முன்னோக்கு

ட்ரம்பின் பொருளாதாரப் போரின் பைத்தியக்காரத்தனமும் அவசியமான சோசலிச பதிலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள பங்குச் சந்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சித் திரையில் தோன்றுகிறார். ஏப்ரல் 3, 2025 [AP Photo/Michael Probst]

உலகின் பிற பகுதிகள் மீது —நண்பர்கள் ஆகட்டும் சரி எதிரிகள் ஆகட்டும்— ட்ரம்ப் நிர்வாகம் விதித்த கடுமையான சுங்கவரிகள் பொருளாதார பைத்தியக்காரத்தனம் என்று பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதுதான் உண்மையும் ஆகும்.

இவை “அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவை” என்ற பதாகையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, ட்ரம்பின் அறிவிப்புடன் வந்த வெள்ளை மாளிகையின் ஒற்றைப் பக்க ஆவணத்தின்படி, நிர்வாகத்தின் “வாசகம்” அல்ல, மாறாக “பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு முன்னுரிமை” ஆகும்.

இருப்பினும், உண்மையிலேயே “அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டவை” என்று அழைக்கப்படக்கூடிய அல்லது  தனியொரு நாட்டில் தயாரிக்கப்படும் எந்தப் பொருளும் உலகில் இல்லை. இன்று உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் மிக எளிமையான அன்றாட நுகர்வோர் பொருட்கள் தொடங்கி வாகனங்கள் மற்றும் கணினி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் மிக முன்னேறிய அபிவிருத்திகள் வரையில், சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார அமைப்பிற்குள் உலகளாவிய உற்பத்தி செயல்முறையின் விளைவாக உள்ளன.

இது மையக் கேள்வியை எழுப்புகிறது: இது பைத்தியக்காரத்தனம் என்றால் —இது தெளிவாகவே பைத்தியக்காரத்தனம்தான்— உலகிற்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் பொருளாதாரப் போரை எந்த சக்திகள் தூண்டி வருகின்றன? எதையும் விளக்காத மேலோட்டமான பதில் என்னவென்றால், இவை அனைத்தும் ஒரு தனிநபராக ட்ரம்பின் பைத்தியக்காரத்தனத்தின் விளைவு என்று கூறுவதாகும்.

வரலாறு இந்தக் கூற்றுக்கு பதிலளிக்கிறது. அடோல்ஃப் ஹிட்லர் பைத்தியக்காரத்தனமாகவும், மன உளைச்சலுடனும் இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், ஆழமான பொருளாதார மற்றும் அரசு நெருக்கடி காரணமாக அவர் ஜேர்மன் ஆளும் வர்க்கத்தால் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டார். அவர், ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கும், தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கும் ஆளும் வர்க்கத்தின் கருவியாக இருந்தார். அதுதான் ஒரே வழி என்று ஜேர்மன் ஆளும் வர்க்கமும் கருதியது.

அதேபோல், ட்ரம்ப் அதிகாரத்துக்கு உயர்ந்ததும் அவரது நடவடிக்கைகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழமான நெருக்கடியின் விளைபொருளாக உள்ளது.

1945 க்குப் பிறகு, முதன்மையாக அமெரிக்காவின் நடவடிக்கைகளின் கீழ் நிறுவப்பட்ட போருக்குப் பிந்தைய சர்வதேச வர்த்தக அமைப்பின் எச்சசொச்சங்களை ட்ரம்பின் நடவடிக்கைகள் சிதைத்துவிட்டன என்பது இப்போது பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஒழுங்கு, 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இரண்டு உலகப் போர்கள் மற்றும் பெருமந்த நிலை என்ற வடிவத்தில் வெடித்திருந்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளை நெறிப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. அத்தகைய நிலைமைகள் மீண்டும் திரும்புவது சோசலிசப் புரட்சியைத் தூண்டிவிடும் என்ற ஆளும் வர்க்கத்தின் அச்சம் அதன் ஸ்தாபகத்தின் அடித்தளத்தில் இருந்தது.

1930களின் சுங்கவரி மற்றும் செலாவணிப் போர்கள் - 1930 ஆம் ஆண்டு அமெரிக்க ஸ்மூட்-ஹாவ்லி சட்டத்தால் உருவகப்படுத்தப்பட்டவை - பெரும் மந்தநிலையை அதிகப்படுத்தியது மற்றும் இரண்டாம் உலகப் போருக்கான நிலைமைகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது என்பதை அங்கீகரிப்பது போருக்குப் பிந்தைய அமைப்பின் முக்கிய அம்சமாகும். உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்தியைக் கொண்டு பார்க்கையில், ட்ரம்பின் நடவடிக்கைகள் 95 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் வெகுதூரம் செல்கின்றன.

பொருளாதார ரீதியாக, போருக்குப் பிந்தைய தீர்வு அமெரிக்காவின் தொழில்துறை சக்தி மற்றும் திறனை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கடந்த 80 ஆண்டுகளில், இந்த ஆதிக்கம் படிப்படியாக அரிக்கப்பட்டு, தொடர்ச்சியான திருப்புமுனைகளால் குறிக்கப்படுகிறது.

1971 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிக்சன் அமெரிக்க டாலருக்கான தங்கத்தின் ஆதரவை நீக்கியபோது, ​​பிரெட்டன் வூட்ஸ் பண ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது மிக முக்கியமான திருப்புமுனைகளில் ஒன்றாகும். அமெரிக்காவின் வர்த்தக மற்றும் செலுத்துகை சமநிலையில் அதிகரித்து வந்த பற்றாக்குறை, அவுன்ஸ் ஒன்றுக்கு 35 டாலர் என்ற விகிதத்தில் டாலர்களை தங்கமாக மாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டை வாஷிங்டன் நிறைவேற்றுவதைத் தடுத்தது.

சர்வதேச நாணய மற்றும் வர்த்தக உறவுகளின் அடிப்படையாக டாலர் தொடர்ந்து செயல்பட்டது. ஆனால், இப்போது ஒரு காகித நாணயமாக, தங்கத்தின் வடிவத்தில் உண்மையான மதிப்பால் ஆதரிக்கப்படவில்லை. மாறாக, அமெரிக்க அரசின் அதிகாரத்தால் மட்டுமே ஆதரிக்கப்படுகிறது.

2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதியியல் நெருக்கடி, மற்றொரு தீர்க்கமான திருப்புமுனையைக் குறித்தது. அமெரிக்க அதிகாரத்தின் அடித்தளங்கள் புதைமணல் மீது தங்கியிருப்பதை அது வெளிப்படுத்தியது — பல தசாப்தங்களாக ஒட்டுண்ணித்தனம் மற்றும் ஊக வணிகத்தால் அழுகி, சிதைந்து, இலாபக் குவிப்புக்கான முதன்மை ஆதாரமாக தொழில்துறை உற்பத்தியை சீராக மாற்றியமைத்த நிதியியல் அமைப்பு, கிட்டத்தட்ட ஒரே இரவில் சரிந்து போகக்கூடும்.

1928 ஆம் ஆண்டில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சிக் காலத்தில், லியோன் ட்ரொட்ஸ்கி விளக்குகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கம், ஒரு செழிப்பு காலத்தில் அல்ல, மாறாக ஒரு நெருக்கடியான கால கட்டத்தில், அதன் சிரமங்கள் மற்றும் நோய்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கு, மிகவும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என்றார்.

இந்த “நோய்களும் சிரமங்களும்”, வெடித்துச் சிதறும் வர்த்தக பற்றாக்குறையில் — கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர்கள், 2023 ஐ விட 17 சதவீதம் அதிகம் — வெளிப்படுகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் அரசாங்கக் கடன், இப்போது 36 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. ஆண்டு வட்டி கணக்கு 1 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. டாலரின் ஸ்திரத்தன்மை குறித்த வளர்ந்து வரும் கவலைகள், தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கின்றன. தங்கத்தின் விலை தொடர்ந்து சாதனை அளவை எட்டியுள்ளது.

1930களில் இருந்ததைப் போலவே, இன்றைய பொருளாதார போரின் தர்க்கம் ஒரு புதிய உலகப் போரின் அபிவிருத்தியாக உள்ளது. 1934 இல், போர் மேகங்கள் திரண்ட போது, சுங்கவரிகள் பொருளாதாரரீதியில் பகுத்தறிவற்றவை என்றாலும், அவற்றுக்கு ஒரு திட்டவட்டமான தர்க்கம் இருந்தது என்பதை ட்ரொட்ஸ்கி அவதானித்தார்: அவை “ஒரு புதிய போருக்கான தயாரிப்புக்காக தேசத்தின் அத்தனை பொருளாதார சக்திகளின்” ஒன்றுகுவிப்பாக இருந்தன.

