மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள், பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக, ட்ரம்ப் நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பாசிச பயங்கரவாத ஆட்சிக்கு வசதியளிப்பதில் முற்றிலும் மோசமான பாத்திரத்தை வகித்து வருகின்றன.
ஒரு அரசியல் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான ட்ரம்பின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆரம்பத்தில் சர்வதேச மாணவர்களை குறிவைத்து, வெள்ளை மாளிகை மாணவர் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து வருகிறது. வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவின் கூற்றுப்படி, அரசியல் கருத்துக்களுக்காக ட்ரம்ப் நிர்வாகம் நூற்றுக்கணக்கான மாணவர்களின் விசாக்களை இரத்து செய்துள்ளது.
கடந்த வாரம், நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையிடம் இருந்து மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதில் அவர்களின் F-1 மாணவர் விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்படும் அபாயம் உள்ள நிலையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற நேரிடும் என்றும், அவர்கள் ஒருபோதும் நாட்டுக்குள் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல்கள் நிர்வாகத்தின் “கைது செய்தல் மற்றும் ரத்து செய்தல்” கொள்கையின் ஒரு பகுதியாகும். இதில் காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மற்றும் இஸ்ரேலிய அரசு கொள்கைகளை எதிர்க்கும் எவரையும் அடையாளம் காண, சமூக ஊடகக் கணக்குகளை கண்காணிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு திட்டமும் அடங்கும்.
சட்டபூர்வமான நிரந்தர குடியிருப்பாளரும் கொலம்பியா பல்கலைக்கழக பட்டதாரி மாணவருமான மஹ்மூத் கலீல் உட்பட டசின் கணக்கான மாணவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நாடுகடத்தலுக்காக தடுப்புக்காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். ஃபுல்பிரைட் அறிஞரும் டஃப்ட்ஸில் முனைவர் பட்டம் பெற்ற மாணவியுமான ருமேசா ஓஸ்ட்டுர்க், மற்றும் ஏழு வயதிலிருந்தே அமெரிக்காவில் வசித்து வருகின்ற தென் கொரியாவைச் சேர்ந்த நிரந்தர குடியிருப்பாளரான யுன்சியோ சுங், முகமூடி அணிந்த குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) முகவர்களால் பாஸ்டனின் தெருக்களில் இருந்து கடத்தப்பட்டனர்.
காம்பியாவை சேர்ந்த இங்கிலாந்து குடிமகனும் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மாணவருமான மொமோடு தால், இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதற்காகவும், ட்ரம்ப் நிர்வாகத்தின் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த ஒரு வழக்கிற்கு பழிவாங்கும் விதமாகவும், உடனடி தடுப்புக்காவல் மற்றும் நாடுகடத்தலை எதிர்கொள்கிறார்.
அரசின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போக, பல்கலைக்கழக திட்டங்களைத் திருத்துதல் மற்றும் அறிஞர்களை களையெடுப்பது உள்ளிட்ட அறிவுசார் மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் நாஜிக்களின் “ஒத்திசைக்கும்” (Gleichschaltung) ஒரு அமெரிக்க பதிப்பை ட்ரம்ப் செயல்படுத்துகிறார். நாஜிக்களின் வாஃபென் SS துருப்புக்களை போன்று அச்சுறுத்தல் கூட இல்லாமல், பல்கலைக்கழக நிர்வாகங்கள் ட்ரம்பின் கோரிக்கைகளை எளிதாக்கி, அதன் இளைய பங்காளிகளாகச் செயல்பட்டு வருகின்றன.
அமெரிக்க கல்வித்துறையின் உச்சம் என்று நீண்டகாலமாக கருதப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இந்தப் பொறுப்பை முன்னெடுத்து வருகிறது. கடந்த புதன்கிழமை, ஹார்வர்டின் மத்திய கிழக்கு ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் - செமல் கஃபாடர் மற்றும் ரோஸி பிஷீர் - முறையே அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக தெரியவந்தது.
இந்தப் பணிநீக்கங்களை சமூக அறிவியல் துறையின் இடைக்கால டீன் டேவிட் கட்லர் மேற்கொண்டார். அவர் இதற்கு எந்த பொது நியாயத்தையும் வழங்கவில்லை. ஹார்வர்ட் கிரிம்சன் மாணவர் செய்தித்தாள் தெரிவித்தபடி, பாலஸ்தீன நிறுவனங்களுடனான உறவுகளைத் துண்டித்து நிகழ்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழகம் மேற்கொண்ட முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த “பெரும் மாற்றங்கள்” ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், கொலம்பியா பல்கலைக்கழகம் அதன் மத்திய கிழக்கு, தெற்காசிய மற்றும் ஆபிரிக்க ஆய்வுகள் துறை மற்றும் அதன் பாலஸ்தீன ஆய்வுகள் மையம் ஆகியவற்றை நிர்வாக மதிப்பாய்வின் கீழ் வைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளின் பட்டியலுக்கு ஒப்புக்கொண்டது.
