எகிப்து நீதிமன்றம், 2019 ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்ட 38 பேருக்கு ஆயுள்காலத் தண்டனைகளை விதித்துள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்  

போலியான விசாரணையைத் தொடர்ந்து, எகிப்திய நீதிமன்றம், செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 38 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்துள்ளது.

சுயமாக-நாட்டை விட்டு வெளியேறிய தொழிலதிபரும் நடிகருமான முகமது அலி உட்பட 23 பேர்களுக்கு ஆஜராகமலேயே அவர்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவரின் சமூக ஊடகப் பதிவுகள் எதிர்ப்புகளைத் தூண்டுவதற்கு உதவியது. 22 சிறுவர்கள் உட்பட இதர 44 பேருக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும்22 பேர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 21, 2019, சனிக்கிழமை கெய்ரோவில் எதிர்ப்பாளர்கள் ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டனர். கெய்ரோவில் டஜன் கணக்கான மக்கள் ஒரு அரிய போராட்டத்தை நடத்தி, எகிப்திய ஜனாதிபதி அப்தெல்-ஃபத்தாஹ் எல்-சிசியை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்தனர். [AP Photo/Nariman El-Mofty]  [AP Photo/Nariman El-Mofty]

ஜூலை 2013 இல் இரத்தக்களரியான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலம் ஜனாதிபதி முகமது மோர்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்தவரான ஜெனரல் அப்தெல்-ஃபத்தாஹ் எல்-சிசியின் மிருகத்தனமான சர்வாதிகாரத்திற்கு எவரும் சவால் விடாமல் இருப்பதை உறுதிசெய்வதே இதன் நோக்கமாக இருந்தது. அப்போதிருந்து, அவர் எகிப்தின் நிதிய உயரடுக்கையும், பொருளாதாரத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் இராணுவத் தலைவர்களையும் பாதுகாத்து, பயங்கரவாத ஆட்சியைப் பேணி வருகிறார்.    

கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் கெய்ரோ குற்றவியல் நீதிமன்றத்தின் முதல் தீவிரச் சுற்றில் 104 பேரை உள்ளடக்கிய பாரிய விசாரணையில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் மீது, போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒளிப்பதிவுகளை யூ டியூப்பில் வெளியிட்டது, அவற்றை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்தது, போக்குவரத்திற்கு இடையூறு செய்தது மற்றும் காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

முகமது அலி வெளியிட்ட தொடர் ஒளிப்பதிவுகளால் தேசிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் தூண்டப்பட்டன. ஸ்பெயினில் வசிக்கும் இவர், எகிப்தின் சர்வாதிகாரி எல்-சிசி தனது சொந்த உபயோகத்திற்காக பொது பணத்தை அபகரித்ததாகவும், தனது குடும்பத்திற்காக ஆடம்பரமான அரண்மனைகளை கட்டியதாகவும் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் எகிப்தின் 104 மில்லியன் மக்களில் பெரும்பாலோர் மோசமான வறுமையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்கிறார். ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்-சிசியின் ஆட்சியையும், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

எல்-சிசியின் இரத்தக்களரியான ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் ஒரே வாரத்தில் நடந்த பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டங்களின் முதல் வாரத்தில் 2,000 க்கும் அதிகமான மக்களை பொலிசார் கைது செய்துள்ளனர் என்று மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலானவை தன்னிச்சையாகவும், கைதுஉத்தரவு இல்லாமலும் இக்கைதுகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொள்ளும் வரை தொடர்ச்சியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

1,000 பேரை காவலில் வைத்து விசாரித்ததை எல்-சிசியின் ஆட்சியே ஒப்புக்கொண்டுள்ளது. பெரும்பாலானோர்25 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தபோதிலும், கைது செய்யப்பட்ட மற்ற பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு ஆதரவான பிரபல வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆர்ப்பாட்டங்களில் இருந்து வெளிப்படையாக விலகிக் கொண்ட சிலரும் அடங்குவர். இவர்கள் தவறான தகவல்களை பரப்பியதாகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இவர்கள் இப்போது எல்-சிசியின் சிறைகளில் வாடும் 65,000 அரசியல் கைதிகளின் ஒரு பகுதியாக உள்ளனர் என்று ஒரு மனித உரிமைகள் அமைப்பான Human Rights First கூறுகிறது. ISIS உட்பட, ‘வன்முறை தீவிரவாதிகளுக்கு சிறந்த ஆட்சேர்ப்பு மையங்களை உருவாக்கும்’ வகையில், ‘அவமானம், சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் இடங்களாக’ இவை இருப்பதாகவும், மற்றும்‘அதிகாரிகளுக்கு எதிராக பழிவாங்கத் துடிக்கும் கோபமான கைதிகளை தீவிரமயப்படுத்த உதவுவதாகவும்’ இந்த அமைப்பு விவரிக்கிறது. மேலும், பல ஆயிரம் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.     

இந்த அரச ஒடுக்குமுறையானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் மறைமுக ஆதரவுடன் தொடரப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைகள் பற்றிய செய்திகள் மேற்கத்திய பெருநிறுவன ஊடகங்களில் அரிதாகவே தெரிவிக்கப்படுகின்றன.

