மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பெரு நாட்டின் லிமாவில் 14 நவம்பர் 2024 தொடங்கிய ஆசிய பசிபிக் பொருளாதார சமூகத்தின் (APEC) மாநாடு, சமீப காலத்தின் விசித்திரமான சர்வதேச பொருளாதார மாநாடுகளில் ஒன்றாக நிச்சயமாகக் கருதப்படும். APEC உச்சி மாநாடு முடிவடைந்த பின்னர் அடுத்த வாரம் (18-19 நவம்பர் 2024) பிரேசிலில் நடைபெறவிருக்கும் ஜி 20 நாடுகளின் கூட்டத்துடன் மட்டுமே அதன் விசித்திரத்தன்மை பொருந்தக்கூடும்.
1989ல் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தடையற்ற வணிகத்தை ஊக்குவிப்பதற்காக APEC உருவாக்கப்பட்டது, முக்கியமாக அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளால் தொடங்கப்பட்ட இது, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 50 சதவீதத்தையும் உலக மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதத்தையும் கொண்ட 21 நாடுகளைக் கொண்டுள்ளது. கூட்டங்களுக்கு இடையில், அமைப்பில் பொருளாதார மற்றும் வர்த்தக பிரச்சினைகளுக்காக சுமார் 270 பணிக்குழுக்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால் இந்தக் குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகள் அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரலில் இருந்தாலும், அவை மைய கவனத்தை உருவாக்கப்போவதில்லை. இந்தக் கூட்டத்தில் வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் கலந்து கொண்டிருக்கிறார், ஆனால் அவர் அங்கே இருந்தது பொருத்தமற்றதாக இருந்தது. உலகளாவிய சுதந்திர வர்த்தக ஒழுங்கமைப்பில் எஞ்சியிருப்பவற்றைக் கிழித்தெறிந்து, சுங்கவரி உயர்வுகள் மற்றும் தேசியவாத பாதுகாப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டநிரலைக் கொண்டு அதை பிரதியீடு செய்வதற்கு பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பின் வருகையால் அது முற்றிலுமாக மேலாதிக்கம் செலுத்தப்பட்டிருக்கிறது.
ஜி20 மாநாட்டிலும் இதே பிரச்சினை எழும். 2008 உலகளாவிய நிதிய நெருக்கடிக்கு இடையே, 1930 களில் இதுபோன்ற பொருளாதார பேரழிவை ஏற்படுத்திய தேசியவாத கொள்கைகளுக்கு மீண்டும் ஒருபோதும் திரும்பப் போவதில்லை என்று ஜி 20 அங்கத்துவ நாடுகளிடம் இருந்து மனப்பூர்வமான வாக்குறுதிகள் இருந்தன. இப்போது அந்த வாக்குறுதிகள் தூக்கி எறியப்பட்டுள்ளன, ஏனெனில் பொருளாதார போர் ஒரு பழிவாங்கலுடன் திரும்பியிருக்கிறது.
செவ்வாயன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், வாஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் (CSIS - Center for Strategic and International Studies ) பல வல்லுனர்கள் APEC கூட்டத்திலிருக்கும் பிரச்சினைகள் பற்றிய ஒரு முன்னோட்டத்தை வழங்கியிருந்தனர். சாராம்சத்தில் அவற்றை ஒரே வார்த்தையில் சுருக்கிக் கூற முடியும்: அதாவது ட்ரம்ப், மற்றும் அவரது வரிவிதிப்பு போர்களைக் கொண்டு வரும்.
வெளியுறவுக் கொள்கைத் துறையின் தலைவர் டாக்டர் விக்டர் ஷா (Dr Victor Cha) கூறினார்: “APEC மற்றும் ஜி-20 ஒரே ஒரு விஷயத்தைப் பற்றியதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்... தலைவர்கள் அனைவரும் அங்கு இல்லாத ஒரே உலகத் தலைவரைப் பற்றியே பேசுவார்கள்... மேலும் வர்த்தகம், கூட்டணிகள் மற்றும் பிற விவகாரங்களில் அடுத்த ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றியும் பேசுவார்கள்.”
ட்ரம்ப் ஜனாதிபதியாக வெற்றி பெற்ற பின்னர், 2016 பெருவில் நடந்த APEC கூட்டத்திற்கு இணையான ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. ட்ரம்ப் என்ன கொண்டு வருவார் என்று தெரியவில்லை, அவர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்பதே வெளியேறும் ஜனாதிபதி ஒபாமாவின் செய்தியாக இருந்தது.
எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பல கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளதுடன், ட்ரம்பின் அமெரிக்கா முதலில் (America First) என்ற திட்டநிரலின் தாக்கங்கள் குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தப் பிரச்சினை ட்ரம்ப் மற்றும் அவரது சார்புகளைக் கடந்து ஆழமாகச் செல்கிறது, ஆனால் இது உலக முதலாளித்துவத்திற்குள் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் வேரூன்றியுள்ளது.
