முன்னோக்கு

தொழிலாளர் தினம் 2022 இல் அமெரிக்கத் தொழிலாளர்கள் எதிர் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தொழிலாளர் தினம் 2022 தொழிலாள வர்க்கத்திற்கு இரண்டு விருப்பத் தெரிவுகளை வழங்குகிறது. ஒன்று, ஏகாதிபத்திய போருக்கு தொழிலாளர்களை விலை கொடுக்கத் திட்டமிடுகின்ற, மரண எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் பெருந்தொற்று பரவலுக்கு வழி வகுக்கின்ற, வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் பாரிய பணிநீக்கங்களை ஏற்படுத்துகின்ற, மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துக் கொண்டிருக்கையில் சம்பளங்களைக் குறைத்து வருகின்ற AFL-CIO மற்றும் பைடென் நிர்வாகத்துடனான ஒரு பாதையாகும்.

மற்றொரு பாதை, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தை அபிவிருத்தி செய்வதாகும். விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கைகளை நிராகரிப்பது, ஒரு சர்வதேச வேலைநிறுத்த அலையை அபிவிருத்தி செய்வது, ஒவ்வொரு வேலையிடத்திலும் விஷயங்களை உள்ளபடி அப்படியே தொடர முடியாது என்ற உணர்வு அதிகரித்து வருவது என்ற வடிவில், இதுதான் புறநிலையாக நடந்து வருகிறது.

ஆனால் வெற்றிபெற வேண்டுமானால், இந்த மேலெழுந்து வரும் இயக்கத்திற்கு அரசியல் திசையும் மூலோபாய விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

தோல்வியை நோக்கிய முதல் பாதை, AFL-CIO மற்றும் ஜனநாயகக் கட்சி வழியாக செல்கிறது. ஜனாதிபதி பைடென் இன்று பிட்ஸ்பர்க் செல்வார், அங்கே அவர், AFL-CIO, ஐக்கிய எஃகுத்துறைத் தொழிலாளர்கள் சங்கம், அமெரிக்க ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் ஏனைய சங்கங்களின் ஊழல் பீடித்த பரவலாக வெறுக்கப்படும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அவருடைய 'தொழிலாளர்-சார்பு' கொள்கைகள் என்று கூறப்படுவதைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்.

வெள்ளை மாளிகை வெளியிட்ட ஒரு முன்கூட்டிய அறிக்கையில், பைடென் அறிவிக்கையில், “தொழிற்சங்கங்களே அமெரிக்க தொழிலாளர்களின் குரலாக உள்ளன, நம் சமூகத்தில் ஒரு முக்கிய சக்தியாக அதிகாரத்தை நோக்கிய அவர்களின் பாதையை வழி நடத்துகின்றன. தொழிற்சங்கங்கள் அதிக சம்பளத்திற்காகவும் மற்றும் குடும்ப உதவி சலுகைகளுக்காகவும் போராடின, முக்கிய மருத்துவ மற்றும் பாதுகாப்புத் தரமுறைகளை ஸ்தாபித்தன, 8 மணி நேர வேலை நாளை ஏற்படுத்தின, குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தன, வேற்றுமை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பாதுகாத்தன, பொருளாதார செல்வ வளத்தில் ஒவ்வொரு தொழிலாளரின் நியாயமான பங்கிற்காக பேரம்பேசின. தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முக்கிய முடிவுகளின் போது தொழிலாளர்களுக்காக குரல் வழங்கிய அவை, நம் எதிர்கால ஜனநாயகத்தை வடிவமைப்பதில் ஒரு மாற்றத்திற்குரிய பாத்திரம் வகிக்கின்றன…' என்றார்.

பைடென் யதார்த்தத்தைத் தலைகீழாக மாற்றுகிறார். 'அமெரிக்கத் தொழிலாளர்களுக்கான குரல்' என்பதற்குப் பதிலாக, உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களது உறுப்பினர்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாதளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது, மொத்தத் தொழிலாளர்களில் 10.3 சதவீதத்தினரும் மற்றும் தனியார் துறை தொழிலாளர்களில் 6.1 சதவீதத்தினரும் மட்டுமே ஒரு தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். தொழிலாள வர்க்கம் மீதான பொலிஸாக செயல்பட தொழிற்சங்கங்களை ஒரு முக்கிய கருவியாகப் பார்க்கும் முதலாளித்துவ அரசு மற்றும் முதலாளிமார்களின் ஒரு பிரிவினரிடம் இருந்து அவை பெற்றுள்ள நிதி உதவிகள் மற்றும் அமைப்புரீதியிலான உதவிகளையே, பெரும்பாலும் கடந்த 40 ஆண்டுகளாக, இந்த அமைப்புகளின் தொடர்ச்சியான இருப்பு சார்ந்திருந்துள்ளது.

