளவு மிகவும் விலை உயர்ந்தவை. குறைந்த எண்ணிக்கையிலான நபர்களால் மட்டுமே இதற்கு செலவிட முடியும்.
இதேபோல், IV வழியாக நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து அல்புமின் குப்பிகளும் முழுமையாகத் தீர்ந்துவிட்டன. உயிர்வாழப் பல குப்பிகள் தேவைப்படும் போது, இலங்கையர்கள் ஒரு குப்பிக்கு 50 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியிருப்பது தாங்க முடியாதப் பொருளாதாரச் சுமையாகும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையின் காரணமாக, நோயாளிக்கு இரத்தப் புரதங்களை வழங்கும் FFP [Fresh Frozen Plasma] போன்ற மிகவும் மலிவு விலை மாற்று வழிகளைப் பயன்படுத்துவதற்கு பல இலங்கையர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் செயல்முறை கடினமானது. இது மருத்துவ ஊழியர்களால் செயல்படுத்தப்பட வேண்டி இருப்பதுடன் ஆபத்தான சிகிச்சை முறையாக இருப்பதால் நோயாளிகளின் உயிரை ஆபத்துக்குள்ளாக்குகிறது.
ஏழைகள் அழியும்போது பணக்காரர்களோ பிழைத்துக் கொள்வார்கள் என்பது தெளிவானதுதான். முறையான மருத்துவ உபகரணங்கள் இல்லாததால், நோயாளிகள் உதவியற்றநிலையில்ஒருவர் பின் ஒருவராக இறப்பதைப்பார்க்க ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மருத்துவர்களின் 140 டொலர் மேலதிக கொடுப்பனவு அதிகாரிகளால் பறிக்கப்பட்டுள்ளது.
ஒரு வைத்தியராக, நான் காலை 6.30 மணிக்கு மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து மாலை 6.30 மணிக்கு வீட்டிற்குச் செல்லும் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். நாட்டில் நிலவி வரும் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக, பல நாட்கள் நான்கு, ஐந்து கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. பெட்ரோல் விலை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதால் இங்குள்ள பல மருத்துவ ஊழியர்களால் அதை வாங்க முடியாத நிலை உள்ளது.
இந்தச் சிக்கலான சர்ச்சைகள் விரைவில் தீர்க்கப்படுவது போல் தெரியவில்லை. இப்பிரச்சினைகள் தவிர, மேலும் மேலும் மருத்துவப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவதும், பணிச்சுமை அதிகரிப்பு மற்றும் மருத்துவ ஊழியர்களின் தேவை மேலும் அதிகரித்து, இறுதியில் இலங்கையில் மருத்துவ செயல்முறை வீழ்ச்சியடைவதை விளைவாக்கும்.
இந்தச் சிக்கல்கள் அனைத்தையும் அறிந்திருந்தும், GMOA [அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்] மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் பொறுப்பற்றுத்தங்கள் சொந்த உறுப்பினர்களுக்குப் புறமுதுகு காட்டுகின்றன.
இப்பிரச்சினைகளைத் தீர்க்க, உழைக்கும் மக்கள் தனியார் உற்பத்தி நிறுவனங்களின் கட்டுப்பாட்டை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு, அதன் மூலம் கிடைக்கும் பில்லியன் கணக்கான டொலர்களை சுகாதாரத் துறைக்கு புத்துயிர் அளிக்க பயன்படுத்துவதைத் தவிர வேறு எந்த மாற்றையும் நான் காணவில்லை.
மேலும் படிக்க
- இலங்கை சுகாதார ஊழியர்களின் போராட்டத்திற்கு முன்னோக்கிய பாதை
- பாரிய அரசாங்க எதிர்ப்பு எழுச்சியின் மத்தியில் இலங்கையின் தொழிற்சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?
- இலங்கை சுகாதார ஊழியர்கள் போராட்டத்துக்கு வருவதை தாம் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக தொழிற்சங்க தலைவர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளனர்