மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
பாலஸ்தீன மக்களை அழித்து, இடம்பெயர்த்து, அவர்களின் நிலத்தை இணைக்கும் இனப்படுகொலை அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் குறித்த புதுப்பிப்பை வழங்குவதற்காக, ஒரு போர்க்குற்றவாளியான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை திங்களன்று வெள்ளை மாளிகைக்கு அவசரக் கூட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரவேற்றார்.
அவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக பத்திரிகையாளர் சந்திப்பில், பாலஸ்தீனியர்களை காஸாவில் இருந்து வெளியேற்றுவதற்கான ட்ரம்பின் “தைரியமான பார்வை” குறித்து இருவரும் கலந்துரையாடியதாக நெதன்யாகு கூறினார். “நாங்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்,” என்று இஸ்ரேலிய பிரதமர் கூறினார்.
“பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு இணக்கமாகவும் இருக்கக்கூடிய நாடுகளைப்” பற்றி கலந்துரையாடியதாக நெதன்யாகு கூறினார். இனச் சுத்திகரிப்பு திட்டம் குறித்து கேட்டபோது, ட்ரம்ப் பெருமிதத்துடன், “இப்போது மக்கள் அதை நகலெடுக்கிறார்கள். மக்கள் ட்ரம்ப்பின் திட்டத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்” என்று கூறினார்.
பிப்ரவரி 4 அன்று வாஷிங்டனில் நெதன்யாகுவுடன் நடந்த முந்தைய சந்திப்பில் காஸா பகுதியை “கையகப்படுத்தி” “சொந்தமாக்கிக் கொள்வதாக” ட்ரம்ப் அறிவித்த திட்டத்திற்கு நெதன்யாகு உண்மையில் “செயல்பட்டு வருகிறார்”. அமெரிக்க ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதற்கு மாறாக, ட்ரம்பின் திட்டம் வெறும் கனவு அல்ல. மாறாக, காஸாவில் இஸ்ரேலின் உண்மையான செயல்பாட்டு திட்டமாகும். இனச் சுத்திகரிப்புத் திட்டம் நான்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய கூறுகளைக் கொண்டுள்ளது:
- உணவு மற்றும் குடிநீர் மீதான தடையின் மூலம் பாலஸ்தீன மக்களை வேண்டுமென்றே பட்டினியில் ஆழ்த்துதல்.
- தினசரி குண்டுவீச்சு மற்றும் பொதுமக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டவரும் கூட்டுப் படுகொலைகள்.
- காஸா பகுதியை முழுமையாக இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பது.
- காஸாவில் எஞ்சியிருக்கும் முழு மக்களையும் வெளியேற்றுவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குதல்.
இந்த திட்டத்தின் ஒவ்வொரு கூறுகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம், ஜனவரி 19 போர்நிறுத்த விதிகளையும் மீறி, இஸ்ரேல் காஸாவிற்குள் உணவு, குடிநீர், மின்சாரம் என அனைத்தையும் முழுமையாகத் தடை செய்தது. ஒரு மாதத்திற்கு மேலாக மனிதாபிமான பொருட்கள் எதுவும் இப்பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை, காஸாவில் மீதமுள்ள அனைத்து வெதுப்பகங்களையும் மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
வேண்டுமென்றே, மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தின் உருவாக்கம், பொதுமக்கள் மீது தினசரி பயங்கரவாத குண்டுவீச்சுடன் சேர்ந்துள்ளது. கடந்த மாதம், இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது ஒரு புதிய வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலுடன் முழு அளவிலான விசாரணையற்ற மரணதண்டனைகளும் இடம்பெற்றுள்ளன. மார்ச் 23 அன்று, இஸ்ரேலியப் படைகள் தெளிவாக அடையாளம் காணப்பட்ட 15 பாலஸ்தீனிய உதவிப் பணியாளர்களைத் திட்டமிட்டு சுட்டுக் கொன்றன. அவர்களில் பாலஸ்தீனிய செம்பிறை சங்கத்தின் பல உறுப்பினர்களும், குறைந்தது ஒரு ஐக்கிய நாடுகள் சபை ஊழியரும் அடங்குவர். அடுத்தடுத்து வந்த விசாரணைகளில், கொல்லப்பட்டவர்கள் மீது மிக அருகில் இருந்து பலமுறை துப்பாக்கி பிரயோகம் மேற்றகொள்ளப்பட்டதாகவும், மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு பலரைக் கட்டி வைத்ததுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் தெரியவந்தது.
கடந்த திங்களன்று, ஒரு ஊடக கூடாரத்தின் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு பத்திரிகையாளர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர தாக்குதலின் காட்சிகள் உலகெங்கிலும் அதிர்ச்சியையும் சீற்றத்தையும் தூண்டின.
