மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
குர்ஸ்கில் உள்ள விமானநிலையத்தில் நேற்றைய ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போரில் ஒரு பெரிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. தனது எல்லைக்குள் உள்ளே இரண்டு இராணுவ விமான நிலையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்களை கியேவ் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டிய ஒரு நாளைக்கு பின்னர் இது வந்துள்ளது.
உக்ரேன் எல்லையில் இருந்து 62 மைல் தொலைவில் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், தாக்கப்பட்ட எண்ணெய் குதங்கள் 10 மணி நேரம் கிட்டத்தட்ட 5,500 சதுர அடி பரப்பில் எரிந்ததாகக் கருதப்பட்ட பின்னர் ஒரு பெரிய தீ வெடித்தது.
தாக்குதல்கள் நடைபெற்ற இடம் மற்றும் அவை செயல்படுத்தப்பட்ட விதம் அமெரிக்காவின் நேரடித் தலையீட்டை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டுகிறது.
தென்-மத்திய ரஷ்யாவில் உள்ள ரியாசான் மற்றும் சரடோவ் ஆகிய இரண்டு விமான தளங்கள் மீது திங்களன்று நடந்த தாக்குதல்களுக்கு ரஷ்ய அதிகாரிகள் ஏற்கனவே கியேவ் மீது குற்றம் சாட்டியிருந்தனர். இது உக்ரேனால் ஏவப்பட்ட மாற்றியமைக்கப்பட்ட சோவியத் கால ரஷ்ய ஸ்ட்ரிஷ் ட்ரோன்களை உள்ளடக்கியதாக நம்பப்படுகிறது. இதில் மூன்று படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர், இரண்டு விமானங்கள் சேதமடைந்தன. ஏங்கெல்ஸ்-2 விமான நிலையத்திலும், டயாகிலெவோ விமானத் தளத்திலும் தாக்கப்பட்ட குண்டுவீச்சு விமானங்கள் அணு ஆயுதங்களைச் சுமக்கும் திறன் கொண்டவை. டயாகிலெவோவில் இருந்து படங்கள் அணுசக்தி திறன் கொண்ட Tu-22M3 குண்டுவீச்சு விமானத்தை அதன் இறக்கையின் கீழ் பொருத்தப்பட்ட Kh-22 ஏவுகணையுடன் சேதமடைந்த வால்ப்பகுதியை காட்டுகின்றன.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை தாக்குதல்கள் பயங்கரவாத செயல்கள் என்று கூறியது மற்றும் பதிலுக்கு உக்ரேனின் முக்கிய உள்கட்டமைப்பு மீது குண்டுவீச்சைத் தொடங்கியது.
சந்தேகத்திற்குரிய உக்ரேனிய ட்ரோன்கள் செவாஸ்டோபோலில் உள்ள பெல்பெக் இராணுவ விமான நிலையத்தையும் தாக்கின. ஆனால் வான் பாதுகாப்பு கருவிகளால் வீழ்த்தப்பட்டன. அதே நேரத்தில் ட்ரோன்கள் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள எரிபொருள் குதத்தை இலக்காகக் கொண்டு தோல்வியுற்றன என்று ரஷ்ய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேனின் நெருக்கமான எல்லையில் உள்ள பிரையன்ஸ்க், குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் ஆகியவை பலமுறை தாக்கப்பட்டுள்ளன. ஆனால் சமீபத்திய தாக்குதல்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் தெளிவாக விரிவான புலனாய்வு சேகரிப்பு மற்றும் உயர்மட்ட ஈடுபாட்டை உள்ளடக்கியது.
உக்ரேனிய இராணுவ ஆய்வாளர் சேர்ஹி உக்ரெட்ஸ், எஸ்பிரசோ TV இன் இணைய தளத்தில், தாக்கப்பட்ட விமானப்படை தளங்கள் மட்டுமே உக்ரேன் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு ரஷ்யன் குண்டுவீச்சு விமானங்களுக்கு முழுமையாக சேவை செய்யக்கூடிய வசதிகள் என்று குறிப்பிட்டார். உக்ரேன் அரசாங்கம் இந்த தாக்குதல்களை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது. ஆனால் உக்ரேனில் இருந்து குறைந்தபட்சம் ஒரு ட்ரோன் ஏவப்பட்டதாகவும், ரஷ்ய தளத்திற்கு அருகில் உள்ள சிறப்புப் படைகளின் உதவியுடன் தாக்குதல்களில் ஒன்று நடத்தப்பட்டதாகவும் உக்ரேனிய மூத்த அதிகாரி ஒருவர் நியூ யோர்க் டைம்ஸிடம் உறுதிப்படுத்தினார்.
