மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஆஸ்திரிய மருத்துவர் லிசா-மரியா கெல்லெர்மைர் (Lisa-Maria Kellermayr) கடந்த வெள்ளிக்கிழமை அவரது உள்ளூர் பணியின் போது இறந்து கிடந்தார். தடுப்பூசிக்கு தீவிரவாத வலதுசாரி எதிர்ப்பாளர்களின் (anti-vaxxers) பெரும் அச்சுறுத்தலுக்கு பின்னர், அவர் வெளிப்படையாக தற்கொலை செய்து கொண்டார்.
ஜூன் மாத இறுதியில், இந்த குடும்ப மருத்துவர் சீவல்செனில் அவரது மருத்துவ பணியை முடித்துக் கொள்ள போவதாக அறிவித்தார். ஏழு மாதங்களுக்கும் மேலாக அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. பொலிஸூம் அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், டாக்டர் கெல்லெர்மைர் தானே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது.
அவர் தனது பாதுகாப்புக்காக ஒரு பாதுகாப்பு சேவையை நியமித்தார், இது அலுவலக நேரத்தில் அவரை பாதுகாக்க ஒரு பணியாளரை நியமித்திருந்தது. நடைமுறையில் ஒரு பீதியூட்டும் அறை அமைக்கப்பட்டு, பல வீடியோ கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்தன. அதற்காக அவர் சுமார் 100,000 யூரோக்களை செலவிட்டிருந்தார்.
ஜூலை நடுப்பகுதியில், அவர் இனி தன்னால் மிகப்பெரிய செலவுகளை தாங்க முடியாது என்றும், தனது ஊழியர்கள் இனி ‘சாதாரண சூழ்நிலையில்’ வேலை செய்ய முடியாது என்றும் அறிவித்தார். எனவே, அவர் அந்த நேரத்தில் தனது சேவையை நிறுத்திக் கொண்டார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, அவர் டெர் ஸ்பீகலுக்கு ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் மருத்துவ சேவை தனக்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும், அந்த இழப்பு அவரை எவ்வளவு காயப்படுத்தியது என்பதையும் விளக்கினார்.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்தே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர் கெல்லெர்மைர் சிகிச்சை அளித்து வந்தார். அவர் எப்போதும் சமீபத்திய விஞ்ஞான சான்றுகளை நம்பியிருந்தார், அதாவது, பரந்த அளவில் விரைவாக தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளவும், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அவர் வாதிட்டார். சமூக ஊடகங்களில், நோய்தொற்றின் அபாயங்கள் குறித்து அவர் எச்சரித்தார்.
இது தீவிர வலதுசாரி சூழலில் இருந்து கொரோனா வைரஸ் மறுப்பாளர்களையும் தடுப்பூசி எதிர்ப்பாளர்களையும் காட்சிக்கு கொண்டு வந்தது. வெறுப்புச் செய்திகளின் வெள்ளத்தால் மருத்துவரை மூழ்கடித்தனர். Falter வாராந்திர இதழ் தெரிவித்தது போல், அவர் ஒரு ‘முறையான ஆடு’ என்றும் ‘முட்டாள் பன்றி’ என்றும் அவமதிக்கப்பட்டார். ஆனால் அது வரம்பை மீறியது. ஒரு குறிப்பிட்ட ‘அறுவடை, கொலையாளி’ “உங்கள் ஊழியர்களின் மூளைகளைப் பயன்படுத்தி வேலை செய்வதாக சுவர்களில் ஓவியம் வரைந்து” அவரை கொன்றுவிடுவதாக அச்சுறுத்தினர். மேலும் மற்ற அச்சுறுத்தல்களோ மிகவும் மோசமானவை, மற்றும் வன்முறையானவை என்பதால், அவற்றை நாங்கள் இங்கு மீண்டும் தெரிவிக்க போவதில்லை.
மருத்துவர் பொலிசாரிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகாரளித்தார், ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மாறாக, டாக்டரை தாக்குதலுக்கு இலக்காக்கியதில் உயர்மட்ட ஆஸ்திரிய பொலிஸ் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தது.
பொலிசாரின் கண்காணிப்பின் கீழ், திட்டமிட்டிருந்த வழியை விட்டு விலகி, மருத்துவமனையின் நுழைவாயிலையும், அவசர சேவைகளை அணுகும் சாலை வழிகளையும் முற்றுகையிட்ட கொரோனா வைரஸ் மறுப்பாளர்களின் ஆர்ப்பாட்டம் பற்றி டாக்டர். கெல்லெர்மைர் கடந்த ஆண்டு ட்வீட் செய்தார்.
