இலங்கையில் போரில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை தமிழ் தேசியவாத கட்சிகள் கைவிட்டுவிட்டன

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களின் நிலையை கண்டறியுமாறு கோரி தொடர்ச்சியாக பல்வேறு தினங்களிலும் நடத்தி வரும் போராட்டங்களின் பாகமாக, மார்ச் 8 மகளிர் தினத்தன்று நடத்தும் போராட்டத்தை எட்டாவது முறையாக நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, இறுதி யுத்தம் முடிவடைந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு முன்னால் நடந்தது.

8 மார்ச் 2025 அன்று முல்லைத் தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் நடத்திய போது [Photo; WSWS]

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அழைப்புவிடுத்திருந்த இந்த பேரணியில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அவர்களில் தமது மகன்கள், மகள்கள், கணவன், மனைவி, பெற்றோர், சகோதர சகோதரிகளை தொலைத்து, தசாப்தம் கடந்தும் ஏக்கத்துடன் தேடிக்கொண்டிருக்கும் வயதானவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் தலையில் கறுப்புத் துணிகள் கட்டியபடி கண்ணீரோடு தமது உறவினர்களின் படங்களையும் ஏந்தியவாறு பேரணியில் பங்குபற்றினர்.

போராட்டக்காரர்கள், “எமது நாட்டில் வாழும் உரிமை எமக்கு இல்லையா?” “சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன?” “கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்!” “எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும்?” “நாங்கள் இலங்கையை நம்பவில்லை எமக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்!” “இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்புச் சான்றிதழ் என்றால் கொலை செய்தவன் யார்?” “காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள்!” போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

கடந்த அரசாங்கங்களைப் போலவே, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கமும் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் ஏராளமான பொலிசாரையும் புலனாய்வாளர்களையும் களமிறக்கியிருந்தது.

1983 இல் தொடங்கி 2009 மே மாதம் வரை 26 ஆண்டுகாலம் கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட இனவாத போரின் போதே இந்த இந்த காணாமல் ஆக்குதல் நடந்துள்ளது. தற்போது ஆட்சி நடத்தும் ஜே.வி.பி., இந்தப் போர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதை ஆதரித்து வந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால், ஜே.வி.பி.யின் ஊக்குவிப்புடன், 2006 இல் போர் மீண்டும் தொடங்கப்பட்டு 2009 மே மாதம் முடிவடைந்த காலத்திலேயே அநேகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்,

இவர்களில் போரின் முடிவில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள், படையினராலும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களாலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் போர் முடிந்த பின்னர் இராணுவத்தால் வவுனியாவில் நடத்தப்பட்ட வெகுஜன அகதி முகாம்களில் இருந்து விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்டவர்களும் அடங்குவர்.

சொத்துக்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இந்த யுத்தத்தின் இறுதி நாட்களான 2009 மே 18, 19 ஆகிய நாட்களில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.

8 மார்ச் 2025 அன்று இலங்கையில் யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முல்லைத்தீவு வட்டுவாக்கலில் ஊர்வலம் சென்ற போது [Photo; WSWS]

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினர், மார்ச் 1 அன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கமும் தமக்கு நீதி வழங்கவில்லை எனக் கூறி, “சர்வதேச நீதியை” வலியுறுத்தியதோடு, தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், மத போதகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்றோரை இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தது.

ஆனால், வழக்கமாக தமது அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய போராட்டங்களின் மீது ஏறி அமர்ந்து கொள்ளும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முண்ணனி, ஏனைய அமைப்புக்கள், தமிழ் தேசியவாதத்திற்கு முட்டுகொடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மணவர் ஒன்றியம் போன்றவை இம்முறை போராட்டக்காரர்களை கைவிட்டிருந்தன. போராட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை செல்லும் என தெரிவித்திருந்த போதிலும், முன்னர் போல் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவளிக்க கூட்டம் வராததால் போராட்டக்காரர்கள் குழப்பமடைந்திருந்தனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் ஏனைய மக்களும் நீதி கோரி நடத்தும் போராட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் ஆதரவு அளிக்கின்றன. இருப்பினும், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உட்பட ஏகாதிபத்திய நாடுகளிடம் 'நீதி கோரி' முறையிடும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்கத்தின் நடவடிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் ஆதரிக்கவில்லை.

இதற்கு காரணம், கொடூரமான போர்க்குற்றங்களைச் செய்யும் வரலாற்றைக் கொண்ட, அதே போல் தொடர்ந்து போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளிடம், இலங்கையின் ஆட்சியாளர்கள் செய்யும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த நாடுகள் கொழும்பு அரசாங்கத்தால் நடத்தப்பட்ட போரை ஆதரித்தன. போரின் இறுதி வாரங்களில், இராஜபக்ஷ அரசாங்கம் சீனாவை நோக்கி நெருக்கமாகியதால், அதிலிருந்து விலகிக்கொள்ளும்படி நிர்ப்பந்திப்பதற்கே அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் மனித உரிமைகள் பற்றிப் பேசத் தொடங்கின. இந்த நாடுகள் தங்கள் புவிசார் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாகவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரேரணைகளையும் முன்வைத்தன.

