முன்னோக்கு

UAW தொழிற்சங்கத் தேர்தல்கள் தொடங்க இன்னும் ஒரு வாரம் இருக்கையில்: அதிகாரத்துவத்திற்கு எதிராக சாமானியத் தொழிலாளர்களின் அதிகாரம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர் சங்கத்தின் (UAW) கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தொழிலாளர்கள், UAW இன் வரலாற்றிலேயே இந்த மிகவும் முக்கியமான தேர்தல்களில் ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களில் வாக்களிக்கத் தொடங்குவார்கள்.

வேலையில் உள்ள 900,000 உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூ பெற்ற UAW உறுப்பினர்களுக்கு அடுத்த திங்கட்கிழமை, அக்டோபர் 17 இல் இருந்து வாக்குச்சீட்டுக்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும். பல ஆண்டு கால ஊழல் மோசடிகளின் காரணமாக UAW இன் தேசியத் தேர்தல்களை கண்காணிக்கும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர், கடைசி நாளான நவம்பர் 28 இல் வாக்குச்சீட்டுக்கள் பெறப்பட்டு இருப்பதற்காக, நவம்பர் 18, வெள்ளிக்கிழமைக்குள் எல்லா வாக்குச்சீட்டுக்களும் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு விடும் என்று அறிவித்துள்ளார்.

UAW இன் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில், பென்சில்வேனியாயின் மாக்கன்கி இல் உள்ள மாக் ட்ரக் ஆலையின் ஒரு சோசலிச மற்றும் இரண்டாம் அடுக்கு தொழிலாளி வில் லெஹ்மன் ஒரேயொருவர் மட்டுமே சாமானியத் தொழிலாளர்களின் தேவைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்கிறார் என்பது முன்பினும் தெளிவாக ஆகி உள்ளது. உலக சோசலிச வலைத் தளம் UAW தலைவர் பதவிக்கு லெஹ்மனை ஆதரித்துள்ளதுடன், வரவிருக்கும் வாரங்களில் UAW உறுப்பினர்கள் சாத்தியமானளவுக்கு அவருக்கு மிகப் பெரியளவில் வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

சாமானியத் தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டத்தை லெஹ்மன் அவர் பிரச்சாரத்தின் மையத்தில் வைத்துள்ளார். சாமானியத் தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கத் தொழிலாளர்களை ஊக்குவித்து அவர்களுக்கு உதவும் வகையில், அவர் UAW அதிகாரத்துவத்தின் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, வேலையிடங்கள் சம்பந்தமான எல்லா முடிவுகள் மீதான கட்டுப்பாட்டைச் சாமானியத் தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்காக ஒரு பாரிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கிறார்.