தொழிற்சங்கங்கள் 'அதிக சம்பளத்திற்காக போராடிய' காலம், மிக வெகு காலத்திற்கு முந்தையவையாக ஆகிவிட்டன. கடந்தாண்டு, பணவீக்கம் நான்கு தசாப்தங்களில் அதிகபட்சமாக 8.5 - 9.0 சதவீதமாக உயர்ந்தது, எரிபொருள் செலவுகள் 41.6 சதவீதமாக அதிகரித்தது, ஆனால் தொழிற்சங்கத்தில் இருந்த சராசரி தொழிலாளருக்கு வெறும் 4.4 சதவீத சம்பள உயர்வு மட்டுமே இருந்தது. இது தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களின் 5.3 சதவீத உயர்வைக் காட்டிலும் குறைவாகும்.

தொழிற்சங்கங்கள் 'ஒவ்வொரு தொழிலாளருக்கும் பொருளாதார செல்வ வளத்தில் நியாயமான பங்கு கிடைக்க பேரம்பேசி' உள்ளன என்ற பைடெனின் கூற்றுக்கள், அமெரிக்க தொழிலாளர்களின் உண்மையான சம்பளங்கள் நான்கு தசாப்தமாக ஏற்பட்டு வந்துள்ள நீண்ட வீழ்ச்சியாலும், பெருநிறுவன மற்றும் நிதியத் தன்னலக்குழுவின் செல்வ வளத்தின் அதிகரிப்பாலும் பொய்யென ஆகின்றன. இந்தப் பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, அமெரிக்காவின் 727 பில்லியனர்களின் நிகர மதிப்பு 70 சதவீதம் அல்லது 1.71 ட்ரில்லியன் டாலர்கள் உயர்ந்தது. இதற்கிடையே, மக்கள்தொகையில் உயர்மட்ட 5 சதவீத வருவாய் பிரிவினரில் உள்ள அதிகாரத்துவவாதிகள் தலைமையிலான தொழிற்சங்கங்களோ, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கப்பல் கட்டும் துறைகள், டயர் தொழில்துறை, மருத்துவமனைகள் மற்றும் பொதுத் துறையில் ஒப்பந்தங்களை பேரம்பேசி உள்ளன. இந்த சம்பள உயர்வுகள், ஐக்கிய எஃகுத்துறை தொழிலாளர் சங்கத் தலைவர் டோம் கன்வே பெருமையாகக் குறிப்பிட்டவாறு, “பணவீக்க அழுத்தத்திற்கேற்ப அதிகரிக்கப்படவில்லை.”

தொழிற்சங்கங்கள் 'முக்கிய மருத்துவ மற்றும் பாதுகாப்பு தரமுறைகளை' அமலாக்குவதை பொறுத்த வரை, மீண்டும், இதுவும் எதிர்விதமாக உள்ளது. இந்தப் பெருந்தொற்று நெடுகிலும், AFL-CIO தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்பற்ற தொழிற்சாலைகள், பள்ளிகள் மற்றும் பிற பணியிடங்களுக்குச் செல்ல நிர்பந்திப்பதில் முக்கியப் பங்காற்றி உள்ளன. இது மிகப் பெருமளவில் 1 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழப்பதிலும், அமெரிக்காவில் ஆயுள் காலம் வரலாற்றளவில் வீழ்ச்சி அடைவதிலும் பங்களித்துள்ளது. தொழிற்சங்கங்கள் இந்த எண்ணிக்கையை மூடிமறைத்த நிலையில், தொழிற்சங்கத்தில் இணைந்திருந்த பத்து ஆயிரக் கணக்கான போக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை, சில்லறை வணிகம், சரக்கு கையாளும் துறை, இறைச்சிப் பதப்படுத்தும் துறை தொழிலாளர்களும் மற்றும் பிற தொழிலாளர்களும் உயிரிழந்துள்ளனர், இதில் பணியில் இருந்த மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே 8,000 பேர் உள்ளடங்குவார்கள். இன்னும் மில்லியன் கணக்கானோர் நீண்ட கால பாதிப்புகளை முகங்கொடுக்கின்றனர். இந்த கொடூரமான புள்ளிவிவரங்கள், ஆண்டுதோறும் வேலையிட விபத்துக்களில் உயிரிழக்கும் 5,000 தொழிலாளர்களுக்கு — அல்லது நாளொன்றுக்கு அண்மித்து 14 பேருக்கு — மேலதிகமாக உள்ளன.