தமிழ் தேசியவாத முதலாளித்துவக் கட்சிகளும், வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பல்வேறு (புலம்பெயர்ந்தோர்) அமைப்புகளுமே, 'போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை' என்று தமிழ் மக்களை ஏகாதிபத்திய ஆட்சியாளர்களிடம் மன்றாட வைத்தன. இந்த அமைப்புகளின் தலைவர்கள், கொழும்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தங்களுக்கு சலுகைகளைப் பெறுவதற்காகவும், அதற்காக ஏகாதிபத்திய நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு சார்பாக செயற்பட்டு உதவிகளைப் பெறுவதற்காகவுமே தமிழ் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு துயரங்களைப் பற்றி வருத்தப்படுகிறார்கள்.

காசாவில் நடந்த கொடூரமான இனப்படுகொலை மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் முந்தைய பைடன் நிர்வாகத்தையும் தற்போதைய டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் பாசிச தன்மையையும் மேலும் அம்பலப்படுத்தியுள்ளதால், தமிழ் மக்களிடையே ஏகாதிபத்திய சக்திகளை ஜனநாயகவாதிகளாக தூக்கிப்பிடித்து மேலும் நியாயப்படுத்துவது தமிழ் தேசியவாதக் கட்சிகளுக்கு கடினமாகிவிட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு சேவை செய்வதில் தனது உறுதிப்பாட்டை அறிவித்துள்ள நிலையில், தமிழ் மக்களின் நலன்கள் என்ற போர்வையில் கொழும்புக்கு அழுத்தம் கொடுத்து, வாஷிங்டன் மற்றும் புது தில்லியின் நலன்களுக்கு சேவை செய்யும் இலங்கை தமிழ் கட்சிகளின் உபாயம் வங்குரோத்து அடைந்துள்ளது.

இருப்பினும், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவைப் பெறும் திசாநாயக்கவின் அரசாங்கம், அந்தக் கொடுமைகளை மூடி மறைக்கவே வேலை செய்கிறது. இந்த விஷயத்தில் முந்தைய அரசாங்கங்களைப் போலவே அதே கொள்கையையே செயல்படுத்தும் தற்போதைய நிர்வாகம், உண்மையை கண்டறியும் ஆணைக் குழு என்று அழைக்கப்படும் மற்றொரு ஆணைக் குழுவையும் முன்மொழிந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் திணிக்கப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தி வருகின்ற நிலைமையில், அவற்றுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், கொழும்பு ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கே தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் விரைகின்றன. 2022 வெகுஜன எழுச்சியின் போது இந்தக் கட்சிகள் இவ்வாறே செயல்பட்டன. கொழும்பின் சிங்கள மக்களை அடிப்படையாகக் கொண்ட பிற கட்சிகளைப் போலவே, தமிழ்க் கட்சிகளும், இன மற்றும் மத வேறுபாடுகளைக் கடந்து, தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போராட்டத்தின் வளர்ச்சியைக் கண்டு எப்போதும் பீதியடைந்துள்ளன.

தமிழ் கட்சிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் இந்த விஷமத்தனமான கொள்கைகளை நிராகரிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் உட்பட பொதுமக்களையும் கேட்டுக்கொள்கின்றன. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களும், ஏழை மக்களும் ஒன்றிணைந்து ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து துருப்புக்களை விலக்கிக்கொள், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், போர்க் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட அடக்குமுறைச் சட்டங்களை ரத்து செய் ஆகியவை இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளாக இருக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை முன்கொண்டு, கொழும்பு முதலாளித்துவ ஆட்சியை ஒழித்து சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்திற்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இந்தப் போராட்டத்தில், துன்பப்படும் தமிழ் மக்கள் உட்பட தொழிலாள வர்க்கம், குற்றவியல் ஏகாதிபத்திய சக்திகளிடம் அன்றி, சர்வதேச தொழிலாள வர்க்கத்திடமே ஆதரவு கோர வேண்டும்.

***

மார்ச் 8 அன்று நடந்த போராட்டம், தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்த வட்டுவாக்கல் பாலத்தைக் கடந்தவுடன் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த பலர் உலக சோசலிச வலைத் தளத்துக்கு கருத்துத் தெரிவித்தனர்.

போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் தமிழ் கட்சிகளும் ஏனைய அமைப்புக்களும் வருகை தராமை சம்பந்தமாக கோபத்தை வெளிப்படுத்திய ஒரு போராட்டக்காரர், “இப்போது எங்களால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதால் தான் அவர்கள் வரவில்லை. மறுபடி ஒரு தேர்தல் வந்தால் அவர்களை இந்தப் போராட்டங்களில் காணமுடியும்” என தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த துரைசிங்கம் கலாவதி, “நாங்கள் வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வாழ்ந்தோம். ஆனாலும் வெள்ளை வான்களில் இராணுவம் தான் வந்து எமது பிள்ளைகளை பிடித்துச் சென்றது,” என்றார். “யுத்தம் முடிந்து 16 வருடங்கள் முடியப் போகின்றது. ஆனால் எமது பிள்ளகளுக்கு என்ன நடந்தது என தெரியாமல் தவிக்கின்றோம். எங்களுக்கு எங்கள் பிள்ளைகளைத் தவிர வேறெதுவும் வேண்டாம்” என அவர் கூறினார்.

65 வயது சங்கரன் இராமேஸ்வரம் குறிப்பிட்டதாவது: “எனது 17 வயது மகனை இராணுவத்தினர் முள்ளிவாய்க்காலில் வைத்து பிடித்துச் சென்றனர். நான் கொழும்பு வரைக்கும் சென்று அங்குள்ள கட்சித் தலைவர்களையும் சந்தித்து எனது மகனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தும் எந்தப் பயனும் இல்லை.

“வலைஞர்மடம் என்ற இடத்தில் இராணுவத்தின் ஷெல் வீச்சில் 57 வயதான எனது மனைவி ஒரு காலை இழந்த அதேநேரம், அவருடன் இருந்த உறவினர்கள் 11 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். இறுதி யுத்த நேரத்தில்’ குண்டுவிச்சில் இருந்து தப்புவதற்காக வட்டுவாகலில் உள்ள பதுங்கு குழிக்குள் நுழைந்து உயிர் பிழைத்த போதிலும், இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழே பதுங்கு குழிக்குள் அகப்பட்டு, அங்கிருந்த இரசாயணம் பட்டு எரிந்து விட்டன. இன்று வரை சரியாகவில்லை.”

தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்கு மட்டும் எம்மிடம் வருவார்கள், அவர்களைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள் எனக் கூறிய சங்கரன், வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் பற்றியும் விளக்கினார்: “தற்காலிக வீடு தந்தார்கள். கூரை தகரத்தால் ஆனது. அதனால் வெயில் காலங்களில் இருக்க முடியாது. கிணறு பாழடைந்து போனமையால் குழாய் மூலம் தண்ணீர் தருகின்றார்கள். தண்ணீர் கட்டனம் மட்டும் மாதம் 3,000 ரூபாவுக்கு மேல் வருகின்றது. உணவுத் தேவைக்கே நாங்கள் உறவினர்களின் கைகளை எதிர்பார்க்கையில், இப்படியான செலவுகள் எங்களுக்கு மூச்சு முட்ட வைக்கின்றது. எனது மகன் இருந்தால் எங்களுக்கு இந்தநிலை வந்திருக்காது.”

70 வயது சிற்றம்பலம் ரகுநாதன், 17 வயது மகனை கடந்த 16 வருடங்களாக தேடுகின்றேன் என்றார். “இரணைப்பாலையில் வைத்து இராணுவம் பிடித்துச் சென்றதற்கு கண்கண்ட சாட்சியாக நாங்கள் இருக்கின்றோம். ஆனால் இன்று வரை அவரை காணமுடியவில்லை. எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று நேர்மையாக விசாரணை செய்யப்பட வேண்டும்.

“’சர்வதேசம்’ வந்து இலங்கை அரசை உள்ளக விசாரணைப் பொறிமுறையை ஆரம்பிக்குமாறு சொல்கின்றது. இது கொலைகாரனிடம் நீதி கேட்பது போன்றது. இந்த உள்ளக விசாரணை என்னவானது? காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று கோட்டாபய (முன்னாள் ஜனாதிபதி) சொன்னார். எப்படி இறந்தார்கள் என்ன நடந்தது என்பதற்கான எந்த விபரமும் இல்லை. இதுதான் உள்ளக விசாரணையா? ஆக சர்வதேசம் யாருக்காக இருக்கின்றது? அரசாங்கத்துக்காகத்தானே! காசாவில் படுகொலைகள் செய்வதை மேற்பார்வையிடும் அமெரிக்காவும் ஐரோப்பாவுமா எமக்கு நீதி வழங்கப்போகின்றன?”

வேலுச்சாமி சிந்தாமணி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 60 வயது வேலுச்சாமி சிந்தாமணி, எனது 16 வயது மகள் உருத்திராதேவியை கடந்த 16 வருடங்களாக தேடுகின்றேன் என்றார். “இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே அவர் காணாமல் போனார். எனது மகள் காணாமல் போனபோது க.பொ.த. சாதரண தரப் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்.”

கூலித் தொழில் மூலம் வருமானத்தை ஈட்டும் அவருக்கு கடந்த 3 மாதங்களாக வேலைகள் கிடைக்கவில்லை. “எமது வேலைகள் நிச்சயமற்றவை, தற்போது பொருட்களின் விலை அதிகரிப்புக்கு மத்தியில் எப்போதாவது கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எப்படி சீவிக்க முடியும்? தற்போதுள்ள அரசாங்கம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமென்று பார்த்தால் அதுவும் கடந்த கால அரசாங்கங்கள் போலவே எங்களை ஏமாற்றி வருகின்றது. நான் சாவதற்கு முன்னர் எனது மகளை கண்டால் எனக்கு போதும்” என அவர் கூறினார்.