காஸாவில் இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல், முந்தைய ஊடுருவல்களைப் போல், ஒரு தற்காலிக நடவடிக்கையாக காட்டப்படவில்லை. இது நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்கான தயாரிப்பாகும். கடந்த மாதம், NPR, பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ஹாரெட்ஸ் ஆகிய ஊடகங்கள், இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து, மீதமுள்ள மக்களை உள்நாட்டில் இடம்பெயர்த்து, ஹாரெட்ஸின் வார்த்தைகளில் “உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்ச கலோரி தேவைகளை” மட்டுமே வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக செய்திகளை வெளியிட்டன.
காஸாவில் முழு இராணுவ ஆக்கிரமிப்பும், அதன் மக்களை உள்நாட்டிலிருந்து இடம்பெயரச் செய்வதுக்கு, அப்பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை கட்டாயமாக வெளியேற்றுவதற்கு அவசியமான முன்நிபந்தனைகள் ஆகும்.
மார்ச் 23 அன்று, இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரிசபை முறையாக காஸா இனச்சுத்திகரிப்பை மேற்பார்வையிடுவதற்கான ஒரு பணியகத்தை நிறுவுவதற்கு வாக்களிததுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்த பணியகத்தை நிர்வகிப்பது தொடர்பாக கூறுகையில்,
மூன்றாம் நாடுகளுக்கான பயணங்களுக்கான பாதைகளை பாதுகாப்பாக நிறுவுவது, காஸா பகுதியில் துண்டாடப்பட்ட பகுதிகளில் பாதசாரிகளை பரிசோதனை செய்தல், மேலும் இலக்கு நாடுகளுக்கு நிலம், கடல் மற்றும் வான் வழியாகச் செல்ல உதவும் உள்கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதன் செயற்பாட்டில் அடங்கும்.
பாலஸ்தீனத்தின் இனச்சுத்திகரிப்புக்கான அமெரிக்க-இஸ்ரேலிய திட்டம் ஒரு போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் அமைதிக்கு எதிரான குற்றம் ஆகும். இது ஆயுத மோதல்களின் போது பொதுமக்களை பலவந்தமாக இடமாற்றம் செய்வதை தடைசெய்யும் நான்காவது ஜெனீவா உடன்படிக்கையை அப்பட்டமாக மீறுகிறது.
பாலஸ்தீனிய நிலத்தை திருடுவதற்கான ட்ரம்பின் திட்டம், அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகள் மீதான 1970 ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தையும் மீறிச் செல்கிறது.
அந்தப் பிரகடனம் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது:
ஒரு நாட்டின் பிரதேசத்தின் மீது மற்றொரு நாடு அச்சுறுத்தல் விடுவதும் அல்லது பலத்தைப் பயன்படுத்துவதன் விளைவாக கையகப்படுத்தவும் கூடாது.
நவம்பர் 2024 இல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக நெதன்யாகுவுக்கு கைது வாரண்டுக்கு ஒப்புதல் அளித்தது.
ஹங்கேரி பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன் உடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, நெதன்யாகு அங்கிருந்து அமெரிக்காவிற்கு பயணித்தார். கடந்த வியாழனன்று நெதன்யாகு ஹங்கேரியில் தரையிறங்கிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதன்யாகுவை கைது செய்து ஹேக்கில் உள்ள அதன் தடுப்புக்காவல் மையத்தில் ஒப்படைக்குமாறு ஹங்கேரிய அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோளை அனுப்பியது, அதை ஹங்கேரிய அரசாங்கம் மறுத்தது.
ஹங்கேரியை விட்டு அவர் வெளியேறிய பிறகு, “அவசரமாக தரையிறங்கினால் ஐ.சி.சி கைது வாரண்டை செயல்படுத்தக்கூடிய நாடுகளின் மீது பறப்பதைத் தவிர்ப்பதற்காக நெதன்யாகுவின் விமானம் சுமார் 400 கிலோமீட்டர் (248 மைல்கள்) நீண்ட பாதையில் பயணித்ததாக” ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தாக்குதலின் மையக் கூறுகளில் ஒன்றாக, காஸா மீதான இனச்சுத்திகரிப்பு உள்ளது. இது அமெரிக்கா அப்பிராந்தியத்தில் முழுமையான மேலாதிக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த மாதத்திலிருந்து யேமன் மீது கிட்டத்தட்ட தினசரி வான்வழித் தாக்குதல்களை ட்ரம்ப் நடத்தி வருகிறார். மேலும், ஈரானைத் தாக்கும் தூரத்திற்குள் விமானம் தாங்கிக் கப்பல்கள், நாசகாரி கப்பல்கள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களை அவர் நிறுத்தியுள்ளார். சமீபத்திய அறிக்கையில், ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்காவிட்டால், “இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் குண்டுவீச்சுக்களுக்கு முகம்கொடுக்கும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
காஸாவை இனரீதியில் சுத்திகரிப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம், அதன் சர்வதேச மற்றும் உள்நாட்டு வேலைத்திட்டம் இரண்டினதும் ஒரு மைய அச்சாகும். முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் மற்றும் பரவலான நெருக்கடிக்கு இடையே, அமெரிக்க ஆளும் வர்க்கம் வெளிநாடுகள் மீது ஏகாதிபத்திய போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாளர்களை ஒடுக்குவது மற்றும் சுரண்டுவதை தீவிரப்படுத்துவதன் மூலமாக, அதன் வர்க்க ஆட்சியின் மிருகத்தனத்தில் எஞ்சியிருக்கும் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் கைவிட்டுள்ளது.