எட்டு மணி நேர வேலை பற்றிய பைடெனின் குறிப்பு ஓர் அவமதிப்பாகும். தொழிற்சங்கங்கள் ஒரு நாளைக்கு 10, 12, அதற்கும் கூடுதலான வேலை நேரங்கள், வாரத்திற்கு ஆறு அல்லது ஏழு நாட்கள் கூட வழக்கமாக வேலை நாட்களாகச் செயல்பட அனுமதிக்கின்றன. சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புகள் இல்லாத இரயில்வே தொழிலாளர்கள், அடிப்படையில் வாரம் முழுவதும் 24 மணி நேரமும் அழைக்கப்படக் கூடியவர்களாக உள்ளனர். வேலையில் உறிஞ்சப்படும் அத்தகைய அபாயகரமான மணி நேரங்களுக்குப் பின்னர் தான், தொழிலாளர் தினத்தில் சில தொழிலாளர்கள் தான் பெரிதும் தேவைப்படும் ஓய்வைப் பெற்று, அவர்களுக்கு வேலை இல்லையென்றால் மட்டுமே அவர்களின் குடும்பங்களுடன் சற்று அரிய நேரங்களைச் செலவிடுகிறார்கள். மத்திய அரசின் கட்டாய சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளோ அல்லது ஓய்வு நேரங்களோ இல்லாத, மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்களில் நான்கில் ஒருவருக்கு இதில் எதுவுமே இல்லாத, உலகின் ஒரே முன்னேறிய பொருளாதாரமாக அமெரிக்கா மட்டுமே விளங்குகிறது.

பைடெனின் கருத்துப்படி, தொழிற்சங்கங்கள் 'தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் முக்கிய முடிவுகளின் போது அவர்களுக்கான குரல் எழுப்புகின்றன, நம் எதிர்கால ஜனநாயகத்தை வடிவமைப்பதில் மாற்றத்திற்குரிய பங்கு வகிக்கின்றன,” என்கிறார். உண்மையில் சொல்லப் போனால், வேலைநிறுத்த நடவடிக்கைக்கான ஒருமனதான வாக்குகளைப் புறக்கணித்து, தகவல்களை மூடிமறைத்து, அச்சுறுத்தல்கள் மற்றும் வாக்கெடுப்பு-முறைகேடுகள் மூலமாக நிறுவனம்-சார்ந்த ஒப்பந்தங்களை முன்நகர்த்தும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளால் வழமையாக தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

சமீபத்திய வாரங்களில், 28,000 வெஸ்ட் கோஸ்ட் கப்பல்துறைத் தொழிலாளர்கள், 110,000 இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் நாடெங்கிலும் நூறாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு நடைமுறையில் தடை விதிக்க, தொழிற்சங்கங்கள் பைடென் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளன.

மிக முக்கியமாக, ட்ரம்ப், அவரின் பாசிச ஆதரவாளர்கள் மற்றும் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையின் முன்னிறுத்தும் சர்வாதிகார அபாயம் குறித்து கடந்த வியாழக்கிழமை இரவு பைடென் வழங்கிய உரை குறித்து தொழிற்சங்கங்கள் முற்றிலும் மவுனமாக உள்ளன. 'ட்ரம்ப் மற்றும் MAGA குடியரசுக் கட்சியினரும்,' 'நம் குடியரசின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் ஒரு தீவிரவாதத்தை' ஊக்குவித்து வருகிறார்கள் என்று பைடென் கூறினார். அவர்கள் 'அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கவில்லை', 'மக்களின் விருப்பத்தை அங்கீகரிக்கவில்லை' அல்லது 'ஒரு சுதந்திரமான தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லை,' என்றார்.

பைடெனைப் போலவே, எல்லா தொழிற்சங்கங்களும் இந்த இடைக்காலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களிக்க செய்வதற்காக உயிர்பிழைப்புக்கான இதே அச்சுறுத்தலைக் கூறலாம். ஆனால் உண்மை என்னவென்றால் கடந்த நான்கு தசாப்தங்களாக தொழிற்சங்கங்களும் ஜனநாயகக் கட்சியும் தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை ஊக்குவித்து வந்த அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகளைத் தாக்கி வந்துள்ளன. இது தான், ட்ரம்பும் குடியரசுக் கட்சியினரும் மக்களின் அதிருப்தியை அவர்களின் சொந்தப் பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுத்துள்ளது.

தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும், தொழிற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்துடன் அணி சேர்ந்துள்ளன. கோவிட் இன் போது, அது பரவுவதற்கு அவை உதவி உள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கப் பினாமி போர் மற்றும் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் நடவடிக்கைகள் மற்றும் இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பு ஆகியவற்றில், தொழிற்சங்கங்கள் அதை ஆதரித்துள்ளன. பணவீக்க விஷயத்தில், தொழிற்சங்கங்கள் சம்பள வெட்டுக்களுக்கு ஆதரவாக உள்ளன. பாசிசம் சம்பந்தமாக, அவை வாய் திறப்பதில்லை. ஜனநாயகக் கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரை விரிவாக்கி வருகின்ற போதிலும், அதிகரித்து வரும் விலைகளுக்கு ஏற்ப சம்பள உயர்வுகளைக் கோரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் இருந்து அவர்களைப் பின்வாங்கச் செய்ய பொருளாதாரத்தை ஒரு மந்தநிலைக்குள் செலுத்த அச்சுறுத்துகின்ற போதிலும் கூட, அவை தொழிலாள வர்க்கத்தை ஜனநாயகக் கட்சிக்குக் கீழ்படிய செய்கின்றன.

அவர் 'அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தொழிற்சங்க-சார்பு ஜனாதிபதி' என்று பைடென் பெருமை பேசுகிறார். அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பு அலையைத் தடுத்து நிறுத்தி, வெளிநாட்டில் போர் தொடுக்கவும் உள்நாட்டில் வர்க்கப் போர் தொடுக்கவும் அவசியமான தொழிலாளர் நெறிமுறைகளைத் திணிக்க முடியும் என்ற நம்பிக்கையில், அவரது நிர்வாகம் மதிப்பிழந்த மற்றும் வெறுக்கப்படும் அதிகாரத்துவத்திற்கு முட்டுக்கொடுக்க அனைத்தையும் செய்து வருகிறது என்பதேயே இதன் மூலம் அவர் அர்த்தப்படுத்துகிறார்.

பைடெனின் திட்டநிரல் பெருநிறுவனவாதம் ஆகும், அதாவது தொழிற்சங்கங்களை முன்பினும் அதிக நெருக்கமாக பெருநிறுவன நிர்வாகம் மற்றும் அரசுடன் ஒருங்கிணைப்பதாகும்.

வர்க்கப் போராட்டத்தின் ஓர் இயக்கத்தின் அபிவிருத்திக்கு, ஒவ்வொரு கட்டத்திலும், சுயாதீன அமைப்புக்களை, சாமானியத் தொழிலாளர் குழுக்களைக் கட்டமைப்பது அவசியமாகும், அவை அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பெருநிறுவனத் தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளையும் ஐக்கியப்படுத்தும். இது, ஜனநாயகக் கட்சி மற்றும் AFL-CIO வழியாகச் செல்லும் தோல்வி பாதைக்கு நேரெதிராக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெற்றிப் பாதையாக இருக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த வளர்ந்து வரும் கிளர்ச்சியின் மிக உயர்ந்த வெளிப்பாடு தான், பென்சில்வேனியா மாக் ட்ரக்ஸ் ஆலைத் தொழிலாளரும், ஐக்கிய வாகனத்துறைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சோசலிச வேட்பாளருமான வில் லெஹ்மனின் பிரச்சாரமாகும். தொழிலாளர் அதிகாரத்துவங்களை ஒழித்து அதிகாரத்தை சாமானியத் தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்கு அவர் விடுத்த அழைப்புக்கு, வாகனத் துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளிடம் இருந்து அவருக்குப் பலமான ஆதரவு கிடைத்துள்ளது.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும் வேலையிடத்திலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்கி, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்புவதன் மூலம் தேசிய எல்லைகளைக் கடந்த போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு லெஹ்மன் அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலாள வர்க்கத்தின் இந்த சுயாதீனமான அமைப்பு, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டி எழுப்புவதுடன் இணைக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் ஏதோ ஒரேயொரு பிரச்சினையை எதிர்கொள்ளவில்லை—சுரண்டல் மற்றும் சமத்துவமின்மை, பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல், ஏகாதிபத்தியப் போர் ஆகியவற்றை இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக் கட்டமைப்புக்குள் தீர்க்க விட முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமையாகக் கட்டமைத்து, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் வர்க்கப் போராட்ட வளர்ச்சியை இணைத்து, சோசலிசத்திற்கான போராட்டமே முன்னோக்கிய பாதையாகும்.

Loading