முன்னோக்கு

ஆலன் கெல்ஃபான்ட்: சோசலிசம் மற்றும் வரலாற்று உண்மைக்கான ஒரு போராளி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

2013 இல் அலன் கெல்ஃபான்ட் [Photo: David North/WSWS]

சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (SWP) உயர் மட்டத்தில் இருந்த FBI மற்றும் சோவியத் இரகசிய போலீஸ் முகவர்களை அம்பலப்படுத்தி, அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆலன் கெல்ஃபாண்ட், கடந்த அக்டோபர் 29ம் திகதி, புதன்கிழமை அன்று லொஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். அவருக்கு வயது 76.

ஆலனின் மரணத்திற்கு காரணம் புற்றுநோய். அவருக்கு 1986 ஆம் ஆண்டில், நாளங்கள் மற்றும் நிணநீர் மண்டலத்தில் ஒரு வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.  தீவிர கதிர்வீச்சு சிகிச்சை அவரை நோயிலிருந்து குணப்படுத்தியது. இருப்பினும், கதிர்வீச்சின் நீண்டகால விளைவுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் புற்றுநோய் மீண்டும் வருவதற்கு வழிவகுத்தன. ஆலனின் உடல் நிலை மோசமடைந்ததால், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, தனது ஆயுளை நீட்டிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முடிவுக்கு வரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அவரது இறுதி மணிநேரங்கள் வரை, ஆலன் முழுமையாக தெளிவானவராக இருந்தார். நெருங்கி வரும் தனது மரணத்தை அமைதியாகவும் கண்ணியத்துடனும் ஏற்றுக்கொண்ட ஆலன், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு 50 ஆண்டுகளை அர்ப்பணித்த தனது வாழ்க்கைப் பாதையில், திருப்தியை வெளிப்படுத்தினார். அநீதி மீதான ஆலனின் வெறுப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் சமத்துவத்தை தளராமல் பாதுகாப்பது, அவரது அரசியலில் மட்டுமல்ல, மாறாக லொஸ் ஏஞ்சல்ஸில் ஒரு பொது பாதுகாவலராக அவரது தொழில்முறை வாழ்க்கையிலும் வெளிப்பாட்டைக் கண்டது. ஒரு வழக்கறிஞராக ஆலனின் திறமை எண்ணற்ற பிரதிவாதிகளை அநியாயமான தண்டனையிலிருந்து காப்பாற்றியது. மரண தண்டனையை கடுமையாக எதிர்த்த அவர், கலிபோர்னியா மாநிலத்தின் மரணதண்டனை நிறைவேற்றுபவர்களின் கைகளில் தனது பிரதிவாதிகள் எவரையும் இழக்க அனுமதிக்கவில்லை.

ஜூலை 1979 இல் ஆலன் தாக்கல் செய்த வழக்கு, கெல்ஃபாண்ட் வழக்கு என்று அறியப்படுகிறது. 1938 இல், சோவியத் இரகசியப் போலீஸை [GPU] SWP அமைப்பின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஹான்சன் இரகசியமாக சந்தித்ததையும், 1940 இல் ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்குப் பின்னர் FBIயை அவர் சந்தித்ததையும், ஆதாரங்களுடன் கேள்விகளை எழுப்பி, பதில்களைப் பெறுவதற்கான அவரது முயற்சிகளின் விளைவாக, அதே ஆண்டு ஜனவரியில் SWP யிலிருந்து ஆலன் வெளியேற்றப்பட்டார். SWP யின் ஸ்தாபகர் ஜேம்ஸ் பி. கனனின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சில்வியா பிராங்க்ளின் (நீ காலன், கட்சிப் பெயர் கால்டுவெல்) GPU இன் முகவராக இருந்ததற்கான ஏராளமான சான்றுகள் இருந்தபோதிலும், ஹான்சன் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சி அவரை தீவிரமாக பாதுகாத்தது குறித்து ஆலன் விளக்கத்தை கோரியிருந்தார்.

1976ல் சோசலிச தொழிலாளர் கட்சியில் இணைந்துகொண்ட ஆலன் கெல்ஃபான்ட், தென்கிழக்கு லொஸ் ஏஞ்சல்ஸ் கிளையின் ஒரு முன்னணி உறுப்பினராக இருந்தார். ஓபர்லினில் நடந்த SWP தேசிய மாநாட்டில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அமெரிக்க கிளையான தொழிலாளர் கழகத்தினரால் (Workers League) வெளியிடப்பட்ட ஆவணங்களை மதிப்பாய்வு செய்த பின்னர், ஆகஸ்ட் 1977 இல், SWP யின் தேசிய செயலாளர் ஜாக் பார்ன்ஸ் உட்பட கட்சித் தலைவர்களிடம் அவர் முதன்முதலில் தனது கவலைகளை எழுப்பியிருந்தார். லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை மற்றும் நான்காம் அகிலத்திற்குள் GPUயின் ஊடுருவல் குறித்த விசாரணையின் போது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் இந்த ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. இதற்கான பதில்கள் வழங்கப்படும் என்று பார்ன்ஸ் உறுதியளித்த போதிலும், SWP தலைமையிடமிருந்து ஆலன் கெல்ஃபாண்டிற்கு மேலதிக எந்த பதிலும் கிடைக்கவில்லை.

ஜனவரி 23, 1978 அன்று, கெல்ஃபான்ட் SWP கட்சிக் கிளையின் கூட்டத்தில் தனது கவலைகளை வெளிப்படுத்த முயன்றார். ஆனால், அவர் தயாராக வைத்திருந்த அறிக்கையின் முதல் வாக்கியத்தை நிறைவு செய்வதற்கு முன்பே, அவர் ஒழுங்கில்லாமல் இருப்பதாக உடனடியாக கூறப்பட்டது. ஆறு நாட்களுக்குப் பிறகு, SWP யின் கிளைத் தலைமையாலும், அதன் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் தழுவிய அமைப்பாளரும் முக்கிய பிரதிநிதியுமான பீட்டர் காமெஜோவால் அவர் தணிக்கை செய்யப்பட்டதை எதிர்த்து, பார்ன்ஸ் மற்றும் SWP அரசியல் குழுவிற்கு கெல்ஃபாண்ட் ஒரு கடிதம் அனுப்பினார்.

