முன்னோக்கு

நியூயோர்க் அல்பானியில் தோல்வியடைந்த அமசன் தொழிற்சங்க பிரச்சாரத்தின் படிப்பினைகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று, தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் (NLRB) நியூ யோர்க்கின் அல்பானியில் உள்ள அமசன் நிறுவனத்தின் தொழிலாளர்கள் அமசன் தொழிலாளர் சங்கத்துடன் (ALU) தொழிற்சங்கமயப்படுத்துவதற்கு எதிராக இரண்டுக்கு ஒன்று என்ற வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்தனர். 406 தொழிலாளர்கள் “இல்லை” என்றும் மற்றும் 206 பேர் மட்டுமே “ஆம்” என்று வாக்களித்தனர்.

பண்டகசாலையில் உள்ள தொழிலாளர்கள் உலகின் மிகவும் சுரண்டும் மற்றும் சக்திவாய்ந்த நிறுவனங்களில் ஒன்றால் கட்டாயப்படுத்தப்பட்ட நிபந்தனைகளில் திருப்தி அடைந்துள்ளதால் வாக்களிப்பு தோல்வியடையவில்லை. மாறாக, அல்பானி பண்டகசாலை (ALB1 என அழைக்கப்படுகிறது) நாட்டில் உள்ள மிகவும் ஆபத்தான அமசன் நிலையங்களில் ஒன்றாகும். குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற நிலைமைகள் மற்றும் அவர்களின் உரிமைகளை வழக்கமான மீறல் ஆகியவற்றிற்கு சாமானிய தொழிலாளர் எதிர்ப்பு பரவலாக உள்ளது.

இந்த பண்டகசாலை என்பது ஒரு விஷேட 'பாரிய அளவிலான' ஒன்றாகும். அங்கு தொழிலாளர்கள் தொலைக்காட்சிகள், வெளிப்புற உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் போன்ற கனரக உபகரணங்களைக் கையாளுகின்றனர். தேசிய வேலைவாய்ப்பு சட்டங்களுக்கான வேலைத்திட்டம் (NELP) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, நியூ யோர்க் மாநிலத்தில் அல்பானி பண்டகசாலை மிகவும் ஆபத்தான அமசன் பண்டகசாலை ஆகும். இதில் 100 முழுநேர ஊழியர்களில் 22.3 சதவிகிதமானோருக்கு காயங்கள் ஏற்படும்.

2021 ஆம் ஆண்டில், பண்டகசாலையில் இருந்த 951 தொழிலாளர்களில் அதிர்ச்சியூட்டும்வகையில் 212 பேர் காயமடைந்தனர். இது ALU க்கு வாக்களித்த மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமானதுடன், மாநிலத்தின் இரண்டாவது மிகவும் ஆபத்தான அமசன் பண்டகசாலையை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு மோசமான விகிதமாகும். கடந்த ஆண்டில், 100 பேருக்கு 19.8 கடுமையான காயங்கள் என்ற விகிதத்தில், 188 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். வேறுவிதமாகக் கூறினால், அல்பானி அமசன் தொழிலாளி தற்போதைய நிலைமைகளின் கீழ் ஓராண்டு வேலையின் போது பணியில் கடுமையாக காயமடையும் வாய்ப்பு 5 க்கு 1 ஆக உள்ளது.

2022 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ALB1 மற்றும் பிற அமசன் பண்டகசாலைகளில் கோவிட்-19 பரவியது. ஆனால் அமசன் அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான கோவிட் ஊதியத்தை மே மாதத்தில் குறைத்தது. அமசன் பண்டகசாலைகளில் “கோவிட் ஊதியம் இல்லை, மன்னிப்பு இல்லை” என்று அடையாளங்களை வெளியிட்டது.

