முன்னோக்கு

இனப்படுகொலை மற்றும் போரை எதிர்! ஜூலை 24 அன்று வாஷிங்டனில் ஆர்ப்பாட்டம்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

wsws.org/july24 இல் ஜூலை 24 ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள பதிவு செய்யுங்கள்.

ஜூலை 24 அன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகு, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் தலைவர்களின் அழைப்பின் பேரில் அமெரிக்க காங்கிரஸின் ஒரு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அவர்கள் இஸ்ரேலிய ஹிட்லருக்கு இந்த கௌரவத்தை ஒரு இனப்படுகொலை போருக்கு மத்தியில் வழங்கியுள்ளனர். இது, இதுவரை காசாவில் 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குடியிருப்பாளர்களை வேண்டுமென்றே படுகொலை செய்வதில் முடிந்துள்ளது, அவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.

நெதன்யாகு அவரது குற்றங்கள் இருந்தபோதிலும் மட்டுமல்ல, மாறாக அவற்றின் காரணமாகவும் காங்கிரஸால் வரவேற்கப்படுகிறார். இஸ்ரேலிய பிரதம மந்திரியின் பாசிச இறுமாப்பு ஒருபுறம் இருக்க, இறுதி ஆய்வில் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு அரசியல் முகவராவார். அவருடைய உரை ஒரு முன்னேற்ற அறிக்கையின் தன்மையைக் கொண்டிருக்கும், அதில் நெதன்யாகு காங்கிரஸிற்கு அவருடைய அரசாங்கம் நடத்தும் இனப்படுகொலைப் போர் எவ்வாறு மத்திய கிழக்கிலும் உலகெங்கிலும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முதலாளித்துவ புவிசார் அரசியல், நிதிய மற்றும் பெருநிறுவன நலன்களை முன்னெடுக்கிறது என்பதை விளக்குவார்.

நெத்தன்யாகு காங்கிரசில் உரையாற்றும் அதேநாளில், இனப்படுகொலை போரை எதிர்க்கும் ஆயிரக் கணக்கானவர்கள் —பொருளாதாரத்தின் அத்தனை துறைகளிலும் உள்ள உழைக்கும் மக்கள் மற்றும் மாணவ இளைஞர்கள்— கேபிடல் ஹில்லில் நெத்தன்யாகுவின் பிரசன்னத்திற்கு தங்களின் சீற்றத்தை வெளிப்படுத்த வாஷிங்டனில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி ஆகியவை ஜூலை 24 அன்று வாஷிங்டன் டி.சி. யில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பரந்தளவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளன மற்றும் வலியுறுத்தியுள்ளன.

நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது, காங்கிரஸை அதன் கொள்கைகளை மாற்றுமாறு கெஞ்சுவதற்காக அல்ல. ஏறத்தாழ ஒன்பது மாத கால யுத்தம், வாஷிங்டனில் உள்ள பெருநிறுவனக் குழுக்களின் ஒழுக்கநெறி ஒருபுறம் இருக்கட்டும், பகுத்தறிவுக்கான முறையீடுகளுக்கு அலட்சியமாக இருப்பதை நிரூபித்துள்ளது. நெதன்யாகுவுக்கான வரவேற்பு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இருகட்சி முகவர்களின் கொள்கைகளை மாற்றுவதில் உள்ள அனைத்து பிரமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு புதிய அரசியல் நோக்குநிலையும் மூலோபாயமும் அவசியமாகும்.

எனவே, ஜூலை 24 ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நேட்டோ ஒத்துழைப்பாளர்களின் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் பூகோள விரிவாக்கம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய, சக்திவாய்ந்த வெகுஜன இயக்கத்தை இயக்குவதாகும்.

காசா இனப்படுகொலை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அட்டூழியம் அல்ல. பாலஸ்தீன மக்கள் மீதான இந்த கொடூரமான தாக்குதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்டுள்ள ஓர் உலகளாவிய போரின் ஒரு போர்முனை மட்டுமே, அது ஒரு அணுஆயுத பேரழிவாக தீவிரமடைய அச்சுறுத்துகிறது.

அங்கே “நல்ல” ஏகாதிபத்திய போர்களை “மோசமான” ஏகாதிபத்திய போர்களில் இருந்து பிரிக்க முடியாது. பாலஸ்தீனர்களைப் படுகொலை செய்ய இஸ்ரேலுக்கு எறிகணைகளையும் பீரங்கிக் குண்டுகளையும் வினியோகித்து வரும் அதே அரசாங்கங்கள், ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனிய பாசிசவாத ஆட்சியின் கூட்டணியில் பினாமி போரைத் தீவிரப்படுத்தி வருகின்றன. பைடென் நிர்வாகம், அதன் முந்தைய “சிவப்புக் கோடுகளை” கடந்து, இப்போது ரஷ்ய பிராந்தியம் மீதான தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்து வருவதுடன், அணுஆயுத போர் அச்சுறுத்தலால் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் பின்வாங்க மாட்டார்கள் என்று அறிவித்து வருகிறது.

அதே நேரத்தில், பைடென் நிர்வாகம் சீனாவுடனான மோதலை இடைவிடாமல் தீவிரப்படுத்தி வருகிறது.

காசா இனப்படுகொலையும் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் மோதல்களும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தலைமையிலான ஒரு உலகளாவிய ஏகாதிபத்திய வெறித்தனத்தின் ஒரு பகுதியாகும்.

ஜூலை 24 ஆர்ப்பாட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சி, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு, மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி ஆகியவை பின்வரும் மூலோபாய கோட்பாடுகளின் அடிப்படையில் இனப்படுகொலை மற்றும் உலகப் போருக்கு எதிரான ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுக்கிறது:

முதலாவதாக, போருக்கு எதிரான போராட்டத்திற்கு இரண்டு பெருநிறுவனக் கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியுடன் நிபந்தனையற்ற மற்றும் மாற்றமுடியாத முறிவு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதும் தேவைப்படுகிறது.

இரண்டாவதாக, இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிரான இயக்கம் சர்வதேசமயத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும் தொழிலாளர்களை அவர்களுடைய பொது வர்க்க நலன்களின் அடிப்படையில் ஐக்கியப்படுத்த வேண்டும்.

மூன்றாவதாக, போருக்கு எதிரான போராட்டம் கட்டாயம் முதலாளித்துவ-எதிர்ப்பு மற்றும் சோசலிசத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால், நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும் போருக்கு அடிப்படைக் காரணமான பொருளாதார அமைப்புமுறைக்கும் முடிவு கட்டுவதற்கான போராட்டம் இல்லாமல் போருக்கு எதிரான எந்த தீவிர போராட்டமும் இருக்க முடியாது.

ஜூலை 24 அன்று வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசுங்கள் மற்றும் உங்கள் பணியிடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து பிரதிநிதிகளை உருவாக்குங்கள்.

இந்த அறிக்கையை சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல் வழியாக முடிந்தவரை பரவலாக விநியோகிக்கவும்.

இனப்படுகொலையை நிறுத்து!
போருக்கு எதிரான போரை அறிவிக்கவும்!

wsws.org/July24 இல் ஜூலை 24 ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள பதிவு செய்யுங்கள்.