இந்தக் கடிதத்திற்கோ அல்லது அரசியல் குழுவிற்கு அனுப்பப்பட்ட இரண்டாவது கடிதத்திற்கோ SWP யிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காததால், கெல்ஃபான்ட் மார்ச் 26, 1978 தேதியிட்ட SWP இன் தேசிய குழுவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அது பின்வருமாறு குறிப்பிட்டது:

என் வாழ்க்கையில் நான் மேற்கொண்ட மிக முக்கியமான பணியாகக் கருதி, இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கடிதம், எமது இயக்கத்தின் வரலாறு மற்றும் கோட்பாடுகளை ஆழமாகவும், முழுமையாகவும் ஆராய்ந்ததின் விளைபொருளாகும். ஆரம்பத்தில் இந்த ஆய்வானது, இந்த எங்கள் கோடை மாநாட்டில், ஓபர்லினில் தொடங்கிய தொடர்ச்சியான நிகழ்வுகளால் தூண்டப்பட்டது.

இந்த மாநாட்டில், தொழிலாளர் கழகத்தினரால் விநியோகிக்கப்பட்ட ஆகஸ்ட் 5, 1977 இதழான புல்லட்டினில் அச்சிடப்பட்ட அரசாங்க ஆவணங்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலை அடைந்தேன். இந்த ஆவணங்களின் முதல் பக்கத்தில், ஜோசப் ஹான்சன் FBI உடன் ஒரு இரகசிய உறவைக் கோரியதாகவும், அதைப் பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பின்பு, பார்ன்ஸ் வாக்குறுதியளித்தபடி, ஆலன் கெல்ஃபாண்ட்டின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறிய SWP தலைமையின் காலவரிசையை கெல்ஃபண்ட் மறுபரிசீலனை செய்தார். கெல்ஃபான்டின் கேள்விகளுக்கு “யார் கவலைப்படுகிறார்கள், யார் கவலைப்படுகிறார்கள்?” என்று மீண்டும் மீண்டும் கத்துவதன் மூலம் பதிலளித்த SWPயின் பீட்டர் காமெஜோவின் அணுகுமுறையையும் அவர் ஆட்சேபித்தார்.

ஆலன் கெல்ஃபான்ட் பின்வருமாறு எழுதினார்:

நல்லது தோழர்களே, கடிதத்தின் நீளம் மற்றும் நான் செய்த ஆராய்ச்சி இரண்டிலிருந்தும், நான் மிகவும் அக்கறை கொள்கிறேன் என்பது தெளிவாகிறது. உலகளவில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளைப் படுகொலை செய்த GPU கொலை இயந்திரத்தைப் பற்றியும், இன்றும் கூட, சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவிலும், அதிருப்தியாளர்களை அடக்குவதன் மூலம் அதன் எதிர்-புரட்சிகரப் பாத்திரத்தை தொடர்ந்து ஆற்றுவதைப் பற்றியும் நான் கவலைப்படுகிறேன்.

FBI பற்றியும் எனக்கு அக்கறை உண்டு. 1940களில் FBI எமது முன்னணித் தோழர்களில் 18 பேரைக் குற்றம் சாட்டி சிறைக்கு அனுப்பியது. எமது இயக்கம் உட்பட, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு முற்போக்கான இயக்கத்திலும் ஊடுருவியுள்ள FBI, மால்கம் X, மார்ட்டின் லூதர் கிங் மற்றும் ஏராளமான கறுப்பின பாந்தர் அமைப்பினர் மீதான கொலைகளில் தீவிர பங்கு வகித்துள்ளது.

கெல்ஃபான்டின் இந்தக் கடிதம் பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைக் கோரியது: 1) “ஜேம்ஸ் பி. கனனின் தனிப்பட்ட செயலாளரான சில்வியா பிராங்க்ளின் ஒரு GPU முகவரா?” 2) “1938 இல் GPU உடன் தனிப்பட்ட தொடர்பு கொள்ள ஜோசப் ஹான்சனுக்கு சோசலிச தொழிலாளர் கட்சி அங்கீகாரம் அளித்ததா?” 3) “1940 இல் FBI ஐ சந்திக்க ஜோசப் ஹான்சனுக்கு சோசலிச தொழிலாளர் கட்சி அங்கீகாரம் அளித்ததா?”

லொஸ் ஏஞ்சல்ஸில் நன்கு அறியப்பட்ட மற்றும் மதிக்கப்படும் ஒரு தலைசிறந்த பொது வழக்கறிஞரான ஆலன் கெல்ஃபண்ட், உண்மைகளை உன்னிப்பாகக் கவனிப்பதற்காக, பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என்ற விசாரணையால் வெளிக்கொணரப்பட்ட ஆவணங்கள் மற்றும் அது தொடர்புடைய ஆதாரங்களை விரிவாக மதிப்பாய்வு செய்து, இந்தக் கேள்விகளுக்கு ஆதரவளித்தார். தனது முடிவில் கெல்ஃபாண்ட் பின்வருமாறு எழுதினார்:

எனது கடிதத்தை புறநிலையாகப் படித்தால், சில்வியா பிராங்க்ளின் ஒரு GPU முகவர் என்றும், GPU மற்றும் FBI உடனான ஜோசப் ஹான்சனின் உறவு குறைந்தபட்சம், மிகவும் கேள்விக்குரியது மற்றும் உடனடி மற்றும் முழுமையான ஆய்வு தேவை என்றும், ஒருவர் முடிவுக்கு வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹான்சனின் பதில்களைப் படிக்கும் ஒருவர், அவரது “பதில்கள்” ஏய்ப்புகள், திரிபுகள் மற்றும் தவறான விளக்கங்களால் நிறைந்துள்ளன என்ற முடிவுக்கு வர வேண்டும்.

ஏப்ரல் 7, 1978 தேதியிட்ட ஒரு கடிதத்தில், சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான லாரி சீகிள், கெல்ஃபான்ட் எழுப்பிய ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக, கெல்ஃபான்ட்டுக்கு ஒரு எச்சரிக்கையும் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது:

ஜோ ஹான்சனுக்கு எதிரான உங்கள் குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்கலாம் என்பது குறித்து எங்கள் கருத்தைக் கேட்டுள்ளீர்கள். இந்தக் கேள்விக்கான பதில் எளிது. கட்சி தனது அணிகளுக்குள் முகவர்களை தூண்டிவிட அனுமதிக்க முடியாது, அனுமதிக்கவும் மாட்டாது. ஹீலியட் அவதூறுகளை நீங்கள் மீண்டும் மீண்டும் கூறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. …

நாங்கள் மீண்டும் கூறுகிறோம்: ஜோ ஹான்சன் அல்லது வேறு எந்தக் கட்சி உறுப்பினருக்கும் எதிரான அவதூறுகளை பரப்புவதற்கு நீங்கள் மேற்கொண்டு வரும் எந்த நடவடிக்கையும், கட்சியின் நிறுவனக் கொள்கைகளை மீறுவதாகும். மேலும், அது பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

1960கள் மற்றும் 1970களின் முற்பகுதியில், ​​FBI யின் மதிப்பிழந்த எதிர் அரசியல் அமைப்புகளை புலனாய்வு செய்யும் COINTELPRO திட்டத்தின் போது, முகவர்கள் மற்றும் தகவல் தருபவர்கள் SWPக்குள் பெருமளவில் ஊடுருவியது தொடர்பாகவும், முதன்மையாக விளம்பரம் மற்றும் நிதி திரட்டும் நோக்கங்களுக்காகவும், SWP ஒரு வழக்கைத் தொடர்ந்தது. இதில், SWP ஒரு முகவரைக் கூட அடையாளம் காணவோ அல்லது கண்டுபிடிக்கவோ முயற்சிக்கவில்லை.

