மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, காஸா-இஸ்ரேல் எல்லையில் 1,000ம் மீட்டர் “தடுப்பு மண்டலத்திற்குள்” (buffer zone) உள்ள அனைத்து கட்டிடங்களையும் இஸ்ரேல் முற்றிலுமாக இடிக்க உத்தேசித்துள்ளதாக செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச சட்டத்தின் கீழ் போர்க் குற்றமாக கருதப்படும் இந்த முடிவு, காஸா பகுதியின் அளவைக் கணிசமாகக் குறைக்கும்.
இடிக்கப்படவுள்ள பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் வெடிமருந்துகளை வைத்திருந்த 24 இஸ்ரேலிய சிப்பாய்கள் திங்கள்கிழமை கொல்லப்பட்டதை அடுத்து இந்த திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. படையினர் வெடிமருந்துகளை புதைத்துக்கொண்டிருந்தபோது, அவர்கள் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட போது வெடிகுண்டுகள் வெடித்தன.
“மூன்று அதிகாரிகளின் கூற்றுப்படி, பாதுகாப்பு தடுப்பு மண்டலம் என்று அவர்கள் விவரிப்பதை உருவாக்குவதற்காக, எல்லைக்கு அருகில் உள்ள பல பாலஸ்தீன கட்டிடங்களை இஸ்ரேல் இடிக்க விரும்புவதாக” டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“இஸ்ரேலுக்கும் காஸாவிற்கும் இடையே உள்ள சுமார் 36 மைல் எல்லையின் முழு நீளத்திலும், சுமார் ஆறில் பத்தில் ஒரு மைல் அளவிலான இடையக தடுப்பு மண்டலத்தை உருவாக்குவதே இஸ்ரேலின் இலக்கு என்று இரண்டு அதிகாரிகள் கூறியதாகவும் அதன் குறுகிய பிரதேசத்திலுள்ள நிலம் நான்கு மைல்களுக்கும் குறைவான அகலத்தை கொண்டுள்ளது” என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது..
ஒரு செய்தியாளர் மாநாட்டில், இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டானியல் ஹகாரி, “தெற்கிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான பாதுகாப்பு நிலைமைகளை உருவாக்க இஸ்ரேல் முயல்கிறது” என்று குறிப்பிட்டார்.
இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து காஸாவின் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில், 25,000 க்கும் மேற்பட்ட காஸா மக்கள் கொல்லப்பட்டதோடு, 7,000 க்கும் மேற்பட்டவர்கள் காணமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டபோது, போதுமான வீட்டுவசதிக்கான உரிமை குறித்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் பாலகிருஷ்ணன் ராஜகோபால் டைம்ஸிடம் கூறுகையில், “எல்லையில் இஸ்ரேல் என்ன செய்கிறது என்பது குறித்து ஜெனீவா ஒப்பந்தத்தில் எந்த விதியும் இல்லை, இது ஒரு வகையான தடுப்புச் சுத்திகரிப்பு நடவடிக்கையாகும்” என்று குறிப்பிட்டார்.
“ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல், சொத்துக்களை வேண்டுமென்றே அழிப்பதில் ஈடுபடாமல் இருக்க வேண்டிய கடமை உள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேலிய அரசியல்வாதிகள் அத்தகைய ஒரு இடையக தடுப்பு மண்டலத்திற்கான திட்டத்தை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி எலி கோஹென், “இதனால் காஸாவின் நிலப்பரப்பும் சுருங்கிவிடும்” என்று அறிவித்தார். மேலும், முன்னாள் விவசாய அமைச்சர் அவி டிக்டர் “எல்லையில் ஒரு விளிம்பு” பற்றி பேசுகிறார். “இதன் மூலம் நீங்கள் யாராக இருந்தாலும் இஸ்ரேல் எல்லையை நெருங்க முடியாது” என்று அவர் கூறினார்.
காஸா பகுதியில் வசிக்கும் அரை மில்லியன் மக்கள் “பேரழிவுகரமான பஞ்சத்தை” எதிர்கொள்கின்றனர் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் காஸாவின் பகுதியை மேலும் சிறிதாக்கும் இஸ்ரேலின் இந்த திட்டம் வெளிப்பட்டுள்ளது. “இவை மனிதர்களுக்கான நிபந்தனைகள் அல்ல” என்று UNRWA தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலியட் டூமா கூறினார்.
காஸாவில் 25,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா சபை குறிப்பிட்டுள்ளது. “1.7 மில்லியன் பேர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், மற்றும் காஸாவில் சுகாதார வசதிகள் அழிந்துவிட்டன என்றும் அது மேலும் தெரிவித்தது.