அந்த ட்வீட்டை ‘தவறான அறிக்கை’ என்று பகிரங்கமாக குறிப்பிட்டு பொலிசார் பதிலிறுத்ததுடன், தீவிர வலதுசாரி கொரோனா வைரஸ் மறுப்பாளர்களுக்குப் பின்னால் வெளிப்படையாக துணை நின்று, அங்கு எந்த இடையூறான அல்லது குற்றச் செயல்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
கொரோனா வைரஸ் மறுப்பாளர்கள் பின்னர் டாக்டர். கெல்லெர்மைரின் முகவரியை இணையத்தில் வெளியிட்டு, அவரை அச்சுறுத்த வெளிப்படையாக அழைப்பு விடுத்தனர். வலதுசாரிகளை அணிதிரட்டிய கருத்தை நீக்குமாறு பொலிஸூக்கு விடுத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது.
அடுத்தடுத்த நிகழ்வுகளில், இது ஒரு புறக்கணிப்பு அல்ல என்பது விரைவில் தெளிவாகத் தெரிந்தது. டாக்டர். கெல்லெர்மைர் ‘தனது சொந்த தொழிலை மேம்படுத்தவும்’ பொலிஸை விமர்சிப்பதன் மூலம் ‘தன்னை மக்களிடம் பிரபல்யப் படுத்தவும்’ மட்டுமே விரும்புகிறார் என்று உயர்மட்ட ஆஸ்திரிய காவல்துறையின் செய்தித் தொடர்பாளர், Ö1-Mittagsjournal தொலைக்காட்சி செய்தி இதழிடம் கூறினார்.
புகாரளிக்கப்பட்ட சம்பவங்கள் மேலும் மேலும் கொடூரமானதாக மாறிய நிலையில், பொலிசார் சிறிது காலத்திற்கு விசாரணை செய்துவிட்டு, மீண்டும் அனைத்து முயற்சிகளையும் நிறுத்தினர். ‘ஆபத்தானதாக அல்லது சந்தேகத்திற்குரியதாக அடையாளம் காணக்கூடிய அறிகுறிகள் எதுவுமில்லை’ என்று அவர்கள் கூறினர். டாக்டர். கெல்லெர்மைர் ஆஸ்திரியாவின் அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடம் உதவி கேட்டபோதும், அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
ஜேர்மன் அதிகாரிகளிடமிருந்தும் அவர் இதேபோன்ற பதிலைப் பெற்றார். அடையாளம் தெரிந்த பவேரியாவைச் சேர்ந்த ஒருவர், அந்த மருத்துவர் ஒரு ‘மக்கள் தீர்ப்பாயம்’ முன் நிறுத்தப்படுவார் என்று ட்வீட் செய்துள்ளார், இது ஒரு மெல்லிய மரண அச்சுறுத்தலாகும். டாக்டர். கெல்லெர்மைர் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தார். இருப்பினும், ஜேர்மன் அதிகாரிகள் இந்த அறிக்கையை கருத்துச் சுதந்திரமாக கருதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உண்மையில், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் தீவிர வலதுசாரி சூழல் பயங்கரவாதத்தை பின்புலமாக கொண்டிருந்தது மிக விரைவில் தெளிவானது. ஜேர்மனியை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணரும் தகவல் திருடுபவருமான நெல்லா அல்-லாமி, இந்த வழக்கை கண்டு, சில மணிநேரங்களில் ‘கிளாஸ், கொலையாளியை’ அடையாளம் காண முடிந்தது. அந்த குறிப்பிட்ட நபர் ஜேர்மனியில் பொலிசாருக்கு தெரிந்த ஒரு நவ-நாஜி ஆவார்.
குற்றவாளியை அம்பலப்படுத்துவதில் அல்-லாமியின் வெற்றிக்கு ஆஸ்திரிய அதிகாரிகளின் எதிர்வினை குறிப்பிடத்தக்கது. வெல்ஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்தோஃப் வெபர் தகவல் திருடுபவரை விமர்சித்தார். அவரது ஆராய்ச்சி ‘தொழில்நுட்ப ரீதியாகவும் அடிப்படையிலும் புரிந்துகொள்ள முடியாதது’ என அவர் கூறினார். மேலும், அவரது முடிவுகளுக்காக அவர் டார்க்நெட்டை ஆராயாமல் இருந்திருக்கலாமோ என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் வலதுசாரி தீவிரவாத சக்திகள் நிறைந்ததாக அறியப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் அவதூறான நடத்தை, சுய தியாகம் செய்த 36 வயதான மருத்துவரின் துயர மரணத்தில் முக்கிய பங்கு வகித்தது.
