முன்னோக்கு

வெறுக்கப்படும் சர்வாதிகாரியாக விரும்பும் ட்ரம்ப்புடன் "கூட்டாண்மை" என்று மம்தானி அறிவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நியூ யோர்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானியுடன் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு. நவம்பர் 21, 2025 வெள்ளிக்கிழமை [AP Photo/Evan Vucci]

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல், நியூ யோர்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோஹ்ரான் மம்தானி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார். இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் 30 நிமிட பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஒரு அபத்தமான காதல் விழாவாக இருந்தது. இதன்போது, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) ஒரு அங்கத்தவரான மம்தானி, “கூட்டாண்மையுடன்” பாசிச ட்ரம்ப்போடு “இணைந்து ஒன்றாக வேலை செய்வதற்கான ஒரு உறுதிமொழியை” அறிவித்தார்.

அரசியல் தீவிரமயமாக்கல் செயல்முறைக்கு உட்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது ஒரு வரையறுக்கும் அனுபவமாக இருக்க வேண்டும் என்பதால், இந்த சந்திப்பில் இடம்பெற்ற பரிமாற்றங்களை நினைவுகூருவது அவசியமாகும்.

மம்தானியின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து ட்ரம்ப் தனது உரையை தொடங்கி, “அவர் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறாரோ, அவ்வளவுக்கு மகிழ்ச்சியாக நான் இருப்பேன்” என்றும், “கட்சியில் எந்த வேறுபாடும் இல்லை” என்றும் அறிவித்தார். “அனைவரின் கனவையும் நனவாக்க நாங்கள் அவருக்கு [மம்தானி] உதவப் போகிறோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த மம்தானி, இந்த சந்திப்பு “பயனுள்ளதாக” இருந்ததாகவும், “பகிரப்பட்ட பாராட்டானது அன்பின் இடமான நியூ யோர்க் நகரத்தை மையமாகக்” கொண்டதாகவும் விவரித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்னர் இருவரும் சந்தித்தபோது, “வாழ்க்கைச் செலவு நெருக்கடியை சமாளிக்க ட்ரம்ப்புடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று மம்தானி அறிவித்ததன் மூலம், “வாழ்க்கைச் செலவு” என்ற விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக இருவரும் தெரிவித்தனர். “ஜனாதிபதியுடன் இணைந்து நியூ யோர்க் மக்களுக்கு சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று மம்தானி கூறினார். பின்னர் அவர், ட்ரம்புடனான வருங்கால கூட்டாண்மையை பிராங்க்ளின் டெலனோ ரூஸ்வெல்ட்டுடனும் அவரது புதிய ஒப்பந்தத்துடனும் (New Deal) ஒப்பிட்டார்.

தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு தடையற்ற தாக்குதலை நடத்தி வரும் ட்ரம்ப் நிர்வாகம், உணவு முத்திரைகளை வெட்டுகிறது, சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டை அச்சுறுத்துகிறது, பொதுக் கல்வியை அழிக்கிறது, பொது சுகாதாரம் மீது போரை நடத்துகிறது மற்றும் அமெரிக்க வரலாற்றில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து மிகப் பெரிய அளவில் தன்னலக்குழுவிற்கு செல்வ வளத்தை மாற்றுவதை ஒழுங்கமைத்து வருவதை ஏற்பாடு செய்கிறது.

புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் குறித்து, நாடெங்கிலும் வன்முறை சோதனைகளில் தொழிலாளர்களை மிருகத்தனமாக சுற்றி வளைத்து வருவதை ட்ரம்ப் பாதுகாத்தபோது, மம்தானி மௌனமாக நின்றார். மம்தானியும் அதையே விரும்புகிறார் என்று ட்ரம்ப் கூறினார். “அவர் ஒரு பாதுகாப்பான நியூ யோர்க்கை விரும்புகிறார் ... கொடூரமான மக்கள் இருந்தால், நாங்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும் ... அவர் என்னை விட அதிகமாக அவர்களை வெளியேற்ற விரும்புகிறார்,” என்று ட்ரம்ப் கூறினார்.

புலம்பெயர்ந்தவர்கள் “கொடூரமான மக்கள்” என்ற ட்ரம்பின் பாசிசக் கூற்றை மம்தானி மறுக்கவில்லை, அல்லது சார்லோட் அல்லது பிற நகரங்களில் எல்லை ரோந்துப் படையின் சட்டவிரோதப் பணியமர்த்தலை அவர் சவால் செய்யவில்லை. குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) ஒரு “முரட்டு முகமை” என்ற அவரது கடந்தகால விமர்சனங்கள் குறித்து கேட்டபோது, ​​நியூ யோர்க் நகர அரசாங்கம், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அனுமதிப்பது குறித்து மம்தானி ஏதோ முணுமுணுத்தார். மேலும் அவர், ட்ரம்புடன் ICE மற்றும் நியூ யோர்க் நகரம் பற்றி விவாதித்ததாகவும் கூறினார்.