கெல்ஃபான்ட் டிசம்பர் 18, 1978 அன்று, சோசலிச தொழிலாளர் கட்சியின் வழக்குக்கு ஆதரவாக ஒரு அமிக்கஸ் கியூரியா (”நீதிமன்றத்தின் நண்பர்”) என்ற அறிக்கையை தாக்கல் செய்தார். எவ்வாறிருப்பினும், சோசலிச தொழிலாளர் கட்சியின் அக்கறையற்ற மற்றும் முற்றிலும் பிரச்சார முயற்சிக்கு மாறாக, கெல்ஃபாண்டின் அறிக்கை, “SWP இல் உள்ள அனைத்து தகவல் தருபவர்களின் பெயர்களையும், அவர்களின் கடந்த கால மற்றும் நிகழ்காலம் தொடர்பான பெயர்களையும் வெளியிட” அமெரிக்க அட்டர்னி ஜெனரலை கட்டாயப்படுத்துமாறு, தலைமை நீதிமன்றத்தை கோரியது.

சோசலிச தொழிலாளர் கட்சியில் உள்ள அதன் முகவர்களை அமெரிக்க அரசாங்கம் அடையாளம் காண வேண்டும் என்ற கெல்ஃபான்டின் கோரிக்கைக்கு ஆவேசத்துடன் எதிர்வினையாற்றிய ஜாக் பார்ன்ஸ், ஜனவரி 5, 1979 அன்று கெல்ஃபாண்டை வெளியேற்றக் கோரி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். ஒரு வாரம் கழித்து, ஜனவரி 11 அன்று, அரசியல் குழு கெல்ஃபாண்டை வெளியேற்றியது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜோசப் ஹான்சன், ஒரு வாரம் கழித்து இறந்து போனார். அரசியல் குழுவின் முன் ஆஜராகி தன்னை தற்காத்துக் கொள்ள கெல்ஃபாண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஜனவரி 29, 1979 தேதியிட்ட அரசியல் குழுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் தனது வெளியேற்றத்திற்கு பதிலளித்த கெல்ஃபாண்ட், தான் “வெளியேற்றப்படவில்லை, களையெடுக்கப்பட்டதாகவும், இந்த நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட்டதே ஒழிய சோசலிச தொழிலாளர் கட்சியால் அல்ல” என்றும் தெரிவித்தார்.

ஜூலை 18, 1979 அன்று, கெல்ஃபான்ட் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் உரிமைகள் தொடர்பான வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கில், அமெரிக்க அட்டர்னி ஜெனரல், FBI, தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமை ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டனர். அமெரிக்க அரசாங்க முகவர்கள், பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல் தொடர்புக்கான அரசியலமைப்பு உரிமையை மீறி, SWP இலிருந்து அவரை வெளியேற்றியதாக கெல்ஃபாண்ட் குற்றம் சாட்டினார்.

சோசலிச தொழிலாளர் கட்சி உடனடியாக இந்த வழக்கை தள்ளுபடி செய்ய ஒரு மனுவை தாக்கல் செய்தது. நவம்பர் 19, 1979 அன்று, அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி மரியானா ஆர். பிபேல்சர் முன் நடந்த விசாரணையில், கெல்ஃபான்ட் தனது வழக்கின் சட்ட அடிப்படையை பின் வருமாறு விளக்கினார்:

அரசாங்கம் தனது ஊடுருவலின் மூலம், இந்த அரசியல் கட்சி எதை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதை சிதைக்க முயற்சித்தது மட்டுமல்லாமல், என்னைப் போன்ற கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தின் ஊடுருவல் குறித்து விசாரிக்க முயற்சிக்கும்போது, நாங்கள் வாயை மூடிக்கொள்ள வேண்டும், அமைதியாக இருக்க வேண்டும் என்றும், இதை மீறி நாங்கள் விடாப்பிடியாக தொடர்ந்தால் நாங்கள் வெளியேற்றப்படுவோம் என்று கூறப்படுவதை எதிர்த்து நான் போராடுகிறேன். எமது கட்சியினுள் எமது அரசியலை உண்மையிலேயே ஊக்குவிக்க எமக்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், அரசாங்கம் அதன் முகவர்கள் மூலமாக அவ்வாறு செய்வதைத் தடுக்கிறது, இதுவே எனது முதல் திருத்த வாதத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஏழு மாதங்கள் கழித்து, ஜூன் 27, 1980 அன்று, நீதிபதி மரியானா ஆர். பிபேல்சர், கெல்ஃபாண்டின் வழக்கை தள்ளுபடி செய்ய, சோசலிச தொழிலாளர் கட்சியின் மனுவை நிராகரிக்கும் உத்தரவை பிறப்பித்தார். கெல்ஃபண்ட்டின் மைய சட்ட வாதத்தை ஆதரித்த ஒரு நீண்ட தீர்ப்பில் நீதிபதி பிபெல்சர், “அரசாங்கம் பிரதிவாதியின் அரசியல் கட்சியை கையகப்படுத்துவதும், கையாளுவதும் அதன் உறுப்பினர்களின் சங்க உரிமைகளில் அப்பட்டமான தலையிடுதலாகும் என்பதும், அதை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகக் கருத முடியாது என்பதும் தெளிவாகிறது” என்று எழுதினார்.

அனைத்திற்கும் மேலாக, கெல்ஃபாண்ட் யார் கட்சி உறுப்பினராக இருக்க முடியும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்று விரும்பினார் என்ற SWP இன் தவறான கூற்றுகளுக்கு முரணாக, நீதிபதி பிபேல்சர், “அரசாங்கம், ஒரு உறுப்பினர் விரும்பும் ஒரு அரசியல் கட்சியில் இருந்து அவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியேற்றக்கூடாது” என்று எழுதினார்.

