முன்னோக்கு

தென் கொரிய ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியும் ஜனநாயக உரிமைகள் மீதான உலகளாவிய தாக்குதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

டிசம்பர் 3-4 இரவு, தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோலால் மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சட்டத்தை திணிப்பதற்கான தோல்வியுற்ற முயற்சியானது, தென் கொரிய அரசின் எதேச்சதிகார அடித்தளத்தை வெளிப்படுத்தி, “செழிப்பான ஆசிய ஜனநாயகம்” என்று வழக்கமாக விவரிக்கப்படும் திரையை அகற்றியுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலை பதவி விலகுமாறு கோரி சியோலில் உள்ள தேசிய சபைக்கு முன்பாக மக்கள் திரண்டுள்ளனர். டிசம்பர் 4, 2024 [AP Photo/Ahn Young-joon]

இது, உலகெங்கிலுமான ஆளும் வர்க்கங்கள் அவற்றின் போர் மற்றும் சிக்கன திட்டநிரலைத் திணிப்பதற்காக, சர்வாதிகார வழிமுறைகளுக்கு உந்தப்பட்டு வருகின்றன என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகும். இது தென் கொரிய தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, மாறாக சர்வதேச அளவிலும் ஒரு எச்சரிக்கையாகும்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு, இராணுவச் சட்ட ஆணையை வெளியிட்ட ஜனாதிபதி யூன் சுக், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை வட கொரியாவின் அனுதாபிகள் மற்றும் முகவர்கள் என்றும், அவரது வரவு-செலவுத் திட்டத்தை செயலிழக்கச் செய்து நாட்டை “தேசிய அழிவின் படுகுழிக்குள்” அவர்கள் தள்ளியுள்ளதாகவும் கண்டனம் செய்தார். இராணுவ தளபதி பார்க் அன்-சூ மேற்பார்வையில் இருந்த இராணுவ ஆட்சி உடனடியாக அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் வேலைநிறுத்தங்களையும் தடை செய்து, ஒட்டுமொத்தமாக தணிக்கையை திணித்தது. மேலும், இராணுவம் பிடி ஆணை இல்லாமல் கைது செய்ய அங்கீகாரம் அளித்ததோடு, வேலைநிறுத்தம் செய்த மருத்துவர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டது.

சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற கட்டிடத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் கூடினர். அங்கு துருப்புக்களும் பொலிஸாரும் பாராளுமன்றம் கூட்டப்படுவதைத் தடுக்கவும், சபாநாயகரையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி (DP – Democratic Party) மற்றும் யூனின் சொந்த மக்கள் சக்தி கட்சித் (PPP – People Power Party) தலைவர்களையும் கைது செய்ய முயன்றும் தோல்வியடைந்தனர். பெரும்பான்மை இடங்களைக் கொண்டுள்ள ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தை கூட்டி, கூட்டத்திற்கு வந்திருந்த PPP உறுப்பினர்களின் ஆதரவுடன் இராணுவச் சட்டத்தை நீக்கக் கோருவது என்று ஒருமனதாக முடிவு செய்தது.

மணிக்கணக்காக, யூன் தள்ளிப்போட்டார். அவ்வாறு செய்வது, தேசிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை வாக்குகளால் இராணுவச் சட்டத்தை நீக்குவதற்கான அரசியலமைப்பு கடமையை மீறுவதாகும். எவ்வாறிருப்பினும், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி வெகுஜன எதிர்ப்பையும் வேலைநிறுத்தங்களையும் தூண்டிவிடும் என்ற ஆளும் வட்டாரங்களின் அச்சமே மேலோங்கிய கருத்தாக இருந்தது. ஆதலால், ஜனாதிபதி யூன் பின்வாங்கி, தேசிய தொலைக்காட்சியில் இராணுவச் சட்ட ஆணை திரும்பப் பெறப்படும் என்றும் துருப்புக்கள் முகாம்களுக்குத் திரும்பும் என்றும் அறிவித்தார்.

எவ்வாறெனினும், எந்தப் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. ஜனாதிபதிக்கும் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நாடாளுமன்றத்திற்கும் இடையிலான அரசியல் மோதல் தொடர்கிறது. ஜனாதிபதி யூனை பதவி நீக்கம் செய்வதற்கு ஜனநாயகக் கட்சியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் (KCTU - Korean Confederation of Trade Unions) உள்ள அவர்களின் தொழிற்சங்க கூட்டாளிகள், ஜனாதிபதி பதவி விலகக் கோரி மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அரசியல் விடையிறுப்பின் பலவீனமான தன்மை, சர்வாதிகார வழிவகைகள் மூலம் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரு மேலதிக முயற்சிக்கு மட்டுமே ஊக்கமளிக்கும்.

தென் கொரியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி வெறுமனே தனிநபர் யூனின் விளைபொருள் அல்ல. ஆனால் இது, உலக முதலாளித்துவத்தின் சிதைவு மற்றும் வெகுஜன எதிர்ப்பு, வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர்கள், இளைஞர்களின் பரந்த அரசியல் தீவிரமயமாக்கலை தூண்டும் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட சர்வதேச செயல்முறைகளை பிரதிபலிக்கிறது.

உலக ஏகாதிபத்தியத்தின் மையமான அமெரிக்காவில், ஒரு சர்வாதிகாரியாக தான் ஆட்சி செய்யப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ள பாசிசவாதி டொனால்ட் ட்ரம்ப், ட்ரில்லியன் கணக்கான சமூக வேலைத்திட்டங்களை வெட்டவும், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரைச் சுற்றி வளைத்து அவர்களை வெளியேற்றவும், இராணுவத்தை நிலைநிறுத்தவும் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக பொலிஸ் அரசு நடவடிக்கைகளைப் பயன்படுத்தவும் அதிகாரத்திற்கு வர உள்ளார். உக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் ரஷ்யாவுக்கு எதிரான போர்களைத் தொடுப்பதுடன், ட்ரம்ப் பொருளாதாரப் போரை கடுமையாகத் தீவிரப்படுத்துவார். குறிப்பாக சீனாவுக்கு எதிராக, உலகை அணு ஆயுத அழிவை நோக்கி தள்ளுவார்.

ஐரோப்பாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இத்தாலியில் உள்ளதைப் போல அதிவலது மற்றும் வெளிப்படையாக பாசிசவாத சக்திகள் அதிகாரத்தில் உள்ளன. அல்லது ஜேர்மனி மற்றும் பிரான்சில் அரசாங்கம் வீழ்ச்சியடையும் கட்டத்தில் இருப்பதைப் போன்று, அதிகரித்தளவில் மேலாதிக்க அரசியல் பாத்திரத்தை அவை வகிக்கின்றன. அனைத்து ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளும் அவற்றின் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களை முன்னெடுப்பதற்கான வழிவகையாக, ரஷ்யாவுக்கு எதிரான போரில் அவற்றின் இராணுவங்களை அதிகரித்து வருவதுடன், தொழிலாள வர்க்கத்தை அதற்கான விலையைக் கொடுக்க நிர்பந்தித்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி நிரலை ஜனநாயக ரீதியில் திணிக்க முடியாது.

வாஷிங்டன் போஸ்ட், முதலாளித்துவ ஜனநாயகத்தின் வலிமையைப் பறைசாற்றுவதற்காக, தென் கொரியாவில் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பைப் பற்றி பின்வருமாறு கூறியது: “அதிர்ஷ்டவசமாக, தென் கொரியா சோதனையை எதிர்கொண்டது, அதன் ஜனநாயகம் அப்படியே வெளிப்பட்டது மட்டுமல்லாமல் வலுவடைந்தது. உலகளவில் ஜனநாயகம் பின்வாங்குவதாகத் தோன்றும் நேரத்தில் (அமெரிக்காவில் அதன் எதிர்காலத்தைப் பற்றி பல அமெரிக்கர்கள் கவலைப்படுகிறார்கள்), இந்த நிகழ்வுகள் ஜனநாயக நிறுவனங்கள் மீள்தன்மை கொண்டவை மற்றும் சுதந்திரத்திற்கான மக்களின் விருப்பம் உலகளாவியது என்ற நம்பிக்கையை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.”

எவ்வாறாயினும், ஜனவரி 6, 2021 அன்று, அமெரிக்காவின் காங்கிரஸ் கட்டிடமான கேபிடோலை முற்றுகையிட்டதன் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்ற ட்ரம்ப் மேற்கொண்ட வன்முறை முயற்சியை அடுத்து போஸ்ட் இதேபோன்ற கருத்துக்களை வெளியிட்டது. ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்த அதேவேளையில், ட்ரம்ப் 2024 இல் மிகவும் கவனமாக தயாரித்து மறுபடியும் இதனை செய்ய திட்டமிட்டார். அந்த சம்பவத்தில் ஜனநாயகக் கட்சியினரின் அரசியல் திவால்நிலைமை அவருக்கு தேர்தலில் வெற்றியை வழங்கியதால் அது தேவையற்றதாக ஆகியது. பைடென் நிர்வாகம் இப்போது பாசிசவாத ட்ரம்ப் ஆட்சிக்கு ஒரு சுமூகமான மாற்றத்திற்கு உறுதி செய்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் சாத்தியக்கூறு ஜனாதிபதி யூனை சர்வாதிகாரத்திற்கான தனது சொந்த முயற்சியை மேற்கொள்ள ஊக்குவித்திருக்கலாம். உண்மையில், வட கொரிய முகவர்களுக்கு எதிரான யூனின் பாசிசவாத கம்யூனிச-எதிர்ப்பு கூச்சலானது, அனைத்திற்கும் மேலாக—”நாட்டுக்கு உள்ளே இருக்கும் எதிரியான” தொழிலாள வர்க்கம் மீதான ட்ரம்பின் வாய்வீச்சிலான கண்டனங்களை நினைவூட்டுகிறது.

தென் கொரியாவில் ஆட்சிக்கவிழ்ப்பு சதி தயாரிப்புகள் பற்றி அறிந்திருந்த பைடென் நிர்வாகம், குறைந்தபட்சம் கண்ணை மூடிக் கொண்டிருந்தது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. தென் கொரியாவில் உள்ள 28,500 அமெரிக்க துருப்புக்களின் கட்டளை கட்டமைப்புகள் தென் கொரிய இராணுவத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன. ஜனாதிபதி யூன் பின்வாங்கிய பின்னர், வெள்ளை மாளிகையும், ஆட்சிக்கவிழ்ப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்று கூறியது.

சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளிலும், ஜப்பானுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை முறைப்படுத்துவதிலும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு அதன் ஆதரவிலும் பைடென் நிர்வாகத்திற்கு யூன் ஒரு கருவியாக இருந்துள்ளார்.

தென் கொரியாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியானது, பெய்ஜிங்குடனான அதன் மோதலை தீவிரப்படுத்தி வரும் வாஷிங்டனால் பரப்பப்பட்டுவரும், எதேச்சதிகார சீனாவிற்கு எதிராக 1980கள் மற்றும் 1990களில் தோன்றிய ஆசியாவின் “துடிப்பான ஜனநாயகங்களை” பாதுகாக்கிறது என்ற கட்டுக்கதையை அம்பலப்படுத்துகிறது. பனிப்போரின் போது அமெரிக்க ஏகாதிபத்தியம் தடையின்றி ஆதரித்துவந்த, பிராந்தியத்தின் இராணுவ சர்வாதிகாரங்கள் (வாஷிங்டனின் ஆதரவுடன்) பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திச் சங்கிலிகளில் தங்கள் “புலிப் பொருளாதாரங்களை” ஒருங்கிணைக்க ஒரு தடையாக மாறியபோதுதான் முடிவுக்கு வந்தன.

தென் கொரியா இதற்கு ஒரு உதாரணமாகும். இரண்டாம் உலகப் போரை அடுத்து கொரிய தீபகற்பத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரித்தது. சிங்மேன் ரீயின் கைப்பாவை ஆட்சியை நிறுவியதன் மூலமும், எதிர்ப்பை வன்முறையில் அடக்கியதன் மூலமும், மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களை பலிகொண்ட இரத்தக்களரி கொரியப் போருக்கு ஊடாக பராமரிக்கப்படுவதன் மூலமும் மட்டுமே இது சாத்தியமானது. பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு பின்னர் 1987ல் தேர்தல்களும் ஜனநாயக மூடுதிரையும் நிறுவப்பட்டாலும், சர்வாதிகார அரச எந்திரம் பெரும்பாலும் அப்படியே உள்ளது. தென் கொரிய சர்வாதிகார கட்சியான ஜனாதிபதி யூனின் மக்கள் சக்தி கட்சி, அதன் தீய, கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தத்தின் நேரடி வழித்தோன்றல் ஆகும்.

இதேபோன்ற போக்கு ஆசியா முழுவதும் அதன் வெளிப்பாட்டைக் காண்கிறது. அங்கு அமெரிக்க ஆதரவுடன் நிறுவப்பட்ட சர்வாதிகார ஆட்சிகள் பெயரளவிற்கு ஜனநாயகங்களால் பிரதியீடு செய்யப்பட்டன. அவை இப்போது பெரும் அழுத்தங்களின் கீழ் உள்ளன அல்லது வீழ்ச்சியடைந்துவிட்டன. இந்தோனேசியாவில், சர்வாதிகாரி சுகார்ட்டோவின் மருமகனான பிரபோவோ சுபியான்டோ இப்போது ஜனாதிபதியாக உள்ளார் மற்றும் அவரது பல மனித உரிமை அட்டூழியங்களுக்கு மத்தியிலும் வாஷிங்டனால் அரவணைக்கப்படுகிறார். பிலிப்பைன்ஸில், சர்வாதிகாரி பெர்டினாண்ட் மார்கோஸின் மகனான ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அதிகாரத்தில் இருப்பதோடு சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் அரசியல் தாக்குதல் நாயாக செயல்பட்டு வருகிறார். தாய்லாந்தில், 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ ஆட்சி, இராணுவம் கொறடா கையில் வைத்திருக்கும் ஒரு பெயரளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விடயத்திலும், முதலாளித்துவ ஜனநாயக எதிர்ப்பு என்றழைக்கப்படுவது —அமெரிக்கா, ஐரோப்பா அல்லது ஆசியாவாக ஆகட்டும்— லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பத்திற்கு வழிவகுத்துள்ளது. ஏகாதிபத்திய சகாப்தத்தில், ஒட்டு மொத்த முதலாளித்துவமும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க இயல்பாகவே இலாயக்கற்றதாகும். அது சர்வாதிகாரத்தின் சாத்தியக்கூறு குறித்து அஞ்சுவதைக் காட்டிலும் மிக அதிகமாக, பாட்டாளி வர்க்கம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு அதன் அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சுகிறது.

உலகப் போரை நோக்கி மூழ்குவதையும் மற்றும் மனிதகுலம் முகங்கொடுக்கும் ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியையும் நிறுத்துவதற்காக, சர்வதேச அளவில் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும்.

Loading