"தொழில் சட்ட சீர்திருத்தம்" பற்றி கலந்துரையாட இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பை சோசலிச சமத்துவக் கட்சி நிராகரிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடமிருந்து, தொழில் சட்ட சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை கேட்டும் அந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடலுக்கும் அழைப்பு விடுத்தும் மே 26 அன்று கடிதமொன்றைப் பெற்றது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வரிக் கொள்கைக்கு எதிராக அரசாங்கத் துறை ஊழியர்கள் இலங்கையின் கொழும்பில் 8 பிப்ரவரி 2023 புதன்கிழமை அன்று நடத்திய ஆர்ப்பாட்டம். [AP Photo/Eranga Jayawardena]

புதிய தொழிற் சட்டங்களை தயாரிப்பதில் 'அனைத்து பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்தல்' என்ற போர்வையில், ஏனைய அனைத்து அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல சிவில் அமைப்புகளுக்கும் இதேபோன்ற கடிதங்களை நாணயக்கார அனுப்பியுள்ளார். இந்த புதிய மசோதா, ஜூலை 9 ஆம் திகதி, தொழில் அமைச்சர், முதலாளிமார் மற்றும் தொழிற்சங்கங்கள் உட்பட முக்கூட்டு பெருநிறுவன அமைப்பான தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) சார்பில் பதில் அளித்த அதன் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர தெரிவித்ததாவது:

“தொழிற் சட்ட சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை உங்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்கும் அந்த விடயம் பற்றி உங்களுடன் கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கும் நீங்கள் விடுத்த அழைப்பை சோ.ச.க. நிராகரிக்கிறது. பெரும்பான்மையான மக்களின், அதாவது தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் எங்கள் கட்சி, உங்கள் அரசாங்கத்துடன் எந்த விஷயத்திலும் ஒத்துழைக்கப் போவதில்லை மற்றும் எந்த நடவடிக்கையிலும் பங்காளியாக இருக்கப் போவதுமில்லை. தொழிலாளர்களுக்கு உள்ள மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகள் பறிக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.

“உங்கள் கடிதம் ஒரு வஞ்சகமான மற்றும் நேர்மையற்ற செயலாகும். ‘முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களை காப்பாற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும்’ நாட்டில் தற்போதுள்ள தொழில் சட்டங்களை மாற்றப் போகிறீர்கள் என்ற உங்கள் கூற்றுக்கு மாறாக, நீங்கள் கொண்டு வரும் புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளையே பாதுகாக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் தொழிலாளர்களை கட்டுப்பாடின்றி சுரண்டுவதற்கு வசதி வழங்க உங்கள் அரசாங்கம் புதிய தொழிலாளர் சட்டங்களை நிறுவ விரும்புகிறது.”

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான சோ.ச.க., தற்போதுள்ள தொழிற் சட்டங்களை அகற்றுவதற்கான வலதுசாரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் நகர்வுகளுக்கு துணைபோகாது. அந்த விஷயத்தில், சோ.ச.க. இந்த ஆட்சியின் எந்த நடவடிக்கைக்கும் - அல்லது எந்த முதலாளித்துவ அரசாங்கத்திற்கும்- ஒத்துழைக்காது. எங்கள் கட்சி, இந்த வெறுக்கப்படும் ஆட்சியை வீழ்த்தவும், சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிச கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், கிராமப்புற மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பவே போராடுகிறது.

புதிய தொழிற் சட்டங்களைக் கொண்டுவருவதில் ஜனநாயக நடைமுறையில் ஈடுபடுவதாக அரசாங்கம் காட்டிக் கொள்வது அப்பட்டமான பொய்யாகும். இது ஏனைய முதலாளித்துவக் கட்சிகள், அவற்றுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவைத் திரட்டுவதற்கான கதையாகும். ஸ்தாபன ஊடகங்களின்படி, சில அமைப்புகள், குறிப்பாக தொழிற்சங்கங்கள், ஏற்கனவே தொழில் அமைச்சுக்கு தங்கள் முன்மொழிவுகளை அனுப்பியுள்ள அதேநேரம், ஏனையவை தங்கள் முன்மொழிவுகளைத் தயாரித்து வருகின்றன.

'எப்போதும் மாறிவரும் சூழலில், வேலை உலகில் தலைதூக்கி வரும் மாற்றங்களை நிவர்த்தி செய்வதற்கு நமது தொழில் சட்டங்களை மதிப்பாய்வு செய்வதும் புதுப்பிப்பதும் இன்றியமையாதது' என்று கூறும் அமைச்சரின் கடிதம், 'கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடிகள்” 'முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களைப் காப்பாற்றவும் பாதுகாக்கவும் இந்த மாற்றங்களுக்கான அவசரத்தை தீவிரப்படுத்தியுள்ளன', என மேலும் கூறியுள்ளது.