“கெல்ஃபான்ட், அரசாங்க முகவர்கள் மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாவிட்டால், அவரது கூற்றுக்கள் முழு விசாரணையுடன் வழங்கப்படும் தீர்ப்புக்கான ஒரு மனுவைத் தாங்காது” என்ற எச்சரிக்கையுடன் பிபேல்சர் தனது உத்தரவை முடித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், விசாரணையின் போது, கெல்ஃபாண்ட் தனது குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக நிரூபிக்கத் தவறினால், விசாரணைக்கு முன்னர் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பதாகும்.

அடுத்த 18 மாதங்களுக்கு, நீதிமன்றம் வெளிப்படுத்தல் செயல்முறையை திறம்பட பயன்படுத்த கெல்ஃபாண்ட்டை அனுமதிப்பதற்கு முன்பே, முழு விசாரணை இல்லாமல் சுருக்க தீர்ப்புக்கான அற்பமான மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம், சாட்சியங்களை சேகரிப்பதை SWP தடுக்க முயன்றது.

பிப்ரவரி 1, 1982 அன்று, நீதிபதி பிபேல்சர் இறுதியாக ஜூலை 12, 1982 அன்று இறுதி சுருக்க தீர்ப்பு விசாரணைக்கு முன்னர் சாட்சியங்களை வெளியிட கெல்ஃபாண்டிற்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கியதோடு, அதை அவர் ஜூலை 12, 1982 அன்று நடத்த திட்டமிட்டார். அடுத்த மூன்று மாதங்களில், கெல்ஃபாண்டும் அவரது வழக்கறிஞர்களும் ஒரு தீவிரமான கண்டுபிடிப்பு செயல்முறையை மேற்கொண்டனர். இதில் SWP தேசிய செயலாளர் ஜாக் பார்ன்ஸ், அமைப்பின் பிற முக்கிய உறுப்பினர்கள் மற்றும் 1930களின் பிற்பகுதியிலும் 1940களின் முற்பகுதியிலும் தீவிரமாக செயல்பட்ட கட்சி உறுப்பினர்களின் வாக்குமூலங்களும் அடங்கும்.

ட்ரொட்ஸ்கியின் மகன் லியோன் செடோவ் உட்பட 1937 மற்றும் 1938 ஆம் ஆண்டுகளில் நான்காம் அகிலத்தின் முக்கிய உறுப்பினர்களின் படுகொலைகளில் மையப் பங்கு வகித்த ஒரு இழிபுகழ்பெற்ற GPU முகவரான மார்க் ஸ்போரோவ்ஸ்கியையும் கெல்ஃபாண்ட் விசாரிக்க முயன்றார். ஸ்போரோவ்ஸ்கி உண்மையில் ஏப்ரல் 1982 இல் ஒரு சாட்சியமளிக்கும் அறைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால், SWP மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் தீவிர ஒத்துழைப்புடன் புதிதாக நிறைவேற்றப்பட்ட புலனாய்வு அடையாளங்கள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி, ஸ்போரோவ்ஸ்கி கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.

எவ்வாறிருப்பினும், 90 நாள் விசாரணையின் போது கெல்ஃபாண்ட் கண்டுபிடித்து சேகரித்த சான்றுகள், ஜூன் 28, 1982 அன்று SWP இன் முழு விசாரணையுடன் இல்லாத சுருக்கமான தீர்ப்புக்கான இறுதி மனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், SWP மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் மீதான அவரது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தின.

ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கட்சியின் தலைவர்களாக இருந்த தனிநபர்கள் உட்பட, சோசலிச தொழிலாளர் கட்சி உறுப்பினர்களுடனான வாக்குமூலங்கள், GPU உடனான ஹான்சனின் சந்திப்புகள் அல்லது FBI உடனான சந்திப்புகள் எதுவும் அறியப்படவில்லை அல்லது அங்கீகரிக்கப்படவில்லை என்பதை உறுதியாக ஸ்தாபித்தன. ஹான்சனின் அபத்தமான கருத்துக்கள் பொய்களைக் கொண்டிருந்தன. இதேபோல், பெர்ன்ஸ் மற்றும் இன்றைய SWP தலைவர்களின் கூற்றுக்களில், கெல்ஃபண்ட்டின் கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது என்பதும் குறைவான பொய்யல்ல.

முழு விசாரணை இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தொடக்கப் பத்தியில் பின்வருமாறு கூறப்பட்டது:

தொண்ணூறு நாட்கள் தீவிர கண்டுபிடிப்பிலிருந்து பெறப்பட்ட கணிசமான சான்றுகள், 1979 ஆம் ஆண்டில் சோசலிச தொழிலாளர் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து ஆலன் கெல்ஃபாண்ட் விரைவாக வெளியேற்றப்பட்டபோது, ​​சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமை அமெரிக்க அரசாங்கத்துடனான அதன் இரகசிய தொடர்பைப் பாதுகாக்கச் செயல்பட்டது என்ற கெல்ஃபாண்டின் வாதத்தை வலுவாக ஆதரிக்கின்றன. கட்சிக்குள் அரசாங்க ஊடுருவல் பற்றிய அவரது தொடர்ச்சியான விசாரணைகள், அதன் தலைமைக்குள் உள்ள முகவர்கள் மத்தியில் நெருக்கடியை உருவாக்கியது. மேலும், அவர்கள் கட்சி அரசியலமைப்பின் உறுதியான பாதுகாவலர்களாகவும் சோசலிச பாரம்பரியத்தின் விசுவாசமான பார்வையாளர்களாகவும் காட்டிக் கொண்டு, அடிப்படையில் சமரசம் செய்ய முடியாத வகையில் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வழக்கின் சட்ட சுருக்கம் மேலும் பின்வருமாறு கூறியது:

முகவர்கள், ஒருவேளை மிக வெற்றிகரமாக, நீண்ட காலத்திற்கு தங்கள் போலித்தனத்தை மறைக்க முடியும். ஆனால், தவிர்க்க முடியாமல், முகவர்களாக தங்கள் பங்கிற்கு நேரடி அச்சுறுத்தலை அவர்கள் உணரும்போது, ​​முகமூடி சிதைந்துவிடும். எனவே இந்த வழக்கு, பிரதிவாதிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாக ஆராய்வதை சார்ந்துள்ளது. அவர்களது நடத்தை வழக்கமான தனிநபர்களின் நடத்தை என்று விளக்கப்படாமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் என்று கூறப்படுகிறார்களோ, அவர்கள் ட்ரொட்ஸ்கியின் மிகவும் கொள்கை அடிப்படையிலான அரசியலின் மிகவும் விசுவாசமான ஆதரவாளர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் என்று விளக்கப்பட வேண்டும். சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியலமைப்பு மற்றும் அது பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் பெருமைமிக்க மரபுகளுக்கு இணங்க, பிரதிவாதியின் கேள்விகளைக் கையாள்வதில் ஒரு சட்டபூர்வமான தலைமைக்கு எந்தச் சிரமமும் இருந்திருக்காது. கேள்விகளுக்கு நேரடியாகவும் முடிந்தவரை முழுமையாகவும் பதில் சொல்லப்பட்டிருக்கும். அதற்கு பதிலாக, கட்சி பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைப் பற்றிய பிரதிவாதியின் தொடர்ச்சியான, ஆனால் பொருத்தமான கேள்விகள் முகவர்களிடையே ஒரு நெருக்கடியை உருவாக்கி, அவர்கள் தங்கள் கைகளைக் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜூலை 12, 1982 அன்று, நீதிபதி பிபெல்சர் — கெல்ஃபான்ட் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தியதன் நோக்கம் மற்றும் தீவிரத்தால் தெளிவாக கோபமடைந்து அதிர்ச்சியடைந்த போதிலும், முழு விசாரணை இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கான சோசலிச தொழிலாளர் கட்சியின் மனுவை நிராகரித்து, வழக்கை விசாரணைக்கு அனுப்பினார்.

அடுத்த சில மாதங்களில், முழு விசாரணை இல்லாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்டதற்கும், மார்ச் 1983 இல் நடந்த விசாரணைக்கும் இடையில், கெல்ஃபான்ட் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் GPU உடனான ஜோசப் ஹான்சனின் உறவு மற்றும் கனனின் தனிப்பட்ட செயலாளரான சில்வியா காலன், அல்லது கால்டுவெல் பிராங்க்ளின் உண்மையான பங்கு தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்கான போராட்டத்தைத் தொடர்ந்தனர். விசாரணை தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, கெல்ஃபாண்ட் நியூ யோர்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில், 1954 மற்றும் 1958 ஆம் ஆண்டுகளில் பெடரல் ஜூரிகள் முன் காலனின் சாட்சியத்தை வெளியிடுவதற்கு அங்கீகாரம் அளிக்குமாறு மனு அளித்தார். கெல்ஃபாண்டின் மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக, நியூ யோர்க் நீதிமன்றம், பொது வெளியீடு குறித்த முடிவுக்காக படியெடுப்பு பிரதிகளை நீதிபதி பிபெல்சருக்கு அனுப்புமாறு கட்டளையிட்டது.

இந்த விசாரணை மார்ச் 2, 1983 அன்று தொடங்கி ஒரு வாரம் நீடித்தது. விசாரணை தொடர்ந்தபோது, ​​சாட்சியம் SWP பிரதிவாதிகளின் கதையை தெளிவாக இழிவுபடுத்தியது, பிபெல்சர் வழக்கறிஞர்களை ஒரு கலந்துரையாடலுக்காக தனது அறைக்கு அழைத்தார். பின்னர் அவர் சாட்சியங்களின் —ஒரு சிவில் விசாரணையில் வெற்றிபெறத் தேவையான ஆதாரத்தின் அளவு— முதன்மையான விளக்கத்தை வழங்கினார். பொதுவாக, ஆதாரங்களின் மேன்மை என்பது, உண்மைகளின் அடிப்படையில் நிகழ்வுகளின் பதிப்பு மிகவும் நம்பகமானதாக இருக்கும் தரப்பினர் விசாரணையில் மேலோங்கி நிற்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. ஆதாரங்களை எடைபோட்டு, வழக்கு விசாரணை செய்பவர் (இந்த வழக்கில், நீதிபதி) வழக்கறிஞர் அல்லது பிரதிவாதியின் திசையை தீர்மானிக்க வேண்டும்.

இருப்பினும், SWP தலைவர்கள் தன்னை வெளியேற்ற முடிவு செய்ததற்கான கெல்ஃபாண்டின் விளக்கம் பிரதிவாதிகளின் விளக்கத்தை விட நம்பகமானதாக இருந்ததால் மட்டுமே அவர் வெற்றிபெற முடியாது என்று பிபேல்சர் அறிவித்தார். மாறாக, சோசலிச தொழிலாளர் கட்சி அவர்களின் நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு விளக்கத்தையும் முன்வைக்க முடிந்தவரை, அது எவ்வளவுதான் அபத்தமானதாகவும் உண்மைகளால் ஆதரிக்கப்படாவிட்டாலும், கெல்ஃபாண்டால் அதை “முன்னிலைப்படுத்த முடியாது”. ஒரு அசாதாரண அறிக்கையில் நீதிபதி பிபேல்சர், கெல்ஃபாண்டிற்கும் அவரது வழக்கறிஞர்களுக்கும், “குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஆதாரங்களின் ஆதிக்கத்தின் அடிப்படையில் நீங்கள் வெற்றிபெற முடியாது” என்று கூறினார்.

ஒரு வார கால விசாரணையின் போது, கெல்ஃபான்டின் வழக்கறிஞர்கள் சில்வியா காலனின் சாட்சியத்தின் ஜூரிகளின் படியெடுப்புகளை வெளியிடுமாறு பிபேல்சரிடம் பலமுறை கேட்டுக்கொண்டனர். நீதிபதி இந்தக் கோரிக்கைக்கு இணங்கவில்லை. ஆனால், விசாரணையின் இறுதி நாளில், சில்வியா கால்டுவெல்லுக்கு ஒரு நெகிழ்ச்சியான நன்றி செலுத்திய ஜாக் பார்ன்ஸ், கால்டுவெல் SWP க்குள் ஒரு GPU இரகசிய முகவராக சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லை என்று வலியுறுத்தினார். அவர் பின்வருமாறு அறிவித்தார்:

அந்தப் பெண் இயக்கத்தில் இருந்தபோது மட்டுமல்ல, அவர் வெளியேறியதிலிருந்து நடந்த அனைத்தும் அவர் சரியாக இருந்தார் என்பதைக் குறிக்கிறது: அவர் எங்கள் இயக்கத்தின் ஒரு விசுவாசமான, கடின உழைப்பாளி மற்றும் முன்மாதிரியான உறுப்பினர்.

கெல்ஃபாண்டின் வழக்கறிஞர், அது அவருடைய கருத்தாகத் தொடர்ந்து இருக்கிறதா என்று கேட்டபோது, ​​பார்ன்ஸ் இன்னும் உறுதியாகத் தெரிவித்தார்.

சரி, கடந்த இரண்டு வருடங்களாக அவர் அனுபவித்த துன்புறுத்தல்களுக்குப் பிறகும், அவர் எனது ஹீரோக்களில் ஒருவர் என்பது இன்றைய எனது கருத்து.