ஆனால் அரசியல் பொறுப்பு என்பது, கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி கூட்டணியிலான ஆஸ்திரிய அரசாங்கத்திடம் உள்ளது. டாக்டர். கெல்லெர்மைரின் மரணத்திற்குப் பின்னர் வியன்னா அரசாங்க அதிகாரிகள் சிந்திய சில முதலைக் கண்ணீர் இந்த உண்மையை மறைக்க முடியாது. அதாவது, தொற்றுநோயின்போது தீவிர வலதுசாரிகளின் திட்டத்தை நடைமுறையில் ஏற்றுக்கொண்டு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் நீக்கியது. அவ்வாறு செய்வதன் மூலம், டாக்டர். கெல்லெர்மைரை தற்கொலைக்கு தூண்டிய சக்திகளை அது பலப்படுத்தி, தைரியப்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மற்ற அனைத்து அரசாங்கங்களையும் போலவே, மக்கள் கட்சியும் (OVP) பசுமைக் கட்சியும், வைரஸை ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் வெடித்துப் பரவ அனுமதிக்கும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையைப் பின்பற்றுகின்றன. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரியா இதில் ஒரு முன்னோடி பங்கைக் கொண்டுள்ளது, அதாவது அங்கு பூட்டுதல் நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே நீக்கப்பட்டுவிட்டன. அதன் விளைவாக, நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் எண்ணிக்கை புதிய சாதனை மட்டத்தை எட்டின.
மிக சமீபத்தில், முன்பு ஒப்புக்கொள்ளபட்ட கட்டாய தடுப்பூசி திட்டமும் இரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் மட்டும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியாது என்றாலும், தொற்றுநோயைத் தொடர்ந்து வரும் கடுமையான உடல்நலகுறைவுக்கு எதிராக மக்கள்தொகையின் பெரும் பகுதியினருக்கு குறிப்பிடத்தக்க சிறந்த பாதுகாப்பிற்கு அது பங்களித்திருக்கும்.
தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து ஒரு குறுகிய உயரடுக்கின் இலாப நலன்கள் அச்சுறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புகளுக்கு ஆஸ்திரிய அரசாங்கம் தான் பொறுப்பாகும். இதுவரை, ஆஸ்திரியாவில் கோவிட்-19 நோய்தொற்றால் அண்ணளவாக 4.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 20,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
தற்போது, இந்த எண்ணிக்கைகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன: 1,600 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 88 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, மேலும் 5,714 புதிய நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும், தொற்று புள்ளிவிபரங்கள் நிண்ட காலமாகவே உண்மையான நிலைமையை பிரதிபலிப்பதில்லை. பரிசோதனை வசதிகள் இனி கிடைப்பது கடினம் என்பதால், நோய்தொற்று எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
திங்களன்று நடைமுறைக்கு வந்த அனைத்து தனிமைப்படுத்தல் விதிமுறைகளையும் நீக்கி, மக்கள் கட்சியைச் சேர்ந்த சான்சிலர் கார்ல் நெஹாம்மரும் பசுமைக் கட்சியைச் சேர்ந்த சுகாதார மந்திரி ஜோஹானஸ் ரவுச்சும், இப்போது தீவிர வலதுசாரி ஆஸ்திரிய சுதந்திரக் கட்சியின் (FPO) கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்புதான், ஆஸ்திரிய சுதந்திரக் கட்சியின் சுகாதார செய்தித் தொடர்பாளர் கெர்ஹார்ட் கானியாக் ‘தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் தொடர்ச்சி’ ‘வழக்கற்றது’ என்று விவரித்தார்.
இந்த மனிதாபிமானமற்ற கொள்கைதான் வலதுசாரி தீவிரவாத சக்திகளை வலுப்படுத்துகிறது என்பதுடன், பகுத்தறிவார்ந்த, விஞ்ஞான அடிப்படையிலான தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க அழைப்பு விடுக்கும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கிறது. உயிர்களை விட இலாபங்களுக்கே முன்னுரிமை என்ற கொடூரக் கொள்கையை அமல்படுத்துவதில், அனைத்து ஸ்தாபனக் கட்சிகளும் சமூகத்தின் பாசிசக் கறைகளை நம்பியுள்ளன.