முன்னோக்கு

சுங்கவரிகளுக்கான ஆதரவுடன், ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்க அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் மீதான போருக்கு ட்ரம்பின் பாசிசத் திட்டங்களை அங்கீகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஷான் ஃபெயின் (இடது) மற்றும் டொனால்ட் ட்ரம்ப். [AP Photo]

அமெரிக்காவுக்கு வெளியில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வாகனங்கள் மீதும் 25 சதவீத இறக்குமதி வரிவிதிப்புகளை ட்ரம்ப் அறிவித்ததை ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் (United Auto Workers – UAW) வழிமொழிவதென்பது, ஒரு பாசிச மேலாதிக்க அரசாங்கத்திற்கான ஆதரவு பிரகடனத்திற்கு சமமானதாகும். இது, சர்வாதிகாரத்திற்கு எதிரான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாக, சர்வதேச தொழிலாளர் கூட்டணியான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலம், அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தொடர்ச்சியான விரோதத்தையும், அதற்கு எதிராக ஒரு சாமானியக் குழுவின் கிளர்ச்சியின் அவசரத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தை “பாராட்டி” ஒரு பகட்டான அறிக்கையை வெளியிட்ட UAW சங்கத் தலைவர் ஷான் ஃபெயின், ட்ரம்ப் நிர்வாகம் “இன்னும் ஆயிரக் கணக்கான வேலைகளை” உருவாக்கும் என்று கூறப்படும் சுங்கவரிகளைத் திணிப்பதன் மூலமாக “வரலாறு படைத்துள்ளது” என்று கூறினார். சுங்கவரிகள் தொழிலாள வர்க்கத்திற்கு ஆதாயமளிக்கும் என்ற பெயினின் வாதம் பொருளாதார ரீதியில் கல்வியறிவற்றது மட்டுமல்ல — அது ஒரு பிற்போக்குத்தனமான கற்பனையும் ஆகும்.

உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்துறையில், “அமெரிக்க” அல்லது “மெக்சிக்கன்” வாகனம் என்று எதுவும் இல்லை. பல தசாப்தங்களாக, வாகனத்துறை ஒரு பரந்த, பூகோள அளவிலான உற்பத்தி செயல்முறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சுங்க வரிகள் தொழிலாளர்களைப் பாதுகாக்காது; அவை பழிவாங்கலைத் தூண்டும். விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் பொருளாதாரச் சரிவு மற்றும் பாரிய பணிநீக்கங்களைத் தூண்டும். இது தொழிலாள வர்க்கத்தால் தடுத்து நிறுத்தப்படாவிட்டால், இந்தப் பாதை 1930களில் இருந்ததைப் போலவே, நேரடியாக வர்த்தகப் போருக்கும், இறுதியில் உலகப் போருக்கும் இட்டுச் செல்லும்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இந்த ஒப்புதலானது, பாசாங்குத்தனத்தின் துர்நாற்றத்தைக் கொண்டுள்ளது. UAW அதிகாரத்துவம் அமெரிக்காவிலோ அல்லது வேறு எங்கிலுமோ வாகனத் தொழிலாளர்களின் தலைவிதி பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ட்ரம்ப் “அடிமட்டத்தை நோக்கிய உலகளாவிய பந்தயத்தை” முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்று அது இப்போது கூறினாலும், அது “போட்டித்தன்மை” என்ற பெயரில் மில்லியன்கணக்கான வாகனத்துறை தொழிலாளர்களின் வேலைகளை அழிப்பதற்கு, கடந்த 45 ஆண்டுகளாக பெருநிறுவனங்களுடன் ஒத்துழைத்து வருகிறது.

ட்ரம்பின் நோக்கம் “அமெரிக்க” வேலைகளைப் பாதுகாப்பதல்ல, மாறாக உலகளாவிய சந்தைகள் மற்றும் வினியோக சங்கிலிகளில் மேலாதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய போருக்கு தயாரிப்பு செய்வதாகும். கிரீன்லாந்து, பனாமா மற்றும் கனடாவையும் இணைத்துக் கொள்வதற்கான வெளிப்படையான அச்சுறுத்தல்களுடன் ட்ரம்பினது வரிவிதிப்புக் கொள்கை கைகோர்த்து செல்கிறது. இது, ஆஸ்திரியா மற்றும் சுடெட்டன்லாந்தை இணைத்துக் கொள்வதற்கு, இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுத்த ஹிட்லரின் நாடகத்திலிருந்து நேரடியாக வரையப்பட்ட திட்டங்களாகும்.

இதை வெளிப்படையாக கூறுவதை ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கம் நிறுத்திக் கொள்கிறது என்றாலும், கனடா மற்றும் ஏனைய நாடுகளின் இணைப்பை தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆதரிக்கும் என்பதே கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அதன் அறிக்கையின் தவிர்க்கவியலாத முடிவாக உள்ளது.

UAW அதிகாரத்துவவாதிகள், அவர்களின் பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டை மூடிமறைக்கும் ஒரு பலவீனமான முயற்சியில், ஆயிரக் கணக்கானவர்கள் அவர்களின் வேலைகளை இழக்க நேரிடும் என்ற நிலையிலும் கூட, ட்ரம்பின் சுங்கவரிகள் ஏதோவிதத்தில் மெக்சிக்கன் வாகனத்துறை தொழிலாளர்களுக்கு ஆதாயமளிக்கும் என்று வாதிடுகின்றனர். யதார்த்தத்தில், அண்மித்து 200 ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டைவிரலின் கீழ் இருந்துவரும் மெக்சிகோவை நடைமுறையளவில் அமெரிக்காவின் காலனியாக மாற்றுவதற்கான அடித்தளத்தை இந்த கொள்கை களம் அமைக்கிறது.

சுங்கவரிகளுக்கான UAW அதிகாரத்துவத்தின் ஆதரவானது, சர்வதேச மாணவர்களை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்துவதுடன் சேர்ந்து, இலத்தீன் அமெரிக்காவின் புலம்பெயர்ந்தோரை ட்ரம்ப் இனவாத ரீதியில் பலிகடாவாக்குவதை நியாயப்படுத்தவும் சேவையாற்றுகிறது. இலக்கு வைக்கப்பட்டவர்களில் ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்க உறுப்பினரும் கொலம்பியா பட்டதாரி மாணவருமான மஹ்மூத் கலீலும் ஒருவராவார். இவர், தனது அரசியல் கண்ணோட்டங்களுக்காக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையால் கடத்தப்பட்டார். தொழிற்சங்க அதிகாரத்துவம் அவரையோ அல்லது போர் மற்றும் இனப்படுகொலையை எதிர்த்ததற்காக ஒடுக்குமுறையை முகங்கொடுக்கும் எவரையுமோ பாதுகாக்க ஒரு சுண்டு விரலைக் கூட உயர்த்தவில்லை.

ட்ரம்பை ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம் அரவணைத்தமை, பைடெனின் கீழ் யுத்தப் பொருளாதாரத்திற்கான அதிகாரத்துவத்தின் ஆதரவின் தொடர்ச்சியாகவும், ஆழமாகவும் உள்ளது. பைடெனே இழிவார்ந்த முறையில் தொழிற்சங்கங்களை அவரது “உள்நாட்டு நேட்டோ” என்று அழைத்து, ஏகாதிபத்திய போருக்கு தேசத்தைத் தயார்படுத்துவதில் அவை வகிக்கும் இன்றியமையாத பாத்திரத்தை எடுத்துக்காட்டினார். ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும் ட்ரம்பின் அடிப்படைக் கொள்கை இலக்குகளை அங்கீகரிக்கின்றன. ஜனநாயகக் கட்சியினர், உக்ரேனிலிருந்து விலகும் ட்ரம்பினது மூலோபாய மறுஒருமுனைப்பை மட்டுமே எதிர்க்கின்றனர்.

ட்ரம்பினது சுங்க வரிகளை ஆதரிக்க முடியும் என்றும், அதே நேரத்தில் அவரது நிகழ்ச்சி நிரலின் வேறு சில அம்சங்களை எதிர்க்க முடியும் என்றும் UAW அதிகாரத்துவம் கூறுகிறது. வியாழனன்று, UAW தொழிற்சங்கம் பல கூட்டாட்சி அரசுத் தொழிலாளர்களின் கூட்டு பேரம்பேசும் உரிமைகளை அகற்றுவதற்கான ட்ரம்பின் திட்டங்களுக்கு எதிரானதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது ஒருவர், யூதர்கள் மீதான நாஜக்களின் துன்புறுத்தலை எதிர்க்கும் அதே வேளையில், “உலகளாவிய வங்கியாளர்கள்” மற்றும் “விசுவாசமற்ற தொழிலதிபர்கள்” மீதான நாஜிக்களின் வாய்வீச்சு தாக்குதல்களை ஆதரிக்க முடியும் என்று கூறுவதைப் போன்று அபத்தமானதாகும்.

ட்ரம்புக்கு ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம் பாராட்டுவது ஒரு பரந்த நிகழ்வுபோக்கின் பாகமாகும். தொழிலாள வர்க்கம் மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் மீது ட்ரம்ப் முழுவீச்சிலான போரைத் தொடுத்து வருகின்ற நிலையில், தொழிற்சங்கங்கள் எதுவும் செய்யவில்லை. தாக்குதலை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் செயலூக்கத்துடன் அதற்கு வசதி செய்து கொடுக்கின்றனர். டீம்ஸ்டர் தொழிற்சங்கமானது, ட்ரம்புக்கு அதிக குரல் கொடுக்கும் ஆதரவு சங்கமாக உள்ளது. அதேவேளையில், ஒட்டுமொத்த AFL-CIO-வும் புதிய ஆட்சியுடன் “வேலை செய்ய” அதன் விருப்பத்தை அறிவிக்கிறது. ட்ரம்ப் சட்டவிரோதமாக ஒட்டுமொத்த துறைகளையும் கலைத்து, நூறாயிரக் கணக்கானவர்களை வேலையிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ள நிலையிலும் கூட, தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை கடிதம் எழுதும் பிரச்சாரங்களுடன் மட்டுப்படுத்தி வருகின்றன.

தொழிலாள வர்க்கமானது, தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்வதன் மூலம் மட்டுமே தன்னை ஒழுங்கமைத்துக் கொள்ள முடியும். ஏனெனில், தொழிற்சங்கத்தின் வருமானம் மற்றும் சலுகை பெற்ற சமூக அந்தஸ்து தொழிலாள வர்க்கத்தின் மீதான சுரண்டலை அடிப்படையாகக் கொண்டதுடன், அதிகாரத்துவத்துடனும், வணிகத்துடனும், அரசுடனும் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்படுவதை அது அடிப்படையாகக் கொண்டுள்ளது.

1930 களில் சோசலிஸ்டுகள் தலைமையிலான போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்களிலிருந்து பிறந்த தொழிற்சங்கங்களின் தோற்றம் முதல் அவற்றின் ஆழமான மாற்றத்தை, பாசிசத்திற்கான ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் ஆதரவு பிரதிபலிக்கிறது. 1985 வரை, அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள வாகனத்துறை தொழிலாளர்கள் இருவரும் UAW இன் உறுப்பினர்களாக இருந்தனர். இது, அந்த சமயத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை ஆதரிப்பது என்ற முற்றிலும் முறையான பாசாங்குத்தனத்தை பிரதிபலித்தது. ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் உயர்மட்ட தலைமை இப்போதும் “சர்வதேசம்” என்றே குறிப்பிடப்படுகிறது. இது ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த சாமானிய தொழிலாளர்களின் இடதுசாரி உணர்வின் ஒரு சொற்களஞ்சியமாக எஞ்சியுள்ளது.

இந்த மாற்றமானது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் வரலாறு மற்றும் சமூகக் கண்ணோட்டத்திலிருந்து ஊற்றெடுக்கிறது. கம்யூனிச-எதிர்ப்பு, தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தில் மூழ்கியுள்ள UAW மற்றும் ஏனைய ஒவ்வொரு தொழிற்சங்கத்தையும் நடத்தும் அதிகாரத்துவவாதிகள், “அமெரிக்கா முதலில்” என்ற சொற்றொடர் ட்ரம்பின் உதடுகளைக் கடந்து செல்வதற்கு வெகு காலத்திற்கு முன்னரே அதனை ஊக்குவித்து வந்தனர். 1980 களில், ஜப்பானிய வாகன இறக்குமதிக்கு எதிராக, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம் இனவெறித் தாக்குதல் பிரச்சாரங்களை நடத்தியது. இதன் உச்சக்கட்டமாக, சீன-அமெரிக்கரான வின்சென்ட் சின் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.

இது ஒரு உலகளாவிய நிகழ்ச்சிப்போக்காகும். ஜேர்மனியில் IG மெட்டல், பிரிட்டனில் தொழிற்சங்க காங்கிரஸ், கனடாவில் யுனிஃபொர் மற்றும் பிற தொழிற்சங்க கூட்டமைப்புகள் போருக்கான தயாரிப்பில் தத்தமது தேசியக் கொடிகளைச் சுற்றி அணிதிரண்டு வருகின்றன. சாதகமான பரிமாற்று விகிதம் அமெரிக்கர்களின் இழப்பில் “கனடிய” வேலைகளைப் பாதுகாக்க அனுமதிக்கும் என்ற கூற்றின் அடிப்படையில், 1985 இல் UAW உடனான தேசியவாத பிளவிலிருந்து Unifor வெளிப்பட்டது. இது, இப்போது ஒரு மோசடி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சாமானிய தொழிலாளர் கிளர்ச்சிகளின் அபிவிருத்தியைத் தடுப்பதில் லேபர் நோட்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் போன்ற அமைப்புகள் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. இந்த போலி-இடது குழுக்கள் ஃபெயினின் 2022 ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்க தலைவர் பதவிக்கான பிரச்சாரத்தின் போது, அவரை ஒரு ஜனநாயக “சீர்திருத்தவாதியாக” அலங்கரித்தன. அவர்களின் சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படுபவர் தன்னை ஒரு பாசிசவாதிகளின் கூட்டாளியாக வெளிப்படுத்திக் கொண்டது மட்டுமல்ல — அவர்கள் இந்தக் கொள்கையை உருவாக்கவும் உதவினர்!