இந்த இலக்குகள், முழு மோதலின் போது ரஷ்யாவில் இதுவரை தாக்கப்பட்டவற்றில் மிக அதிக தூரத்திலுள்ளவை ஆகும். விமானப்படை தளங்களில் ஒன்றான ரியாசான் மாஸ்கோவிற்கு தென்மேற்கே 115 மைல் தொலைவில் உள்ளது. அதே சமயம் சரடோவ் உக்ரேனிய எல்லையில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ளது. ரஷ்ய இராணுவ வர்ணனையாளர்கள் உக்ரேன் ரஷ்யாவிற்குள் இவ்வளவு தூரம் தாக்கினால், அது மாஸ்கோவையும் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளனர். Sky News மாஸ்கோ நிருபர் டயானா மேக்னே, 'உக்ரேன் அதை எவ்வாறு சரியாக நிகழ்த்தின என்பது குறித்து இப்போது நிறைய கேள்விகள் உள்ளன' என்றும் 'ரஷ்யாவிற்குள் எதிர்-உளவுத்துறை தோல்வியைப் பரிந்துரைப்பதற்கு முன், ஒருவேளை உக்ரேனுடன் கூடி இயங்குபவர்களின் உதவியுடன் ரஷ்யாவிற்குள் இருந்து ஒரு ட்ரோன் தாக்கியிருக்கலாம்' என்றார்.
ரஷ்யாவிற்குள் நடக்கும் இத்தகைய தாக்குதல்கள், உக்ரேனியப் படைகள் 'ரஷ்யாவிற்குள்ளும் விருப்பப்படி செயல்பட முடியும்' என்பதை 'காட்டும்' ஒரு சக்திவாய்ந்த உளவியல் தாக்கம் என்று பெருமை பேசும் மூத்த மேற்கத்திய அதிகாரிகளின் பதிவுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை Sky தெரிவித்துள்ளது. பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம், இந்த ரஷ்யா தாக்குதல்களை 'உக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து படைப்பிரிவை பாதுகாப்பதில் மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தோல்விகளில் சில' என்று கருதலாம் என்று கூறியது.
நியூ யோர்க் டைம்ஸ் இத்தாக்குதல்கள், “போரை மாஸ்கோவிற்கும், ஜனாதிபதி விளாடிமிர் வி. புடினுக்கும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு கியேவ் தயாராக உள்ளது என்பதற்கான அறிகுறிகளை சேர்ப்பதுடன் போரின் வரைபடத்தை மாற்றுகின்றது” மற்றும் மாஸ்கோவின் ஆகாய பாதுகாப்பு அமைப்பின் தோல்வியையும், உக்ரேனின் உள்கட்டமைப்பு மீதான இடைவிடாத தாக்குதலுக்கு ரஷ்யா அதிக விலை கொடுக்க வேண்டும் என்ற கியேவின் உறுதிப்பாட்டையும்” காட்டுகின்றது என்றது.
கியேவ், வாஷிங்டனின் உளவு வலையமைப்பு மற்றும் பல தசாப்தங்களாக ரஷ்யாவிற்குள் கட்டமைக்கப்பட்ட அதன் விரிவான தொடர்பை நம்ப முடியவில்லை என்றால், அத்தகைய தாக்குதல்களை நடத்தும் உக்ரேனின் திறன் ஒரு மர்மமாக இருக்கும். இது அதிகரித்து வரும் உக்ரேனிய 'வெற்றிகள்' மத்தியில் சமீபத்திய தாக்குதலாக இருப்பதுடன் மற்றும் போரை நீடிக்கவும் அதிகரிக்கவும் கூட்டாக வடிவமைக்கப்பட்ட இரகசிய ஆத்திரமூட்டல்களை உருவாக்குகிறது.