அந்த நாளின் பிற்பகுதியில், அனைத்து சாட்சிகளும் தங்கள் சாட்சியத்தை முடித்த பிறகு, நீதிபதி பிபேல்சர் இறுதியாக 1954 மற்றும் 1958 ஆம் ஆண்டுகளின் படியெடுப்புக்களை வெளியிட்டார். தனது சத்தியப்பிரமாண சாட்சியத்தில், சில்வியா காலன் SWP க்குள் GPU இன் முகவராகப் பணியாற்றியதாக சாட்சியமளித்திருந்தார்.

விசாரணையின் போது மற்றொரு முக்கியமான ஆதாரம் வெளியிடப்பட்டது. அது, ஒரு நீண்டகால சோசலிச தொழிலாளர் கட்சி உறுப்பினரும், நெருங்கிய நண்பருமான ஹான்சனுக்கு எழுதிய கடிதமாகும். அதில் ஹான்சன் ஒரு GPU முகவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பல வருட தாமதத்திற்குப் பிறகு, நீதிபதி பிபெல்சர், இறுதியில் கெல்ஃபான்டுக்கு எதிராக தீர்ப்பளித்தார். அவரது நீடித்த மௌனம், அரசு முகவர்களின் பாதுகாப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளால், அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்வதற்கு சமம். அனைத்திற்கும் மேலாக, கெல்ஃபான்ட் சட்டக் கட்டணங்களை செலுத்த வேண்டும் அல்லது வேறு எந்த வகையான பண இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்ற சோசலிச தொழிலாளர் கட்சியின் கோரிக்கைக்கு நீதிபதி பிபேல்சர் ஒருபோதும் உடன்படவில்லை.

1983 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லொஸ் ஏஞ்சல்ஸில், ட்ரொட்ஸ்கியின் பாதுகாவலர் கேப்டன் ஹரோல்ட் ராபின்ஸுடன் ஆலன் கெல்ஃபண்ட்.

1977 இல், ஆலன் கெல்ஃபான்ட் முதன்முதலில் தனது கேள்விகளை எழுப்பியதிலிருந்தும், மார்ச் 1983 இல் விசாரணை முடிவடைந்ததிலிருந்தும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்தன. இதன் பின்னர், SWP இறுதியாக 1989 மே மாதம் கெல்ஃபாண்டிற்கு எதிரான சட்டக் கட்டணங்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தனது கோரிக்கையை கைவிட்டது. இந்த நீண்ட மற்றும் கடினமான செயல்முறை ஆலன் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், மிகவும் சிக்கலான வழக்குகளில் பிரதிவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞராக அவர் முழுநேரமாக லொஸ் ஏஞ்சல்ஸில் பணியாற்றி வந்தபோது, இந்த வழக்கு வெளிப்பட்டது.

1986 வசந்த காலத்தில் ஆலன் அனுபவித்த உடல்நிலை பாதிப்புக்கு, தொழில்முறை மற்றும் அரசியல் பணிகளின் ஒருங்கிணைந்த விளைவாக ஏற்பட்ட உடல், அறிவுசார் மற்றும் உணர்ச்சி ரீதியான அழுத்தம் காரணமாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு நாளங்கள் மற்றும் நிணநீர் மண்டலத்தில் ஒரு வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் தீவிர கதிர்வீச்சு சிகிச்சையை ஆலன் பெற்றார். புற்றுநோய் செல்கள் அகற்றப்பட்டன. ஆனால், கதிரியக்கவியலாளர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஆலன் சிகிச்சையால் ஏற்படும் தொடர்ச்சியான பக்க விளைவுகளை சந்தித்தார். இருப்பினும், அவர் தனது தொழில்முறை பணியை அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் ஆற்றலுடன் தொடர்ந்தார்.

கதிர்வீச்சின் கடினமான பின்விளைவுகளில் இருந்து மீண்டு வந்த அதேவேளையில், 1986 பெப்ரவரியில் அனைத்துலகக் குழுவில் இருந்து முறித்துக் கொண்டதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP – Workers Revolutionary Party) பாதுகாப்பும் நான்காம் அகிலமும் மற்றும் கெல்ஃபான்ட் வழக்கு ஆகியவற்றை நிராகரித்ததை அலன் சமாளிக்க வேண்டியிருந்தது. 1987 பிப்ரவரி 22 தேதியிட்ட WRP இன் தலைவர் கிளிஃப் சுலோட்டருக்கு எழுதிய ஒரு பகிரங்க கடிதத்தில், “பாதுகாப்பும் நான்காம் அகிலமும் குறித்து நீங்கள் முழுமையாகப் பரிச்சயமுடையவர்” என்பதை நினைவூட்டி பின்வருமாறு எழுதினார்

ஆரம்பத்திலிருந்தே இந்த விசாரணையில் நீங்கள் நெருக்கமாக ஈடுபட்டிருந்ததை WRP மற்றும் அனைத்துலகக் குழுவின் வெளியீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. அடிப்படை பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த உங்கள் விரிவான அறிவும் புரிதலும் காரணமாக, நான் லொஸ் ஏஞ்சல்ஸ் பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சாட்சிகளின் பட்டியலில், உங்கள் அனுமதியுடன், உங்களைச் சேர்க்க வழிவகுத்தது. அங்கு, நான் சேகரித்த ஆதாரங்களின் அரசியல் மற்றும் வரலாற்று தாக்கங்கள் குறித்து நிபுணராக சாட்சி அளிக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தீர்கள்.

மேலும் கெல்ஃபான்ட் பின்வருமாறு குறிப்பிட்டார்:

ஆனால் இப்போது நீங்கள், அரசியல்ரீதியாகவோ அல்லது உண்மை ரீதியாகவோ எதையும் விளக்காமல், இந்த வழக்கு தொடர்பான உங்கள் புதிய கவலைகள் குறித்து என்னுடன் கலந்தாலோசிக்காமல், முகவர்கள் மேலாதிக்கம் செலுத்தும் SWP இன் நிலைப்பாட்டை ஏறத்தாழ வார்த்தைக்கு வார்த்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். WRP ன் தலைவர்களுக்கு இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் இருந்திருந்தால், ஏன் என்னைத் தொடர்பு கொள்ளுமாறு நீங்கள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கணிசமான தனிப்பட்ட ஆபத்துக்கு முகம்கொடுத்து, இந்த விசாரணைக்கு என் வாழ்க்கையின் பல ஆண்டுகளை அர்ப்பணித்துள்ளேன். …

ட்ரொட்ஸ்கியின் படுகொலை மற்றும் ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்டாலினிசத்தின் முகவர்கள் நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவியது பற்றிய உண்மையை அம்பலப்படுத்தவும், பாதுகாப்புக் கேள்வி குறித்து நீங்களும் பிற WRP உறுப்பினர்களும் பல ஆண்டுகளாக எழுதியவற்றின் நேர்மையைப் பாதுகாக்கவும், எனது உயிரையும் அரசியல் நற்பெயரையும் பணயம் வைத்து, வரலாற்று உண்மையை நிலைநாட்டுவதற்காக நான் யாருடன் நெருக்கமாக ஒத்துழைத்தேனோ அவர்களால் நான் முதுகில் குத்தப்பட்டிருப்பதை உணர்கிறேன்.

நான் இதை ஒரு தனிப்பட்ட கேள்வியாகவோ அல்லது எந்த வகையிலும் புகார் செய்வதற்காகவோ எழுப்பவில்லை. நான் எதற்கும் வருத்தப்படவில்லை. WRP க்குள் வெடிப்புகளை எதிர்பார்த்து, உங்கள் சொந்த பரிணாமத்தை முன்கூட்டியே பார்க்க முடிந்திருந்தாலும் கூட, SWP க்குள் போராட்டத்தைத் தொடங்குவதிலிருந்தும், நான் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, தொழிலாளர் இயக்கத்தின் நலன்களுக்காக எனது ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதிலிருந்தும் ஒரு ஆபத்தான சதித்திட்டத்தை அம்பலப்படுத்துவதிலிருந்தும் அது என்னைத் தடுத்திருக்காது. ஆனால், உங்கள் இரக்கமற்ற அரசியல் நம்பிக்கைத் துரோகத்தால் ஒரு முக்கியமான வர்க்கப் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. தெளிவான சிந்தனை கொண்ட எந்தத் தொழிலாளியும், தலைவர்கள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றி, உடனடி பிரிவினை ஆதாயங்களின் நலனுக்காக முதுகில் குத்தத் தயாராக இருக்கும் ஒரு அமைப்பின் மீது தனது நம்பிக்கையை வைப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா?

ட்ரொட்ஸ்கிசம், மார்க்சிசம் மற்றும் புரட்சிகர சோசலிசத்துடனான அனைத்து அரசியல் மற்றும் அறிவுசார்ந்த தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டிருந்த இருந்த சுலோட்டர், ஆலனின் கடிதத்திற்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை.

ஆலன் கெல்ஃபான்ட் 2004 இல் [Photo: David North/WSWS]

ஆலனின் மரணத்திற்குப் பிறகு, சோசலிச அரசியலில் அவரது ஈடுபாட்டை மீளாய்வு செய்யும்போது, அவரது பெயரைக் கொண்ட வழக்கில் அவர் வகித்த மையப் பங்கிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது தவிர்க்க முடியாததாகிறது. எவ்வாறிருப்பினும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் அவரது பங்களிப்பு கெல்ஃபான்ட் வழக்குடன் முடிந்துவிடவில்லை என்பதை வலியுறுத்த வேண்டும். அவரது வாழ்நாளில் எஞ்சியிருந்த கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களில், ஆலன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக சளைக்காமல் போராடினார். அவரது அன்றாட அரசியல் செயல்பாடு லொஸ் ஏஞ்சல்ஸை மையமாகக் கொண்டிருந்தாலும், அங்கு அவர் தொடர்ந்து வழக்கறிஞர் பயிற்சி செய்தார். ஆலனின் குறிப்பிடத்தக்க புறநிலைத் தன்மையும், தீர்க்கதரிசனமும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஒரு விலைமதிப்பற்ற அறிவுசார் வளமாக இருந்தன. சமீபத்திய சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய காங்கிரஸால், உள்கட்சி விசாரணைகளை நடத்துவதற்குப் பொறுப்பான அதன் கட்டுப்பாட்டு ஆணையத்தில் பணியாற்ற ஆலன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு அவர் தீவிர பங்களிப்பாளராக இருந்தார். அவர் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி அதற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆலன் கில்மேன் என்ற புனைப்பெயரில், அவர் பல்வேறு விடயங்கள் குறித்து, குறிப்பாக விளையாட்டு, கலைக் களஞ்சிய அறிவைக் கொண்ட ஒரு துறையில் எழுதினார்.

மே மாதம் 9 தேதியிட்ட ஆலன் எழுதிய கடைசிக் கட்டுரை, “அல்காட்ராஸ் மற்றும் அமெரிக்காவின் குவாண்டனாமோவை மீண்டும் திறக்க ட்ரம்ப் முன்மொழிகிறார்” என்ற தலைப்பில் இருந்தது. ஆலன் இந்த திட்டத்தை “வெறுக்கத்தக்கது மற்றும் வெளிப்படுத்தக்கூடியது” என்று கண்டித்தார்.

இது நாடு முழுவதும் இதேபோன்ற சித்திரவதை முகாம்களைக் கட்டுவதை இயல்பாக்க உதவும். மேலும், இது அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு தீர்வாக காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட, பிறர் துன்பத்தில் இன்பம் காண்பதற்கான நிரூபணமாகும், இது ட்ரம்ப்பால் மட்டுமல்ல, முழு ஆளும் வர்க்கத்தாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

தனது அரசியல் மற்றும் தொழில்முறை சட்டப் பணியில், ஆலன் விதிவிலக்கான புறநிலை மற்றும் பகுப்பாய்வு திறன்களை வெளிப்படுத்தினார். ஆனால், அவரது வலிமையான அறிவுசார் சக்திகள் ஆழமான மனிதாபிமான ஆளுமையின் மூலம் பிரதிபலிக்கப்பட்டன. ஒரு பொது பாதுகாவலராக, தவறாக குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிக்க ஆலன் தீவிரமாகப் போராடுவார். இருப்பினும், கடுமையான சாட்சியங்களின் சுமையை எதிர்கொள்ளும் பிரதிவாதிகளின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர் சமமாக உறுதியாக இருந்தார். ஆலன் ஆழ்ந்த பச்சாதாபத்தைத் தக்க வைத்துக் கொண்டார், அவர்களை “அரக்கர்களாக” அல்ல, மாறாக ஒரு சமூக சோகத்தில் சிக்கியுள்ள ஒரு விரோதமான மற்றும் அடக்குமுறை சமூகத்தின் பாதிக்கப்பட்டவர்களாகக் கண்டார்.