கடந்த வாரம் தேர்தலுக்கு முன்னதாக, பண்டகசாலையில் தீ விபத்து ஏற்பட்டு, தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி கட்டிடத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. நியூ யோர்க்கில் உள்ள அமசன் நிறுவனத்தில் ஒரு வார காலத்தில் ஏற்பட்ட மூன்றாவது தீ விபத்து இதுவாகும். ALU இல் ஒழுங்கமைக்கப்பட்ட JFK8 இல் உள்ள ஒரு பெரிய குழு தொழிலாளர்கள், ALB1 இல் தீ விபத்து ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பும் வாக்கெடுப்புக்கு முன்னும் பின்னும் தங்கள் பண்டகசாலைகளில் வெளிநடப்புச் செய்தனர். அல்பானி நிறுவனத்தில் பணிபுரிகையில் அசாதாரண ஆபத்து இருந்தபோதிலும், ஊதியங்கள் விதிவிலக்காக குறைவாகவே உள்ளன. 9 சதவீத பணவீக்கத்திற்கு மத்தியில் தொழிலாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு $17 இல் தொடங்குகின்றனர்.

இந்த வெடிக்கும் நிலைமைகளின் கீழ், ALU இனால் மொத்த தொழிலாளர் பிரிவில் நான்கில் ஒரு பங்கு வாக்குகளை கூட பெற முடியவில்லை. இதுவரை எந்த அமசன் தொழிற்சங்கமயமாக்கலிலும் இது மிக மோசமான வாக்குகளாகும்.

ஒவ்வொரு வாக்களிப்பிலும் ஆதரவு தொடர்ச்சியாக குறைவதை அமசனின் ஜனநாயக விரோத குறுக்கீடுகளினால் மட்டும் விளங்கப்படுத்தமுடியாது. இது ALU தேர்தல்கள் அனைத்திலும் தொடர்ந்து இருந்து வந்ததுள்ளதுடன், 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் தொழிற்சங்க இயக்கங்கள் முறியடித்த வெளிப்படையான வன்முறையுடன் ஒப்பிடமுடியாது. ALB1 தேர்தல் முடிவுக்கு எதிராக ALU மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால் மறுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக, அது பைடெனின் தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியத்திட்டம் 'இல்லை' என்ற வாக்கை மீறுமாறு அழைப்பு விடுத்து, நேரடியாக அமசன் நிறுவனத்தை அந்த பண்டகசாலையில் தொழிற்சங்கத்தை ஏற்குமாறு உத்தரவிட கோரியுள்ளது.

ALUக்கான ஆதரவில் ஏற்பட்ட சரிவு அதன் மூலோபாயத்தின் விளைவாகும். இது தொழிற்சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில் போராடும் என்ற சாமானிய தொழிலாளர்களின் தெளிவான வேண்டுகோளுடன் இணைக்கப்படவில்லை. ALU நிறுவனத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எந்தவொரு மூலோபாயத்தையும் வைத்திருப்பதாக தொழிலாளர்களை நம்ப வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ALB1 தேர்தலைப் பற்றிய அதன் இணைய தளப் பிரிவில் கோரிக்கைகள் எதுவும் இல்லாததுடன், 'அமசன் என்பது ஆழமாக வேரூன்றிய சிக்கல்களைக் கொண்ட ஒரு நிறுவனம் மற்றும் நிர்வாகம் எப்போதும் மக்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது' என்பது போன்ற தெளிவற்ற அறிக்கைகள் அடங்கியிருந்தது. தொழிலாளர்கள் ஏன் தொழிற்சங்கமயமாக்க முயல்கிறார்கள் என்பதற்கான ALU இன் விளக்கம் என்னவென்றால், 'எங்களுக்கு மேஜையில் ஒரு இருக்கை இருக்க வேண்டும். இதனால் சிறந்த ஊதியம், நன்மைகள் மற்றும் வேலை நிலைமைகளை பேச்சுவார்த்தை நடத்த முடியும்.' 'நாங்கள் எதற்காகப் போராடுகிறோம்' என்று அழைக்கப்படும் வலைத் தளத்தின் ஒரு தனியான பிரிவில் நிறுவனத்திடம் எந்தவொரு உறுதியான கோரிக்கைகளும் வைக்கப்படவில்லை.

தொழிலாளர்களின் சுயாதீனமான பலத்திற்கு கோரிக்கைவிடுவதற்குப் பதிலாக, வாக்கெடுப்புக்கு முன்னதாக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளை அமசன் தொழிலாளர்களின் கூட்டாளிகளாக ALU தொடர்ந்து உயர்த்திக்காட்டியது. சமூக ஊடகங்களில், இது நியூ யோர்க் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயல்படும் வெர்மான்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் ஆகியோரின் அறிக்கைகளைப் பகிர்ந்து கொண்டது. அல்பானியில் ALU முயற்சியை சாண்டர்ஸ் ஆதரித்த ஒரு சுருக்கமான ஒளிப்பதிவையும் பதிவிட்டது.

JFK8 இல் அதன் முதல் தேர்தலில், நிறுவனத்தின் சமமான அழுத்தத்தை எதிர்கொண்டு, தொழிலாளர்கள் ALU உடன் தொழிற்சங்கமயமாக வாக்களித்தனர். ஏனெனில் அவர்கள் ALU ஐ AFL-CIO அதிகாரத்துவத்தில் இருந்து வேறுபட்டதாகக் கண்டனர். அமசன் தொழிலாளர்கள் அலபாமாவின் பெஸ்ஸெமரில், சில்லறை, மொத்த விற்பனை, அங்காடிகள் தொழிற்சங்கத்தின் (RWDSU) தொழிற்சங்கமயமாக்கலுக்கான வாக்களிப்பினை இரண்டு முறை நிராகரித்தனர்.

ஆனால் JFK8 வெற்றிக்குப் பின்னர், ALU தன்னை AFL-CIO இன் தலைமையுடன், Teamsters போன்ற அமைப்புகளுடனும் மற்றும் அதன் தலைவர் சீன் ஓ'பிரையன், ஜனநாயகக் கட்சி, பைடென் நிர்வாகத்துடனும் பகிரங்கமாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. 'சுயாதீனமானது' பற்றிய அதன் கடந்தகால உரிமைகோரல்களை அது இல்லாதொழித்துவிட்டு, அமசனுக்கு எதிரான ஒரு வெளிப்படையான போராட்டத்திற்காக JFK8 தொழிலாளர்களிடம் முறையிட முயலவில்லை. இதற்கு மாறாக புதிய ஒப்பந்தத்திற்காக போராடுவதற்கு முன்னர், NLRB மேல்முறையீட்டு செயல்முறை தீர்ந்து போகும் வரை தொழிலாளர்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

ALU தலைவர் கிறிஸ் ஸ்மால்ஸ் மே மாதம் வெள்ளை மாளிகையில் ஜோ பைடெனை சந்தித்த பின்னர் ALU தொழிற்சங்கமயமாக்கல் தேர்தல் இதுவே முதல் முறையாகும். அமசனில் தொழிற்சங்கமயமாக்கல் முயற்சியின் பின்னால் பைடென் பலமுறை தனது அரசியல் மூலதனத்தை பயன்படுத்தியுள்ளார். மே மாதம், JFK8 இல் ALU இன் வெற்றிக்குப் பிறகு, பைடென் ஸ்மால்ஸைத் தழுவி, 'நீங்கள் அதை ஒரு இடத்தில் செய்துவிட்டீர்கள், நிறுத்த வேண்டாம்' என்றார்.

ஜனநாயகக் கட்சியுடனும், AFL-CIO அதிகாரத்துவத்துடனுமான ALU இன் அதிகரிக்கும் நெருங்கிய தொடர்புகள், வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான பல தசாப்தகால தாக்குதல்களை மேற்பார்வையிடுவதற்கு AFL-CIO பொறுப்பு என்று கருதும் சாமானிய தொழிலாளர்களிடையே அதன் ஆதரவில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. மிட்வெஸ்ட் மற்றும் நியூ யோர்க்கை சுற்றியுள்ள தொழில்துறை பகுதிகளில் இது நிகழ்ந்துள்ளது.

இந்த உண்மை அக்டோபர் 11 நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது: “அரசாங்கத் தரவுகளின்படி, அல்பானி நாட்டில் மிகவும் தொழிற்சங்கப்படுத்தப்பட்ட பெருநகரப் பகுதிகளில் ஒன்றாகும். மேலும் பல ஊழியர்கள் தொழிற்சங்கங்களைப் பற்றி நேர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தினர். ஆனால் தொழிற்சங்கமயமாக்கப்பட்ட பணியிடங்களில் கடந்தகால அனுபவம், மற்றொன்றில் சேருவதற்கான ஆர்வத்தை குறைக்கிறது என்று சிலர் கூறினார்கள்”.

அமசன் பணியிடங்கள் முழுவதிலும், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு தொழில்துறையிலும் வளர்ந்து வரும் பணியிடங்களில், சாமானிய தொழிலாளர்கள் தங்களின் சாத்தியமான வலிமையைப் பயன்படுத்துவதற்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் ஒரு வழியைத் தேடுகிறார்கள். ஒவ்வொரு கண்டத்திலும் தொழிலாளர்கள் அதிகரிக்கும் வாழ்க்கை செலவை எதிர்நோக்கையில் இந்நிறுவனங்களின் இலாபங்கள் அதிகரிக்கின்றன. ALU இன் முன்னோக்கு, தொழிற்சங்கத்துடன் தொழிலாளர்களை கட்டிவைப்பதாகும். இவ்வமைப்பை பைடென் நிர்வாகம் வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்கு மட்டுமல்ல, வெளிநாடுகளில் போரை நடத்துவதற்கும் ஒரு முக்கிய கருவியாக ஆதரவளிக்கிறது.

அமசன் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரின் உண்மையான போராட்டத்திற்கு, தொழிற்சங்கங்களின் அதிகாரத்திற்கு எதிராக சாமானிய தொழிலாளர்களின் அணிதிரட்டல் தேவைப்படுகிறது. அதன் அதிகாரத்துவத்தின் அமைப்பான தொழிலாளர்களின் சந்தாப் பணத்தை கறந்து எடுப்பதன் மூலம் தங்களை செழுமைப்படுத்திக் கொள்வதுடன், தொழிலாளர்களை கண்காணிக்கும் பணியை செய்கின்றது.

UAW இன் தலைவர் பதவிக்கு 34 வயதான சோசலிஸ்ட் மாக் ட்ரக்ஸ் தொழிலாளி வில் லெஹ்மனின் பிரச்சாரம் இதன் மிகவும் நனவான வெளிப்பாடாகும். அங்கு UAW இன் கடந்தகால தலைமை தொழிலாளர்களை காட்டுக்கொடுப்பதற்கு ஈடாக பெருநிறுவனங்களிடம் இலஞ்சம் பெற்றதற்காக சிறையில் தள்ளப்பட்டதால்தான் இந்த நேரடித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

லெஹ்மனின் பிரச்சாரத்தின் நோக்கம் ஊழல் நிறைந்த UAW அதிகாரத்துவத்தை ஒழிப்பதற்கும், தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும் ஒரு வெகுஜன இயக்கத்தை வளர்ப்பதாகும். லெஹ்மன் அதிகாரத்துவத்தில் சேரவோ அல்லது உள்ளிருந்து அதை சீர்திருத்தவோ தேர்தலில் கலந்துகொள்ளவில்லை. மாறாக கார்த் தொழில்துறையிலும் அனைத்துத் தொழில்களிலும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பலத்தை உலக பெருநிறுவனங்களுக்கு எதிரான ஒரு சர்வதேச போராட்டத்தில் கட்டவிழ்த்து விடுவதற்காகும்.

Loading