மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வியோமிங், ஜாக்சன் ஹோலில் நடந்த பெடரல் ரிசர்வின் வருடாந்தர உச்சி மாநாட்டில் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் வெள்ளிக்கிழமை உரையாற்றுகையில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தினார்: அதாவது, அமெரிக்காவின் நிதிய தன்னலக்குழு ஆழமடைந்து வரும் இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான விலையைத் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த தீர்மானகரமாக உள்ளது.
முன்னர் பேசியதை விட மிகவும் அப்பட்டமாக பேசிய பவல், பணவீக்கத்தை எதிர்த்துப் போராடும் பெயரில் அமெரிக்க மத்திய வங்கி அதிக வட்டி விகிதங்களைத் தொடரும் என்று சூளுரைத்தார், இதன் விளைவுகளாக வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு மற்றும் பொருளாதார 'வலி' எதிர்பார்க்கப்படுகிறது. பெடரல் மீண்டும் இந்த செப்டம்பரில், வட்டி விகிதங்களை 0.5 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
'பணவீக்கத்தைக் குறைப்பதற்கு வழக்கத்திற்குக் குறைவான வளர்ச்சியின் (below-trend growth) ஒரு நிலையான காலம் தேவைப்படலாம்,” என்று கூறிய பவல், “மேலும், தொழிலாளர் சந்தை நிலைமைகளைச் சற்று இலகுவாக்க வேண்டி இருக்கலாம். அதிக வட்டி விகிதங்கள், மெதுவான வளர்ச்சி மற்றும் இலகுவான தொழிலாளர் சந்தை நிலைமைகள் ஆகியவை பணவீக்கத்தைக் குறைக்கும் என்றாலும், அவை குடும்பங்களுக்கும் வணிகங்களுக்கும் சற்று வலியை ஏற்படுத்தும்,” என்றார்.
பெடரல் தலைவரின் இந்த சூசகமான வார்த்தைகளுக்குப் பின்னால் ஓர் ஈவிரக்கமற்ற கொள்கை நிற்கிறது. 'தொழிலாளர் சந்தை நிலைமைகளை இலகுவாக்குதல்,' என்பதன் மூலம், வேலைகளில் கடுமையான இரத்தக்களரியை பவல் விவரிக்கிறார், இதில் அதிக வட்டி விகிதங்கள் என்பது பாரிய பணிநீக்கங்களை ஊக்குவிக்கும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இது தவிர்க்க முடியாத பேரழிவை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே நிலவும் கடுமையான சமூக நெருக்கடி நிலைமைகளின் கீழ், இது, வறுமை, பசி, அதீத போதைப் பழக்கம், ஜப்தி நடவடிக்கைகள், வீடற்ற நிலைமை மற்றும் தற்கொலைகளின் அதிர்ச்சியூட்டும் அதிகரிப்பைக் குறிக்கும்.
பவல் குறிப்பிடும் 'வலியின்' இலக்கில் வைக்கப்பட்டிருப்பவர்கள் தொழிலாள வர்க்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
'சமநிலையற்ற' தொழிலாளர் சந்தை என்றழைக்கப்படுவதைக் குறித்தும் தொழிலாளர்களின் கோரிக்கையைக் குறித்தும் புலம்பிய பவல், 'குறிப்பாக தொழிலாளர் சந்தை பலமாக இருக்கிறது என்றாலும், தெளிவாக அது சமநிலையின்றி உள்ளது, தொழிலாளர்களின் கோரிக்கையானது கணிசமான அளவுக்கு நடப்பு தொழிலாளர் நியமனங்களை விட மிதமிஞ்சி உள்ளது,” என்றார்.