பொருளாதார சக்திகளின் தேசிய ஒன்றுகுவிப்பு தான் சுங்கவரி விதிப்புகள் மற்றும் ட்ரம்பின் நிர்வாக உத்தரவு மீதான வெள்ளை மாளிகையின் ஒற்றைப் பக்க ஆவணத்தின் மைய கருப்பொருளாக உள்ளது. இந்த ஆவணம் மீண்டும் மீண்டும் “தேசிய பாதுகாப்பு” மீதான கவலைகளை எழுப்புகிறது. அது, பாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்கான ஒரு நியாயப்படுத்தலாக போதுமான இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய அமெரிக்காவின் இயலாமையை வலியுறுத்துகிறது.

ட்ரம்ப் அவரது நிர்வாக உத்தரவில், “மிகப்பெரிய மற்றும் தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு வழமைக்கு மாறான மற்றும் அசாதாரண அச்சுறுத்தலாக அமைகின்றன” என்று அறிவித்தார்.

இந்தப் பற்றாக்குறைகள் “நமது உற்பத்தித் தளத்தை வெறுமையாக்க வழிவகுத்தன; மேம்பட்ட உள்நாட்டு உற்பத்தித் திறனை அளவிடுவதற்கான எமது திறனைத் தடுத்தன; முக்கியமான விநியோகச் சங்கிலிகளைக் குறைத்தன; மேலும் எமது பாதுகாப்பு-தொழில்துறை தளத்தை வெளிநாட்டு எதிரிகளைச் சார்ந்திருக்கச் செய்தன” என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தப் பிரச்சினையை வலியுறுத்தி, தொடர்ச்சியான வருடாந்திர பொருட்களின் வர்த்தக பற்றாக்குறை மற்றும் அதனுடன் தொடர்புடைய “தொழில்துறை திறன் இழப்பு ஆகியவை இராணுவத் தயார்நிலையை சமரசம் செய்துள்ளன” என்று அந்த ஆவணம் வலியுறுத்தியது. அமெரிக்காவிற்குள் இறக்குமதிகளின் பாய்ச்சலை மறுசமநிலைப்படுத்துவதற்கான விரைவான மற்றும் சரியான நடவடிக்கை மூலம் மட்டுமே இந்த “பாதிப்பை” நிவர்த்தி செய்ய முடியும் என்று அது அறிவித்தது.

பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட “வர்த்தக பங்காளிகள்” குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, வரிகளைக் குறைக்க முடியும் என்று ட்ரம்பின் ஒற்றைப் பக்க ஆவணம் அறிவித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால்: அமெரிக்க நலன்களுக்கு ஏற்ப செயல்படுங்கள், இல்லையெனில் நீங்கள் தொடர்ந்து சம்மட்டியால் தாக்கப்படுவீர்கள்.

சீனா முதன்மையான தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிடப்பட்டு, அதன் விரைவான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முக்கிய தடையாக முழு அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தாலும் பார்க்கப்படுவதால், இந்த சுங்கவரி ஆணைகளின் மைய நோக்கம், இதர சக்திகளை சீன எதிர்ப்பு பொருளாதார மற்றும் இராணுவத் தாக்குதலுக்குள் தள்ளுவதாகும்.

புதிய சுங்கவரி நிகழ்ச்சி நிரல் பெய்ஜிங்கின் மீதான சுங்கவரிகளை மொத்தம் 54 சதவீதமாக உயர்த்துகிறது —இது முந்தைய 20 சதவீத உயர்வுக்கு கூடுதலாக, “பரஸ்பர சுங்கவரிகள்” என்றழைக்கப்படுவதன் கீழ் 34 சதவீதமாகும். முந்தைய சகாப்தத்தில், இதுபோன்ற நடவடிக்கைகள்— இது சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு 2.3 சதவீத பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது ஒரு போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்றும் ப்ளூம்பெர்க் பத்திரிகை மதிப்பிடுகிறது.

பொருளாதாரப் போர் அமெரிக்க தொழிலாளருக்கு ஆதாயமளிக்கிறது என்ற —ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஏனைய பிரிவுகளின் ஆதரவுடன்— ட்ரம்பின் வலியுறுத்தல்களுக்கு இடையே, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் இந்த பொருளாதாரப் போர் இயக்கப்படுகிறது.

ட்ரம்ப் ஆட்சியின் மிகப்பெரிய பொய்களில் ஒன்று, சுங்கவரிகளை வெளிநாடுகள் செலுத்துகின்றன என்பதாகும். உண்மையில், அவை நுகர்வோர், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது மளிகைப் பொருட்களில் இருந்து நீடித்து உழைக்கும் பொருட்கள் வரையிலான பல்வேறு பொருட்களின் மீது அதிக விலைகள் என்ற வடிவத்தில் ஒரு பாரிய மறைமுக வரிகளால் செலுத்தப்படுகின்றன.

உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவது நல்ல ஊதியம் தரும் வேலைகளை உருவாக்கவும் அதிகரிக்கவும் வழிவகுக்காது. புதிய தொழிற்சாலைகள் மிகவும் அதிக தானியங்கி முறையில் இயங்கும், செலவுகளைக் குறைக்க முடிந்தவரை குறைவான தொழிலாளர்களைப் பணியமர்த்தும். போட்டி அழுத்தத்தின் கீழ், இது மேலும் வேலை வெட்டுக்களுக்கும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளில் சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கும் மட்டுமே வழிவகுக்கும்.

ட்ரம்பால் கட்டவிழ்த்து விடப்பட்டு வரும் உலகப் போர் ஐயத்திற்கிடமின்றி பைத்தியக்காரத்தனமாகும். ஆனால், இது “மன்னர் டொனால்ட்” இன் பைத்தியக்காரத்தனத்தின் விளைவு அல்ல. பூகோளரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்திக்கும், உலகம் போட்டி தேசிய அரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாட்டில் வேரூன்றியுள்ள முதலாளித்துவ அமைப்புமுறையின் பைத்தியக்காரத்தனத்தை இது வெளிப்படுத்துகிறது. இதில் உற்பத்தி சாதனங்களின் மீதான தனியார் சொத்துடைமை மற்றும் தனியார் இலாபம் வேரூன்றியிருக்கிறது.

இந்த முரண்பாடு அமெரிக்காவில் மிகவும் கூர்மையாக வெளிப்படுத்தப்படுகிறது. ஏனெனில், அது முதலில் பொருளாதாரப் போர் மூலமாகவும், பின்னர் ஒரு புதிய உலகப் போர் மூலமாகவும் தனது போட்டியாளர்களை நசுக்குவதன் மூலம் தனது நெருக்கடியைத் தீர்க்க முயல்கிறது.

ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளிடம் இருந்து அதிகரித்து வரும் ஆதரவுடன் ட்ரம்ப் ஒரு பாசிச ஆட்சியைக் கட்டமைக்க முனைகின்ற நிலையில், வேலைகள், ஊதியங்கள், சமூக நிலைமைகள் மீதான ஆழமடைந்து வரும் தாக்குதல்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அழிப்பது போன்ற வடிவங்களில் தொழிலாள வர்க்கம் அதே நெருக்கடியால் பாதிக்கப்படுகிறது.

தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான நலன்களுக்காக ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பதன் மூலம் அந்தப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும். சுங்க வரிவிதிப்புப் போரில் ஒருவர் எந்தப் பக்கத்தில் இருந்தாலும், எந்த வகையிலும் தனது “சொந்த” தேசிய ஆளும் வர்க்கத்துடன் தன்னை இணைத்துக் கொள்வது, வரலாறு காட்டியுள்ளபடி, பேரழிவுக்கான பாதையாகும்.

முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியை ஒரு முற்போக்கான முறையில் தீர்க்கும் வரலாற்றுப் பணியை தொழிலாளி வர்க்கம் கொண்டுள்ளது. இல்லாவிடில் அது காட்டுமிராண்டித்தனத்திற்குள் தள்ளப்படும். எனவே, ட்ரம்பின் சுங்கவரி விதிப்புப் போர், சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு அரசியல் போராட்டத்தைத் தொடங்குவதற்கான ஒரு ஊக்கியாகச் செயல்பட வேண்டும். நிகழ்வுகளின் வேகம், குறிப்பாக கடந்த வார நிகழ்வுகள், இழக்க நேரமில்லை என்பதைக் காட்டுகிறது.