இவை அதில் உள்ளடங்கும்:
- நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்களின் மீதான குண்டுவீச்சு, பால்டிக் கடலுக்கு அடியில் ஜேர்மனிக்கு ரஷ்ய இயற்கை எரிவாயு போக்குவரத்தை நிறுத்தியது.
- அக்டோபர் 29 அன்று செவாஸ்டோபோலின் கடற்படைத் துறைமுகத்தில் நடந்த வெடிப்புகள், ஒரு மூலோபாய பாலத்தை ஓரளவு அழித்த ட்ரோன்களையும் உள்ளடக்கியதாகத் தெரிகிறது.
- போலந்து விவசாய கிராமத்தில் நவம்பர் 15 வெடிப்புகள் இரண்டு பொதுமக்களைக் கொன்றன.
இந்த நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மறைமுகமான அமெரிக்க மற்றும் நேட்டோ ஈடுபாட்டைக் காட்டுகின்றன. ஒவ்வொன்றும் கடந்ததை விட மிகவும் பொறுப்பற்றதாகவும் அபாயகரமானதாகவும் இருக்கின்றது.
நோர்ட் ஸ்ட்ரீமின் குண்டுவீச்சினால், ரஷ்யா முக்கியமான வருவாய் ஆதாரங்களை இழந்து ஐரோப்பிய சந்தையில் இருந்து மேலும் தனிமைப்படுத்தப்பட்டது. மாஸ்கோவுடனான ஜேர்மனியின் பொருளாதார உறவுகளை பல மாதங்களாக வெள்ளை மாளிகை கண்டித்திருந்தது. போலந்து மீதான அதன் சொந்த ராக்கெட் தாக்குதலுக்கு பின்னர் ரஷ்யாவைக் குற்றம் சாட்டுவதற்கான உக்ரேனின் முயற்சிகள், அங்கத்துவ நாடுகளை பரஸ்பர பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் பிரிவு 5 ஐ செயல்படுத்த நேட்டோவிடம் கியேவ் கோரிக்கைகளை விடுத்ததும் உள்ளடக்கியது. அமெரிக்கா இன்னும் தயாராகாத ரஷ்யாவுடன் நேரடிப் போருக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் தலையிடும் அளவிற்கு இத்தாக்குதல் ஆபத்தானதாக இருந்தது.
ரஷ்ய எல்லைக்குள் ஆழமான சமீபத்திய தாக்குதல்கள் அத்தகைய தனித்த நடவடிக்கையின் விளைவு எவ்வளவு பேரழிவு தரக்கூடியதாக இருந்தாலும் சரி அமெரிக்க இராணுவம், உளவுத்துறை மற்றும் அரசியல் உயரடுக்கின் சில பிரிவுகளால் திட்டமிடப்பட்டிருக்க முடியும்.
தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த நியூ யோர்க் டைம்ஸ், பிரதிபலிப்பிற்கு 'ரஷ்யா மோதலை தீவிரமடையச் செய்ய சிறிதளவு இடமே உள்ளது' என்று எழுதியது. உக்ரேனின் தாக்குதல்களைப் பற்றிக் கூறிய ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய இராணுவ அதிகாரியான மிக் ரியானை அது மேற்கோள் காட்டி, “சிலர் உறுதியாகக் கூறுவது போல் இது ஒரு மோதல் விரிவாக்கம் அல்ல. ஆனால் ரஷ்யாவின் மிருகத்தனமான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் மனிதாபிமான பாதிப்புகளை மட்டுப்படுத்த இது உக்ரேனுக்கு அவசியமான அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கையாகும்” என குறிப்பிட்டது.
இந்த அறிக்கை அபத்தமானது. அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட உக்ரேனின் தாக்குதல்கள், போரின் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் ஆகும். பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்களைக் கொன்ற ஒரு போரைத் தூண்டிவிட்ட அமெரிக்கா, ரஷ்யாவின் 'சிவப்புக் கோடுகளை' மட்டுமல்லாது தனது 'சிவப்புக் கோடுகளையும்' தாண்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் அமெரிக்கா உக்ரேனில் எதையும் செய்ய மாட்டோம் என்று கூறும்போது, அது முன்னேறிச் சென்று அதைச் செய்துள்ளது.