இந்த எரிச்சலூட்டும் வார்த்தைகள் —அதாவது, தொழிலாளர் பற்றாக்குறையும் அதிகப்படியான பெரிய சம்பள உயர்வுகளுமே பணவீக்கத்திற்கான முக்கிய உந்துசக்திகள் என்பது— மிகவும் அடிப்படையான பொருளாதார தர்க்கத்தை மீறுகின்றன. அமெரிக்காவில் அதிக பணவீக்கத்திற்கான காரணம் சம்பள உயர்வுகள் என்றால், பின் தொழிலாளர்களின் கூலிகள் பணவீக்கத்தின் அளவை விட அதிகமாகவோ அல்லது ஒப்பிடக் கூடிய மட்டத்திற்கோ அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
தொழிலாளர்களின் சம்பளமோ, தொழிலாளர் புள்ளியியல் ஆணையத் தகவல்படி, பணவீக்க விகிதத்தை விட மிகக் குறைவாக பெயரளவுக்கே உயர்ந்துள்ளது, இதன் விளைவாக கடந்த ஆண்டின் போது நிஜமான சம்பளங்களில் 3 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, சில மாநிலங்களில் ஏறக்குறைய 5 சதவீதம் வரை குறைந்துள்ளது.
தொழிலாளர் பற்றாக்குறை என்பதே கூட பெரும்பாலும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கம் காட்டிய பேரழிவுகரமான விடையிறுப்பின் விளைவாகும், இதில் குறுகிய கால இலாபகர நோக்கத்திற்காக பாரிய நோய்தொற்றுகள் வேண்டுமென்றே முன்பினும் அதிகமாக ஏற்படுத்தப்படுகின்றன. இந்த வாரம் வெளியிடப்பட்ட புரூகிங்ஸ் இன்ஸ்டிடியூட் பகுப்பாய்வின்படி, ஏறக்குறைய 4.1 மில்லியன் அமெரிக்கர்கள் தொழிலாளர் சக்தியில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பதோடு, நீண்ட கால கோவிட் இன் பலவீனப்படுத்தும் பாதிப்பு காரணமாக வேலை செய்ய முடியாமல் உள்ளனர். அமெரிக்காவில் ஏறக்குறைய 16 மில்லியன் பேர் நீண்ட கால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மதிப்பிட்டுள்ளது.
யதார்த்தத்தில், சம்பள உயர்வுகள் அல்ல, பெருநிறுவனங்கள் விலைகளை பிழிந்தெடுப்பதே பணவீக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பொருளாதாரக் கொள்கை பயிலகம் ஏப்ரல் மாதம் நடத்திய ஆய்வில் கண்டறிந்தது. இதற்கிடையே, பெருநிறுவன இலாபங்கள் தொடர்ந்து சாதனைக்கு மேல் சாதனை படைத்து வருகின்றன.
வியாழக்கிழமை அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, நிதித்துறை சாரா பெருநிறுவனங்களின் இலாப வரம்புகள் 72 ஆண்டுகளில் இல்லாத உயர்வாக, 1950 க்குப் பின்னர் முதல் முறையாக 15.5 சதவீதத்தை எட்டி உள்ளன. பணவீக்கத்தில் இருந்து அதிகபட்ச மூலதனப் பங்கு பிரதியீட்டுச் செலவுகளைக் கணக்கிட்ட பின்னரும் கூட, கடந்தாண்டு இலாபங்கள் 8.1 சதவீதமாக அதிகரித்து இருந்தது.
இந்த பிரமாண்ட வெகுமதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு பெருநிறுவனங்களே முன்னிலையில் உள்ளன, ஐந்து மிகப் பெரிய நிறுவனங்கள் 2022 இன் இரண்டாம் காலாண்டில் மட்டும் 55 பில்லியன் டாலர் இலாபமீட்டின, இவை உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தூண்டி விட்ட பினாமிப் போரில் இருந்து இலாபம் அடைந்துள்ளன. வெளிநாடுகளில் சூறையாடும் அவற்றின் போர்களுக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்கச் செய்வதே அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் நேச நாடுகளின் நோக்கமாகும். பிரிட்டனில், உழைக்கும் குடும்பங்களுக்குப் பேரழிவுகரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், எரிசக்தி விலைகள் இந்த இலையுதிர் காலத்தில் 80 சதவீதம், ஆண்டுக்கு 3,549 பவுண்டுகள், அதாவது 4,200 டாலர்கள், அதிகரிக்க உள்ளது, வசந்த காலத்தில் அதிகபட்சமாக 6,600 பவுண்டுகள் அதிகரிக்க உள்ளது.
