சிரியாவிலுள்ள குர்துகளின் எதிர்காலம் குறித்து அங்காராவும் வாஷிங்டனும் உடன்படாத நிலையில், துருக்கியுடனான போர் குறித்து இஸ்ரேல் எச்சரிக்கிறது

அப்துல்லா ஓகாலனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் குர்திஷ் மேயர்கள் கைது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வெள்ளிக்கிழமை, மக்கள் ஜனநாயகம் மற்றும் சமத்துவக் கட்சியால் (DEM கட்சி) நிர்வகிக்கப்படும் மெர்சினில் உள்ள அக்டெனிஸ் நகராட்சியின் இணை மேயர்களான ஹோஸ்யர் சரயால்டஸ் மற்றும் நூரியே அர்ஸ்லான் ஆகியோர் நான்கு நகராட்சி சபை உறுப்பினர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பை மீறி உள்துறை அமைச்சகத்தால் இந்த நகராட்சிக்கு ஒரு புதிய நிர்வாகி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களை அகற்றுவதும், புதிய நிர்வாகிகளின் நியமனமும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தெளிவான தாக்குதல் ஆகும். சோசலிச சமத்துவக் குழு இந்த ஜனநாயக விரோத, பொலிஸ்-அரச ஒடுக்குமுறையை கண்டனம் செய்வதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள் மற்றும் கவுன்சிலர்களை விடுவித்து மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோருகிறது.

துருக்கியின் அங்காராவில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில், (இடதுபுறம்) அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன், துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடானுடன் கைகுலுக்கிறார், நவம்பர் 6, 2023 திங்கட்கிழமை [AP Photo/Jonathan Ernst]

மார்ச் 31 அன்று, உள்ளாட்சித் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட DEM கட்சியின் பல மேயர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இஸ்தான்புல் மாகாணத்தில் 1 மில்லியன் மக்களைக் கொண்ட நகராட்சியான எசென்யூர்ட்டின் மக்கள் குடியரசுக் கட்சியின் (CHP) மேயர்கள், அத்துடன் டெர்சிமில் உள்ள ஓவாசிக் மாவட்டத்தின் CHP மேயர்கள் ஆகியோரும் இதே தன்னிச்சையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அரசாங்கம் தலைமையிலான பொலிஸ் அடக்குமுறை சமீபத்தில் அதிகரித்துள்ளது. காஸா இனப்படுகொலைக்கு எதிரான, மற்றும் மே தினத்தில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஏராளமான பத்திரிகையாளர்களைக் கைது செய்தல், இடதுசாரி அரசியல் கட்சியை “பயங்கரவாத அமைப்பு” என்று கூறி தொடர்புபடுத்துதல் மற்றும் ஏராளமான சமூக வலைத்தளங்கள் மற்றும் X/Twitter கணக்குகளை மூடுதல் ஆகியவை இந்த அடக்குமுறையில் அடங்கும்.

ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசாங்கம், குர்திஷ் மக்களின் வாக்களிக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமையை திறம்பட ஒழிப்பதற்காக, 2015 முதல் இந்த சட்டவிரோத நடைமுறையை தீவிரமாகப் பயன்படுத்தி வருகிறது. முக்கியமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) தலைவர் அப்துல்லா ஓகாலன் மூலம் குர்திஷ் படைகள் ஆயுதங்களை கீழே போடுமாறு அரசாங்கம் கட்டாயப்படுத்த முயற்சிக்கும் வேளையில், DEM மேயர்களுக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கைகள் வந்துள்ளன.

டிசம்பர் 28 அன்று, DEM கட்சி பிரதிநிதிகளின் ஒரு தூதுக்குழு 1999 முதல் மர்மாரா கடலில் உள்ள இம்ராலே தீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஓகாலானை சந்தித்தது. பின்னர் அதே தூதுக்குழு எர்டோகனின் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (AKP) மற்றும் CHP உள்ளிட்ட நாடாளுமன்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு “மகிழ்ச்சியான சித்திரம்” வரையப்பட்டது.

