முன்னோக்கு

லெனினின் இறுதிப் போராட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், டிசம்பர் 23, 1922 இல், சோவியத் ஒன்றிய வரலாற்றில் அரசியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களில் ஒன்றை லெனின் எழுதத் தொடங்கி இருந்தார். அப்போது வரவிருந்த பன்னிரண்டாவது கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டு ஒரு கடிதமாக வெளியிடப்பட இருந்த பல்வேறு குறிப்புகளை அது கொண்டிருந்தது. அந்த ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு ஏற்பட்டிருந்த பக்கவாதத்தில் இருந்து முழுமையாக குணமடைந்திராத அந்த போல்ஷிவிக் தலைவர், அவரது உடல்நிலை மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து அவரைத் தடுத்து விடக்கூடும் என்பதை முழுமையாக அறிந்திருந்தார்.

வரலாற்றில் லெனினின் மரண சாசனமாக இடம் பெறவிருந்த அந்தக் குறிப்புகளில், போல்ஷிவிக் கட்சியின் முக்கியத் தலைவர்களைப் பற்றிய ஒரு மதிப்பீடு உள்ளடங்கி இருந்தது. கட்சிக்குள் இருந்த அரசியல் போக்குகளைப் பிரதிபலிக்கும் உறவுகளில் வேரூன்றிய ஒரு கூட்டு நிகழ்ச்சிப்போக்காக தலைமைத்துவத்தைக் கருதிய லெனினுக்கு, முறையாக அடுத்த வாரிசை முன்மொழிவது நோக்கமாக இருக்கவில்லை. போல்ஷிவிக் கட்சி உடனான லெனினின் உறவு அரசியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் தனித்துவம் வாய்ந்தது, எந்த வகையிலும், வேறு எந்த நபராலும் அதைச் செய்து விட முடியாது. ஆனால் புறநிலை பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி நிலைமைகள் மற்றும் கொள்கைகள் மீதான கருத்து வேறுபாடுகளின் கீழ், கட்சிக்குள் நிலவிய பதட்டங்கள் மத்திய தலைமைக்குள் ஆபத்தான கன்னை மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று அவர் ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார்.

1920 இல் விளாடிமிர் லெனின்

அழிவுகரமான மோதல்களைத் தடுக்கும் நோக்கத்தில், லெனின், மத்திய குழுவில் இருந்த முன்னணி உறுப்பினர்களின் பலம் மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்தார்.

டிசம்பர் 24 இன் குறிப்பில், லெனின் பின்வருமாறு எழுதினார்:

தோழர் ஸ்ராலின், பொதுச் செயலாளராகி உள்ள நிலையில், வரம்பற்ற அதிகாரம் அவர் கரங்களில் குவிந்துள்ளது. அந்த அதிகாரத்தை அவர் எப்போதும் போதுமான எச்சரிக்கையுடன் பயன்படுத்துவாரா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த மதிப்பீட்டைத் தொடர்ந்து ட்ரொட்ஸ்கியைப் பற்றிய பின்வரும் மதிப்பீடு இருந்தது:

மறுபுறம், தோழர் ட்ரொட்ஸ்கி, தகவல்தொடர்பு மக்கள் ஆணையம் சம்பந்தமான பிரச்சினையில் மத்திய குழுவுக்கு எதிரான அவரது போராட்டம் ஏற்கனவே நிரூபித்துள்ளவாறு, சிறந்த திறமையால் மட்டும் வேறுபட்டு நிற்கவில்லை. அவர் அனேகமாக தனிப்பட்ட ரீதியில் தற்போதைய மத்திய குழுவில் மிகவும் தகுதி வாய்ந்தவராக உள்ளதோடு, ஆனால் அதீத தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ள அவர், பணியின் முற்றிலும் நிர்வாக தரப்பில் அதிக அக்கறை காட்டியுள்ளார்.

பின்னர் லெனின் எச்சரித்தார்:

தற்போதைய மத்திய குழுவின் இந்த இரண்டு தலைசிறந்த தலைவர்களின் இத்தகைய இரண்டு குணநலன்கள், கவனக்குறைவாக ஒரு பிளவுக்கு இட்டுச் செல்ல முடியும். இதைத் தடுக்க நம் கட்சி நடவடிக்கைகள் எடுக்காவிட்டால், இந்தப் பிளவு எதிர்பாராத விதமாக ஏற்படலாம்.

அதற்கடுத்து வந்த நாட்களிலும் லெனின் தொடர்ந்து இந்தக் குறிப்புகளை விரிவாக்கினார்.