இதற்கிடையில் கோர்னெல் பல்கலைக்கழகம், அதன் மாணவர்களில் ஒருவரான மொமொடு தால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியாக உள்ளது. உண்மையில், கடந்த ஆண்டு காஸா இனப்படுகொலை எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக மொமொடு தாலை இடைநீக்கம் செய்ய முயற்சிப்பதன் மூலம், ட்ரம்ப் நிர்வாகம் அவரை நாடு கடத்துவதற்கான முயற்சிகளுக்கான நிலைமைகளை உருவாக்கியது.
கடந்த வார இறுதியில், ஒரு குழந்தை மருத்துவரும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் முன்னாள் சர்வதேசத் தலைவருமான டாக்டர் ஜோன் லியு, நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் வழங்கவிருந்த தனது விரிவுரை ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். காஸா படுகொலை பற்றிய குறிப்புகள் “யூத-விரோதமாகவும்”, சர்வதேச உதவித் திட்டங்கள் மீதான வெட்டுக்கள் “அரசாங்க விரோதமாகவும்” கருதப்படலாம் என்ற நிர்வாகக் கவலைகள் காரணமாக இது நிகழ்ந்தது.
இந்தப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்கள் பொதுவாக ஜனநாயகக் கட்சியால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றன. மேலும், அவை பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் பாரிய அறக்கட்டளைகளை மேற்பார்வையிடுவதுடன், பல சந்தர்ப்பங்களில் வருடத்திற்கு $1 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சம்பளம் பெறும் உபவேந்தர்களால் வழிநடத்தப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 53.2 பில்லியன் டாலர் நிதியுதவியைக் கொண்டுள்ளது, இது உலகிலேயே மிகப்பெரியது. அதே நேரத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நிதியுதவி 14.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.
பணம் சம்பாதிக்கும் எந்திரங்களாக இருக்கும் இந்த நிறுவனங்கள் கல்விக் கட்டணங்களை வசூலித்து, மாணவர்களை வாழ்நாள் முழுவதும் கடனில் ஆழ்த்துகின்றன. அதேவேளையில், தனியார் முதலீட்டு நிதிகள் மற்றும் தனியார் பங்குகளில் பிணைக்கப்பட்ட பில்லியன் கணக்கான நிதிகளை குவிக்கின்றன.
உபவேந்தர்களும், உயர்மட்ட நிர்வாகிகளும் பெயரைத் தவிர மற்ற அனைத்திலும் நிர்வாகிகள்தான். ஹார்வார்டின் உபவேந்தரான ஆலன் கார்பர் கிட்டத்தட்ட 1 மில்லியன் டாலர் சம்பளம் பெறுகிறார். மேலும் அவர், பல்வேறு மருந்து பெருநிறுவனங்களின் வாரியங்களில் பணியாற்றுவதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதித்துள்ளார்.
ட்ரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், கார்பரின் நிர்வாகம் மாணவர் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கியது. மிகவும் இழிவான முறையில் கடந்த ஆண்டு பட்டப்படிப்பின் போது இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக 13 இளங்கலை மாணவர்கள் தங்கள் டிப்ளோமாக்களைப் பெறுவதை அவரது நிர்வாகம் தடுத்தது.
இந்த நகர்வு ஆரம்பத்தில் கலை மற்றும் அறிவியல் பீடத்தால் ரத்து செய்யப்பட்டது. ஆனால், ஹார்வர்ட் கார்ப்பரேஷனால் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது. இந்த கார்ப்பரேஷன் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளாலும் மற்றும் பில்லியனர் பென்னி பிரிட்ஸ்கர் போன்ற ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களின் முன்னாள் உறுப்பினர்களாலும் நிரம்பியுள்ளது.
சர்வாதிகாரத்தை நோக்கிய மற்றும் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதை நோக்கிய திருப்பம் வெறுமனே டொனால்ட் ட்ரம்பின் தலையில் இருந்து எழவில்லை என்ற உண்மையை பல்கலைக்கழக நிர்வாகங்களின் நடவடிக்கைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது, ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் வடிவத்தில், அமெரிக்க சமூகத்தின் தன்னலக்குழுவின் தன்மையில் ஒரு செயல்முறையை அவர் உணர்ந்து வருகிறார். இந்த தன்மை அதன் அனைத்து நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது.
ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே எத்தகைய தந்திரோபாய பிளவுகள் இருந்தாலும், அவை அடிப்படைகளில் ஒன்றுபட்டுள்ளன. காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையில் இருந்து சீனாவுடனான போர் தயாரிப்புகள் வரையில், இவ்விரு கட்சிகளுமே உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பை ஆதரிக்கின்றன. இரண்டுமே உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான போருக்கு ஆதரவு கொடுக்கின்றன.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை முழுவதிலும், பைடென் நிர்வாகம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கியது. அதே நேரத்தில் மாணவர் போராட்டக்காரர்களை யூத எதிர்ப்பாளர்கள் என்று அவதூறு செய்தது. இப்போது, ட்ரம்ப் பெருந்திரளான நாடுகடத்தல்கள், கல்வித்துறை களையெடுப்புகள் மற்றும் ஒட்டுமொத்த துறைகளையும் கலைப்பது, ஆகியவற்றைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சியினர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி உடந்தையாக இருந்து வருகின்றனர்.
தொழிற்சங்க எந்திரம், அதன் பங்கிற்கு, பட்டதாரி மாணவர்களின் துன்புறுத்தலுக்கு —இவர்களில் பலர் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW), ஐக்கிய மின்சார தொழிலாளர்கள் சங்கம் (UE) மற்றும் பிற தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்களாக உள்ளனர்— எதிரான எதிர்ப்பைத் திரட்ட எதுவும் செய்யவில்லை. அதேபோல் தொழிலாள வர்க்கத்தின் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதலை எளிதாக்குவது ஒருபுறம் இருக்க, உண்மையில் அதனைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், புளோரிடாவில் வாக்குகளை எண்ணுவதை நிறுத்தி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷை அமெரிக்காவின் ஜனாதிபதியாக உச்ச நீதிமன்றம் தலையீடு செய்து நியமித்தது. அந்த நேரத்தில், உலக சோசலிச வலைத்தளம், “பாரம்பரிய முதலாளித்துவ-ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறுவதில், அமெரிக்க ஆளும் வர்க்கம் எவ்வளவு தூரமும் செல்லத் தயாராக உள்ளது என்பதை இந்த முடிவு வெளிப்படுத்தும்” என்று எச்சரித்தது. உச்ச நீதிமன்ற வழக்கின் முடிவும், ஜனநாயகக் கட்சியிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாததும், ஆளும் வர்க்கத்தில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குறிப்பிடத்தக்க தளம் இல்லை என்று WSWS குறிப்பிட்டது இன்று நிரூபனமாகியுள்ளது.
ட்ரம்ப் இப்போது ஒரு சர்வாதிகார கட்டமைப்பை எழுப்பி வருகின்ற நிலையில், அந்த எச்சரிக்கை முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய மற்றும் சர்வாதிகாரத்திற்குள் சரிவதை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும்.
பல்கலைக்கழக வளாகங்கள் மீதான ஒடுக்குமுறை தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதலில் இருந்து பிரிக்க முடியாததாகும். கூட்டாட்சி அரசு தொழிலாளர் ஒப்பந்தங்களை கிழித்து எறிந்து வருகின்ற ட்ரம்ப் நிர்வாகம், பெருநிறுவன இலாபங்களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தும் அரசு நிறுவனங்களில் களையெடுப்புகளை நடத்தி, பொதுக் கல்வியை தகர்த்து வருகிறது. மேலும் அது, சமூகப் பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் பிற சமூகத் திட்டங்கள் மீது பாரிய தாக்குதலைத் தொடுப்பதற்கு தயார் செய்து வருகிறது. மாணவர்கள் மீதான அடக்குமுறை, பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவிற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பிற்கும் எதிராக என்ன உருவாகி வருகிறது என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் பேச்சு சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்படுவதை எதிர்த்து பல்கலைக்கழக வளாகங்களிலும் வேலையிடங்களிலும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைக்கு எதிராகப் பேசியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட, பணிநீக்கம் செய்யப்பட்ட அல்லது மௌனமாக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்தவும், நாடுகடத்தப்படுவதற்காக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோருகிறோம்.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதும், போருக்கு எதிரான எதிர்ப்பும் பல்கலைக்கழக வளாகங்களில் மட்டும் நடத்தப்பட முடியாது. இதற்கு தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரட்டல் தேவைப்படுகிறது. மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கும் வேலையிடங்களுக்கும் பிரதிநிதிகள் குழுக்களை அனுப்ப வேண்டும். ட்ரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகளால் இலக்கில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் பாதுகாக்க, பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமாக, தொழிலாளர்கள் வேலை நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்ய வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு, நிதியியல் தன்னலக் குழுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக, போர், சர்வாதிகாரம் மற்றும் சமத்துவமின்மைக்கு ஆதாரமான முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப போராடி வருகின்றன. இந்த அடிப்படையில்தான் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். இந்த முன்னோக்குடன் உடன்படும் அனைவரையும் எமது இயக்கத்தில் இணைந்து இதற்கான போராட்டத்தை முன்னெடுக்குமாறு நாம் வலியுறுத்துகிறோம்.