'எப்போதும் மாறிவரும் சூழல்' என்பதன் மூலம் ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு அங்கமான இலங்கையின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியையே அமைச்சர் குறிக்கின்றார். இந்தச் சூழ்நிலயில், 'வேலை உலகில் உருவாகி வரும் மாற்றங்கள்' என்று கூறுவதானது, அதிகலாபம் ஈட்டுவதற்காக தொழிலாளர்களை விரும்பியவாறு வேலைக்கு சேர்ப்பது மற்றும் நீக்குவது, சம்பள வெட்டு மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளை அனுமதிக்கும் 'நெகிழ்வான தொழிலாளர் சந்தைக்கான' பெருநிறுவனங்கள் மற்றும் ஒட்டுண்ணி சர்வதேச மூலதனத்தின் தேவையை பூர்த்தி செய்வதை மட்டுமே குறிக்கின்றது.

'தொழிலாளர்கள் நியாயமாக மற்றும் சமமாக நடத்தப்படுவதற்கும்' 'வேலை கொடுப்போருக்கும் தொழிலாளருக்கும் இடையே இணக்கமான உறவை' உறுதிப்படுத்துவதற்கும் தொழிற் சட்டங்களில் மாற்றங்கள் தேவை என்று அவரது கடிதம் பின்னர் கூறுகிறது. இருப்பினும், முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி மற்றும் விநியோகம் என்பது இலாபத்தின் வடிவில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரி மதிப்பைப் பிழிந்தெடுப்பதை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இவை எதுவும் சாத்தியமில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் தொழில் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள், சர்வதேச நாணய நிதியத்தால் ஆணையிடப்பட்டுள்ள சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டை பற்றிய 2023 மார்ச் அறிக்கை, தனியார் நிறுவனங்களின் 'போட்டித்தன்மையை' மேம்படுத்துவதற்கும், 'வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு இடையில் அதிக இணைப்புகளை வளர்க்க உதவுவதற்கும்' தொழிலாளர் 'நெகிழ்வுத்தன்மையை' உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கூறியது.

நவம்பரில், தனது 2023க்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த போது, நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 'ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்காகவும்” 'தொழிலாளர்களை ஒழுங்குபடுத்த ஒரு விரிவான சட்டத்தை கொண்டு வரவும்' “தொழிற் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும்' என்று அறிவித்தார்.

பல தசாப்தங்களாக, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இலங்கை பெருவணிகங்களும் தற்போதுள்ள தொழிற் சட்டங்களில் மாற்றங்களைக் கோரி வருவதுடன், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாற்றங்களைச் செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளன. இலங்கையில் உள்ள, சில தொழிலாளர் சட்டங்கள், 1948 இல் முடிவடைந்த பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் மரபுரிமையின் பெறுபேறு ஆகும். ஏனைய சட்டங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் இயற்றப்பட்டன.

1941 சம்பள நிர்ணய சபை சட்டம், 1942 தொழிற்சாலைகள் சட்டம், 1954 கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டம், உபகாரக் கொடுப்பனவு மற்றும் மகப்பேறு நன்மைச் சட்டம் மற்றும் 1971 வேலை நீக்கச் சட்டம் ஆகியவை உள்ளடங்களாக 28 சட்டங்களைப் பதிலீடு செய்வதற்கு ஒரு சட்டப் பிரிவை அறிமுகப்படுத்த அரசாங்கம் முன்மொழிகிறது. தற்போதுள்ள சட்டமானது வேலை பாதுகாப்பு, 180 நாட்கள் வேலையை முடித்த பிறகு தொழில் நிரந்தரம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் சில மருத்துவ பராமரிப்புகள், மற்றும் வேலை நிறுத்தப்படும் போது மட்டுப்படுத்தப்பட்ட இழப்பீடு போன்ற தொழிலாளர்களால் போராடி வென்ற முக்கியமான உரிமைகளை உள்ளடக்கியதாகும்.

அரசாங்கமும், முதலாளிகளும் இப்போது இந்த வரையறுக்கப்பட்ட உரிமைகளையும் அபகரிக்கவும், முதலாளித்துவ இலாபத் தேவைகளுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்யவும் விரும்புகின்றன. தொழில் சட்ட சீர்திருத்த ஆலோசனைக் கூட்டம் ஒன்று மே 17 அன்று நடைபெற்றது, இதில் அமைச்சர், முதலாளிமாரின் அமைப்புகள், முதலாளிமார் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற ஏனைய சில குழுக்களும் பங்கேற்றன.

