முன்னோக்கு

பிரிட்டனின் அடுத்த பிரதம மந்திரி லிஸ் ட்ரஸ், உலகளாவிய அணுஆயுத நிர்மூலமாக்கலுக்குத் தயாராக இருப்பதாக கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெளியுறவுத் துறைச் செயலரும், பெரும்பாலும் அனேகமாக இங்கிலாந்தின் அடுத்த பழமைவாதக் கட்சி பிரதம மந்திரியுமான லிஸ் ட்ரஸ் (Liz Truss), ரஷ்யா மீதான ஓர் அணுஆயுதத் தாக்குதல் 'உலகளாவிய நிர்மூலமாக்கலாக' ஆனாலும் கூட, அத்தகைய தாக்குதலை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

போரிஸ் ஜோன்சனுக்குப் பிரதியீடாக யார் வருவார்கள் என்பதைத் தீர்மானிக்க, செவ்வாய்கிழமை பேர்மிங்காமில் நடந்த டோரி கட்சியின் தலைமைக்கான போட்டி மேடையில், ட்ரஸ் டைம்ஸ் ரேடியோவின் ஜோன் பினாரிடம் கூறுகையில், அவர் பிரதம மந்திரியானால், பிரிட்டனின் ட்ரைடென்ட் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அணுஆயுத ஏவுகணைகளை வீசும் நடைமுறைகளை அவர் உடனடியாக வெளிப்படுத்திக் காட்டுவதாகக் கூறினார். “அதுவொரு உலகளாவிய நிர்மூலமாக்கலாக இருக்குமே,” என்று தெரிவித்த பினார், “நீங்கள் அந்த குமிழியை அழுத்துவீர்களா என்று நான் கேட்க மாட்டேன், நீங்கள் ஆம் என்று தான் கூறுவீர்கள், ஆனால் நான் அந்தப் பணியை எதிர்கொண்டால் உடலளவில் நான் மிகவும் பாதிக்கப்பட்டுப் போவேன். அந்த எண்ணம் உங்களை எவ்வாறு உணர வைக்கிறது?” என்றார்.

நிலைத்த பார்வையோடு உணர்ச்சியற்ற முகத்தோடு, ட்ரஸ் கூறினார், “அது பிரதம மந்திரியின் முக்கிய கடமையாக நினைக்கிறேன், நான் அதைச் செய்ய தயாராக இருக்கிறேன்,” என்று பதிலளித்தார்.

“நான் அதைச் செய்ய தயாராக உள்ளேன்,” என்று மீண்டும் கூறிய அவர், அங்கே கூடியிருந்த டோரிக்களின் பலத்தக் கைத்தட்டல்களை வேண்டி நின்றார்.

இயந்திர மனிதன் போல உடனடியாக வழங்கப்பட்ட ட்ரஸின் பதில், இப்போது நாம் அணுஆயுத மகாயுத்தத்திற்கு எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறோம் என்பதற்கு, உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கிறது.

உக்ரேனிய ஆட்சியால் நடத்தப்பட்டு வரும் ரஷ்யாவுக்கு எதிரான பினாமி போரை ஆதரிப்பதில் நேட்டோ சக்திகளிலேயே முதன்மையான போர்வெறியராகவும், மாஸ்கோ உடனான நேரடி இராணுவ மோதலுக்கு முன்னணி பிரச்சாரகராகவும் அவர் பேசுகிறார். பெப்ரவரியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ரஷ்யாவின் அணுஆயுதப் படைகளை உயர் எச்சரிக்கையில் நிறுத்தினார், அதேவேளையில் நேட்டோவுக்கும் மாஸ்கோவுக்கும் இடையே சாத்தியமான 'மோதல்கள்' குறித்து 'பல்வேறு மட்டங்களில் பல்வேறு பிரதிநிதிகளின்' 'ஏற்றுக் கொள்ளவியலாத' கருத்துக்களை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சுட்டிக் காட்டியிருந்தார்: 'இந்தக் கருத்துக்களைக் கூறியவர்களை நான் பெயரிட்டுக் குறிப்பிட மாட்டேன் என்றாலும், இதில் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறைச் செயலரும் இருந்தார்,” என்றார்.

ட்ரஸ் சமீபத்தில் ஸ்கை நியூஸிடம் கூறி இருந்தார், 'நாம் புட்டினை உக்ரேனில் தடுக்காவிட்டால், பால்டிக்ஸ், போலந்து, மால்டோவா என மற்றவர்கள் அச்சுறுத்தப்படுவதை நாம் பார்க்க வேண்டியிருக்கும், அது நேட்டோ உடனான ஒரு மோதலில் போய் முடியும்,” என்றார்.

