மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பைடென் நிர்வாகம், வரவிருக்கும் நாட்களில் தரையில் இருந்து வானில் சென்று தாக்கும் பேட்ரியாட் ஏவுகணைகளின் குறைந்தபட்சம் ஒரு தொகுப்பை உக்ரேனுக்கு அனுப்ப தயாராகி வருவதாக அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பத்திரிகைகளும் கேபிள் செய்தி வலையமைப்புகளும் இந்த வாரம் அறிவித்தன.
பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு, CNN அறிவித்தது, 'வரவிருக்கும் நாட்களில் விரைவில் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.'
ஒவ்வொரு தொகுப்பும் 1 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புடையது என்பதோடு அதைச் செயல்படுத்த 90 பேர் கொண்ட ஒரு குழு தேவைப்படும் என்கின்ற நிலையில், பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு உக்ரேனுக்கு அனுப்பப்படும் மிகவும் செலவுமிக்க மற்றும் சிக்கலான ஆயுத அமைப்பாக இருக்கும்.
'அமெரிக்க கடமைப்பாட்டில் இது ஒரு முக்கிய படியாகும்' என்று அட்லாண்டிக் கவுன்சிலின் மூத்த எழுத்தாளர் சீன் மெக்ஃபேட் சைராகுஸ் பல்கலைக்கழக செய்திகளுக்குத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறினார், 'இந்தப் பேட்ரியாட் ஏவுகணைகள் ரஷ்யாவிடம் இருந்து எதிர்வினையைத் தூண்டும்,' அதை “அமெரிக்காவின் இது வரையில் இல்லாத மிகவும் விரிவாக்கப்பட்ட நடவடிக்கை,” என்று அவர் குறிப்பிட்டார்.
போர்-சார்பு சிந்தனைக் குழுவான Chatham House இன் கெய்ர் கில்ஸ், இந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி NBC க்கு கருத்துரைக்கையில் இவ்வாறு கூறினார், “ரஷ்யாவின் 'எச்சரிக்கை வரம்புகள்' வெறும் உளறல்கள் மற்றும் பிதற்றல்கள் என்பதற்கு அதிகமாக வேறொன்றுமில்லை என்பது தெளிவாகி உள்ளதால், உக்ரேனுக்கு அமெரிக்கா இன்னும் அதிக இன்றியமையா தளவாடங்களை வழங்கும் ஓர் அதிகரித்த நிகழ்ச்சிப்போக்கை நாம் பார்க்கிறோம்,” என்றார்.
டிசம்பர் 2021 இல் 'யாருடைய எச்சரிக்கை வரம்புகளையும் நான் ஏற்க மாட்டேன்' என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்ததற்கு உண்மையாக இருக்கும் விதத்தில், நேட்டோவுக்கு எதிராக இராணுவ பதிலடி நடவடிக்கைகளைத் தூண்டும் என்று கிரெம்ளின் முன்னர் சூசகமாக அறிவித்த அதே நடவடிக்கைகளை அமெரிக்கா முறையாகக் கண்டறிந்து மேற்கொண்டு வருகிறது.
ரஷ்ய கருங்கடல் கடற்படையின் முன்னணி போர்க்கப்பல் மொஸ்க்வாவை (Moskva) மூழ்கடிப்பதில் ஏப்ரல் மாதம் அமெரிக்கா உக்ரேனுக்கு உதவியது. இதைத் தொடர்ந்து விரைவிலேயே, ரஷ்ய தளபதிகளைப் படுகொலை செய்ய இலக்கு வைப்பதில் அமெரிக்க இராணுவம் செயலூக்கத்துடன் உக்ரேனுக்கு உதவி வருகிறது என்ற அறிவிப்பும், பென்டகன் இராணுவச் சிப்பாய்களை உக்ரேனுக்கு அனுப்பி உள்ளது என்ற ஒப்புதலும் வந்தன.