பொலிஸ் துறையைப் பொறுத்தவரை, ட்ரம்ப் “ஒரு சிறந்த போலீஸ் கமிஷனரைத் பதவியில் வைத்துக் கொண்டதற்காக” மம்தானியைப் பாராட்டினார் - இது ட்ரம்பின் குடும்பத்துடன் நெருக்கமாக தொடர்புடைய பில்லியனர் டிஷ் குடும்பத்தின் வாரிசான ஜெசிகா டிஷ்ஷைக் குறிக்கிறது. ஒரு பாரிய மக்களைக் கண்காணிக்கும் ஆட்சியைத் திணிப்பதிலும், காஸா போர் பற்றிய எந்த விமர்சனமும் யூத எதிர்ப்பு என்று அறிவித்ததற்காகவும் டிஷ் இழிபுகழ் பெற்றவர் ஆவர். பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை பராமரிப்பதாகவும், “பொலிஸ் பணியில் கவனம் செலுத்துவதை எளிதாக்குவதாகவும்” உறுதியளித்த மம்தானி, இவற்றுக்கு தலையசைத்து ஒப்புக்கொண்டார்.

மேயர் தேர்தலின் போது தனக்கு கிடைத்த ஆதரவில் ஒரு தீர்க்கமான காரணியாக இருந்த இனப்படுகொலையைப் பொறுத்தவரை, போலியான போர்நிறுத்தம் என்ற போர்வையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் காஸாவை இணைப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மம்தானி ஆதரித்தார்: “நியூ யோர்க் மக்களின் கவலை என்னவென்றால், நமது வரி டாலர்கள் நியூ யோர்க் மக்களுக்கு செல்ல வேண்டும்” என்பதுதான் என்று மம்தானி கூறினார். மேலும், அவர் “அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் தான் பாராட்டுவதாகவும்” கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில், இனப்படுகொலைக்கு எதிர்ப்பு என்பது யூத எதிர்ப்பு என்ற பொய்யை நியாயப்படுத்தும் வகையில், “யூத விரோதத்தை வேரறுக்க” தனது உறுதியை மம்தானி அறிவித்தார்.

ட்ரம்ப் மீதான எந்தவொரு விமர்சனங்களையும் தவிர்ப்பதற்கு மம்தானி மிகுந்த முயற்சியுடன் பின்னோக்கி வளைந்தார். ட்ரம்பை ஒரு சர்வாதிகாரி என்று அவர் முன்பு கூறியது குறித்து கேட்டபோது, ​​மம்தானி அந்தக் கேள்வியைத் தவிர்த்துக் கொண்டார். “எங்கள் நிலைப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் குறித்து நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம் ... ஜனாதிபதியைப் பற்றி நான் மிகவும் பாராட்டுவது என்னவென்றால், எங்கள் சந்திப்பு எங்கள் கருத்து வேறுபாடுகளில் மட்டுமல்ல, நாங்கள் பின்பற்றும் பொதுவான குறிக்கோளிலும் கவனம் செலுத்தியது” என்று மம்தானி குறிப்பிட்டார்.

ஒரு கட்டத்தில், ட்ரம்ப் ஒரு பாசிஸ்ட் என்று மம்தானி முன்பு கூறியது குறித்து ஒரு நிருபர் நேரடியாகக் கேட்டார். பதிலளிக்கத் தயங்கிய பிறகு மம்தானி, ட்ரம்ப்பை தனக்காகப் பேச அனுமதித்தார். “பிரச்சனை இல்லை, நீங்கள் அதைச் சொல்லலாம். அதை விளக்குவதை விட இது எளிதானது. எனக்கு அதில் ஆட்சேபனை இல்லை” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். இதன் பின்னர் ட்ரம்ப் மம்தானியின் கையைத் தட்டினார், மம்தானி சிரித்தார். இதனால், ட்ரம்ப் ஒரு பாசிஸ்ட் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆகவே, இது அவர்களின் வளர்ந்தவரும் “கூட்டாண்மைக்கு” ஒரு தடையாக இருக்கப் போவதில்லை.