லேபர் நோட்ஸ் இன் முன்னாள் ஆசிரியர்களான ஜோனா ஃபுர்மன் மற்றும் கிறிஸ் புரூக்ஸ் இப்போது தொழிற்சங்கத்தில் உயர்மட்ட பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்கள், ஒவ்வொருவரும் பெயின் தலைமையின் கீழ் ஆறு இலக்க சம்பளங்களைப் பெறுகின்றனர். தன்னுடைய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் லேபர் நோட்ஸ் ஒரு கருவியாக இருந்தது என்று பெயின் பாராட்டியுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் ஒரு பாகமாக செயல்படும் இந்தக் குழுக்கள், “இடதுசாரிகளே” அல்ல. மாறாக, இவர்கள் தொழிலாள வர்க்கத்தைக் கண்டு அஞ்சும் மற்றும் இழிவுபடுத்தும் உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற அடுக்குகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒழித்துக்கட்டுவதற்கும் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டியெழுப்புவதற்குமான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் UAW தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு சோசலிச வாகனத்துறை தொழிலாளரான வில் லேமனின் பிரச்சாரத்தை அவர்கள் எதிர்த்தனர். ஏனென்றால், அது தொழிலாள வர்க்கத்திற்கு வைக்கப்பட்டு வருகின்ற ஒரு புதிய பொறியையும், அத்துடன் வேலைவாய்ப்புக்கான அவர்களின் சொந்த வாய்ப்புகளையும் சீர்குலைப்பதற்கு அச்சுறுத்தியது.

21 ஆம் நூற்றாண்டில், தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த போராட்டத்தின் மூலம் மட்டுமே அதன் நலன்களைப் பாதுகாக்க முடியும்.

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை அழிக்கும் ஆளும் வர்க்கத்தின் முயற்சியால் பூகோளமயமாக்கல் பகுதியளவில் உந்தப்பட்டாலும், அது முதலாளித்துவத்தின் சொந்த சவக்குழி தோண்டுபவர்களையும் உருவாக்கியுள்ளது: அதாவது உலகளாவிய அளவில் தொழிலாள வர்க்கத்தின் விரிவாக்கம் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாகும். இந்த புறநிலை அபிவிருத்தியானது, முதலாளித்துவத்துடன் தொழிலாள வர்க்கம் சர்வதேச ரீதியில், ஒரு வரலாற்றுக் சிறப்புமிக்க கணக்கை தீர்த்துக் கொள்வதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.

இதற்கு சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். இது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமான போராட்டத்திற்கான புதிய பாதைகளை தொழிலாளர்களுக்கு உருவாக்கி வருகிறது. இது தொழிற்சங்க எந்திரத்தை சீர்திருத்துவது குறித்த கேள்வி அல்ல, மாறாக அதை ஒழித்துக்கட்டி அதிகாரத்தை மீண்டும் அடித்தளத்திலுள்ள தொழிலாளர்களுக்கு மாற்றுவதாகும்.

ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலையிடத்திலும், தொழில்துறையிலும் மற்றும் நாட்டிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, ஒரு சக்திவாய்ந்த சாமானிய தொழிலாளர் தொழில்துறை இயக்கம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ட்ரம்பின் தன்னலக்குழு அரசாங்கத்தை எதிர்க்கவும், தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், வேலைநிறுத்தங்கள் உட்பட பாசிச எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாராக வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய இயக்கத்தின் இந்த அபிவிருத்தியானது, ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதுடன் இணைக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தை வழிநடத்தும் இந்த மூலோபாயமானது “சொந்த” தன்னலக்குழுக்களுடன் ஐக்கியப்படுவதாக இருக்கக் கூடாது. மாறாக, வாகனத் தொழில்துறை, நிதியியல் அமைப்புமுறை மற்றும் அனைத்து பிரதான பெருநிறுவனங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து, அவற்றை தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொதுத்துறை பயன்பாடுகளாக மாற்றுவதாக இருக்க வேண்டும். இதுதான் சோசலிசத்தின் வேலைத்திட்டமாகும்.

Loading