M777 ரக இழுத்துச் செல்லும் ஹோவிட்சர், HIMARS தொலை தூரம் தாக்கும் ஏவுகணை அமைப்பு, M109 பாலாடின் ரக தானியங்கி கவசத் துப்பாக்கி, ராடார் கண்டறியவியலாத HARM ஏவுகணை மற்றும் NASAMS வான் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை உட்பட பல அதிநவீன ஆயுத அமைப்புகளை வெறும் ஒரு சில மாதங்களில் அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கி உள்ளது.
அமெரிக்கா இப்போது பேட்ரியாட் ஏவுகணை அமைப்பை உக்ரைனுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படும் அறிவிப்பு, அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவுடன் கோழி என்ற கொடிய விளையாட்டை (game of chicken) விளையாடி, இன்னும் தொடர்ந்து விரிவாக்கும்.
நவம்பரில், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் கூறுகையில், 'நேட்டோ இராணுவத்தினருடன் சேர்ந்து பேட்ரியாட் தளவாடங்களைக் கியேவ் போர்வெறியர்களுக்கு நேட்டோ வழங்கினால், அவை உடனடியாக எங்கள் ஆயுதப் படைகளின் சட்டபூர்வ இலக்கில் வைக்கப்படும்,” என்று எச்சரித்தார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் புதன்கிழமை மெட்வெடேவின் கருத்துக்களையே மீளவலியுறுத்தினார், ஏவுகணை அமைப்பு 'நிச்சயமாக' ரஷ்யாவின் இலக்காக இருக்கும் என்றார்.
ரஷ்யக் கூட்டமைப்பு கவுன்சிலின் சர்வதேச விவகாரக் குழுவின் முதல்நிலை துணைத் தலைவரான விளாடிமிர் ஜாபரோவ் புதன்கிழமை கூறுகையில், 'அமெரிக்கா எங்களை நேட்டோவுடன் நேரடி மோதலுக்கு தூண்டி வருகிறது. குறிப்பாக அவர்கள் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பை வழங்குவதன் மூலம்,” என்று கூறினார்.
அமெரிக்கா 'உண்மையில் உலகை மூன்றாம் உலகப் போரின் விளிம்புக்குத் தள்ளி வருகிறது' என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
உக்ரேனிய மின்சார உள்கட்டமைப்புக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை தாக்குதல்கள் உக்ரேனிய மக்களின் பரந்த பிரிவுகளுக்குப் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த நடவடிக்கையே உக்ரேனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்பும் முடிவுக்கான நியாயப்பாடாக கூறப்படுகிறது.
ஆனால் எதிர்பார்க்கப்படும் இந்த முடிவைக் குறித்து Voice of America அறிவிக்கையில், ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் மார்க் மான்ட்கோமரியை மேற்கோள் காட்டியது, அமெரிக்கா, மில்லியன் கணக்கிலான டாலர் மதிப்புடைய ஏவுகணைகளைக் கொண்டு, 5000 டாலரில் இருந்து 20,000 டாலர் மதிப்பிலான ரஷ்ய ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்த ஏன் முயல்கிறது என்றவர் கேள்வி எழுப்பினார்.
'பேட்ரியாட் ஏவுகணை, செயல்படுத்துவதற்கு மிகவும் சிக்கலான மற்றும் விலையுயர்ந்த தளவாடமாகும். பேட்ரியாட்டின் ஒவ்வொரு அமைப்பும் 3 மில்லியன் டாலரில் இருந்து 4 மில்லியன் டாலர் மதிப்புடையது. அது மிகவும் விலை உயர்ந்த அமைப்பு. அவற்றுக்காக இவ்வளவு நிறைய பணத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்றாலும், இந்த முதலீட்டில் இருந்து மிகவும் குறைந்த இலாபமே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.” ட்ரோன் தாக்குதல்களில் இருந்து உக்ரேனிய நகரங்களைப் பாதுகாக்க, 'என்னைப் பொறுத்த வரையில், பேட்ரியாட் சிறந்த பதிலாக இருக்காது' என்றவர் நிறைவு செய்தார்.