உள்நாட்டில் சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வும், வெளிநாடுகளில் இனப்படுகொலை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அமெரிக்க முதலாளித்துவத்தின் அடிப்படைப் போக்குகளை வெளிப்படுத்துகின்றன. ஒரு குற்றகரமான நிதியியல் தன்னலக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ட்ரம்ப் நிர்வாகம், அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான திட்டமிட்ட சதியில் ஈடுபட்டுள்ளது. ஏகாதிபத்திய போரை நடத்துவதிலும் சரி, உள்நாட்டில் எதிர்ப்பை வன்முறையாக ஒடுக்குவதிலும் சரி, காஸா மீதான நெதன்யாகுவின் நடவடிக்கைகளை, ட்ரம்ப் நிர்வாகம் முன்மாதிரியாக பார்க்கிறது.
ஜனநாயகக் கட்சி ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு எதிர்க்கட்சி அல்ல — ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலிலும் மற்றும் வெளிநாடுகளில் ஏகாதிபத்திய வன்முறையான தாக்குதலிலும் அது ஒரு இன்றியமையாத பங்காளியாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம், பைடென் பல்கலைக்கழக வளாகங்களில் இடம்பெற்ற வன்முறையற்ற ஆர்ப்பாட்டங்களை —காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவை எதிர்த்ததை— “யூத-எதிர்ப்பு” மற்றும் “சட்டத்திற்கு எதிரானது” என்று முத்திரை குத்தினார். கடந்த வாரம், செனட்டில் உள்ள பரந்த பெரும்பான்மை ஜனநாயகக் கட்சியினர் இஸ்ரேலிய ஆட்சிக்கு இன்னும் 9 பில்லியன் டாலர் ஆயுதங்களை அனுப்பும் சட்டமசோதாவை முன்னெடுக்க வாக்களித்தனர்.
சமூக வேலைத்திட்டங்கள் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல், பாரிய வேலைநீக்கங்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் காஸா இனப்படுகொலைக்கு ட்ரம்ப் ஆதரவளித்து வருவது ஆகியவற்றிற்கு எதிரான பரந்த எதிர்ப்பைப் பிரதிபலிக்கும் வகையில், அமெரிக்கா எங்கிலுமான நகரங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நடத்திய போராட்டங்கள் வெடித்து வெறும் ஒருசில நாட்களுக்குப் பின்னர், நெதன்யாகு உடனான ட்ரம்பின் சந்திப்பு நிகழ்ந்தது. காஸா மீதான இனச் சுத்திகரிப்பைத் தீவிரப்படுத்துவதும், அதை எதிர்ப்பவர்கள் மீதான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதுமே ட்ரம்பின் விடையிறுப்பாக உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக, ட்ரம்ப் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை துன்புறுத்துவதை இலக்காக வைத்துள்ளார். கொலம்பியா பல்கலைக்கழக மாணவர் மஹ்மூத் கலீலை அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையினர் (ICE) தடுப்புக்காவலில் பிடித்து வைத்துள்ளனர். மாணவர் மொமோடூ தால் உட்பட மற்றவர்களை கைது அச்சுறுத்தலின் கீழ் நாட்டை விட்டு வெளியேற ட்ரம்ப் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்த உள்நாட்டு அடக்குமுறையானது, வெளிநாடுகளில் போர் மற்றும் உள்நாட்டில் சர்வாதிகாரம் என்ற ஒருங்கிணைந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான பரந்த போராட்டமும் பாரிய வேலைநீக்கங்கள், வர்த்தகப் போர்க் கொள்கைகள் மற்றும் அடிப்படையான சமூக வேலைத்திட்டங்களை அழிப்பது ஆகியவற்றிற்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பில் இருந்து பிரிக்கவியலாததாகும். அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து இரண்டே நாட்களுக்குப் பின்னர், பாலஸ்தீனிய தொழிலாளர்கள் காஸாவில் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஒற்றுமையுடன் மேற்குக் கரை எங்கிலும் ஒரு பொது வேலைநிறுத்தத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இனப்படுகொலைக்கு எதிரான போராட்டமானது, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலை எதிர்ப்பதற்கான போராட்டத்துடன் இணைந்து, தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய இயக்கமாக அபிவிருத்தி அடைய வேண்டும். இதற்கு நிதியியல் செல்வந்த தட்டுக்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வது, தொழிலாளர்களின் அதிகாரத்தை ஸ்தாபிப்பது, மற்றும் சோசலிசத்தின் அடிப்படையில் சமூகத்தை மறுஒழுங்கமைப்பு செய்வது என்ற ஒரு தெளிவான மற்றும் நனவுபூர்வமான அரசியல் வேலைத்திட்டம் அவசியப்படுகிறது.