பெருநிறுவனங்கள் சார்பான தொழிற்சங்கங்கள், அவற்றின் பங்கிற்கு, பணவீக்கத்திற்குக் குறைவான சம்பள உயர்வுகளையும், தொழிலாளர்கள் மீது மருத்துவக் காப்பீட்டு செலவுகளை அதிகரிக்கவும், வேலை நேரங்களை அதிகரிக்கவும் வலியுறுத்தும் நிறுவனங்களின் கோரிக்கைகளை திணிக்க நாள் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்தாண்டு தொடக்கத்தில், ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர்கள் சங்கத் தலைவர் தோமஸ் கன்வே, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைத் தொழிலாளர்கள் ஏற்குமாறு அந்தச் சங்கம் வற்புறுத்தித் திணித்த ஒரு 'பொறுப்பான' ஒப்பந்தத்தைக் குறித்து பெருமை பீற்றினார், அது 'பணவீக்க அழுத்தங்களை' சேர்க்கவில்லை என்று புகழ்ந்ததுடன், சம்பள உயர்வுகளே விலை உயர்வுகளை உந்துகின்றன என்ற பொய்யான வாதத்தையும் கிளிப்பிள்ளைப் போல மீண்டும் வலியுறுத்தினார்.
பெடரலின் வட்டி விகித உயர்வுகள், ஏற்கனவே, ஆகஸ்ட் மத்தியில் தொழில்நுட்ப துறையில் 38,000 பணிநீக்கங்கள் உட்பட பாரிய பணிநீக்க அலையைத் தூண்டி விட்டு, அவற்றின் உத்தேசித்த விளைவை காட்டத் தொடங்கி விட்டன. இப்போது வேலை வெட்டுக்கள் பொருளாதாரம் முழுவதும் பரவலாக அதிகளவில் பரவி வருகின்றன. இந்தப் பெருந்தொற்றின் போது மருத்துவக் கவனிப்பு சங்கிலிகள் பாரியளவிலான பிணையெடுப்புகளாக பில்லியன் கணக்கான டாலர்களைப் பெற்றிருந்த போதினும், மருத்துவமனைகளும் மற்றும் சுகாதாரக் கவனிப்பு அமைப்புகளும் அதிகரித்தளவில் வேலையிடங்களைக் குறைத்தும், சேவைகளைக் குறைத்தும் வருவதாக கெய்சர் ஹெல்த் செய்திகள் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டது.
மருத்துவக் கவனிப்புத் துறை மற்றும் இரயில்வே தொழில்துறைப் போலவே, பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் நீண்ட கடுமையான வேலை நேரங்கள் காரணமாக பொருளாதாரத்தின் பல பிரிவுகளும் ஏற்கனவே பேரிடர் மற்றும் நடைமுறையளவில் பொறிவைக் குறித்து அச்சுறுத்தலில் உள்ள நிலையில், தீவிரமாக பணிநீக்கங்கள் தொடங்கி உள்ளன.
