மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அதிவலது தேசிய பேரணியின் (RN) மரின் லு பென் (Marine Le Pen) மற்றும் ஜோர்டான் பார்டெல்லாவின் (Jordan Bardella) தலைமையுடன் பலமுறை இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தியிருப்பதாக முன்னாள் மாவோயிச பிரெஞ்சு நாளிதழ் லிபரேஷன் (Libération) புதனன்று வெளிப்படுத்தியது. இந்த சந்திப்புகள் பிரான்சின் இரு பெரிய வங்கிகளான BNP Paribas மற்றும் Société Générale ஆகியவற்றுடன் தொடர்புடைய செல்வாக்கு திரட்டும் தியரி சோலேரின் (Thierry Solère) தனிப்பட்ட இல்லத்தில் நடைபெற்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்ரோனின் திடீர் தேர்தல்களுக்குப் பின்னர், பிரான்சில் முன்னொருபோதும் இல்லாத அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்த வெளிப்பாடு வந்துள்ளது. ஜோன்-லூக் மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NFP) மக்ரோனின் குழுமக் (Ensemble) கூட்டணிக்கு முன்னால் முதலாவதாக வந்தது. மக்ரோனின் குழுமக் கூட்டணி பேரழிவு தரும் தோல்வியை சந்தித்தது. ஜூன் 9 அன்று மக்ரோன் தேர்தலுக்கு அழைப்பு விடுத்த பின்னர் தேர்தலில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட RN, தேசிய நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இந்த நிலைமையில், இதுவரை யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இந்த தேர்தலும், மக்ரோனின் ஒட்டுமொத்த ஜனாதிபதி பதவிக்காலமும், மோசடியான அடித்தளங்களில் இருந்து வருவதை லிபரேஷன் இல் வெளியான மக்ரோன்-RNக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் எடுத்துக்காட்டுகின்றன. திமிர்பிடித்த வங்கியாளர் மக்ரோனுக்கு எதிராக சாதாரண பிரெஞ்சு மக்களின் உறுதியான பாதுகாவலர்களாக இல்லாத நவ-பாசிஸ்டுகளுக்கு எதிராக மக்ரோன் உறுதியான போராட்டத்தை நடத்தவில்லை. குழுமக் கூட்டணி மற்றும் RN ஆகியவை ஒரே ஆளும் வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளாகும். சோலேர் போன்ற முகவர்கள், அவர்களை ஆடம்பரமான சூழல்களில் சுமூகமான உரையாடல்களுக்கு அழைக்கின்றனர்.
இது மெலோன்சோனின் NFP இன் திவால்நிலையையும், Ensemble உடனான ஒரு தேர்தல் கூட்டணி மூலமாக அதிவலதை எதிர்த்துப் போராடும் அதன் முன்னோக்கையும் அம்பலப்படுத்துகிறது. NFP ஓர் அரசாங்கத்தை உருவாக்க முயற்சிக்க அனுமதிக்க வேண்டுமென்ற மெலோன்சோனின் வேண்டுகோள்களை மக்ரோன் இதுவரையில் நிராகரித்துள்ளார். மிகவும் பொதுவாக, இரண்டாம் உலகப் போரின் போது பிரான்சில் நாசி ஆக்கிரமிப்புடன் ஒத்துழைத்ததைப் போலவே, முதலாளித்துவ வர்க்கம் பொலிஸ் -அரசு ஆட்சியை ஆதரிப்பதுடன், அதிவலது சக்திகளுடன் முன்பினும் அதிகமாக வெளிப்படையான அனுதாபம் கொண்டுள்ளது என்பது மிகவும் பரந்தளவில் தெளிவாக உள்ளது.