கூட்டத்தில் முதலாளிகள் பின்வருமாறு கோரிக்கை விடுத்தனர்: “தொழில்நுட்ப முன்னேற்றம், மறுசீரமைப்பு அல்லது வணிக பேச்சுவார்த்தை, ரகசியத் தகவல்களை வெளியிடுதல் அல்லது நலன்களுக்காக மோதலில் ஈடுபடுதல் போன்ற காரணங்களால் ஒப்பந்தத்தை மீறுதல், மற்றும் செயற்திறம் போதாமை மற்றும் ஒழுக்க மீறல் போன்ற காரணங்களுக்காக வேலை கொடுப்போர் ஒரு தொழிலாளியை வேலை நீக்கம் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.' 'செயற்திறன் போதாமை' என்பது தாங்க முடியாத வேலைச் சுமையை தொழிலாளியால் செய்து முடிக்க முடியாமல் போகும் போது, அவரது நிலைபற்றி நிறுவனத்தால் தீர்மானிக்கப்படும். தாங்கமுடியாத வேலை நிலைமை சம்பந்தமான எந்த எதிர்ப்பும் அல்லது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் ஒழுக்கத்தை மீறுவதாக வரையறுக்கப்பட முடியும்.

மேலதிக கொடுப்பனவு வழங்கும் தற்போதுள்ள சட்டத்தின்படி இல்லாமல், பகல் நேர வேலைக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தில் பெண் தொழிலாளர்களை இரவு நேரத்திலும் வேலை வாங்குவதற்கு ஏற்ப, கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டுமென பெரும் வணிகங்கள் விரும்புகின்றன. முதலாளிமார் ஏற்கனவே எதேச்சதிகாரமாக இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஆடைத் தொழிற்துறையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இழப்பீடு அல்லது அவர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் கூட இல்லாமல் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலை நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் போனஸ் கொடுப்பனவுகள் உட்பட ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளன. எதிர்கால சம்பள உயர்வுகள், 75 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட வருகையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், தினசரி வேலை இலக்கில் குறைந்தபட்சம் 90 சதவிகிதம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் முதலாளிகள் மேலும் கோருகின்றனர்.

விரும்பியவாறு வேலைக்கு அமர்த்தவும் வேலை நீக்கவும் அனுமதிப்பதன் மூலம் 'இடைக்கால' தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ளக் கூடியவாறும் நிரந்தர தொழிலாளர்களுக்கு பதிலாக தற்காலிக அல்லது பகுதி நேர தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடியவாறும் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் முதலாளிமார் வலியுறுத்துகின்றனர்.

பெருவணிகத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய தொழிற் சட்டம் மாற்றப்பட்டால், வேலை பாதுகாப்பு இருக்காது மற்றும் முதலாளிகள் ஓய்வூதியம், சுகாதார பாதுகாப்பு மற்றும் ஊதியத்துடனான விடுமுறை போன்ற பலன்களை வழங்க மாட்டார்கள்.

இந்த மாதிரியான மாற்றங்கள் சர்வதேச அளவில் அரசாங்கங்களால் திணிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு, இந்தியாவின் வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி ஆட்சி 29 தொழிலாளர் சட்டங்களை நீக்கியதுடன் பெருவணிகத்தின் பாராட்டைப் பெற்ற நான்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான பாரதூரமான தாக்குதலாக இருப்பதுடன் கிட்டத்தட்ட அனைத்து பொது மற்றும் தனியார் துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்த அனுமதிப்பதாகும்.

ஐரோப்பாவில், அரசாங்கங்கள் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களைக் குறைக்கவும், வேலை நேரத்தை நீட்டிக்கவும், வேலை நீக்கங்களை எளிதாக்கவும் சட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன. அமெரிக்காவில், ஜனாதிபதி ஜோ பைடன், ரயில் தொழிலாளர்கள் மீது தேசிய ஒப்பந்தத்தை சுமத்துவதற்கான ஒரு சர்வாதிகார மசோதாவில் கையெழுத்திட்ட அதே நேரத்தில், சில அமெரிக்க மாநிலங்கள் குழந்தை தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன.