புதிய நிர்வாகிகளை நியமித்தல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஏனைய தாக்குதல்கள் என்பன, 40 ஆண்டுகளாக அங்காரா நசுக்க முயற்சித்து வருகின்ற குர்திஷ்தான் தொழிலாளர் கட்சிக்கும் (PKK), அங்காராவிற்கும் இடையிலான புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள், “அமைதி மற்றும் ஜனநாயகம்” என்ற கூற்றுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் இன்றியமையாத வகையில் மத்திய கிழக்கிலான போரின் பாகமாக உள்ளன —இது காஸாவில் இஸ்ரேலால் நடத்தப்பட்டுவரும் இனப்படுகொலை, சிரியாவைப் பிரிப்பதற்கான போராட்டம், மற்றும் அப்பிராந்தியத்தை மறுஒழுங்கமைக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகள் ஆகியவற்றுடன் தீவிரமடைந்துள்ளது.

ஒருபுறம், ஓகாலானின் முன்முயற்சியின் பேரில் குர்திஷ் தொழிலாளர் கட்சி அதன் ஆயுதங்களைக் கீழே போட வேண்டுமென அங்காரா விரும்புகிறது. மறுபுறம், குர்திஷ் தேசியவாத மக்கள் பாதுகாப்பு அலகுகள் (YPG) தலைமையிலுள்ள, சிரியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) கலைக்கப்பட வேண்டும் என்று அங்காரா விரும்புகிறது.

குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி சார்ந்த குர்திஸ்தான் சமூகங்கள் ஒன்றியம் (KCK) மற்றும் YPG சார்ந்த ஜனநாயக ஒன்றியக் கட்சி (PYD) ஆகியவற்றின் நிர்வாகக் குழுவின் ஒரு உறுப்பினரான முஸ்தபா கரசு, Medya Haber TV க்கு அளித்த ஒரு பேட்டியில், “எங்கள் தலைமையின் [ஓகாலன்] முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், நிச்சயமாக, துருக்கிய அரசைப் பொறுத்தவரை, குறிப்பாக குர்திஷ் பிரச்சினையைப் பொறுத்தவரை, அரசுக் கொள்கையில் எச்சரிக்கையான அணுகுமுறையில் எந்தத் தவறும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

துருக்கி, சிரியா, ஈரான் மற்றும் ஈராக்கில் குர்திஷ் மக்கள் இருப்பதால் இயல்பாகவே ஒரு சர்வதேச பிரச்சினையாக இருக்கும் குர்திஷ் பிரச்சினை, குறிப்பாக 2003 இல் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் 2011 இல் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போருக்குப் பின்னர், மத்திய கிழக்கைப் பிளவுபடுத்துவதற்கான ஏகாதிபத்திய போராட்டத்தின் ஒரு உள்ளார்ந்த பாகமாக மாறியுள்ளது.

சிரியாவில் “வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம்” என்று அழைக்கப்படும் ஒரு நடைமுறை அமைப்பை வழிநடத்தும் SDF இன் நிலைப்பாடு, பிராந்தியத்தின் எண்ணெய் இருப்புக்கள் மற்றும் 2,000 துருப்புக்களுடன் நாட்டை தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் அமெரிக்காவுடனான அதன் கூட்டணி காரணமாக முக்கியமானது. எனவே, அங்காராவின் முன்முயற்சிக்கு, குர்திஷ் தலைமையுடன் மட்டுமல்ல, மாறாக மீண்டுமொருமுறை டொனால்ட் ட்ரம்ப்பின் ஜனாதிபதி பதவியின் கீழ், மற்றும் தெற்கு சிரியாவில் அதன் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தி வரும் மற்றும் SDF ஐ அதன் கூட்டாளியாக அறிவித்துள்ள இஸ்ரேலுடனும் ஒரு உடன்பாடு அவசியமாகிறது.

டமாஸ்கஸில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) உடனான அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி, எந்த அந்தஸ்தும் இல்லாத குர்திஷ் படைகளைக் கலைக்கவும் மற்றும் டமாஸ்கஸ் ஆட்சிக்கு அவை அடிபணியச் செய்யவும் அங்காரா முயன்று வருகிறது. சிரியாவில் உள்ள ஆயுதக் குழுக்களை கலைத்துவிட்டு அவற்றை மத்திய இராணுவத்திற்கு அடிபணிய வைக்க HTS முடிவு செய்துள்ள நிலையில், SDF மற்றும் அதன் ஆயுதப் படைகள் தலைமையிலான தன்னாட்சி நிர்வாகத்திற்கு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், அமெரிக்காவையும் இஸ்ரேலையும் எதிர்கொள்ள விரும்பாத HTS அமைப்பானது, SDF உடனான பேச்சுவார்த்தை மூலம் இந்த கடினமான சமன்பாட்டை தீர்ப்பதை இப்போதைக்கு ஒத்திவைத்துள்ளது.