லெஹ்மனின் பிரச்சாரம், தொழிலாள வர்க்கத்தில், அதுவும் குறிப்பாக எண்ணிக்கையில் அதிகரித்து வரும் குறைந்த சம்பளம் பெறும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் 'துணைநிலை' பணியாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கிளர்ச்சி மற்றும் போர்க்குண மனநிலையுடன் பலமான முறையில் ஒத்திசைந்து வருகிறது. மிச்சிகன், ஓஹியோ, இண்டியானா, கென்டக்கி அல்லது வேறு எந்த இடத்திலும் உள்ள தொழிற்சாலைகளோ அல்லது கிட்டங்கிகளோ, லெஹ்மனும் அவர் ஆதரவாளர்களும் எங்கே சென்றாலும், அவர்கள் UAW இன் ஊழல் அதிகாரத்துவம் மீது வெறுப்பையும், அதிகாரத்தைச் சாமானியத் தொழிலாளர்களின் கரங்களுக்கு மாற்றுவதற்கான கோரிக்கைக்கு ஆதரவையும் எதிர்கொண்டுள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில், லெஹ்மனின் சர்வதேசியமும் மற்றும் வேறு வேறு நாடுகளின் தொழிலாளர்களை ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதற்கான அவர் அழைப்பும் ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பு புள்ளியாக சேவையாற்றி வருகிறது. ஜிஎம் ஃப்ளின்ட் ஆலையின் தற்காலிக பகுதி நேர தொழிலாளர் ஒருவர் WSWS க்கு சமீபத்தில் கூறுகையில், 'நம் வேலைகளைத் தக்க வைத்துக் கொள்ள, அமெரிக்காவுக்கு வெளியே உள்ள ஜிஎம் தொழிலாளர்களுடன் நாம் போட்டி போட வேண்டும் என்று என் ஆலையின் UAW அதிகாரத்துவவாதிகள் எங்களுக்குக் கூறுகிறார்கள்,” என்றார். 'நாங்கள் எல்லோருமே அதே ட்ரக்குகளைத் தான் தயாரிக்கிறோம், ஜிஎம் உலகெங்கிலும் தொழிலாளர்களைப் பணி அமர்த்துகிறது, ஆகவே அமெரிக்கா அல்லது மெக்சிகோ அல்லது அதைக் கடந்து எந்தவொரு எல்லைக்கு உள்ளேயும் எங்கள் போராட்டங்களை ஏன் மட்டுப்படுத்த வேண்டும்? வில்லின் பிரச்சாரம் அமெரிக்காவுக்குள் மட்டுமில்லை மாறாக இத்தகைய எல்லைகளைக் கடந்து மெக்சிகோவின் சிலியோ மற்றும் கனடாவின் ஓஷாவாவின் எங்கள் சகோதர ஆலைகளில் உள்ள தொழிலாளர்களுடன் எங்களை ஐக்கியப்படுத்துவதால், அவர் பிரச்சாரத்தை நான் ஆதரிக்கிறேன்,” என்றவர் தெரிவித்தார்.

UAW அதிகாரத்துவவாதிகள் 'ஒற்றுமை இல்லத்தில்' (Solidarity House) அவர்கள் வழியில் நடந்து கொண்டிருந்தால், தொழிலாளர்களால் இந்தச் சங்கத்தின் தேசிய தலைமைக்கு வாக்களிக்கக் கூட முடியாமல் போய் இருக்கும். UAW தலைவர் பதவிக்கும் மற்றும் மற்ற செயற்குழு பதவிகளுக்கும் நேரடியாக தேர்தல் நடத்தப்படுவதற்கான ஒரே காரணம், ஏனென்றால் பரந்த UAW ஊழல் மோசடியாகும், தொழிற்சங்கத்தின் பல உயர்மட்ட அதிகாரிகள் பெருநிறுவனங்களிடம் இலஞ்சம் வாங்குவது அல்லது தொழிலாளர்களின் சந்தா தொகைகளைக் கையாடல் செய்வதை இந்த ஊழல் மோசடிகள் வெளிப்படுத்திக் காட்டின. நேரடி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமா என்பதன் மீது நீதிமன்றம் உத்தரவிட்ட ஒரு பொது வாக்கெடுப்பில், பெருவாரியான தொழிலாளர்கள் அந்த சங்கத்தின் உயர்மட்ட பதவிகளுக்காக 'ஓர் உறுப்பினருக்கு ஒரு வாக்கு' என்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அது விரும்பாத ஒரு தேர்தலை எதிர்கொண்டுள்ள UAW எந்திரம், இப்போது முடிந்த வரை வாக்குப்பதிவு எண்ணிக்கையைக் குறைக்க கருதி வருகிறது. வாகனத் துறைத் தொழிலாளர்கள் திட்டமிட்டு இருட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் சகத் தொழிலாளர்களில் பலருக்குத் தேர்தல் நடத்தப்படுவது கூட தெரியாது என்று வாகனத் துறைத் தொழிலாளர்கள் WSWS க்கு கூறி உள்ளனர்.