இலங்கையில் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் என்று அழைக்கப்படுவது, விக்கிரமசிங்க ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பாரதூரமான சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கைகளில் அரசுக்கு சொந்தமான 430 நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் அல்லது மறுசீரமைத்தல், அரச தொழில்களை மொத்தமாக அழித்தல், பொது சுகாதாரம் மற்றும் கல்வியை வெட்டித் தள்ளுதல், வருமான வரியை அதிகரித்தல் மற்றும் விரிவுபடுத்தல் மற்றும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தும் வட் வரியை அதிகரித்தலும் அடங்கும். .

புதிய தொழில் சட்டமானது தனியார் துறை மற்றும் அரை-அரசு நிறுவனங்களில் உள்ள எட்டு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களை பாதிக்கும். தனியார் துறையானது சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் 21 பிராந்திய தோட்ட நிறுவனங்களை உள்ளடக்கியதாகும். இதில் சுமார் 1.5 மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதில் கருவியாக செயற்படும் தொழிற்சங்கங்கள், தொழிற் சட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக எந்த பிரச்சாரத்தையும் ஏற்பாடு செய்வதையும் நிராகரித்துள்ளன. அதற்குப் பதிலாக, புதிய சட்டங்களைத் தயாரிப்பதற்கு மட்டுமின்றி, அவற்றைச் செயல்படுத்துவதிலும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தனியார் துறை மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய சுமார் 30 தொழிற்சங்கங்கள் மே 25 அன்று ஒரு கூட்டத்தை நடத்தி, தாங்கள் தொழில் சட்ட சீர்திருத்தத்தை எதிர்க்கவில்லை, ஆனால், இந்த சீர்திருத்தங்கள் வெளிப்படையாக தொழிலாளர் சார்பானதாக அல்லாத போதும், அது 'தொழிலாளர்களின் நலனுக்கானதாக' இருக்க வேண்டும் என்று அறிவித்தன. இந்த தொழிற்சங்கங்களில் சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கம் (FTZGSWU), இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU), இலங்கை வர்த்தக தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கமும் அடங்கும்.

தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்தின் தொழிலாள வர்க்க-விரோத பண்பை தெளிவாக அறிந்து வைத்துள்ள சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அன்டன் மார்கஸ், முன்மொழியப்பட்ட தொழிலாளர் சட்டம் இளம் தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கும் என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தினார். 'பொருத்தமான சட்டங்கள்' பற்றி கலந்துரையாட 'நிபுணர்கள் குழுவை' அமைக்க வேண்டும் என்பதே அவரது ஒரே பரிந்துரை ஆகும்.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்க, சட்டங்களுக்கு எதிராக வீதிப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று வாய்ச்சவடால் விடுத்தார். இருப்பினும், அதே மூச்சில், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்கள் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய மாட்டோம் என்று கூறினால், 'அந்த முதலீட்டாளர்களுடன் பேச நாங்கள் தயாராக உள்ளோம்... அவர்கள் விளக்கமளித்தால், நாங்கள் அதைப் புரிந்துகொண்டு, அதன்படி [தொழிற் சட்டங்களை] சீர்திருத்துவோம்,' என்றார்.

தொழிலாளர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டமும், பெருவணிகம் மற்றும் உலக நிதி மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்கும் இலாப அமைப்பையும் முதலாளித்துவ அரசையும் நேரடியாக எதிர்கொள்கிறது.

தொழிலாளர்களின் இழப்பில் முதலாளித்துவ அமைப்புக்கு முண்டு கொடுக்க அரசாங்கத்துடனும் பெருவணிகத்துடனும் ஒத்துழைக்கத் தங்கள் விருப்பத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்த தொழிற்சங்கங்கள் ஊடாக தொழிலாள வர்க்கம் தனது உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. தொழில்துறை போராட்டத்தை தடைசெய்யப் பயன்படுத்தப்படும் கொடூரமான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களுக்கு எதிராக எந்தப் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள அவை மறுத்துவிட்டன.

தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவ கட்சிகளிலும் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலை செய்யும் இடங்களிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் கட்டியெழுப்புவதன் மூலமும், அரசாங்கத்திற்கும் அதன் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட முழு சிக்கனத்திட்ட நிரலுக்கும் எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைப்பதன் மூலமும் பிரச்சினைகளை தொழிலாளர்கள் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுமாறும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. 

இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான ஒரு பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கி எறிந்து தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவுவதற்கான சவாலை தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்கின்றது. தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஒரு மாநாட்டை கட்டியெழுப்புவதே, இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முன்னோக்கிய வழி ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுகிறது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், நமது கட்சியை தேவையான புரட்சிகரத் தலைமையாகக் கட்டி எழுப்பவும், அழைப்பு விடுக்கிறோம்.

Loading