அவர் குறிப்புகளை எழுதுகையில் லெனினைப் பீடித்த மிகவும் முக்கிய பிரச்சினைகளில், சோவியத் அரசுக்குள் 1922 இல் நிறுவப்பட்ட சோசலிச குடியரசுகளின் உறவுகளைக் குறித்த கவலையும் உள்ளடங்கி இருந்தது. சோவியத் ஒன்றியத்திற்குள் மாபெரும்-ரஷ்ய மேலாதிக்கம் புத்துயிர்ப்பிக்கப்படலாம் என்று அஞ்சிய லெனின், ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கான, உக்ரேன் மற்றும் ஜோர்ஜியா போன்ற சோசலிச குடியரசுகளின் உரிமையை வலியுறுத்தினார்.

டிசம்பர் 30, 1922 தேதியிட்ட குறிப்புகளில், சோவியத் அரசாங்கம் பெரு-ரஷ்ய ஒடுக்குமுறைக்கு எதிராக போதுமான பாதுகாப்பை வழங்க தவறி விடலாம் என்ற கவலையை லெனின் வெளிப்படுத்தினார். இந்த உள்ளடக்கத்தில் குறிப்பாக, ஜோர்ஜியாவின் தேசிய சிறுபான்மையினரின் பிரதிநிதிகளை ஸ்ராலின் அவமானகரமாக நடத்தியதை அவர் ஆய்வு செய்த நிலையில் ஸ்ராலினைப் பற்றிய லெனினின் கருத்துக்கள் அதிகளவில் கடுமையாக மாறின. ஸ்ராலினின் நடத்தையைத் தெளிவாகக் குறிப்பிட்டு, லெனின் 'குறிப்பிடத்தக்க ரஷ்ய அதிகாரத்துவவாதியைப் போன்று உள்ள, அந்த பெரு-ரஷ்ய பேரினவாதி, சாராம்சத்தில் ஓர் அயோக்கியன், ஒரு கொடுங்கோலனை' பற்றி எச்சரித்தார்.

லெனின் தொடர்ந்தார், “ஸ்ராலினின் பரபரப்பும், தூய நிர்வாகத்தின் மீதான அவரது ஆர்வமும், இழிவார்ந்த ‘தேசியவாத-சோசலிசம்’ மீதான அவரின் ஆவேசத்துடன் சேர்ந்து, இங்கே ஒரு அபாயகரமான பாத்திரம் வகித்ததாக நான் நினைக்கிறேன். அரசியலில் பொதுவாக மூர்க்கத்தனம் இழிவார்ந்த பாத்திரத்தை வகிக்கிறது.”

ஜனவரி 4, 1923 இல், லெனின் அவருடைய டிசம்பர் 24 குறிப்பில் பின்வரும் பத்தியைச் சேர்த்தார்:

ஸ்ராலின் மிகவும் பிடிவாதமாக உள்ளார். இந்தக் குறைபாடு, நம் மத்தியிலும், நம் கம்யூனிஸ்டுகள் மத்தியில் கையாள்வதிலும் சகிக்கக்கூடியதாக இருந்தாலும், ஒரு பொதுச் செயலாளரிடம் சகிக்க முடியாததாக ஆகி விடுகிறது. அதனால்தான், ஸ்ராலினை அந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக, குறிப்பிட்டு கூறுவதானால், தோழர்களிடம் மிகவும் கண்ணியமாகவும், அதிக அக்கறையுடனும், அதிக சகிப்புத்தன்மை, அதிக விசுவாசம், சலனபுத்தி இல்லாமல், இதர பிற பண்புகளிலும் தோழர் ஸ்ராலினை விட எல்லா விதத்திலும் வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட வேறொருவரை நியமிப்பது பற்றி தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இந்த சூழ்நிலை ஒரு புறக்கணிக்கத்தக்க விவரமாகத் தோன்றலாம்.

ஆனால் ஒரு பிளவைத் தடுக்கும் பாதுகாப்பான நிலைப்பாட்டில் இருந்தும், ஸ்ராலினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி நான் மேலே எழுதியவற்றின் நிலைப்பாட்டில் இருந்தும், இது ஒரு [சிறிய] விவரம் அல்ல. மாறாக இது தீர்க்கமான முக்கியத்துவம் பெறக்கூடிய ஒரு விவரம் என்று நான் நினைக்கிறேன்.

அதற்கடுத்து வந்த வாரங்களில் ஸ்ராலினை நோக்கிய லெனினின் அரசியல் விரோதமும் அவர் மீதான தனிப்பட்ட அவமதிப்பும் அதிகரித்தன. அந்த போல்ஷிவிக் தலைவர், திட்டமிடப்பட்டிருந்த கட்சி மாநாட்டில் ஸ்ராலினுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி நடத்த திட்டமிட்டிருந்த போராட்டத்தில் அவரை ஆதரிக்க ட்ரொட்ஸ்கி பக்கம் திரும்பினார். மார்ச் 5, 1923 இல், அவர் பின்வருமாறு எழுதினார்:

உயர்மட்ட இரகசிய ஆவணம்

பிரத்தியேகமானது

அன்புடன் தோழர் ட்ரொட்ஸ்கி: கட்சியின் மத்திய குழுவில் ஜோர்ஜிய விஷயத்தின் பாதுகாப்பை நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது என் ஆழ்ந்த வேண்டுகோள். இந்த விஷயம் இப்போது ஸ்ராலின் மற்றும் டிஜெர்ஜின்ஸ்கியின் 'துன்புறுத்தலின்' கீழ் உள்ளது. அவர்களின் பாரபட்சமற்ற தன்மையை என்னால் நம்ப முடியாது. முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.