ஆனால் ட்ரஸூம் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் சார்பாகத் தான் பேசுகிறார். அப்பெண்மணிக்கு எதிராக தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் ரிஷி சுனக்கிற்கு இணக்கமான அதே விதத்தில் அவர் பதிலளித்து இருக்கலாம் என்பது மட்டுமல்ல, இங்கிலாந்தின் உயர் பதவிக்குப் போட்டியிடும் அந்நாட்டின் அரசியல் ஸ்தாபகத்தின் வேறெந்த உறுப்பினரை விடவும் அவர் உறுதியாக இருக்கலாம்.

ரஷ்யா மற்றும் சீனா உடனான பதட்டங்களை இலண்டன் மற்றும் வாஷிங்டன் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்தே, அணுஆயுதப் போர் தொடங்குவதற்குத் தயாராக இருப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது அவசியமாகி விட்டது. இது 2015 இல் தொடங்கியது, அப்போது அனைத்திற்கும் மேலாக ஈராக் போருக்கு எதிரான அவரது எதிர்ப்பு மற்றும் போரை நிறுத்துவோம் கூட்டணிக்கான (Stop the War Coalition) அவரது தலைமை ஆகியவற்றின் அடிப்படையில் தொழிற் கட்சியின் தலைமையை ஜெர்மி கோர்பின் ஜெயித்திருந்தார். அவர் பிரதம மந்திரியானால், ட்ரைடென்ட் அணு ஆயுத அமைப்பைப் பயன்படுத்துமாறு இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறைத் தலைவர்களுக்கு அவர் அறிவுறுத்துவாரா என்று செப்டம்பர் 15 இல் ஒரு பேட்டியில் கோர்பினிடம் கேட்கப்பட்ட போது, இல்லை என்று கோர்பின் தெரிவித்தார். அவர் இடைவிடாத தாக்குதலுக்கு ஆளானார், டோரிகள், பிளேயரிசவாதிகள் மற்றும் இராணுவப் பிரமுகர்கள் அவரைப் பதவிக்குத் தகுதியற்றவர் என்று அறிவித்தனர், அவர் எல்லா முனைகளிலும் சரணடைந்தார்.

ஜூலை 18, 2016 விவாதத்தில், அப்போது புதிதாக பதவி ஏற்றிருந்த டோரி பிரதம மந்திரி தெரசா மே, கோர்பின் மீது தாக்குதல் நடத்தும் சாக்கில் அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவதற்கு அவர் தயாராக இருப்பதாக அறிவித்தார். தொழிற்கட்சி தலைவராக கோர்பினுக்குப் பிரதியீடாக வந்த சர் ஸ்டார்மரிடமும் இந்தாண்டு பெப்ரவரி 10 இல், அணுஆயுதங்களை அவர் பயன்படுத்த விரும்புவாரா என்று பிபிசி கேட்ட போது, “நிச்சயமாக' என்றவர் பதிலளித்தார். இது உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு வெறும் 14 நாட்களுக்கு முன்னர் நடந்தது.

நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் உடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து ஸ்டார்மர் பேசுகையில், 'அரசாங்கத்துடன் எங்களுக்கு என்ன சவால்கள் இருந்தாலும், ரஷ்ய ஆக்கிரமிப்பு என்று வரும் போது, நாங்கள் ஒன்றாக நிற்கிறோம்' என்று கருத்து தெரிவித்தார்.

இது அணு ஆயுதப் போருக்கான ட்ரஸ் பிரகடனத்தின் பரந்த சர்வதேச முக்கியத்துவமாகும். இது வெறுமனே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்கை மட்டுமல்ல. இது, அமெரிக்காவின் தலைமையில், அனைத்து நேட்டோ சக்திகளும் தீவிரமாக பின்பற்றி வரும் கொள்கையாகும்.

ஜூன் மாதம் ஸ்பெயின் மாட்ரிட்டில் நடந்த நேட்டோ உச்சிமாநாடு, ஐரோப்பிய கண்டத்தை இராணுவமயமாக்குவது, ரஷ்யா உடனான போரைப் பாரியளவில் விரிவாக்குவது மற்றும் சீனாவுடன் போருக்குத் தயாரிப்பு செய்வது ஆகிய திட்டங்களை விவரித்து ஒரு மூலோபாய ஆவணத்தை ஏற்றது. அது குறிப்பாக 'அணு ஆயுதமேந்திய சக-போட்டியாளர்களுக்கு எதிராக அதி-தீவிர, பன்முக போரில் சண்டை இடுவதற்கு' அவசியப்படும் 'முழு அளவிலான சக்திகளை வழங்க' உறுதியளித்தது.