துருக்கிய வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடான் புதன்கிழமை ஒரு நேர்காணலில், வாஷிங்டன் மற்றும் டமாஸ்கஸ் மூலம் PKK மற்றும் YPG-க்கு இறுதி எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிரியர்கள் அல்லாத PKK உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் அங்காரா அல்லது HTS ஆகியன இராணுவ நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். மேலும் அவர், “இறுதி எச்சரிக்கைகள் அல்லது நிபந்தனைகள் பற்றி நாம் பேசும்போது, எங்களிடமிருந்து அல்லது புதிய சிரிய அரசாங்கத்திடமிருந்து இப்பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கையை நீங்கள் விரும்பவில்லை என்றால், நிபந்தனைகள் தெளிவாக உள்ளன என்று நாங்கள் கூறுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, வாஷிங்டன் முன்னதாக அங்காராவை பொருளாதாரத் தடைகளைக் கொண்டு அச்சுறுத்தியதுடன், அப்பிராந்தியத்தில் அதன் இராணுவ பிரசன்னத்தையும் அதிகரித்தது. அதே நாளில், பாரீஸுக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ISIS-ஐ எதிர்த்துப் போராடுகிறோம் என்ற சாக்குபோக்கின் கீழ், சிரியாவில் அமெரிக்க இராணுவ பிரசன்னம் தொடரும் என்பதை சமிக்ஞை செய்தார். மேலும் அவர், “சிரியாவில் நமது குர்திஷ் நண்பர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த 10,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயங்கரவாத ஆயுததாரிகள் வெளியே வந்து, சிரியாவில் டேஷ் என்று அழைக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த படையை ஈராக்கில் மீண்டும் கட்டியெழுப்பினால், அது தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு இன்னும் கடுமையான ஆபத்து ஏற்படும்” என்று கூறினார்.

SDF-க்கு எதிரான அங்காராவின் நடவடிக்கை குறித்து பிளிங்கன் பின்வருமாறு கூறினார்: “இந்த மாற்றத்தை வழிநடத்த, துருக்கியில் (இது PKK மற்றும் பயங்கரவாதம் பற்றி மிகவும் நியாயமான கவலைகளைக் கொண்டுள்ளது) உள்ள எங்கள் கூட்டாளியுடனும் எங்கள் பங்காளியுடனும் நாங்கள் மிக நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். சிரிய ஜனநாயகப் படைகளை (SDF) சிரிய தேசியப் படைகளுடன் ஒருங்கிணைப்பது, அந்தப் படையிலுள்ள வெளிநாட்டு உறுப்பினர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குப் புறப்படுவது, எண்ணெய், எல்லைகள் போன்ற கேள்விகளைத் தீர்ப்பது உட்பட, பல கவலைகள் ஒரு தீர்வுக்கு வழிவகுக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது சிறிது காலம் எடுக்கும் ஒரு செயல்முறையாகும்”.

சிரியாவில் “பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்” மேற்கத்திய நாடுகளின் கூட்டாளிகளான “குர்திஷ் போன்ற சுதந்திரப் போராளிகளை” பிரான்ஸ் கைவிடாது என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் திங்களன்று கூறினார்.

பிரான்சின் TV5 மொன்ட் உடன் சமீபத்தில் பேசுகையில், SDF ன் வெளியுறவு விவகார அதிகாரி இல்ஹாம் அஹ்மத், அப்பிராந்தியத்திற்கு துருப்புகளை அனுப்புமாறு பிரான்சுக்கு அழைப்பு விடுத்ததோடு, “அமெரிக்காவும் பிரான்சும் உண்மையில் முழு எல்லைகளையும் பாதுகாக்க முடியும். இந்த இராணுவக் கூட்டணி அத்தகைய பொறுப்பை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

2011ல் இருந்து ஆட்சி மாற்றத்திற்கான போரால் சீரழிக்கப்பட்ட சிரியாவில், அங்காரா அதன் நேட்டோ நட்பு நாடான வாஷிங்டன் அல்லது SDF உடன் மட்டுமல்ல, மாறாக இஸ்ரேலுடனும் மோதக்கூடும்.

