முன்னோக்கு

உக்ரேன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை ஐரோப்பிய அரசாங்கங்கள் எதிர்க்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கு, மாஸ்கோவுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதன் மூலம் தீர்வு காண அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சி, ஐரோப்பாவில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளதோடு, அமெரிக்காவுடனான அட்லாண்டிக் கடந்த கூட்டணியை அழித்து வருகிறது. அமெரிக்கா ஒரு “கூட்டாளி” என்று கருதப்பட்ட நாட்கள், மீளமுடியாத வகையில் முடிந்துவிட்டன.

ட்ரம்ப், “நம்பகமான மற்றும் நியாயமான கூட்டாளி என்ற அமெரிக்காவின் நற்பெயரை இறுதியாக அழித்துவிட்டார்” என்று ஜேர்மன் நாளிதழான F.A.Z. இன் ஆசிரியர் பெர்த்தோல்ட் கோஹ்லர் எழுதினார். உண்மை என்னவென்றால், “நம்பமுடியாத கூட்டாளியைச் சார்ந்து இருப்பதன் மூலம், தனது சொந்தப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மிகவும் அலட்சியமாக இருந்ததற்கான தண்டனையாக” கியேவ் இப்போது ட்ரம்பிற்கு தலை வணங்க வேண்டியிருக்கிறது. பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் “மூலோபாய சுயாட்சிக்கு அழைப்பு விடுத்ததில்” சரியாக இருந்தார், இப்போது அதை இன்னும் உறுதியாக பின்பற்றப்பட வேண்டும் என்று கோஹ்லர் குறிப்பிட்டார்.

பாரிஸில் உள்ள எலிசே அரண்மனையில் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உக்ரேன் குறித்த ‘விருப்பத்தின் கூட்டணி’யின் வீடியோ மாநாட்டில் கலந்து கொள்கிறார். பிரான்ஸ், செவ்வாய்க்கிழமை, நவம்பர் 25, 2025 [AP Photo/Teresa Saurez]

மிக முக்கியமான ஐரோப்பிய தலைநகரங்களில் இது குறித்து உடன்பாடு உள்ளது. ஆனால், “மூலோபாய சுயாட்சி” என்பதைத் தொடர்வது, அதாவது வலிமையான அமெரிக்க இராணுவ எந்திரத்திற்கு சமமான, மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தொடரும் திறன் கொண்ட ஆயுதப் படைகளைக் கட்டியெழுப்புவது, ஐரோப்பாவில் நீண்டகாலமாக வர்க்க விரோதங்களை தணித்து வந்துள்ள சமூக நிலைமைகளுடன் பொருந்திப் போகாது. இது, கடுமையான வர்க்கப் போராட்டங்களை அன்றாட வரிசையில் வைக்கிறது.

“மூலோபாய சுயாட்சி” என்பது சமூக வரவு செலவுத் திட்டங்களிலிருந்து இராணுவ வரவு செலவுத் திட்டங்களுக்கு பிரமாண்டமான தொகைகளை மாற்றுவதையும், சர்வதேச வர்த்தகப் போரில் இலட்சக்கணக்கான வேலைகளை அழிப்பதையும், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதையும் கோருகிறது. பிரெஞ்சு இராணுவத் தளபதி மாண்டன் சமீபத்தில் கூறியதைப் போல, பெற்றோர்கள் மீண்டும் “தங்கள் பிள்ளைகளை இழக்க” தயாராக வேண்டும். சுருக்கமாக கூறுகையில், “மூலோபாய சுயாட்சிக்கு” ஐரோப்பாவின் “ட்ரம்ப்மயமாக்கல்” தேவைப்படுகிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி 1920 களில், “அமெரிக்க முதலாளித்துவம், ஐரோப்பாவை மேலும் மேலும் ஒரு குருட்டுச் சந்துக்குள் தள்ளுவதன் மூலம், அதை தானாகவே புரட்சியின் பாதைக்குள் விரட்டுகிறது. உலகின் நிலைமைக்கு, இதுவே மிக முக்கியமான திறவுகோலாகும்” என்று எழுதினார். மேலும் அவர், “நெருக்கடியான காலகட்டத்தில், அமெரிக்காவின் மேலாதிக்கம், செழிப்பான காலங்களை விட இன்னும் முழுமையாகவும், மிகவும் வெளிப்படையாகவும், இன்னும் இரக்கமற்றதாகவும் செயல்படும்” என்று எச்சரித்தார்.

