உலக சோசலிச வலைத்தளம் சோசலிசம் AI-ஐ அறிமுகப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு முக்கியமான பொதுக் கூட்டங்களில், —நவம்பர் 18 அன்று பேர்லினிலும் நவம்பர் 22 அன்று லண்டனிலும்— உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தின் உந்துதல் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்த இரண்டு கூட்டங்களிலும் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது, ட்ரம்ப் மற்றும் அவரது சர்வதேச சகாக்களின் கீழ் பாசிசத்தின் அச்சுறுத்தல் குறித்த பரவலான கவலையை நிரூபிக்கிறது.

மிக முக்கியமாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் சோசலிச நனவின் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவைப் (AI - Artificial intelligence) பயன்படுத்தும் ஒரு புரட்சிகர கருவியான சோசலிசம் AI-ஐ (Socialism AI) விரைவாக வெளியிடுவதை அறிவிக்க, டேவிட் நோர்த் இந்த இரண்டு பொதுக்கூட்ட சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டார்.

பேர்லினில் ஹும்போல்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது இறுதிக் கருத்துக்களில், சோசலிசம் AI-யின் உருமாற்றும் ஆற்றலை விளக்கி, பின்வருமாறு டேவிட் நோர்த் கூறினார்:

செயற்கை நுண்ணறிவின் மகத்தான கற்பித்தல் திறன், அல்லது, ஒருவேளை, மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு, விஞ்ஞான சோசலிசத்தின் புரட்சிகரமான முன்னோக்குகளுடன் இணைந்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் சாத்தியங்களைத் திறந்து விட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் நனவு என்பது, முதலாளித்துவ நெருக்கடியின் புறநிலை நிலைமைகளைப் புரிந்துகொண்டு, தொழிலாள வர்க்க அதிகாரத்திற்கான பாதையை தெளிவுபடுத்துவதாகும் - இவை அனைத்தும் முந்தைய தலைமுறையினரால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பரவக்கூடியதாகும்.

ஒரு ஆழமான வரலாற்று சமாந்திரத்தை வரைந்த டேவிட் நோர்த், பின்வருமாறு குறிப்பிட்டார்:

பதினெட்டாம் நூற்றாண்டில், அறிவொளிக்கான ஒரு கருவியாக மாறிய டிடெரோவின் கலை அறிவுக் களஞ்சியம், அறியாமையில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான மக்களுக்கு அறிவைக் கிடைக்கச் செய்ததன் மூலம் பிரெஞ்சுப் புரட்சிக்கு பங்களிப்பு செய்தது போல், செயற்கை நுண்ணறிவு —முறையாக உருவாக்கப்பட்டு ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டு, புரட்சிகர மார்க்சிஸ்ட்-ட்ரொட்ஸ்கிசக் கட்சியால் பயன்படுத்தப்பட்டு, முதலாளித்துவ இலாபத்திற்குப் பதிலாக தொழிலாள வர்க்கத்தின் சேவையில் வைக்கப்பட்டுள்ளது — சோசலிச நனவின் ஒரு கருவியாக மாற முடியும்.

பின்னர் நோர்த் உத்தியோகபூர்வமாக சோசலிசம் AI-ஐ பின்வருமாறு அறிவித்தார்:

தொழிலாள வர்க்க இயக்கத்தின் நோக்கங்கள் மற்றும் நலன்களுக்காக செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் பயன்படுத்த அனைத்துலகக் குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை இன்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் சில வாரங்களில், சோசலிசம் AI-ஐ நாங்கள் வெளியிடுவோம். இது, சோசலிச நனவை வளர்ப்பதற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அமைப்பு ரீதியான திறனை மேம்படுத்துவதற்கும் அதிகரித்த நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஒரு புரட்சிகரமான பயன்பாடாகும். இது ஒரு சாட்போட் (chatbot) ஆகும். இந்த சாட்போட்கள், பயனர்களுடன் அரசியல், வரலாறு, சமூகக் கேள்விகள், கட்சி அமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சி தொடர்பான சிக்கல்களைக் கேட்டறியவும், மார்க்சிய சிந்தனையின் பரந்த காப்பகத்திலிருந்து ஒரு பதிலைப் பெறவும் உதவுகிறது. இதற்கு முதன்மையாக, 100,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கிய உலக சோசலிச வலைத் தளத்தின் ஆவணக் காப்பகம் பயன்படுத்தப்படும்.

