மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதை அடுத்து, அமெரிக்கா மற்றும் துருக்கியின் ஆதரவுடன் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியுள்ளன.
ஏறக்குறைய 14 ஆண்டுகால போருக்குப் பின்னர், அல் கொய்தாவுடன் இணைந்த ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற ஆயுதக் குழுவால் மேலாதிக்கம் செலுத்தப்படும் “கிளர்ச்சியாளர்கள்” என்றழைக்கப்படுபவர்கள் ஒரு மின்னல் வேக வெற்றியைப் பெற்றுள்ளனர். சனிக்கிழமை மாலை HTS படைகள் மத்திய சிரிய நகரங்களான ஹமா மற்றும் ஹோம்ஸுக்குள் நுழைந்ததாக தகவல்கள் வந்தன. ஆனால், சில மணி நேரங்களுக்குப் பின்னர், சிரியத் தலைநகர் டமாஸ்கஸ் வீழ்ந்துவிட்டதாகவும், அசாத் நாட்டை விட்டு தப்பிச் செல்ல ஒரு விமானத்தில் சென்றதாகவும் செய்திகள் வெளியாகின. நேற்றிரவு, ரஷ்யாவின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம், அசாத் மாஸ்கோவில் இருப்பதாக அறிவித்தது.
சிரிய, ஈரானிய மற்றும் ரஷ்ய ஆட்சிகளின் உடந்தை இல்லாமல் அசாத்தின் வீழ்ச்சி நிகழ்ந்திருக்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை காலை, HTS ன் தலைவர்கள் சிரிய பிரதம மந்திரி முகமது அல்-ஜலாலியுடன் கலந்துரையாடி வருவதாக அறிவித்தனர். டெலிகிராமில், “பொது நிறுவனங்கள் முறையாக ஒப்படைக்கப்படும் வரை, அவை முன்னாள் பிரதமரின் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும்” என்று அவர்கள் தங்கள் துருப்புக்களுக்கு அறிவுறுத்தினர். தன்னுடைய பங்கிற்கு ஜலாலி, புதிய அதிகாரிகளுடன் “ஒத்துழைக்கத் தயார்” என்று அறிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய அரசாங்கம், “கிளர்ச்சி” பிரிவுகளுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், HTS தலைமையிலான தாக்குதலை எதிர்த்து போரிட வேண்டாம் என்று அசாத் தனது துருப்புகளுக்கு உத்தரவிட்டதாக அறிவித்தது. “பஷார் அல்-அசாத்துக்கும் சிரிய அரபு குடியரசில், ஆயுத மோதலில் பங்கேற்ற பலருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற முடிவு செய்து, அமைதியான முறையில் அதிகாரத்தை மாற்றுவதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி நாட்டை விட்டு வெளியேறினார்” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது. மேலும், “ரஷ்ய கூட்டமைப்பு, சிரிய எதிர்ப்பின் அனைத்துக் குழுக்களுடனும் தொடர்பில் உள்ளதாக” தெரிவித்தது.
இதேபோல், ஈரானிய அரசாங்கமும் “சாத்தியமான அளவுக்கு விரைவில் இராணுவ மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருமாறும், பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்குமாறும், மேலும் சிரிய சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் பங்களிப்புடன் தேசிய உரையாடலைத் தொடங்குமாறும்” அழைப்பு விடுத்தது.
அசாத்தின் வீழ்ச்சி குறித்த செய்திகளுக்கு ஏகாதிபத்திய சக்திகள் ஒரு கொண்டாட்ட மனோநிலையில் விடையிறுத்தன. பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உற்சாகமாக, “காட்டுமிராண்டித்தனமான அரசு வீழ்ச்சியடைந்துள்ளது,” என்று குறிப்பிட்ட அதேவேளையில், ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அனலெனா பேயர்பொக் சிரிய மக்களுக்கு இது ஒரு “பெரிய நிவாரணம்” என்று அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான பிரதிநிதி காஜா கல்லாஸ், அசாத்தின் வீழ்ச்சி “ஒரு சாதகமான மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி” என்று மகிழ்ச்சி தெரிவித்த அவர், “இது அசாத்தின் ஆதரவாளர்களான ரஷ்யா மற்றும் ஈரானின் பலவீனத்தையும் காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.
HTS அமைப்பினரும், அதன் தலைவரும் அல்-கொய்தாவின் முன்னாள் உறுப்பினருமான அபு முகமது அல்-கோலானி, இஸ்லாமிய அரசுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே இரவில் மேற்கத்திய ஊடக நிறுவனங்களின் அன்புக்குரியவர்களாக மாறியுள்ளனர். HTS ஆனது, வாஷிங்டனால் ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, 2018 இல் அல்-கோலானி 10 மில்லியன் டாலர் சன்மானத்துக்கு உட்பட்டிருந்தவர் என்ற போதிலும், அவர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார். ஒருவேளை எதிர்பார்த்ததை விட அதிகமாக வெளிப்படுத்தும் வகையில், CNN டிசம்பர் 5 அன்று, கோலானியின் “பிரத்தியேகமான நேர்காணலை” அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில், அவர் “நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும்”, “பட்டப்பகலில் மற்றும் சிறிய பாதுகாப்புடன் நடந்த சந்திப்பின் போது நவீனத்துவத்தின் பிம்பத்தை முன்வைக்க முயன்றதாகவும் CNN குறிப்பிட்டது.
HTS தலைமையிலான படைகளின் ஏகாதிபத்திய-சார்பு குணாம்சம் அவர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றிய உடனேயே அடிக்கோடிட்டுக் காட்டியது. 2020 ஜனவரியில், ட்ரம்ப் நிர்வாகத்தால் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி காசிம் சுலைமானி மற்றும் 2024 செப்டம்பரில் இனப்படுகொலை சியோனிச ஆட்சியால் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோரின் படங்களை HTS ஆயுததாரிகள் அழித்து, ஈரானிய தூதரகத்தை சூறையாடினர். இந்த நிகழ்வுகளை படம் பிடிப்பதற்காக, சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் வசதியாக தயாராக இருந்தன.
அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட இந்த ஆயுதக் குழுவிடம் சிரியாவை ஒப்படைப்பதற்கு உடன்படுவதன் மூலமாக, அசாத்தும் மாஸ்கோ மற்றும் தெஹ்ரானில் உள்ள அவரது கூட்டாளிகளும் வாஷிங்டன் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளின் நீண்டகால வெளியுறவுக் கொள்கை இலக்குகளுடன் பொருந்தி வருகின்றன. குறிப்பாக அக்டோபர் 2023 இல், பாலஸ்தீனியர்கள் மீதான அமெரிக்க ஆதரவிலான இனப்படுகொலையை இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்டதிலிருந்து, சியோனிச ஆட்சி, அமெரிக்கா வினியோகித்த குண்டுகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு சிரியா மீது ஒரு குறைந்த தீவிரம்கொண்ட போரை நடத்தி வந்தது. கடந்த 14 மாதங்களில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் போர் விமானங்கள் வாரத்திற்கு சராசரியாக மூன்று முறை சிரிய இராணுவத் தளங்களைத் தாக்கியுள்ளதாக அல் ஜசீரா அறிவித்தது.
இந்த தாக்குதல்கள் சிரிய படைகளுக்கு எதிராக மட்டுமல்ல, நாட்டில் ஈரானின் பிரசன்னத்தை பலவீனப்படுத்தும் நோக்கிலும் நடத்தப்பட்டன. இவற்றில் மிகவும் உச்சமாக, ஏப்ரல் 2024 இல் ஈரானின் டமாஸ்கஸ் தூதரகத்தின் மீது குண்டுவீச்சு நடத்தி, ஒரு உயர்மட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதியையும், மற்றும் பிற அதிகாரிகளையும் கொன்றதாகும். ஞாயிறன்று, அசாத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து டமாஸ்கஸின் மஸ்ஸே பகுதி மற்றும் சிரியாவின் தெற்குப் பகுதிகள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் வார இறுதியிலும் தொடர்ந்தன. கோலான் குன்றுகளில் உள்ள சிரியாவின் பிராந்தியத்திற்குள் ஊடுருவியுள்ள இஸ்ரேலிய படைகள், அப்பகுதியை “தடைசெய்யப்பட்ட இராணுவ மண்டலமாக” அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், அவரது பிராந்திய தாக்குதல் நாயான இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் வெள்ளை மாளிகையில் இருந்து போர்நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாக அறிவித்த ஒரு நாளுக்குள் “கிளர்ச்சியாளர்களின்” தாக்குதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அசாத் ஆட்சியின் வீழ்ச்சி தொடர்பான அறிவிப்பானது, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை லெபனான் மீது நடத்திய இரண்டு மாதகால காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், அந்த ஆட்சிக்கு மிக முக்கியமான கூட்டாளியாக இருந்து, அதன் இராணுவத்துக்கு மனிதவளங்களை அளித்துவந்த ஒரு அமைப்பையும் அழித்துள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் லெபனானில் நடந்துவரும் போரின் போது, அசாத்தின் முக்கிய பிராந்திய ஆதரவாளரான ஈரானில் உள்ள இலக்குகளையும் —அமெரிக்க ஒப்புதலுடன்— இஸ்ரேல் தாக்கியது. இந்த தாக்குதல்களில், ஈரானிய ஆட்சியின் அதிகாரப்பூர்வ விருந்தினராக அதன் தலைநகரில் இருந்த ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டதும், ஈரானிய இராணுவ நிலைகள் மீதான அக்டோபர் 26 தாக்குதல்களும் உள்ளடங்கும். இவை அனைத்தும் வடகிழக்கு சிரியாவில் 900 அமெரிக்க துருப்புக்கள் சட்டவிரோதமான, பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள நிலையில், அசாத் ஆட்சிக்கு பிராந்தியத்தின் கணிசமான எண்ணெய் இருப்புகளிலிருந்து எந்த வருவாயும் கிடைக்கவில்லை என்பதற்கு மத்தியில் கட்டவிழ்ந்தன.
HTSன் தாக்குதல், உக்ரேனில் நடக்கும் போருடன் நெருக்கமாக தொடர்புகளை கொண்டிருப்பதுடன், அங்கு ஏகாதிபத்தியவாதிகள் பொறுப்பற்ற முறையில் ரஷ்யாவுடன் நேரடி மோதலை நோக்கி முன்னேறி வருகின்றனர். சிரியாவில் மோதல் வெடிப்பதற்கு வெறும் சில வாரங்களுக்கு முன்னர், பைடென் நிர்வாகம் ரஷ்யாவிற்குள் உக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவுவதற்கு ஒப்புதல் அளித்தது. இது, நேட்டோ மற்றும் மாஸ்கோவை முழுமையான போருக்கு நெருக்கமாக கொண்டு வந்தது. ரஷ்யா கணிசமான முன்னேற்றங்களை அடைந்து வரும் போர்க்களத்தில், உக்ரேனில் வீழ்ச்சியைத் தவிர்ப்பதற்காக இந்த பொறுப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உண்மையில், இந்த வெடிப்பார்ந்த சர்வதேச நிலைமைக்குள், ஐரோப்பா ஒரு பரந்த இராணுவ விரிவாக்கத்தின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் குறைந்தபட்சம் இப்போதைக்கு, HTS தலைமையிலான குழுக்கள் சிரியாவை கையகப்படுத்துவதற்கு இணங்குவதற்கான முடிவில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. ஆட்சிக்கு வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அதன் நலன்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது என்று நம்பக்கூடும் என்பதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் இந்த தாக்குதலும் அசாத் ஆட்சியின் திடீர் வீழ்ச்சியும் வருகின்றன. ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக இணையத்தளத்தில் சிரியா மற்றும் உக்ரேன் போர் குறித்து ஒரு நீண்ட பதிவை வெளியிட்டார்.
அதில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது:
அசாத் போய்விட்டார். அவர் தனது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவரது பாதுகாவலரான விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்யா, இனியும் அவரைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. முதலில் ரஷ்யா அங்கு இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை. உக்ரேன் காரணமாக அவர்கள் சிரியா மீதான அனைத்து ஆர்வத்தையும் இழந்து விடுகின்றனர். அங்கு ஒருபோதும் தொடங்கியிருக்கக் கூடாத ஒரு போரில், சுமார் 600,000 ரஷ்ய சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர்,” என்று கூறிய ட்ரம்ப், “தேவையில்லாமல் பல உயிர்கள் வீணடிக்கப்படுகின்றன... விளாடிமிரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் செயல்பட வேண்டிய நேரம் இது. சீனா உதவலாம். உலகமே காத்திருக்கிறது!
அல்கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்பை சிரிய அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதற்கான முடிவு எவ்வாறாயினும், நினைவு கூரத்தக்க வகையில் பொறுப்பற்றதாகும். மேலும் சிரியாவில் இடம்பெறும் நிகழ்வுகள் எந்த வகையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இல்லை.
இதற்கு மாறாக, 13 ஆண்டுகால சிரிய உள்நாட்டுப் போரின் திடீர் புத்துயிர்ப்புக்கு, நாட்டிலும் அதைச் சுற்றியும் உள்ள பல பெரும் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் பிராந்திய சக்திகளின் முரண்பாடான மற்றும் பரஸ்பர விரோத நலன்கள் என்பன வெடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. அசாத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் HTS இன் முன்னோடிகளுக்கு வாஷிங்டன் ஆயுதமளித்து பயிற்சியளித்து வந்தது. 2011 இல் தூண்டிவிடப்பட்ட இந்த மோதலில் குறைந்தபட்சம் 500,000 பேர் கொல்லப்பட்டனர், மேலும் மில்லியன் கணக்கானவர்கள் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
வாஷிங்டனின் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நட்பு நாடுகளும் பிராந்திய அளவிலான போரில் ஈடுபட்டுள்ளதால், சிரிய நிகழ்வுகளின் நிலையற்ற தன்மை பிரதானமாக உள்ளது. யூரேஷிய நிலப்பரப்பிற்கான ஒரு நுழைவாயிலாக, மத்திய கிழக்கின் செழிப்பான எரிசக்தி வளங்கள் மற்றும் முக்கிய வர்த்தக பாதைகளில் இருக்கும் புவிசார் மூலோபாய அமைவிடம் மீது கட்டுப்பாட்டைச் செலுத்த அமெரிக்கா உறுதியாக உள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு எதிராகவும் ஆசிய-பசிபிக்கில் சீனாவுக்கு எதிராகவும், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளும் ஈடுபட்டு வரும் மூன்றாம் உலகப் போரில் இது ஒரு போர்முனையாகும்.
உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் டேவிட் நோர்த், 2016 ல் வெளியிட்ட அவரது ஒரு கால் நூற்றாண்டு போர்: உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல்: என்ற நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
அமெரிக்காவால் தூண்டிவிடப்பட்ட கடந்த கால் நூற்றாண்டு போர்கள், ஒன்றோடொன்று தொடர்புடைய நிகழ்வுகளின் ஒரு சங்கிலியாக ஆய்வு செய்யப்பட வேண்டும். உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் மூலோபாய தர்க்கம் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் நவகாலனித்துவ நடவடிக்கைகளுக்கும் அப்பால் விரிவடைகிறது. நடந்து கொண்டிருக்கும் பிராந்திய போர்கள் ரஷ்யா மற்றும் சீனாவுடன் அமெரிக்கா துரிதமாக விரிவடைந்து வரும் மோதலின் கூறுபாடுகளாக உள்ளன.
இந்த மோதல்கள் அனைத்தும் சிரியாவில் பிரதிபலிப்பைக் காண்கின்றன. இது பிரதான மற்றும் பிராந்திய சக்திகளை அவற்றின் சொந்த நலன்களை முன்பினும் அதிக ஆக்ரோஷமாக பின்தொடர நிர்பந்தித்து வருகிறது. மேலும், மில்லியன் கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஒரு பிராந்தியந்தழுவிய இரத்தக்களரியைத் தூண்டக்கூடும். HTS இன் முன்னோடி அமைப்புக்களில் ஒன்றான அல்-கொய்தாவுடன் இணைந்த அல்-நுஸ்ரா முன்னணி உட்பட இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுத வினியோகம் செய்ததன் மூலம், 2011 இல் சிரிய உள்நாட்டுப் போருக்கு எரியூட்டியுள்ள வாஷிங்டன், அசாத் ஆட்சியை நிலைப்படுத்திய ரஷ்யாவின் 2015 தலையீட்டின் விளைவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
சிரியாவின் லதாகியா நகருக்கு அருகில் க்மெய்மிம் (Khmeimim) விமானத் தளத்தை நிறுவியதன் மூலம் புட்டின் ஆட்சி ஆதாயமடைந்தது. அது சிரியாவில் ரஷ்ய விமான நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாகவும், ஆப்பிரிக்காவிற்கான விமானங்களுக்கான போக்குவரத்து இடைத்தங்கல் தளமாகவும் செயல்பட்டது. மத்தியதரைக் கடலில் மாஸ்கோ கொண்டிருக்கும் ஒரே தளமான டார்டஸில் (Tartus) உள்ள ரஷ்யாவின் கடற்படை இராணுவத் தளம், சோவியத் சகாப்த காலத்தில் 1971 இல் நிறுவப்பட்டதாகும். லெபனானிலுள்ள தன்னுடைய நட்பு அமைப்பான ஹிஸ்புல்லாவிற்கு தரைவழி அணுகலுக்காக டமாஸ்கஸை நம்பியிருந்த ஈரானுடன் சேர்ந்து, ரஷ்யாவும் அசாத் ஆட்சியின் முக்கிய ஆதரவாளராக இருந்து வந்தது.
சிரியாவின் வடக்கில், சிரிய தேசிய இராணுவ பதாகையின் கீழ் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களை துருக்கி ஆதரித்து வருகிறது. இந்தக் குழுக்கள் HTS தலைமையிலான படைகளின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பிந்தையவர்கள் நேட்டோ உறுப்பு நாடான துருக்கி மூலம் மட்டுமே செயல்படவும் தங்கள் இராணுவ ஆயுத விநியோகங்களைப் பெறவும் முடியும். இதன் விளைவாக, துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் HTS தலைமையிலான தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.
சிரியாவில் “ஒரு புதிய அரசியல் மற்றும் இராஜாங்க யதார்த்தம்” இருப்பதாக எர்டோகன் சனிக்கிழமை அறிவித்தார். அங்காராவின் பிரதான அக்கறை அதன் தெற்கு எல்லையில் ஒரு ஐக்கியப்பட்ட குர்திஷ் பிராந்தியம் உருவாவதைத் தடுப்பதாகும். இது, சிரிய தேசிய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதன் மூலமும், குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினை (YPG) குறிவைக்க அதன் சொந்த படையெடுப்புகளைத் தொடங்குவதன் மூலமும் துருக்கி செய்ய முனைந்துள்ளது. வடகிழக்கு சிரியாவில் சுமார் 900 துருப்புக்களின் சட்டவிரோத இருப்பை பராமரித்துவரும் அமெரிக்காவிடமிருந்து குர்துக்கள் தமது பங்கிற்கு ஆதரவைப் பெற்று வருகின்றனர். அமெரிக்க ஆதரவிலான குர்திஷ் படைகள் கிழக்கு சிரியாவில் அசாத்தின் துருப்புகளுக்கு எதிராக ஒரு தாக்குதலைத் தொடங்கியதாகவும், இதன் விளைவாக அந்த வார இறுதியில் டெய்ர் எஸ்ஸோர் கைப்பற்றப்பட்டதாகவும் செவ்வாயன்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது.
இஸ்லாமியவாதிகளின் முன்னேற்றத்தின் நேரம் மற்றும் அதன் விரைவான முன்னேற்றம், ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் துருக்கியின் ஆழ்ந்த ஈடுபாட்டைப் பற்றி பேசும் அதே வேளையில், அசாத்தின் படைகளின் இழிவான சரிவு பிராந்தியத்தின் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் முழு திவால்நிலையை நிரூபிக்கிறது. அசாத் குடும்பம், முதலில் ஹஃபீஸ் அல்-அசாத் (1971-2000) மற்றும் பின்னர் அவரது மகன் பஷார் (2000-24) ஆட்சியின் கீழ், சிரியாவை 53 ஆண்டுகளாக ஒரு கட்சி சர்வாதிகாரமாக ஆட்சி செய்து வந்தது. ஆனால் இறுதியில், அது தன்னைத்தானே கலைத்து, 14 ஆண்டுகளாக போரிட்ட சக்திகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்க திறம்பட வேலை செய்தது.
மத்திய கிழக்கின் மீதான ஏகாதிபத்தியதின் மீள்வெற்றி, காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலை, மற்றும் துரிதமாக வளர்ந்து வரும் மூன்றாம் உலகப் போரை எதிர்ப்பதற்கான ஒரே வழி, இப்பிராந்தியம் முழுவதிலும் மற்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களிலுள்ள தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக, அரசியல் அணிதிரட்டல் செய்வது அவசியமாகும்.
தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கம் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும். இத்தகைய இயக்கமானது, ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக, அவர்களுக்கு மத்தியில் உருவாகியுள்ள பெரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளில் வெளிப்பாட்டை கண்டுள்ள ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான பரந்த அடிப்படையிலான எதிர்ப்புடன் இணைக்க வேண்டும். நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ இலாப அமைப்பில் வேரூன்றியிருக்கும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ஏகாதிபத்தியங்களின் கட்டுப்பாடற்ற உந்துதலுக்கு, சமூகத்தின் சோசலிச மாற்றத்தை இந்த இயக்கம் கட்டியெழுப்ப வேண்டும்.