பதவியில் இருக்கும் ஒரு பாதுகாப்பு மந்திரி மற்றும் ஒரு முன்னாள் பிரதம மந்திரி உட்பட மக்ரோன் அரசாங்கத்தின் முன்னணி பிரமுகர்கள், மத்திய பாரிஸின் அமலே தெருவில் உள்ள சோலேர் இன் வீட்டில் லு பென் மற்றும் பார்டெல்லாவை எவ்வாறு சந்தித்தனர் என்பதை லிபரேஷன் பத்திரிகை அம்பலப்படுத்தியது. “RN உடனான மக்ரோனின் ஆட்களுடன் இரகசிய இரவு விருந்துகள்” என்று தலைப்பிடப்பட்ட அதன் கட்டுரை பின்வருமாறு குறிப்பிட்டது:
இவ்வாறாக, சமீபத்திய மாதங்களில், எங்களது ஆதாரங்களின்படி, தேசிய பேரணியின் இரண்டு பிரதான தலைவர்களான மரின் லு பென் மற்றும் ஜோர்டான் பார்டெல்லா ஆகியோர் அமலே தெருவுக்கு மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒரே நேரத்தில் வரவில்லை, ஆனால் அவர்கள் சில சமயங்களில் முன்னாள் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் மற்றும் தற்போதைய பாதுகாப்பு மந்திரி செபஸ்தியான் லெகோர்னு போன்ற ஜனாதிபதி முகாமின் முன்னணி உறுப்பினர்கள் சில சமயங்களில் கலந்து கொண்டனர், இருவரும் சோலேருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். RN-யின் இயல்பாக்கம் தொடர்வதற்கு இதுபோன்ற இரகசியக் கூட்டங்களும் தேவைப்படுகின்றன.
ஐரோப்பியத் தேர்தல்களில் நவ-பாசிசவாத எழுச்சிக்கு விடையிறுப்பாக மக்ரோன் முன்கூட்டிய தேர்தல்களை அறிவித்து மூன்று நாட்களுக்குப் பின்னர், ஜூன் 12 அன்று, பார்டெல்லா சம்பந்தப்பட்ட அதுபோன்றவொரு சந்திப்பு நடந்தது. 1944 இல் பிலிப் பெத்தானின் விச்சி ஆட்சி வீழ்ச்சி அடைந்ததற்குப் பின்னர், பிரான்சில் முதல் அதிவலது அரசாங்கத்தை உருவாக்க அதை அனுமதித்திருக்கும் நாடாளுமன்றத்தில் ஒரு அறுதிப் பெரும்பான்மையுடன் RN தேர்தல்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அரசியல்வாதிகளின் பாதுகாப்புப் பிரிவுகளின் ஏராளமான உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் மெய்க்காப்பாளர்களைக் கண்டு வியப்படைந்த, சில நேரங்களில் நள்ளிரவில் விழித்தெழுந்த அநாமதேய அமலே தெரு மற்றும் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களை லிபரேஷன் தனது ஆதாரங்களாக மேற்கோளிட்டுள்ளது. லு பென், பார்டெல்லா, பிலிப், லெகொர்னு மற்றும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் ஆகியோர் சோலேரின் இல்லத்தில் இந்த சந்திப்புகளை முடித்துவிட்டு வெளியேறியதை பார்த்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கதையை எதிர்கொள்ளும் போது, சோலேர் மற்றும் லெகோர்னு முதன்முதலில் லிபரேஷனுக்கு ஒரே மாதிரியான வார்த்தைகளில் மறுப்பு தெரிவித்தனர். “இந்த பொய்களை உங்களுக்கு யார் சொல்வது?” இந்த மறுப்புகள் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட பொய்கள் என்று லிபரேஷன் முடிவு செய்தது. அதன் கட்டுரையில் பின்வருமாறு வினவியது, “இது அரச தலைவரின் [மக்ரோனின்] கோரிக்கையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட விஷயமா, எனவே ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலாக தனது பணியை விவரிக்கும் ஒரு பரப்புரையாளர் [Solère] நன்மைக்காக இரகசியமாக இருக்க வேண்டியிருந்தது”.
எவ்வாறிருப்பினும் அந்த செய்திகள் குறித்து லு பென்னிடம் BFM-TV வினவிய போது, அவர் பிலிப்பை சந்தித்ததை அப்பட்டமாக உறுதிப்படுத்தினார்: “உங்களுக்குத் தெரியும், நான் அனைத்து வகையான மக்களையும் சந்திக்கிறேன், அது முற்றிலும் வழமையானது.”
