மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவின் போது பொலிசார் பாரிய கைதுகளை மேற்கொண்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கன்சர்வேடிவ் அரசாங்கம், மூன்றாம் சார்லஸ் மன்னனின் முடிசூட்டு விழாவை, முடியாட்சி எதிர்ப்பாளர்களையும் பிற எதிர்ப்பாளர்களையும் அடக்குவதற்குப் பயன்படுத்தி கொண்டுள்ளது. பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் புதிதாக இயற்றப்பட்ட பொலிஸ் அரச அதிகாரங்கள், பாரிய கைதுகளை மேற்கொள்ளவும், எதிர்காலத்தில் அவர்களின் பரந்தளவிலான நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாகவும் இந்த நிகழ்வில் பயன்படுத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டுள்ளது.

இலண்டனின் பெருநகர காவல்துறையானது, அபகரிப்பு, பொது ஒழுங்கை மீறுதல், அமைதியை சீர்குலைத்தல், மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க சதி செய்தல் போன்ற குற்றங்களுக்காக 64 பேரை கைதுசெய்துள்ளது.  

மே 6, 2023, சனிக்கிழமை, இலண்டனில் முடிசூட்டு விழாவிற்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸ் வெஸ்ட்மினிஸ்டர் அபேவுக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு முன்னதாக முடியாட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிசார் கைது செய்கின்றனர். [AP Photo/Scott Garfitt]

மிக முக்கியமாக, குடியரசுக் குழுவின் என்ற அமைப்பின் தலைமையை அகற்றவும், அவர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கவும் லண்டன் பெருநகர காவல்துறை (Met) நடவடிக்கை எடுத்தது. குடியரசு குழு என்பது 1983 ஆம் ஆண்டு முதல் செயல்படும் பதிவு செய்யப்பட்ட அழுத்தம் கொடுக்கும் குழுவாகும். இது முடியாட்சியை ஒழித்து, அதற்குப் பதிலாக நாடாளுமன்றக் குடியரசைக் கொண்டுவர வேண்டும் என்று வாதிடுகிறது. அவர்களின் ஆர்ப்பாட்டங்களில் பொதுவாக “எமக்கு மன்னர் அல்ல!” என்று கோஷம் முழங்கப்படுகிறது. 

முடிசூட்டு விழாவிற்கு முந்தைய நாட்களில், உள்துறை அலுவலகம் குடியரசுக் குழுவிற்கு அச்சுறுத்தும் செய்திகளை அனுப்பியது. அதாவது, பொது ஒழுங்கு சட்டம் 2023 இயற்றப்பட்டுள்ளது என்றும், அதன் விதிகள் பாரியளவில் காவல்துறை அணிதிரளும் போது பிரயோகிக்கப்படும் என்றும் தெரிவித்தது. இந்தச் சட்டம் அதன் ஆரம்ப கால அட்டவணையில் இருந்து கொண்டு வரப்பட்டது என்பதுடன், அரசாட்சியின் ஒப்புதல் (Royal Assent) பெற்றது. அதாவது, மே 2 அன்று சார்லஸ் இதில் கையொப்பமிட்டார். முடிசூட்டு விழாவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக லண்டன் பெருநகர காவல்துறை, “இந்த நிகழ்வை சீர்குலைக்கும் எவருக்கும் அல்லது எதற்கும் எங்களிடம் மிகக் குறைந்த வரம்புதான் உள்ளது, எங்களிடமிருந்து மிக விரைவான நடவடிக்கையை நீங்கள் காண்பீர்கள்” என்று அறிவித்தது.

சனிக்கிழமை காலை 7.30 மணியளவில், எந்தவொரு எதிர்ப்பும் தொடங்குவதற்கு முன்பு, குடியரசுக் குழுவின் தலைவர் கிரஹாம் ஸ்மித் உட்பட குழுவின் ஆறு உறுப்பினர்கள் டிராபல்கர் சதுக்கத்திற்கு அருகே கைது செய்யப்பட்டனர். அங்குள்ள, பதவியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர் சார்லஸ் 1 (1600-1649) இன் சிலைக்கு அருகே தான் குழு பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. அப்போது அவர்கள் வைத்திருந்த “எமக்கு மன்னர் அல்ல” என்ற வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான பதாகைகளை பொலிசார் பலவந்தமாக கைப்பற்றினர். ட்விட்டரில் 5.5 மில்லியன் மக்கள் பார்த்த ஒரு வீடியோவில், கைதுகள் ஏன் நடத்தப்படுகின்றன என்று ஒரு நிருபர் கேட்கிறார், அதற்கு ஒரு பொலிஸ் அதிகாரி, “நான் அதைப்பற்றி எதுவும் பேசப் போவதில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வளவுதான்” என்று பதிலளிப்பதை வீடியோ காணொளி காட்டுகிறது.  