ட்ரொட்ஸ்கி கணித்ததைப் போல, 1929 வோல் ஸ்ட்ரீட் பொறிவு, உண்மையில் ஐரோப்பாவை ஒரு புரட்சிகர நெருக்கடிக்குள் மூழ்கடித்தது. ஆனால், பாரிய சமூக ஜனநாயக மற்றும் ஸ்டாலினிச கட்சிகள், புரட்சிகரத் தலைமையை வழங்க இலாயக்கற்றவை என்று நிரூபித்ததால், தொழிலாள வர்க்கம் முதலில் ஜேர்மனியிலும், பின்னர் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிலும் தோற்கடிக்கப்பட்டது. இதன் விளைவாக, பேரழிவுகரமான இரண்டாம் உலக யுத்தம் ஏற்பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர், முற்றிலும் மதிப்பிழந்திருந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தை அமெரிக்கா மீட்டெடுத்தது. அந்த நேரத்தில், ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம், தான் தூண்டிவிட்ட போரின் இடிபாடுகளில் தலை முதல் கால் வரை இரத்தத்தில் மூழ்கியிருந்தது. இத்தாலிய மற்றும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கங்கள் நாஜிக்களுடன் மிக நெருக்கமாக ஒத்துழைத்தன. தொழிலாள வர்க்கத்தினரிடையே, முதலாளித்துவம் தோல்வியடைந்துவிட்டது, அது ஒழிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது.

ஐரோப்பிய முதலாளித்துவம் தூக்கியெறியப்படுவதை இரண்டு காரணிகள் தடுத்தன. முதலாவது, மாஸ்கோவில் இருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி, எந்தவொரு புரட்சிகர முயற்சியையும் முளையிலேயே கிள்ளி எறிந்தது. இரண்டாவது, சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான பனிப்போரில், மேற்கு ஐரோப்பாவை ஒரு அரணாகவும், அதன் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தையாகவும் ஆக்குவதுக்கு அமெரிக்கா மார்ஷல் திட்டத்துடன் ஐரோப்பிய முதலாளித்துவத்தை, அதன் கால்களில் மீண்டும் நிற்பதற்கு உதவியது.

இன்று, உலக அரசியலில் அமெரிக்கா ஒரு ஸ்திரப்படுத்தும் காரணியாக இல்லை. மாறாக, மிகப் பெரியளவில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் காரணியாக இருக்கிறது. உலகின் பணக்கார நாடான அமெரிக்கா, மிகவும் கடன்பட்ட நாடாக மாறியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிரிகள் மற்றும் கூட்டாளிகள் மீது தண்டனை சுங்க வரிகளை திணிப்பதன் மூலமும், அவர்களை இராணுவ ரீதியில் அச்சுறுத்துவதன் மூலமும், அதன் சொந்த தொழிலாள வர்க்கத்தின் மீது போர்ப் பிரகடனம் செய்வதன் மூலமும், அதன் நெருக்கடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறது. இது, ட்ரம்பில் இருந்து தொடங்கவில்லை. மாறாக, ரொனால்ட் ரீகனுடன் தொடங்கியது. இது, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வாரிசுகளின் கீழ் தொடர்ந்து வந்ததுடன், ட்ரம்புடன் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி, அமெரிக்க சமூகத்தை மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகத்தையும் ஒரு புரட்சிகர மோதலை நோக்கித் தள்ளுகிறது. ட்ரொட்ஸ்கி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியதைப் போல, “அமெரிக்க முதலாளித்துவம் முதிர்ச்சியடைந்த ஐரோப்பாவில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது”. கடந்த காலத்தில் வர்க்கப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்திய சமூக வழிமுறைகளும், அரசியல் அமைப்புக்களும், அமெரிக்காவின் தண்டனை சுங்கவரிகள், நிதியச் சந்தைகளின் இலாபக் கோரிக்கைகள் மற்றும் மீள் ஆயுதமயமாக்கலின் பிரமாண்டமான செலவுகள் ஆகியவற்றின் அழுத்தத்தின் கீழ் சரிந்து கொண்டிருக்கின்றன.

சிறந்த கல்வி, போதுமான சுகாதாரம், அதிக ஊதியம் மற்றும் பாதுகாப்பான ஓய்வூதியம் ஆகியவை கடந்த கால விஷயங்கள் ஆகிவிட்டன. சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களும் கட்சிகளும் தங்களை மூலதனத்தின் கைக்கூலிகளாக மாற்றிக் கொண்டன. கிரேக்கத்தில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ், ஜேர்மனியில் இடது கட்சி —நியூ யோர்க்கில் மம்தானி— போன்ற போலி-இடது கட்சிகள் அரசாங்கப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், வரிசையாக வீழ்ந்து கொண்டிருக்கின்றன.

சமூக சீர்திருத்தவாத கட்சிகளின் திவால் நிலையால் அதிகரித்து வரும் அதிருப்தியை சுரண்டிக் கொள்ள, வலதுசாரி வாய்வீச்சாளர்களை அனுமதித்துள்ளது. ஆனால், அது இப்போது மாறத் தொடங்கியுள்ளது. பிரான்சில் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிரான பாரிய போராட்டங்கள், பிரிட்டன் மற்றும் ஸ்பெயினில் காஸா இனப்படுகொலைக்கு எதிரான பெரும் ஆர்ப்பாட்டங்கள், பெல்ஜியம், இத்தாலி மற்றும் போர்த்துக்கலில் தற்போதைய பொது வேலைநிறுத்தங்கள் ஆகியவை இதை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த போராட்ட இயக்கம் இன்னும் ஒரு புரட்சிகரத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. இது, பாரம்பரிய தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கவாத அடிமட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது குழுக்களால் மேலாதிக்கம் செலுத்தப்படுகிறது. இவை, ஆளும் வர்க்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதால் போக்கை மாற்ற நிர்ப்பந்திக்கலாம் என்ற மாயையில் சிக்கியுள்ளன. ஆனால், தொழிலாளர்களும் இளைஞர்களும் வேகமாக கற்றுக் கொண்டிருக்கிறார்கள். முறையாகப் போராடினால், எதிர்ப்பு அரசியலின் தோல்வி அவர்களை ஒரு புரட்சிகர, சோசலிச முன்னோக்கை ஏற்றுக்கொள்ள வைக்கும்.

ஐரோப்பாவில், குறிப்பாக ஜேர்மன் ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், ரஷ்யாவுக்கு எதிரான போர் ஒரு முக்கிய மூலோபாயப் பிரச்சினையாகும். ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள், உலகின் மிகப் பெரிய அணுஆயுதக் கிடங்கான அமெரிக்காவை தங்கள் முதுகில் சுமக்கும் வரையில், அவர்களின் உலகளாவிய ஏகாதிபத்திய அபிலாஷைகளைப் பின்தொடர்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். ரஷ்யாவில் மிகவும் மதிப்புமிக்க மூலப்பொருட்கள் உள்ளன. ஹிட்லர் ஏற்கனவே “கிழக்கில் வாழும் இடத்தை” வெல்வதே தனது மிக முக்கியமான வெளியுறவுக் கொள்கையின் இலக்கு என்று அறிவித்திருந்தார். இந்தப் போர் உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்கும் சேவை செய்கிறது. — அதாவது கடுமையான வர்க்கப் போராட்டங்களுக்குத் தயாராகும் வகையில், ஒட்டுமொத்த சமூகத்தையும் இராணுவமயப்படுத்துகிறது.

ஆனால், அமெரிக்க ஆதரவு இல்லாமல், ரஷ்யாவுக்கு எதிரான போரை தொடர முடியாது. வெற்றி என்பது ஒருபுறம் இருக்கட்டும், குறைந்தபட்சம் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் போரில் வெல்ல முடியாது என்று மிகவும் வலுவான புள்ளிவிவரங்கள் கூட ஒப்புக்கொள்கின்றன. எனவே, இதற்கான காரணம்தான், அமெரிக்க “காட்டிக்கொடுப்பு” மீதான கசப்புணர்வும், ஐரோப்பிய மீள் ஆயுதமயமாக்கலை நோக்கி தள்ளப்படும் வேகமும் ஆகும்.

அமெரிக்காவுடனான மோதல், ஐரோப்பாவை ஒன்றாக இணைக்கவில்லை. மாறாக, ஐரோப்பிய வல்லரசுகளுக்கு இடையிலான போட்டிகளை தீவிரப்படுத்தியுள்ளது. 75 ஆண்டு காலப் பகுதியில், ஒருவருக்கு எதிராக ஒருவர் பெரும் விலைகளைக் கொடுத்த மூன்று போர்களை நடத்திய “பரம எதிரிகளான” ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான சமரசம், அடினோவர் மற்றும் சார்ல்ஸ் டு கோலின் தொலைநோக்குப் பார்வையால் அல்ல, அமெரிக்காவின் அழுத்தத்தால் ஏற்பட்டது. இன்று, பாரிஸும் பேர்லினும் மீள் ஆயுதமயமாக்கல் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போரை தொடர்வது குறித்து உடன்படுகின்றன. ஆனால், ஐரோப்பாவின் தலைமையை ஒன்று மற்றொன்றுக்கு விட்டுக்கொடுப்பதுக்கு தயாரில்லை.

புட்டினுக்கும் ட்ரம்ப்புக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தம், உக்ரேன் மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் போவதில்லை. இது, மூன்றாம் உலகப் போருக்கான பாதையில் மற்றொரு படியாக மட்டுமே இருக்கும். ஆகவே, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் மூலம் மட்டும்தான், அனைத்து யுத்த வெறியர்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான சமாதானத்தை அடைய முடியும்.

பணிநீக்கங்கள், ஊதிய மற்றும் சமூக வெட்டுக்களுக்கு எதிரான போராட்டம், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் போருக்கு எதிரான போராட்டம் ஆகியவை பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. தார்மீக முறையீடுகள் அல்லது அரசியல் அழுத்தங்களை கொடுப்பதால், ஆளும் வர்க்கத்தை அதன் போக்கிலிருந்து தடுக்கும் என்ற மாயையை தொழிலாளர்கள் கைவிட வேண்டும். நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு மூல காரணமான முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்காமல், போருக்கு எதிராக தீவிரமாகப் போராடுவது என்பது சாத்தியமற்றதாகும்.

இதற்கு முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடனும் முற்றிலுமாக முறித்துக் கொண்டு, சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்தில், அனைத்து நாடுகள் மற்றும் தேசிய இனங்களின் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளான சோசலிச சமத்துவக் கட்சிகளை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

Loading