வெகுஜன எழுச்சியின் பின்னர்

"தொழில் முனைவோர் மேம்பாடு" ஊக்குவிப்பாளர் முஹம்மது யூனுஸ், பங்களாதேஷின் அவசரகால இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட பொருளாதார நிபுணரும் 'வளர்ச்சி வங்கியாளருமான' முஹம்மது யூனுஸ், ஆகஸ்ட் 8 அன்று ஒரு விழாவில் பங்களாதேஷின் அவசரகால இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக பதவியேற்றார்.

3 மார்ச் 2024 அன்று பங்களாதேஷின் டாக்காவில் முஹம்மது யூனுஸ் ஊடகங்களிடம் பேசிய போது. [AP Photo/Mahmud Hossain Opu] [AP Photo/Mahmud Hossain Opu]

ஆகஸ்ட் 5 திங்களன்று, நீண்டகால பிரதமர் ஷேக் ஹசீனா தனது அவாமி லீக் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியின் மத்தியில் 170 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்காசிய நாட்டை விட்டு வெளியேறினார்.

ஜூலை தொடக்கத்தில், அரசாங்கத்தின் பிற்போக்கானதும் பாரபட்சமானதுமான அரசாங்க-தொழில் ஒதுக்கீடுக்கு எதிராக, மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கினர். பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி நடவடிக்கைப் படைப்பிரிவை நிலைநிறுத்துவது உட்பட, கொடூரமான அரச அடக்குமுறைக்கு விடையிறுக்கும் வகையில், உழைக்கும் மக்களின் கணிசமான பகுதியினர் இந்த எதிர்ப்புக்களில் இணைந்துகொண்டதுடன் இந்த இயக்கம் விரிவடைந்தது.

இன்றுவரை வன்முறையின் இரத்தக்களரி நாளான ஞாயிற்றுக்கிழமையின் பின்னர், மாணவர்கள் ஹசீனா வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த நாள் பிரதமரின் இல்லத்திற்கு வெகுஜன அணிவகுப்புக்கு அழைப்பு விடுத்தனர்.

அவரது இராஜினாமாவை இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் நாட்டுக்கு அறிவித்தார்.

பத்திரிகை செய்திகளின்படி, திங்கள்கிழமை ஹசீனா இராஜினாமா செய்து, பிரதமரின் இல்லத்தை காலி செய்து, நாட்டை விட்டுவெளியேறி பாதுகாப்பான பாதையில் செல்ல அவருக்கு கொடுத்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள வெறும் 45 நிமிடங்களை மட்டுமே இராணுவம் கொடுத்தது. வெகுஜன எதிர்ப்பை அடக்குவதற்கான அவரது முயற்சி எதிர்வினையை ஏற்படுத்தி, நிலைமையை ஸ்திரமற்றதாக்கி, முதலாளித்துவ ஆட்சிக்கே அபாயகரமானதாக அமையும் என்ற முடிவுக்கு வந்ததால், முந்தைய 15 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்திய ஹசீனாவுக்கு எதிராக இராணுவம் நகர்ந்தது.

அப்போதிருந்து, ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் மற்றும் கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள், நாட்டின் அரசியலமைப்பின் கீழ் பெரும்பாலும் சம்பிரதாயபூர்வமான நபரான ஜனாதிபதியுடனும் அதேபோல், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், பாரபட்சங்களுக்கு எதிரான மாணவர்களின் பிரதிநிதிகள், வணிக மற்றும் சிவில் சமூக குழுக்கள் என்று அழைக்கப்படுபவையுடனும் இடைவிடாத தொடர் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

மாணவர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய சமீபத்தில் உருவாக்கப்பட்ட பாரபட்சத்திற்கு எதிரான மாணவர்கள் (SAD) என்ற அமைப்பின் தலைவர்கள், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மேற்கில் வாழ்ந்து வரும் நோபல் பரிசு பெற்ற 84 வயதான யூனுஸ் இடைக்கால அரசுக்குத் தலைவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 'டாக்டர் யூனுஸை நாங்கள் நம்புகிறோம்,' என்று செவ்வாயன்று முகநூல் இடுகையில், SAD தலைவர்களில் ஒருவரான ஆசிப் மஹ்மூத் அறிவித்தார்.

சதித்திட்டங்கள் மற்றும் சர்வாதிகார ஆட்சியின் நீண்ட, இரத்தம் தோய்ந்த பதிவைக் கொண்ட, இராணுவ உயர் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் SAD தலைவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். ஆனால் மற்றபடி அவர்கள் அரசாங்கத்தை உருவாக்கும் செயல்முறையை வழிநடத்தும் இராணுவத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்துள்ளனர்.