அவரது நீண்ட தொழில்முறை வாழ்க்கையின் பிந்தைய கட்டங்களில், ஆலன் மரண தண்டனை வழக்குகளில் பிரதிவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்த நியமிக்கப்பட்டார். இந்த வழக்குகள் அனைத்திலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையான மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட குற்றங்கள் உண்மையிலேயே கொடூரமானவை. ஆனால், கலிபோர்னியா மாநிலம் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரின் பகுத்தறிவற்ற செயலுக்கு மரண தண்டனையைக் கோருவதன் மூலம் பதிலளிக்கும் என்று ஆலன் கோபமடைந்தார். பிரதிவாதிகளின் உயிரைக் காப்பாற்ற ஆலன் இடைவிடாமல் போராடினார். மேலும், அவர் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும் இரத்தவெறி பிடித்த மாவட்ட வழக்கறிஞர்களுக்கு எதிராக வெற்றி பெற்றதில் அவர் பெருமிதம் கொண்டார்.

அரசியல் மற்றும் சட்டப் பணிகளின் அனைத்து அழுத்தங்களுக்கும் மத்தியில், ஆலன் ஒரு அற்புதமான நிறைவான தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தினார். அவரது 37 ஆண்டுகால தோழியான ரோசன்னா, ஆலனின் வாழ்க்கையில் மகத்தான மகிழ்ச்சியைக் கொண்டு வந்தார். ரோசன்னாவை சோசலிச சமத்துவக் கட்சிக்கு ஆலன் அறிமுகப்படுத்திய போதிலும், தனது சொந்த அனுபவம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில், ரோசன்னா கட்சியின் உறுப்பினரானார்.

ஆலனின் வாழ்க்கையின் இறுதி ஆண்டு தொடர்ச்சியான உடல்நல நெருக்கடிகள் மற்றும் உடல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது. இருந்தபோதிலும், அவர் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையான கண்ணோட்டத்தை வைத்திருந்தார். அவர் அர்ப்பணித்திருந்த வாழ்க்கையின் இலட்சியம் தொடரும் என்று உறுதியாக நம்பினார். பாதுகாப்பும் நான்காம் அகிலமும் கருப்பொருளை மையமாகக் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சியின் 2025 இணையவழி சர்வதேச கோடைக்காலப் பள்ளியில் ஆலன் பங்கேற்றார்.

ஜூலை 15 அன்று, பள்ளி திறக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் ஆலனுக்கு பின்வருமாறு எழுதினேன்:

பாதுகாப்பும் நான்காம் அகிலமும் பற்றிய ஒரு தீவிர மீளாய்வுக்கு அர்ப்பணிக்கப்படவிருக்கும் சர்வதேச கோடைகாலப் பள்ளிக்கான கட்சியின் தயாரிப்பை நீங்கள் தீவிர ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். பள்ளியின் பல அமர்வுகள் உங்கள் பெயரைக் கொண்ட சட்ட வழக்கை கவனமாக மதிப்பாய்வு செய்வதற்கு அர்ப்பணிக்கப்படும். ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கும், நான்காம் அகிலத்தின் மீதான ஸ்டாலினிச-ஏகாதிபத்திய கூட்டுத் தாக்குதலுக்கும் வழிவகுத்த சதித்திட்டம் குறித்த அனைத்துலகக் குழுவின் விசாரணையை சரிபார்த்து நிரூபிக்க கெல்ஃபாண்ட் வழக்கு உதவியது. ஒரு பெடரல் மாவட்ட நீதிமன்றத்தின் விரோதமான சூழலில், வரலாற்று ரீதியாக முன்னெப்போதும் இல்லாத இந்த வழக்கைத் தொடுப்பது என்பது, உங்கள் தைரியம், உறுதிப்பாடு மற்றும் வரலாற்று உண்மைக்கு விட்டுக்கொடுக்காத அர்ப்பணிப்பு இல்லாமல் சாத்தியமில்லை.

நீங்கள் முதலில், GPU மற்றும் FBI உடனான ஹான்சனின் உறவுகள் குறித்த ஆதாரங்களுக்கு பதிலளிக்கத் தவறிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைமையை, சவால் செய்யும் நம்பிக்கையான கேள்விகளுடன் எதிர்கொண்டு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்துள்ளன. காலப்போக்கு உங்கள் செயல்களின் தொலைநோக்கின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. சர்வதேசப் பள்ளியில் படிக்கும் கிட்டத்தட்ட அனைத்து மாணவர்- உறுப்பினர்களும், மார்ச் 1983 இல் கெல்ஃபாண்ட் வழக்கு விசாரணைக்குப் பிறகு பல ஆண்டுகள் அல்லது ஒன்று அல்லது இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு பிறந்தவர்கள் ஆவர். அத்தகைய மையப் பாத்திரத்தை நீங்கள் வகித்த போராட்டம் பற்றிய ஆய்வு, புரட்சிகர தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் புதிய மற்றும் எழுச்சி பெற்று வரும் தலைமுறைக்கு விமர்சன அறிவு மற்றும் உத்வேகத்தின் ஒரு ஆதாரமாக உள்ளது, மேலும் அது தொடர்ந்து இருக்கும்.

ஆலன், நீங்கள் மகத்தான மற்றும் நீடித்த முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளீர்கள். உங்கள் வாழ்க்கையையும் சாதனைகளையும் திருப்தியுடன் பார்க்க உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது.

என் பங்கிற்கு, ஆலன், இத்தனை வருடங்களாக உங்கள் நண்பராகவும் தோழராகவும் இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, ஆலன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோசப் கிஷோருக்கு பின்வருமாறு எழுதினார்:

அரசியல் ரீதியாக இது மிகவும் தீவிரமான மற்றும் உற்சாகமான காலகட்டமாகும். மனிதகுலத்தின் மிகப்பெரிய சாதனையான உலக சோசலிச புரட்சியை நிறைவேற்றும் மத்தியில் நான் வெளியேற வேண்டியிருக்கும் என்பதுதான் எனது ஒரே வருத்தமாகும். ஆனால், நீங்கள் மற்றும் பலர் அந்தப் பணியை நிறைவேற்றுவீர்கள் என்பதை அறியும்போது, மனது ஆறுதலளிக்கிறது.

ஒரு தோழனுக்கும், நெருங்கிய நண்பனுக்கும் ஆலன் தனது இறுதி வார்த்தைகளில் கூறியதாவது: “விடைபெறுவது கடினம். ஆனால் என் இதயத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் புன்னகையும், இயக்கத்தின் மீதும், என் தோழர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது.”

வரலாற்றில் ஆலன் கெல்ஃபாண்ட் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார். நான்காம் அகிலத்தின் வரலாற்றிலும், அவரது தோழர்களின் இதயங்களிலும் அவரது இடம் பாதுகாப்பாக உள்ளது.

Loading