இலங்கை அரசாங்கத்தின் தாக்குதல் சுகாதார சேவைகளை விளிம்புக்குத் தள்ளுகின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

மக்கள் விடுதலை முன்னனி (ஜே.வி.பி.) தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் தற்போது முன்னெடுக்கப்படும் பாரிய நிதி வெட்டுக்களின் விளைவாக இலங்கையின் பொதுச் சுகாதார சேவை கடுமையான நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளது. சுாதார சேவையானது பழைய மற்றும் செயலிழந்த உபகரணங்கள், சீரழிந்து வரும் உட்கட்டமைப்பு, அத்தியவசிய மருந்துகள் மற்றும் ஆய்வுகூட பொருட்களின் விநியோகங்களின் பற்றாக்குறை மற்றும் மருத்துவ ஊழியர்களின் கடும் பற்றாக்குறையால் பாதிக்கபட்டுள்ளது.

7 ஜூலை 2022 அன்று கொழும்பில் நடைபெற்ற சுகாதாரப் ஊழியர்களின் பேரணியின் ஒரு பகுதி

ஆடம்பர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாது”இலவச” பொதுச் சுகாதார சேவையை நம்பியுள்ள இலட்சக் கணக்கான மக்கள் பெரும் துன்பப்படுகின்றனர். சிலர் மரண வரிசையில் இருப்பது போல் வாழ்கின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்கையில் நிதி அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சுகாதார செலவீனங்களுக்கு ரூபா 604 பில்லியன் ”குறிப்பிடத்தக்க அதிகரிப்பு” செய்திருப்பதாக கூறினார். மருந்து விநியோகத்திற்கு 185 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என அவர் அறிவித்தார்.

திசாநாயக்கவின் வாக்குறுதிக்கு மாறாக, அரசாங்கம் பொதுச் சுகாதார சேவைக்கான ஒதுக்கீட்டை வெட்டித் தள்ளியுள்ளது என்பதே உண்மை. அது, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள சிக்கனத் திட்டத்தின் பாகமாக, சுகாதாரத்துக்கு 2024 இல் ஒதுக்கப்பட்ட 410 பில்லியன் ரூபாவில் இருந்து இந்த ஆண்டு வெறும் 383 பில்லியனே ஒதுக்கியுள்ளது.

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகள், மருத்துவப் பொருட்கள், ஆய்வுகூட பரிசோதனைகள் போன்றவற்றை வெளியில் பெறுமாறு அறிவுறுத்துவது அதிகரித்து வருவதாக குறிப்பிட்டு மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜூன் 22 அன்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அமைச்சிடம் இருந்து எழுத்துப்பூர்வமான அறிவுறுத்தல்கள் இல்லாத நிலையில், வெளியில் இருந்து அவற்றை கொள்வனவு செய்யுமாறு நோயாளிகளுக்கு அறிவிக்க வேண்டுமா அல்லது அமைதியாக இருக்க வேண்டுமா?” என்று அந்தக் கடிதம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பகிரங்கமாக பதிலளித்த சுகாதார அமைச்சர், ”எம்மால் [அரசாங்கம்] மருத்துவ நிபுணர்கள் கோரும் அனைத்து மருந்துகளையும் வழங்க முடியாது. நோயாளிகள் மலிவான இடங்களில் அவற்றை வாங்க முடியும்,” என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அமைய, பொதுச் சுகாதாரத்துக்கு எதிராக ஒரு கொடூரமான சமூக எதிர்த் தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் பாரிய அத்தியவசிய மருத்துகளின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், மத்திய மருந்து களஞ்சியத்தில் 180 அத்தியவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என ஊடகங்களுக்கு ஜூன் 14 அன்று அறிவித்தது. இதில் வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிரிகள் மற்றும் நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் அடங்கும். இந்த மருந்துகளில் 50க்கும் மேற்பட்டவை மருத்துவமனைகளில் கிடையாது.

ஜூன் 18 அன்று டெய்லி மிரர் வெளியிட்ட ஒரு புலனாய்வு அறிக்கை கூறியதாவது: புற்றுநோய், நீரிழிவு, மனநலக் கோளாறுகள், வலிப்பு மற்றும் தொற்றுக்களுக்கு சிசிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கிடையாது அல்லது ஆபத்தான முறையில் குறைவாக உள்ளன.”

இந்த அறிக்கை பல முக்கியமான மருந்துகளின் பற்றாக்குறையை பட்டியலிட்டுள்ளது. இன்சுலின் 10மி.கி. (நான்கு மாதங்களுக்கு மேலாக இல்லை), ஃபில்க்ராசிஸ்டிம் ஊசி மருந்து, சிஸ்ப்ளேட்டின் ஊசி மருந்து, டில்டியாசெம் 30மி.கி./60மி.கி., பினோபார்பிட்டோன் 30மி.கி., குளோர்ப்ரோமசின் 50மி.கி., இமிப்ரமைன் 25மி.கி., அட்ரோபின் கண் சொட்டுகள், சோடியம் வல்ப்ரோயேட் சிரப், ஒக்ஸிபுட்டினின் 2.5.மி.கி., ஒசெல்டமிவிர் 30மி.கி./45மி.கி./75மி.கி. மற்றும் ஜீவனி போன்றவை இதில் அடங்கும்.

7 ஜூலை 2022 அன்று கொழும்பில் போராட்டம் நடத்திய சுகாதார ஊழியர்களில் ஒரு பகுதியினர்.

நாடு முழுவதிலும் உள்ள அரச வைத்தியசாலைகள் இன்றியமையாத மருத்துவ பரிசோதனைகளை செய்ய முடியாத அளவுக்கு நெருக்கடி நிலவுகின்றது.

இலங்கையின் இரண்டாவது மிக முன்னணி வைத்தியசாலையான கண்டியில் உள்ள தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், “இங்கு ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஒரெ ஒரு எம்.ஆர்.ஐ. பரிசோதனை இயந்திரமே உள்ளது. நோயாளர்கள் எம்.ஆர்.ஐ. பரிசோதனையைப் பெற ஒரு வருடத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டும், சிலர் முறையாக நோய் கண்டறியப்பட முன்னர் அல்லது சிகிச்கை இன்றி காத்திருக்கும் காலத்தில் மரணிக்கின்றனர்.

அரச மருத்துவமனைகளில் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்கைக்கு உட்படுத்தப்படவுள்ள நோயாளர்களுக்கு இன்றிமையாத டக்ரோலிமஸ் பரிசோதனைக்கு காலவரையற்ற தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிலோன் வயர் நியூஸ் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய மருத்துவனை மற்றும் இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள், இந்த முக்கியமான பரிசோதனை கடந்த மூன்று மாதங்களாக கிடையாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

டக்ரோலிமஸ் அளவைக் கண்காணிக்கத் தவறுவது உயிராபத்தானதாகும். தனியார் மருத்துவமகைளில் இந்தப் பரிசோதனை செய்யக்கூடியதாக இருந்தாலும், அதற்கு செலவாகும் சுமார் 26,000 ரூபாயை பல நோயாளர்களால் செலுத்தமுடியாது.

அரச வைத்தியசாலைகள் உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு அவசியமான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையையும் எதிர்கொள்கின்றன.

நாட்டின் பிரதான இரு சிறுவர் மருத்துவமனைகளான கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை மற்றும் பேராதனையில் உள்ள சிறிமாவே பண்டாரநாயக்க விசேட சிறுவர் மருத்துவமனைகளில் இதயவியல் பிரிவுகளில் குழந்தைகளுக்கான இதயம்-தொடர்பான சிகிச்சைக்குத் தீர்க்கமாக அவசியப்படும் கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

பொதுச் சுகாதார உட்கட்டைமைப்பில் மோசமடைந்துவரும் நிலைமைகளும் பராமரிப்பு இன்மையும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. உதாரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள விபத்து சேவை சத்திரசிகிச்சை வளாகங்களில் தொடர்ந்தும் தண்ணீர் கசிவுகள் ஏற்படுவதாக சுகாதாரத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனைகளில் நீண்டகால ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றமையால் தாதியர்களும் மருத்துவர்களும் அதிக வேலைச்சுமையை சமாளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைப்பின் இந்தச் சீரழிவோடு மருத்துவ மனைகளில் தொடர்ச்சியான டெங்கு, சிக்கன்குன்யா, கோவிட்-19 மற்றும் இன்புலுவன்சா பரவல்களும் ஒருங்கிணைகின்றன. பொதுச் சுகாதாரத்திற்கு மேலதி நிதி ஒதுக்குவதை தவிர்ப்பதற்காக இந்த நோய் பரவல்களின் உண்மையான அளவை அரசாங்கம் மூடி மறைப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

27 பெப்ரவரி 2025 அன்று வரவு=செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக மாத்தறை பொது மருத்துவமனையில் தாதிமார் போராட்டம் நடத்திய போது

கண்டி தேசிய மருத்துவமனையின் பல தாதிமார்கள், தாம் அதிகளவிலான நோயாளர்கள் மற்றும் போதுமான பாதுகாப்பு முறைமையும் இல்லாததால் சோர்வடைந்துள்ளதாகவும் சிக்கன்குன்யா, இன்புலுவன்சா மற்றும் ஏனைய தொற்று நோய்களுகளாலும் ஆபத்தான முறையில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சோசலிச வலைத் தளத்திற்குத் தெரிவித்தனர். ”தாதியர்கள் மற்றும் வைத்தியர்களும் அமர்வதற்கு போதுமான நாட்காலிகள் கூட கிடையாது” என அந்த மருத்துவமனையைச் சேர்ந்த ஒரு தாதி குறிப்பிட்டார்.

சுகாதாரத் தொழிலாளர்கள் தமது மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் பாரிய வெட்டுக்கள் மற்றும் பதவி உயர்வுகளில் தாமதங்கள் ஏற்படுவதால் ஆத்திரமடைந்துள்ளனர். பல தாதிமார்கள் அதிகரித்துச்செல்லும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்காக தற்போது அதிகளவில் மேலதிகநேர வேலையைச் செய்கின்றனர். ஆயிரக்கணக்கான தாதிமார்கள் மோசடைந்துவரும் பொருளாதார நெருக்கடியால் புலம்பெயர்ந்துள்ளனர்.

ஆச்சரியமற்றவகையில், அரசாங்கத்தின் செலவு-வெட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக அதிகளவிலான எதிர்ப்பு சுகாதாரத் துறையில் இருந்தே எழுகின்றது.

சுகாதாரத் தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்துவரும் கோபத்திற்கு மத்தியில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி மற்றும் பல்வேறுபட்ட தாதிமார் சங்கங்கங்களும் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்கள் மற்றம் போராட்டங்களுக்கு அழைப்புவிடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன.

எவ்வாறாயினும், அவற்றில் பல, இந்தத் தொழிற்சங்கங்களால், சுகாதாரத் தொழிலாளர்களின் கோரிக்ககைளுக்கு தீர்வு வழங்குவதாக கடந்த அரசாங்கங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கமும் கொடுத்த வெற்று வாக்குறுதிகளின் அடிப்படையில் கைவிடப்பட்டன.

உதாரணமாக, தாதிமார்கள், மருத்துவிச்சிகள், ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மருந்தாளர்கள் உட்பட சுமார் 30,000 சுகாதாரத் தொழிலாளர்கள், மார்ச் 17, 18 ஆகிய தினங்களில், அரச தாதி அதிகாரிகள் சங்கம் மற்றும் துணை மருத்துவ அறிஞர்களின் கூட்டமைப்பினாலும் அழைப்பு விடுக்கபட்ட எதிர்ப்பு வேலை நிறுத்தங்களில் பங்கேற்றனர். இந்த வேலைநிறுத்தமானது திறைசேரி செயலாளருடன் இந்தப் பிரச்சினைகள் பற்றி கலந்துறையாடப்படும் என்ற சுகாதார அமைச்சரின் வாக்குறுதியின் அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டது.

இலங்கையின் இலவச பொதுச் சுகாதார சேவையானது தொழிலாளர்களின் பல தசாப்தகால போராட்டத்தின் ஊடாக வென்றெடுத்த, நாட்டின் மிகமிக முக்கியமான சமூக வெற்றியாகும். மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், இலவசக் கல்வியோடு சேர்ந்து, சுகாதாரத் துறையும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மிக இன்றியமையாத ஆதரவாக உள்ளது.

இந்த உரிமைகள் கடந்த நான்கு தசாப்தங்களாக அடுத்துடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் “சுதந்திர சந்தை” கொள்கைகளால் திட்டமிட்டவகையில் பறிக்கபட்டுள்ளன. ஏனைய நாடுகளைப் போலவே, சுகாதார சேவையானது பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு பலியாகி வருகின்றது

இலங்கையில், இந்தத் தாக்குதலானது ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அர்ப்பணித்துக்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஊடாகவே செயல்படுத்தப்படுகிறது. தொழிற்சங்கத் தலைமைகள், பொது சுகாதாரப் பராமரிப்பின் சீரழிவைப் பற்றி புலம்பிக்கொண்டிருக்கும் அதேவேளை, சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை முழுமையாக ஆதரிப்பதுடன், முதலாளித்துவ அமைப்புக்கு விசுவாசமாக இருப்பதோடு தொழிலாளர்களின் போராட்டங்களை செயலில் அடக்குகின்றன.

அதனாலேயே சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), அனைத்து சுகாதார நிறுவனங்களிலும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைத்து, பொது சுகாதார அமைப்பையும் சுகாதார ஊழியர்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் போராட்டத்தைத் தொடங்குமாறு சுகாதார ஊழியர்களை வலியுறுத்துகிறது. இந்தப் போராட்டத்தில், சுகாதார ஊழியர்கள் பரந்த மக்களுடன் ஒன்றிணைந்து அவர்களின் ஆதரவைத் திரட்ட முடியும்.

சுகாதாரப் அமைப்பைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உலகளாவிய தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கும் பாரிய நிதி வளங்கள் தேவைப்படுகின்றன. இந்த நிதிகள் கிடைக்கக் கூடியவையே. வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை நிராகரிப்பதன் மூலமும், பெரும் பணக்காரர்கள் குவித்துக்கொண்டுள்ள செல்வத்தைக் கைப்பற்றுவதன் மூலமும் அவற்றைப் பெற முடியும்.

இது, திசநாயக்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளைத் தோற்கடிக்க தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும். பெரும் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களும் தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

பொது சுகாதார அமைப்பிலான வீழ்ச்சி, முதலாளித்துவ அமைப்பிற்குள் மிக அடிப்படையான சமூகப் பிரச்சினைகளுக்குக் கூட - தேசிய அளவிலோ அல்லது உலக அளவிலோ - தீர்வு கிடையாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பிரச்சினைகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றது. ஒவ்வொரு வேலைத் தளத்திலும், கிராமப்புற ஏழைகள் மத்தியிலும் தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குங்கள்!

இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட தொழிலாளர்களதும் கிராமப்புற மக்களதும் ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான மாநாட்டைக் கட்டியெழுப்ப தைரியமான நடவடிக்கைகளை எடுத்திடுங்கள்! இது, சோசலிசத்திற்கான சர்வதேச போராட்டத்தின் ஒரு பகுதியாக, சோசலிசக் கொள்கைகளை செயல்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தை ஒழுங்கமைக்கவும் போராடவும் அடித்தளங்களை அமைக்கும்.