பொய்யான மறுப்புகளின் ஒரு மூலோபாயம் ஏற்கத்தக்கதல்ல என்ற முடிவுக்கு எட்வார்ட் பிலிப் வந்ததாகத் தெரிகிறது. பிரான்சின் “ஆளமுடியாத தன்மை” குறித்த பிரச்சினை குறித்து விவாதிக்க TF1 செய்திகளுக்கு அழைக்கப்பட்ட அவர், செய்தி வாசிப்பாளர் Gilles Bouleau விடம் அவர் உண்மையில் சோலேரின் குடியிருப்பில் மரின் லு பென்னை சந்தித்ததாக கூறினார்: “ஆம், அது உண்மைதான். நாங்கள் ஒருவருக்கொருவர் நன்கு தெரியாததால் இரவு உணவு சாப்பிட்டோம். இரவு உணவின் போது நாங்கள் கவனித்தோம் - இது ஒரு சுமூகமான இரவு உணவாக இருந்தது - பல விஷயங்களில் எங்களுக்கு மிகவும் ஆழமான கருத்து வேறுபாடுகள் இருந்தன” என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு நவ-பாசிசவாதியுடன் அவருக்கு வேறுபாடுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க, லு பென்னுடன் சுமூகமான இரவு உணவு தேவையா என்று பிலிப்பிடம் Bouleau கேட்டபோது, இதற்கு பதிலளித்த பிலிப், “நான் மக்களை சந்திப்பதை விரும்புகிறேன், நேசிக்கிறேன், நேசிக்கிறேன்” என்று பேச்சை மாற்றினார். தன்னால் என்னென்ன கேள்விகளைக் கேட்க முடியும், என்னென்ன கேள்விகளைக் கேட்க முடியாது என்பதை அறிந்திருந்த Bouleau பேட்டியை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார்.
புதனன்று, மக்ரோன் எக்ஸ்/ட்விட்டர் இல் பிரெஞ்சு மக்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டார், அதில் பிரான்சுக்கு எந்த கூட்டணி சிறந்தது என்பதைத் தீர்மானிக்க தேசிய நாடாளுமன்றத்தில் உள்ள வெவ்வேறு அரசியல் கன்னைகளுக்கு அவர் “சிறிது நேரம் கொடுப்பதாக” தெரிவித்தார். ஆனால் மூடிய கதவுகளுக்குப் பின்னால், முதலாளித்துவ ஸ்தாபகத்தின் அனைத்து கன்னைகளும் —பகிரங்கமாக பாசிசவாத அல்லது “ஜனநாயகம்” என்று கூறிக் கொள்பவை- தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் சதி செய்து கொண்டிருக்கின்றன. ஏதோவொரு உடன்பாடு எட்டப்பட்டதும், அரசாங்கம் அமைக்க முயற்சிக்க மக்ரோன் ஒரு பிரதம மந்திரியை நியமித்ததும், இந்த முடிவு தெளிவாக RN உடனான விரிவான விவாதத்தின் விளைபொருளாக இருக்கும்.
இந்த சக்திகள் ஒன்றிணைந்து எந்த அரசாங்கத்தை அமைத்தாலும், அது மெலன்சோனுடன் பிணைக்கப்பட்ட சில நபர்களை உள்ளடக்கியிருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சியாக இருக்கும். கடந்த ஆண்டு பெரும் மக்கள் எதிர்ப்பு மற்றும் வெகுஜன வேலைநிறுத்தங்களுக்கு முகங்கொடுத்து மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை திணிக்குமாறு கோரிய வங்கிகளின் முத்திரையை மட்டும் அது தாங்கி நிற்காது. மாறாக, மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் எதிர்க்கும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ இராணுவ விரிவாக்கத்தையும் அது தொடரும்.