அதன் பாதுகாப்பை மேற்கொள்ள நீங்கள் ஒப்புக் கொண்டால் நான் நிம்மதியாக இருப்பேன். ஏதேனும் காரணத்திற்காக நீங்கள் அதைச் செய்ய மறுத்தால், மொத்த விஷயத்தையும் என்னிடம் திருப்பி அனுப்பி விடுங்கள். அதை நீங்கள் ஏற்கவில்லை என்பதற்கான ஓர் அடையாளமாக நான் அதைக் கருதிக் கொள்கிறேன்.

பின்னர் லெனின், ஸ்ராலினுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பினார்:

என் மனைவியை தொலைபேசியில் பேச அழைப்பாணை விடுத்து தகாத வார்த்தைகள் பயன்படுத்தும் அளவுக்கு நீங்கள் மிகவும் முரட்டுத்தனமாக இருந்துள்ளீர்கள். அவர் அதை மறக்கத் தயாராக இருப்பதாக உங்களிடம் கூறிய போதும் கூட, அந்த உண்மை அவர் மூலம் சினோவியேவ் மற்றும் கமெனெவ் ஆகியோருக்கு தெரிந்திருந்தது.

எனக்கு எதிராகச் செய்யப்பட்டதை அவ்வளவு எளிதில் மறக்கும் எண்ணம் எனக்கு இல்லை. மேலும் என் மனைவிக்கு எதிராகச் செய்யப்பட்டதை எனக்கு எதிராக செய்யப்பட்டதாகவே கருதுகிறேன் என்பதைச் கூறவேண்டியதே இல்லை.

ஆகவே, நீங்கள் கூறியதை திரும்பப் பெறவும், மன்னிப்புக் கேட்கவும், நீங்கள் தயாரா அல்லது நம்மிடையிலான உறவை முறித்துக் கொள்ள விரும்புகிறீர்களா என்பதைச் சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான்கு நாட்களுக்குப் பின்னர், மார்ச் 9, 1923 இல், லெனின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அது அவர் அரசியல் வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்தது. அவர் ஜனவரி 21, 1924 இல் மரணமடைந்தார். லெனினின் மரணத்திற்குப் பின்னர், 1924 இல் நடந்த பதின்மூன்றாவது கட்சி மாநாட்டில் ஸ்ராலினும் அவரது கன்னை ஆதரவாளர்களும் நடத்திய கொள்கையற்ற சூழ்ச்சிகள் அந்த மரண சாசனத்தை வாசிப்பதைத் தடுத்துவிட்டன. அது 40 ஆண்டுகளாக சோவியத் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டு இருந்தது. ஸ்ராலின் மறைந்து 11 ஆண்டுகளுக்குப் பின்னர், 1964 இல் லெனினின் தொகுப்பு நூல்களின் புதிய பதிப்பில் அவருடைய இந்த மரண சாசனத்தைச் சேர்க்க சோவியத் அரசாங்கம் அனுமதிக்கும் வரையில் அது மறைக்கப்பட்டே இருந்தது.

லெனின் அந்த மரண சாசனத்தை எழுதிய போது, போல்ஷிவிக் கட்சிக்குள் உருவாகி கொண்டிருந்த பிளவுகளின் முக்கியத்துவம் குறித்தோ அளவைக் குறித்தோ அறியப்படவில்லை. லெனினின் மரண சாசனமும் அதனுடன் இணைந்த குறிப்புகளும் மற்றும் சிறிய அறிக்கைகளும் கட்டவிழ இருந்த மோதலைக் குறித்த முன்கணிப்பாக இருந்தன. அதற்குப் பின்னர் வந்த மாதங்களில், ட்ரொட்ஸ்கி, அப்போதைய அந்த அரசியல் காலகட்டத்திலேயே, அதிகாரத்துவம் மற்றும் தேசிய பேரினவாதம் குறித்து லெனின் முன்கணித்த விமர்சனத்தைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்தார்.

அக்டோபர் 1923 இல், லெனின் அவரது மரண சாசனத்தை எழுதி 10 மாதங்களுக்குப் பின்னர், இடது எதிர்ப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அந்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் உருவாக்கம், லெனினின் இறுதிப் பெரும் போராட்டத்தின் தொடர்ச்சியைக் குறித்தது.

Loading