நிச்சயமாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆர்வம் காட்டும் இந்தப் பிரச்சனைக்கு, பேட்ரியாட் அமைப்பு ஒரு 'சிறந்த பதிலாக' இருக்காது தான்.
ஆனால் இதன் உண்மையான நோக்கம் உக்ரேனின் மக்கள் நிறைந்த இடங்களைப் பாதுகாப்பது அல்ல, மாறாக தாக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக உக்ரேன் வான்வழி பலத்தைப் பெறுவதை அனுமதிப்பதே இதன் உண்மையான நோக்கமாகும். தரையில் இருந்து வானில் சென்று தாக்கும் அமெரிக்க இராணுவத்தின் மிகவும் அதிநவீன நீண்டதூர ஏவுகணையான பேட்ரியாட், கிரிமியா அல்லது ரஷ்ய பெருநிலத்தில் இருந்து பறக்க விடப்படக் கூடிய விமானங்கள் உட்பட, 100 மைல்களுக்கு அப்பால் இருந்து பறக்க விடக்கூடிய விமானங்களையும் சுட்டு வீழ்த்தும் தகைமை கொண்டது.
அமெரிக்கா 'அதிநவீன' ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்பாது என்ற பைடெனின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து இந்த நடவடிக்கை ஒரு பெரும் மாற்றத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக வாஷிங்டன் போஸ்ட் கருத்துரைத்தது. “நீண்ட தூர ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் போர்க்கள டாங்கிகள் உட்பட சில குறிப்பிட்ட அதிநவீன ஆயுதங்களை அனுப்புவது, ரஷ்யாவின் பார்வையில், அமெரிக்காவை இன்னும் ஆழமாக போருக்குள் இழுக்கும் என்பதோடு, அத்தகைய அமைப்புகளைப் பராமரிப்பதும் செயல்படுத்துவதும் சிக்கலானது என்ற அடித்தளத்தில் [நிர்வாகம்] அவற்றை அனுப்ப தொடர்ந்து தயங்கி வந்தது' என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது.
பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரியை மேற்கோளிட்ட NBC, 'வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில்,' “போக்கை மாற்ற பரிந்துரைத்தது,” என்று அறிவித்தது.
இதற்கிடையே, அமெரிக்க பண்டிதர்கள் இன்னும் கூடுதல் விரிவாக்கத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். வாஷிங்டன் போஸ்ட்டின் பொது தலையங்கத்தில் எழுதிய Max Boot, அமெரிக்கா 'ரஷ்ய ஆக்கிரமிப்பு பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கும் திறனை உக்ரேனுக்கு வழங்க' வேண்டும் என்று கோரினார் — பூட்டின் கருத்துப்படி இதில் கிரிமியாவும் உள்ளடங்கும்.
பூட் எழுதினார், 'ரஷ்யாவுக்கு எதிரான போரைக் கடந்த வாரம் உக்ரேன் சிறியளவில் ஆனால் அடையாளத்திற்காக நடத்தியது. உக்ரேன் ரஷ்யாவின் உள்ளே அமைந்திருந்த இரண்டு விமானப் படைத்தளங்களை தாக்க ஜெட் ட்ரோன்களைப் பயன்படுத்தியது — உக்ரேன் நகரங்களுக்கு எதிராக ஏவுகணை தாக்குதலைத் தொடுக்கும் நீண்டதூர குண்டுவீசிகளைச் செயல்படுத்த பயன்படுத்தப்பட்ட அந்த இரண்டு தளங்களில் ஒன்று மாஸ்கோவில் இருந்து வெறும் 100 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ளது.”
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் 'அந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை' என்று பூட் குறிப்பிட்டார். அதில் இருந்து அவர் பின்வரும் முடிவுக்கு வந்தார்: 'அமெரிக்க ஆயுத அமைப்புகள் பயன்படுத்தப்படவில்லை என்றால், தாக்குதல்கள் துல்லியமாக இராணுவ இலக்குகளில் கவனம் செலுத்தினால், அது தாக்குதல்களை எதிர்க்காது என்பதே அமெரிக்க நிலைப்பாடு போல் தெரிகிறது.”