ஸ்மித் கிட்டத்தட்ட 16 மணிநேரங்கள் வரை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தான் அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது ஸ்மித், “நான் இப்போது காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். இன்னும் எனது சகாக்களுக்காக காத்திருக்கிறேன். நாம் எந்த தவறும் செய்யவில்லை. இனி இங்கிலாந்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை இல்லை. நமது சுதந்திரத்தை காக்க மன்னர் இருக்கிறார் என்று எனக்கு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அவரின் பெயரால் நமது சுதந்திரம் தாக்கப்படுகிறது” என்று ட்வீட் செய்தார். அவர் மேலும் கைது செய்யப்பட்ட சகாக்களைப் பற்றி பேசுகையில், “எங்களுக்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. முழு முடியாட்சியின் நிகழ்ச்சி முடிந்ததும் நாங்கள் ஒருவேளை விடுவிக்கப்படுவோம்” என்று கூறினார். 

குடியரசுக் குழுவின் ஒரு வழிநடத்துநர் ஹாரி ஸ்ட்ராட்டன், “நாங்கள் எதை மறிக்கப் போகிறோம்? நாங்கள் வெறுமனே போராட்டம் நடத்துகிறோம், சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்களின் சாலை, கட்டிடம் மற்றும் கலைப் படைப்புகளுடன் எங்களையும் சேர்த்துக்கொள்ளும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட குற்றத்தை இது குறிக்கிறது’’ என்று கூறினார். டிராஃபல்கர் சதுக்கத்தில் ஒரு எதிர்ப்பாளரிடம் சரம் இருந்ததால், அவர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூறிய அவர், 'இது அவரது எதிரப்பு அடையாளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இதை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நாங்கள் காவல்துறையினருடன் சந்திப்புகளை நடத்தினோம். அப்போது அவர்கள் இன்று என்ன ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் என்ன ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை சுருக்கமாகக் கூறினார்கள். இளவரசர் ஆண்ட்ரூ அல்லது பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பற்றி ஏதேனும் குறிப்பிடப்பட்டால் கைது செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் என்று அவர்கள் எங்களிடம் கூறினர்” என்று ஸ்ட்ராட்டன் தெரிவித்தார். 

திகிலூட்டும் வகையில், முடிசூட்டு விழாவின் போது போராட்டக்காரர்களைக் கொலை செய்வதற்கும் அரசு தயாராக இருந்தது. “அதாவது, ஊர்வலத்தில் யாராவது குறுக்கே சென்றால், அவர்கள் சுட்டுக்கொல்லப்படலாம். ஏனென்றால் தெருக்களை சுற்றி வளைத்து நின்ற இராணுவம் மிக நெருக்கமாக இருந்ததால், அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை” என்று ஸ்ட்ராட்டன் தெரிவித்தார். அவர் மேலும், “இந்தக் கைதுகள் ஒரு பொலிஸ் அரசின் வேலை போல் தெரிகிறது. அதை ஏற்க முடியாது. எங்களுக்கு மன்னராட்சியில் நம்பிக்கை இல்லை என்று மட்டுமே கூறுகிறோம், நாங்கள் அதை அமைதியாக செய்கிறோம்” என்றும் தெரிவித்தார். 

30 வயதான ஒரு எதிர்ப்பாளர் ஹாரி ஸ்டைல்ஸ், “முடிசூட்டு விழா ஊர்வலத்தில் குறுக்கே செல்லும் எவரும் ‘சுடப்படலாம்’” என்று பொலிசார் தன்னிடம் கூறியதாக, அவர் கூறியதை Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் நகர சபையின் நைட் ஸ்டார்ஸ் குழுவைச் சேர்ந்த மூன்று தன்னார்வ உறுப்பினர்கள், பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு (உள்துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன்) வன்புணர்வு அலாரம் விசில்களை வைத்திருந்து விநியோகித்துக்காக கைது செய்யப்பட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்ய சதி செய்ததாக சந்தேகித்து சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த தன்னார்வலர்கள் கைது செய்யப்பட்டு 14 மணிநேரம் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். “இன்றைய முடிசூட்டு விழாவை சீர்குலைக்க விரும்பும் குழுக்களும் தனிநபர்களும் ஊர்வலத்தை சீர்குலைக்க வன்புணர்வு எச்சரிக்கைகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை செய்தி கிடைத்துள்ளது” என்று லண்டன் மாநகர போலிசார் தெரிவித்தனர்.