பவல், அவரது உரையில், முன்னாள் பெடரல் தலைவர் பால் வொல்கரைக் குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார், அவரை அவர் தனது புத்திஜீவித வட நட்சத்திரமாக (North Star) முன்னர் சித்தரித்திருந்தார். ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜிம்மி கார்டரால் நியமிக்கப்பட்டு, குடியரசுக் கட்சி ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் தக்க வைக்கப்பட்ட வொல்கர், 1970 கள் மற்றும் 1980 களின் முற்பகுதியில் பொருளாதார 'அதிர்ச்சி சிகிச்சை' திட்டத்தை மேற்பார்வையிட்டார், பாரிய வேலையின்மையைத் தூண்டுவதற்கும், அதற்கு முந்தைய தசாப்தத்தில் மேலோங்கி இருந்த போர்குணமிக்க தொழிலாளர்களின் போராட்டங்களின் முதுகெலும்பை முறிப்பதற்காகவும், அந்தத் திட்டம் வட்டி விகிதங்களை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்தியது. “சராசரி அமெரிக்கத் தொழிலாளரின் வாழ்க்கைத் தரங்கள் குறைய வேண்டும்,” என்று 1982 இல் வொல்கர் அறிவித்தார்.
இப்போதோ, “தேசிய நலன்களின்' பெயரில் தொழிலாளர்கள் தியாகம் செய்ய வேண்டும் —வாழ்க்கைத் தரங்கள் குறைவதை ஏற்றுக் கொள்ள வேண்டும்— மற்றும் 'ரஷ்ய ஆக்கிரமிப்பு' என்று கூறப்படுவதற்கு எதிராக போராட வேண்டும் என்று பைடென் நிர்வாகமும், அரசியல் ஸ்தாபகமும், பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கும் தொழிலாளர்களுக்குக் கூறி வருகின்றன.
ஆனால் தொழிலாள வர்க்கத்தின் செலவில் நிதிய தன்னலக் குழு அதன் சுரண்டலை அதிகரித்து செல்வச்செழிப்பில் கொழிக்கும் நோக்கில், ஆளும் வர்க்கமும் அதன் பிரதிநிதிகளும் 'தியாகத்தை பகிர' கோருவது ஒரு மோசடி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
ஆளும் வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர்க் கொள்கைக்கான விடையிறுப்பானது, தேசிய எல்லைகளைக் கடந்து தொழில்துறையின் ஒவ்வொரு பிரிவிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு நனவுபூர்வமான அரசியல் வேலைத்திட்டமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு ஏற்கனவே சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு வெடிப்பைக் கண்டுள்ளது, உற்பத்தித் துறைத் தொழிலாளர்களில் இருந்து, கப்பல்துறைத் தொழிலாளர்கள் மற்றும் ட்ரக் ஓட்டுனர்கள், விமானிகள் மற்றும் விமானச் சிப்பந்திகள், செவிலியர்கள் மற்றும் பள்ளி/கல்வித்துறையினர் வரையில் மற்றும் இன்னும் பலரையும், முன்பினும் பெரிய அடுக்கை இந்த வெடிப்பு உள்ளீர்த்து உள்ளது.
ஐக்கிய வாகனத்துறைத் தொழிலாளர்கள் சங்கத்தின் சர்வதேச தலைவருக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்திற்குக் கிடைத்துள்ள பரந்த ஆதரவானது, தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் இந்த இயக்கம் ஒரு முற்போக்கான பாதையைக் காணும் மிகப் பெரிய சாத்தியக்கூறை எடுத்துக் காட்டுகிறது. மாக் ட்ரக்ஸ் ஆலை தொழிலாளியும் சோசலிசவாதியுமான லெஹ்மன், தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற, அடிமட்டத்தில் இருந்து ஒரு சாமானிய தொழிலாளர் இயக்கத்தை ஒழுங்கமைப்பதற்காக UAW தேர்தல்களில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
சமூகத்தின் ஆதார வளங்களை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பதை —நிதியியல் தன்னலக் குழுக்களின் நலன்களோ தேவைகளோ அல்ல— தொழிலாளர்களின் நலன்களும் தேவைகளும் தீர்மானிக்கும் வகையில், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் முதலாளித்துவ நெருக்கடியின் பாதிப்புகளுக்கு எதிராக தொழிலாளர்களின் மேலெழுந்து வரும் இந்தப் போராட்டங்கள், லெஹ்மன் குறிப்பிடும் சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கை ஏற்க வேண்டும்.