செவ்வாயன்று, SAD ஆர்வலர்கள் தேசிய தலைநகரான டாக்காவில் போக்குவரத்தை வழிநடத்தினர். ஹசீனா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, போராட்ட இயக்கத்தை இரத்தத்தில் மூழ்கடிக்கும் முயற்சியில் பிரதான பங்கு வகித்த பொலிஸார், போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி பிரதமரின் வீடு, பிற உத்தியோகபூர்வ கட்டிடங்கள் மற்றும் சில பிரதான அவாமி லீக் ஆதரவாளர்களின் வீடுகள் மற்றும் வணிகங்களை சூறையாடியதால் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறினர். நாடு முழுவதும், டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும் வரை அதன் உறுப்பினர்கள் 'வேலை நிறுத்தத்தில்' ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் சங்கம் கூறியது.

ஹசீனா அரசாங்கத்தின் அரச வன்முறை பிரச்சாரத்தின் விளைவாக குறைந்தது 300 பேர், அவர்களில் பெரும்பாலோர் மாணவர்கள் மற்றும் பிற எதிர்ப்பாளர்கள், இறந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவாமி லீக் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குண்டர் தாக்குதல்களும் அடங்கும்.

ஹசீனாவின் அரசாங்கம் சரிந்தபோது, ​​யூனுஸ் பாரிஸில் நடந்துகொண்டிருந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆலோசகராக இருந்தார். பங்களாதேஷுக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, பிரான்ஸ் 24 புதன்கிழமை என்ற நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், யூனுஸ் மாணவர் எதிர்ப்பாளர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் ஹசீனாவின் அரசாங்கத்தை வீழ்த்துவதை 'இரண்டாம் விடுதலை நாள்' என்று அறிவித்தார். இது 16 டிசம்பர் 1971 அன்று, முக்தி பாஹினி தலைமையிலான வங்காளதேச கிளர்ச்சி மற்றும் இந்திய இராணுவப் படையெடுப்பின் போது, ​​வங்காளதேசத்தின் பிரிவினையை முறியடிக்கும் மற்றும் அதன் தரைமட்டமாக்கல் முயற்சியை பாகிஸ்தான் கைவிட்டதைக் குறிக்கிறது. ஹசீனாவின் தந்தை பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய அரசியல் தலைவராக இருந்தார். பின்னர் 1975 இராணுவ சதியில் அவர் படுகொலை செய்யப்படும் வரை அரசாங்கத்தை வழிநடத்தினார்.

புதன்கிழமை ஒரு தொலைக்காட்சி உரையில், இராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் மலர்ந்த ஜனநாயக சொற்றொடர்களை சுழற்றினார். 'அவரால் (யூனுஸ்) நம்மை ஒரு அழகான ஜனநாயக செயல்முறையின் மூலம் அழைத்துச் செல்ல முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன், இதன் மூலம் நாம் பயனடைவோம்' என்று முதலாளித்துவ ஆட்சியின் அரணாக இருக்கும் அரச நிறுவனத்தின் தலைமைத் தளபதியான அவர் அறிவித்தார்.

ஹசீனா அரசாங்கத்தின் அடக்குமுறையை மீறிய SAD தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில், அவரது அரசாங்கம் தூக்கியெறியப்பட்டதன் மூலம் பங்களாதேஷ் அரசு மற்றும் அதன் நிறுவனங்களை 'சுதந்திரமான தேர்தல்கள்' மற்றும் தேவைப்பட்டால் மேலும் எதிர்ப்புகள் மூலம், அடிப்படையில் சீர்திருத்த முடியும், என்ற பரவலான நம்பிக்கை உள்ளது. யூனுஸ் தலைமையிலான ஒரு இடைக்கால அரசாங்கம் இந்த திசையில் ஒரு தீர்க்கமான முதல் படியாக பார்க்கப்படுகிறது.

'எங்கள் நோக்கத்திற்காக தியாகிகள் சிந்திய இரத்தத்தை நாங்கள் காட்டிக் கொடுக்க மாட்டோம்' என்று SAD இன் ஒருங்கிணைப்பாளரான 26 வயதான நஹிட் இஸ்லாம் அறிவித்தார். அவர் கடந்த மாதம் பொலிசாரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் தேசிய முக்கியத்துவத்தைப் பெற்றார். 'வாழ்க்கை பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் ஒரு புதிய அரசியல் நிலப்பரப்பு ஆகியவற்றின் மூலம் நாங்கள் ஒரு புதிய ஜனநாயக வங்காளதேசத்தை உருவாக்குவோம்,' என அவர் கூறினார்.