ஜூலை 16, 2022 அன்று சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் நடந்தGCC+3 உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடெனுடன் ஜனாதிபதி அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி (இடது) உள்ளார்.

எகிப்து அதன் நாணயத்தை மதிப்பிறக்கம் செய்யுமாறு  சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கோரிக்கையை நடைமுறைப்படுத்திய நிலையில், வாழ்க்கைத்தரம் சீரழியும் வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான எகிப்திய பவுண்டின் மதிப்பில் பெரும் வீழ்ச்சியை அது கண்டபோது இந்த விசாரணை நடக்கிறது. மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். மேலும் 30 சதவீதம் பேர் அதற்கு சற்று மேல் உள்ளனர். 

கடந்த ஆண்டில் எகிப்திய பவுண்டின் மதிப்பு பாதியாக குறைந்துள்ளது. எகிப்து தனது நிலையான நாணய பரிமாற்றத்தை அமெரிக்க டாலருடன் இணைத்து ஒரு நெகிழ்வான நாணய பரிமாற்றத்திற்கு மாற்றுவதற்கு ஒப்புக்கொண்டதன் பின்னர் டாலருக்கு நிகரான எகிப்திய பவுண்டு மதிப்பு 16 பவுண்டுகளில் இருந்து 32 பவுண்டுகளாக குறைந்தது. இது சர்வதேச நாணய ஊக வணிகர்களின் தயவிற்கு பவுண்டை விட்டுவிடுகிறது. பலர் சார்ந்திருக்கும் கருப்புச் சந்தையில் இந்த விகிதம் இன்னும் குறைவாக உள்ளது. இந்த நடவடிக்கை, அக்டோபரில் 3 பில்லியன் டாலர் கடனுக்கு ஈடாக சர்வதேச நாணய நிதியம் விதித்த பல நிபந்தனைகளில் ஒன்றாக இருந்தது. இது, ஆறு ஆண்டுகளில் நான்காவது முறை நடக்கிறது. இது17 பில்லியன் டாலர் மற்றும் 70 பில்லியன் டாலருக்கு இடையில் மதிப்பிடப்பட்ட நிதி இடைவெளியை நிரப்புவதற்கு நெருக்கமாகக்கூட வரவில்லை. 

துறைமுகங்களில் குவிந்து கிடக்கும் 9.5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு பணம் செலுத்த இறக்குமதியாளர்களை வெளிநாட்டு நாணயத்தை அணுக முடியாத நிலைக்கு தள்ளியுள்ள கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாட்டிலிருந்து அவர்களை விடுபடச் செய்வதற்கு இந்த சமீபத்திய கடன் வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு, தண்ணீர் மற்றும் ரொட்டிக்கான மானியங்களைக் குறைத்தல், அரசு சொத்துக்களை தனியார்மயமாக்குதல், பொதுக் கொள்முதலை தனியார் துறைக்கு திறந்துவிடுதல், மற்றும் மக்களிடம் இருந்து சிறிய உயரடுக்கிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் செல்வத்தை கைமாற்றுதல் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய சர்வதேச நாணய நிதியம் முன்பே கோரியுள்ளது. ஆனால் அரசின் பல சொத்துக்கள் இராணுவத்தினரால் அல்லது முன்னாள் இராணுவத் தலைவர்களால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களின் கைகளில் இருப்பதால், தொழிலாள வர்க்கத்தின் மீது முழுச் சுமையும் சுமத்தப்படும் நிலையில் எல்-சிசி மழுப்பலாகப் பேசுகிறார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவிகிதம், வெளிநாட்டு நாணயத்தில் 15 சதவிகிதம் மற்றும் வேலைகளில் 10 சதவிகிதத்தை கொண்ட சுற்றுலாத் துறையையும், மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் திரும்புவதையும் (அவர்கள் அனுப்பும் பணத்தின் இழப்பு உட்பட)  நிறுத்திய கோவிட் தொற்றுநோயால் எகிப்தின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது வேலை இல்லாதவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் வெடித்ததன் மூலம் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமை மேலும் சிக்கலானது, இது நாட்டில் முதலீடு செய்யப்பட்ட அனைத்து சூடான பணத்தில் (hot money என்பது நிதிச் சந்தைகளுக்கு இடையே விரைவாகவும், தவறாமல் நகரும் நாணயத்தைக் குறிக்கிறது) பாதிக்கும் மேலான 20 பில்லியன் டொலர்கள் வெளியேற வழிவகுத்தது. இது உயர் வட்டி விகிதத்தை நாடும் ஊக மூலதனமான நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரொக்கப் பணத்தில் பாதிக்கும் மேலானதாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), சவுதி அரேபியா மற்றும் கட்டார் அவற்றின் பொருளாதாரத்தை 13 பில்லியன் டாலர் கடன்கள் மற்றும் 3.3 பில்லியன் டாலர் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கு ஈடாக உயர்த்துவது; இறக்குமதி மீதான மத்திய வங்கியின் கட்டுப்பாடுகளும் மற்றும் 16.25 சதவீத அளவிலான வட்டி விகித உயர்வுகளும் பவுண்டின் மதிப்பை உயர்த்துவது. மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திரும்பப் பெறுவதற்கான வரம்புகளை நிர்ணயிப்பது ஆகியவற்றுக்கு முயற்சித்த போதிலும் வெளிநாட்டு நாணய புழக்கம் மிகவும் பற்றாக்குறையாகவே உள்ளது. 