TWITTER: 1992033924252565789

ட்ரம்புடனான மம்தானியின் சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரு கட்சிகளின் ஆதரவுடன், குறிப்பாக ஹக்கீம் ஜெஃப்ரிஸ் மற்றும் பிற ஜனநாயகக் கட்சித் தலைமையின் வாக்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சோசலிசத்தைக் கண்டிக்கும் பிரதிநிதிகளின் சபைத் தீர்மானம் குறித்து கேட்டபோது, மம்தானி சாதாரணமாக பதிலளித்தார். “நான் தீர்மானங்களில் மிகக் குறைவாகவே கவனம் செலுத்துகிறேன்” என்று அவர் கூறினார். மேலும், “நான் ஒரு ஜனநாயக சோசலிஸ்ட்” என்று அவர் வலியுறுத்தும் அதே வேளையில், “சித்தாந்தம் குறித்து இங்கே வேறுபாடுகள் இருக்கலாம் ... நியூ யோர்க்கை செலவு குறைந்த இடமாக மாற்றுவதற்கு செய்ய வேண்டிய பணிக்கே நாம் உடன்பாட்டிருந்தோம்” என்று மம்தானி குறிப்பிட்டார்.

எப்ஸ்டீன் ஊழலில் ட்ரம்பின் தனிப்பட்ட ஈடுபாடு தொடர்பாக குடியரசுக் கட்சிக்குள் ஆழமான பிளவுகள் உட்பட, ட்ரம்ப் நிர்வாகம் முகங்கொடுத்து வரும் ஒரு தீவிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் மம்தானி-ட்ரம்ப் சந்திப்பு நடந்தது. பெருகிவரும் மக்கள் எதிர்ப்பையும் ட்ரம்ப் எதிர்கொள்கிறார். வட கரோலினாவில், புலம்பெயர்ந்த குடும்பங்களைப் பாதுகாக்க பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநடப்புகளிலும், நோய்வாய்ப்பட்ட விடுப்புகளிலும் பங்கேற்றனர். ஒரு மாதத்திற்கு முன்னர்தான், சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்திற்கு எதிரான “மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களில் மில்லியன் கணக்கானவர்கள் பங்கெடுத்தனர்.

இந்த வளர்ந்து வரும் நெருக்கடிக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் பதில் உள்நாட்டில் ஒடுக்குமுறையையும் வெளிநாடுகளில் போரையும் இரட்டிப்பாக்குவதாகும். மம்தானியின் வருகைக்கு ஒரு நாள் முன்னதாக ட்ரம்ப், ஆறு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ துருப்புகள் சட்டவிரோத உத்தரவுகளை நிறைவேற்றக்கூடாது என்று ஒரு காணொளியை வெளியிட்டதற்காக, “தேசத்துரோக நடத்தை, மரண தண்டனைக்குரிய குற்றம்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இலக்கு வைக்கப்பட்டவர்களில் முன்னாள் இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளும் அடங்குவர். இந்த அடுக்குகளில் உள்ளவர்கள் அமெரிக்கா முழுவதும் இராணுவத்தை நிலைநிறுத்துவது உட்பட ட்ரம்பின் குற்றவியல் திட்டங்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். மம்தானி இந்த அச்சுறுத்தல்களை கண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர் இந்த அச்சுறுத்தல்களைப் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை.

இந்த சந்திப்பு ட்ரம்ப்புக்கு மட்டுமே ஆதாயமளிக்கும். இது, ஆழமாக மதிப்பிழந்துள்ள மற்றும் முற்றுகையிடப்பட்ட ஒரு நிர்வாகத்திற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை வழங்குகிறது. ட்ரம்பின் நிபந்தனைகளுடன் அரசாங்க பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அவரது நிர்வாகத்தை பிணையெடுப்பதற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனநாயகக் கட்சி எடுத்த முடிவின் பின்னணியில்தான் இதைப் பார்க்க வேண்டும்.

வர்க்க நலன்கள் மற்றும் மதிப்பிட முடியாத நடைமுறைவாதத்தால் உந்தப்பட்டு, அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) மற்றும் ஒட்டுமொத்தமாக போலி-இடதில் இருந்து, இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. இது எவ்வளவு வெறுக்கத்தக்கதாக இருந்தாலும், இவற்றை நியாயப்படுத்த முடியாது. இந்தக் கூட்டம் “சோசலிசத்துடனான ஒரு மோதல்” என்று ஃபொக்ஸ் நியூஸ் வெளியிட்ட ஒரு அறிக்கைக்கு வெள்ளிக்கிழமை மாலை விடையிறுத்த DSA, “சோசலிசம் வெற்றி பெற்றது!” என்று எழுதியது. வருங்கால சர்வாதிகாரியைப் பற்றிய மம்தானியின் பாராட்டு, சமூக சீர்திருத்தக் கொள்கைக்கு ட்ரம்பை வென்றெடுப்தற்கான ஒரு சிறந்த தந்திரோபாய சூழ்ச்சியாக முன்வைக்கப்படுகிறது.

என்ன ஒரு மோசடி! ட்ரம்பின் முன் மம்தானி மண்டியிட்டு வணங்குவது, அவரது ஆதரவாளர்களைக் குழப்பி, அவரை பதவிக்குக் கொண்டு வந்த அரசியல் தீவிரமயமாக்கல் செயற்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். மம்தானியைப் பொறுத்தவரை, அவர் தற்போது “மிகவும் நேர்மையான ட்ரம்பை” புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் அதே வேளையில், ட்ரம்ப் விரும்பும் விதத்தில் அவர் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை கடுமையான கண்டனங்களுக்கும் வன்முறை அச்சுறுத்தல்களுக்கும் ஆளாக நேரிடும் என்பதை அவர் விரைவில் உணர்ந்து கொள்வார்.

இவை அனைத்தும் நாற்றம்கண்டிருந்தாலும், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தேர்தலுக்கு முன்னர், உலக சோசலிச வலைத் தளம் “மம்தானி வெற்றி பெற்றால், அவர் தலைமையிலான மேயர் பதவிக்கும் கியூமோ தலைமையிலான மேயர் பதவிக்கும் இடையே மிகக் குறைந்த வித்தியாசம் இருக்கும் என்பதை அவர் தனது பிரச்சாரத்தின் போது ஏற்கனவே நிரூபித்துள்ளார்” என்று எழுதியது. ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குள், இது ஒரு குறைத்து மதிப்பிடல் என்பதை மம்தானி நிரூபித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், இது வெறுமனே தனிநபரான மம்தானி பற்றிய பிரச்சினை அல்ல. மாறாக, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள ஜனநாயக சோசலிஸ்டுகள், ஜேக்கபின் பத்திரிகை மற்றும் முழுப் போலி இடதுசாரிகளாலும் ஊக்குவிக்கப்பட்ட ஒரு திட்டவட்டமான அரசியல் முன்னோக்கைப் பற்றிய பிரச்சினை ஆகும். இது, அரசின் ஸ்தாபனங்களுக்குள் மாற்றத்தை செயல்படுத்துவதற்கான முன்னோக்காகும். இந்த அனுபவத்தை எத்தனை முறை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும்? கிரேக்கத்தில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ், பிரான்சில் மெலோன்சோன், அமெரிக்காவில் பேர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்சாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ். இப்போது மம்தானி.

வர்க்க அடிப்படையில், ட்ரம்ப்புடன் “பகிர்ந்து கொண்ட நோக்கம்” பற்றிய மம்தானியின் அறிவிப்பு, ட்ரம்ப் ஆளும் தன்னலக்குழுவுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்காக அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் பேசும் உயர் நடுத்தர வர்க்கத்தை பிரதிபலிக்கிறது. இந்த சக்திகள் பாசிசத்தை விட சமூகப் புரட்சியைக் கண்டு அதிகம் அஞ்சி நடுங்குகின்றன. இவை விரக்தியடையச் செய்வதற்கும் நோக்குநிலை பிறழ்வதற்கும் மட்டுமே சேவை செய்கின்றன மேலும் முதலாளித்துவ ஆட்சியின் அதிகரித்து வரும் விமர்சன தூணாக செயல்பட்டு வருகின்றன.

காஸா இனப்படுகொலை, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஆகியவற்றை எதிர்த்து மம்தானியை ஆதரித்த ஒவ்வொருவரும் இந்த அபிவிருத்திகள் குறித்து தீவிரமாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். சோசலிசத்திற்கான போராட்டமும் தன்னலக்குழுவிற்கு எதிரான எதிர்ப்பும், இத்தகைய சக்திகள் மூலமாக வராது, மாறாக அவற்றுக்கு எதிரான இடைவிடாத போராட்டத்தில்தான் வரும்.

சோசலிசத்தை அக்கறையுடன் எடுத்துக்கொள்பவர்களும், பாசிசத்திற்கு எதிராகவும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகவும், மனிதகுலத்தின் உயிர் வாழ்வுக்காகவும் போராட உறுதிபூண்டுள்ள அனைவராலும் எடுக்கப்பட வேண்டிய முடிவு, சோசலிச சமத்துவக் கட்சி என்ற ஒரு உண்மையான புரட்சிகர இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தை குறிக்கிறது.

Loading