'நீண்ட தூர 'குண்டுகள்', ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியின் பரந்த இடங்கள் முழுவதிலும், இன்னும் அதிகமாக திறம்பட அத்தகைய இராணுவ இலக்குகளை நடத்த உக்ரேனியர்களுக்கு உதவும். இதில் கிரிமியாவும் உள்ளடங்கும்,” என்றவர் நிறைவு செய்தார்.
ஓய்வுபெற்ற ஆஸ்திரேலிய இராணுவ மேஜர் ஜெனரல் மிக் ரெயன் Foreign Affairs இல் கருத்துரைக்கையில், “போர்க்களத்தில் உக்ரேன் தொடர்ந்து வெற்றி பெற முடிந்தால், டொன்பாஸ் மற்றும் கிரிமியாவை கியேவ் தனிமைப்படுத்த முயலக் கூடும் மற்றும் வாய்ப்பு கிடைத்தால் அவற்றை முற்றிலுமாக முற்றுகையிடவும் கூடும். அவ்விரு பகுதிகளையும் மீட்பதே உக்ரேன் அரசாங்கத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கமாக உள்ளது. ஆனால் கிரிமியா மீது அது படையெடுக்கும் கட்டத்தை எட்ட உக்ரேன் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது,” என்றார்.
உக்ரேன் மக்களுக்கு ஒரு பேரழிவை உருவாக்கி உள்ள ஒரு போரில் அமெரிக்கா அதன் தலையீட்டைப் பாரியளவில் விரிவாக்கி வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் சிதைந்துள்ளது, மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்பைச் சீர்குலைப்பதற்கான ரஷ்ய இராணுவத்தின் புதிய உத்தி இந்த உக்ரேனிய குளிர்காலத்தின் போது பேரழிவுகரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ரஷ்யா மீது மிகப் பெரியளவில் இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தைத் திணிப்பது ரஷ்ய தன்னலக் குழுவுக்குள் பிளவுகளைத் தீவிரப்படுத்தும் என்று வெள்ளை மாளிகை கணக்கிடுகிறது, இது புட்டின் அரசாங்கத்திற்கு எதிரான ஓர் அரண்மனை ஆட்சிக் கவிழ்ப்பு சதி மூலமாக ஆட்சி மாற்றம் நடப்பதற்கான சாத்தியக்கூறை உருவாக்கும் என்று அது நம்புகிறது.
ஆனால் ரஷ்ய அரசியல் ஸ்தாபகத்திற்குள், அமெரிக்க ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளுக்கு இன்னும் ஆக்ரோஷமான விடையிறுப்பைக் கோரி வரும் கணிசமான சக்திகளும் உள்ளன.
'உக்ரேனில் போரை நிறுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வெகுஜன இயக்கத்திற்காக!' என்ற தலைப்பில், டிசம்பர் 10 இல், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு ஒரு பேரணியை நடத்தியது.
பேரணியின் நிறைவுரையில், WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் எச்சரித்தார், “தொழிலாள வர்க்கத்தால் இந்த நிகழ்ச்சிப்போக்கு தடுக்கப்படாவிட்டால், இந்த செயல்முறையின் விளைவு, கடந்த கால வன்முறையையே விஞ்சுமளவுக்கு ஓர் உலகளாவிய பேரழிவாக இருக்கும். இந்தப் போர் வெடித்ததில் இருந்தே, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அரசியல் விவாதங்களில் இயல்பாக்கப்பட்டுள்ளது.”
'போருக்கு எதிரான போராட்டமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலமும், உலக சோசலிசப் புரட்சி மூலம் முதலாளித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலமும் முன்நகர்கிறது,” என்றவர் நிறைவு செய்தார்.