மே மாதம், 'உக்ரேனில் அமெரிக்கா என்ன செய்யும், என்ன செய்யாது' என்ற தலைப்பில் நியூ யோர்க் டைம்ஸில் பைடென் ஒரு தலையங்கத்தை வெளியிட்டார், அதில் 'நாங்கள் உக்ரேனை அதன் எல்லைகளுக்கு அப்பால் தாக்குவதை ஊக்குவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ இல்லை' என்று கூறினார். ஆனால் வாஷிங்டன் அதையே துல்லியமாக செய்துள்ளது. இலக்கு தொடர்பான தகவல், ஆயுதங்கள் மற்றும் தளபாட ஆதரவை வழங்கி உக்ரேன் ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக ஊடுருவி தாக்க அனுமதித்தது.
அமெரிக்காவும் நேட்டோவும் புட்டின் ஆட்சியில் இருந்து ஒரு எதிர்வினையையும் தூண்டாமல் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை சோதிப்பதற்காக ரஷ்யாவிற்கு எதிராக அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு வடிவம் உருவாகி வருகிறது.
ரஷ்யாவின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் அழுத்தத்தை கொடுப்பது, தன்னலக்குழுக்களுக்கு இடையே பிளவுகளை அதிகப்படுத்துவதுடன் மற்றும் சில வகையான அரண்மனை சதி மூலம் உள் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பைத் திறக்கும் என்று ஒரு கணக்கீடு தெளிவாக உள்ளது. ரஷ்ய பாசிச சித்தாந்தவாதியான டாரியா டுகினாவின் படுகொலையானது ரஷ்யாவின் தன்னலக்குழுக்களுக்கு புட்டினை ஆதரிப்பதற்கான தண்டனையானது, பொருளாதாரத் தடைகள் மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் என்ற தெளிவான எச்சரிக்கையாகும். உக்ரேன் தனது சமீபத்திய தாக்குதலில் பயன்படுத்திய உளவுத் தகவல், இறுதியில் வாஷிங்டனுடன் ஏற்கனவே தொடர்புகளைக் கொண்டுள்ள உயர் பதவியில் இருக்கும் ரஷ்ய ஆதரவாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். அவர்கள் எந்த விலை கொடுத்தேனும் மோதலைத் தீர்ப்பதற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
அதே நேரத்தில், ரஷ்யாவின் தன்னலக்குழுவிற்குள் ரஷ்ய இராணுவத்தினால் மிகவும் ஆக்கிரோஷமாக பதிலளிக்க வலியுறுத்தும் சக்திகளும் உள்ளன.
அமெரிக்காவினால் இடைவிடாமல் மற்றும் பொறுப்பற்ற முறையில் போரை விரிவுபடுத்துவது, ரஷ்ய அரசாங்கம் அதன் சொந்த ஒரு பெரிய விரிவாக்கத்துடன், பேரழிவு தரக்கூடிய விளைவுகளுடன் பதிலடி கொடுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இந்த சனிக்கிழமை, டிசம்பர் 10, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், 'உக்ரேன் போரை நிறுத்த ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டமைப்போம்!' என்ற இணையவழி கூட்டத்தை நடத்துகிறது.
இந்த கூட்டத்திற்கான அழைப்பு பின்வருமாறு விளக்குகிறது:
'போரின் விளைவுகளை பொருட்படுத்தாமல் உலகளாவிய புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலை பொறுப்பற்ற முறையில் தொடரும் நேட்டோவின் ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கும் ரஷ்யாவின் தன்னலக்குழு முதலாளித்துவ ஆட்சியின் அதிகரித்துவரும் விரக்திக்கும் இடையிலான எதிர்வினைகள் அணுசக்தி மோதலாக அதிகரிக்க அச்சுறுத்துகின்றன.
“'நீதி வெற்றிபெறும்' மற்றும் போர் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை அரசியல் ரீதியாக முடக்கும், ஆபத்தான அவநம்பிக்கைகளாகும். நேட்டோ 'அமைதியை' விரும்பவில்லை. அது போரையே விரும்புகிறது …
'ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசாங்கங்களுக்கும் விடுக்கப்படும் முறையீடுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அல்லாது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அணிதிரட்டலின் மூலமே போரை நிறுத்தமுடியும்.'
உலக சோசலிச வலைத் தளம் தனது அனைத்து வாசகர்களையும் டிசம்பர் 10 இணையவழி பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறது.