மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாயன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், சான் டியாகோ அரசு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறையின் பேராசிரியர் இமானுவல் சாக்கரெல்லியுடன் “இது இங்கே நடக்கிறது: 1933 ஆம் ஆண்டு ஜேர்மனியிலும் மற்றும் இன்றைய பாசிசம்.” என்ற தலைப்பில், ஒரு சரியான நேரத்தில் அவசரமான கலந்துரையாடலில் பங்கேற்றார்.
அமெரிக்காவில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ ட்ரம்ப் நிர்வாகம் அதிகளவு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு மத்தியில், டேவிட் நோர்த் வழங்கிய நேர்காணல் முழுவதும், பாசிசம் பற்றிய மார்க்சிய புரிதல், ஹிட்லரின் எழுச்சிக்கு வழிவகுத்த வரலாற்று செயல்முறைகள், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பாத்திரம் மற்றும் இன்றைய காலகட்டத்தில் இந்தப் படிப்பினைகளின் பொருத்தப்பாடு ஆகியவற்றை தெளிவுபடுத்தும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.
பாசிசம் பற்றிய கலந்துரையாடல் இனி வெறும் வரலாற்றுப்பூர்வமானது அல்ல, மாறாக அமெரிக்கா பாசிசத்தை எதிர்கொள்கிறதா என்றும் அதன் முன்னேற்றத்தைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் பலர் இப்போது கேட்டு வருவதால், அது “தீவிரமான சமகால பொருத்தத்தைப் பெற்றுள்ள கலந்துரையாடல்” என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அரசியல் வாழ்வில் நுழையும் ஒரு புதிய தலைமுறைக்கு பாசிசத்தை வரையறுக்குமாறு சாக்கரெல்லியால் கேட்கப்பட்ட போது, நோர்த் 1917 ரஷ்யப் புரட்சிக்குப் பிந்தைய காலத்திலும், முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த தொழிலாள வர்க்க தீவிரமயமாக்கல் அலையிலும் பாசிசத்தின் தோற்றுவாய்களை ஆராய்ந்து, ஒரு விஞ்ஞானபூர்வ மற்றும் வரலாற்று புரிதலின் அவசியத்தை வலியுறுத்தினார்.
பெரு முதலாளித்துவ வர்க்கத்திற்கு சேவை செய்வதற்காக, தொழிலாள வர்க்கத்தின் அமைப்புகளை நசுக்க, குட்டி முதலாளித்துவ வர்க்கத்தையும், விரக்தியடைந்த தொழிலாளர்களையும், லும்பன் கூறுகளையும் அணிதிரட்டி, பாசிசம் ஒரு வெகுஜன இயக்கமாக எழுந்தது என்பதை அவர் வலியுறுத்தினார்.
இத்தாலியில் முசோலினியின் பாசிசமும் ஜேர்மனியில் ஹிட்லரின் நாஜிசமும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வந்த புரட்சிகர அச்சுறுத்தல்களுக்கான நேரடி பதிலிறுப்புகளாக இருந்தன என்று நோர்த் விளக்கினார். “ஒரு தீவிரமயப்பட்ட தொழிலாள வர்க்க இயக்கத்தை ஒடுக்கி முறியடிப்பதற்கான ஒரு இயக்கமாக அது எழுந்தது என்பதே இத்தாலிய பாசிசத்தின் மிகவும் தனித்துவமான கூறுபாடாக இருந்தது,” என்று அவர் கூறினார். சோசலிசக் கட்சிகள் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கு இட்டுச் செல்லத் தவறியது பாசிசத்தின் எழுச்சிக்கான நிலைமைகளை உருவாக்கியது என்பதை அவர் குறிப்பிட்டார். ஜேர்மனியில், 1918-19 மற்றும் 1923 புரட்சிகளை சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் காட்டிக்கொடுப்புக்கள், முதலாளித்துவ வர்க்கம் மீண்டும் அணிதிரள அவகாசம் அளித்தது. இது, ஹிட்லரின் எழுச்சிக்கு வழி வகுத்தது.
ஹிட்லர் ஆட்சிக்கவிழ்ப்பு சதி மூலமாக அதிகாரத்திற்கு வந்தாரா அல்லது ஜனநாயக வழிவகைகள் மூலமாக அதிகாரத்திற்கு வந்தாரா என்பதையும், இது தொடர்பாக இன்றைய தாக்கங்கள் குறித்தும் பேசுமாறு சாக்கரெல்லி டேவிட் நோர்த்தை கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த நோர்த்: “வரலாற்று உண்மையின்படி, ஹிட்லர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் அதிகாரத்திற்கு வரவில்லை. அவர் 1923 இல் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு முயற்சித்தார்—அது தோல்வியில் முடிந்தது.” மாறாக, “ஜேர்மன் ஜனநாயகம் அதன் கடைசிக் காலில் இருந்த நிலையில்” அதன் அரசாங்கம் ஆணைகளின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருந்ததுடன், பாராளுமன்ற ஜனநாயகத்தின் வடிவங்களை வெறுமையாக்கியது. மேலும், பாராளுமன்றத்தில் நாஜிக் கட்சி மிகப்பெரியதாக மாறிய போதிலும், ஹிட்லர் ஒருபோதும் பாராளுமன்ற பெரும்பான்மையை அடையவில்லை. சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆகிய இரண்டு பாரிய தொழிலாள வர்க்கக் கட்சிகள் பாசிசத்திற்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க மறுத்ததால் ஹிட்லரது எழுச்சி எளிதாக்கப்பட்டது என்று நோர்த் விளக்கிக் கூறினார்.
சமூக ஜனநாயகக் கட்சியினரை “சமூக பாசிஸ்டுகள்” என்று முத்திரை குத்திய ஸ்ராலினிச கொள்கையின் பேரழிவுகரமான பின்விளைவுகளை நோர்த் எடுத்துக்காட்டினார். இதன்மூலம், சமூக ஜனநாயகக் கட்சியினரை நாஜிக்களுடன் சமப்படுத்தி, ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்க எதிர்ப்பின் சாத்தியத்தை ஸ்ராலினிஸ்டுக்கள் தவிடுபொடியாக்கினர்.
“சமூக ஜனநாயகம் உட்பட தொழிலாளர் ஜனநாயகத்தின் ஒவ்வொரு பகுதியையும் அழிப்பதன் மூலம் தொழிலாள வர்க்க இயக்கத்தை அழித்து முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதே பாசிசத்தின் நோக்கமாகும்” என்று நோர்த் கூறினார். மேலும், “பாசிசம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால், அதற்கு கம்யூனிஸ்ட் கட்சி ... நாஜி அச்சுறுத்தல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்க அமைப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக சமூக ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு ஐக்கிய முன்னணியை அமைக்க வேண்டும்” என்ற ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை அவர் குறிப்பிட்டார்.
இந்த படிப்பினைகளிலிருந்து நிகழ்காலத்திற்குத் திரும்புகையில், ஐக்கிய முன்னணியின் படிப்பினைகள் இன்று பொருந்துமா என்பது குறித்து நோர்த் உரையாற்றினார். தொழிலாள வர்க்க அமைப்புகளின் ஐக்கியப்பட்ட நடவடிக்கைக்கான ஒரு மூலோபாயமான ஐக்கிய முன்னணிக்கும், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவக் கட்சிகளுடனான கூட்டணிகளுக்கு அடிபணியச் செய்யும் மக்கள் முன்னணிக்கும் இடையே உள்ள கூர்மையான வேறுபாட்டை அவர் வரைந்தார்.
நோர்த் பின்வருமாறு வலியுறுத்திக் கூறினார்:
பாசிசத்தை அதன் வேர்களிலேயே எதிர்ப்பது என்பது, பாசிசம் வளர்கின்ற, பாசிசம் எந்த பொருளாதார அடித்தளங்களில் தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறதோ, அந்த பொருளாதார அடித்தளங்களை எதிர்ப்பதாகும்.
ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணிகளை ஊக்குவிப்பதற்காக அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) போன்ற சமகாலத்திய போலி-இடது அமைப்புகளை விமர்சித்த அவர், இது “பாசிசத்திற்கு எதிரான எந்தவொரு தீவிரமான போராட்டத்தையும் முடக்குவதையே அர்த்தப்படுத்துகிறது” என்று கூறினார்.
டொனால்ட் ட்ரம்ப் ஒரு பாசிச அச்சுறுத்தலைப் பிரதிநிதித்துவம் செய்கிறாரா என்ற கேள்விக்கு, நோர்த் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்:
ட்ரம்ப்பின் இயக்கத்திலும், ட்ரம்பிலும், பாசிசத்தின் வாசனை வீசும் பல விஷயங்கள் உள்ளன. அது, அந்த குறிப்பிட்ட வாசனையைக் கொண்டுள்ளது. அல்லது, துர்நாற்றம் என்று நான் சொல்லலாம். ஆனால் அவரிடம் இல்லாதது ஒரு வெகுஜன இயக்கம். இந்தக் கட்டத்தில், சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் எதிராக ஆத்திரத்தில் கிளர்ந்தெழுந்த, விரக்தியடைந்த, கசப்புணர்வுற்ற, குட்டி முதலாளித்துவ மத்தியதர வர்க்க சக்திகளின், உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கம் அவரிடம் இல்லை.
மேலும், இதற்கு கவனம் செலுத்திய நோர்த், “தொழிலாள வர்க்கம் இடது பக்கம் நகர்கிறது. அது கீழிருந்து மேலெழுந்து மேலாண்மை செலுத்திவரும் இயக்கம் என்று நான் நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார். இருப்பினும், பல தசாப்தங்களாக கம்யூனிச எதிர்ப்பு உருவாக்கிய அரசியல் குழப்பத்தை சமாளிக்காவிட்டால் பாசிசத்தின் ஆபத்து உண்மையானதாகவே இருக்கும் என்று அவர் எச்சரித்தார். தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றிய மற்றும் மார்க்சிய நனவால் வழிநடத்தப்படும் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு நோர்த் ஒரு சக்திவாய்ந்த அழைப்பை விடுத்தார்:
அவர் கூறுகையில்:
நீங்கள் போராட விரும்பினால், நீங்கள் எதற்காகப் போராடுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தொழிலாள வர்க்கத்தின் பக்கத்தை நோக்கி திரும்ப வேண்டும். ஆனால், தொழிலாள வர்க்கத்தை நோக்கி திரும்புவது என்பது நீங்கள் ஒரு திசைகாட்டியைக் கொண்டு செய்யும் ஒன்றல்ல. இதன் பொருள், தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிய நனவுக்காகவும், அறிவியல் ரீதியாக அடித்தளமிடப்பட்ட வர்க்க நனவை வளர்ப்பதற்காகவும், பணியிடங்களுக்குள், தொழிற்சாலைகளுக்குள், சோசலிச தொழிலாளர்களின் ஒரு காரியாளரை உருவாக்குவதற்காக நீங்கள் போராட வேண்டும் என்பதாகும்.
வரலாற்று ரீதியாக பாசிசம் மற்றும் சமகால வலதுசாரி இயக்கங்கள் இரண்டினதும் போலி-முதலாளித்துவ-எதிர்ப்பு வாய்வீச்சைக் குறித்து உரையாற்றுகையில், நோர்த் பின்வருமாறு விளக்கினார்:
எந்தவொரு பாசிச இயக்கத்தின் அத்தியாவசிய கூறுகளில் ஒன்று தீவிர தேசியவாதம் மற்றும் முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு அனைத்து வகையான அதிசய சிகிச்சைகளையும் தேசிய அளவில் ஊக்குவிப்பதாகும். சில நேரங்களில், நாஜிக் கட்சியைச் சுற்றியிருந்த சில சக்திகளிடையேயும் கூட இது உண்மையாக இருந்தது. இதற்கு ஒரு குறிப்பிட்ட மோசடியான சோசலிச சாயம் பூசப்பட்டது. ஆனால் தேசிய கூறுபாடு, இறுதியில், தேசிய முதலாளித்துவத்தை பாதுகாக்கிறது.
ஜனநாயக உரிமைகள் மீதான ட்ரம்பின் மிகப்பெரும் தாக்குதல்கள் குறித்து கருத்துரைக்கையில், நோர்த் இதற்கு நாஜிக்களின் கொள்கைகளுடன் நேரடி சமாந்தரங்களை எடுத்துக்காட்டினார்:
ட்ரம்ப் இப்போது முற்றிலும் சட்டவிரோதமாக நடந்து கொள்கிறார். அரசியலமைப்பு கட்டமைப்பு அவருக்கு இல்லை. எந்த விதமான அரசியல் சாசன விதிமுறைகள், சட்ட நெறிமுறைகளாலும் அவர் கட்டுப்படுத்தப்படவில்லை. உலக சோசலிச வலைத் தளத்தில் நாம் எழுதியதைப் போல, “விதிவிலக்கான நிலை” என்றழைக்கப்பட்ட நாஜி சட்டவியலாளர் கார்ல் ஷிமித் உடன் தொடர்புபட்டிருந்த கருத்தாக்கங்களில் இருந்து அவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். ஃபியூரர் சட்டங்களை உருவாக்குகிறார். அவருக்கு அதிகாரம் இருக்கிறது. அவர் விரும்பியதை அவர்களுடன் செய்கிறார்.
இது ஒரு வகையில், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் இது காங்கிரஸுக்குள் எந்தவிதமான குறிப்பிடத்தக்க எதிர்ப்பை சந்திக்கவில்லை. இது மக்களிடையேதான் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் மற்றும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் அக்கறை கொண்ட அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், உலக சோசலிச வலைத் தளம் ஏற்பாடு செய்திருக்கும் சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கலந்து கொள்ளுமாறும் வலியுறுத்தி நோர்த் தனது உரையை நிறைவு செய்தார்:
இறுதியில், இவை முற்றிலும் கல்வித்துறை சார்ந்த கேள்விகள் அல்ல. இவை வாழ்வா சாவா பற்றிய கேள்விகள். நாம் அனைவரும், மாறிவரும் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உண்மையில் சிந்திக்கும் எவரும் இதை உணர வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் அடுத்த ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகளில் என்ன நடக்கப்போகிறது என்பது மனிதகுலத்தின் தலைவிதியை மிகவும் சிறப்பாக தீர்மானிக்கக்கூடும்.