UAW தேர்தல்கள் பற்றிய தகவல் இருட்டடிப்பு நடைமுறையளவில் பெருநிறுவன ஊடகங்கள் வரை நீள்கின்றன. நியூ யோர்க் டைம்ஸூம் மற்ற தேசிய செய்தி நிறுவனங்களும் பல மாதங்களாக இந்தத் தேர்தல்கள் குறித்து மவுனமாக இருந்தன. டைம்ஸைப் பொறுத்த வரையில், தொழிலாளர் விவகாரங்களுக்கான அதன் முன்னாள் தலைமை நிருபர் ஸ்டீவன் கிரீன்ஹவுஸ், கடந்த மாதம் UAW வேட்பாளர்கள் மத்தியில் நடந்த விவாதங்களுக்கு நெறியாளுநராக இருந்தார் என்ற உண்மை இருப்பினும் இவ்வாறு உள்ளது. இதற்கிடையே, அமெரிக்க வாகனத் தொழில்துறையின் மையமான டெட்ராய்டு செய்தி நிறுவனங்கள் எப்போதாவது கடமைக்காக மட்டுமே செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர்கள் சங்கத் தேர்தல்கள் மீதான மவுனம், லெஹ்மன் பிரச்சாரம் மீதுள்ள ஆழ்ந்த பதட்டத்தையும் அதை நோக்கிய விரோதத்தையும் பிரதிபலிக்கின்றன. ஆளும் வர்க்கம் இந்தத் தேர்தல்களைத் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாவலர்களுக்குள் மட்டுப்படுத்தி வைக்க நினைத்திருந்த நிலையில், UAW எந்திரமும், பெருநிறுவன-அரசியல் ஸ்தாபகத்தில் உள்ள அதன் பங்காளிகளும், லெஹ்மனை இந்த தேர்தல்களில் ஒரு 'சோசலிச தலையீட்டாளராக' பார்க்கின்றன.

அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் அத்துடன் நெருக்கமாக இணைந்த குழுவான லேபர் நோட்ஸ் போன்ற 'இடது' என்று கூறிக் கொள்ளும் அமைப்புகள், UAW மற்றும் ஊடகங்களின் இருட்டடிப்புடன் ஒத்திசைந்த வகையில் செயல்படுகின்றன. அந்த இரண்டு அமைப்புகளுமே இந்தத் தேர்தல்களில் நீண்ட கால UAW அதிகாரத்துவவாதியான ஷான் ஃபைன்னையும், 'ஒருங்கிணைந்த UAW உறுப்பினர்கள்' அமைப்பின் வேட்பாளர்களையும் ஆதரிக்கின்றன. ஆனால் DSA உடன் இணைந்துள்ள ஜாகோபின் மற்றும் இன் திஸ் டைம்ஸ் பத்திரிகைகளும், அத்துடன் லேபர் நோட்ஸூம், இந்த UAW தேர்தல்கள் குறித்து ஏறக்குறைய முற்றிலுமாக மவுனமாக இருந்துள்ளன.

சோசலிஸ்ட் என்று கூறிக் கொள்ளும் அதேவேளையில், இந்த அமைப்புகள் உண்மையில் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன, அதிக சம்பளம் பெறும் தொழிற்சங்க நிர்வாகிகளும் இதில் குறைந்த எண்ணிக்கையில் இல்லை என்பதும் உள்ளடங்கும். அவர்கள் கடுமையாக லெஹ்மன் பிரச்சாரத்திற்கு விரோதமாக இருக்கிறார்கள் ஏனென்றால் முற்றிலுமாக அவர்களின் சடரீதியான நலன்களும் அனுதாபங்களும் லெஹ்மன் ஒழிக்க விரும்பும் அந்தத் தொழிற்சங்க அதிகாரத்துவம் மீதுள்ளன. ஆனால் அவர்களின் சொந்த வேட்பாளரான ஃபனை கூட அவர்களால் முன்னிலைப் படுத்த முடியவில்லை ஏனென்றால் அவர்கள் அவ்வாறு செய்யும் போது சாமானிய தொழிலாளர் குழு மாற்றீட்டாக மற்றும் உண்மையான சோசலிஸ்டாக லெஹ்மனை இருப்பதை அவர்கள் ஒப்புக் கொள்ள நிர்பந்திக்கப்படுவார்கள்.

வேறு எதையும் விட ஆளும் வர்க்கத்தை அதிகமாக பயமுறுத்துவது என்ன என்றால், அமெரிக்காவில் தொழிலாளர்கள் சோசலிசத்திற்கு விரோதமானவர்கள் என்ற கட்டுக்கதையை லெஹ்மனின் பிரச்சாரம் தகர்த்து வருகிறது. தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்குப் பயப்படவில்லை அது அதிகரித்தளவில் அதை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளது என்பதற்கு வாழும் ஆதாரமாக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் லெஹ்மனுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.

அவர் பிரச்சாரம் நெடுகிலும் வழங்கிய எண்ணற்ற உரைகள் மற்றும் தொழிலாளர்களுடன் நடத்திய விவாதங்களில், லெஹ்மன் சோசலிசத்தையும் சமூகம் சமரசத்திற்கிடமின்றி வர்க்கங்களாகப் பிளவுபட்டு இருப்பதையும் தெளிவாக அழுத்தமான சொற்களில் விளக்கி உள்ளார். “இதைப் பார்க்கும் போது ஒவ்வொரு தொழிலாளரும் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாம் தான் மொத்த இலாபத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்,” என்று UAW சங்கத் தலைவர் வேட்பாளர்களின் விவாதத்தில் தெரிவித்தார். “மற்ற ஒவ்வொருவரும் அந்த இலாபத்திற்காக ஒட்டிக் கொண்டிருக்கும் வெறும் ஒட்டுண்ணிகள் தான். எல்லா அதிகாரத்துவவாதிகளும், எல்லா நிறுவனங்களும். நமக்கு அவர்கள் தேவையில்லை. அவர்களுக்குத் தான் நாம் தேவைப்படுகிறோம். தொழிற்சாலைகளில் இருப்பவர்கள் நாம் தான், மருத்துவமனை செவிலியர்களாக, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக, சமூகத்தைத் தொடர்ந்து நகர்த்திக் கொண்டிருப்பவர்கள் நாம் தான். முதலாளிமார்கள் இல்லை. நாம் தான், தொழிலாள வர்க்கம் தான், இந்த இலாபத்தை எப்படி பங்கீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.”

லெஹ்மனின் பிரச்சாரம் வர்க்கப் போராட்ட வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாகத் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் தங்களைப் பெருநிறுவன நிர்வாகக் கட்டமைப்புக்குள் ஒருங்கிணைத்துக் கொண்டுள்ள நிலையில், இத்தனை தசாப்தங்களுக்குப் பின்னர் ஒரு தொழில்துறை மாற்றி ஒரு தொழில்துறையில், ஒரு நாடு மாற்றி ஒரு நாட்டில், தொழிலாளர்களின் எதிர்ப்பை ஒடுக்கும் அவர்களின் ஆற்றல் முறிந்து வருகிறது.

விரிவடைந்து வரும் போர், அதிகரித்து வரும் பணவீக்கம், பூதாகரமாக உருவெடுத்து வரும் மந்தநிலைமை மற்றும் வேலைகள் மீதான தாக்குதல்கள் என இத்தகைய நிலைமைகளின் கீழ், வேலையிட நிலைமைகள் மற்றும் சம்பளங்களில் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட இடைவிடாத விட்டுக்கொடுப்புகளை அவர்கள் நிறுத்தி தலைகீழாக திருப்ப முயன்று வருகிறார்கள். 2021 இன் தொடக்கத்தில் இருந்து, இந்த கிளர்ச்சியானது, வொல்வோ ட்ரக் ஆலை மற்றும் ஜோன் டீர் ஆலையில் இருந்து, வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்களான டானா மற்றும் வென்ட்ரா வரையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஆதரவுடன் விற்றுத் தள்ளப்பட்ட ஒப்பநங்களைத் தொடர்ச்சியாக பாரியளவில் 'வேண்டாம்' வாக்குகள் இட்டு நிராகரிக்கும் வடிவம் எடுத்துள்ளது.

இந்த நிகழ்வுபோக்கு எந்த வகையிலும் வாகனத் துறைத் தொழிலாளர்களோடு நின்றுவிடவில்லை. பைடென் நிர்வாகம் மற்றும் காங்கிரஸ் உதவியுடன், இரயில்வே துறையில் பெருநிறுவனங்களின் கோரிக்கைகளைத் திணிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் செய்த முயற்சிகள், இரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் பரவலாகச் சீற்றத்தைத் தூண்டின. மூன்றாவது மிகப் பெரிய இரயில்வே தொழிற்சங்கமான BMWED இன் தண்டவாளப் பராமரிப்பு தொழிலாளர்கள், தொழிற்சங்கமும் வெள்ளை மாளிகையும் ஆதரித்த ஓர் ஒப்பந்தத்தைத் திங்கட்கிழமை நிராகரித்தனர்.

லெஹ்மனின் பிரச்சாரம் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு கிளர்ச்சிக்கு நனவான வெளிப்பாட்டைக் கொடுத்து வருவதுடன், அது ஒற்றுமைக்கான தொழிலாள வர்க்கத்தின் உள்ளார்ந்த ஆழ்ந்த விருப்பத்துடன் குறுக்கிட்டு வருகிறது.

ஆனால் UAW உறுப்பினர்களுக்கு ஒரு மின்னஞ்சலில் லெஹ்மன் விளக்கியதைப் போல, “நாம் செயலில் இறங்காத வரை நிலைமை மாறாது. தொழிலாளர்களாகிய நம்மிடம் அளப்பரிய பலம் உள்ளது, ஆனால் நமக்கு என்ன தேவையோ அதற்காக நம்மைத் தவிர வேறு யாரும் நமக்காக போராட போவதில்லை. இது தான் என் பிரச்சாரம், ஆனால் நான் அற்புதங்கள் நிகழ்த்தும் ஒரு தொழிலாளர் அல்ல. இந்த போராட்டத்தை நடத்த நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.”

வாக்குப்பதிவைக் குறைப்பதற்கும் மற்றும் தேர்தல்களை எந்திரத்திற்கு உள்ளேயே மட்டுப்படுத்தி வைப்பதற்குமான UAW அதிகாரத்துவத்தின் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்க, சாமானியத் தொழிலாளர்களின் தேர்தல் குழுக்களை அமைக்குமாறு வாகனத் துறைத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய UAW உறுப்பினர்களுக்கு லெஹ்மன் அழைப்பு விடுத்துள்ளார் UAW தேர்தல்கள் குறித்தும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதைப் பற்றியும்; ஆலைகளில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய தகவல்களை வினியோகிக்கவும்; தேர்தல் பிரச்சினைகளை விவாதிக்க தகவல் பரிமாற்ற மறியல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யவும்; தேர்தல்கள் முடிந்த பின்னரும் இந்தப் போராட்டத்தைத் தொடர்வதற்குத் தேவையான சாமானியத் தொழிலாளர் குழுக்களின் வலையமைப்புக்கு அடித்தளத்தை அமைக்கவும் இத்தகைய குழுக்கள் சேவையாற்றும் என்றவர் தெரிவித்தார்.

அதிகாரம் சாமானியத் தொழிலாளர்களின் கரங்களில் இருக்க வேண்டும்! என்பதில் உடன்படும் எல்லோருடைய செயலூக்கமான ஆதரவும், UAW சங்கத்தில் இருந்தாலும் அல்லது அதற்கு வெளியே இருந்தாலும், லெஹ்மன் அதைப் பெறத் தகுதி உடையவர் ஆவார். இந்தப் பிரச்சாரம் குறித்து இன்னும் கூடுதலாக தெரிந்து கொள்வதற்கும், இதில் ஈடுபடுவதற்கும் WillForUAWPresident.org என்ற தளத்தைப் பார்க்கவும்.