பொது ஒழுங்கு சட்டம் என்பது பிரித்தானிய வரலாற்றில் மிகக் கொடூரமான சட்டப் பிரிவுகளில் ஒன்றாகும். இது எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், போராட்டங்களை மேலும் அடக்கி ஒடுக்கிறது. “இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிநபர்கள் அல்லது ஒரு நிறுவனத்திற்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான” செயல்களை உள்ளடக்கியிருந்தால், அத்தகையப் போராட்டங்கள் சட்டவிரோதமானதாகக் கருதப்படும். “கடுமையான இடையூறு” என்பது “கூச்சலிடுவது” போன்றதை உள்ளடக்கியது.

இந்தச் சட்டம், “சீர்குலைக்கும் மற்றும் ஆபத்தான போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் காவல்துறையின் அதிகாரங்களை மேம்படுத்தும்” என்று உள்துறை அலுவலகம் கடந்த வாரம் கூறியுள்ளது. அதாவது, “பொது ஒழுங்கு மசோதாவில் உள்ள பின்வரும் நடவடிக்கைகள் மே 3, 2023 அன்றிலிருந்து தொடங்கியுள்ளது. மறித்தல்; மறிப்பதற்கு தயாராக முற்படுதல்; முக்கிய தேசிய உள்கட்டமைப்பில் குறுக்கீடு செய்தல்; லண்டனில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் சீனியாரிட்டியை திருத்துதல், அவர்கள் வரவிருக்கும் போராட்டத்திற்கு நிபந்தனைகளை இணைக்கலாம் அல்லது லண்டனுக்கு வெளியே உள்ள போலிஸ் படைகளுக்கு பொருந்தும் வகையில் ஒரு அத்துமீறல் கூட்டத்தை தடை செய்தல், போன்றவை பொது ஒழுங்கு மசோதாவில் கடுமையான வரையறைகளாக குறிப்பிடப்பட்டிருந்தது” என்று அது குறிப்பிட்டுள்ளது.  

போராட்டக்காரர்கள் இடையூறு விளைவிக்க ஏற்பாடு செய்வதாக சந்தேகித்தால், பொலிசார் அவர்களை தடுத்து சோதனை செய்யலாம். சாலைகள், விமான நிலையங்கள் மற்றும் இரயில் பாதைகளை மறிப்பவர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், மற்றவர்களை, பொருட்களை அல்லது கட்டிடங்களை பூட்டி வைப்பவர்கள் ஆறு மாத கால சிறைத்தண்டனையையும் வரம்பற்ற அபராதத்தையும் எதிர்கொள்வார்கள். 

குடியரசுக் குழுவின் ஒரு ஒழுங்கமைப்பாளர், “எங்களிடம் அங்கு விநியோகிப்பதற்கு எதிர்ப்பு பதாகைகள் தயாராக இருந்தன. இருப்பினும், தந்திரோபாய போலிஸ் பிரிவினர், நாம் சாலை அடைப்புக்களை எவ்வாறு கடந்து செல்வது என்று எங்களிடம் கேள்வி எழுப்பினர். அவர்கள் நாம் செய்வது விநியோகமா என்றும் கேட்டனர். அப்போது அவர்கள் முடக்குவதற்கான வழிமுறைகளும், பயன்படுத்தக்கூடிய பொருட்களின் ஆதாரங்களும் கிடைத்ததாகக் கூறி, எங்களைக் கைது செய்தனர்” என்று கூறினார்.

ஆபரேஷன் கோல்டன் ஆர்ப் என்ற குறியீட்டுப் பெயரில் 11,500 லண்டன் மாநகர போலீஸ் அதிகாரிகளால் தலைநகரை பரந்தளவில் முடக்கும் ஒரு பகுதியாக அடக்குமுறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இங்கிலாந்தின் ஆயுதப் படைகளில் 9,000ம் உறுப்பினர்கள் லண்டனில் இருந்தனர், 2,000ம் பேர் செயலில் பணியிலும், மீதமுள்ளவர்கள் அரசரின் சடங்குப் பணிகளிலும் இருந்தனர்.

