இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீதான அதன் சமூகத் தாக்குதல்களுக்கும் எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நேற்று இலங்கை பொலிசார் மிலேச்சத்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (அ.ப.மா.ஒ.) அணிதிரட்டப்பட்ட சுமார் 2,000 மாணவர்கள் மத்திய கொழும்பில் உள்ள லிப்டன் சுற்றுவட்டத்தில் மாலை 3 மணியளவில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். அவர்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொழும்பு கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்லத் திட்டமிட்டிருந்தனர்.
18 ஆகஸ்ட் 2022 அன்று மத்திய கொழும்பில் உள்ள கொம்பனி வீதியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியாகச் செல்கிறார்கள் (Image: WSWS Media)
பேரணியை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அ.ப.மா.ஒ. ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு எதுவும் இல்லை என்றார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்படாத காரணத்தினால் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக அவர் கூறினார். போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவொரு அடக்குமுறையையும் பிரயோகிக்க வேண்டாம் என ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டம் 'சட்டவிரோதமானது' என்று ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அறிவித்ததோடு, ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ய பொலிசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் நிகழ்வை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு அரசாங்கத்தின் கொடூரமான அவசரகாலச் சட்டங்களின் கீழ் இலங்கை பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பரந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல மாத வெகுஜன எதிர்ப்புக்களுக்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவினால் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர், ஜூலை 17 அன்று, விக்கிரமசிங்க அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.
“ரணில்-இராஜபக்ஷ ஆட்சிக் குழு வெளியேற வேண்டும். அடக்குமுறையை நிறுத்து,” “கைது செய்யப்பட்ட போராட்ட செயற்பாட்டாளர்களை விடுதலை செய்,” மற்றும் “மக்கள் சபைகளை கட்டியெழுப்பு” போன்ற கோஷங்களை நேற்று மாணவர் போராட்டக்காரர்கள் எழுப்பினர். “பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை மீளத் திற”, “மக்களுக்கு நிவாரணம் வேண்டும்”, “இனி கடன்கள் வேண்டாம்,” “திருடப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறு,” “மக்கள் அதிகாரத்தைப் பாதுகாக்க புதிய அரசியலமைப்பு வேண்டும்,” “நிரைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட ஏனைய கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
பேரணி தொடங்கி அரை மணி நேரத்திற்குப் பிறகு, கலகம் அடக்கும் படையினர் உட்பட சுமார் 500 பேர் அடங்கிய பாரிய பொலிஸ் குழுவை மாணவர்கள் எதிர்கொண்டனர். பொலிசார் இரண்டு நீர்தாரை இயந்திரங்களையும் கொண்டுவந்தனர்.
ஊர்வலத்தில் இருந்தவர்கள் உடனடியாக கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் நீர்த்தாரைகளால் தாக்கப்பட்டனர். பொரளை நோக்கி இரண்டு கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் மாணவர்களை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களும், கனதியான ஆயுதம் ஏந்தியிருந்த கலகம் அடக்கும் படையினரும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டனர். பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து, அவர்களில் சிலரை பொலிஸ் வண்டிக்குள் இழுத்துச் சென்றனர்.
பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொரளைச் சந்தியில் கூடிய சென்றபோது, பொலிசும் கலகம் அடக்கும் படையினரும் கொழும்பின் மற்றொரு பகுதியான நாரஹேன்பிட்டியை நோக்கி அவர்களைத் துரத்திச் சென்று நீர்த்தாரை அடித்து வன்முறையாகத் தாக்கினர். பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளையும் பொலிஸார் தடுத்து நிறுத்தி, மாணவர்களைத் தேடி, அவர்களை கைது செய்ய முயன்றனர்.
ஊடக செய்திகளின்படி, அ.ப.மா.ஒ. ஒருங்கிணைப்பாளர் முதலிகே மற்றும் அனத்துப் பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்லேவ சிறிதம்மா உட்பட ஆறு செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அனைத்து மாணவர் செயற்பாட்டாளர்களையும் விடுதலை செய்யுமாறு கோரியும் களனி, தென்கிழக்கு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் பொலிசாரின் கொடூரமான அடக்குமுறையைக் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட அனைத்து எதிர்ப்பாளர்களையும் உடனடியாக விடுவிக்கவும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடவும் கோருகின்றன.
இந்த பொலிஸ் கொடூரமானது, விக்கிரமசிங்க அரசாங்கம், இராணுவம் மற்றும் பொலிஸை கட்டவிழ்த்து விடுவது உட்பட, தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்களின் அனைத்து அரசாங்க விரோத நடவடிக்கைகளையும் நசுக்கும் முயற்சியில், சகல அடக்குமுறை அதிகாரங்களையும் பயன்படுத்தும் என்ற எச்சரிக்கையாகும்.