உண்மையில், இடைக்கால அரசாங்கமானது நாடுகடந்த ஆடைத் தொழில்துறை பெருநிறுவனங்கள், ஏனைய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பங்களாதேஷ் முதலாளித்துவ வர்க்கத்தினதும் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு வலதுசாரி முதலாளித்துவ ஆட்சியாக இருக்கும். அதன் முதல் பணி, கடந்த ஆண்டு ஹசீனா அரசாங்கத்திற்கு வழங்கிய 4.7 பில்லியன் டொலர் பிணை எடுப்பிற்கு ஈடாக, சர்வதேச நாணய நிதியம் கோரிய சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவதும், ஒழுங்கை நிலைநாட்டுவதும் ஆகும்.

இந்த அரசாங்கமோ, எந்த அரசாங்கம் வெற்றி பெற்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அல்லது வேறுவிதமாக இருந்தாலும், சமகால பங்களாதேஷின் குணாம்சமான, அதிர்ச்சியூட்டும் சமூக சமத்துவமின்மையையே தீவிரப்படுத்தும். சிம்மாசனத்திற்குப் பின்னால் இராணுவம் அதிகாரத்தில் இருக்கும்.

விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு தலைமை தாங்கியதற்காக, உலக வங்கி மற்றும் முன்னணி வணிக வெளியீடுகளால், ஹசீனா பரவலாகப் பாராட்டப்பட்டார். எவ்வாறாயினும், இந்த வளர்ச்சியின் பலன்கள் கிட்டத்தட்ட முழுவதுமாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்களாதேஷ் ஆளும் உயரடுக்கின் பைகளுக்குள், குறிப்பாக அவாமி லீக் சார்பு விசுவாச முதலாளித்துவ அடுக்குகளின் பைகளுக்குள் பாய்ந்தது. ஒரு வெல்த்-x ஆய்வு, 2010 மற்றும் 2019 க்கு இடையில், வங்காளதேசம் 5 மில்லியன் டொலர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு 14 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது என்று கூறுகிறது. இது உலகின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதம் ஆகும். இதற்கிடையில், வங்காளதேச ஆடைத் தொழிலாளர்கள் உலகில் எங்கும் இல்லாத வகையில், மாதத்திற்கு 100 டொலருக்கும் சற்றே அதிகமான ஊதியத்துடன், மிகக் காட்டுமிராண்டித்தனமாக சுரண்டப்படுகிறார்கள்.

யூனுஸ் முற்றிலும் வலதுசாரி நபர். ஒரு பொருளாதார நிபுணரும் கிராமீன் வங்கியின் நிறுவனருமான அவர், ஏழைகள் மீதான அக்கறையை வெளிப்படுத்துகின்ற போதிலும், ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் முதலாளித்துவ சுரண்டலால் உருவாக்கப்பட்ட வெகுஜன வறுமைக்கான தீர்வாக, 'தொழில் முனைவோர் மேம்பாடு' என்பதை ஊக்குவிக்கிறார். இது நுண் - கடன் மூலம் நிதியளிக்கப்படும் சிறு வணிகங்களை மேம்படுத்துவதாகும். அவரது கருத்துருக்கள் பெரிய நிதி நிறுவனங்களால் பிரதியெடுக்கப்பட்டதன் விளைவாக, விமர்சகர்கள் ஒரு புதிய கடன் அடிமைத்தனம் என்று இதை அழைத்தனர்.

யூனுஸ் மேற்கத்திய நாடுகளில் மிகவும் கொண்டாடப்படுகிறார். அமைதிக்கான நோபல் பரிசை வென்றதுடன், 2009 இல் ஒபாமாவினால் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி பதக்கமும், 2010 இல் அமெரிக்க காங்கிரஸின் தங்கப் பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிகாரிகள் தற்போதைய நெருக்கடியில் இராணுவத்தின் பங்கைப் பாராட்டியதுடன், யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அறிவித்தனர். பெய்ஜிங்கிற்கு எதிரான அதன் அனைத்துப் பக்க இராணுவ-மூலோபாய தாக்குதலின் ஒரு பகுதியாக, சீனாவிடம் இருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ள பங்களாதேஷிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, யூனுஸுடனான அதன் நீண்டகால தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று வாஷிங்டன் நம்புகிறது என்பதில் சந்தேகமில்லை.

யூனுஸ், இராணுவம் மற்றும் பிற்போக்கு பங்களாதேஷ் அரசு போன்றவற்றின் மீது போலி நம்பிக்கைகள் மாணவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்துவதானது ஸ்ராலினிசத்தின் கேடுகெட்ட அரசியல் பாத்திரத்துடன் பிணைந்துள்ளது. பல தசாப்தங்களாக, பல்வேறு ஸ்ராலினிச கட்சிகள் அவாமி லீக் மற்றும் அதன் பரம எதிரியான பங்களாதேஷ் தேசியவாத கட்சியை (பி.என்.பி) சுற்றி வந்துகொண்டிருந்தன. சிவப்புக் கொடிகளை அசைக்கும் அதே வேளை, ஸ்டாலினிஸ்டுகள், தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதற்கும், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிக்கவும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் கிராமப்புற உழைப்பாளிகளை அணிதிரட்டுவதற்கும் கடும் விரோதமாக உள்ளனர்.