அத்துடன், கிரீன்விச்சில் தேம்ஸ் நதியில் Type-45 ரக நாசகாரி கப்பலுடன் HMS Diamond போர்க்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. அவை “முடிசூட்டு விழாவைக் கொண்டாடுவதற்கு” அனுப்பப்பட்டிருந்ததாக ரோயல் கடற்படை கூறியது. இருப்பினும், Sun செய்தியிதழ், “ஆனால் கடற்படை வட்டாரங்கள் அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தூண்டுவதற்கு ஒரு ‘சுவிட்சை மட்டுமே இயக்கும்’” என்று தெரிவித்துள்ளது. இக் கப்பலில் ஒரே நேரத்தில் 16 ஏவுகணைகளை, இலக்குகளை நோக்கிச் செலுத்த முடியும். 

எதிர்ப்புகள் மீதான அடக்குமுறை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது ஆளும் உயரடுக்கின் நெருக்கடியையும் அச்சத்தையும், மற்றும் பல நூற்றாண்டு கால இடைக்கால குப்பைகளின் குவிப்பாக உள்ள அபத்தமான சடங்குகள், மகுடங்கள் மற்றும் ஆடைகளுடன் பாரம்பரியத்திற்கு கட்டுப்பட்ட இடைக்கால முடியாட்சியின் மேல் அமர்ந்திருக்கும் அமைப்பின் முனையச் சிதைவையும் சுட்டிக்காட்டுகிறது. அவர்கள் அனைத்து எதிர்ப்புக்களையும் கீழ் மட்டத்திலிருந்து வரும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறார்கள். 

வர்க்கப் பகைமையால் பிளவுபட்ட இரண்டு பிரித்தானியா இருப்பதை முடிசூட்டு விழா சுட்டிக்காட்டுவதாக பல வர்ணனையாளர்கள் குறிப்பிட்டனர். பைனான்சியல் டைம்ஸ், ஹென்றி மான்ஸின் ஒரு பதிப்பில், “அற்புதமான மற்றும் விசித்திரமான சடங்குகளில்” அரச குடும்பத்தின் அனைத்து நலன்கள் குறித்து எச்சரித்தது. “பிரிட்டிஷ் பொதுமக்கள் முடிசூட்டு விழாவின் சந்தர்ப்பத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவது தவறாகும். ஒரு கருத்துக்கணிப்பின்படி, ஐந்தில் இரண்டு பகுதி மக்கள் வரி செலுத்துவோர் பணத்தை வீணடிப்பதாக கருதினர். மூன்றில் இரண்டு பகுதியினர் மற்றவரின் கூற்றுப்படி, அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை.” அவர் மேலும், “காமன்வெல்த் ஒருபுறமிருக்க, முழு பிரித்தானியாவும் முடிசூட்டு விழாவிற்குள் ஈடுபடவில்லை. பிரிட்டன் வெறுமனே கோளத்தின் பிரகாசம் அல்ல; அது வெளியே வானத்தின் இருளாகும். இது இரு பக்கங்களிலும் மரங்கள் கொண்ட பாதையில் கொடி அசைக்கும் விசுவாசிகள் பற்றியது மட்டுமல்ல; மாறாக, டிராபல்கர் சதுக்கத்தில் கைது செய்யப்பட்ட குடியரசுக் குழு உறுப்பினர்களையும் பற்றியது. இது தொலைக்காட்சியைப் பார்த்து வாயடைத்து இருக்கும் கோடிக்கணக்கான மக்களை பற்றியது அல்ல; மாறாக பிற்பகலில் கால் பந்தாட்டத்தில் அதிக ஆர்வமுள்ள மில்லியன் கணக்கானவர்கள் பற்றியது” என்றும் குறிப்பிட்டார்.    

“உலகின் பழமையான ஜனநாயகம்” பெயரில் மட்டுமே உள்ளது என்பதை முடிசூட்டு விழா அம்பலப்படுத்தியுள்ளது. இந்த அமைப்புமுறைக்கு எதிரான போராட்டம் இப்போது சட்டவிரோதமானது என்பது, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படுகிறது என்ற அனைத்துப் பொய்களையும் தீர்க்கமாக மறுதலிக்கிறது.