ரஷ்யாவும் சீனாவும் முறையே ஓர் 'அச்சுறுத்தலாக' மற்றும் 'நம் நலன்களுக்கு' ஒரு 'சவாலாக' பெயரிடப்பட்டன. 'ஐரோப்பாவின் முகப்பில் நிறுத்தப்பட்ட' அமெரிக்க அணு ஆயுதங்களை மையமாகக் கொண்ட நேட்டோவின் 'அணுஆயுதத் தடுப்புமுறை தோரணை', “எல்லா களங்களிலும் மற்றும் திசைகளிலும் தடுக்கும், பாதுகாக்கும், எதிர்க்கும் மற்றும் மறுக்கும்' ஒரு மூலோபாயத்தை மையத்தில் கொண்டுள்ளது.

நேட்டோ இராணுவப் பிரமுகர்கள் ஏற்கனவே அணு ஆயுதப் போர் நடத்துவது குறித்து வெளிப்படையாக விவாதிக்கும் சுதந்திரத்தை உணர்கிறார்கள். ஜூனில் நடந்த ஒரு கருத்தரங்கில், ஜேர்மன் விமானப்படையின் (Luftwaffe) தலைவர் இங்கோ கெர்ஹார்ட்ஸ் (Ingo Gerhartz) கூறுகையில், “நம்பகமான தடுப்புமுறையைப் பொறுத்த வரையில், அவசியப்படும் போது அணுஆயுதத் தடுப்புமுறையை நடைமுறைப்படுத்த, நமக்கு வழிவகைகளும் அரசியல் விருப்பமும் இரண்டும் வேண்டும்,” என்று கூறியதுடன், அதற்கு முன்னதாக, “புட்டின், எங்களுக்குள் குழப்பம் ஏற்படுத்தாதீர்!” என்று கூறியிருந்தார். ஆகஸ்ட் 13 இல், இங்கிலாந்தின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுஆயுதக் கூட்டுப் படைப்பிரிவின் கட்டளையகப் பிரிவு முன்னாள் அதிகாரியான ஹமிஸ் டி பிரெட்டென்-ஜோர்டன், 'பிரிட்டன் அணு ஆயுதப் போருக்குத் தயாராக வேண்டும்' என்று வலியுறுத்தி Telegraph இதழில் எழுதினார்.

ட்ரஸ் இந்த விவாதங்களைப் பாசிசப் புலம்பல்கள் மற்றும் முணுமுணுப்புகள் என்றார், இது அவரை டோரி கட்சியின் செல்லப்பிள்ளையாக மாற்றியது.

இது போன்ற அரசியல் பைத்தியக்காரத்தனத்திற்கு தொழிலாளர்கள் எவ்வாறு விடையிறுக்க வேண்டும்?

நவீன அணு ஆயுதங்கள், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்டதை விட மிகவும் சக்தி வாய்ந்தவை. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகை அளவுக்கு, 200 மில்லியன் மக்களை வெறும் 50 அணுஆயுதங்கள் கொன்றுவிடும். ஆனால் அது வெறும் ஆரம்பமாக மட்டுமே இருக்கும். ருட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரி பின்வருமாறு அனுமானிக்கிறது, ஒரு முழு அளவிலான அணு ஆயுதப் போர் பாரியளவில் நெருப்பை உண்டாக்கும், சூரியனையே மறைக்கும் அளவுக்குப் புகை மண்டலங்களை உண்டாக்கி, பயிர்களை நாசமாக்கும். அடுத்து வரும் அணுஆயுதப் பனி யுகம் என்பது, முக்கால்வாசி மக்கள் பட்டினியால் வாடுவார்கள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஐந்து பில்லியன் பேர் கொல்லப்படுவார்கள் என்பதை அர்த்தப்படுத்தும். ஒரு 'சிறிய' அணுஆயுத மோதல் கூட 2.5 பில்லியன் பேர் இறப்பதற்கு வழி வகுக்கலாம்.