ஜனவரி 6 அன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் மற்றும் நிதி மந்திரி பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நாகெல் கமிஷனின் அறிக்கை, “துருக்கி, டமாஸ்கஸில் மிகவும் செல்வாக்கு மிக்க சக்தியாக மாறியுள்ளது மற்றும் சன்னி-துருக்கிய அச்சு ஈரானின் ஷியா அச்சை பிரதியீடு செய்துள்ளது” என்று குறிப்பிட்டது.

மேலும், “சிரியாவை தனது ஆதரவு நாடாக மாற்றுவதிலும், அதன் மூலம் அதன் பிராந்திய செல்வாக்கை அதிகரிப்பதிலும் துருக்கியின் நலன்கள் தெளிவாக உள்ளன. ஆதலால், கள நடவடிக்கைகளுக்கும், விரைவாக அதிகரிக்கக்கூடிய சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கும் இஸ்ரேல் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறிய அந்த அறிக்கை, துருக்கியுடனான சாத்தியமான மோதலுக்குத் தயாராக இராணுவத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியது.

ஜனவரி 20 இல் பதவியேற்கவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம், சிரியா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க-தலைமையிலான பிளவை ஆழப்படுத்துவதில் ஒரு தீர்க்கமான பாத்திரம் வகிக்கும். ஜனவரி 7 அன்று அவரது உரையில், சிரியாவில் இருந்து அமெரிக்கா அதன் துருப்புகளைத் திரும்பப் பெறுமா என்ற கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்த ட்ரம்ப், “அது ஒரு இராணுவ மூலோபாயத்தின் ஒரு பகுதி என்பதால், நான் அதை உங்களுக்குச் சொல்ல மாட்டேன். ஆனால் அது துருக்கி என்று நான் கூறுவேன்” என்று கூறினார்.

பனாமா கால்வாய், கிரீன்லாந்து மற்றும் கனடாவுக்கான தனது சொந்த இணைப்பு மற்றும் உலகளாவிய மேலாதிக்க திட்டங்களை சமீபத்தில் அறிவித்த ட்ரம்ப், எர்டோகனைப் பாராட்டி பின்வருமாறு கூறினார்: “ஜனாதிபதி எர்டோகன் எனது நண்பர். அவர் எனக்குப் பிடித்த ஒரு நபர், மரியாதைக்குரியவர், அவர் என்னையும் மதிக்கிறார் என்று நினைக்கிறேன்.... சிரியாவில் என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தால், ரஷ்யா பலவீனமடைந்தது, ஈரான் பலவீனமடைந்தது, எர்டோகன் மிகவும் புத்திசாலி, அவர் தனது ஆட்களை வெவ்வேறு வடிவங்களிலும் வெவ்வேறு பெயர்களிலும் அனுப்பினார், அவர்கள் உள்ளே சென்று [டமாஸ்கஸில்] ஆட்சியைக் கைப்பற்றினர்.

“நான் அவர்கள் வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகும் சிலரைப் பின்தொடராதவர் அவர்தான். நான் யாரைப் பற்றிப் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? குர்துகள், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அவர்கள் இயற்கையான எதிரிகள், அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்,” என்று ட்ரம்ப் கூறினார். கடந்த காலத்திலும், எர்டோகனை அவரால் கட்டுப்படுத்த முடியும் என்றும் ட்ரம்ப் பரிந்துரைத்தார்.

புதிய ட்ரம்ப் நிர்வாகத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதன் மூலமாக அப்பிராந்தியத்தில் அதன் திட்டங்களை முன்னெடுக்க அங்காரா நம்புகின்ற அதேவேளையில், குர்திஷ் தலைமை அதே திவாலான முதலாளித்துவ தேசியவாத முன்னோக்குடன் ஏகாதிபத்திய சக்திகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை தி கார்டியன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், SDF தலைவர் மஸ்லம் அப்தி ட்ரம்பை நோக்கி, “களத்தில் அமெரிக்கா இருப்பதே பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான முக்கிய காரணி,” என்றும், “ISIS அச்சுறுத்தலுக்கு” எதிராகவும், அங்காராவின் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிராகவும், தொடர்ந்து அமெரிக்காவின் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.

Loading