ஷா சுட்டிக்காட்டியதைப் போல, APEC இன் பணி ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான உலக வர்த்தக ஒழுங்கை உருவாக்குவதாக இருந்த அதேவேளையில், “அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளின் அரசியலும் பாதுகாப்புவாதத்தின் திசையில் உறுதியாக நகர்ந்துள்ளது” மற்றும் சுதந்திர வர்த்தக உடன்பாடுகளிலிருந்து விலகிச் சென்றுள்ளது.
இந்தியா மற்றும் எழுச்சி பெற்றுவரும் ஆசிய பொருளாதாரங்கள் பற்றிய CSIS இன் துணை இயக்குனர் எரின் மர்பி (Erin Murphy) இந்த மதிப்பீட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். “அங்கே ஒரு ஜனநாயகக் கட்சி நிர்வாகம் இருந்திருந்தாலும் கூட, ஹாரிஸ் வெற்றிபெற்றிருந்தால், வர்த்தகத்தை நோக்கிய அமெரிக்க அணுகுமுறை அப்படியே இருந்திருக்கும், ஆனால் சுங்கவரிகளைச் சேர்ப்பதில் ட்ரம்ப் அளவுக்கு தீவிரமாக இருந்திருக்காது என்றே நான் நினைக்கிறேன்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
உண்மையில், இந்த ஒரு முக்கியமான பகுதியில் ஜனநாயகக் கட்சியினரின் நோக்குநிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறது. பைடென்-ஹாரிஸ் நிர்வாகம் அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகளை நோக்கி ட்ரம்ப் காட்டிய வெறுப்பை ஓரளவுக்குத் தளர்த்திய அதேவேளையில், சீனா மீது ட்ரம்ப் விதித்த சுங்கவரிகளை பெருமளவில் பராமரித்ததுடன், “தேசிய அடித்தளங்கள்” என்றழைக்கப்பட்டதன் பேரில் அமெரிக்காவிலிருந்து உயர்-தொழில்நுட்ப ஏற்றுமதிகள் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதிகள் இரண்டின் மீதும் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலமாக அதற்கு எதிரான பொருளாதார போரை மிகத்தீவிரமாக வளர்த்திருக்கிறது.
சில தந்திரோபாய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, முன்னெப்போதினும் அதிக ஆக்ரோஷமான அமெரிக்கத் திட்டம் வெறுமனே ட்ரம்ப் அல்லது வேறெந்த அரசியல்வாதிகளின் விளைபொருள் அல்ல, மாறாக அமெரிக்க முதலாளித்துவத்திற்குள் ஆழமடைந்து வரும் நெருக்கடியில் அதன் வேர்களைக் கொண்டிருக்கிறது என்பதை இந்த இருகட்சி அணுகுமுறை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
நிச்சயமாக, இது போன்ற அனைத்து அமைப்புகளைப் போலவே, இந்த நெருக்கடியும் CSIS பிரதிநிதிகளால் சாதாரணமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது, மேர்பியின் வார்த்தைகளில், APEC மற்றும் அதன் எதிர்காலம் “அமெரிக்கா வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பின் பாகமாக இருக்க விரும்புகிறது என்று முடிவெடுக்கும் வரை தொடர்ந்து இருக்கும்” என்று அவர் கூறினர்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எப்படியோ கடிகாரத்தின் முட்கள் பின்னோக்கி ஊசலாடும் மற்றும் மிக “சாதாரண காலங்களுக்கு” மீண்டும் திரும்பும்.
எல்லா ஆதாரங்களும் வேறு திசையையே சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்கா APEC செயல்திட்ட நிரலை மட்டும் மாற்றவில்லை. சீனாவுக்கு எதிராக 60 சதவீத இறக்குமதி வரியை விதிக்கப் போவதாகவும், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து இறக்குமதிகள் மீதும் 10 முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப் போவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். மே 2022 இல் பைடென் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பிலிருந்து (IPEF - Indo-Pacific Economic Framework ) விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
IPEF இல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான், அத்துடன் இந்தியா, இந்தோனேசியா, தென் கொரியா, புருனே, பிஜி, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவை அடங்கும். இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவீதத்தையும், பொருட்கள் மற்றும் சேவைகளில் உலக வர்த்தகத்தில் 28 சதவீதத்தையும் கொண்டிருக்கிறது.
இலத்தீன் அமெரிக்காவை உள்ளடக்கிய பொருளாதார செழிப்புக்கான அமெரிக்காவின் கூட்டாண்மைஎன்ற ஒத்த அமைப்பின் எதிர்காலமும் ஒரு மேகமூட்டத்தின் கீழ் உள்ளது.
அமெரிக்காவுடன் வர்த்தக உபரியைக் கொண்டுள்ள நாடுகளை ட்ரம்ப் தொடர்ந்து இலக்கில் வைத்து, அவை அமெரிக்காவை “கிழித்தெறிந்து” வருவதாகக் கூறி, அவற்றுக்கு எதிராகச் சுங்கவரி விதிப்பதாக அச்சுறுத்தி வருகிறார் என்பதை APEC கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள் அறிந்திருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியாவைத் தவிர, APEC இன் அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக உபரியைக் கொண்டுள்ளன, இது ஐரோப்பாவின் பெரும் பகுதிக்கு பொருந்தும்.
விதிப்படி, அமெரிக்காவின் பொருளாதாரச் சரிவின் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடு இருக்கிறது. அதுதான் அதன் பெருகியளவிலான போர்வெறிக்கு உந்து சக்தியாக உள்ளது. APEC தலைவர்கள் லிமாவில் கூடுகையில், 80 கி.மீ தூரத்தில் முன்பு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சான்கேயில் ஒரு ஆழ்கடல் துறைமுகம் திறக்கப்பட்டது.
இத்துறைமுகம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியவுடன், உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் சிலவற்றிற்கு இடமளிக்க முடியும். இது கிழக்கிற்கும், எல்லாவற்றிற்கும் மேலாகச் சீனாவிற்கும், பெருவிலிருந்து மட்டுமின்றி, பிரேசில் உட்பட கண்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும் வரும் வர்த்தகத்தை மாற்றியமைக்கும். இதையொட்டி கப்பல் போக்குவரத்து நேரம் 10 நாட்கள் வரை குறையும்.
லிமாவிலிருந்து ஒரு காணொளி இணைப்பு மூலமாகச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கலந்து கொள்ளவிருக்கும் இந்தத் திறப்பு விழாக் குறித்து பைனான்சியல் டைம்ஸில் வெளியான அறிக்கை, அமெரிக்காவில் அதிகரித்து வரும் நெருக்கடிக்கான காரணத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
“பிராந்திய வர்த்தகத்தை மாற்றியமைக்க அமைக்கப்பட்டுள்ள பெருவின் பசிபிக் கடற்கரையில் சீனாவால் கட்டப்பட்ட மிகப்பெரும் துறைமுகமான சான்கே துறைமுகத்தில் ரிப்பன் வெட்டுவதற்கு முன்னதாக, சீன தயாரிப்பு ZPMC ஆளில்லா கிரேன்கள் படகுத்துறையில் வரிசையாக நிற்கின்றன.
“BYD பிக்-அப் டிரக்குகள் பொறியாளர்களைச் சுற்றிவரத் தயாராக இருந்தன, அதே நேரத்தில் தானியங்கி செயல்பாட்டைக் கையாள ஹுவாய் (Huawei ) இணையத்திற்கான கோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.”
“அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன” என்று துறைமுகத்தைக் கட்டிய மற்றும் அதன் செயல்பாடுகளை நிர்வகிக்கும் சீன நிறுவனமான காஸ்கோ ஷிப்பிங் (Cosco Shipping) நிறுவனத்தின் பொது விவகார மேலாளர் மரியோ டி லாஸ் காசாஸ் (Mario de las Casas) கூறினார்
3.6 பில்லியன் டாலர் செலவிலான இந்தத் துறைமுகம் சீன இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றும், துறைமுக நிர்வாகத்தின் கட்டுப்பாட்டைக் காஸ்கோவிடம் ஒப்படைத்திருப்பது பெருவின் இறையாண்மையை மீறுவதாகும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் அமெரிக்காவின் பதிலடி ஒருவிதத்தில் வரக்கூடும் என்ற மெல்லிய மறைமுக அச்சுறுத்தலையும் கொண்டிருக்கின்றன.
ஆனால் பெருவியன் அரசாங்கம் துறைமுகத்தின் நிர்வாகத்தை அதன் அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள் என்று கூறியுள்ளது.
“இந்த விடயத்தில் இது சீன மூலதனத்தின் முதலீடு மட்டுமே, ஆனால் அது பிரிட்டிஷ் அல்லது வட அமெரிக்க மூலதனத்தைப் போலவே உள்ளது... எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எங்கள் இறையாண்மை இழக்கப்படவில்லை” என்று பெருவின் போக்குவரத்து அமைச்சர் ரவுல் பெரெஸ்-ரெய்ஸ் கூறியுள்ளார்.
எவ்வாறிருப்பினும், இதுபோன்ற வாதங்கள், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தீவிரத்தின் ஒரு புதிய மட்டத்தை எட்ட உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான பதிலடியைக் குறைக்கப் போவதில்லை.
ஒரு காலத்தில் அது ஆதரவளித்த “சுதந்திர வர்த்தக” ஆட்சியை அகற்றி, அதை இராணுவ வலிமையைக் கொண்டு பிரதியீடு செய்ய முனைகின்ற நிலையில், தனது மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், சீன தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அபிவிருத்தி என்ன விலை கொடுத்தாவது நசுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க முதலாளித்துவம் கருதுவதற்கு சான்கே துறைமுக அபிவிருத்தி மற்றொரு காரணமாக இருக்கிறது.