மலிவான ஊதியங்கள், வெகுஜன வேலையின்மை, அரசியல் அடக்குமுறை ஆகியவற்றின் மீது தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வெகுஜன கோபம் உள்ளது. ஆனால் தொழிற்சங்கங்கள், ஸ்ராலினிச தலைமையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற வர்க்கப் போராட்ட முறைகளைப் பயன்படுத்தி, நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி, அதன் சொந்த நலன்களை நிலைநாட்டவும், பங்களாதேஷ் முதலாளித்துவத்திற்கு ஒரு சவாலை விடுக்கவும், வெகுஜன அரசாங்க எதிர்ப்பு இயக்கத்தில் தொழிலாள வர்க்கம் தலையிடுவதைத் தடுப்பதற்கு முயன்றன.

இதற்கிடையில் பி.என்.பி., நடக்கவுள்ள தேர்தல்களில் அதிகாரத்தை வெல்வதற்கு அதன் நிலையையும் அதன் கூட்டாளிகளான இஸ்லாமிய வகுப்புவாதக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியின் நிலையையும் உறுதிப்படுத்த, அவாமி லீக்கின் மதிப்பிழப்பைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

புதன்கிழமை, பி.என்.பி., அதன் டாக்கா தலைமையகத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட ஒரு வெகுஜன பேரணியை நடத்தியது. பேரணியில் முன்னாள் பி.என்.பி. பிரதம மந்திரி கலீதா ஜியா மற்றும் அவரது மகனும், கட்சியின் பதில் தலைவருமான தாரிக் ரஹ்மானும் உரையாற்றினர்.

திங்கட்கிழமை வரை, 78 வயதான ஜியா, ஊழல் குற்றச்சாட்டில் 2018 இல் கொடுத்த தண்டனையைத் தொடர்ந்து வீட்டுக் காவலில் இருந்தார் அவாமி லீக் ஆட்சிக்கு வந்தவுடன் லண்டனுக்கு தப்பி ஓடிய ரஹ்மான் அங்கிருந்தே பேசினார்,. ரஹ்மான் தனது உரையில் மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், உண்மையான ஜனநாயகத்தை பி.என்.பி. வழங்கும் ன்றும் கூறினார். எவ்வாறாயினும், கிட்டத்தட்ட அடுத்த மூச்சில், பி.என்.பி. தலைமையிலான அரசாங்கம் 'அரசியலில் ஈடுபடாத' நிபுணர்களைக் கொண்ட சட்டமன்றத்தின் மேல் சபையை நிறுவும் என்று அவர் கூறினார். அவர் எந்த விவரங்களையும் கொடுக்கவில்லை என்றாலும், இந்த முன்மொழிவு பாராளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் மக்களின் விருப்பத்திலிருந்து தனிமைப்படுத்துவதையும் ஆளும் வர்க்கத்திற்கு அதன் நிகழ்ச்சி நிரலை திணிப்பதற்கான மாற்று வழிமுறையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பங்களாதேஷின் இந்து சிறுபான்மையினர் மீது சமீப நாட்களில் வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிலிறுப்பாக, இந்து கோவில்களை பாதுகாக்க மாணவர் தன்னார்வலர்களை SAD ஏற்பாடு செய்துள்ளது. பி.என்.பி. மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உட்பட ஏனைய அனைத்து கட்சிகளும் இந்த தாக்குதல்களை கண்டனம் செய்வதில் சாதனை படைக்கின்றன.

இந்த அறிவிப்புகளில் நம்பிக்கை வைக்கக்கூடாது. இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கையைப் போலவே, பங்களாதேஷிலும் வகுப்புவாத தாக்குதல்கள் நீண்டகாலமாக ஆளும் வர்க்கத்தால் சமூகக் கோபத்தை மிகவும் பிற்போக்கான வழிகளில் திசைதிருப்பும் வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசின் அடக்குமுறை, வறுமை மற்றும் பாரிய வேலையின்மையாலும் சீற்றமடைந்துள்ள பங்களாதேஷ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான பிரச்சினை, அவர்களின் ஜனநாயக மற்றும் சமூக முயற்சிகள் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே யதார்த்தமாக்கப்பட முடியும் என்பதை அங்கீகரிப்பதாகும். முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் செல்வம் மற்றும் சலுகைகள் மீதான ஒரு நேரடித் தாக்குதல் நடத்தப்படுவதோடு சமூக-பொருளாதார வாழ்க்கை மறுசீரமைக்கப்பட வேண்டும். அதாவது தனியார் இலாபம் அன்றி சமூகத் தேவையே இன்றியமையாத கொள்கையாகும். இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி மூலோபாயத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading