மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் தலைமையிலான தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) 2024 அக்டோபர் 15 அன்று சாம்சங் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி ஆலையில் சுமார் 1,500 நிரந்தர தொழிலாளர்களின் போர்க்குணமிக்க 37 நாள் வேலைநிறுத்தத்தை திடீரென முடிவிற்கு கொண்டுவந்தது.
அக்டோபர் 17 அன்று தொழிலாளர்கள், வேலைக்கு திரும்புவார்கள் என்று நம்ப வைக்கப்பட்டனர். ஆனால் தென் கொரியாவை தளமாகக் கொண்ட நாடுகடந்த நிறுவனம் தனது தொழிலாளர் விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்த CITU/CPM காட்டிக்கொடுப்பை பயன்படுத்திக் கொண்டுள்ளது. இன்றைய தேதி வரை, தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே திரும்ப வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வேலைக்கு மீண்டும் அழைக்கப்பட்ட இவர்கள், “பயிற்சி அமர்வுகள்” என்ற பேரில், மேலாளர்களால் அச்சுறுத்தப்பட்டு நிர்வாகத்தினால் உருவாக்கப்பட்ட போலியான தொழிலாளர் குழுவில் சேர்க்க முயன்றனர்.
வேலை நேரத்தைக் குறைத்தல், நிர்வாகத்தின் கண்காணிப்பைக் குறைத்தல், அல்லது அவர்களின் மோசமான கூலியை உயர்த்துதல் போன்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதனையும் வென்றெடுக்காமல், காட்டுமிராண்டித்தனமான வணிக சார்பு திமுக அரசாங்கத்திடம் CITU முற்றிலும் சரணாகதி அடைந்தது. வேலை நிறுத்தத்தின் முக்கிய பிரச்சினை என்று அது கூறிய, சம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை (SIWU) தொழிலாளர் அமைச்சகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய கோரிக்கையைக் கூட அது கைவிட்டது. இவ்வாறு பதிவு செய்வது இந்திய தொழிலாளர் சட்டங்களின் கீழ் ஒரு சட்டப்பூர்வ உரிமை என்று கூறப்படுகிறது.
சாம்சங் தொழிலாளர்கள் இப்போது பழிவாங்கும் நிர்வாகத்தின் தயவில் விட்டுவைக்கப்பட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் அக்டோபர் 17 அன்று தொழிற்சாலை வாசலில் வந்தபோது, சாம்சங் நிர்வாகத்தால் அவர்கள் முதலில் ஒரு வாரத்திற்கு 150 தொழிலாளர்கள் கொண்ட குழுவாக 'பயிற்சி' அமர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது. இதுவரை சுமார் 450 தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலும் இந்தியா முழுவதிலுமான வர்க்கப் போராட்டத்திற்கு பெரும் வெடிப்பு புள்ளியாக மாறிக் கொண்டிருந்த நிலைமைகளின் கீழ், CITU இந்த வேலைநிறுத்தத்தை முறியடித்தது. இந்தியாவின் தீவிர வலதுசாரி, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்தினதும் உலகளாவிய முதலீட்டாளர்களினதும் அழுத்தத்தின் கீழ், வேலைநிறுத்தத்தை உடைக்க திமுக அரசாங்கம் இன்னும் திமிர்த்தனமான மற்றும் வன்முறையான பொலிஸ் அடக்குமுறையை நாடியது. இந்த அடக்குமுறையானது ஒரு பரந்த தொழிலாளர் அணிதிரட்டலைத் தூண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
CITU வின் இந்த முழு சரணாகதிக்கு, இன்னுமொரு மேலதிக காரணமும் இருந்தது. ஸ்ராலினிச கட்சிகளான சிபிஎம், சிபிஐ, இரண்டும் திமுகவின் கூட்டணியின் நெடுங்கால பங்காளிகள் ஆவர். காவல்துறையின் செயல் பற்றிய அவர்களின் பெயரளவிலான விமர்சனங்களும் கூட, திமுக உடனான கூட்டணியின் 'நலனுக்கு' உகந்ததல்ல என்றும், அவர்களுடனான உறவை துண்டித்து விடும் என்பதே அவர்களின் கணக்கும்.
சாம்சங் நிர்வாகத்துக்கும் தமிழக திமுக அரசாங்கத்திற்கும் இடையே நடந்த இற்றுப்போன காட்டிக்கொடுப்பை வரலாற்று சிறப்புமிக்க 'வெற்றியாக' CITU கொண்டாடியுள்ளது. நீண்டகால CITU செயல்பாட்டாளரும் SIWU தலைவருமான முத்துக்குமாரின் கூற்றுப்படி, இந்த வெற்றியை, 'உலகம் ஆச்சரியத்துடன் பார்க்கிறது' மற்றும் 'தொழிலாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.”
முத்துக்குமாரின் இந்த போலியான எடுத்துக்காட்டலுக்கு எதிர்மாறாக, CITU வின் இந்த காட்டிக்கொடுப்பினால் கோபமும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாக சாம்சங் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்களிடம் தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், SIWU ஐ அங்கீகரிக்க மறுப்பதை நிறுவனம் இரட்டிப்பாக்கி உள்ள நிலையில், ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாளர் அமைதியின்மையை கட்டுப்படுத்துவதில் நிர்வாகத்தின் சிறந்த பங்காளியாக இருக்க முடியும் என்பதை அங்கீகரிக்க நிர்வாகத்திடம் வெறித்தனமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அவ்வாறே, எந்தவொரு சாமானிய தொழிலாளியின் வாக்குகளும் இன்றி SIWU இன் தலைவராக CITU ஆல் திணிக்கப்பட்ட முத்துக்குமார், நிர்வாகம் அதன் கடினமான நிலைப்பாட்டிலிருந்து இருந்து பின்வாங்கவில்லை என்றால் 'விளைவுகள்' பற்றிய வெற்று மிரட்டல்களை, உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஒத்துழைப்புக்கான ஒரு வேண்டுகோளுடன் இணைத்து சமூக ஊடகங்களில் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
'CITU தொழிலாளர்கள் அமைதியை விரும்புகிறார்கள்,' மேலும் “உற்பத்தியில் அவர்களுக்கு உதவ நாங்கள் அவர்களுக்கு வழிகாட்டுகிறோம், எனவே நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் இந்த தொழில்துறை அமைதியை காழ்ப்பு உணர்ச்சி இன்றி பாதுகாப்பது சாம்சங் நிர்வாகத்தின் கடமை என்று இதன் மூலம் அறிவிக்கிறோம்.” என முத்துக்குமார் எழுதினார்.
இந்த அறிவிப்பு முற்றிலும் ஸ்ராலினிச தலைமையிலான CITU பல தசாப்தங்களாக வகித்து வந்த முற்றிலும் இற்றுப்போன பங்கிற்கு ஏற்ப உள்ளது. இந்தியாவில் ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாறியுள்ள தமிழ்நாட்டில், குறிப்பாக ஒரு போர்க்குணமிக்க தொழிலாளர்களின் போராட்டத்தை ஒன்றன் பின் ஒன்றாக தனிமைப்படுத்தி காட்டிக் கொடுத்துள்ளது. உதாரணமாக, 2010இல், தைவானை தளமாகக் கொண்ட ஃபாக்ஸ்கான் ஆலையில் உள்ள 7,000 தொழிலாளர்களையும், சீனாவுக்கு சொந்தமான BYD சென்னை பகுதி ஆலையில் உள்ள 3,000 தொழிலாளர்களையும் CITU வாரங்கள் நீடித்த வேலைநிறுத்தங்களை நடத்திய போதிலும் நிர்வாகத்திடம் முழுமையாக சரணடையச் செய்தது.
சாம்சங் வேலைநிறுத்தத்தைப் பொறுத்தவரை, வறுமைக் கூலிகள், அபாயகரமான ஒப்பந்த வேலைகள் மற்றும் இந்தியா முழுவதும் நிலவும் மிருகத்தனமான வேலை நிலைமைகளுக்கு எதிராக ஒரு பரந்த தொழிலாள வர்க்க அணிதிரட்டலின் முன்னோடியாக அதை மாற்ற முயல்வது ஒருபுறம் இருக்கட்டும், சாம்சங் வேலைநிறுத்தத்தில், அது அமைந்துள்ள மிகப்பெரிய ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் அதற்கு ஆதரவைத் திரட்டுவதற்கு கூட CITU எதுவும் செய்யவில்லை. CITU உடன் இணைந்த தொழிற்சங்கத்தை அமைத்ததற்காக 12 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து ஒரு மாத கால வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த அருகில் உள்ள சாம்சங் சப்ளையர் SH எலக்ட்ரானிக்ஸில் கிட்டத்தட்ட 100 நிரந்தரத் தொழிலாளர்களுடன் ஒரு பொதுக் கூட்டத்தையோ அல்லது கூட்டு நடவடிக்கையையோ கூட முத்துக்குமாரும் அவரது சக ஸ்ராலினிச செயல்பாட்டாளர்களும் ஏற்பாடு செய்யவில்லை.
மாறாக CITU தலைவர்கள், திமுக தலைமையிலான தொழில் அமைச்சகத்தில் மற்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறு வலியுறுத்தினர். இதன் மூலம், அவர்களை தொழிலாளர்களுக்கு ஆதரவாக தலையிட அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை ஏற்படுத்தினர்.
உண்மையில், வேலைநிறுத்தம் இதனை எதிர்மறையாக உறுதி செய்தது. அரசாங்கம், நீதிமன்றங்கள், மற்றும் காவல்துறை சாம்சங்குடன் இணக்கமாக இருந்தன.
செப்டம்பர் 9 அன்று சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் வெடித்ததும், ஆலையிலிருந்து 500 மீட்டருக்குள் வேலைநிறுத்தக்காரர்கள் மறியல் செய்வதைத் தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவை நிர்வாகம் பெற்றது. CITU இதற்கு கீழ்ப்படிதலுடன் ஒப்புக் கொண்டு, ஆலையிலிருந்து வெகு தொலைவில் ஒரு 'எதிர்ப்பு-கூடாரத்தை' அமைத்தது. “தொழிலாளர்களின் அனைத்து பிரச்சனைகளையும் CITU தலைமை தீர்க்கும்” என்று CITU தலைவர்கள் உறுதியளித்து, WSWS நிருபர்கள் போன்ற 'வெளியாட்களுடன்' பேச வேண்டாம் என தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
வேலை நிறுத்தம் தொடர்கையில், திமுக மற்றும் பாஜக அரசாங்கங்கள் மிகவும் ஆத்திரமடைந்து, பல அதிகாரிகள், இது இந்தியா மற்றும் தமிழ் நாட்டின் மதிப்பை, முதலீட்டாளர்கள் மத்தியில் “குறைக்கிறது” என்று எச்சரிக்கை விடுத்தனர். வேலைநிறுத்தம் செய்தவர்களை மிரட்டவும், துன்புறுத்தவும் போலீசார் அதிகளவில் ஏவி விடப்பட்டனர்.
அப்போதெல்லாம், CITU, சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ தலைவர்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர். காவல்துறையினர் மீதும், அதைவிட முக்கியமாக தங்கள் திமுக கூட்டணிக் கட்சிகள் மீதும் மிகக்கோழைத்தனமான விமர்சனங்களை மட்டுமே தெரிவித்து, அவர்களை 'நியாயமானவர்களாக' இருக்குமாறு அவர்கள் வலியுறுத்தினர்.
இது போதாது என்று, திமுக அரசாங்கத்திற்கு தலைவணங்கி, தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதையும் வெல்லாமல் வேலைநிறுத்தத்தை நிறுத்திய பின், சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் தமிழ் தேசியவாத விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் மாநிலத் தலைவர்கள் அக்டோபர் 26 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை 'சுமூகமாக' தீர்க்க தலையிட்டதற்கு 'நன்றி' தெரிவித்தனர்.
CITU வின் துரோகப் பாத்திரம், சி.பி.எம், மற்றும் சி.பி.ஐயின் பிற்போக்கு ஸ்ராலினிச அரசியலில் இருந்து வருகிறது. அவர்கள் சோசலிசத்துக்காக உழைக்கும் தொழிலாள வர்க்க கட்சிகள் என்று தங்களைக் கூறிக் கொண்டாலும், பல தசாப்தங்களாக அவர்கள் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்தின் ஒருங்கிணைந்த பாகமாக, செயல்பட்டு வருகின்றன. உலக மூலதனத்திற்கான மலிவு உழைப்பு தளமாக இந்தியாவை மாற்றுவதற்கான உந்துதலிலும், சீனாவை இலக்காகக் கொண்ட வாஷிங்டனுடனான 'மூலோபாய கூட்டாண்மை' மூலம் அதன் கொள்ளையடிக்கும் நலன்களை முன்னேற்றுவதற்கான முயற்சிகளிலும், அவர்கள் இந்திய முதலாளித்துவத்திற்கு முக்கியமான ஆதரவை வழங்கியுள்ளனர்.
போர்க்குணமிக்க தொழிலாளர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தி, முறியடித்த பின்னர், சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் அவர்களின் இடது முன்னணி ஆகியவை தொழிலாள வர்க்கத்தை காங்கிரஸ் கட்சி உட்பட பெருவணிகக் கட்சிகளுடன் இணைக்க வேலை செயற்படுகின்றன. அவர்கள் தேசிய அளவிலும், மாநிலங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக வலதுசாரி, தொழிலாளர் விரோத அரசாங்கத்தில் பங்கேற்று ஆதரவு அளித்துள்ளனர். தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான அரசாங்களுக்கு ஆதரவும் இதில் அடங்கும்.
இந்து மேலாதிக்க பாஜகவுக்கு 'மதச்சார்பற்ற' மாற்று என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக போன்ற பிராந்திய முதலாளித்துவ கட்சிகளுடனான தங்கள் கூட்டணிகளை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆயினும் இந்த கட்சிகள் அனைத்தும் வகுப்புவாதத்துடன் இணைந்த ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.
சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி அரசாங்கத்தை உருவாக்கும் மாநிலங்களில், முன்பு மேற்கு வங்கத்திலும் இப்போது கேரளாவிலும், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வேலைநிறுத்தங்களைத் தடை செய்வது உள்ளிட்ட முதலீட்டாளர் சார்பு கொள்கைகளைப் பின்பற்றுகிறது.
ஸ்ராலினிச அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் கடுமையாக எதிர்ப்பது எதையென்றால், முதலாளித்துவ அரசியல் மற்றும் அரசால்-ஒழுங்குபடுத்தப்பட்ட, முதலாளி-சார்பு 'கூட்டு பேரம் பேசும் முறையிலிருந்து' தொழிலாளர்கள் முறித்துக் கொள்வதையும், வர்க்கப் போராட்ட முறைகளின் அடிப்படையில் மோசமான ஊதியங்கள், ஒப்பந்த வேலைவாய்ப்பு மற்றும் மிருகத்தனமான வேலை நிலைமைகளுக்கு எதிராக எதிர் தாக்குதல் நடத்துவதையும் ஆகும். முதலாளிகளின் தரப்பில் அரசின் தவிர்க்க முடியாத தலையீட்டை, தொழிலாளர்களின் சக்தியை திட்டமிட்டமுறையில் அணிதிரட்டி, தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் வேறுபட்ட போராட்டங்களை ஒன்றிணைத்து எதிர்கொள்ள வேண்டும்.
அத்தகைய ஒரு இயக்கத்தை, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலுக்கான சோசலிசத்திற்காக போராட்டத்தின் அடித்தளத்தில் இந்திய முதலாளித்துவம், அதன் அரசு எந்திரம் அத்துடன் அதன் அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிராக, தன் பின்னால் கிராமப்புற உழைப்பாளர்களை அணிதிரட்டும் ஒரு சோசலிச-சர்வதேசிய முன்னோக்கால் மட்டுமே உருவாக்க முடியும்.
CITU தன்னை சாம்சங் தொழிலாளர்களின் வர்க்க நலன்களை வலியுறுத்துவதற்கான கருவியாக இல்லாமல், அவர்களை அணிதிரட்டாமல் திமுக அரசாங்கம் மற்றும் நாடுகடந்த சாம்சங் சார்பாக மிருகத்தனமான தொழிலாளர்-சுரண்டலை நிலைநிறுத்துவதற்கான ஒரு கருவியாக நிரூபித்துள்ளது.
அதனால்தான் சாம்சங் தொழிலாளர்கள் ஒரு சுயாதீன சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுவை நிறுவுவதன் மூலம் விஷயங்களை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அத்தகைய குழு, CITU தலைமையிலான SIWUக்கு மாறாக, ஆலையின் நிரந்தர, ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்களை ஒரு பொதுவான போராட்டத்தில் ஒன்றிணைக்க முயற்சிக்க வேண்டும். சாம்சங் நிர்வாகம், இந்திய அரசு, அரசியல் ஸ்தாபகம் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக, அனைத்து தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் மிருகத்தனமான சுரண்டலுக்கும், பொருளாதார பாதுகாப்பின்மைக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தியை அணிதிரட்டுவதற்கான ஒரு மூலோபாயத்துடன் இது இணைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்கள் கட்டப்பட வேண்டும், மேலும் நொய்டா, உத்தரபிரதேசம், தென் கொரியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள சாம்சங் தொழிலாளர்களுக்கு விசேட அழைப்புகள் செய்யப்பட வேண்டும்.
இத்தகைய சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களின் வலையமைப்பு, தொழிலாள வர்க்க-போராட்டத்தின் ஒரு புதிய அமைப்பான IWA-RFC (International Workers Alliance of Rank-and-File Committes) என்பதன் பகுதியாக மாற வேண்டும். இது, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை உலகளாவிய நிறுவனங்கள், ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக ஒன்றிணைக்கின்றது.
மேலும் படிக்க
- கனடா தபால் துறையில் அரசாங்கம் திணித்துள்ள வேலைநிறுத்தத் தடை: சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கான முன்னோக்கிய பாதை
- வோல்க்ஸ்வாகன் ஆலை மூடல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு: வாகனத் தொழில்துறையில் வேலை வெட்டுக்களுக்கு எதிரான ஓர் உலகளாவிய சாமானிய தொழிலாளர்களின் பிரச்சாரத்திற்காக!
- இலங்கையில் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மீதான பொலிஸ் தாக்குதலை கண்டனம் செய்! கைது செய்யப்பட்ட நான்கு ஆசிரியர்களை விடுதலை செய்!