சோசலிசம் AI, “பாரம்பரிய ஊடகங்களால் நிர்ணயிக்கப்பட்ட பதில்களை வழங்க சோசலிசம் AI தற்போதைய சாட்போட்களைப் (chatbot) போல திட்டமிடப்படாது” என்று நோர்த் வலியுறுத்தினார். மாறாக, “இது தொழிலாள வர்க்கத்தின் அன்றாட போராட்டங்களில் எழும் முக்கியமான பிரச்சினைகளுக்கு துல்லியமான, முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட்ட பதிலை வழங்கும். இது அறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரால் கேட்கப்படும் பரந்த அளவிலான கேள்விகளுக்குப் பதிலளிக்கும். மேலும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்கும் மற்றும் வெளிப்படுத்தும் பதில்களை வழங்கும்” என்று அவர் தெரிவித்தார்.

சோசலிசம் AI-யின் தொடக்கத்திற்கும் 1998-ல் உலக சோசலிச வலைத் தளத்தின் தொடக்கத்திற்கும் இடையேயுள்ள ஒப்புமைகளைக் காட்டி, நோர்த் பின்வருமாறு கூறினார்:

இது ஒரு சிறிய தொழில்நுட்ப திட்டம் அல்ல. சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு, இணையம் முதன்முதலில் நடைமுறைக்கு வந்தபோது, இந்த புதிய தொழில்நுட்பத்தின் சக்தியை நாங்கள் புரிந்துகொண்டோம். உண்மையில், ஒரு எழுத்துபூர்வ செய்திப் பத்திரிகையிலிருந்து இணையத்திற்கு மாறிய முதல் இடதுசாரி இயக்கமாக நாங்கள் இருந்தோம். நாங்கள் உலக சோசலிச வலைத் தளத்தை நிறுவினோம். அந்த நேரத்தில், அது மிகவும் புதியதாக இருந்ததால், அமேசானில் சுமார் 850 ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். இந்த தொழில்நுட்பத்தின் தாக்கங்களை நாங்கள் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டோம், மேலும் இது புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.

செயற்கை நுண்ணறிவின் சக்தியை, அதன் பிற்போக்கான மற்றும் புரட்சிகரமான இரண்டு திறன்களையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் பிந்தையவற்றின் அடிப்படையில் செயல்படுகிறோம். வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில், நிச்சயமாக வரும் ஆண்டுகளில், நீங்கள் அனைவரும் இதைப் பயன்படுத்துவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆயிரக்கணக்கான, பல்லாயிரக்கணக்கான, நூறாயிரக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்த சக்திவாய்ந்த கருவியை கல்வி, சமூகக் கல்வி, அரசியல் கல்வி, கலாச்சாரக் கல்வி ஆகியவற்றின் ஒரு வழிமுறையாகப் பயன்படுத்துவார்கள். இது ஒரே மொழியில் அல்ல, பல டசின் கணக்கான மொழிகளில் பயன்படுத்தப்படும்.

நோர்த் சுருக்கமாக கூறுகையில்:

மிகவும் மேம்பட்ட உற்பத்தி சக்திகளை நனவு மாற்றத்திற்கு பயன்படுத்துவது மிகப்பெரிய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தொழிலாள வர்க்கம் அதன் வரலாற்றுப் பணியைப் புரிந்துகொண்டு, அதிகாரத்தை கைப்பற்றும் வகையில் தேவையான தத்துவார்த்த ஆதாரங்கள், வரலாற்றுப் பகுப்பாய்வு, திட்டமிட்ட தெளிவு ஆகியவற்றை அது உடனடியாகவும் உலகளாவிய ரீதியில் கிடைக்கச் செய்கிறது.