ஜனவரி 22 முதல் 23 வரை 195 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 354 பேர் காயமடைந்ததாகவும் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று வேர்ஜீனியாவின் மனாசாஸில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் உரை நிகழ்த்தியபோது, அவரை “இனப்படுகொலையாளி ஜோ” என்று அழைத்து, எதிர்ப்பாளர்கள் குறுக்கிட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர், “இனப்படுகொலைக்கு நிதியளிப்பதை நிறுத்து, இப்போது போர் நிறுத்தம் வேண்டும்” என்று முழக்கமிட்டார்.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், யூரோ மெட் கண்கானிப்பு அமைப்பு, காஸா மக்கள் உதவி வாகனங்களுக்காக காத்திருக்கும் போது, இஸ்ரேல் அவர்களை தொடர்ந்து தாக்கி கொன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. “காஸா பகுதியின் வடக்கே பஞ்சம் பரவி வருகிறது, காஸா நகருக்கு தெற்கே உதவி பெற காத்திருக்கும் பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து கொன்று வருகிறது, அக்டோபர் 7, 2023 முதல் அந்தப் பகுதியின் பொதுமக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்திவரும் இஸ்ரேலின் நோக்கத்தை இது உறுதிப்படுத்துவதாக கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
யூரோ மெட் கண்கானிப்பு அமைப்பு தெரிவிக்கையில்:
காஸா நகரின் தென்கிழக்கே குவைத் சுற்றுவட்ட வீதிக்கு அருகில் உள்ள சலா அல்-தின் சாலையில், பட்டினியால் வாடும் நூற்றுக்கணக்கான குடிமக்களுக்கு எதிராக, இஸ்ரேலிய இராணுவம் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தி, பலரைக் கொன்று காயப்படுத்தியதாக மனித உரிமைக் குழு ஆவணப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் பீரங்கி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் குவாட்காப்டர் ட்ரோன்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பட்டினியால் வாடும் பொதுமக்களைத் தாக்கியுள்ளது.
அது மேலும் தெரிவிக்கையில்,
இஸ்ரேல் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக வடக்கு காஸா பள்ளத்தாக்கில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போர்க் கருவியாக பஞ்சத்தைப் பயன்படுத்தி வருகிறது மட்டுமல்லாமல், சுமார் 10 நாட்களுக்கு முன்பு வரத் தொடங்கிய சில வரையறுக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளைக் கூட பெற முயற்சிக்கும் காஸா மக்களை இலக்கு வைத்து தாக்கி வருகிறது. காஸாவிலுள்ள பொதுமக்களுக்கு எதிரான அதன் இனப்படுகொலைப் போரின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் அவர்களில் பலரைக் கொன்று காயப்படுத்தியுள்ளது.
திங்களன்று, மேற்கு கான் யூனிஸில் உள்ள அல் கெய்ர் மருத்துவமனையில் இஸ்ரேலியப் படைகள் சோதனை நடத்தியது, பெண்கள் மற்றும் குழந்தைகளை தெற்கு காஸாவின் ரஃபாவை நோக்கி வெளியேறுமாறு உத்தரவிட்டதுடன், மற்றும் மருத்துவ ஊழியர்களை கைது செய்ததாக கூறப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் இராணுவ ஊடுருவல்களை எதிர்கொள்வதாகவும், பல சுகாதார ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கவலை தெரிவித்தது. தற்போது இந்த மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ள முடியாதுள்ளது” என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.
“நாசர் மருத்துவமனையைச் சுற்றியுள்ள சுற்றுப்புறங்களில் உள்ள வெளியேற்ற உத்தரவுகள் மற்றும் மருத்துவமனை அருகே தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக, காயமடைந்தவர்கள் ஏராளமானோர் மருத்துவமனை வளாகத்தில் இருப்பதாக” சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இனப்படுகொலை தொடரும் நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் வளர்ந்து வரும் போரில் அமெரிக்கா தனது நேரடி இராணுவ ஈடுபாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. திங்களன்று, ரேடார், ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தளங்களை குறிவைத்ததாகக் கூறப்படும் யேமனில் உள்ள எட்டு தளங்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
அதே நாளில், சோமாலியா கடற்கரைக்கு அப்பால் அரபிக் கடலில் கமாண்டோ சோதனையின் போது கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்க கடற்படையின் முதன்மை சிறப்பு நடவடிக்கைப் படையான சீல்களின் (SEAL) பெயர்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டது.
செவ்வாயன்று, பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஓஸ்டின், “ஈராக்கில் ஈரானுடன் இணைந்த குழுக்களுக்கு” எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறினார். “அவர்களையும் எமது நலன்களையும் பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதியும் நானும் தயங்க மாட்டோம்” என்று கூறிய ஒஸ்டின், “எமது மக்களையும் எமது வசதிகளையும் பாதுகாப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம்” என்று மேலும் தெரிவித்தார்.