மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
காஸாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையை எதிர்த்ததற்காக கொலம்பியா பட்டதாரி மாணவரும் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளருமான மஹ்மூத் கலீலுக்கு எதிராக நாடுகடத்தும் முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் தொடரலாம் என்று லூசியானாவில் உள்ள நிர்வாக குடிவரவு நீதிபதி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
நீதித்துறையின் ஒரு ஊழியரான நீதிபதி ஜேமி கோமன்ஸ், கலீலுக்கும் அவரது வழக்கறிஞர்களுக்கும் ஏப்ரல் 23 வரை விடுதலைக்கான கோரிக்கைக்கான மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்தார். அதன் பிறகு கலீல் சிரியா அல்லது அல்ஜீரியாவுக்கு கொண்டு செல்லப்படுவார். கலீல் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவதைத் தடுக்க நியூ ஜெர்சியில் சட்ட நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரம்ப் நிர்வாகம் கலீலை கடத்தி, தடுத்து வைத்து, நாடு கடத்த முயல்கிறது. இது, எந்தவொரு குற்றச் செயலுக்காகவும் அல்ல, மாறாக அவரது அரசியல் கருத்துக்கள் மற்றும் பேச்சுக்காக மட்டுமே மேள்கொள்ளப்படுகிறது. சர்வாதிகாரத்திற்கான தனது உந்துதலில், பாசிச ட்ரம்ப் அமெரிக்காவில் எஞ்சியிருக்கும் ஜனநாயக உரிமைகளை – எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு சுதந்திர உரிமையை - நசுக்க முயற்சிக்கிறார். மேலும், புலம்பெயர்ந்த மாணவர்கள் மீதான தாக்குதலை உச்சத்தில் வைத்துள்ளார்.
கடந்த வாரம் வெளியுறவுத்துறை சமர்ப்பித்த ஒரு குறிப்பில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கலீலின் கடந்த கால, தற்போதைய அல்லது எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கைகள், அறிக்கைகள் அல்லது சட்டப்பூர்வமான சங்கங்கள் காரணமாக அவரை நாடு கடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது.) அத்தகைய கருத்துக்கள் -அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நலன்களுக்கு முரணாகக் கருதப்பட்டால்- நாடுகடத்தப்படுவதற்கான காரணங்களை உருவாக்கும் என்று அந்தக் குறிப்பு கூறுகிறது. கலீல் அமெரிக்காவில் இருப்பது, “அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆர்வத்தை சமரசம் செய்யும்” என்று ரூபியோ கூறினார்.
அதாவது, 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய போர்க்குற்றமான காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலையை எதிர்த்து “கருத்தை வெளியிட்ட குற்றத்திற்காக” விசாக்கள் ரத்து செய்யப்பட்ட அமெரிக்காவில் உள்ள கலீல் மற்றும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களை ட்ரம்ப் தண்டிக்க முயல்கிறார் - இந்த நிலைப்பாட்டை அரசாங்கம் “யூத-எதிர்ப்புவாத” நிலைப்பாடு என்று கூறுகிறது.
1950 களில் கம்யூனிஸ்டுகள் மீதான மெக்கார்த்தியிச சூனிய வேட்டைகள் மற்றும் 9/11 க்குப் பிந்தைய சிவில் சுதந்திரங்கள் மீதான தாக்குதலில் உருவாக்கிய புலம்பெயர்வு மற்றும் குடியுரிமை சட்டத்தில் (INA) அரிதாகவே பயன்படுத்தப்படும் துணைப்பிரிவை ரூபியோ இதற்கு பயன்படுத்தியுள்ளார். அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு அரசியலமைப்பின் முதல் திருத்த உரிமைகள் இல்லை மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் எந்த அறிக்கைகளையும் வெளியிட முடியாது என்ற முன்னொருபோதும் இல்லாத வலியுறுத்தலைச் செய்ய இது இப்போது பயன்படுத்தப்படுகிறது.
வெளியுறவுக் கொள்கையில் “நம்பிக்கைகள்” மட்டுமல்ல, “எதிர்பார்க்கப்படும் நம்பிக்கைகளும் தீங்கு விளைவிக்கும்” என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இது, அரசியலமைப்பின் முதலாம் திருத்தத்தை மீறுவதையும் தாண்டி, பேச்சை மட்டுமல்ல, சிந்தனையையும் மற்றும் சிந்தனைக்கான ஆற்றலையும் குற்றமாக்குகிறது. ஜேம்ஸ் மேடிசன் கூறியது போல், “மனசாட்சிதான் அனைத்து உரிமைகளிலும் மிகவும் புனிதமானது” என்று நம்பிய அமெரிக்க குடியரசின் நிறுவனர்களை வழிநடத்திய கொள்கைகளை இந்தக் கூற்று முழுமையாக நிராகரிப்பதாகும்.