புதிய மக்கள் முன்னணி ஏகாதிபத்திய யுத்தத்தையோ அல்லது பொலிஸ் அரச ஆட்சியையோ எதிர்க்கவில்லை என்பதை வலியுறுத்த வேண்டும். ரஷ்யாவுடனான போருக்காக உக்ரேனுக்கு பிரெஞ்சு துருப்புகளை அனுப்புவதற்கும், மற்றும் பிரான்சின் இராணுவ, பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளை அபிவிருத்தி செய்வதற்குமான அழைப்பும் அதன் சொந்த வேலைத்திட்டத்தில் உள்ளடங்கி உள்ளது. தன்னை பிரதமராக நியமிக்குமாறு மெலோன்சோன் தொடர்ந்து மக்ரோனுக்கு முறையிட்டு வருகின்ற நிலையில், போராட்டத்தில் அவருக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட எந்த முயற்சியும் செய்யாமல், அவர் வெறுமனே ஆளும் வர்க்கத்தின் பாசிசவாத சூழ்ச்சிகளுக்கு ஒரு மூடிமறைப்பை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கிறார்.
மக்ரோன் அரசாங்கம்-RN பேச்சுவார்த்தைகளில் சோலேரின் பங்கு, குறிப்பாக மக்ரோன் மற்றும் நவ-பாசிஸ்டுகள் இருவரையும் பிரெஞ்சு உத்தியோகபூர்வ அரசியலின் மையத்தில் வைப்பதில் முதலாளித்துவ பிரபுத்துவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகளின் தீர்க்கமான பங்கை, இவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
பிரெஞ்சு நிதி, பொருளாதாரம், அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தில் இருந்து பிரமுகர்களை ஒன்றாகக் கொண்டுவரும் செல்வாக்கு மிக்க Le Siècle (”நூற்றாண்டு”) விவாதக் கழகத்தின் உறுப்பினராகவும் சோலேர் உள்ளார். இதில் BNP Paribas மற்றும் Société Générale வங்கிகளின் செயலதிகாரிகள், பெரும் பில்லியனர் பேர்னார்ட் ஆர்னோவின் (Bernard Arnault) மகள் டெல்பின் (Delphine), மற்றும் பில்லியனர் ஆயுத அதிபர், சேர்ஜ் டசால்ட் (Serge Dassault) ஆகியோர் உள்ளடங்குவர். சோலேருக்கு அப்பால், அரசியல் பிரமுகர்களில், மக்ரோன் மற்றும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பன் (Lionel Jospin) ஆகியோர் அடங்குவர். Le Siècle இன் பல செய்தி ஊடக ஆளுமைகளில் ஒருவர் லிபரேஷனின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி செர்ஜ் ஜூலை (Serge July) மற்றும் தற்போதைய ஆசிரியர் லோரன்ட் ஜோஃப்ரின் (Laurent Joffrin) ஆகியோர் அடங்குவர்.
மக்ரோன் அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்களாக ஆகவிருந்த பல வலதுசாரி பிரமுகர்களை சோலேர் மக்ரோனுக்கு அறிமுகப்படுத்தினார். “பெல்லோட்டா பெல்லோட்டா கும்பல்” என்றழைக்கப்படும் இந்த கும்பல், ஸ்பானிஷ் ஹாம் சாப்பிடுவதற்காக அவர்கள் சந்தித்த பாரிஸ் உணவகத்தின் பெயரால் பெயரிடப்பட்டது, இதில் எட்வார்ட் பிலிப், செபாஸ்டியன் லெகோர்னு மற்றும் ஜெரால்ட் டார்மனின் ஆகியோர் அடங்குவர். சிறிது காலத்திற்கு சோலேர் மக்ரோனிடம் இருந்து மிகவும் விலகி இருந்தாலும், அவர் கடந்த ஆண்டு லிபரேஷனிடம், “நான் ஜனாதிபதியை, மரின் லு பென் மற்றும் அர்னோ மொண்டபோர்க் [சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர்] போன்ற வேறுபட்ட நபர்களுடன் இணைக்கிறேன்” என்று கூறினார்.
20 ஆம் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே 21 ஆம் நூற்றாண்டிலும், அதி தீவிர வலதுசாரிகள் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கான ஒரே சாத்தியமான முன்னோக்கு, தொழிலாள வர்க்கம் தலைமையிலான முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டமே என்பதை இந்த நிகழ்வுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.