முதலில் நீண்ட காலமாக நினைத்தே பார்த்திராத ஒன்றை ஏற்றுக் கொள்வது அவசியம்: அதாவது, ஏகாதிபத்திய சக்திகள் மனிதகுலத்தையும் அனேகமாக பூமியில் உள்ள ஒட்டுமொத்த உயிர்களையும் அழிக்கும் விதமான ஆயுதங்களைப் பயன்படுத்த செயலூக்கத்துடன் பரிசீலித்து வருகின்றன. இதை ஜோசப் கிஷோர் மற்றும் டேவிட் நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தின் மார்ச் 26 முன்னோக்கில், “உளவியல் ரீதியான வரம்பை மீறுதல்' என்று துல்லியமாக விவரித்திருந்தார்கள். அது உக்ரேன் மோதல் குறித்து பின்வருமாறு எச்சரித்தது: “அமெரிக்காவும் மற்ற முக்கிய நேட்டோ சக்தி அரசாங்கங்களும் உலகை அணுஆயுதப் பேரழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள், அவற்றின் தலைவர்கள் யாருக்காக அவர்கள் செயல்படுகிறார்களோ அந்த உண்மையான புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை மூடிமறைத்து இரகசியமாக முடிவு எடுத்து வருகிறார்கள்.'

இரண்டாவதாக இந்தப் போரின் அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்றால் பிரதான ஏகாதிபத்திய சக்திகளால் உலகம் மறுபங்கீடு செய்யப்படுகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்கள் 'தூண்டுதல் இல்லாமல் நடத்தப்பட்ட' ரஷ்ய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு விடையிறுக்கவில்லை. அவை டிசம்பர் 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து பின்பற்றப்பட்டு வந்த இராணுவச் சுற்றி வளைப்பு கொள்கை ஒன்றை முழுமையாக நிறைவேற்ற முயன்று வருகின்றன, புட்டின் ஆட்சியைப் பதவியில் இருந்து கவிழ்த்து, நிதி மூலதனத்தின் சார்பாக ரஷ்யாவின் பரந்த ஆதார வளங்கள் மீது கட்டுப்பாட்டை எடுக்க அவை ஆயத்தமாகி வருகின்றன.

முதலாளித்துவத்திற்கு எதிராக சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தைத் தொடுப்பதன் மூலம், ஏகாதிபத்திய இராணுவ வன்முறையின் இந்தப் பேரழிவுகரமான வெடிப்பைத் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சமூக சக்தி, சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி, “ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!” என்ற அதன் 2022 மாநாட்டுத் தீர்மானத்தில் பின்வருமாறு விவரிக்கிறது:

“அதன் மிகவும் அடிப்படை மட்டத்தில், ஏகாதிபத்தியப் போரானது முதலாளித்துவ அமைப்பு முறையின் அடிப்படை முரண்பாடுகளில் இருந்து எழுகிறது—அதாவது, உலகப் பொருளாதாரத்திற்கும் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடு, தேசிய-அரசுகள் உற்பத்திக் கருவிகள் மீதான தனிச்சொத்துடைமையில் வேரூன்றி உள்ளன. ஆனால் இதே முரண்பாடுகள் உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தையும் உருவாக்குகின்றன. ஏற்கனவே இந்தப் போரின் விளைவுகள் அமெரிக்காவுக்குள் சமூக மோதல்களை மிகப் பெரியளவில் தீவிரப்படுத்தி வருகின்றன. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் தாக்கம் வர்க்கப் போராட்டத்தை முன் நகர்த்தி வருகிறது, வாகனத் துறைத் தொழிலாளர்கள், விமானச் சேவைத் தொழிலாளர்கள், மருத்துவத் துறைத் தொழிலாளர்கள், கல்வித் துறைப் பணியாளர்கள், சேவைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளிடையே வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடிப்பது இதைச் சேர்ந்ததாகும்.

இது நிஜமாகவே சர்வதேச தன்மையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில், ட்ரஸ் மற்றும் டோரிக்களைப் பதவியில் இருந்து துரத்தும் ஒரு வேலைநிறுத்த அலை அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் என்ன தேவைப்படுகிறது என்றால் போருக்கு எதிராகவும், ஆளும் வர்க்கம், அதன் அரசாங்கங்கள் மற்றும் கட்சிகளின் எல்லா முயற்சிகளுக்கு எதிராகவும், போருக்காக கூலி வெட்டுக்கள், வேலைநீக்கங்கள் மற்றும் வேலை வேகப்படுத்தல்கள் மூலம் தொழிலாளர்களை விலை கொடுக்கச் செய்யும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராகவும் அணிதிரண்டு, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டத்தைத் தொடுக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாளர்கள் அவர்களின் பொது எதிரிக்கு எதிராக ஒரு பொதுவான போராட்டத்திற்காக நனவுப்பூர்வமாக தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளை அணுக வேண்டும். உலகப் போர் மற்றும் அணு ஆயுத நிர்மூலமாக்கலோ, அல்லது உலக சோசலிசப் புரட்சியா என்பதை இந்தப் பிரச்சினைகள் இதை விடக் கூர்மையாக முன்னிறுத்த முடியாது.

Loading