மில்லியன் கணக்கான இலங்கை தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளும், ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி முன்னெடுத்த வெகுஜன எழுச்சி வெடித்து நான்கு மாதங்கள் ஆகின்றன. பிரமாண்டமான பணவீக்கம், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீண்ட மின்வெட்டு ஆகியவற்றிற்கு முடிவுகட்ட கோரி நடந்த இந்த போராட்டங்கள் இலங்கை வரலாற்றிலேயே மிகப் பெரிய அளவிலான வெகுஜனப் போராட்டங்கள் மற்றும் பொது வேலைநிறுத்தங்கள் ஆகும். அரசாங்க எதிர்ப்பு எழுச்சியானது இராஜபக்ஷவையும் அவரது ஆட்சியையும் இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்து, ஆளும் உயரடுக்கின் ஆணிவேரையே உலுக்கியது.
பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக ஜனநாயக விரோதமாக நியமிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், விக்கிரமசிங்க ஜூலை 22 அன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடலை ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்கள் மீது இராணுவ-பொலிஸ் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். ஒன்பது ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த நள்ளிரவு கடந்த தாக்குதலின் பின்னர், மேலும் பல ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்கிரமசிங்க ஆட்சியானது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. இதில் இலட்சக்கணக்கான அரச வேலைகளை அழித்தல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், அதிக வரிகளை விதித்தை மற்றும் விலை மானியங்களை மேலும் வெட்டித் தள்ளுவதும் அடங்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, முதலாளித்துவ ஸ்தாபனத்தை ஒட்டுமொத்தமாக அணிதிரட்டும் முயற்சியில், சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். எவ்வாறாயினும், விக்கிரமசிங்கவும் ஆளும் உயரடுக்கினரும் இராஜபக்ஷவை வீழ்த்திய வெகுஜன எழுச்சியால் பீதியடைந்துள்ளதுடன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் வெடிக்கும் என்பது குறித்து அஞ்சுகின்றனர்.
கிராமப்புற ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஏப்ரல் 28, மே 6, மே 10 மற்றும் மே 11 ஆகிய திகதிகளில் இராஜபக்ஷ மற்றும் அவரது ஆட்சியை இராஜினாமா செய்யக் கோரி பொது வேலைநிறுத்தங்களில் இறங்கினர். தொழிற்சங்கங்கள் இவற்றை ஒரு நாள் போராட்டங்களுக்கு மட்டுப்படுத்தி, இடைக்கால பாராளுமன்ற ஆட்சிக்கு அழைப்பு விடுத்தன. அதே கோரிக்கையை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) முன்வைத்தன.
அ.ப.மா.ஒ. வைக் கட்டுப்படுத்தும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி, இந்தப் பிரச்சாரத்தை ஆதரித்ததுடன் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன இயக்கத்தையும் தடுக்க வேலை செய்தது.
நேற்றைய வன்முறை பொலிஸ் தாக்குதல், இந்த சமூக மற்றும் பொருளாதார பேரழிவை உருவாக்கிய விக்கிரமசிங்க ஆட்சி மற்றும் முழு முதலாளித்துவ இலாப முறைமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான அவசரத் தேவையை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.
தொடக்கத்தில் இருந்தே, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் புரட்சிகர நடவடிக்கை வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் வெகுஜனப் போராட்டங்களில் தலையிட்டன. அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், பிரதான பொருளாதார மையங்களிலும், கிராமப்புறங்களிலும் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப நாங்கள் போராடுகிறோம்.
முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை தோற்கடிக்க, இந்த நடவடிக்கைக் குழுக்களின் அடிப்படையில், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை நடத்துவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது.
தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களும் எதிர்கொள்ளும் பிரமாண்ட அளவிலான சமூகப் பிரச்சினைகளை அனுகுவதன் பேரில், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதற்கும், பில்லியனர்கள் மற்றும் பெரும் கூட்டுத்தாபனங்களின் சொத்துக்களை கைப்பற்றவும் மற்றும் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிப்பதற்குமான போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி பரிந்துரை செய்கின்றது. இந்த மாநாட்டைக் கட்டியெழுப்புவதானது, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கும், பெரும்பான்மையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிச வழியில் சமூகத்தை மறுசீரமைப்பதற்கும் வழிவகை செய்யும்.
மேலும் படிக்க
- இலங்கை தொழிற்சங்கத் தலைவர்கள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் அணிசேர்கின்றனர்
- சர்வகட்சி ஆட்சியை நிராகரி! சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கை வேண்டாம்! தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை கட்டியெழுப்ப போராடு!
- இலங்கையில் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான அரச தாக்குதலை சோ.ச.க. கண்டிக்கிறது