சோசலிசம் AI பற்றிய அறிவிப்பு, ஒரு அடிப்படைக் கேள்வி தொடர்பான விரிவான விரிவுரையின் முடிவில் வந்தது: “அமெரிக்கா எங்கே செல்கிறது?” “நரகத்திற்கு” என்று பெரும்பாலான மக்கள் பதிலளிப்பார்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் டேவிட் நோர்த் தனது சொற்பொழிவைத் தொடங்கினார். இது துரிதமடைந்து வரும் அரசியல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இந்த மதிப்பீடு பெரும்பாலும் நியாயமானது என அவர் ஒப்புக்கொண்டார்.

பிரான்சின் நிதிப் பிரபுத்துவத்தை “முதலாளித்துவ சமுதாயத்தின் உச்சத்தில் உள்ள லும்பன் பாட்டாளி வர்க்கம்” என்று மார்க்ஸ் விவரித்ததை அடிப்படையாகக் கொண்டு, சமகால அமெரிக்க ஆளும் வர்க்கத்தை நோர்த், “முதலாளித்துவ சமூகத்தின் உச்சியில் இருக்கும் ஒரு சூப்பர்-மாஃபியா, குற்றத்தையும் சீர்கேட்டையும் வெளிப்படையாகக் காட்டி மகிழ, சாதாரண மக்கள் துன்பத்திலும் இரத்தத்திலும் அதன் விலையைச் செலுத்துகிறார்கள்” என்று வர்ணித்தார்.

அமெரிக்காவில் முன்னொருபோதும் இல்லாத வகையில், செல்வவளம் குவிந்திருப்பதை ஆவணப்படுத்தும் விரிவான தரவுகளை நோர்த் முன்வைத்தார். ட்ரம்பின் அமைச்சரவை மற்றும் உயர் பதவியில் நியமிக்கப்பட்டவர்கள் 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளனர். அவரது இருபத்தைந்து செல்வந்த நியமனதாரர்களில் பதினாறு பேர், 341 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் 813 பில்லியனர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் —இது அவர்களை மேல்மட்ட 0.0001 சதவீதத்தில் வைக்கிறது. “இது அடையாள பிரதிநிதித்துவம் அல்ல, இது தன்னலக்குழுவின் நேரடி ஆட்சி” என்று நோர்த் கூறினார்.

1971 ஆம் ஆண்டில் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின் சரிவு, அதன் பின்னர் அமெரிக்க பொருளாதாரத்தின் நிதிமயமாக்கல் ஆகியவற்றுக்கு, நெருக்கடியின் வரலாற்று வேர்களை விரிவுரைகள் தெளிவுபடுத்தின. பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் அமெரிக்கப் பங்குகளின் மொத்த மதிப்பு, ஆண்டு பொருளாதார உற்பத்தியில் 220 சதவிகிதத்தை தாண்டியுள்ளது - 1971ல் வெறும் 80 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரட்டிப்பாகும். இது உண்மையான உற்பத்தியில் இருந்து பெருகிய முறையில் பிரிக்கப்பட்டு, “கற்பனை மூலதனத்தின்” மீது கட்டப்பட்ட ஒரு பொருளாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

புரட்சிகரப் போராட்டத்திற்கு தார்மீக சீற்றம் மட்டும் அடித்தளமாக இருக்க முடியாது என்று நோர்த் வாதிட்டார். முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், குறிப்பாக, இலாப விகிதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி குறித்த மார்க்சின் விதி பற்றிய ஒரு விஞ்ஞானபூர்வமான புரிதல் தேவைப்படுகிறது. முதலாளித்துவத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்வதற்கான தற்போதைய வெறித்தனம், பெருமளவிலான பணிநீக்கங்கள் மூலம் அதிகரித்த லாபத்தை உறுதியளிப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் உபரி மதிப்பின் மூலமான உயிருள்ள உழைப்பை மேலும் குறைப்பதால், இது இலாப விகிதத்தில் முறையான வீழ்ச்சியை விரைவுபடுத்துகிறது.

நோர்த் ஒரு வலிமையான உருவகத்துடன் பின்வருமாறு கூறினார்:

நாம் வாழும் உலகம், தூங்கிக் கொண்டிருக்கிற எரிமலையைப் போன்றது. அதன் சரிவுகளில் நாகரிகம் அதன் நினைவுச் சின்னங்களைக் கட்டுகிறது, அதன் நிறுவனங்களை நிறுவுகிறது, அதன் அன்றாட வாழ்க்கையை ஒழுங்கமைக்கிறது. நீண்ட காலமாக, மேற்பரப்பிற்கு அடியில் எரிமலை தூங்கிக் கொண்டிருக்கிறது. பிரமாண்டமான அழுத்தங்கள் குவிந்துள்ளன. எரிமலைக் குளம்பான மக்மா உயர்கிறது. நில அதிர்வுகள் தீவிரமடைகின்றன. இறுதியாக, எரிமலை வெடிப்பு பேரழிவு தரும் சக்தியுடன் வருகிறது, அது நிலப்பரப்பை முழுவதுமாக மாற்றுகிறது.

நோர்த் மேலும் தொடர்ந்து கூறினார்:

அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பு முதலாளித்துவத்தின் அழுகிப்போன கட்டமைப்புகளை அழித்து, ஒரு புதிய உலகத்திற்கான சாத்தியத்தையும் திறந்துவிடும். சமூக ஒடுக்குமுறையின் ஆழத்திலிருந்து எந்த இராணுவத்தையும் அல்லது நிறுவனத்தையும் விட மேலான சக்தி எழுந்து வரும். எதையும் தனக்கு சொந்தமாகக் கொண்டிருக்காத, அனைத்து செல்வங்களையும் உற்பத்தி செய்யும் ஒரு வர்க்கத்தின் கூட்டு சக்தி, விஞ்ஞான சோசலிசம் மற்றும் புறநிலை யதார்த்தத்தின் பகுப்பாய்வு ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு, நனவாக செயல்படும்போது, அது தேசியம் மற்றும் இனத்தின் தடைகளை உடைத்தெறிந்து, விடுதலைக்கான பொதுப் போராட்டத்தில் மனிதகுலத்தை ஐக்கியப்படுத்தும்.

பேர்லினிலும், லண்டனிலும் நடைபெற்ற இரண்டு விரிவுரைகளுக்குப் பிறகும், ஆர்வமிக்க கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பல பங்கேற்பாளர்கள் தங்கள் தொடர்புத் தகவல்களை கொடுத்துச் சென்றதோடு, இலக்கிய மேசைகளில் இருந்த புத்தகங்களையும் வாங்கினர்.

முதலாளித்துவம், சர்வாதிகாரம் மற்றும் ஏகாதிபத்தியப் போர் ஆகியவற்றின் தீவிரமடைந்து வரும் நெருக்கடிகளுக்கு, ஒரு உண்மையான சோசலிச மாற்று குறித்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்துவரும் ஆர்வத்தை, இந்த இரண்டு கூட்டங்களும் பிரதிபலித்தன. மார்க்சிச கோட்பாடு மற்றும் வரலாற்று பகுப்பாய்வுக்கான அணுகலை முன்னொருபோதும் இல்லாத அளவில்ர ஜனநாயகப்படுத்தும் திறன் கொண்ட ஒரு கருவியாக சோசலிசம் AI-யின் அறிவிப்பு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது.

உலக சோசலிச வலைத் தளமமானது, வருகின்ற நாட்களில், லண்டன் சொற்பொழிவின் முழுமையான காணொளிப் பதிவை வெளியிடுகிறது.

Loading