எரிசக்தி, தானியங்கள் மற்றும் உரங்களின் விலைகள் உயர்ந்துள்ளன. மேலும் எகிப்து உலகின் மிகப்பெரிய கோதுமை இறக்குமதியாளராக உள்ளது. உணவுப் பொருட்களின் விலைகள் 40 சதவிகிதம் உயர்ந்தன. மலிவான உணவுப் பொருட்களின் விலை இரட்டிப்பாகவும், மும்மடங்காகவும் அதிகரித்தது, மற்றும் நகர்ப்புற நுகர்வோர் பணவீக்கம் டிசம்பரில்24 சதவிகிதத்தை எட்டியது. கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நுகர்வோர் நிதி 7 சதவீதம் அதிகரித்து 374 மில்லியன் டாலர்களாக இருந்தது என்று அரசு நடத்தும் நிதிய ஒழுங்கமைக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் 6.6 சதவிகித வளர்ச்சி இருந்தபோதிலும், எகிப்தின் பொருளாதாரம் ஜூன் 2023 வரை 4.8 சதவிகிதம் மட்டுமே வளரும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 54 சதவிகிதம் அதன் கடன்களுக்கான வட்டிக்கும், 13 சதவிகிதம் ஊதியத்திற்கும் மற்றும் 12 சதவிகிதம் மானியத்திற்கும் செலுத்தப்படுகிறது (பணமதிப்பிழப்பு மற்றும் பணவீக்கத்தால் அதன் செலவுகள் அதிகரித்து வருகின்றன) மற்றும் பிற நலன்புரி கொடுப்பனவுகளுக்கும் பணம் செலுத்தப்படும் நிலையில், வேறு எதற்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வழியில்லாதுள்ளது.

பிரதமர் முஸ்தபா மட்பௌலி, எகிப்து தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையை நெருங்கும் நிலையில் (அதாவது, வரவிருக்கும் காலத்தில் அதற்கு 158 பில்லியன் டாலர் கடன் நிலுவை இருக்கும்)  மந்திரிகள் தங்கள் வரவு செலவுத் திட்டங்களைக் குறைத்து, ‘தெளிவான டாலர் உள்ளடக்கத்தைக் கொண்ட அனைத்து புதிய திட்டங்களுக்கும்’ முற்றுப்புள்ளி வைக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆர்ஜென்டினாவிற்கு அடுத்தபடியாக சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது பெரிய கடனாளியாக இருக்கின்ற எகிப்து, பெருகிய முறையில் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டாரின் எரிபொருள் முடியாட்சிகளை சார்ந்துள்ளது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், அவரது பொலிஸ்-அரசு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், எல்-சிசி எரிமலையின் மேல் அமர்ந்திருக்கிறார். இது, ஆட்சி முன்னறிவித்தபடி, 2011 இல் தொடங்கி 2019 இல் மீண்டும் தொடங்கிய வெகுஜனங்களின் புரட்சிகர எழுச்சியின் தொடர்ச்சி எகிப்தில் மட்டுமல்ல, மத்திய கிழக்கு முழுவதிலும் நிகழ்ந்துள்ளதைக் காட்டுகிறது.

மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்க, பல்வேறு அரபு முதலாளித்துவ ஆட்சிகள் மற்றும் மத்தியகால எரிபொருள்-முடியாட்சிகள், அத்துடன் இஸ்ரேலின் சியோனிச அரசு ஆகியவற்றை தூக்கியெறிந்து விட்டு தங்கள் போராட்டத்தை தொழிலாளர்கள் ஐக்கியப்படுத்துவதற்கான நிலைமைகள் உருவாகி வருகின்றன. ஆனால் அன்று போலவே இப்போதும், தொழிலாள வர்க்கத்தை எகிப்திய ஆளும் உயரடுக்கின் ஏதாவது ஒரு பிரிவுடன் பிணைக்க முற்படும் அனைத்து சக்திகளுக்கும் எதிரான ஒரு உறுதியான போராட்டத்திலும், மற்றும் அப்பிராந்தியத்தினதும், சர்வதேச  தொழிலாளர்களுடன் அதன் போராட்டத்தை ஐக்கியப்படுத்துவதிலும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒரு புரட்சிகர தலைமையை உருவாக்குவதுதான் ஒரு தீர்க்கமான கேள்வியாக உள்ளது. 

இதுதான், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு(ICFI) போராடும் நிரந்தரப் புரட்சியின் முன்னோக்காகும். எனவே, எகிப்திலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் தேவையான அரசியல் தலைமையை வழங்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS), 2011 எகிப்திய புரட்சியின் படிப்பினைகள் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்ட நமது அரபு இணையதளமானwww.wsws.org/ar இனை படிக்குமாறு நமது வாசகர்களை கேட்டுக் கொள்கிறது.