இந்தக் கட்டமைப்பிற்குள், கருத்துச் சுதந்திரம் என்பது அரசாங்கத்தின் கொள்கைகளுடன், உண்மையில் ட்ரம்பின் கொள்கைகளுடன் உடன்படுவதற்கான சுதந்திரமாக மாறுகிறது. இது அரசாங்கத்தை எதிர்ப்பது சட்டவிரோதமானது என்று வரலாறு முழுவதும் ஒவ்வொரு சர்வாதிகாரிகளாலும் ஆதரிக்கப்படும் ஒரு கொள்கையாகும்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்குவதற்கான முன்னுதாரணத்தை நிறுவியவுடன், அதை எல்லாவற்றிலும், எல்லோருக்கும் எதிராக பயன்படுத்தலாம். அரசாங்கம் தனது நலன்களுக்கு அமெரிக்க நிறுவனங்களின் லாபம் தேவை என்றும், எனவே தனிப்பட்ட நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் சட்டவிரோதமானது என்றும் அறிவிக்க முயற்சிக்கும்.
டரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடுகளுக்கு நேரடி முன்னுதாரணமாக அடோல்ஃப் ஹிட்லரின் நாஜி ஆட்சியால் உருவாக்கப்பட்ட, விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்பு மக்களை “தண்டனைக்கு உரியவர்கள்” என்று அறிவிக்கும் கருத்தும் உள்ளது. இந்த அமைப்பின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் விசுவாசமின்மையை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனநிலையை வெளிப்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம்.
அமெரிக்க கொள்கையை எதிர்ப்பதற்காக இலக்கு வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் வளர்ந்து வரும் பட்டியலில் கலீலின் வழக்கு மிக முக்கியமானது ஆகும். இந்த பாசிச அடித்தளங்களில் இதேபோன்ற துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பிற மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் விபரம் பின்வருமாறு:
- இனப்படுகொலை இடம்பெறுவதை Tufts பல்கலைக்கழகம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு ஆதரிப்பதிலிருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி ஒரு கட்டுரையை இணைந்து எழுதியதற்காக Tufts பல்கலைக்கழக மாணவி ருமேசா ஓஸ்டுர்க் முகமூடி அணிந்த அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் லூசியானாவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
- கோர்னெல் பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவரும் பிரிட்டிஷ்-காம்பியன் குடிமகனுமான மொமோடூ தால், பேச்சு சுதந்திரத்தை மீறும் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு சட்டப்பூர்வமாக சவால் செய்ததிற்காக, ட்ரம்ப் நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
- சர்வதேச சட்ட அறிஞரான டாக்டர் ஹெலியே டௌடாகி, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சியோனிச சார்பு வெளியீட்டின் தவறான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, யேல் சட்டக் கல்லூரியால் உரிய நடைமுறை இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- ட்ரம்பின் அறிவியல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை விமர்சிக்கும் தனிப்பட்ட செய்திகளை எல்லை முகவர்கள் அவரது செல்போனில் பார்த்ததால், ஒரு பிரெஞ்சு விஞ்ஞானிக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ட்ரம்ப் நிர்வாகம் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டத்தைப் பின்பற்றுகிறது. லூசியானாவில் கலீல் தொடர்பான முடிவு வெளியிடப்பட்ட அதே நாளில், எல் சால்வடாரில் உள்ள ஒரு பயங்கரவாத சிறையில் இருந்து அப்ரிகோ கார்சியாவை திருப்பி அனுப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் எந்த தகவலையும் வெளியிடாது என்று நிர்வாக வழக்கறிஞர்கள் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அன்னிய எதிரிகள் சட்டத்தின் கீழ் நாடுகடத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை வெள்ளை மாளிகை அப்பட்டமாக மீறிய பின்னர், கடந்த மாதம் எல் சால்வடோருக்கு கொண்டு செல்லப்பட்ட அப்ரெகோ கார்சியாவை திருப்பி அனுப்புவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் “வசதி செய்ய” வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்தது. (முந்தைய தீர்ப்பில், இந்தச் சட்டத்தின் கீழ் நாடுகடத்தப்படுவது தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.)
கடந்த வியாழக்கிழமை உச்ச நீதிமன்ற தீர்ப்புடன் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நீதிபதிகள் சோனியா சோடோமேயர், எலெனா காகன் மற்றும் கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் ஆகியோர் பின்வருமாறு எச்சரித்தனர்:
மேலும், அரசாங்கம் முன்வைக்கும் வாதம், அமெரிக்க குடிமக்கள் உட்பட எந்தவொரு நபரையும், ஒரு நீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பு அவ்வாறு செய்தால், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் இல்லாமல் நாடு கடத்தி சிறையில் அடைக்க முடியும் என்பதை மறைமுகமாக குறிக்கிறது.
உண்மையில், ட்ரம்பும் அவரது பாசிச கூட்டாளிகளும் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க குடிமக்களை, அப்ரிகோ கார்சியாவும் மற்றவர்களும் காணாமல் போன அதே எல் சால்வடோர் சிறைக்கு நாடு கடத்துவது குறித்து வெளிப்படையாக பரிசீலித்து வருகின்றனர்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் ஏற்கனவே 1807 ஆம் ஆண்டு கிளர்ச்சிச் சட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து பரிசீலிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது அமெரிக்க துருப்புக்களை மக்களுக்கு எதிராக நிறுத்த அனுமதிக்கும். மேலும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் ஜனாதிபதிக்கு அறிக்கை அளிப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கம் —உள்நாட்டில் பிறந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் ஆகட்டும்— கலீல் மற்றும் மற்றவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அரசியலமைப்பின் முதல் திருத்தம் அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களின் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது. குடிமக்கள் அல்லாதவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டால், அது குடிமக்களுக்கும் மறுக்கப்படுகிறது. இதனால், முதலாவது திருத்தமும் ஒட்டுமொத்தமாக அரசியலமைப்பும் உயிரற்ற காகிதமாக மாறிவிடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலில் இது ஒரு தீர்க்கமான கட்டமாகும்.
ட்ரம்பின் பாசிச சர்வாதிகார முனைவு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகக் கட்சி எதிர்க்கப் போவதில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் இது ட்ரம்பின் செயல்களுக்கு வழிவகுத்துள்ளதோடு, மாணவர்கள் மீதான அவரது தாக்குதலுக்கு களம் அமைத்து, அவரது அரசாங்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கான சட்டத்தை இயற்றுவதில் ஒத்துழைக்கிறது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கின் மேற்பார்வையில் உள்ள அரசாங்க செயல்திறன் துறை (DOGE), பல்லாயிரக்கணக்கான கூட்டாட்சி அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு அவர்கள் ட்ரம்பிற்கு உதவியுள்ளனர்.
காஸா இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பைடென் நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பொலிஸாரால் கொடூரமாக நசுக்கப்பட்டன. இந்தப் போராட்டங்களில், பல யூத மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பங்கேற்பு இருந்தபோதிலும், போராட்டங்கள் யூத மாணவர்களுக்கு அச்சுறுத்தல் என்ற கூற்றை ஜனநாயகக் கட்சியினர் முன்வைத்தனர். இந்த வழியில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தனர்.
ஒரு பாசிச சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளை எதிர்த்து மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கிய ஏப்ரல் 5 ஆர்ப்பாட்டங்கள் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தன. ஜனநாயகக் கட்சியினரும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் ட்ரம்ப் வெல்ல முடியாதவர் என்றும், அவரைத் தடுக்க எதையும் செய்ய இயலாது என்றும் அதிகாரப்பூர்வமான எடுத்த நிலைப்பாட்டை இந்த ஆர்ப்பாட்டங்கள் தகர்த்தெறிந்தன.
தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ட்ரம்ப் மற்றும் பாசிசத்திற்கு எதிராக பெருமளவில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சியினரும் தொழிற்சங்கங்களும் அதற்குத் தடையாக நிற்கின்றன. இந்த சக்திவாய்ந்த, ஆனால் ஆரம்ப எதிர்ப்பின் வெளிப்பாடு, பாசிசம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் இறுதி ஆதாரமான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தால், அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு நனவான மற்றும் சுயாதீனமான இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்தின் எழுச்சியை எதிர்க்கவும் ஒரு பாரிய தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் இணைய விரும்பும் அனைவரையும் எங்கள் கட்சியில் சேர்ந்து சோசலிசத்திற்கான போராட்டத்தில் ஈடுபடுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.